\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பார்த்ததில் ரசித்தது

paarthathil-rasiththathu_500x402”சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வச்சா, ஆரு செயிப்பாக?” – எனக்கும் என் நெருங்கிய நண்பன் வெங்கடேசனுக்கும் சிறு வயதில் அடிக்கடி வரும் தகராறு இதுவே. நாங்களிருவரும் அவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள், ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இருவரும் கீரியும் பாம்பும் போலச் சண்டை போடுமளவுக்கு விரோதிகள். மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் அவன். நான் சிவாஜி கணேசனென்றால் உயிர் கொடுக்கவும் தயார்..

”எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடமுடியுமாடா சிவாஜியால?” பொதுவாக என் தீர்ப்பு அனைத்தையும் மறு கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் என் இனிய வெங்கடேசன் இந்த விவாதத்தில் மட்டும் சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டான். ”நடிப்புன்னா என்னன்னு உலகத்துக்கே சொல்லித் தர தகுதியுள்ள ஒரே நடிகண்டா, எங்காளு” உலகம் என்ற வார்த்தைக்குக் கூட அர்த்தம் தெரியாத எட்டு வயதில் நான் வீசியெறிந்த டயலாக்.

சமீபத்தில், விஜய் டி.வி.யில் நடந்து வரும் பிரபலமான நிகழ்ச்சியான “நீயா நானா”வில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து ஒரு விவாதம் நடை பெற்றது. இதனை ஒரு நிமிடம் கூடக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கையில் என் மனதில் ஓடியது எனக்கும் வெங்கடேசனுக்கும் நடந்த சர்ச்சைகளும், சம்பாஷணைகளும் மட்டுமே. ஒரு நடிகனுக்கு இது போல ஒரு பாசத்துடன் பின்னிப் பிணைந்த உறவுகள் விசிறிகளாக இருக்க முடியுமா?

மேற்கத்திய நடிகர்களின் வீடியோக்களைத் தினம் முழுவதும் பார்த்து, அவர்கள், அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப பெரிய அளவு உணர்ச்சி இல்லாமல் கொடுக்கும் முகபாவனைகளைத் தங்கள் படங்களில் கொடுக்கும், உண்மை நிலையைச் சற்றும் உணராமல் அளவான நடிப்பு என்ற பெயரில் எக்ஸ்பிரஷன் கொடுக்கத் தெரியாத எண்ணற்ற நடிகர்கள் பலர் இன்று இருப்பதாக நம் கணிப்பு. இவர்கள் சிவாஜி கணேசனின் ஒவ்வொரு படத்தையும் உட்கார்ந்து பார்த்து அந்த அந்தப் பாத்திரங்கள் உண்மையில் அந்தச் சூழ்நிலையில் எப்படி முகபாவம் வைத்திருப்பர் என்று கற்பனை செய்து பார்த்தாலே போதும். ஓரளவு நடிப்பையாவது கற்றுக் கொள்ள இயலும். நமது வயிற்றெரிச்சலான இந்தக் கருத்தை முன்னுரையாக எழுதி விட்டு, இந்தக் கட்டுரையின் நோக்கம் குறித்துச் சொல்லி விடலாம். சிவாஜி கணேசனின் திறமையையும், புகழையும் பற்றி எழுதுவதல்ல இதன் நோக்கம். அந்த இணையிலா நடிகரின் ரசிகர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்கின்றனர் மற்றும் அவர்கள் எப்படியெல்லாம் சிவாஜியை ரசித்துள்ளனர் என்பதை “நீயா நானா”வில் கேட்டது குறித்து விளக்குவதே இந்தக் கட்டுரை.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் அறுபது வயதைக் கடந்தவர்கள். இந்த நேரத்தில், நான் கலந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டது நினைவுக்கு வந்தது. அறிவுப்பு செய்த 12 மணி நேரத்திற்குள் ஆறாயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்ததாகவும் தேவைப்பட்ட அறுபது நபர்களை தேர்ந்தெடுத்து முடித்தாகி விட்டது என்றும் கூறினர். பெரும்பாலானவர்கள் அறுபது வயதை நெருங்கியவர்கள் என்பதைக் கூறத் தவறி விட்டனர்.

ஒருவர் அவருக்குத் திருமணம் முடிந்து, புதிய மனைவியின் வீட்டிற்கு மறுவீடு சென்றிருந்ததாகவும், அப்பொழுது வெளியான சிவாஜி படத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டதால், மாமனார் வீட்டில் தம் பெண்ணை வைத்துச் சரியாகக் குடும்பம் நடத்துவாரா இவர் எனச் சந்தேகமே ஏற்பட்டு விட்டதாகவும் கூறினார். இன்னொருவர் சிவாஜியின் படத்தை வெளியான முதல் ஷோவில் பார்ப்பதற்காக முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் காத்திருந்த அனுபவத்தைச் சுவைபட விளக்கினார். மூன்றாமவர் அவரின் இல்லத்தில் சிவாஜியின் ஒவ்வொரு பட வெளியீட்டன்றும் காணாமற்போகும் வெள்ளி டம்ளர் குறித்து விளக்கினார் – அவரின் தந்தை அவற்றை எடுத்துச் சென்று விற்று சிவாஜி படம் பார்ப்பதற்குப் பணம் சேகரிப்பாராம்.

நான்காமவர் சிவாஜி படம் பார்ப்பதற்குக் கூட்டம் வழிவதால் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதென்பது இயலாது என்பதாலும், ”சைக்கிள் டிக்கெட்” சுலபமாகக் கிடைக்குமென்பதாலும் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஓசியாக சைக்கிளை வாங்கிக் கொண்டு சென்றது குறித்து நினைவு கூர்ந்தார். முண்டி அடித்து வரிசையில் நின்றாலும், தனது தலையின் மீது, தோளின் மீது என்று ஏறி முன்னேறிச் செல்லும் கூட்டம் குறித்து அழகாக ஒருவர் நினைவு கூர்ந்தார். இதெல்லாம் என்னவோ இன்று சூப்பர் ஸ்டாருக்காக மட்டும் தொடங்கிய நிகழ்வுகள் என்று நினைக்கும் ஞானசூன்யங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார்களாக.

ஒரு முதியவர் மிகவும் அழகாக ஒரு நிகழ்வை விளக்கினார். அவர் ஒரு சிவாஜியின் படத்திற்கு பார்ப்பதற்காகச் சென்றாராம். இரண்டணாவிற்கு டிக்கெட் கிடைக்கும் காலமது. இவர் வரிசையில் நின்று கவுண்டரை அடைவதற்குள் ஹவுஸ் ஃபுல்லாகிவிட, அருகில் பிளாக்கில் கிடைக்கும் டிக்கெட்டை வாங்குவதா, வேண்டாமா என மனப்போராட்டம் இவருக்கு. பிளாக் டிக்கெட்டின் விலை ஒரு ரூபாய் – அதாவது பதினாறு அணா. எட்டு மடங்கு அதிகம். கடைசியாக ஒருவழியாய் அந்தப் பெரிய தொகையைச் செலவழிப்பது என்ற முடிவுக்கு வந்து அந்தட் டிக்கெட்டை பிளாக்கிலும் வாங்கி விட்டாராம். அதன் பிறகு கூர்ந்து கவனிக்கையில்தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார் – அந்த  டிக்கெட் முந்தைய தினத்துக்கான டிக்கெட்டாம். அழகாகச் சுவைபட விளக்கினார் அந்தப் பெரியவர்.

இவை தவிர, சிவாஜியின் நடிப்பில் தங்களுக்குப் பிடித்தது என்ன என்பதை விளக்க பெரும்பாலானவர்கள் அந்த நாட்களுக்கே நினைவால் சென்று விளக்கினர். சிவாஜியின் புருவம் நடிப்பதில் தொடங்கி, அவரின் நடையழகில் தொடர்ந்து, அவர் முகத்திற்கும் தோளிற்கும் மத்தியில் இரண்டு பக்கங்களும் மாறி மாறி எவ்வாறு கைதட்டுவார் என்று விளக்கி, அவரின் சுருட்டை முடியின் அழகை அங்கலாய்த்து, அவர் கன்னத்தில் கை வைத்து, கம்பீரமாய் முகம் வைத்துக் கொண்டிருக்கும் அழகு என்று எவற்றையும் விட்டு வைக்கவில்லை. அவரின் உச்சரிப்பினால் தமிழ் ஆசை வளர்ந்தது என்று ஒரு இளம் வயது மங்கை கூறியது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதனைக் கேட்டவுடன் மெய் சிலிர்த்த நடுத்தர வயது ரசிகரொருவர், கீழே இறங்கி வந்து எல்லோருக்கும் மத்தியிலே சேரன் செங்குட்டுவன் திரைப்படத்தில் நடிகர் திலகம் கர்ஜித்த கலைஞர் கருணாநிதியின் மிக நீளமான வசனத்தை முழுவதும் நினைவு வைத்துப் பேசியது அருமையிலும் அருமை. அவரின் நினைவாற்றலை நாம் பாராட்டினாலும், நம் மனம் முழுதும் நிறைந்திருந்த அந்த சிம்மக் குரல் அதிலில்லை என்ற காரணத்தால், நிகழ்ச்சி முடிவுற்றதும் யூ-டியூபில் சிவாஜியே அந்த வசனத்தை உச்சரிப்பதை வாழ்க்கையில் நூறாவது முறையாகக் கேட்ட பின்னரே நம் மனது நிறைவு பெற்றது.

பெண்மணி ஒருவர் மிகவும் சிலாகித்து சிவாஜி குறித்துப் பேசினார். அவர் பேச்சில் உண்மையும் யதார்த்தமும் முழுமையாய் ஆக்கிரமித்து இருந்தது. சிவாஜியின் மேல் பெண்ணாகிய ஒருவர் கொண்டிருந்த மோகத்தை, சற்றும் கொச்சைப் படுத்தாமல், அதே சமயத்தில் சற்றும் குறைக்காமல் விளக்கிய அவரின் பாமரத்தனமும், உண்மையும் அவருக்கு “நீயா நானா”வின் பரிசினையும் பெற்றுக் கொடுத்தது. கணவரை ஒருமுறை ஜன்னலின் வழியாகப் பார்த்து அவரின் சுருட்டை முடி அப்படியே சிவாஜி கணேசனைப் போல் இருப்பதை உணர்ந்து, சிவாஜியின் ஏதோவொரு உடலமைப்புத் தன் கணவருக்கு உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்ற அவரின் உள்ளத்தை சிவாஜியை உளமாற, உள்ளம் குளிர ரசித்த நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

பொதுவாகத் தனக்கென ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை மனதில் வைத்துக் கொண்டு, அதற்கென கேள்வி கேட்டு அதற்குச் சரியாக வரும் பதில்களை மட்டுமே ஒளிபரப்பும் கோபிநாத் அதுபோல் எதுவும் செய்யாமல், பொறுமையாய் அனைவரையும் பேசவைத்தது நிறைவாய் இருந்தது. சிவாஜியின் மீது அளவு கடந்த மரியாதையும், பக்தியும், பாசமும் வைத்திருந்து, தமிழில் மிக அதிக அளவு பாண்டித்யம் அமையப் பெற்று, நடிப்புலகில் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும், உண்மையாகவும் வாழும் நடிகர் சிவக்குமார் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருவார் என்று எதிர்பார்த்த எனக்கு, அவர் வராதது ஒரு பெரிய ஏமாற்றம் என்றே கூற வேண்டும்.

சிவாஜியின் வாயினிலே புரள வாய்ப்புக் கிடைக்காதா, அந்தச் சிம்மக் குரலில் நம்மை உச்சரிக்க மாட்டாராவெனத் தமிழ் வார்த்தைகள் ஏங்கும் என யாரோ எழுதியதைச் சிறுவயதில் படித்த நினைவிருக்கிறது. அந்தத் திருமகன் உச்சரிக்க ஒரு வரி வசனத்தையாவது எழுதியிருக்கலாமே என ஏங்கும் பல்லாயிரக் கணக்கான தமிழ் எழுதும் அரிச்சுவடிகளில் நானும் ஒருவன் என்று சுய விளம்பரம் செய்வதில் பெருமை கொள்கிறேன். அந்தத் திருமகன் என் கனவினிலே எனது வசனங்களை தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒப்புக் கொள்வதில் சற்றும் வெட்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

–    வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad