Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7

american-politics-election_620x620அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு பெருங்கட்சிகளின் மாநாடு நடந்து முடிந்து விட்டன. கிளீவ்லாண்ட், ஓஹையோ வில் ஜுலை 18-21 நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் அக்கட்சி சார்பில் டானல்ட் ஜான் ட்ரம்ப் அதிபராகவும், மைக்கேல் ரிச்சர்ட் பென்ஸ் துணை அதிபராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். பிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஹிலரி ராடம் கிளிண்டன் அதிபராகவும், டிமோதி மைக்கேல் கெய்ன் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டனர்.

குடியரசுக் கட்சி மாநாடு

பொது மக்களாலும், ஊடகத் துறையினராலும், அரசியல் நோக்கர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாநாடு இது. கட்சிக்குள் ட்ரம்புக்கு இருந்த அதிருப்தி, கடந்த சில மாதங்களாகக் கட்சியை எச்சரித்து வந்த அவரது பரபரப்புப் பேச்சுகள் போன்றவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. கடைசி நேரத்தில் கட்சி வேறொருவரை முன்மொழியலாம் என்ற ஹேஷ்யங்களும் இருந்தன. நல்ல வேளையாக அப்படிப்பட்ட திருப்பங்கள் எதுவுமில்லை.

குடியரசுக் கட்சியின் முக்கியத் தலைகளான ஜார்ஜ் எச். புஷ், ஜார்ஜ் டபிள்யு. புஷ், ஜெஃப் புஷ், ஜான் மெக்கெய்ன், மிட் ராம்னி போனவர்கள் மாநாட்டுக்கு வரவில்லை. மார்கோ ரூபியோ, ஜான் கேஷிஷ், மேலும் சில செனட்டர்கள் தங்களது செனட் தேர்தலில் மும்முரமாக இருப்பதால் வரவில்லை என்று தெரிவித்திருந்தனர். அரிசோனா செனட்டர் ஒருவர் தன் வீட்டில் ‘லான் மோ’ (lawn mow) செய்ய வேண்டியிருப்பதால் வரவில்லை என்று தெரிவித்துத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மாநாட்டின் முதல் நாளில் போட்டியாளரின் பெயரை வழி மொழிய ‘ரோல் கால்’ முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் கூச்சலிட்டனர். ஆனால் பெருங்குரலெடுப்பு மூலம் ஆதரவையோ, எதிர்ப்பையோ தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ‘ஆம்’, ‘இல்லை’ என்ற குரல்கள் கலப்படமாக ஒலித்த போதும், ‘ஆம்’ என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது எனச் சொல்லப்பட்டு ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து மாநாட்டில் பென்காசி போர்முனையில் பணியாற்றிய வீரர்கள் சிலர், அப்போரில் இறந்த வீரரின் தாயார் ஒருவர் ஆகியோர் ஹிலரியின் தவறான முடிவினால் அமெரிக்காவுக்குப் பேரிழப்பு நடந்ததெனக் குறிப்பிட்டுப் பேசினர். முன்னாள் நியுயார்க் மேயர் ரூடி ஜுலியானி தற்போது அதிகரித்து வரும் வன்முறைகளைப் பற்றியும், நிற வேற்றுமைகள் குறித்தும் பேசினார். அடுத்துத் தனது மனைவி மெலேனியாவை அறிமுகப்படுத்த மேடையில் தோன்றினார் ட்ரம்ப். பாப் இசை உலகத்தினர் அறிமுகப்படுத்தப்படுவது போலப் புகை மண்டலத்தில், பேக் லைட்டிங் சில்லவுட்டில் ‘குயின் பாடிய ‘வீ ஆர் த சாம்பியன்ஸ்’ பாடல் ஒலிக்க மேடையின் நடுவே நடந்து வந்தார் ட்ரம்ப். மேலேனியா தனது கணவரைப் பற்றியும், நாட்டுப் பற்று பற்றியும் சிறப்பாகவே உரையாற்றினார் என்று தோன்றியது. அவர் பேசிய முடித்த சில நிமிடங்களில் எட்டாண்டுகளுக்கு முன்னர் மிச்சேல் ஒபாமா பேசிய பேச்சிலிருந்து பல பகுதிகளை மெலேனியா தனது பேச்சில் பயன்படுத்தினார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிச் சர்ச்சையானது.

நான்கு நாட்களும் ட்ரம்பின் பிள்ளைகள் டிஃபனி ட்ரம்ப், டானல்ட் ட்ரம்ப் ஜூனியர், எரிக் ட்ரம்ப், இவாங்கா ட்ரம்ப் ஆகிய ஒவ்வொருவரும் பேசினர். டானல்ட் ட்ரம்ப் ஜூனியர் தனது தந்தையைப் பற்றியும் அவரது தொழிற் திறன்களைப் பற்றியும் நன்றாகவே பேசினார். இவாங்கா ட்ரம்பும் தனது பங்குக்கு டானல்ட் கண்டிப்பானவராகக் காட்டினாலும், அவர் உள்ளுக்குள் அன்பும் பாசமும் நிறைந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டினார். இரண்டாவது நாள் பேசிய சபை நாயகர் பால் ரையன் குடியரசுக் கட்சியின் 17௦௦ க்கும் அதிகமான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று டானல்ட் ட்ரம்ப் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவித்து அனைவரும் ஒரு முகமாகக் குடியரசுக் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நியு ஜெர்ஸி கவர்னர் க்றிஸ் கிரிஸ்டி, ஹிலரியின் செனட்டர் காலச் செயல்களையும், செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் பணியில் அண்டை நாட்டு உறவுகளில் எடுத்த முடிவுகளையும், அரசு மின்னஞ்சல்களைத் தனது கம்ப்யூட்டரில் வைத்திருந்தது பற்றியும் ஒவ்வொன்றாக அடுக்கிக் கூடியிருந்த மக்களிடம் ‘ஹிலரி தவறானவறா? சரியானவரா?’ என்று கேட்டு ஹிலரிக்கு எதிரான வலுவான குரலை எழுப்பச் செய்தார்.

மூன்றாவது நாள் பேசிய டெட் க்ருஸ், அமெரிக்காவில் அரசாங்கத்தின் பிடி இறுகித் தனி மனிதச் சுதந்திரம் பறிபோவதாகப் பேசினார். வெளிநாடுகளில் பரவியிருந்த பயங்கரவாதம் மெதுவே அமெரிக்காவுக்குள் புகுந்து விட்டதையும், பல மாநில மக்களைச் சந்தித்த போது அவர்களிடம் தெரிந்த வெறுமையையும், ஏமாற்றங்களையும் பற்றிப் பேசினார். அவர் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பேசிய போதும் ஒரு தடவையும் ட்ரம்பின் பெயரை உச்சரிக்காது, தனது உரையை முடிக்கும் தருணத்தில் ‘உங்கள் மனசாட்சிபடி வாக்களியுங்கள்’ என்று சொல்லி முடித்தது பார்வையாளர்களைக் கூச்சலிட வைத்தது. கட்சி வலுப்பெற வேண்டிய நேரத்தில் க்ருஸ் தனி மனிதக் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியதாகப் பலரும் நினைத்தனர்.

அவரைத் தொடர்ந்து பேசிய பென் கார்சன், பென்காசி விஷயத்தில் அலட்சியமாக இருந்ததால் பலர் உயிரிழக்க ஹிலரி காரணமாக இருந்ததாகவும், அதனால் அவரைச் சாத்தான் (Lucifer) என்றும் ஒப்பிட்டார்.

துணை அதிபருக்கான வேட்பாளர் மைக் பென்ஸ் தனிப்பட்ட முறையில் ட்ரம்புக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், தனது பேச்சில் அவற்றை வெளிக் காட்டிக்கொள்ளாமல் நாட்டின் பாதுகாப்பு, கல்வி பற்றிப் பேசினார். கட்சியின் பழமைவாதக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருக்கும் இவர் ட்ரம்பின் புதியக் கொள்கைகளைச் சமன்படுத்துவதற்காகத் தேர்ந்தேடுக்கப்படுள்ளவர் என்பது புரிந்தது.

இறுதி நாளன்று பேசிய ட்ரம்ப், நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டதாகவும், தான் பதவியேற்கப் போகும் ஜனவரி 2௦, 2௦17ல் நிலைமை மாறி, நாட்டில் அமைதி திரும்பும் எனவும் கூறினார். நாட்டில் பல இடங்களில், வாஷிங்க்டன், சிகாகோ உட்படப் பல இடங்களில் வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து விட்டதற்கான புள்ளி விவரங்களைக் குறிப்பிட்டார். ஹிலரியின் மின்னஞ்சல் விவகாரத்தில் அரசையும், எஃப்.பி.ஐ யும் ஏமாற்றி விட்டார், நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்துவிட்டார் எனக் குற்றஞ் சாட்டினார். அரசியல் லாபியிஸ்டுகளின் பிடியில் ஹிலரி உள்ளதாகவும் அவர்களது கையிலிருக்கும் கயிறுக்கு ஏற்றவாறு தான் ஹிலரி ஆடுவார் எனவும் குறிப்பிட்டுப் பேசினார். பெர்னி சாண்டர்சின் ஆதரவாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில், பெர்னியின் நல்ல உணர்வுகள் அரசியல் மோகம் கொண்ட ஹிலரியாலும், அவரது பணக்கார நண்பர்களாலும் நசுக்கப்பட்டு விட்டதாகவும். பெர்னியின் கொள்கைகளைத் தான் ஆதரிப்பதால், பெர்னி ஆதரவாளர்கள் தம் பக்கம் சேர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். தாம் எந்த நாட்டுக்கும், மதத்துக்கும் எதிரியல்ல என்றும் தளர்ந்து போயுள்ள குடியுரிமைச் சட்டத் திட்டங்கள் சரி செய்யப்படும் வரையில் வெளிநாட்டினரை அனுமதிக்கபோவதில்லை என்ற தனது முடிவை வலியுறுத்தினார். உரையின் முடிவில் தனக்கு அரசியலின் நெளிவு சுளிவுகள் அத்துப்படி என்றும், அதனால் தன்னால் மட்டுமே அவற்றைச் சீரமைக்க முடியும் என்றும் குறிப்பிட்டது அவரது அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. பல மாதங்களுக்கு முன்னர் ட்ரம்ப் அரசியலுக்கு லாயக்கில்லை, முதற் சில சுற்றுகளில் வெளியேறிவிடுவார் என்றெல்லாம் சிலர் ஏளனம் செய்தனர். அவர்களின் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி நான் இன்று உங்கள் முன் கட்சியின் வேட்பாளராக நிற்கிறேன். அதே ஊக்கத்தோடும், உழைப்போடும் சுதந்திர அமெரிக்காவை மீட்டெடுப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சி மாநாடு

ஜனநாயகக் கட்சியின் மாநாட்டின் துவக்கமும் அமளிகளுடன் தான் இருந்தது. பெர்னி ஆதரவாளர்கள் மாநாடு நடைபெற்ற இடத்துக்கு வெளியே ரகளையில் ஈடுபட்டனர். மாநாட்டுக் கூடத்திலும் இது எதிரொலித்தது. கட்சியில் ஆளுமை நிறைந்த சிலர், மறைமுகமாக பெர்னி சாண்டர்ஸுக்கு எதிராகச் செயல்பட்டனர் எனும் மின்னஞ்சல்கள் கசிந்ததினால் கூச்சலும் குழப்பமும் எதிரொலித்தன. ஆனால் இவை பேச்சாளர்கள் மேடையில் தோன்றியதும் ஓரளவு கட்டப்பட்டன.

துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனப் பெரும்பாலோனோர் நினைத்திருந்த எலிசபெத் வாரன் பேசுகையில் சமீபக் கால நிலைமைகளால் கொதிப்படைந்துள்ள மக்களைத் தவறான வழியில் திசை திருப்பப் பார்க்கிறார் டானல்ட். அதை எப்படித் தீர்ப்பது என்ற திட்டங்கள் ஏதும் அவரிடம் இல்லை எனக் குறிப்பிட்டார். தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படும் ஒரு மனிதருக்கும், நமது எல்லோரின் நலனுக்காகப் பாடுபடத் துடிக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையே உருவாகியுள்ள போட்டியில் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நம் கையில்தான் உள்ளது என்றார்.

பார்வையாளர்களில் நிறைந்திருந்த பெர்னி சாண்டர்ஸ் (கிட்டத்தட்ட 35 சதவிகிதம்) ஆதரவாளர்களின் ஆரவார வரவேற்புடன் பெர்னி மேடையேறினார். அரங்கெங்கும் எதிரொலித்த கரகோஷம் அடங்க மூன்று நிமிடங்களானது. அவரது தீவிர ஆதரவாளர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். பெர்னி பேசும் பொழுது, தேர்தல்கள் வரும் போகும். தேர்தல் போட்டிகள் ஹிலரி, ட்ரம்ப், பெர்னி எனும் தனி நபரைத் தேர்ந்தெடுக்க இல்லை. இந்தத் தேர்தல் மக்களின் தேவைகள் என்ன, எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் போன்றவைகளை முடிவெடுக்க வேண்டிய தருணம். உங்கள் சார்பாக என்னால் போட்டியிடமுடியவில்லை என்பது எனக்கு வருத்தம் தான். ஆனால் நாம் துவங்கிய இந்தப் புரட்சி அமெரிக்கச் சரித்திரம் இதற்கு முன் காணாதது. கண்டிப்பாக நமது கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். இப்போது நாம் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டிய நேரம். கிளிண்டன் தான் அடுத்த அதிபராக வரவேண்டும் என்று அழுத்தமாக உரைத்து ஒற்றுமையை நிலை நாட்ட முயன்றார்.

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின் பேச்சு, மிகச் சிறந்த பேச்சாக அமைந்தது எனலாம். தனது குடும்பத்தினர், மகள்களைப் பற்றியே அவர் பேசியதாகத் தோன்றினாலும், சிறுபான்மையினர், கல்வி, அடுத்தத் தலைமுறையினர் பற்றி அமைந்திருந்த அவரது பேச்சு நீண்ட நாட்கள் அமரிக்க அரசியலில் பேசப்படும். ‘யாரையும் அமேரிக்கா வலுவிழந்து விட்டது என்று பேச விடாதிர்கள’ என்றும் ‘அவர்கள் (நம்மை நசுக்க நினைத்துத் தரக் குறைவாக நடப்பவர்கள்) தாழும் போது நாம் உயர்கிறோம்’ என்றும் அவர் சொல்லிய போது அரங்கமே அதிர்ந்தது. சில சமயங்களில் அவரே உணர்ச்சிவசப்பட்டுப் போனார் என்று தான் சொல்லவேண்டும். 2008ல் ஏற்பட்ட பின்னடைவால் சோர்ந்து விடாமல், மீண்டும் அதே வேகத்துடன் இன்று தேர்தல் களம் காணும் ஹிலரியின் மனவுறுதியைப் பாராட்டினார்.

முன்னாள் அதிபரும், ஹிலரியின் கணவருமான பில் கிளிண்டன், தங்களது கல்லூரி நாட்களைப் பற்றியும், வாழ்க்கையைத் தொடங்கியது பற்றியும் குறிப்பிட்டு ஹிலரியின் திறன்களையும், சேவை மனப்பான்மை பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார். இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அப்போது நியு யார்க் செனட்டராக இருந்த ஹிலரியின் பணிகளைச் சுட்டிக் காட்டினார்.

ஹிலரியின் மகள் செல்ஸி தனது தாயாரின் மன திடத்தையும், உறுதியையும் பற்றிப் பேசினார்.

இந்த மாநாட்டில் குறைந்த நிமிடங்களே பேசினாலும் மிக அழுத்தமான, உணர்வுப்பூர்வமான கருத்தைப் பதிவு செய்தவர் கிஃஜிர் கான். இராக் போரின் போது, தனது உடனிருந்த வீரர்களின் உயிரைப் பாதுகாத்துத் தன்னுயிர் நீத்த ஹுமாயுன் கான் என்பவரது தந்தை இவர். தனது மனைவியுடன் மாநாட்டு மேடையேறிய கிஃஜிர் கான், பெரும்பாலான புலம் பெயர்ந்தொரைப் போலத் தானும் வெறுங்கையோடு அமெரிக்காவுக்கு வந்ததாகவும், அமெரிக்க மண்ணில் சுதந்திரமாக வாழ்க்கையைத் தொடங்கிக் குடும்பத்தை வளர்த்து வந்ததாகவும், ஹுமாயுன் கொண்டிருந்த நாட்டுப் பற்று அவரை ராணுவத்தில் சேர வைத்ததையும் குறிப்பிட்டார். டானல்ட் ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால், இஸ்லாமியரான தாங்கள் அமெரிக்காவுக்கு வந்திருக்க முடியாதெனவும், ஹுமாயுன் போன்றதொரு வீரன் கிடைத்திருக்க மாட்டான் எனவும் சுட்டிக்காட்டிய அவர், டானல்ட் ட்ரம்ப் அமெரிக்க மக்களை உங்களை நம்பித் தங்கள் நாட்டை ஒப்படைக்கச் சொல்கிறீர்கள். நீங்கள் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பாக மக்கள் எவ்விதப் பாகுபாடுமின்றிச் சமமாக, சுதந்திரத்துடன் நடத்தப்படுவார்கள் என்கிற பத்தியைப் படியுங்கள். நான் உங்களுக்கு அந்தச் சட்டப் புத்தகத்தைத் தருகிறேன். படித்துப் பாருங்கள். ஆர்லிங்டன் (போரில் மாண்டவர்களின் வீரத்தைப் போற்றும்) கல்லறைக்குப் போய்ப் பாருங்கள். மதங்கள், நிறங்கள் வேற்றுமை கடந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியும் என்று கூறினார். இவரது பேச்சு மிகப் பலத்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

துணை அதிபர் வேட்பாளரான டிம் கெய்ன் பேசும் பொழுது ஆப்ரஹாம் லிங்கனின் கனவுகளைப் பற்றிக் குறிப்பிட்டு, லிங்கனின் ஆட்சியைப் போன்றே சிறப்பானதொரு ஆட்சியைக் கிளிண்டன் தலைமையில் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். அடிமட்டத்தில் தொடங்கிய தனது அரசியல் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்று அனுபவம் பெற்ற அவர், டானல்ட் என்னை நம்புங்கள் என்று சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு வாக்குறுதியும், எந்தத் திட்டமுமின்றி அவர் சொல்லும் ஏமாற்றுக் கட்டுக் கதைகள் என்றார். டானல்ட் நடத்திய கேசினோ, கட்டுமான நிறுவனத்தை நம்பிப் பல குடும்பங்கள் முதலீடு செய்திருந்த போது தனது நிறுவனத்தைத் திவாலாக்கிவிட்டு அவர்களை ஏமாற்றியதைச் சுட்டிக் காட்டினார். முன்னாள் அதிபரின் மனைவி லாரா புஷ் (குடியரசுக் கட்சி) எந்தப் பெண்ணும் ட்ரம்பபுக்கு வாக்களிக்க மாட்டாள் என்று குறிப்பிட்டதையும், ஜான் மெக்கெய்ன், ஜான் கேசிஷ் போன்றவர்களே ட்ரம்ப் மீது நம்பிக்கையிழந்துவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். ஹிஸ்பானிய மொழியில் தேர்ச்சி பெற்றுள்ள அவர் அம்மொழியிலும் பேசி ஹிஸ்பானியர்களின் வாக்குகளுக்கு வித்திட்டார்.

துணை அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைத் துல்லியமாக அறிந்தவர் ஹிலரி. இந்தத் தேர்தலில் அவர்களுக்கு மேன்மை அளிக்கக் கூடிய திறன் படைத்தவர் ஹிலரி மட்டுமே என்றார்.

அதிபர் பராக் ஒபாமா வழக்கம் போல் சிறந்த சொல்லாடல்களால் ஹிலரி கிளிண்டனின் ஆற்றல்கள் பற்றிப் பேசினார். தனது முதல் நான்காண்டு பணியில், ஹிலரி ‘செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்’ டாக இருந்த சமயத்தில், தான் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து எடுத்த கடினமான முடிவுகளில் ஹிலரி எப்படியெல்லாம் உதவினார் என்பதைக் குறிப்பிட்டார். குறிப்பாக, பின் லாடனைச் சுற்றி வளைக்க முடிவெடுத்த போது ஹிலரி கொண்டிருந்த உறுதியும், திடமும் அபாரமானது என்றார். நாட்டின் பாதுகாப்பு, கல்வி, வளர்ச்சி, அண்டை நாடுகளுடனான உறவு என எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஹிலரியின் பல ஆண்டுகால அரசியல் அனுபவமும் ஆற்றலும் அவருக்குக் கை கொடுக்கும்; இன்றைய சூழலில் தன்னை விடவும், பில் கிளிண்டன் அதிபராகச் செயலாற்றியதை விடவும், ஹிலரி சிறப்பான அதிபராக விளங்குவார் என்றார்.

இறுதியாக ஏற்புரை வழங்க, ராச்செல் பிளேட்டனின் திஸ் இஸ் மை ஃபைட் சாங் பாடல் ஒலிக்க மேடையேறினார் ஹிலரி. பலருக்கு நன்றி சொன்ன அவர், பெர்னியின் கொள்கைகள் புதியதொரு உத்வேகத்தைக் கொண்டு வந்துள்ளது எனவும் அவற்றை அரவணைத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். அமேரிக்கா தாழ்வடைந்து விட்டது எனும் ட்ரம்பின் கூற்றில் உண்மையில்லை என்று கூறியவர், ட்ரம்ப் ‘அமெரிக்காவைத் தன்னால் மட்டுமே மாற்ற முடியும்’ என்று கூறியதைக் கடுமையாகச் சாடினார். பல நிறத்தவர், மதத்தவர், பொருளாதார சக்தி படைத்தவர் என நிறைந்திருக்கும் அமெரிக்காவின் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பும், சமமான உரிமையும் கிடைக்க அனைவரோடும் சேர்ந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் ட்ரம்ப் அதற்குத் தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டார். ட்ரம்பின் பல தொழில்கள் சீனா, இந்தியா, மெக்ஸிகோ, துருக்கி போன்ற வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இங்கு இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டு, ட்ரம்ப் முதலில் தன்னை மாற்றிக் கொள்ளட்டும் என்றார். அமெரிக்காவின் முதுகெலும்பு நடுத்தரத் தட்டு மக்கள் என்பதைக் குறிப்பிட்டு, அவர்களது மேம்பாட்டுக்குப் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

கட்சி பேதங்கள் கடந்து அமெரிக்கா மேலும் வளம் பெற பெண்களுக்குச் சம ஊதியம், வேலை வாய்ப்பு, குழந்தைகளுக்கு மருத்துவப் பாதுகாப்பு, அறிவியல் தொழிற்துறை, கல்வி, இலவசக் கல்லூரி, சிறு தொழில் முன்னேற்றம் போன்ற அத்திவாவசியத் தேவைகளில் முன்னேற்றம் தேவை என நினைப்பவர்கள் தன்னை ஆதரிக்குமாறுக் கேட்டுக் கொண்டார்.

முதலிரண்டு நாட்களில் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அமெரிக்கக் கொடிகள் இல்லையென ட்ரம்ப் தரப்பினர் பேசியதாலோ என்னவோ கடைசி நாளன்று, கொடிகள் பலூன்கள் என அசத்திவிட்டனர் ஜனநாயகக் கட்சியினர்.

ஜனரஞ்சகமான திரைப்படத்தில் நகைச்சுவை, கிண்டல், கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது போன்ற முதற்பாதியைப் போல இரண்டு கட்சிகளின் வேட்பாளர் தெரிவும், மாநாடும் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இடைவேளைக்குப் பின்னர்த் திரைப்படம் விறுவிறுப்படைவதைப் போல இனி கதாபாத்திரங்கள் (வேட்பாளர்கள்) மோதிக் கொள்வார்கள். இன்னும் மூன்று மாதங்கள் ஓடக் கூடிய இத்திரைப்படத்தின் தாக்கம் மக்களுக்கு, குறைந்த பட்சம் அடுத்த நான்காண்டுகள் நிலைத்திருக்கும் என்பதனைக் கவனத்தில் கொண்டு வாக்களிப்போம்.

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8

ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad