\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விலையுயர்வு

‘இண்ட்யூட் கிரெடிட் கர்மா’ (Intuit Credit Karma) எனும் நிதி நிறுவனம், ஜூன் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, கடந்த நான்காண்டுகளில், 80% அமெரிக்கர்கள் உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார்கள். இதில் கணிசமானோர் இந்த விலையேற்றத்தை ஈடு செய்ய, தங்களது உணவுத்தேவைகளைக் குறைத்துக் கொள்ள நேரிட்டதாகவும், வறுமைக்கோட்டு விளிம்பு நிலையில் இருந்தவர்கள் அரசாங்கத்தின் உணவு குடும்ப அட்டையை (food stamp) பயன்படுத்தத் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக, தினமும் வெளி உணவகங்களில் சாப்பிடும் வழக்கமுடையவர்கள், செலவைக் கட்டுப்படுத்த, இயன்றவரை வீட்டில் சமைத்துச் சாப்பிட முனைகிறார்கள். வாரயிறுதியில் நண்பர்கள், உறவினருடன் ‘பார்’களில் மது மற்றும் உணவருந்தி இளைப்பாறும் கேளிக்கை நிகழ்வுகள் குறைந்துள்ளன. குறிப்பாக இளம் பருவத்தினரிடம் இந்தக் கலாச்சார மாற்றத்தைக் காணமுடிகிறது.

மறுபுறம், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது மொத்த வருவாய் (Gross Revenue) அதிகரித்துக் காணப்பட்டாலும், இயக்கச் செலவுகள் (Operating costs) போக கிடைக்கும் நிகர வருவாய் (Net Revenue) உயரவில்லை என்கிறார்கள். உதாரணமாக உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள், 2019ஐக் காட்டிலும் 2023ஆம் ஆண்டில், இயக்கச் செலவுகள் 15% முதல் 18% அதிகரித்துவிட்டதாகத் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில் அவர்களது மொத்த வருவாய் 15% முதல் 20% அதிகரித்துள்ளது. அதாவது இந்நிறுவனங்களின் நிகர வருவாய் 0% முதல் 2% மட்டுமே உயர்ந்துள்ளது. உணவு விநியோக நிறுவனங்களுக்கும், இதே காலகட்டத்தில் மொத்த வருவாய் 20% முதல் 25% அதிகரித்தாலும் அவர்களது நிகர வருவாய் 0% முதல் 2% வரையிலேயே அதிகரித்துள்ளது. மற்றொரு பரிமாணத்தில் உற்பத்தியாளரது  இலாப வரம்பு (profit margin) 6.9% யிலிருந்து 6.7% அளவுக்கு குறைந்துவிட்டதாகச் சொல்கின்றனர். விநியோகஸ்தர்களது இலாப வரம்பு 2.9% முதல் 4.4% அதிரித்திருக்கிறது. மொத்தத்தில் உணவு தயாரிப்பு /விநியோக நிறுவனங்களின் இலாப வரம்பு 0% முதல் 4.4% அதிகரித்துக் காணப்பட்டாலும், உணவுப் பொருட்களின் 25% சராசரி விலையேற்றத்தைக் கணக்கிட்டால், உற்பத்தியாளர், விநியோகஸ்தர், நுகர்வோர் என அனைத்து தரப்பினரையும் இந்த விலையேற்றம் பாதித்துள்ளதை அறிய முடியும்.

உணவுப் பண்டம் மட்டுமன்றி இதரத் துறைகளிலும் விலையேற்றம் காணப்படுகிறது. உடைகள், போக்குவரத்து, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, கல்விக் கட்டணம் என அனைத்தும் அதிகரித்துள்ளது நிதர்சனம். ஆனால் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அன்றாட வாழ்வில் கண்கூடாகத் தெரிகிறது. மற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடிந்தாலும், குழந்தைகள் சிறுவர்கள் உள்ள குடும்பங்களின் உணவுத் தேவைகளை, செலவுகளைக் குறைக்கமுடிவதில்லை.   கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில், நுகர்வோர் விலைக் குறியீடு (consumer price index) பெரியளவில் மாற்றமடையாமலிருந்தது. தொற்றுப் பரவல், பொது முடக்கம் போன்ற காரணங்களால், 2020 ஆம் ஆண்டில் நுகர்வோர் விலைக் குறியீடு 4% மற்றும் 2021 ஆம் ஆண்டில் 6% என உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தக் குறியீடு அதிரடியாக, 12% அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு 1% மட்டுமே உயர்ந்தாலும், 2019 முதல் 2023 வரையிலான நான்காண்டு இடைவெளியில் 25% அதிகரித்ததால், நுகர்வோர்க்கு பெருத்த சேதமேற்பட்டது. இதே காலக்கட்டத்தில், உணவு மற்றும் எரிபொருள் அல்லாத பொருட்களின் நுகர்வோர் விலைக் குறியீடு 15% உயர்ந்ததும் கவனிக்கத்தக்கது.

சந்தைப்படுத்தல் செலவுகள் (Marketing cost).

 

மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விலையேற்றத்துக்கு, பண்டத்தின் தன்மையைப் பொறுத்து பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உதாரணமாக, முட்டைகளின் விலையேற்றத்துக்குப் பறவைக் காய்ச்சல் (Avian bird flu) முக்கியக் காரணம். பறவைக் காய்ச்சல் பரவும் பகுதிகளில், முட்டைகள் அதிகத் தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்றவை நிராகரிக்கப்படுகின்றன. இதனால் உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டு, வழங்கல் மற்றும் தேவை (supply and demand ) கோட்பாட்டின் படி விலை அதிகரிக்கிறது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகான விலையேற்றத்துக்கு சந்தைபடுத்துதல் பரவல் (Marketing spread) அதிகரித்தது முதன்மையான காரணம். அதாவது ஒரு பொருளை விளைவிக்கும் நபர் அந்தப் பொருளுக்கு ஈடாகப் பெறுவது பண்ணை விலையாகும் (Farm Value). அதே பொருளை வாங்கும் பயனாளர் கொடுக்கும் விலை நுகர்வோர் விலை (Consumer value) அல்லது சில்லறை விலை (Retail value) என்கிறார்கள். நுகர்வோர் தரும் சில்லறை விலைக்கும், பண்ணை விலைக்கும் உள்ள வித்தியாசம் ‘சந்தைப்படுத்துதல் பரவல்’ (Marketing spread) அல்லது ‘பண்ணையிலிருந்து சில்லறை விலை பரவல்’ (farm-to-retail price spread)  எனப்படுகிறது.

1997ஆம் ஆண்டு வாக்கில், $1 மதிப்புக்கு, பண்ணை விலை 21% இருந்துள்ளது. மீதமுள்ள 79% சந்தைப்படுத்தலுக்கான விலையாக இருந்தது. அதாவது, $1 மதிப்பிலான உணவுப் பொருளில், 21 செண்டுகள் மட்டுமே அதை விளைவிக்கும் / உற்பத்தி செய்யும் நபருக்கு சென்றுள்ளது.

2022 ஆம் ஆண்டில்,அதே $1 மதிப்புள்ள பொருளில், 14.9% மட்டுமே விவசாயிக்கு / உற்பத்தியாளருக்குச் சென்றடைந்தது. சந்தைப்படுத்தலுக்கான செலவு 85.1% என்பதாக அதிகரித்துவிட்டது. அதாவது, $1 மதிப்பிலான பொருளை, சந்தைப்படுத்தலுக்கான பரவல் அதிகரித்துவிட, விளைவிக்கும் நபரது வருமானம் சுருங்கிவிட்டது. மற்றொரு கோணத்தில் பார்த்தால், $1 கொடுத்து நுகர்வோர் வாங்கும் பொருளுக்கான மதிப்பு (அல்லது அளவு) 6% குறைந்துவிட்டது.  பணவீக்கக் கோட்பாடு இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சந்தைப்படுத்தலுக்கான இயக்கச் செலவு அதிகரித்திருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

இயக்கச் செலவுகள்

சந்தைப்படுத்தலுக்கான செலவில், உணவைப் பதப்படுத்துதல்(processing), சிப்பங்கட்டுதல்  (packaging), போக்குவரத்து (transportation), விளம்பரம் (advertisement), தொழிலாளர் ஊதியம் (labor), எரிசக்தி (energy) இன்னும் வரி, வாடகை உள்ளிட்ட இதர செலவுகளும் அடங்கும். அமெரிக்க உணவுக் கலாச்சாரத்தில் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் நெடுநாட்கள் கெட்டுப் போகாமலிருக்க பதப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்கள் கூட சந்தைகளில் நேரிடையாக விற்பனைக்குச் செல்வதில்லை. USDA(United States Department of Agriculture) மற்றும் FDA (Food and Drug Administration) தரக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் அவை விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் பெரும்பாலான விளைபொருட்கள் சாலை மார்க்கமாகவே விநியோகஸ்தர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மூலமாக நுகர்வோர் வீட்டைச் சென்றடைகிறது. இதனால் விளைபொருட்களைப் பதப்படுத்துதல் மிக அவசியமாகிறது.

போக்குவரத்து

உணவுத் துறையில் விநியோகச் சங்கிலியின் தேவைகளைப் புரிந்துகொள்வது முக்கியம். எடுத்துக்காட்டாக, விவசாயி முதலில் விதைகளை விதைத்து, பின்னர் விளைபொருட்களை வளர்த்து அறுவடை செய்து பதப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்புகிறார். அங்கிருந்து பொருளைப் பெறும் மொத்த வியாபாரி, அவற்றை ‘பேக்’ செய்யப்பட்ட பொதிகளாக மாற்றி சில்லறை வணிகத்துக்கு அனுப்பி வைக்கிறார். இதில் ஒவ்வொரு படிநிலையிலும் எரிபொருள் (gasoline) விலை சம்பந்தப்படுத்தப்படுகிறது. விவசாயி பயன்படுத்தும் விதைகள், உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை மறைமுகமாக எரிபொருள் விலையால் பாதிக்கப்படுவது முதல் விளைபொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும்போதும் எரிபொருள் விலை நேரிடையாக உணவுப் பொருளின் விலையை அதிகரிக்கிறது. இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், பொருட்களை குறைவான தூரத்தில் நுகர்வோரை சென்றடையுமாறு மாற்றியமைக்க வேண்டும். இது நாட்டின் பிற பகுதிகளில் இந்த உணவுப் பண்டத்துக்குத் தட்டுப்பாட்டை உண்டாக்கும். இதைத் தவிர்க்க உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலிருக்கும் வியாபாரிகள் தங்களது இழப்பை ஈடுகட்ட பண்டத்தின் விலையை ஏற்றும் கட்டாயச் சூழல் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் இன்று நிகழும் பொருளாதார, அரசியல் அமைதியின்மை ஆகியவை கண்ணுக்கெட்டிய தூரத்தில் எரிபொருள் விலை குறைவதற்கான சாத்தியத்தை மட்டுப்படுத்துகிறது.

தொழிலாளர் ஊதியம் (Labor)

சந்தைப்படுத்தலின்  ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். 2019 ஆம் ஆண்டில், விலக்கு அளிக்கப்படாத ஊழியர்களுக்கு (non exempt workers) அமெரிக்காவில் சராசரி குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $7.25 ஆக இருந்தது. இந்தக் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் நேரடியாகத் திருத்தப்படவில்லை எனினும் ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 2023 இன் ஊதிய உயர்வு சட்டம் (Raise the Wage Act of 2023),  2024 இல் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $9.50 ஆக உயர்த்தி, படிப்படியாக 2028 க்குள் ஒரு மணி நேரத்திற்கு $17 ஆக உயர்த்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் $7.25 ஆக இருந்தாலும், சில மாநிலங்கள் $15க்கும் அதிகமாக அளித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக வாஷிங்டன் டி.சி முதலிடத்தில் குறைந்தபட்ச ஊதியமாக $17 அளிக்க, கலிஃபோர்னியா மாநிலம் $16.25 குறைந்தபட்ச ஊதியத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 20 மாநிலங்களில் இன்றும் $7.25 என்பதே குறைந்தபட்ச ஊதியம். மொத்தத்தில் தேசிய அளவில், தற்போதைய சராசரி குறைந்தபட்ச ஊதியம் $9.00 ஆக உள்ளது. சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும், இயக்கச் செலவுகள் கூடி விலைவாசி உயர்வதால் அவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சிப்பமிடுதல் (packaging)

உணவுத் துறையில், பொருட்களை சிப்பமிடுவது தனித்துவமானது. விநியோகத் தளங்களிலிருந்து நீண்ட, பல மணி நேர பயணத்துக்குப் பின் உணவுப் பொருட்கள், சில்லறை கடைகளுக்கு வந்தடைகின்றன. இங்கு வந்த பின்னரும் அவற்றிற்கு 2-6 வாரங்கள் இருப்பு வாழ்நாள் (shelf life) தேவைப்படுகிறது. இவ்வாறு பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை உள்ளடக்கங்களைப் புதியதாகவும் நுகர்வுக்கு பாதுகாப்பாகவும் வைத்திருக்க வகை செய்வது சரியான சிப்பமிடுதல் அல்லது பேக்கேஜிங். சில தயாரிப்புகளுக்கு வெப்பநிலை மற்றும் கடின கையாளுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் குறிப்பிட்ட வகையான பேக்கேஜிங் பொருட்கள் தேவைப்படும். உறைந்த உணவு (frozen food), உலர்ந்த மளிகைப் பொருட்கள் (dry food) மற்றும் கெட்டுப்போகும் பொருட்கள் (perishable food) என ஒவ்வொன்றுக்கும் புத்துணர்ச்சியைப் பராமரிக்கத் தனி வகையான பேக்கேஜிங்குள் தேவை.

சில நிறுவனங்கள் தங்களது பொருட்கள் போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டிருக்க வேண்டுமென்பதால், தங்களது வணிகச் சின்னம் (Brand) தனித்து நிற்க தனித்துவமான பேக்கேஜிங்கை கையாள்வர். மேலும் தற்போது சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில், நெகிழி (Plastic) அல்லாத நூதனமான பேக்கேஜிங் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் உணவுப் பொருட்கள் சிப்பமிடும் செலவைக் கூட்டி, உணவுப் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், ஊதியத்துக்கு அடுத்து, உணவுப் பொருட்களின் சந்தைப்படுத்துதலில் பேக்கேஜிங் 8-12% பங்குடன் இரண்டாவது பெரிய செலவாகப் பார்க்கப்படுகிறது.

எரிசக்தி ஆற்றல் (energy)

உணவு மற்றும் விவசாயத் துறையானது உலகின் 30% ஆற்றலைப் பயன்படுத்துகிறது, மேலும் 20%க்கும் அதிகமான பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்திற்குப் பொறுப்பாக உள்ளது. உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் எரிசக்தி ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக உணவைப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தலுக்காக அதிகளவு ஆற்றல் செலவாகிறது. இத்துறையில் பயன்படுத்தப்படும் ஆற்றலின் பெரும்பகுதி நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களிலிருந்து (fossil fuel) வருகிறது. உக்ரைன் போருக்கு முன்னர், அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து இறுக்குமதி செய்து வந்த இயற்கை எரிவாயு (natural gas) கணிசமாகக் குறைந்து விட்டது. 2022ஆம் ஆண்டு,  உணவு மற்றும் மளிகை விலையேற்றத்துக்கு இயற்கை எரிவாயு இறக்குமதி தடைபட்டது மிகப் பெரிய காரணம். கூடவே, உக்ரைன் / ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து வந்த தானியங்கள், மாவுப் பொருட்கள் மற்றும் பால் தயாரிப்பு பொருட்கள் தடைபட்டு போனதும் உணவுப் பொருட்கள் விலையேற்றத்துக்குக் காரணமாக அமைந்தது.

உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் (World Economy and Trade)

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு, இரு நாடுகளும் தங்கள் தானிய ஏற்றுமதியைக் குறைத்தன. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வணிக விநியோகச் சங்கிலி ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியபோது உண்டான போர்ச்சூழல் பொருளாதார வழங்கல் மற்றும் தேவை இணக்கமின்மையை (supply and demand disagreement) உண்டாக்கியது. உலக நாடுகள் பலவும் உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய முயல்கின்றன. ஒரு காலகட்டத்தில் பெருமைமிக்க விவசாய சக்தியாக இருந்து தொடர்ந்து விவசாய வர்த்தக உபரியை வைத்திருந்த அமெரிக்கா 2019 ஆம் ஆண்டில் விவசாய வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொண்டது. அதாவது ஏற்றுமதி செய்ததை விட அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும்பாலும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், மெக்சிகோவிலிருந்து $13 பில்லியன் மதிப்புள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அமெரிக்கா இறக்குமதி செய்தது.  2021 ஆம் ஆண்டில்  இறக்குமதியின் மதிப்பு $16 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. உணவுப் பொருட்கள் குறிப்பாக விளைபொருளில் தன்னிறைவு பெற அரசாங்கம் முயற்சிகள் எடுத்துவருகிறது.

ஒரு புறம் உணவுப் பொருள் விளைச்சல் குறைய, மறுபுறம் கோவிட் தொற்று சமயத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட உதவித் தொகை, மக்களிடம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்தது. கோவிட் பொதுமுடக்கங்கள் தளர்ந்தபோது, தேவைகள் உயர்ந்த அளவுக்கு, விநியோகச் சங்கிலி பிரச்சனைகளால் வழங்கல் தடைபட்டு போக, பொருட்களின் விலை உயரத் தொடங்கியது. இந்த வழங்கல்-தேவை சமமின்மை இன்று வரையிலும் தொடர்கிறது.

சில்லறை வணிகம் (Retail grocers)

சில்லறை மளிகை நிறுவனங்கள், இந்த விலை உயர்வால் பெரிய லாபமீட்டவில்லை என்பதே உண்மை. பெரும்பாலானாவர்களது லாபம், முந்தைய ஆண்டுகளைப் போலவே 1.5% முதல் 2% வரை மட்டுமே உள்ளது. ஆனால் சில சிறு சில்லறை மளிகை நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களால் வாங்கப்படுவது நிற்கவில்லை. இவ்வகையான சிறு சில்லறை கடைகள் அடையாளப்படுத்தப்பட்ட மளிகை (branded grocery) பொருட்களை விற்காமல், உள்ளூர் சிறு உற்பத்தியாளர்களது பொருட்களை (unbranded grocery) விற்பதன் மூலம் சற்று மலிவான விலையில் நுகர்வோர்க்கு அளித்து வந்தனர். எடுத்துக்காட்டாக, ‘பெப்சி’ நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை விட, சிறு மளிகைக் கடைகளில் கிடைக்கும் அடையாளமில்லாத சிப்ஸ்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும். ‘பெப்சி’ நிறுவனப் பொருளின் அதே சுவை இல்லாவிடினும், அதிக விலை கொடுக்க இயலாதோர், சிறு கடைகளில் கிடைக்கும் சிப்ஸ்களை வாங்குகின்றனர். இதனைத் தடுக்க,  பெரிய நிறுவனங்கள் இச்சிறிய கடைகளை வாங்குவதன் மூலம் பிராண்டட் பொருட்களை மட்டுமே வாங்குமாறு நுகர்வோரை மாற்றி வருகின்றனர். இது போட்டிகளைக் குறைத்துவிடுவதால் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாமல் போகிறது. சிறு மளிகைக் கடைகளும், தங்களது லாபம் குறைந்துகொண்டே வருவதால், கடைகளை சரிவர நிர்வகிக்க முடியாமல், தங்களது நிறுவனங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் மக்களிடம் இணைய வர்த்தகம் (online order) என்ற வழக்கம் அதிகரித்து வருவதை சிறு நிறுவனங்களால் சமாளிக்க முடிவதில்லை. ‘வால்மார்ட்’, ‘டார்கெட்’, ‘அமேசான் – ஹோல் ஃபுட்ஸ்’, ‘காஸ்ட்கோ’ போன்ற பெரு நிறுவனங்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனாலும், தொழிற்சங்க அமைப்புகளும், மாநில நிர்வாகங்களும் இவ்வகையான தொழில் இணைப்புகளுக்கு (retail grocery merger) எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தீர்வுகள்?

அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாட்டில், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் இரு வேட்பாளர்களும், விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். மளிகைப் பொருட்களின் விலைகள் மீண்டும் 2018 ஆம் ஆண்டு நிலைக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பணமதிப்பு கட்டுக்குள் வந்து, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது மட்டுமே, மளிகை மற்றும் உணவுப் பொருட்களை சுமையின்றி வாங்குவதற்கு  வழிவகுக்கும். இயன்றவரையில் பழம் / காய்கறி போன்ற விளை பொருட்களை (produce) வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பது ஓரளவுக்கு உதவக்கூடும். பருவத்துக்கு (seasonal) ஏற்ற காய்கறிகள், பழங்களை வாங்குவது செலவை ஓரளவுக்கு குறைக்கும். திட்டமிட்டு / பட்டியலிட்டு மளிகை வாங்குதல், மலிவாகக் கிடைக்கும் பட்சத்தில் அதிகமாக வாங்கி பாதுகாத்து வைத்தல், உணவை வீணடிக்காமல் சேமித்து வைத்தல், அனைத்து மளிகையையும் ஒரே கடையில் வாங்காமல் தேவையான பொருட்கள் எந்தெந்த கடைகளில் மலிவாகக் கிடைக்கும் என்றறிந்து வாங்குதல், வணிகச் சின்னத்தை (brand loyalty) பொருட்படுத்தாமல் மலிவான,  பொதுப்பொருட்களை  (generic products) வாங்குதல் போன்ற சிக்கன நடவடிக்கைகள் மளிகைச் செலவு கையைக் கடிக்காமலிருக்க உதவும் என்கிறார்கள் நுகர்வோர் நல அமைப்பினர்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad