\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

செம்புலப் பெயல் நீர்…….

Filed in இலக்கியம், கதை by on July 31, 2016 0 Comments

koochal_620x365“கமான்.. காந்தி கேரளாலதான் பொறந்தாரு”… மூன்றாவது முறையாக அடித்துச் சொல்லும் அருணாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் என்ன சொல்வதென்று புரியாமல் திகைப்புடன் நிற்கிறான்.

“இல்லம்மா, நான் தான் சொன்னேனே… வந்து…” வாக்கியத்தை முடிக்கு முன்னர் கணேஷை இடை மறித்த அருணா, “நான் மம்மிக்கிட்ட கேட்டுக் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்” என்று முறைப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

“ம்ம்…. இந்தப் பொண்ணையா நாம?….” என்று நினைக்கத் தொடங்கி, ”நோ நோ.. அப்டி நெனைக்கக் கூடாது” தன்னைத் தானே பாதியில் தடுத்து நிறுத்திக் கொண்டான் கணேஷ்.

சற்று மாநிறமென்றாலும் குறுகுறுப் பார்வை, கூரிய மூக்கு, துளைத்தெடுக்கும், ஒளி வீசும் கண்கள், சற்று நீண்ட, வெண்மையான பற்கள் அதில் ஒரு முன்பல் மட்டும் சற்றே எழுந்து நிற்கும். அந்தப் பல்லிற்கும் அடுத்த பல்லிற்கும் இருக்கும் மிகச்சிறிய இடைவெளி கணேஷை எப்பொழுதும் கிறங்கடிக்கும். சற்றுப் பருமனான உருவம், ஆனால் உயரமும் அதிகமாக இருந்ததால் அந்தப் பருமனும் கவர்ச்சியாகவே காட்சியளித்தது.

அந்தக் கிராமத்தில் சற்றும் யோசனை செய்யாது ‘மாடர்ன் டிரஸ்’ அணிந்து கொண்டு வலம் வருபவள். ஹை ஸ்கூல் படிக்கும்பொழுது ஆடவருக்கு நிகராக சைக்கிளில் பள்ளி சென்று, பின்னர் பணம் இருந்த காரணத்தால் கைனடிக் ஹோண்டாவிற்கு ப்ரமோஷன் ஆகியிருந்தாள்.

கணேஷ் புத்தகப் புழு. நன்றாகப் படிப்பான், பெரியவர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வான். பள்ளிக்கூடம் விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளிக்கூடம் எனக் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவன். பல நண்பர்கள், ஆனால் அனைவரும் அவனது இல்லத்தில் வந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பர். வீட்டுக்கு முன்னிருக்கும் திடலில் மட்டும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பர். அதைத்தவிர வெளியில், கடைத்தெருவில், குட்டிச் சுவற்றில் என ஊர் சுற்றும் பழக்கம் எதுவும் கிடையாது. இவையெல்லாம் அருணாவுடன் நட்பு வளரும் வரையில்.

“நீங்க சொன்னதுதான் கரெக்ட், காந்தி குஜராத்தில தான் பொறந்தாராம்.”…. தனது ஈகோவைவிட்டு அவனிடம் ஒப்புக்கொள்ள மிகவும் கடினமாக இருந்ததுபோலக் காணப்பட்டது. “நான் இந்த மாதிரியெல்லாம் யார்கிட்டயும் பேசினதில்ல, தெரியுமா?” என்ற அருணாவை “எந்த மாதிரி? தப்புன்னா ஒத்துக்கிட்டதில்லையா?” என்று கேட்கவேண்டுமென ஆசை, கணேஷிற்கு. ஆனால் “அப்டியா” என்று மட்டும் சொன்னான்.

காதல்… ஒரு அற்புதச்  சக்தி. அனேகக் கவிஞர்கள் சுவைத்துச் சிலாகித்த உணர்வு. அள்ள அள்ளக் குறையாத அட்சயப்  பாத்திரம் போல் அது வழங்கும் சுகம் அளவிடற்கரியது. எதிரெதிரே நிற்கும்பொழுது சர்ச்சை செய்து, சண்டையிட்டாலும், பிரிந்து சென்ற பொழுது நெஞ்சு முழுதும் வலிக்கும் வலி சொல்லும் காதலின் ஆழம் என்னவென்று. பாசத்தின் மிதமிஞ்சிய நிலையே காதல். தன் சுகம் துறந்து பிறர் மனம் குளிர்விக்கப் படும்பாடு – இளமைக் காலத்தில். திருமணத்திற்கு முன்னர் இன்னொரு பாலரை உடல் பொருட்டன்றி, உண்மையாய்க் காதலித்தவருக்கு மட்டுமே விளங்கும் அந்த உன்னத உணர்வு.

ஒரு சில மாதங்களில் அவர்களின் நட்பு மிகவும் நெருக்க நிலையை அடைந்தது. உடலால் மட்டுமே இருவராய் இருப்பதாகவும், உள்ளத்தாலும், உணர்வுகளாலும் ஒருவராக மாறிவிட்டதாகவே உணர்ந்தனர். டீ.வியின் மூலம் வீடுதேடி வந்து, மரத்திற்கு மரம் சுற்றித்திரிந்து, பொய்யாய்ச் சிரித்து, நடிப்பாய்க் காதலிக்கும் சினிமாப் படம் அவ்வளவாக சராசரி மனிதர்களைத் தொட்டிராத காலமது. அழுது அடம் செய்து தியேட்டருக்குச் சென்று திரைப்படம் பார்க்க அனுமதி கிடைத்துப் போனாலும் அங்கு திரையிடப்படும் படங்களான “தேவரின் தெய்வம்”, “சரஸ்வதி சபதம்”, “திருவிளையாடல்” போன்ற தெய்வீகப் படங்களை மட்டும்தான் பார்க்க இயலும்.

அதனால், வெளி விடயங்கள் மனதை மாற்றி விட்டன என்றும் சொல்ல இயலாது. இயற்கை உணர்வாய் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இன்பமாய்க் கொள்ளும் உறவது காதல் புற உந்துததிலின்றி அவர்களிடம் தோன்றியிருந்தது. ஜாதி மத பேதமில்லை, பணம். பொருளின் எதிர்பார்ப்பில்லை, உருவங்களின் அழகும் உள்ளத்திலே பெரிதாய்த் தோன்றவில்லை – உண்மையான பாச உணர்வு. ஒருமுறை “உன்னால முடியலன்னா, நானும் நான்–வெஜிடேரியானா மாறிக்கிறேன், மாமிசம் சாப்பிடப் பழகிக்கிறேன்” என்று சொன்ன நினைவு இன்றும் கணேஷின் மனதில் நிழலாடுகிறது. அவர்களின் காதலின் ஆழம், பல மனக் கோட்டைகளைக் கட்டியிருந்தது. பிறக்கும் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் வரையில் போயிருந்தது. இருவருக்கும் பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆசை, பிறந்த பெண் குழந்தைக்கு “ஸ்வாதி” என்று பெயர் வைப்பதாக முடிவு செய்திருந்தனர்.

“உங்கம்மா என்ன ஒத்துக்குவாங்களா?.. எனக்கு பூஜையெல்லாம் செய்ய வராதே… சமைக்கக்கூடத் தெரியாது, காலையில எழுந்து வாசத்தெளிச்சுக் கோலம்போட மாட்டேன் – ஏன்னா, எனக்கு ஷட்டில் காக் பிராக்டிஸ் அந்த டயத்துலதான்”…. மொத்தமாய் கணேஷின் அம்மாவால் ஏற்றுக் கொள்ளவே இயலாத பழக்க வழக்கங்கள்.

“அதெல்லாம் விடு, சமாளிச்சரலாம்”.. எந்த ஒரு திட்டமுமின்றி வாய்ச்சவடால் பேசினான் கணேஷ். “நிஜம்மாவே உங்க வீட்டுல ஒத்துக்கலன்னா என்னடா பண்ணுவ?” கேட்ட நண்பர்களிடம் ”வீட்டை விட்டு ஓடிப் போயிர வேண்டியதுதான்” என்ற பதிலையே கணேஷால் தர முடிந்தது. “அதெல்லாம் தப்புடா” மிகவும் நெருக்கமான நண்பன் ஜனா உடனடியாக உதிர்த்த அறிவுரை. “தப்பா? ஏன்?, அவுங்க மட்டும்….. எதுக்காக எதிர்க்கணும்.. சரின்னு சொன்னா என்ன?”

”அது அப்புடியில்லடா.. அவுங்க பெரியவங்க, உனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்ருக்காங்க.. அவுங்களுக்கு பதில் மரியாதை செய்ய வேண்டிய நேரத்துல நாம் பாட்டுல போய்க்கிட்டே இருக்கேன்னு சொல்லுரது பாவம், தப்பு, நீ செய்யக்கூடாது”.. அக்கரையான, அதே சமயத்தில் பொறுப்பு மிகுதியாயுள்ள நண்பனின் அறிவுரை. ஆனால் அன்று கணேஷ் இருந்த மனநிலையில் அந்த அறிவுரை கசந்தது… அந்த அறிவுரைக்குப் பின்னர் ஜனாவிடம் உள்ள நெருக்கத்தைக் குறைத்துக் கொள்ளத் துவங்கினான் கணேஷ். இளமையின் வேகம், வாழ்வில் நல்லவை எவை கெட்டவை எவை என ஆராய்ச்சி செய்யும் சக்தியை முழுவதுமாய் அழித்திருந்தது. பொதுவாக, பொறுப்பான இளைஞன் என்றாலும், அருணாவின் மீதிருந்த ஈர்ப்பு இவை அத்தனையையும் மறக்கடித்து விட்டது….

அதற்காக அருணாவைக் குறை சொல்வது சரியாகாது. அவளும் பொறுப்பான பெண்ணே.. நன்றாகப் படிப்பாள். வீட்டிற்கு ஒரே வாரிசு. பணக்கார அப்பா, அம்மா… வாழ்க்கையின் மத்திய தர வகுப்பிற்கு உண்டான எந்தக் கஷ்டங்களையும் உணர்ந்தறியாதவள். வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் தான் எதிர்பார்த்திருந்த இளையராஜா பாட்டு ஒளிபரப்பாகாததே அவளின் அந்த வாரத்திய  மிகப் பெரிய துயரம். கணேஷின் வீட்டில் டி.வி., டேப் ரெக்கார்டர் என்று எதுவுமில்லை. இருந்த ஒரு பழைய ரேடியோ, ஆன் செய்யும் நாப்பில் ஒரு பகுதி சிறிதாய் உடைந்திருக்கும். ஆன் செய்து வால்யூம் அதிகரிப்பதற்காக அந்த நாப்பைச் சுற்றும் பொழுது, தெரியாமல் அந்த இடைவெளியில் விரல் பட்டுவிட்டால் ஷாக் அடிக்கும். ஒரு முறை அடித்த ஷாக்கின் அதிர்ச்சியில் ரேடியோவை இழுத்துக் கொண்டு, கிட்டத்தட்ட டேபிளின் நுனியில் விழுமளவு கொண்டு வந்து விட்டான். யூனிஃபார்ம் பேண்டில் உட்காரும் இடத்தில், இரண்டு பக்கங்களிலும், ஒட்டுப் போட்டுத் தைத்திருக்கும் கால் சட்டை அணிவதே அவனின் நிரந்தரம். ஆனால் காதல் உணர்வு இவற்றையெல்லாம் கருதுவதில்லையே…..

அருணாவின் பிறந்த நாள் வருகிறது.. என்ன பரிசளிக்கலாம் என்று பல நாட்களாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறான் கணேஷ். வழக்கம் போல் கையில் காசில்லை. இந்தக் காரணத்தைச் சொல்லி, வீட்டில் காசு கேட்கவும் முடியாது. காசில்லாத காரணத்தால் பரிசு வாங்கிக் கொடுக்காமல் இருக்கவும் முடியாது…. வாழ்க்கையில் மிகப் பெரிய போராட்டம் அவனுக்குப் . பல சமயங்களில், சாப்பாடு இல்லாத காரணத்தால் மதியச் சாப்பாடு எடுத்துச் செல்லாமல் கல்லூரி சென்று, “என் டிஃபன் பாக்ஸிலிருந்து ஷேர் பண்ணிக்கோடா” என்று சொன்ன உயிர் நண்பர்களிடத்திலும், “எனக்குப் பசிக்கலடா” எனப் பொய் சொல்லி விலகிக் கொள்ளும் கணேஷ், தன் காதலியின் பிறந்த நாள் பரிசுக்காகக் கடன் கேட்பது தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தான். எதற்கும் கை கொடுக்கும் ஜனா, “டேய், நீ கேட்டு இல்லைன்னு சொல்லுவேனாடா…. ஆனா, திரும்பவும் சொல்றேன், இது நல்லதுக்கில்லடா….” எனச் சொல்லி பாக்கெட்டிலிருந்து காசு எடுத்துக் கொடுக்க முற்பட, அவன் சொல்லை விரும்பாத கணேஷ், “உன் காசு ஒண்ணும் எனக்குத் தேவையில்லடா, காசு குடுக்குறதுனால அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியமில்லை….” என முகத்திலடித்தமாதிரி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான். அவனை விட்டு வெகு தூரம் விலகிச் சொல்லத் தொடங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

கணேஷ் அவன் வீட்டு ஹாலில் இருந்த கம்பி போட்ட ஜன்னலை ஒட்டியிருந்த திட்டில் அமர்ந்திருந்தான். அருணா, அவளின் பிறந்த தினத்திற்கு முன் தினம் மாலை, கணேஷின் அம்மாவைப் பார்க்க வருவதுபோல் வந்து, அவனிடம் நின்று பேசிக் கொண்டிருக்கிறாள். ”ஹாப்பி பர்த் டே அருணா”…. வாய் முழுதும் பற்களாக, ஒரு கவரைப் பரிசாகக் கொடுத்தான் கணேஷ். “ஏய், நாளைக்குத்தானே பர்த் டே…” என்ற அருணாவிடம், “இல்ல… எல்லார் முன்னாலயும் குடுத்தா ஸ்பெஷலா இருக்காதேன்னு……” என்று இழுத்த கணேஷைக் கண்களாலேயே ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து, முத்தத்தால் நிறைத்தாள் அருணா. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோட, “ஏய், என்னப்பா.. ஏன் அழறே இப்போ…. “ என்ற கணேஷிடம், “நாம இப்பவே எங்கயாவது போய்க் கல்யாணம் பண்ணிக்கலாம்பா” என்றாள் அருணா. சற்றும் எதிர்பார்த்திராத இந்தப் பதிலில் உறைந்து போயிருந்த கணேஷின் கன்னத்தில், மின்னல் வேகத்தில், தன் குளிர்ந்த அதரங்களைப் பதித்தாள் அருணா. கணேஷின் உடலில் ஓடிக் கொண்டிருந்த ஒட்டு மொத்த எட்டு லிட்டர் ரத்தம் முழுவதும் உறைந்து நாளங்களை வெடிக்கச் செய்யுமளவு மாறியது………..

தன்னிலை உணர்ந்து திரும்புவதற்குள், அர்த்தமுடன் புன்னகைத்துக் கொண்டே ஓடி விட்டாள் அருணா. திரும்பி அவன் முகம் பார்த்து, “உனக்கு, என் பர்த் டே பரிசு….” என்று சொல்லிக் கொண்டே ஓடினாள்….

மறுநாள், அதாவது அருணாவின் பிறந்த நாள் தினம். நாள் முழுதும் தேடித்தேடியும் அவளைப் பார்க்க இயலவில்லை. காலையிலிருந்து அவளைப் பார்க்கத் துடியாய்த் துடித்த கணேஷ், சாயந்தரம்   வரை பார்த்து விட்டு, இரவு எட்டு மணியாகியும் காணவில்லையென்றவுடன், வீட்டுக்குள்ளே சென்று கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தான். உள்ளே நுழைவதற்கு முன்னர் காம்பவுண்ட் கேட்டுக்குள் நிற்கும் அவள் அப்பாவின் கார் காணவில்லை, ஆனால் அவளின் கைனடிக் ஹோண்டா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உள்ளே அவள் அம்மா யாரிடமோ ஃபோன் பேசிக் கொண்டிருந்தார். அருகே செல்லச் செல்ல அவர் பேசுவது கொஞ்சம் கொஞ்சமாய்க் கேட்க ஆரம்பித்தது. அருணாவின் பள்ளியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று விளங்குகிறது. கணேஷ் உள்ளே வருவதைப் பார்த்தவுடன், ஃபோனை மூடிக் கொண்டு, “கணேஷ், நல்ல நேரத்துல வந்தே…. அருணா ஸ்கூல்ல இருக்காளாம்பா… வீட்டுக்குப் போக மாட்டேன்னு அடம் புடிக்கிறாளாம், என்ன ஆச்சுன்னு தெரியல… நீ வண்டி எடுத்துட்டு ஒரு எட்டுப் போய்க் கூட்டிட்டு வரியாப்பா, ப்ளீஸ்? அவர் கார்ல எங்கெயெல்லாமோ தேடப் போயிருக்கிறாரு, அவரைப் புடிக்க முடியல என்னால…..” என்ன நடக்கிறது என்று முழுவதுமாய் விளங்காவிட்டாலும், ஏதோ நடந்திருக்கிறது என்று விளங்குகிறது. நம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்குமோ என்று சற்றே பயம், ஆனால் அவள் தாயாருக்கு எதுவும் தெரிந்திருப்பதாகத் தோன்றவில்லை. என்னவானாலும் சரி, அவள் பள்ளி சென்று பார்த்து விடுவது என்று முடிவெடுத்து, அவளின் கைனடிக் ஹோண்டாவில் புறப்பட்டான் கணேஷ்.

மிகவும் ஸ்டிரிக்டான பெண்கள் மேல்நிலைப் பள்ளி…. காவலாளி கணேஷின் பைக்கை ரோட்டிலேயே நிறுத்தி “என்ன வேணும்?” என்கிறார். “உள்ள, ப்ளஸ் டூ ஸ்டூடண்ட் அருணா இருக்காங்க, பாக்கணும்”… “நீ அந்தப் புள்ளக்கு என்ன வேணும்?” கேட்ட காவலாளிக்கு என்ன பதில் சொல்வது என்று விளங்கவில்லை. நண்பன் என்றால் உள்ளே விடுவதற்குச் சற்றும் வாய்ப்பில்லை, அப்பா என்று சொல்லுமளவுக்குத் தோற்றமில்லை. அண்ணன் என்று சொல்லிக் கொள்ள வாய் கூசுகிறது… ஒரே மனப் போராட்டம். “இப்பதாங்க ஃபோன் செஞ்சோம், உள்ளுக்கதான் இருக்காக, என்னய உள்ள அனுப்ப வேணாம், அவுகள கூப்பிடுங்க” என்றான் கணேஷ்… ”நீ யாரு, அதச் சொல்லு, மொதல்ல” காவலாளி விடுவதாக இல்லை.. இவர்களின் வாக்குவாதம் தொடர, தூரத்தில் கணேஷின் கண்களுக்கு அந்த இரவுப் பொழுதிலும், அந்தப் பதுமையின் சில்ஹவுட் தெளிவாகத் தெரியத் தொடங்குகிறது. காவலாளி தொடர்ந்து கூவிக் கொண்டிருக்க, தூரத்துப் பதுமை தம்மை நோக்கி நடந்து வருவதையே பார்த்துக் கொண்டிருந்த கணேஷுக்குக் காவலாளி இருப்பதே தெரியவில்லை.

அருகே வந்த அருணா, லெட்டர் ஒன்றைக் காவலாளியிடம் கொடுத்து விட்டு, கைனடிக் ஹோண்டாவின் பின் அமர்ந்து, “போலாம்” என்றாள். கணேஷுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் உடனே வண்டியை பட்டன் ஸ்டார்ட் செய்து புறப்பட்டு விட்டான். பள்ளி இருந்த தெருவை விட்டு வெளியே வந்து, மெயின் ரோடைத் தாண்டி, பைபாஸ் ரோட் எடுத்து விரைவாகச் செல்லத் தொடங்குகையில், பின்னிருந்த அருணா, “வண்டியை நிறுத்து” என்கிறாள். என்னவென்று புரியாமல், வண்டியை ஸ்லோ செய்து, தார் ரோட்டின் பக்க வாட்டில் இருக்கும் மணலில் இறக்கி, ஒரு ஓரமாக ஒதுக்கி நிறுத்துகிறான். இருவரும் வண்டியை விட்டிறங்க, அந்த கும்மிருட்டில் முதன் முறையாக அவளின் முகத்தைப் பார்க்கிறான் கணேஷ். அலை அலையாய் அவளின் தலை முடி பின்னோக்கிப் பறக்க, சற்று நேரம் முன்னர் வழிந்தோடிய கண்ணீர் குளிரிலேயும் காய்ந்து நின்ற தடம் அவளின் கன்னங்களில் தெரிகிறது. கருமை நிற முகத்தில், கருநீல அதரங்கள் காய்ந்து போய் ஒன்றையொன்று ஒட்டிக் கொள்ளாமல் திறந்திருப்பதும் துல்லியமாய் அவன் கண்களுக்குக் காட்சியளிக்கிறது.

“என்ன ஆச்சு, அருணி…” செல்லமாய் அவளை அப்படி அழைப்பது வழக்கம். அந்த வார்த்தையைக் கேட்டதுதான் தாமதம், அருணா அவன் தோள்களில் விழுந்து, சத்தமாய் விம்மி விம்மி அழத் தொடங்கினாள். ”என்ன ஆச்சு செல்லம்… என்னடா…” அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பேச வைக்க முயன்று கொண்டிருந்தான் கணேஷ்.

“நாம ஓடிப்போயிடலாம் கணேஷ்….” அழுகைக்கு மத்தியில், அவள் வாயிலிருந்து வெளி வந்த முதல் வாசகம் அது. “என்ன ஆச்சுடா கண்ணா..” திரும்பவும் அதே கேள்வி…. “நான் சொல்றதக் கேளு… நீ கொடுத்த கிஃப்ட் நெனவு இருக்கா…… எங்கப்பாவுக்கு செம கோவம்… தூக்கி சாக்கடையில எறிஞ்சுட்டாரு…..” அப்படி ஒன்றும் தவறான பொருளைக் கொடுக்கவில்லையே என்று கணேஷ் யோசித்துக் கொண்டிருக்கையில், “அத நான் கட்டிப் புடிச்சுக்கிட்டுத் தூங்கிக்கிட்டிருந்தேன்… பன்னெண்டு மணிக்கு என் ரூமுக்குள்ள வந்து விஷ் பண்ண வந்த அப்பா, அதப் பாத்துட்டு என்னன்னு கேக்க, நீ குடுத்த கிஃப்ட்னு சொன்னேன்.. கோபத்துல என் கையில இருந்து பறிச்சு ஜன்னல் வழியா எறிஞ்சுட்டாரு…”.. “நானும் கோவத்துல, கணேஷை நான் லவ் பண்றேன்னு கத்தினேன்… பளார்னு ஒரு அறை விட்டாரு……”

அவளின் அழுகை தொடர, கணேஷ் தன்னிச்சையாய் அந்தக் குளிர்ந்த இரவில் அவளின் கன்னங்களுக்குக் கதகதப்பாய் ஒத்தடம் கொடுக்கத் தொடங்கினான். இளமையின் கொதிப்பில் அதனை அனுபவித்தாலும், அவசரமாய் அவனை விலக்கி, “சொல்லு, மெட்ராஸ் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றாள் அருணா. கணேஷுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. “இல்லம்மா…. அப்பாதானே, பேசிச் சரி செஞ்சுரலாம்…” என்ற கணேஷை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்த அருணா, “நடந்தது எதுவும் இதுவரைக்கும் அம்மாவுக்குத் தெரியல போல, அதுதான் வண்டியைக் குடுத்து ஒன்ன அனுப்பி வச்சிருக்காங்க… நாம வீட்டுக்குப் போனவுடன மொத வேல நம்ம ரெண்டு பேர் தோலையும் உரிக்கிறதுதான், புரியலயா உனக்கு?” என்ற அருணாவிடம், “புரியுதும்மா, ஆனா என்ன நம்பு, நான் பேசிச் சரி பண்றேன்…” என்றான் கணேஷ்.

நண்பர்களிடம் “வீட்டை விட்டு ஓடிர வேண்டியதுதான்” என்று சொன்னபோது இருந்த தைரியம் இப்பொழுதில்லை கணேஷுக்கு. காதலின் அழுத்தம் ஆழமென்றாலும், ஓடிப்போவது இரண்டு குடும்பங்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று தோன்றியது. “இல்லம்மா…. நான் சொல்றேன் கேளு” என்று அறிவுரை வழங்க ஆரம்பித்தான். அவன் சொல்வது எதையும் கேட்டுக் கொள்ள அவள் தயாராயில்லை. ”நீ என்ன நெஜமாவே லவ் பண்றியா?” என்ற பெரிய அதிர்ச்சி குண்டை அவன் மேல் போட, அதுவரை பொறுமையாய்ப் பேசிக் கொண்டிருந்த கணேஷுக்கு கோபம் தலைக்கேறியது. “என்ன சொல்ல வர நீ, நானும் கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி, படிச்சுப் படிச்சுச் சொல்லிக்கிட்டிருக்கேன், அதென்ன ஒனக்கு அப்டி ஒரு கோவம்? எதைச் சொன்னாலும் கேக்க மாட்டியா? பொட்டப் புள்ளயா, லட்சணமா சொல்ற பேச்சைக் கேட்டுக்கோ” அவனையும் அறியாமல் வந்துதிர்ந்த வார்த்தைகள் அவளின் கோபத்தை உச்சிக்கொண்டு செல்ல, அதே நேரத்தில் அருணாவின் அப்பா கார் அருகே வந்து நின்றது……….

சரியாக இருபத்து நான்கு வருடங்களுக்குப் பிறகு, அதே நாள். சொந்த ஊர் திரும்பிய கணேஷ், அவசரத் தேவைக்காகப் பணம் எடுப்பதற்காக அந்த ஊரிலிருந்த ஒரே பாங்க்குக்குள் நுழைகிறான். பத்து வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி ஓடி வந்த அவசரத்தில் அவன் மீது மோதி, கீழே விழுகிறாள். அவளைத் தூக்கி நிறுத்தி, “சாரி, அடி எதுவும் படலையே” என்று இவன் கேட்டுக் கொண்டிருக்க, ”ஐயோ, ஸ்வாதி.. ஆர் யூ ஓ.கே.?” என்று கேட்டுக் கொண்டே ஒரு பெண்மணி ஓடி வருகிறாள்.

அருகில் வந்தவளின் முகம் பார்க்க, கணேஷ் அதிர்ச்சியில் உறைகிறான். இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் இவனை விட்டு கார் ஏரிச்சென்ற அருணா, கணேஷ் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “அருணா, நீ, எப்படி இங்க…” என்று இவன் இழுத்துக் கொண்டிருக்க, ”அப்பா, இந்த ஸ்வாதிக்கு எத்தனை வாட்டிதான் பாத்ரூம் போகணுமோ, இந்த வில்லேஜ்ல பாத்ரூம் வேற நீட்டா இல்ல” சொல்லிக் கொண்டே கணேஷின் எட்டு வயது மகள் ஸ்வாதியைக்  கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வந்து நின்றாள் கணேஷின் மனைவி லக்‌ஷ்மி.

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad