\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தோல்பாவைக் கூத்து

paarthathil-rasiththathu_1_620x620தமிழகத்தின் மிகத் தொன்மையான கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று.

சிறிய அளவில், குறைந்த அளவு பார்வையாளர்களைக் கொண்டு அரங்கேற்றப்பட்டு வந்த கூத்துக் கலையே பின்னர் நாடகம் , திரைப்படம் எனும் கிளைகள் தோன்றக் காரணமாக அமைந்தது.

கிளைகளாகத் தோன்றிய நாடகக் கலையும், திரைக் கலையும் மிகப் பிரம்மாண்ட அளவில் வளர்ச்சியைக் கண்டாலும், அதன் ஆணி வேரான கூத்துக் கலை மட்டும் பெரிய அளவில் பாராட்டப்படாமல், கவனிக்கப் படாமல் எதோ கிராமத்து மக்களுக்காக, விழாக் காலங்களில் என்றேனும் ஒரு இரவு நடத்தப்படும் கலை நிகழ்ச்சியாகவே முத்திரை குத்தப்பட்டு விட்டது.

கூத்துக் கலை பல பிரிவுகளைக் கொண்டது. தெருக் கூத்து, அகக் கூத்து, புறக் கூத்து, மெய்க் கூத்து, அபிநயக் கூத்து, விநோதக் கூத்து என்பன கூத்தின் சில பிரிவுகள். பாவைக் கூத்து என்பதும் இப்பிரிவுகளில் அடக்கம்.

பாவை கூத்து என்பது மனிதர்கள் ஆடாமல் பொம்மைகளை இயங்கச் செய்து நிகழ்த்தப் படுவது. இதில் மரப் பாவைக் கூத்து, தோல் பாவைக் கூத்து என பல உட்பிரிவுகள் உள்ளன. மரப் பாவைக் கூத்து என்பது மரத்தாலான பொம்மைகளை கயிறுகள் மூலம் இயங்கச் செய்து பார்வையாளர் முன் நேரிடையாக நிகழ்த்துவது.

பாவைக் கூத்தின் மற்றொரு வேறுபாடு தோல்பாவைக் கூத்து. மிருகத் தோலில் உருவங்களை தீட்டி, மேடையில் திரையமைத்து, திரைக்கு பின் ஒருவர் அமர்ந்து இயக்க, திரைக்கு பின்னால் இருந்து பாய்ச்சப் படும் ஒளியின் மூலம் திரையில் பாவையின் பிம்பங்கள் தோன்றுவதே தோல்பாவைக் கூத்து.

சமீபத்தில் மிசௌரியில் நடைபெற்ற ஃபெட்னா விழாவிலும், தொடர்ந்து மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவிலும் இவ்வகையான தோல்பாவைக் கூத்து இடம் பெற்று மக்களின் கவனத்தையும், மனதையும் ஈர்த்தது. இந்நிகழ்ச்சியை மேடையேற்ற பல காலங்களாக இக்கலையை நிகழ்த்தி வரும் அம்மாப்பேட்டை திரு. கணேசனும், இது போன்ற பழங்கலைகள் தற்காலத் தலைமுறையினரைச் சென்றடைய பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் திரு. மு ஹரிகிருஷ்ணன் அவர்களும் வந்திருந்தனர். பனிப்பூக்கள் சார்பாக அவர்களுடன் உரையாடிய போது அறிந்த சுவையான, தகவல்களை வாசகரான உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதே இக்கட்டுரை.

paarthathil-rasiththathu_3_520x312பல நூற்றாண்டுகளுக்கு முன் தஞ்சையில் கால் பதித்த மராத்திய மன்னரின் அரண்மனைக் கலைஞர்கள் மூலம் தமிழகத்தில் அறிமுகமானது தோல்பாவைக் கலை. துவக்கத்தில் மன்னரின் அரண்மனையில் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலை பின்னர் திருவிழாச் சமயங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டன. இக்கலைக்கிருந்த வரவேற்பையும், நெளிவு சுளிவுகளையும் கண்டு வியந்த பலர் மறைவாகயிருந்து இக்கலையைக் கற்க முனைந்தனர். அவ்வாறு இக்கலையைப் பயின்ற சிலரில் கணேசனின் முன்னோரும் அடங்குவர். பல வித இன்னல்களுக்கிடையே இக்கலையைப் பயின்றவர்கள் வம்சாவழியாக தங்களது சந்ததியினருக்கு இதை பயிற்றுவித்ததில் தோல்பாவைக் கற்றுக் கொண்டவர் கணேசன்.

சிறு குழந்தையாக இருந்த போது இவரின் அழுகையை நிறுத்த கணேசனின் பாட்டனார், அவரை மடியில் அமர்த்திக் கொண்டு இரு கைகளாலும் பாவைகளை ஆட்டுவித்து நிகழ்ச்சிகள் நடத்த, குழந்தைப் பருவத்திலேயே இக்கலையின் மீது நாட்டம் கொண்டவர் கணேசன். பின்னர் மெதுமெதுவே இக்கலைகளின் வித்தையை அறிந்து கொண்ட கணேசன் இளம் பிராயத்தில் கூத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார். ஒரு நாள் தங்களது தெருக்கூத்தில் கட்டியக்காரன் வேடமேற்று நடிப்பவர் வராமல் போகவே கூடமாட வேலை செய்துக் கொண்டிருந்த கணேசனுக்கு அரிதாரம் பூசி மேடையேற்றி விட்டாராம் அவரது பாட்டனார். அன்று வேடமணியத் துவங்கிய அவர்இன்றும் தெருக்கூத்துகளில் பிரதான வேடங்களேற்று நடித்து வருகிறார். பலவித நாட்டார் கலைகளையும் அறிந்த கணேசன் தோல்பாவைக் கூத்திலும் கரை கண்டவர்.

தோல் பாவை என்பது ஆட்டுத் தோலில் செய்யப்படும் பொம்மைகளைக் குறிப்பது. இப்பொம்மைகளைத் தயாரிப்பது நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதல்ல. இப்பாவைகளைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட ஆட்டு இனத் தோல்களே பயன்படுத்தப்படுகிறது. ஒன்று முதல் இரண்டரை அடி உயரம் கொண்ட பாவைகளைச் செய்ய ஒட்டுக்கள் இல்லாத ஒரு முழு ஆட்டுத்தோல் தேவை. இந்த தோலைத் தேர்ந்தெடுத்த பின் அதன் மேலுள்ள ரோமங்களை நீக்கிப் பதப்படுத்தி, மிக மெல்லிய படலாகப் பாவை செய்ய ஏற்ற நிலைக்குத் தயாராக்க இரண்டு மாதங்களாகிறது. அதன் பின் பல புராண கதாபாத்திரங்களின் உருவங்களை மனப்பாடமாக அறிந்திருக்கும் கணேசன், ஒரு சில மணித் துளிகளில் அவற்றைத் தோலில் வரைந்து விடுகிறார். இதற்குப் பின்னர் பாவைகளை அலங்கரிக்க கண்ணைக் கவரும் வகையில் பளிச்செனும் வண்ணங்கள் மூலிகை எண்ணெய் கலந்து பூசப் படுகிறது. இம்மூலிகைகளின் வாசனையே இப்பாவைகளை பல ஆண்டுகளாகச் செல்லரிக்காமல் இருக்கச் செய்கிறது. அதன் பின்னர் தான் பாவைகளின் தனித்துவமான கூறுகளை எடுத்துரைக்கும் நகைகள், உடைகளின் சரிகை, கண்கள் போன்றவற்றைத் துளைகளாக இடும் நகாசு வேலை துவங்குகிறது. இத்துளைகள் வழியாக ஊடுருவும் ஒளி திரையில் தெரியும் போது, நிஜத்தில் நகைகள் அணிந்த பெண்ணும், ஆணும் திரையில் தோன்றும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பாவைகளின் மற்றொரு சிறப்பு, தோலின் இருபுறமும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பது.

இப்படி ஒரு கதைக்குத் தேவையான கதாபாத்திரங்கள் செய்யப்பட்ட பின், நடுவில் பிளக்கப்பட்ட மெல்லிய குச்சிகளில் செருகப்பட்டு மேடைக்குத் தயாராகிறது. கதைக்குத் தேவைப்பட்டால் சில பாவைகள், கை, கால், கழுத்தை அசைக்கும் வகையில் தனித் தனிப் பகுதிகளாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதிகள் தனித்தனி குச்சிகளால் இயக்கப்படுகின்றன.

வீடு, அரண்மனை, மரங்கள் போன்ற அசையாப் பொருட்களும், பறவை, விலங்குகள் போன்ற அசையும் பொருட்களும் இவ்வாறே செய்யப்படுகின்றன. பாவைகள் தயாரிக்கப்பட்ட பின் அவற்றைக் கொண்டுச் செல்லப், பாவைகள் அசைந்து நசுங்காத வண்ணம் எடுத்துச் செல்ல அவற்றுக்கெனத் தனித்தனிப் பெட்டிகளும் செய்யப்படுகின்றன.

மேடைஒளி பிம்பக்கலை என்பதால் தோல்பாவை நிகழ்ச்சி இரவில் மட்டுமே அரங்கேற்றப் படுகிறது. இதற்கான மேடை மூன்று பக்கங்களிலும் ஒளி ஊடுருவாத தடிமனான கருப்பு நிறச் சீலை கட்டப்படுகிறது. பார்வையாளர்களை நோக்கியிருக்கும் முன் பக்கத்தில் சுருக்கங்களற்ற வெள்ளை நிறத் துணிச்சீலை கட்டப்படுகிறது. திரையரங்குகளில் காணப்படும் வெண்திரையைப் போன்றது இது. மேடையெங்கும் இருக்கும் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, திரைகளால் செய்யப்பட்ட, சதுரக் கூட்டின் உள்ளே மட்டும் சக்தி வாய்ந்த ஒரு விளக்கு வெண்திரையில் ஒளி பாய்ச்சுகிறது. இந்த அறைக்குள் தான் பாவையாட்டிக் கலைஞர் அமர்ந்து பொம்மைகளை ஆட்டுவிக்கிறார். ஒளி பாவைகளின் மெல்லியப் படல் மூலமும், நகைகளின் துளைகளின் மூலமும் ஊடுருவி, திரையில் பிம்பமாகத் தெரிகிறது. வெண்திரையில் காணப்படும் பாவைக் கதாபாத்திரங்கள் வண்ணத்தில் பிரதிபலித்து மிளிர்வது ஒரு சிறப்பம்சம்.

பாவையாட்டும் கலைஞர் இருகைகளிலும் விரல்களுக்கிடையே பாவையின் குச்சிகளைப் பிடித்து கதாபாத்திரங்களின் வசனம், பாடல்களுக்கேற்றவாறு அவற்றை ஆட்டுவிப்பார்.

காட்சியில் வரும் அசையாப் பொருட்களும், காட்சியில் வசனம் பேசாத மற்ற கதாபாத்திரங்களும், திரையை ஒட்டி உட்புறமாகக் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் செருகி வைக்கப்படுகின்றன. பாடல்களுக்கு இசை சேர்ப்பவர்களும், உடன் பாடுபவர்களும் இந்த அறைக்கு வெளியில் அமர்ந்திருப்பர்.

இதையெல்லாம் மிஞ்சும் விடயம், இப் பாவைகளை ஆட்டுவிக்கும் கலைஞரே இக்கதாபாத்திரங்களின் வசனங்களையும், பாடல்களையும் பாடுவது தான்.

நாம் நினைப்பது போல் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. காட்சிக்குத் தேவையான பொருத்தமான பொம்மைகளைத் தேர்ந்தெடுத்து, அவை பேசும் வசனங்களையும், பாடல்களையும் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் உச்சஸ்தாயில் ஏற்ற இறக்கங்களுடன் பாடிக் கொண்டே விரல்களின் மூலம் வசனத்துக்கு தகுந்தாற்போல் ஒருங்கிணைத்து இயக்குவது மிக மிகக் கடினமான செயல். அதிலும் கணேசன், பெண்கள் உட்பட அனைத்துக் கதாபாத்திரங்களின் வசனங்களையும் பாடல்களையும் குரலை மாற்றி ஏற்ற இறக்கத்தோடு பாடக் கூடியவர். விவரம் தெரியாமல் நிகழ்ச்சியைக் காண நேர்ந்தால் பல கலைஞர்கள் பேசிப் பாடுவதாகவே நினைத்துக் கொள்வர். அந்த அளவுக்கு துல்லிய வேறுபாடுகளை எடுத்துக் காட்டும் திறமையும், வல்லமையும் பெற்றவர் கணேசன்.

தெருக்கூத்து, மரப்பாவைக் கூத்து என பலவகை நாட்டார் கலைகளில் திறம்பெற்ற கணேசன், தோல்பாவைக் கூத்தே மிகவும் சவால் நிறைந்தது எனக் குறிப்பிடுகிறார். சுற்றிலும் மூடப்பட்டிருக்கும் அறைக்கு வெளியேயிருந்து இசையமைக்கும் கலைஞர்களுக்கு ஏற்றவாறு பாடுவதும், பேசுவதும் அதே நேரம் பாவைகளை இயக்குவதும் ஒரு சேர நடக்கவில்லை என்றால் முழு நிகழ்ச்சியும் கேலிக்கிடமாகி விடும் என்பது அவர் கருத்து.

அரிச்சந்திரன், மகாபாரத, இராமாயாணத் கிளைக் கதைகள் போன்ற புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே பெரும்பான்மையான தோல்பாவை நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன. பொழுதுபோக்க மட்டுமின்றி, சமுதாயத்திற்கு நல்லொழுக்கம், நல்லறம் போன்றவற்றை எடுத்துரைக்கவும் இவை உதவுகின்றன.

paarthathil-rasiththathu_2_520x312பல ஆண்டுகளாய் பெரிய மாற்றங்களின்றி மக்களுக்கு மிகப் பரிச்சயமான இது போன்ற புராண நிகழ்வுகளையே கருவாகக் கொண்டு நடப்பதால் கூத்துகள் தங்களைக் கவர்வதில்லை என்றும் பொதுமக்களும், பொது மக்களிடம் போதிய வரவேற்பில்லாததால் கூத்துகளில் பெரிய அளவில் மாற்றங்களையும் புதுமைகளையும் சேர்க்க முடிவதில்லை என்று கூத்துக் கலைஞர்களும் சொல்லி வரும் தற்போதைய காலக் கட்டத்திலும், கணேசன் தன் பிள்ளைகளுக்கும் இக்கலையினைப் பயிற்றுவிக்க அவர்களும் தந்தையைப் போலவே மிகச் சிரத்தையுடன் இதனைக் கற்று வருகின்றனர். தோல்பாவைக் கலையின் மூலம் தனது எளிமையான வாழ்க்கைக்கு கூட போதுமான வருமானமில்லாத கணேசன், நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மாநில அளவிலும், இந்திய அளவிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கும் கணேசன், இக்கலையின் மீது கொண்டிருக்கும் பற்றும், பக்தியும் அதீதமானது. தனது கடைசி நாள் வரை கூத்துக் கட்ட வேண்டும்’ என்பதே அவரது விருப்பம்.

கைப்பேசியில் கூட ஒரு முழு நீளத் திரைப்படத்தை உட்கார்ந்த இடத்திலேயே பார்க்க முடிகிற தற்கால விஞ்ஞான வளர்ச்சியினூடே, பாரம்பரியக் கூத்துக் கலைகளைப் பொழுது போக்கு அம்சமாக மட்டும் கருதாமல், சமுதாயத்தின் அடையாளமாகக் கருதும் கணேசன் போன்ற கலைஞர்களின் முயற்சிகளும், கனவுகளும் வெற்றி பெற நம்மால் இயன்ற ஆதரவளிப்பது இன்றியமையாதது.

இதே போன்றதொரு உயர்ந்த. உன்னத நோக்கத்தோடு செயலாற்றி வரும் இன்னொரு நபர் மு. ஹரிகிருஷ்ணன். நேரிடையாக இக்கலைகளை நிகழ்த்தாவிடினும், பல்வேறு நாட்டார் கலைகளைப் பற்றிப் படித்தறிந்து, ஆய்வுகள் நடத்தி வருகிறார் இவர். வெளியுலகுக்கு அறிமுகமாகாமல் இருக்கும் பல கலைஞர்களைக் கண்டுணர்ந்து அவர்களின் திறமைகளை வெளிக் கொணர்கிறார். பல்வேறு கலை அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் இவர், அவ்வமைப்புகளில் அவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தருகிறார். இன்று இவரால் மறுவாழ்வு பெற்றிருக்கும் கலைஞர்கள் பலர்.

 

சேலத்தைச் சேர்ந்த மின்னியல் வல்லுநர் ஹரிகிருஷ்ணன். நலிந்து வரும் கூத்துக் கலையையும், கலைஞர்களையும் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இம்முயற்சியின் ஒரு பகுதியாக இன்றைய இளந்தலை முறையினரும் தொன்மையான கூத்துக் கலையின் சாராம்சத்தை அறிய சேலம் மாவட்டம் ஏர்வாடியில் கூத்துப் பயிற்சிப் பள்ளியொன்றைத் துவங்கி நடத்தி வருகிறார். இதில் கணேசனைப் போன்ற திறமையாளர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

மேலும் அரசாங்கத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு, சினிமா போன்ற துறைகளில் காணப்படும் ஈடுபாட்டை பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதிலும் காட்ட மாவட்டந்தோறும் பல வகுப்புகள் அமைத்துத் தர முயன்று வருகிறார். பல்வேறு நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் கூத்துகளின் தகவலை விரல் நுனியில் வைத்திருக்கிறார் மனிதர். மிகவும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இத்தகவல்களை சேகரித்து அறிந்துள்ள அவரிடம் பேசியது இனிமையானதொரு அனுபவம்.

அருங்கூத்து, மயில் ராவணன் எனும் புத்தகங்களையும் எழுதியுள்ளார் ஹரிகிருஷ்ணன். ஆங்காங்கே எஞ்சியிருக்கும் பழம்பெரும் கூத்து நிகழ்கலைக் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது அனுபவங்களை ஆவணப் படங்களாகப் பதிவு செய்து, நலிந்து மறைந்து வரும் கலைகளின் வரலாற்று அடையாளச் சின்னங்களாக உருவாக்கியுள்ளார்.. இன்று உலகளவில் அம்மாப்பேட்டை கணேசன் அறியப்பட மு. ஹரிகிருஷ்ணன் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை!

ரவிக்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad