\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஆழ்நித்திரை

aazhniththirai_620x443நாம் அனைவரும் தினந்தோறும் செய்யும் விடயம் உறங்குவது. ஆன்மிக ரீதியாக இதைப்  பற்றி சற்று அலசிப் பார்ப்போம். இந்த விடயத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களைக் கீழே “கமெண்ட்” எழுதி பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். வேதங்கள்  மனிதன் மூன்று நிலையில் உள்ளான் என சொல்கிறது. முழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்நித்திரை. ஆசை, சோகம், பொறாமை என பல உணர்வுகள் நமக்கு முழிப்பில் இருக்கும் தருணம் வருவதுண்டு.

புத்த மதத்தை   எடுத்துகொண்டால் மனிதன் கெடுவது ஆசையால். நாம் வாழும் வாழ்க்கை வெறும் மாயை. சூன்யம் தான் உண்மை. மற்றதெல்லாம் மாயை என்கிறது. ஹிந்து அத்வைதத்தை எடுத்துக்கொண்டால் மனிதனுடைய இயல்பு மகிழ்ச்சி. மாயையால் ஆசை, கோபம், சோகம் என உணர்வுகளில் சிக்கி பிறப்பு இறப்பு என அவதிப்படுகிறோம் என்கிறது. அதனால்தான் பல துறவிகள் “ஆனந்தா” என அடைபெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய இயல்பு ஆனந்தம் என்றால் அதை எப்படி அடைவது? நமக்கு கவலை, கோவம், சோகம் என பல உணர்வுகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கையில், ஆனந்தம் எப்படி வரும்?

தியானத்தினால் முக்தி அடைந்த முனிவர்கள் போல், நாமும் சற்று தினமும் பிரம்ம நிலையை அடைகிறோம் என்றால் நம்புவீர்களா? அனால் அது தான் உண்மை. அப்படி நாம் அந்த ஆனந்த நிலையை அடைந்தபின் ஏன் அப்படி உணர்வதில்லை? நமக்கு ஏன் அந்த நிலை நினைவில் இல்லை? ஏன் என்றால் அந்த ஆனந்த நிலையை நாம் அடையும் பொழுது ஆழ்நித்திரையில் இருக்கிறோம். அப்படி சொல்வதை விட, ஆழ்நித்திரையில் இருப்பதினால் ஆனந்த நிலையை அடைகிறோம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

மனிதனுக்கு ஐந்து உணர்வுகள் உண்டு. காட்சி பார்த்தல், வாசனை சுவாசித்தல், சுவைத்தல்,இசை/ஒலி கேட்டல் மற்றும் தொட்டுனர்தல். இதை தவிர மனம் அல்லது புத்தி என்பதை சிலர் ஆறாவது உணர்வாக கொள்வதுண்டு. நாம் முழிப்புடன் இருக்கையில் இந்த ஆறு உணர்வுகளையும் பயன்படுத்துகிறோம். கண்கள் நல்ல காட்சியைப் பார்க்கத் தூண்டுகிறது. செவி நல்ல இசையை நாடுகிறது. எண்ணமோ நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு வருவதை நினைத்துக் கவலைப்பட்டு இருக்கிறது. இந்த உணர்வுகளெல்லாம் தான் மாயைக்கு அடிக்கோல். நம்முடைய ஆனந்த நிலையை மறைக்கும் திரை. இதனால் தான் பல முனிவர்கள் காட்டை நோக்கி செல்கிறார்கள். இந்த ஐந்து உணர்விற்கும் பட்டினி போட்டு பிரம்ம நிலையை அடைய முயற்சிக்கிறார்கள். இந்த ஆறு உணர்வுகள் திரையை எப்படி விலக்குவது?

நாம் தினமும் தூங்கத் துடங்கும் பொழுது, கனவுகள் வரும். இதில் நமது ஏக்கங்கள், குறைகள் மற்றும் அடையா ஆசைகள் எல்லாம் கனவாக வந்துச்செல்லும். இந்தக் கனவு நிலையில் ஐந்து உணர்வுகளும் மறைகின்றன. எண்ணம் மட்டும் கனவுகளாக   வந்து செல்கிறது. உங்கள் கனவில் காட்சிகளும் நீங்கள் தான், காட்சியில் உள்ள மனிதர்களும் நீங்கள் தான். உங்கள் மனம் என்ன நினைக்கிறதோ அதுதான் காட்சியாக வருகிறது. உங்கள் எண்ணத்தின் பிம்பம் தான் கனவு. கனவு நிலையில், ஆறு உணர்வுகளில் ஐந்தை அடக்கியுள்ளோம்.

அப்படியே நீங்கள் கனவுலகில் இருந்து ஆழ்நித்திரைக்குச்  சஞ்சரிக்கும் பொழுது, அந்தப்   புத்தியும் சற்று இளைபாறுகிறது. அப்பொழுது கனவுகள் இல்லை, எண்ணங்கள் வருவதில்லை. கோபம் எல்லாம் மறைந்து போகிறது. பொறாமை, கவலை என்ற உணர்வுகளும் காணாமல் போகிறது. அவன் வேறு இவன் வேறு என்ற வேற்றுமை இல்லை. நாம் நமது இயற்கை உணர்வான ஆனந்த நிலையை அடைகிறோம். இந்த நிலையில் பரம்பரை பகைவர்கள் இருவர் அருகருகே  இருந்தாலும் சண்டை வராது, உயிர்க்காதலர்கள் அருகருகே இருந்தாலும் அன்பு வராது.

இந்த நிலையில் நமது உடலை நாம் சொந்தம் கொண்டாடுவதில்லை, நமது குடும்பத்தையும் நாம் உரிமை கொள்வதில்லை. நமது சொத்துக்களை நமதாக எண்ணுவதில்லை. நாம் அழகா அல்லது பலசாலியா அல்லது உயரமா, எந்தக் கவலையும் இல்லை. நம்மிடம் இருப்பது பிரம்மமாகிய உயிர் மட்டும் தான். உடலும், நினைவும் அற்று ஆனந்தமான நிலை அது.

ஒரு காதல் பாட்டில் வரும் கங்கை அமரனின் வரிகள் இந்த தருணத்துக்கு சரியாக பொருந்தும்.

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்,

நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்,

மௌனத்தின் ராகம் கேளாதோ!

மௌனத்தில் தாளம் போடாதோ!

அந்த மௌனம் (ஷாந்தி) தான் நாம் எல்லாரும் நாடும் பிரம்ம நிலை. ஆனால் நில்லென்று சொன்னால் மனம் நிற்க ஆன்மிக பாதையில் செல்வது மிக அவசியம். உணர்வுகளுக்கு நாம் அடிமையாய் இருக்கும் வரை மனம் நாம் சொல்வதைக் கேட்காது.

பகைமை, கோபம், காதல், பொறாமை போன்ற எல்லா உணர்வுகளும் மாயையால் உருவாக்கப்பட்டவை. ஆழ்நித்திரையில் இந்த மாயை விலகுகிறது. இந்த நிலை நீடித்தால் நாம் எல்லோரும் ஞாநி. ஆனால் அங்கே தான் இறைவனின் திருவிளையாடல் தெரிகிறது. பல ஞானிகளுக்கும் எட்டாக்கனி ஆன முக்திநிலை அவ்வளவு எளிதாக நமக்கு கிடைத்திடுமா? தூக்கம் கலைந்தவுடன் நம்முடைய அத்தனை உணர்வுகளும் முன்போல் திரும்ப செயல்பட்டு, மாயை என்னும் திரை போடப்படுகிறது.

ஆன்மிகம் சொல்லும் கருத்து என்னவென்றால், மாயை நிரந்தரமாக அகற்றும் சரியான மருந்து ஞானம். ஞானம் அடைய சரியான வழி ஒரு நல்ல குருவிடம் வேதம் பயில்தல். ஒரு நல்ல குரு கிடைக்க தேவை வேதம் கற்க நாட்டமும் இறை அருளும். இந்த மாயை அகற்ற இன்று முதல் வேதம் கற்க ஆசை கொள்வோம், அதற்கு வழி வகுக்க இறைவனை தியானிப்போம்.

-பிரபு

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Shakil Ahamed says:

    Vedham cannot be recited by everyone and I remember it’s restricted only to those who have restriction in food and etc etc

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      I believe we will get the clarity that this is certainly not the case, as we read/study more and more on this topic. This widely-believed restriction was created by the society that existed in-between. Not by Veda-Vyasa or any Rishis who passed this on generations over generations. “Englightenment” is a birth-right for anyone and everyone & if Vedas provide it, everyone has the rights to learn, recite and pass on.

  2. மதுசூதனன் வெங்கடராஜன் says:

    பிரபு, அருமையான கட்டுரை. அரிய உண்மைகளைக் குறித்து ஒரு விழிப்புணர்வைத் தூண்ட முயற்சிப்பதற்கு நன்றி. மிகவும் ஆழமான துறையிது, தொடர்ந்து எழுதவும். ஆழமாகவும், சிந்தனைகளைத் தூண்டும் வண்ணமும் இனிவரும் கட்டுரைகள் அமையட்டும். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad