\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

லெக்ஸி

Filed in இலக்கியம், கதை by on July 31, 2016 0 Comments

iladchiyam_620x850
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.  லிவிங் ரூமில் தனது விரிப்பில் படுத்திருந்த லெக்ஸி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. மடிக்கணினியில் எதையோ பார்த்தவாறு, ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பவி
வாசல்ல யாரோ வந்திருக்காங்க போலருக்கு..நான் அப்புறமா கூப்பிடட்டுமா .. ம்ம்? சரி.. நீயே கூப்பிடு என்று சொல்லி ஃபோனைத் துண்டித்துவிட்டு எழுந்தாள். அதற்குள் கதவோரக் கண்ணாடி வழியே ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த லெக்ஸி, பவியிடம் ஓடி வந்து வேகமாக வாலை ஆட்டியவாறு, கதவைச் சீக்கிரம் திற என்பது போலக் குதித்து இரண்டு மூன்று தடவை அவளுக்கும் கதவுக்கும் இடையே ஓடியது.கதவைத் திறந்தாள் பவி. பன்னிரண்டு பதிமூணு வயதில் ஒரு பெண் கையில் பரீட்சை அட்டையில் சில காகிதங்களைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

ஹை, நான் கர்ல்ஸ் ஸ்கவுட் உறுப்பினர் .. க்ரின் எர்த் வெஜிடேஷனுக்காக ஃபண்ட் ரைஸ் பண்றோம்.  கொஞ்சம் ஆர்கானிக் வெஜிடபிள்ஸ் வாங்கறது மூலம் எங்களுக்கு நீங்க உதவி செய்யலாம். வாங்கிக்க முடியுமா? ப்ளீஸ்.. என்றாள்.

அந்தப் பெண் மட்டும் நின்றிருப்பதைப் பார்த்த லெக்ஸி, ஏமாற்றத்துடன் தனது விரிப்புக்கு நடந்து சென்றது. அவளிடமிருந்து காகிதங்களை வாங்கி நிரப்பிக் கொடுத்த பவி, நீ மட்டுமா தனியா வந்திருக்கே? என்றாள்.

ஆமாம் .. நான் மூணு ப்ளாக் தள்ளியிருக்கே, சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ், அந்த நெய்பர்ஹூடிலிருந்து வரேன்.

பார்த்து சீக்கிரம் வீட்டுக்குப் போயிடு.. இந்த மாதிரி இருட்டுற நேரத்திலே தனியா வெளியே போகாதே.. நான் வேணா உங்க வீட்டில உன்னை டிராப் பண்ணட்டுமா?

இல்ல.. நான் இன்னும் நிறைய வீடுகளுக்குப் போகணும் .. நான் வரேன் .. தேங்க்ஸ் பை எனச் சொல்லிச் சென்றாள்.

அந்தப் பெண் நடந்து போகும் போதுதான் கவனித்தாள். அக்ஷிதாவைப் போலவே அவளும் இரண்டு கால்களிலும் வேறு வேறு டிசைனில்சாக்ஸ் அணிந்திருந்தாள். பவிக்குக் கண்களில் நீர் கோர்த்தது. எங்கே இருக்காயடி என் கண்ணே?

*******

பதினான்கு வருஷங்களுக்கு முன்பு, வீட்டில் எழுந்த சலசலப்புகளையும், தோழிகளின் எச்சரிக்கைகளையும் மீறி உடன் பணிபுரிந்த பிராட்லி வில்லியம்ஸை திருமணம் செய்து கொண்டவள் பவித்ரா. பிராட் மிகவும் கலகலப்பானவன்; பவியிடம் அன்னியோன்ய அன்புடன் இருந்தான். இருவரின் நல்ல வருமானத்தில் சொந்தமாகப் பெரிய வீடு வாங்கிக் குடிபுகுந்த போது அதிர்ஷ்ட தேவதை அளவுக்கு மீறி ஆசிர்வதித்ததாக மகிழ்ந்தாள் பவி. அதை நிரூபிப்பது போல் பிறந்தவள் தான் அக்ஷிதா. நீலக் கண்களில் பிராடின் அயர்லாந்துப் பூர்விகமும்,கரிய சுருட்டை முடியில் பவியின் இந்தியப் பூர்விகமும் மிளிர்ந்திட மெழுகால் செய்யப்பட்ட பொம்மை போலிருந்தாள் அக்ஷிதா. பிதுங்கி வழியாமல் அழகாக உப்பியிருந்த கன்னங்கள், செதுக்கியது போன்ற மூக்கு – வெளியே சென்றால் அனைவரது கவனத்தையும் கவர்ந்துவிடும் அவளது அழகு. அவளுக்கு எட்டு மாதங்களான போது படமெடுக்கப் போன ஸ்டுடியோவில் அவளது புகைப்படத்தைத் தங்களது விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள நல்ல தொகை கொடுத்து அணுகிய போது பிரயத்தனப்பட்டு மறுத்தார்கள்.

அக்ஷிதாவின் இரண்டாவது பிறந்த நாளுக்கு ஒரு பெரிய பரிசுப் பெட்டியைக் கொண்டுவந்திருந்தான் பிராட். பிஞ்சு விரல்களால் பெட்டியைச் சுற்றியிருந்த ரிப்பனை அவிழ்த்தாள் அக்ஷி. உள்ளே எதோ அசைவு தெரிவதைப் பார்த்து பயந்தவள் ஒரு நாய்க்குட்டி தலையை நீட்டிபார்த்ததும், கண்கள் விரிய, வாயைப் பிளந்து ‘பப்பி டாகி’ என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கிடக் கூச்சலிட்டாள். சடாரென்று எழுந்து பிராட்டைக் கட்டிக்கொண்டு ‘தேங்க்யூ டாடி..’ என்று கொஞ்சியவள், பவியிடம் ஓடி வந்து, ‘ம்மா .. இந்தப் பப்பியை நாமளே வெச்சுக்கலாம்மா, ப்ளீஸ் .. ப்ளீஸ்..’ என்று கெஞ்சினாள்.

ஜப்பானிய ஷீபா வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி அது. எல்லோருக்கும் காவலாக இருக்கும் என்பதால் லெக்ஸி என்று பெயர் வைத்தான் பிராட். அன்று முதல் அக்ஷியும், லெக்ஸியும் இலக்கணமில்லா இரட்டைக் கிளவியாகிப் போனார்கள். சாப்பிடும் போது, தூங்கும்போது, விளையாடும் போது என எப்போதும் ஒன்றாகவே திரிந்தார்கள் இருவரும். இவளைக் கூப்பிட்டால் அவளும், அவளைக் கூப்பிட்டால் இவளும் வந்து நிற்பார்கள்.வளர்ந்த பின்னரும் கூட இருவரின் நெருக்கம் அதிகமானதே தவிரக் குறையவில்லை. நிறைவான, அமைதியான குடும்பமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. விவாகரத்து என்ற புயல் தாக்கும் வரை.

தொழில் ரீதியாய் நான்கு மாதங்கள் நியூசிலாந்து சென்றவனுக்கு வேறொரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட, பவியிடமிருந்து விவாகரத்தை எதிர்பார்த்தான் பிராட். முதலில் அவனின் எதிர்பாராத முடிவில் அதிர்ந்து தான் போனாள் பவி. ஒட்டத் துடிக்கும் மனங்களை விலக்க நினைப்பதும், விலகிப் போகும் மனங்களை ஒட்ட நினைப்பதும் முடியாத காரியம் என்பதும் மெதுவே புரிந்தது.

பனிரெண்டு வயது நிரம்பியிருந்த அக்ஷிக்கு விவாகரத்து பற்றிப் புரிந்திருந்தாலும் அதன் பின் விளைவுகளை அறியாதிருந்தாள். எதை விட்டுக் கொடுத்தாலும் பெண்ணை விட்டுக் கொடுக்க முடியாது என்று மிக உறுதியாக இருந்தாள் பவி. பிராட்டுக்கும் அக்ஷியை விட்டுவிட மனமில்லை. மைனராயிருந்த அக்ஷியின் ‘கஸ்டடி’ பற்றி முடிவெடுக்கும் வரை பிராட், பவி இருவரும் பிரிந்திருக்கும்படி கோர்ட் நிர்பந்திருந்தது.

அக்ஷிக்கு இந்தப் பிரிவினை பிடிக்கவில்லை என்பது பவிக்குப் புரிந்தது. விளையாட்டுத்தனமாய் அவள் செய்த விஷமங்களைப் பெரிதாக்கி அவளைக் கடிந்து கொண்டது பவிக்குக் கஷ்டமாயிருந்தது. தன்னுடைய கையாலாகாத்தனத்தைப் பிள்ளையிடம் வெளிப்படுத்த கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அதுவே வினையாகிப் போகும் என்று கனவிலும் அவள் நினைத்திருக்கவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை; பகல் மூன்று மணி சுமாருக்கு அக்ஷி வந்து லெக்ஸியை வெளியே கூட்டிச் செல்வதாய்க் கேட்டாள்.

ம்மா .. லெக்ஸிக்கு வாக் போகணுமாம்.. நான் பார்க்குக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்..நீயும் வர்றியா?

இப்போ வேண்டாம்.. வெயில் குறையட்டும்… நான் இந்தத் துணியெல்லாம் மடிக்கணும் .. இல்லைனா அடுத்த வாரம் போடறதுக்குத் துணியே இருக்காது

போம்மா .. எப்பப் பாத்தாலும் ஏதாவது சாக்கு சொல்லிட்டே இருக்கே .. ஐ மிஸ் டாடி..

சுரீரென்றது.

நான் இப்ப என்ன சொல்லிட்டேன்? இந்த வேலையை முடிச்சுட்டு போலாம்னு தானே சொல்றேன்.. அதுக்குள்ள கொஞ்சம் வெயிலும் கொறஞ்சிடும்..

நெவர் மைண்ட்.. நானே போய்க்கிறேன்..

இல்லடா.. நானும் வரேன் ..

பரவாயில்ல .. நீயே எவ்ளோ வேலை செய்றே.. நான் வாக்கிங் போய்ட்டு வந்துட்டு உனக்கு ஹெல்ப் பண்றேன்..

தனியா வேண்டாம் அக்ஷி.. இரு நான் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேன்..

வேண்டாம்னு சொல்றேன்ல ம்மா.. நான் போயிட்டு வந்துடறேன்…

பாத்து போ.. லெக்ஸியை டைட்டா பிடிச்சுக்கோ .. ஓடிப் போயிடப் போறா.. ரொம்பத் தூரம் போயிடாதே .. என்னோட செல்ஃபோன் தரட்டுமா?

பவி பேசி முடிக்குமுன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தார்கள் அக்ஷியும், லெக்ஸியும்.

சைட் வாக்லே போங்கடி.. பவியின் குரல் வெறிச்சோடியிருந்த தெருவில் எதிரொலித்தது.

இருபது இருபத்தியைந்து நிமிடங்களுக்குப் பிறகும் அவர்கள் திரும்ப வராததால் பவி பதட்டமானாள். ‘வேண்டாம்னு சொன்னா கேக்கறதில்ல .. வரட்டும் இன்னைக்கு’, ‘நம்மளும் கூடப் போயிருந்தா இந்த அவஸ்தை இருந்திருக்காது ..’,  ‘நாமளே இப்போ கிளம்பிப் போய்ப் பாத்துக் கூட்டிட்டு வந்துடலாமா?’, ‘ச்சே தப்பு செய்துட்டோமோ’ பலவித எண்ணங்கள் அலைக்கழித்தன.

அரை மணி நேரத்துக்கும் அதிகமான போது அவளால் பொறுக்க முடியவில்லை .. வேகவேகமாக உடை மாற்றிக் கொண்டு இறங்கி வந்தாள்.. செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டுச் சாவியை எடுத்த போது, லெக்ஸி கழுத்தில் மாட்டியிருக்கும் பெயர் வில்லையின் சத்தம் கேட்டது.. ‘அப்பா.. வந்துடுச்சுங்க போல..’ ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.. நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு லெக்ஸி மட்டும் நின்றிருந்தது.

அக்ஷி எங்க? நீ மட்டும் ஓடி வந்துட்டியா? அதன் கழுத்துப் பட்டையைப் பிடித்து உள்ளே இழுத்தாள். உள்ளே வந்த லெக்ஸி பாய்ந்து சென்று ஒவ்வொரு அறையாக நுழைந்து வந்தது.. இங்குமங்கும் சுற்றி சுற்றி ஓடியது.. ஊளையிடுவது போல் கத்தியது..

என்னாச்சுடி? அக்ஷி அடிச்சாளா.. கேட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே நின்று தெருவில் பார்த்தாள். அக்ஷியைக் காணோம்..காணவே காணோம். பயம் தொற்றிக் கொண்டது.

***

வெகுநேரம் தேடியும் அக்ஷி கிடைக்கவில்லை. பிராடுக்குப் பலமுறை ஃபோன் செய்தும் அவனுடன் பேச முடியவில்லை. போலீஸைக் கூப்பிட்டதும் பத்து நிமிடங்களுக்குள் படையாகத் திரண்டு வந்துவிட்டிருந்தனர். அவர்களில் ஒருவன் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.

முழுப் பெயர் என்ன?, எத்தனை வயசு?, சமீபத்தில எடுத்த ஃபோட்டோ இருக்கா?, அப்பா பேர் என்ன?, என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தா? எனப் பல கேள்விகளுக்கு அழுகைக்கிடையே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மோப்ப நாய்கள் இரண்டு வீடு முழுதும் சுற்றி வந்தன… அக்ஷியின் உடைகளைக் கேட்டார்கள். லெக்ஸி நிலை கொள்ளாமல் சுற்றி வந்தது..

பிராட் எங்கே? என்று கேட்டதற்கு விவாகரத்து பற்றிய விவரங்களைக் கூற வேண்டி வந்தது. அதைக் கேட்டதும் பிராடைப் பற்றி துருவித் துருவிக் கேட்டனர். அவனது வயது, ஃபோட்டோ, கார் நிறம், பதிவு எண், வேலை செய்யும் இடம் இன்னும் என்னென்னவோ கேட்டார்கள்.

அவர்கள் கேட்டதில் பாதி மனதில் பதியவேயில்லை. அக்ஷிக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலை தான் மனதில்ஓடிக்கொண்டிருந்தது. இயந்திரத்தனமாக ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

பிராட் மீது ஏதாவது சந்தேகப்படறீங்களா? அவர்களில் ஒருவன் கேட்டபோது சொரேரென்றது. இரண்டு நாளைக்கு முன்னால் தான் வீட்டுக்கு வந்திருந்து, அக்ஷியோடு விளையாடிக் கொண்டிருந்து விட்டு இருவரையும் டின்னருக்கு அழைத்துச் சென்றானே .. அதனால் தான் ஃபோனை எடுக்கவில்லையோ?. தலை சுற்றியது .. அவனாக இருக்காது என்று நினைத்தாலும் அவர்களிடம் என்ன சொல்வதென்று புரியவில்லை. எனக்குத் தெரியவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தாள்.

சற்று நேரத்தில் பிராட் ஃபோன் செய்தான் .. விஷயமறிந்ததும் ஓடி வந்தான் .. “நம்ப பிள்ளையைத் தொலைச்சிட்டேன் .. ” எனப் பெருங்குரலெடுத்து அழுதாள் பவி. அவனைப் பார்த்ததும் சுற்றிச் சுற்றி வந்து ஊளையிட்டது லெக்ஸி..

அக்கம் பக்க்கத்தில் விஷயமறிந்து அரை மணி நேரத்தில் சிறு குழுக்களாக உருவாகி தேடுதலில் இறங்கினர். மோப்ப நாய்களில் ஒன்று அக்ஷியின் வாசத்தைப் பின்பற்றிச் சென்று பூங்காவின் அருகே குறிப்பிட்ட இடத்தில் நின்றது … லெக்ஸியின் வாசத்தைத் தொடர்ந்த மற்றொரு நாய் அந்த இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று திரும்பியது. இந்தத் துப்புகளை வைத்து அக்ஷி கடத்தப்பட்டிருக்கலாம் எனவும். லெக்ஸி அவர்களைத் துரத்திச் சிறிது தூரம் ஓடி இருக்கலாம் எனும் தற்காலிக முடிவுக்கு வந்தனர் போலீசார். கடத்தலா? எங்கே? யார்? பல எண்ணங்கள் மண்டையைக் குடைய, மயங்கினாள் பவி.

*****

இரண்டு மூன்று நாட்களாகி விட்டிருந்தன அக்ஷி தொலைந்து போய் .. அல்லது கடத்தப்பட்டு .. அந்த இடத்திலிருந்த கார் டையர் அடையாளங்களை வைத்து, யூகத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்த குற்றவாளிகள் பட்டியலில் யாரிடமாவது அவ்வகைக் கார் இருக்கக் கூடுமோ என்று ஆராய்ந்தனர் போலீசார். அக்கம் பக்கத்தினர் தேடியதில் எந்தப் பலனும் இல்லை… பிராடும் நண்பர்களும் ஒரு புறம் தேடி அலைந்தார்கள் … பவி செயலிழந்து, பித்துப் பிடித்தது போலிருந்தாள் .. வீடு வெறிச்சோடி, சூன்யமாகி விட்டிருந்தது மூன்று நாட்களுக்கு முன்னர் செய்த உணவுகள் டைனிங் டேபிளில் அப்படியே இருந்தன.. லெக்ஸி ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது.. அக்ஷி இருந்திருந்தால் ஒரு போதும் லெக்ஸியைத் தனியே பார்க்க முடியாது .. எப்போதும் அவள் வாலைப் பிடித்தது போல் சுற்றிக்கொண்டிருக்கும் .. இப்படிப் படுத்துப் பார்த்ததே கிடையாது ..

பவிக்கு அப்போது தான் உறைத்தது லெக்ஸிக்கு சாப்பாடு வைத்து இரண்டு நாட்களாகி விட்டன .. நான் தான் எனது அக்கறையின்மையால் மகளைத் தொலைத்து விட்டேன் ..பாவம் அந்த ஜீவன் என்ன செய்தது .. வருத்தம் மேலிட லெக்ஸி வழக்கமாகச் சாப்பிடும் உணவை அதனது பாத்திரத்தில் கொட்டி வைத்தாள் .. எப்போதும் அந்தப் பாத்திரச் சத்தமோ அல்லது உணவுப் பாக்கெட்டின் சத்தமோ கேட்டால் எங்கிருந்தாலும் ஓடிவரும் லெக்ஸி லேசாகத் தலையை மட்டும் திருப்பிப் பார்த்துவிட்டு படுத்துக் கொண்டது .

அதன் அருகே சென்று தடவிக் கொடுத்த பவி, “நீ ஒண்ணும் பண்ணலைடா .. சாப்பிடு.. அக்ஷி சீக்கிரம் வந்துடுவா.. என்றாள். குரல் தழுதழுத்தது. லெக்ஸி எழுந்திருக்கவில்லை. அதன் கண்களில் கண்ணீர் வந்து காய்ந்து போயிருப்பது தெரிந்தது. பவியை நேராகப் பார்க்கத் திராணியின்றி முகத்தைத் திருப்பிக் கொண்டது. இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் இருந்ததன் சோர்வு அதன் முகத்திலும் உடலிலும் தெரிந்தது. வழக்கமாக அவளிருந்தால் இங்குமங்கும் மூச்சிறைக்க ஓடிச் சின்னச் சின்ன டிரீட்ஸ்களுக்காக அலையும். இரண்டு நாட்களாய் ஜன்னல் வழியே வெளியே பார்ப்பதும் திரும்ப வந்து படுப்பதுமாக இருந்தது. பவி அதன் சாப்பாட்டு பௌலை அருகே கொண்டு வந்து பார்த்தாள். அப்பவும் சாப்பிடவில்லை லெக்ஸி.

மூன்று வாரங்களுக்குப் பின்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துப்புக் கிடைத்ததே தவிர அக்ஷியைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவள் தொலைந்து போன நாளிலிருந்து பணத்துக்காகக் கடத்திச் சென்றிருப்பார்களோ என நினைத்து ஃபோனும் கையுமாக அலைந்தது தான் மிச்சம். அவ்வப்போது நிலைமையைத் தெரிந்து கொள்ளக் கூப்பிட்டவர்கள், போலிஸார் சிலரைத் தவிர வேறெந்தத் தகவலும் இல்லை. குழுக்களமைத்துத் தேடிய முயற்சியும் பலனின்றிக் குறைந்து விட்டிருந்தது. பிராட் ஏறக்குறைய நம்பிக்கையிழந்து விட்டிருந்தான்.

லெக்ஸி அன்றிலிருந்தே சாப்பிடாமல் அடம் பிடித்து வந்தது. எழுந்து நடக்கக் கூடத் தெம்பில்லாமல் போனது அதற்கு. பிராட் வெட்ரனேரியனிடமிருந்து இரண்டு வாரங்களுக்கு முன் வாங்கி வந்திருந்த மாத்திரையை மட்டும் வாயைத் திறந்து திணிக்காத குறையாகக் கொடுத்து வந்தார்கள். ஏதும் முன்னேற்றமில்லாததால், வீட்டுக்கு வந்து பார்த்த வெட்ரனேரியன் லெக்ஸியின் வயது காரணமாக அதிக நாட்கள் மாத்திரையில் ஓட்ட முடியாதென்றும் இரண்டு நாட்களுக்குள் லெக்ஸியை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டுமென்றும் சொன்னார். “ஒரு வேளை லெக்ஸி சாப்பிடாமல் போனால் .. லெட் அஸ் புட் ஹர் டு ஸ்லீப்” அவர் சொன்னதைக் கேட்டதும் ஓவென்று அழத் தோன்றியது. அப்படியெல்லாம் நடக்கக் கூடாதென்று வேண்டிக் கொண்டாள்.

எத்தனை விஷயங்களுக்குத் தான் வேண்டிக் கொள்வது. எவ்வளவோ முயற்சித்தும் மூன்றாவது நாளும் லெக்ஸி சாப்பிடவேயில்லை. வெட்ரனேரியன் பசியெடுக்கக் கொடுத்த மாத்திரை எதுவும் லெக்ஸியிடம் பலிக்கவில்லை. வெட்ரனேரியன் சொன்னது போலவே லெக்ஸியின் உடலில் பல உபாதைகள் தெரியத் துவங்கின. ஒரு வேளை அவர் சொன்ன – நிரந்தரத் தூக்கம் – தான் முடிவோ?

“வேற வழியில்லை பவி.. கஷ்டம் தான் நாம ஏத்துக்கிட்டுத் தான் ஆகணும் .. அமைதியா குட் பை சொல்றது தான் நல்லது ..”

“அக்ஷிக்கு இப்படி ஒரு நிலமைனாலும் .. இதைத் தான் சொல்லி இருப்பியா பிராட்? இந்த லெக்ஸி தான் நம்ம குழந்தைக்கு ஒண்ணும் ஆகலைங்கிற நம்பிக்கையை எனக்குக் கொடுத்திட்டிருக்கு .. நான் அவளைக் கொல்ல சம்மதிக்க மாட்டேன் ..” ஹிஸ்டிரியா வந்தது போல் கத்தினாள் .. லெக்ஸியைக் கட்டி கொண்டாள்.

“தயவு செஞ்சு புரிஞ்சுக்குங்க .. உங்க வருத்தம் புரியுது … நமக்கு வேற ஆல்டர்னேட் இல்ல .. சாரி .. ஆல்ரெடி டயரியா போய்க்கிட்டிருக்கு .. இத்தனை நாளாச் சாப்பிடாததால அப்டாமினல் டிஷ்யூ கிழிஞ்சு வெளியேற ஆரம்பிச்சிடுச்சு .. இந்தப் பாக்டீரியல் டிஸ்சார்ஜ் மனிதர்களுக்கு ரொம்ப ஆபத்தானது.. ‘பெட் கேர்’ செண்டர்லயும் சேத்துக்க மாட்டாங்க .. நீங்க வீட்டிலேயும் வெச்சுக்க முடியாது .. இந்த நிலையில நாயை வெச்சிருக்கிற விஷயம் தெரிஞ்சுதுன்னா, அனிமல் க்ருயல்டி அது இதுன்னு தொந்தரவு தான் .. பிராட் நீங்களாவது இதைப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன் “

“ஒரே ஒரு தடவை சாப்பாடு வெச்சுப் பாக்கிறேன் டாக்டர் .. ப்ளீஸ் … அரை மணி நேரம் டைம் குடுங்க .. அதுக்குள்ளே அவ கண்டிப்பா சாப்பிடுவா ..” கெஞ்சினாள் பவி. வேக வேகமாக ஓடி பௌலை கழுவி விட்டு, அதன் உணவைக் கொட்டி லெக்ஸியிடம் கொண்டு சென்றாள். மெதுவாக நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்த்த லெக்ஸி சாப்பிடாமல் முகத்தைத் திருப்பிச் சுருண்டு படுத்துக் கொண்டது.

“சாப்பிடும்மா.. ப்ளீஸ் .. தயிர் போடட்டுமா .. ” பிரிட்ஜிலிருந்து தயிரை எடுத்துவந்து போட்டு கலக்கினாள் .. எதுக்கும் மசியவில்லை லெக்ஸி ..

எல்லா முயற்சிகளும் பொய்த்து விட, சிரிஞ்சில் மருந்தை நிரப்பத் தொடங்கினார் வெட்ரனேரியன். பிராட் பவியைக் கெட்டியாக அணைத்துப் பிடித்துக் கொண்டான் .. அந்தக் காட்சியைப் பார்க்க மனதின்றிப் பிராடின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத் துவங்கினாள்.

“ஆல் டன்.. இன்னும் ஐஞ்சு நிமிஷத்தில் உயிர் அடங்கிடும் .. க்ளினிக்குச் சொல்லியிருக்கேன் .. எங்க அடக்கம் பண்ணனும்னு காமிச்சீங்கன்னா அவங்க பாத்துக்குவாங்க .. அது வரைக்கும் அவளைத் தொடாதீங்க.. ஐயம்வெரி சாரி .. “

முக்கால் மணி நேரத்தில் கிளினிக்கில் இருந்து ஆட்களும் வந்து விட்டார்கள்.. வெள்ளை நிற விரிப்பை விரித்து ஏதோ தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள் .. பிராட் மாடியில் அங்குமிங்கும் நடந்தபடி ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான் .. பவி மாடிப்படியில் அமர்ந்து லெக்ஸியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் …நீயும் போறியா என்னை விட்டுட்டு .. கண்ணீர் வழிந்தது .. லெக்ஸிக்கு இன்னும் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது அதன்மார்புப் பகுதி ஏறி இறங்குவதில் தெரிந்தது.

இதோ அதோ என்று கிளினிக் பணியாளர்கள் காத்திருந்தார்கள்.. ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் லெக்ஸியின் மூச்சு நின்றபாடில்லை .. கண்கள் மட்டும் லேசாகச் செருகியிருந்தது .. மீண்டும் இன்னொரு ஊசி போடவேண்டியிருக்குமோ என்று டாக்டருக்கு ஃபோன் செய்து பேசினர்…

“.. ரியலி? .. தட்ஸ் க்ரேட் நியூஸ் .. பவி அக்ஷியைக் கண்டுபிடிச்சிட்டாங்களாம் .. உயிரோட தான் இருக்கா .. ” மாடிப் படி வழியே பிராட் கத்தியதைக் கேட்டு நாலு கால் பாய்ச்சலில் படியேறி ஓடினாள்.

பிரயத்தனப்பட்டுக் கண்ணைத் திறந்து பார்த்த லெக்ஸியின் வால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் லேசாக ஆடியது .. மெதுவே எழுந்து சென்று அதன் உணவு பௌலில் இருந்து ஒரு வாய் சாப்பிட்டது .. பக்கத்துப் பௌலில் இருந்து சிறிது நீரை அருந்திவிட்டு மெதுவே நடந்து சென்று அதன் படுக்கையில் படுத்துக் கொள்ள அதன் கண்கள் தானாக மூடின.

– மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad