\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பிரிட்டனில் பதற்றம்

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியான சவுத் போர்ட்டில், மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டு இறந்த துயர நிகழ்வுக்குப் பின் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட நகரங்களில் பெரும் கலவரம் தொற்றிக் கொண்டது. நடனப் பள்ளி விழாவொன்றில் குழுமி இருந்த சிறுவர், சிறுமிகள் மீது கண்மூடித்தனமாக கத்தித் தாக்குதலை நடத்தியவர் புகலிடம் நாடி வந்தவர் மற்றும் இஸ்லாமியர் என்ற தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இனவெறி, வன்முறைக் கலவரம் தொடங்கியது. இதில் எண்ணற்ற பொதுச் சொத்துகள் சேதப்பட்டதுடன், ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டன; பலர் காயமடைந்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்ட 500க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 29ஆம் தேதி, சவுத்போர்ட் நடனம் மற்றும் யோகா மையத்தில், பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் பாணியில், பயிலரங்கம் நடைபெற்றுகொண்டிருந்து. சிறுவர், சிறுமியர் மற்றும் பெற்றோர்கள் குழுமியிருந்த இந்தப் பள்ளி வளாகத்தில் நுழைந்த இளைஞன் ஒருவன் அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தித் தாக்கத் தொடங்கினான். பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள், மற்றும் பெற்றோரில் சிலர் காயமுண்டனர். இதனால் பலத்த காயமடைந்த  பீபி (Bebe King) 6 வயது, எல்ஸி (Elsie Dot Stancombe) 7 வயது மற்றும் அலைஸ் (Alice DaSilva Aguiar) 9 வயது ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். நடப்பது என்னவென்று அறியாமல் அங்கிருந்து தப்பித்து வெளியேற முயன்றதில் மேலும் பலர் காயமுற்றனர். தாக்குதல் நடத்தியவனைத் தடுத்துப் பிடிக்க முயன்றதில் பெற்றோர்கள் இருவர் கத்தி காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார், தாக்குதல் நடத்தியவனை காவலுக்கு எடுத்து, விசாரணையை மேற்கொண்டனர். தாக்குதலாளி 18 வயதுக்குட்பட்டவன் என்பதால், அவனது பெயர், அடையாளங்களை போலிசார் உடனடியாக வெளியிடவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சில தீவிர வலதுசாரி அமைப்புகள், ஊகத்தின் அடிப்படையில் தவறான, ஆதாரமற்ற பொய்த் தகவலை சமூக ஊடகங்களில் பரப்பத் துவங்கினர். கொலையாளி முறையற்ற வழியில் பிரிட்டனில் குடியேறிய இஸ்லாமியத் தீவிரவாதி, அவனது பெயர் ‘அலி அல்-ஷகாதி’ என்று ஆதாரமேதும் இல்லாத செய்தி பூதாகாரமாகப் பரவியது. ‘இங்கிலிஷ் டிஃபன்ஸ் லீக்’ (English Defence League) எனும் அமைப்பைச் சார்ந்த ‘டாமி ராபின்சன்’ என அறியப்படும் நபர், மற்றும் பல வலதுசாரி தீவிரவாத அமைப்பினர் இந்தத் தவறானச் செய்தியைப் பரப்பியதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டெலிகிராம் சமூக ஊடகத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘சவுத் போர்ட் வேக் அப்’ (Southport Wake Up) எனும் குழு உடனடியாக செயலிழக்கப்பட்டது. ஆனால் இதற்குள் காட்டுத் தீயாகப் பரவிய செய்தியால் பிரிட்டனின் பல பகுதிகளிலும் இஸ்லாமிய மசூதிகள், கடைகள் மற்றும் அச்சமூக வாழ்விடங்களில் தீ வைப்பு, தாக்குதல் போன்ற வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற போலிசார் மீதும் செங்கல், கண்ணாடி பாட்டில்கள் கொண்டு தாக்குதல்கள் நடத்தியதில் 150க்கும் மேற்பட்ட காவற்படையினர் காயமடைந்தனர்.

இதனிடையே, சந்தேகத்துக்குரிய தாக்குதலாளி குறித்த விவரங்களைக் கண்டறிந்த போலிசார் அவனது பெயர், அடையாளங்களை வெளியிட்டனர். கொலையாளி, லங்காஷயரைச் சேர்ந்த ‘ஆக்சல் ருடகுபனா’ (Axel Rudakubana) எனும் பிரிட்டிஷ் பிரஜை. 2013ஆம் ஆண்டு சவுத் போர்ட் பகுதிக்குப் குடிபெயர்ந்த இவன் ருவாண்டா மரபைச் சேர்ந்தவன் என்றும், எந்த விதத்திலும் இஸ்லாமிய மதத்தோடும், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளோடும் சம்பந்தமற்றவன் என்ற உண்மைத் தகவல் வெளியானது. மேலும் இதர பயங்கரவாத அமைப்புகள் எதனுடனும் இவனுக்குத் தொடர்பில்லை என்றும் அறியப்படுகிறது. கொலையாளி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் 10 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆதாரமற்ற வதந்திகளால் தூண்டப்பட்டதில்  வெடித்த போராட்டங்களும், வன்முறைகளும் கட்டுக்கடங்காமல் பெருகியது. பல அங்காடிகள், அலுவலகங்கள், மசூதிகள், அரசாங்க கட்டடங்கள், பள்ளிகள், நூலகங்கள் என பல தனியார், பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டை அனுமானித்த  காப்பீட்டு நிறுவனங்கள் ஏறத்தாழ £250 மில்லியன் அளவுக்கு கோரிக்கைகள் வரக்கூடும் என கணக்கிட்டுள்ளன. உண்மையில், காப்பீட்டு நிறுவனங்கள் ஈடு செய்ய முடியாத பொருட்களையும் கணக்கிட்டால், சேத மதிப்பு இரண்டு, மூன்று மடங்கு அதிகரிக்கலாம். தனியொரு கொடிய மிருகம் செய்த கொலை பாதகச் செயலுக்கு, சம்பந்தமேயில்லாமல் சாமான்ய மனிதர்கள் துன்புறுவது வேதனையானது.

வளர்ந்த நாடு/வளரும் நாடு, படித்தவர்/பாமரர் என்ற வேறுபாடின்றி, இன, மத, மொழி வெறிபிடித்த பல உயிரினங்கள் சூழ்ந்திருக்கும் சமுதாயத்தில் வாழும் மிக அபாயமானதொரு காலக்கட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம். ‘பிரிட்டன் ஃபர்ஸ்ட்’ என்ற வலதுசாரி அமைப்பு ஒன்று, சவுத்போர்ட் சம்பவத்தைக் குறிப்பிட்டு X (டிவிட்டர்) சமூக வலைத்தளத்தில், ‘டெலிகிராஃப்’ பத்திரிக்கையில் ‘வலதுசாரி அமைப்பினரை கைது செய்து அடைக்க முகாம் ஒன்றை பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்கிறது’ என்று செய்தி வெளியானதாக பொய்யானத் தகவலைப் பரப்பியது. இந்தத் தகவலை மறுபதிவு செய்த X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், ‘உள்நாட்டு போரைத் தவிர்க்கவியலாது’ என்று பதிவிட்டு, சில மணித்துளிகளில் அது பொய்யான தகவல் என்று அறிந்து தனது பதிவை நீக்கினார். ஆனால் அதற்குள் இருபது லட்சத்துக்கும் மேலானோர் அவரது பதிவைப் பார்த்துவிட்டிருந்தனர். அடுத்த நொடி பங்குச் சந்தை ரத்தக் களறியானது. தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அதிவேகமாகத் திணிக்கப்படும் தகவல், பெரும் சுமையாகி, மனித உளவியலைப் பாதித்துவருகிறது என்பது நிதர்சனம். இதன் விளைவாக, தகவலை அலசிப் பார்த்து, முடிவுகளை எடுக்க இயலாமல், கேட்பதை அல்லது படிப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு, உணர்ச்சி வசப்படும் அவலத்துக்கு மனித மூளை மழுங்கிவிட்டதாகத் தோன்றுகிறது.

உலகின் பலநாடுகளில் அரங்கேறும் இது போன்ற வன்முறைகள், மனித குலத்தின் பரிணாம வீழ்ச்சி தொடங்குவதன் அறிகுறியாகவே தென்படுகிறது.

 

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad