\n"; } ?>
Top Ad
banner ad

காத்து இருப்பு

Filed in கதை, வார வெளியீடு by on October 26, 2025 0 Comments

அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குள் நுழையும்போதே மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சம் பாய்ந்த இடத்தைத் தவிர அந்த வளாகமே கும்மிருட்டாகயிருந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இடைவெளியில் கார் நின்று, இஞ்சின் அணைந்ததும், அந்தப் பகுதி முழுதும் இருட்டை அப்பிக்கொண்டது. வண்டியிலிருந்து இறங்கிய மாயா கைபேசியின் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்துவிட்டு, பின் கதவைத் திறந்து தனது லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அபார்ட்மெண்டின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள். தூரத்தில் வானளாவ உயர்ந்திருந்த அதிநவீன வர்த்தக கட்டடங்களின் விளக்குகள் மின்னினாலும், நகரின் இந்தப் பகுதி மட்டும் எனோ புறக்கணிக்கப்பட்டு, பாழடைந்த கட்டடங்கள் நிரம்பி காணப்பட்டது. இருபதாண்டுகளுக்கு முன், செல்வந்தர்களும், திரை, அரசியல் வர்த்தகப் பிரபலங்கள் மட்டுமே வாழ்ந்து வந்த இந்தப் பகுதி இன்று வறுமை நிறைந்த, சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் இடமாக மாறிவிட்டிருந்தது.  இரண்டு வாரங்களுக்கு முன், அபார்ட்மெண்ட் தேடி வந்த போது, மாயாவுக்கு இந்த ஏரியாவைப் பிடிக்கவில்லை தான். ஆனால், நிரந்தர வேலையை இழந்துவிட்டு அங்கும் இங்குமாகப் பணியாற்றி கையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் உழன்றவளுக்கு, இதை விட நல்ல அபார்ட்மெண்டுக்கு ஆசைப்பட வாய்ப்பில்லாமல் போனது. 

பிரதான வாயிலை நெருங்கும் போதே, மிகச் சமீபத்தில் யாரோ புகைத்துவிட்டுப் போன மெருவானாவின் கடுமையான நாற்றம் முகத்தில் அறைந்தது. மூக்கின் அருகே கையால் விசிறியபடி கையிலிருந்த சாவிகளில் சரியானதைத் தேடி, கதவைத் திறந்தாள். பழைய இரும்புச் சாவி கதவில் உரசிட கதவைத் தள்ளி திறந்தபோது ஏற்பட்ட கிறீச்சிடும் ஒலி அங்கு நிலவிய நிசப்தத்தைக் கிழித்தது. உள்ளேயிருந்த குண்டு பல்பும் இன்றோ நாளையோ உயிர்விடப் போகும் அவஸ்தையில் ஒளியைச் சிமிட்டியது. இரண்டாவது மாடி செல்ல படியேறும் போது அவளது ஷூக்கள் எழுப்பிய சத்தம் அந்த வெராந்தா முழுதும் எதிரொலித்தது. வீட்டுக் கதவைத் திறந்தவுடன் அவளது செல்லப் பூனை பெல்லா சந்தோஷமாக கத்தியபடி ஓடி வந்தது. சமையலறை மேடையில் பையை வைத்து விட்டு, கால்களுக்கு இடையில் முகத்தைப் புதைத்து தேய்த்தபடி சுற்றிச் சுற்றி வந்த பெல்லாவைத் தூக்கி “இந்த வீடு பிடிச்சிருக்கா உனக்கு.. எனக்குத் தெரியும்.. இங்க உனக்கு வேடிக்கை பார்க்க பால்கனி, பெரிய ஜன்னல் எதுவும் இல்லை.. போரடிக்கும் இல்ல.. பாக்கலாம்.. சீக்கிரம் நல்ல வேலை கிடைச்சிடும்,, ஆறு மாசத்துல வேற நல்ல வீட்டுக்குப் போயிடலாம்” என்று பேசினாள். அவள் சொன்னது புரிந்தது போல அவளைப் பார்த்த பெல்லா அடுத்த நொடி வீட்டின் ஒரு மூலையை உற்றுப் பார்த்துச் சன்னமாக உறுமிவிட்டு,  திமிறி, தரையில் குதித்து ஓடியது. 

உடை மாற்றி, குட்டியாக இளைப்பாறி மதியம் வாங்கி மிச்சப்படுத்திய சைனீஸ் நூடுல்ஸ் பொட்டலத்தைத் திறந்து சாப்பிடத் துவங்கினாள். இரண்டு வாய் சாப்பிட்டதும், மறுநாள் காலைக்குள் நேதன் கொடுத்திருந்த வீடியோ எடிட்டிங் வேலையை முடிக்கவேண்டுமெனும் அழுத்தம் உரைத்தது. பையிலிருந்து லாப்டாப்பை எடுத்து மடியில் வைத்து  சாப்பிடுவதைத் தொடர்ந்தாள். கணினி உயிர்பெறும் முன், திரையில் அவளது பிம்பம் பிரதிபலித்தது. சாப் ஸ்டிக்கால் நூடுல்ஸை அள்ளி வாயில் வைத்தபோது, மங்கலானதொரு உருவம் மின்னல் போல தோன்றி மறைந்தது. ஒரு நொடி துனுக்குற்றவள் பக்கத்திலிருந்த துணியை எடுத்து திரையை மெதுவாகத் துடைத்தாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, மாயாவின் வாழ்க்கை ஒரு வண்ணக் கனவு போல இருந்தது. யுனிவர்சல் ஸ்டுடியோவில் அனிமேஷன் பொறியாளராக, நல்ல சம்பளத்தில், இருபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் இளைஞர்களைப் போலவே, அவள் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தாள். ஆனால், பெரு நிறுவன இணைப்புகளும், ஹாலிவுட் வேலைநிறுத்தங்களும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமும் பாரம்பரிய வேலைகளை விழுங்க, அவளது நிறுவனம் மத்திய கிழக்கு கூட்டு நிறுவனத்தால் வாங்கப்பட்டு, ஒரு காலை மாயா வேலையிலிருந்து நீக்கப்பட்டாள்—எந்த எச்சரிக்கையும் இல்லாமல். நண்பர்களும் சக ஊழியர்களும் ஒருவர் பின் ஒருவராக இடம்பெயர தொடர்புகள் துண்டித்துப்போனது. நேதன் மட்டும் அவளுக்கு ஆதரவாக நின்றான். படைப்பாற்றல் மிக்க ஒலி பொறியாளரான நேதன், தனது யூடியூப் இசைச் சேனலில் புதிய பாடகர்களையும் இசைக் குழுக்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு பொருத்தமான வீடியோ எடிட்டிங் மற்றும் பின்னணிகளுடன் பிரபலப்படுத்தினான். வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் இசைத் துண்டுகள், பாடகர்களின் குரல் பதிவுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒருமுகப்படுத்தி, ஒரு ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது போல் உருவாக்கி, பொருத்தமான பின்னணி காட்சிகள், விஷுவல் எஃபெக்ட்ஸ் சேர்த்து நேர்த்தியாக மியுசிக் வீடியோக்களாகப் படைப்பதைப் பகுதிநேர தொழிலாகச் செய்து வந்தான். ஒலி சம்பந்தப்பட்ட தொகுப்புகளை நேதன் பார்த்துக் கொண்டு, காட்சித் தொகுப்புகள், ஒளி திருத்தங்கள், ஒலி சேர்க்கை போன்ற விஷயங்களை மாயா வசம் ஒப்படைத்துவிடுவான். இதன் மூலம், திக்கற்று நின்ற மாயாவின் வாழ்க்கைப் பயணம், ஒற்றை துடுப்பு கிடைத்தது போல மெதுவாக நகர்ந்தது.

ஃபோன் அடித்த சத்தம் கேட்டு கண்விழித்தாள் மாயா. என்ன நிலையிலிருக்கிறோம் என்று புரிய சில நொடிகள் பிடித்தது அவளுக்கு. எடிட்டிங் முடித்து வீடியோவை அனுப்பும் போது பின்னிரவு இரண்டே முக்கால் ஆனது ஞாபகம் வந்தது.. படுக்கையறைக்கு கூட எழுந்துபோகாமல் ஒற்றைச் சோபாவில், மடியில் கணினியை வைத்தபடியே தூங்கிவிட்டது அவளுக்கே வியப்பாகத் தோன்றியது. சுதாரித்துக் கொண்டு ஃபோனை எடுத்துப் பார்த்தாள். நேதன் தான் கூப்பிடுகிறான்.

தலைமுடியை ஒதுக்கியவாறு அழைப்பை ஏற்று “ஹாய் நேதன்.. “ என்றாள்.

“என்ன பண்ணி வெச்சிருக்கே மாயா.. மிட் நைட்ல கண்ணு முழிச்சு வேலை செஞ்சா ஃபோகஸ் இருக்காதுன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்..”

“புரியல .. என்ன சொல்ற நேதன்?”

“என்னவா? எடிட்டிங் எல்லாம் முடிஞ்சப்புறம் ஃபைனல் வெர்ஷனைப் பாத்தியா .. இல்ல தப்பான ஃபைல் எதையாவது அனுப்பி வெச்சிட்டியா? “

“இல்லபா, எடிடெட் காப்பியை ரெண்டு தடவை பாத்துட்ட அப்புறம் தான் அனுப்பினேன்.. என்ன ஆச்சுன்னு சொல்லு”

“ஆடியோல  பழைய பாட்டு எதோ ஓவர்லாப் ஆயிருக்கு .. வீடியோல ஸ்டாடிக் க்ரைன்ஸ்.. எதோ விண்டேஜ் சாங் மாதிரி எஃபெக்ட்ஸ் கொடுத்து வெச்சிருக்கே.. நாம ரிலீஸ் பண்றது காண்டெம்ப்ரரி  ரொமாண்டிக் எமோஷனல் சாங்.. வீடியோ டைட்டில்ல மட்டும் “ஐ வில் வெய்ட் ஃபார் யூ” ன்னு போட்டா போதுமா? நடுநடுவில கேக்கிற வாய்ஸ் என்னது? “

“இருக்கவே இருக்காது… சரியான வீடியோவைத் தான் பாத்தியா? சத்தியமா சொல்றேன், நான் பாக்கும் போது எல்லாம் சரியா தான் இருந்துச்சு”

“நீயே ப்ளே பண்ணி பாரு .. தூங்கி எழுந்துட்டல்ல .. கண்ணை நல்லா தொறந்து வெச்சு பாரு..லைன்ல இருக்கேன்”

“காலங்கார்த்தால எதாவது ப்ராங்க் பண்றியா நேதன்?” சந்தேகத்துடன் கேட்டவாறு லாப்டாப்பை திறந்து ஆன் செய்தாள்.

“ப்ராங்க் பண்றேனா? எதாவது சொல்லிட போறேன் மாயா.. இன்னைக்கு மதியம் 1 மணிக்கு வீடியோ ரிலீஸ் பண்றதா சொல்லியிருக்கேன்… உன்னை ப்ராங்க் செய்யற நேரமில்லை இது.. வீடியோ ப்ளே ஆயிட்டிருக்கா?”

“ஆங் .. ஓடிட்டு தான் இருக்கு.. இதுவரையில் எந்த பிரச்சனையும் தெரியல ..எல்லாம் நல்லா தான் இருக்கு ..”

“ஆரம்பத்துல எல்லாம் பர்ஃபெக்டா தான் இருக்கு.. 1:03 நிமிஷத்திலே முதல் ஸ்டாடிக்.. அங்க ஒரு 30 செகண்ட் வாய்ஸ் ஒவர்லாப்.. 1:42 ரெண்டாவது ஸ்டாடிக்.. க்ரைன்ஸ் .. வாய்ஸ் ஓவர்லாப்,, 2:17, 2:48 அப்படின்னு ஆறு நிமிஷ பாட்டில 11 டிஸ்டர்பன்ஸ்.. ஸ்டாடிக், ஒவர்லாப்பிங் மியூசிக்னு மொத்தமா குதறி வெச்சிருக்கே..”

“நைட் குடிச்ச ஹாங் ஓவர்ல இருக்கியா? வீடியோ ரெண்டு நிமிஷமா ஓடிட்டிருக்கு.. ஸ்பாட்லெஸ்.. விடியோ ரெசொல்யூஷன், கலர் பிட்சிங், க்ரேடிங், டிரான்சிஷன், பேசிங் எல்லாமே பர்ஃபெக்டா இருக்கு.. நோ வாய்ஸ் ஓவர்லாப், நோ க்ரைன்ஸ்..”

“ஸ்டாப் இட் மாயா.. என்னை முட்டாளாக்கப் பாக்காதே.. உடனே கிளம்பி என் ஆபிஸ்க்கு வா.. என்ன நடந்தாலும் இந்த வீடியோ இன்னைக்கு ரிலிசாகணும்..” அழைப்பு துண்டித்தது.

மாயாவின் மனதில் குழப்பம்.. எப்படி அவனுக்கு போன பதிவில் மட்டும் பிழைகள் நேர்ந்திருக்கும்.. ஒருவேளை ஃபைல் டிரான்ஸ்மிஷனில் கோளாறு நடந்திருக்குமோ? யோசித்தபடியே கணினியை அணைத்தாள்.. திரையொளி அடங்கியதும் அவளது முகம் திரையில் பிரதிபலித்தது.. கலைந்த தலைமுடி, சிவந்த கண்கள் என அவளது உருவமே அவளை அச்சுறுத்தியது.. சடாரென பின்னால் ஏதொ நிழலுருவம் கடந்தது.. திடுக்கிட்டு திரும்பியவள், பெல்லா உறுமிக் கொண்டே மேஜையிலிருந்து குதித்து ஓடியதைப் பார்த்து..  ‘நீ வேற என்னை பயமுறுத்தாத பெல்லா..” என்று சொல்லிக் கொண்டே குளியலறை நோக்கி நடந்தாள்.

நேதனின் அலுவலகம் பலவித ஒலி, ஒளி கருவிகள் குவிக்கப்பட்டு அடைசலாக இருந்தது. அந்த சின்ன இடத்தில் அனைத்து கருவிகளையும் நேர்த்தியாக வைக்க முடியாது தான். உடனடி தேவையில்லாத கருவிகளை அங்கிருந்து அகற்றிவிடுமாறு மாயா பலமுறை சொல்லியும் அவன் கேட்பதாகயில்லை. ஒரு மூலையில், வழக்கமாக அவன் அமரும் மேஜை நோக்கி நடந்தாள். இரண்டு பெரிய திரைகளுக்கு நடுவே தெரிந்த நேதன் முகம் அவன் குழப்பத்துடன் கடுகடுப்பாக இருப்பதைப் பார்த்த மாயா மிகுந்த எச்சரிக்கையுடன், “எப்படி இருக்கே நேதன்?” என்றாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்த நேதன், அவளது முகம் வெளிறிப்போயிருப்பதைப் பார்த்து உடைந்து போனான். அருகிலிருந்து நாற்காலியை காட்டி, உட்கார் என்பதைப் போல சைகை செய்துவிட்டு ஒரு பெரிய திரையை அவளது பக்கம் திருப்பினான். வீடியோ ஓடத் துவங்கியது. தொடக்கம் உடனடி கவனத்தைப் பெரும் வகையில், தனிமையில் காத்திருக்கும் காதலியின் ஏக்கத்தை சொல்வதைப் போல மென்மையாக வெளிர் ஊதா பின்னணியில் மரத்திலிருந்து உதிரும் பூவிதழ் காற்றில் அலைவது என்று, காதலியின் தவிப்பைத் துல்லியாமாக உணர்த்தியது. மென்மையாக ஒலிக்கத் துவங்கிய ஒற்றை வயலின், ஹார்ப் முன்னிசை பார்வையாளர்களின் இதயத்தை இளகச் செய்வது உறுதி. சில நொடிகளில், நேதன் சொன்னது போல் வீடியோவில் கருப்பும் வெள்ளையுமாக கோடுகள் ஓடின.. காதுகளைக் கூசச் செய்யும் கரகரவென சத்தம்.. பின்னால், பாதாளத்திலிருந்து பாடுவது போல் ஒரு பெண்ணின் குரல், முதன்மை பாடல் இசையை பின்னுக்குத் தள்ளுவது போல் ஒலித்தது.. சில நொடிகள் தான், மீண்டும் துல்லியமான வீடியோ, இசை .. அதிர்ந்து போனாள் மாயா.

“இது எப்படி நடக்கும் .. ஃபைல் கரப்ட் ஆகியிருந்தா மொத்தமா இல்ல போயிருக்கும்… நடுநடுவிலே எப்படி?” என்றவாறு தனது லாப்டாப்பை பையிலிருந்து இழுத்தாள். “என்னுடைய வெர்ஷனைப் பாரு” என்று சொல்லியபடி, அவளது கணினி உயிர் பெற்றதும், அதே வீடியோவை ஓடவிட்டாள். துல்லியமாக ஓடிய பாடல், நேதனின் கணினியில் பார்த்ததைப் போல குறிப்பிட்ட இடங்களில் ஸ்டாடிக், நாராசமான கரகரப்பு, பின்னணியில் அமானுஷ்ய குரல் என ஒலித்ததும் உறைந்து போனாள் மாயா. சில நொடிகளில் சுதாரித்தவள், நேதனைப் பார்த்து.. “சத்தியமா சொல்றேன்.. நான் பார்த்தபோது இதெல்லாம் இல்லை.. கிளியரா இருந்தது…”

அவளது தோள்களைப் பிடித்து பேச்சை நிறுத்திய நேதன்.. “நிறுத்து… நிறுத்து மாயா.. நீ எதோ குழம்பி போயிருக்கே.. இதுதான் நிஜம்.. வீடியோ குப்பையா இருக்கு.. முதல்ல இதை இங்கேயே சரிபடுத்து.. உன்னுடைய ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் வெச்சிக்கலாம்.. டூ இட் ஃபாஸ்ட்..” என்று கடுமை காட்டினான். 

முன் தினம் செய்த அதே எடிட்டிங் வேலைகள் என்பதால், எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக புதிய வீடியோவைத் தயாரித்து விட்டாள் மாயா. நான்கைந்து முறை முழுமையாக ஓட்டிப் பார்த்ததில் நேதனுக்கும் திருப்தி உண்டானது. ஒருவழியாக வீடியோவை வெளியிட்ட போது, மணி இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. இருந்தாலும், வீடியோ வெளியான சில நிமிடங்களில் பார்வையாளர்கள் அதிகரிப்பதையும், அவர்களது வெறித்தனமான பாராட்டுப் பின்னூட்டங்களையும் பார்த்த நேதன் நிம்மதி பெருமூச்சு விட்டான். “வீ டிட் இட் மாயா.. உன் உழைப்பு அவர்களை ஏமாற்றவில்லை.. சாரி, வீடியோ வெளியாகனுமேன்ற பதட்டத்தில உன்னைக் கொஞ்சம் கடுமையா பேசிட்டேன்.. ஆனால் உன்னோட மேஜிக்கல் திறமை தாமதத்தைத் தாண்டி அவர்களை மகிழ்ச்சியடைய வெச்சிருக்கு..” பரிவுடன் பேசியபடி அவளை இழுத்து மென்மையாக முத்தமிட்டான். கண்களில் நீர் துளிக்க அவனது முகத்தைப் பார்த்த மாயா, அவனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டாள்.

சின்ன விசும்பல்களுக்குப் பின் மெதுவாகப் பேசியவள், “ஒன்னுமே புரியல நேதன்.. நேத்து செஞ்ச அதே ஸ்டெப்ஸ் தான் இன்னைக்கும் செஞ்சேன்.. ஆனா நேத்து எங்கிருந்து அந்த குரல், வீடியோ டிஸ்டர்பன்ஸ் எல்லாம் சேந்ததுன்னு தெரியல..” என்று முடிக்குமுன்னரே அவளைப் பின்னுக்குத் தள்ளி அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த நேதன், “உன்னோட ஆதங்கம் புரியுது மாயா.. கண்டிப்பா என்ன நடந்ததுன்னு கண்டு பிடிக்கணும்.. அதுக்கு முன்னாடி, லஞ்ச் சாப்பிடலாம்.. காலையிலேர்ந்து நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டே ..”

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நேதன் ஆரம்பித்தான்.. “அந்த வீடியோல கேட்ட குரல் யாருதுன்னு தெரியுமா உனக்கு”

“எனக்கு எந்தக் க்ளூவும் தெரியல.. உன்னிச்சுப் பார்த்தா அந்தக் குரல்ல ஒரு தனித்துவமான ஈர்ப்பு இருக்கிறதை உணர முடியுது.. ஆழமான உணர்வுகளை ரொம்ப ஈஸியா வெளிப்படுத்தக் கூடிய குரல் வளம்..”

“எக்ஸாக்ட்லி .. நிகிடா டனாகா.. கேள்விப்பட்டிருக்கியா? 90s தொடக்கத்தில இளைஞர்களைக் கிறங்கடிச்ச குரல்..  “

“அப்படியா? நான் முதல் தடவையா கேள்விப்படறேன் .. ஆனா அந்த வாய்ஸ் .. டோட்டலி மெஸ்மரைசிங்.. இப்ப என்ன பண்றாங்க அவங்க? அவங்க வாய்ஸ் எப்படி நம்ம வீடியோல மிக்ஸ் ஆச்சு?”

“சரியா சொல்லத் தெரியல .. ஆனா நீ கேட்ட கடைசி ரெண்டு கேள்விகளுக்கும் எதோ கனெக்‌ஷன் இருக்குன்னு தோணுது.. நிகிடா அக்டோபர் 95ல இறந்துட்டாங்க .. குறிப்பா சொல்லணும்னா அக்டோபர் 18.. இன்னும் எக்ஸாக்டா சொல்லனும்னா, முப்பது வருஷத்துக்கு முன்னாடி, நேற்றைய தேதில .. அதாவது நீ ஒரிஜினல் வீடியோ எடிட் பண்ண அதே நாள்ல..”

“மை காட்.. என்ன சொல்ற நேதன்?” பதட்டம் தாளாமல் கையிலிருந்த ஸ்பூனைத் தட்டில் வைத்தாள்.

“இங்க பாரு.. எனக்கும் நிகிடா பத்தி நிறைய தெரியாது.. நீ வீடியோ எடிட் பண்ணிக்கிட்டிருந்த சமயத்தில வாய்ஸ் செர்ச் சாஃப்ட்வேர்ல தேடினப்போ கிடைச்ச பொருத்தம் தான் நிகிடா.. தொடர்ந்து இணையத்துல தேடினப்போ தான் அவங்க ஒரு பாப்புலரான ரிதம் அண்ட் ப்ளூஸ், சோல் ஜாஸ் சிங்கர் அப்படிங்கிறதும், அவங்க 30 வருஷம் முன்னாடி மர்மமான முறையில இறந்துட்டதும் தெரிஞ்சுது.. இதை விட அதிர்ச்சியான விஷயம் என்னன்னா, அவங்க லாஸ் ஏஞ்சல்ஸ்ல, உன்னோட அபார்ட்மெண்ட் இருக்கிற பகுதியில தான் வாழ்ந்திருக்காங்க.. “

“வாட்?” என்று மாயா அலறியது அந்த உணவகத்திலிருந்தவர்கள் அனைவரையும் திரும்ப்பிப் பார்க்கச் செய்தது. 

“கத்தாதே மாயா.. ப்ளீஸ், உட்காரு..” என்றவன் தன் செல்ஃபோனில் நிகிடாவின் மரணம் சம்பந்தமான செய்திகளையும், புகைப்படங்களையும் காட்டினான்.

மாயாவின் இதயம் வேகமாகத் துடித்தது. நிகிதா டனாகா, தொண்ணூறுகளின் பிரபல பாடகி, முப்பது ஆண்டுகளுக்கு முன், அவள் எடிட்டிங் செய்த அதே இரவில் இறந்திருக்கிறாள். எடிட் செய்யப்பட்ட வீடியோவில் அவளது குரல் .. தலை சுற்றியது. 

“நேதன், இது தற்செயலா இருக்க முடியாது,” என்று கிசுகிசுத்தாள், குரல் நடுங்கியபடி. 

“கரெக்ட்.. நமக்கு இன்னும் டீடெய்ல் வேணும்.. இதை ஆராயலாம்.. அதுக்கு நாம உன் அபார்ட்மென்டுக்கு போகணும். மொதல்ல சாப்பிட்டு முடி.. நான் என் ப்ரெண்ட் கிட்ட EVP ரெகார்டர் கேட்டிருக்கேன், அதை வாங்கிட்டு சாயந்திரம் உன்னோட அபார்ட்மெண்டுக்கு வர்றேன்.. ” நேதனின் கண்களில் பயமும், ஒரு புதிய ஆர்வமும் மின்னியது. 

“EVP கருவியா? அப்படின்னா?”

“Electronic Voice Phenomenon – நார்மலா பதிவு செய்யும் கருவிகளில் பதிவாகாத அலைவரிசைகளை, ஒலிவலைகளை கைப்பற்றக் கூடிய கருவி .. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா ‘ஸ்பிரிட் பாக்ஸ்’ – சில பேர் இந்தக் கருவி வழியா இறந்தவர்களுடைய ஆவிகளோட பேசப் பயன்படுத்துவாங்க..”

எதிரில் அமர்ந்திருந்த நேதனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் மாயா. “ஆவியா? என்ன சொல்ற நேதன்.. கடவுளே… எனக்கு ரொம்ப பயமா இருக்கு .. இல்ல… நான் வரமாட்டேன்” தொடர்பில்லாத துண்டுத் துண்டு வாக்கியங்களைப் பிதற்றினாள் மாயா.

“கூல் டவுன் பேபி.. நீ தனியா போக வேண்டாம், என்னோட ஆபிஸ்ல இரு.. நான் வந்ததுக்கப்புறம் சேர்ந்து போகலாம்”

விஸ்பரிங் ஹைட்ஸ் பகுதியிலிருந்த மாயாவின் அபார்ட்மெண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது நேதனின் கார். ஏற்கனவே நன்றாக இருட்டி விட்டிருந்தது. பிசுபிசுவென பெய்து கொண்டிருந்த மழை கண்ணாடி வழியான பார்வையை மறைத்துவிடாமலிருக்க இயங்கிக் கொண்டிருந்த ‘வைப்பர்கள்’ குறிப்பிட்ட இடைவெளியில் கீச்சொலிகளை எழுப்பியதை தவிர பெரிதாக எந்தச் சத்தமும் இல்லை. 

அமைதியை உடைக்க லேசாக கணைத்துக் கொண்டு பேசினான் நேதன் – “நான் இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன் மாயா.. இதைக் கேட்டா நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு பயமா இருக்கு”

“காலையிலேர்ந்து ஒன்னு பின்னாடி இன்னொன்னு ஏகப்பட்ட அதிர்ச்சிகளைப் பாத்துட்டேன்.. வேற வழியில்லை .. எதுவாயிருந்தாலும் சொல்லு”

“நீ இருக்கிற அபார்ட்மெண்ட் ஒரு காலத்துல செலிபிரிட்டிஸ் வாழற இடமா இருந்திருக்கு.. அது மாறிப் போக காரணமா இருந்தது நிகிடாவின் மரணம் தான்.. “

எதுவும் சொல்லாமல், நேதனின் முகத்தைப் பார்த்தாள் மாயா.

ஸ்டிரிங் வீலிலிருந்து வலது கையை எடுத்து அவளது கையைப் பிடித்துக் கொண்ட நேதன்.. “நீ இருக்கிற அபார்ட்மெண்ட் அந்தக் காலத்துல செல்வந்தர்கள் பலரின் ஆடம்பர காண்டோவாக இருந்துள்ளது. செலிபிரிட்டி பெண்ட்ஹவுஸ்.. சிலர் அந்த பரந்த பில்டிங்கின் பல அறைகள் கொண்ட ஒவ்வொரு முழு தளத்தையும் சொந்தமா வெச்சிருந்திருக்காங்க..  அப்படி ஒரு முழு தளத்தையும் நிகிடா வெச்சிருந்திருக்காங்க.. அவங்களோட இறப்புக்கு அப்புறம் வதந்திகள் பரவ மெதுமெதுவா செலிபிரிட்டிஸ் எல்லாம் வெளியேற ஆரம்பிச்சிருக்காங்க.. அந்தச் சமயத்தில அதை வாங்கின ஒரு ரியல்டர் அந்த அறைகளை லேசா மாத்தி அமைச்சு தனித் தனி யூனிட்களாக வாடகைக்கு விட ஆரம்பிச்சிருக்காரு… “

“அப்படின்னா..நிகிடா..” மாயாவின் கண்களில் அப்பட்டமாக பீதி தெரிந்தது.

“சொல்றேன்.. ஹவாய் தீவுல வாழ்ந்து வந்த ஜப்பானிய இளைஞருக்கும், ஆப்பிரிக்க பெண்ணுக்கும் பிறந்தவங்க தான் நிகிடா.. இயல்பாவே இசையார்வம் கொண்டிருந்த நிகிடாவுக்கு ஜப்பானிய தெய்வீகமும், ஆப்பிரிக்க உணர்வுப்பூர்வமான ஜாஸ் / ப்ளூஸ் பின்னணியும் புதுவித இசையணுபவத்தை உருவாக்க, சின்ன வயசிலேயே அசுர வேகத்தில் புகழின் உச்சிக்குப் போயிருக்காங்க நிகிடா.. “

நிகிடாவின் பின்னணித் தகவல்கள் புதுவித ஆர்வத்தை உருவாக்கிட லேசாக பயம் விலக்த் தொடங்கியிருந்தது மாயாவின் முகத்தில். “இதெல்லாம் உனக்கு எப்படி,,” 

அவள் முடிக்கும் முன்பே, “சத்தியமா எனக்கு இதைப் பத்தியெல்லாம் முன்னாடி தெரியாது.. இன்னைக்குச் சாயந்திரம் என்னுடைய சர்க்கிள்ல தெரிஞ்ச ஒரு மியுசிக் ஃப்ரொபசர், எட்வின் கார்ட்டர் கிட்ட பேசியதில் அவர் சொன்ன விஷயங்கள் இவை.. இதுவரை அவர் சொன்னதெல்லாம் உறுதிபடுத்தப் பட்ட தகவல்கள்.. அடுத்து அவர் சொன்னதுக்கான பெரிய ஆதாரம் எதுவும் இல்லைன்னு அவரே சொன்னாரு  “

“அப்படி என்ன சொன்னாரு அவரு?”

“அவருக்கு தெரிஞ்சவரை, அமெரிக்க மியுசிக் பெரு நிறுவனங்களுக்கு நிகிடாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை .. அதுவும் நிகிடா அடுத்தடுத்து ஆல்பங்களைச் சொந்தமாக வெளியிட்டது அவர்களின் வர்த்தகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.. நிகிடாவுக்கு பெருகிய ரசிகப் பட்டாளம் மற்ற படைப்பாளிகளின் ஆல்பங்களில் ஆர்வம் காட்டாததால் அவர்களின் வியாபாரம் நலிவடைய காரணமாகியது.. நிகிடாவை .. அவங்க வளர்ச்சியை எப்படியாவது நிறுத்திவிட துடிச்சிருக்காங்க. அதைப் பத்தி அந்தக் கால பத்திரிக்கைகளில் அரசல் புரசலாகச் செய்திகள் வந்ததை புரொபசர் எட்வின் சொன்னார்.. “

“மை குட்னஸ்.. அப்புறம் என்ன நடந்துச்சு?”

“அவருடைய கருத்துப்படி, நிகிடா கொலை செய்யப்பட்டிருக்கலாம்னு நினைக்கிறாரு.. ஏன்னா அவங்க இறக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னால விருது வழங்கும் நிகழ்ச்சில கலந்துகிட்டிருக்காங்க .. விருந்தும் நடந்திருக்கு..ரெண்டு நாள்ல அவங்க காண்டோல மயங்கி விழுந்து கிடந்ததா ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க.. மெடிகல் டயோக்னசிஸ் படி, குடல்ல பாய்சன் இருந்ததா சொல்றாங்க .. தற்கொலைங்கிற கோணத்தில வழக்கு நடந்து, படிப்படியா அதுவே நிலைச்சுப் போச்சு”

வெளிறிப் போன முகத்துடன் மழை பெய்து கொண்டிருந்த சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

“அதுக்கப்புறம் அவங்களோட வெளியிடப்படாத பாடல்களை அழிக்க பெரிய முயற்சி நடந்திருக்கு.. பர்பாங்க்ல இருந்த ஸ்டுடியோவைக் கொளுத்திவிட்டிருக்காங்க.. மார்க்கெட்ல இருந்த அவங்களோட காசெட், சிடிக்களை மொத்தமா வாங்கி அழிச்சிருக்காங்க… நிகிடாவோட குழுவில இருந்தவங்களுக்கு கூட அவங்களோட வெளியாகாத பாடல்கள் எங்கேயிருக்குன்னு தெரியாமல் போனது.. அவையெல்லாம் முழுசா வெளியாகியிருந்தா நிகிடா இன்னைக்கு பல பில்லியன்களுக்கு அதிபதியா இருந்திருப்பாங்க..”

இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள் மாயா, அவளது உதடுகள் “ஆண்டவா.. கொடுமையான மரணம்” என்று முனுமுனுப்பது சன்னமாகக் கேட்டது. அவள் உடல் சில்லிட்டு, சிலிர்த்ததை பார்த்தவன் ஏசி யின் குளிரை குறைத்தான்.

மாயாவின் அபார்ட்மெண்ட். நேதனின் வரவை எதிர்பார்க்காத பெல்லா, முதலில் பதுங்கினாலும், தனது தோழமை தான் என்ற லேசான உறுதியோடு, படிப்படியாக அவனை நோக்கி வந்தது. ஏற்கனவே பூனைகளுடன் பரிச்சயம் இருந்ததால், நேதன் விரல்களை நீட்டி பெல்லா முகரும் வரை காத்திருந்தான். இறுதி சரிபார்த்தலில் திருப்தியடைந்த பெல்லா அவனது கால்களை உரசிக் கொண்டு வலம் வந்தது. அவனின் கால்களை முகர்ந்துகொண்டிருந்த பூனை, திடுக்கிட்டு தலையை உயர்த்தி விட்டத்தைப் பார்த்து உறுமிவிட்டு, ஓடிச் சென்றது.

“அடிக்கடி இப்படித்தான் சினுங்கறா.. பழைய வீட்டில இதை நான் கவனிச்சதில்லை.. ஜன்னலைத் திறந்து வைக்க முடியாததால அடைசலா ஃபீல் பண்றாளான்னு தெரியல” என்றாள் மாயா.

“நமக்குப் புலப்படாத உணர்வுகள் அவங்களுக்கு இருக்கு” என்றவாறு தனது ஷூக்களைக் கழற்றிவிட்டு, அவளையும் காலணிகளைக் கழற்றிவிடுமாறு சைகை செய்தான். 

“நமக்கு நிசப்தமான சூழ்நிலை தேவை” என்று மெல்லிய குரலில் சொன்னவன் தனது பைகளை சமையலறை மேடையில் வைத்தான்.

அவற்றில் ஒன்றைத் திறந்து தனது கணினி, EVP ரெகார்டர் கருவிகளை வெளியில் எடுத்துவைத்து ஒழுங்குப்படுத்தினான்.. மற்றொன்றிலிருந்து பெரிய ஹெட் செட்களை எடுத்து, மாயாவிடம் ஒன்றை நீட்டியவன் மற்றொன்றை தனது காதுகளில் பொருத்திக் கொண்டான். 

“நான் சொல்றதை கவனமா கேளு மாயா.. இந்த ரெகார்டர் இயங்க ஆரம்பிச்சப்புறம் நாம எதுவும் பேசக் கூடாது. உன்னுடைய ஒரிஜினல் வீடியோல வந்த வாய்ஸ் ஒவர் லாப்பை தனியே பிரித்து வைத்திருக்கிறேன். அதை ப்ளே செய்து, என்ன ரீயாக்‌ஷன் வருதுன்னு பாக்கலாம்.. உனக்கு எதாவது கேட்டுதுனா சைகை மட்டும் செய்.. திரும்பச் சொல்றேன், சத்தம் எதுவும் செய்யாதே.. பயப்படாதே..அப்புறம் உனக்கு எதாவது கேட்டா, பேப்பர்ல எழுதிக்கோ..” என்று சொல்லிவிட்டு கட்டைவிரலை உயர்த்தி அவளின் சம்மதத்தைக் கேட்டான்.

அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு பதில் சைகை செய்தாலும் அவளுக்குள் சில்லிப்பு பரவியது. அறையில் நிலவிய நிசப்தம் ஹெட்போனை மீறி காதுகளை துளைத்தது. பெல்லாவைப் போலவே அடிமேல் அடி வைத்து நடந்த நேதன் ரெகார்டரை ஆன் செய்துவிட்டு, கணினியிலிருந்து வீடியோவில் பதிவாகியிருந்த நிகிடாவின் குரலை ஓலிக்கச் செய்தான். ‘I’m waiting in the dark; you be my ark’ எனப் பாடல் எளிமையான ஆங்கிலத்தில் ஒலித்தாலும், குரலில் தொணித்த வலி மாயாவுக்கு மனதில் கல்வெட்டாய் பதிந்தது. கணினியில் ஒலித்த குரல்துண்டு முடிந்துவிட்டது. மீண்டும் அமானுஷ்ய நிசப்தம். அலைகழிக்கும் நிமிஷம். உடல் உறைவது போன்றதொரு சில்லிப்பு..

ஹெட்ஃபோனில்  ‘I’m standing on a bridge’ என்ற பாடல் கேட்டதும் அதிர்ந்துபோய் நேதனைப் பார்த்தாள் மாயா. உதட்டின் மீது சுட்டுவிரலை வைத்து அமைதி காக்கும்படி எச்சரித்து, எழுதிக் கொள்ளுமாறு சைகை செய்தான்.

 

கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதினாள் மாயா .. அவளை அறியாமலே ஒலித்த பாடலின் தமிழாக்கத்தை எழுதத் தொடங்கியிருந்தாள் .. 

 

‘‘நிழல் பாலத்தில் நின்றிருந்தேன்; 

நிசப்த இருளில் காத்திருந்தேன்; 

நீ வருவாய் என நினைத்திருந்தேன், 

நீர் மழையைத் தவிர வேறில்லை, 

நீரும் வந்து சேரவில்லை’ – ஏக்கம் நிறைந்த அழுத்தமான, அழகான வரிகள். 

 

ஒலிச்சுவடுகள் அறையின் ஒரு மூலையிலிருந்து கேட்பதை உணர்ந்த நேதன் ரெகார்டரை கையில் பிடித்துக் கொண்டு மெதுவாக அந்த மூலையை நோக்கி நடந்தான். ரெகார்டரின் முள் செங்குத்தாக, விட்டத்தை நோக்கி துடித்தது. பாடல் நின்று விட்டது. கண்களில் மிரட்சியுடன், இரண்டு கைகளாலும் ஹெட்செட்டைக் காதாடு அணைத்துப் பிடித்திருந்த மாயாவிடம், மீண்டும் கணினியிலிருந்து அடுத்த ஒலித் துண்டை இசைக்குமாறு சைகை செய்தான் நேதன். சத்தமில்லாமல் நடந்து சென்று, கண்னியில் அடுத்த ஒலித்துண்டை இயக்கினாள். ‘Take me forever with you; Take me somewhere new’ ஒலித்துண்டு ஓடி நின்றது. சில நொடிகள் மெளனம். அதைத் தொடர்ந்து ஹெட்செட்டில்  பாடல் கேட்கவும் மீண்டும் எழுதினாள் ..

 

‘குளிர் கனத்த கூரிரவில், 

கூடுதலின்ப புதிரை அவிழ்க்க முயல்கிறேன்;

கையைப் பற்றி அழைத்துச் செல்,

கனவின் புதிய பயணத்துக்கு இட்டுச் செல்’ 

 

அறையிலிருந்த ஒரு கேபினட்டின் அருகே சென்ற நேதன், விரலால் விட்டத்தை சுட்டிக் காட்டினான். பின்பு அவளை நோக்கி அடுத்தது என்பது போல சைகை செய்ய, அடுத்த ஒலித்தண்டை ப்ளே செய்தாள். 

‘i am looking for your face, in world that is like a maze’

ஒலித்துண்டு முடிந்து சில நிமிடங்கள் ஆன பின்னரும், அமைதி நீடித்தது. ஹெட்செட்டைக் கழற்றிய நேதன்.. “இந்த கேபினட் குள்ளேருந்து தான் வாய்ஸ் கேட்குது ..” என்றான்.

“அது எதோ வைன் ரேக் காபினட் மாதிரி இருந்தது… நான் அதை யூஸ் பண்ணவேயில்லை.. “

கேபினட்டைத் திறந்தான் நேதன். எல்லா ஷெல்புகளும் காலியாக இருந்தன.. ஏமாற்றத்துடன் மாயாவைப் பார்த்தான்.. எதோ பொறி தட்டியது போல கேபினட்டுக்குள் தலையை நுழைத்துப் பார்த்த மாயா, “ஹேய், அங்க பார்.. மேல் ஷெல்ப்ல எதோ கீ ஹோல் மாதிரி தெரியுது” என்றாள்.

காரிலிருந்த ஸ்குரு டிரைவர், ரென்ச்கள் துணையுடன் நெம்பியதில், ஷெல்ஃபின் பூட்டு தளர்ந்து உடைந்தது. ஸ்லைடிங் ஷட்டர் போலிருந்த அந்த ஷெல்ஃபின் மேற்புற பலகையைத் தள்ளினான். அதுவரை பக்கத்து அறையில் ஒளிந்திருந்த பெல்லா ஓடி வந்து ஷெல்ஃபைப் பார்த்து உறுமியது. மறைவான ஆட்டிக் பரண் போலிருந்த அந்த பகுதியில் கை நுழைத்து துழாவியபோது தட்டுப்பட்ட பொட்டலத்தை எடுத்தான். பிசுக்குடன் தூசி படர்ந்திருந்த பொட்டலம் நான்கைந்து பிளாஸ்டிக் பைகளில் ஒன்றுக்குள் ஒன்றாக போடப்பட்டு ரப்பர் பேண்ட் போடப்பட்டிருந்தது. பொட்டலத்தில் ஸ்டுடியோக்களில் பயன்படுத்தப்படும் டிஹிட்டல் ஆடியோ டேப்புகள் இரண்டு இருந்தன. எதோ பொட்டில் அறைந்தது போல, கேபினட்டின் எல்லா ஷெல்புகளையும் கழட்டி விட்டு கவுண்டர் டாப்பில் ஏறி, அந்த ஆட்டிக்கில் தலையை நுழைத்து பார்த்தவன் மேலும் பல பொட்டலங்களையும், காகிதங்கள் பிதுங்கி வழிந்த ஒரு கோப்பையும் எடுத்துக் கொண்டு இறங்கினான். அவசரமாக தன் நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்து ADAT காசட்டுகளை ப்ளே செய்யும் கருவியைத் தருவித்தான்.. முக்கால் மணி நேரத்தில் அந்தக் கருவி வந்து சேர்ந்தது.. காசட்டுகளைப் போட்டுப் பார்த்ததில், ஏறக்குறைய நாற்பது பாடல்கள் இருப்பது தெரிய வந்தது. இணையத்தில் தேடிப் பார்த்ததில் அவை எதுவுமே இதுவரையில் வெளிவராத பாடல்கள் என்பது தெரிந்தது.

அதுமட்டுமல்லாமல், 90களில் பிரபலமாகயிருந்த ஒலிப்பதிவு நிறுவனத்திலிருந்து நிகிடாவுக்கு வந்த மிரட்டல்கள் குறித்து, நிகிடா கைபட பதிவு செய்திருந்த குறிப்புகளும், தொலைபேசி உரையாடல் பதிவுகளும் கிடைத்தன. 

“நிகிடாவுக்கு நியாயம் கிடைக்கணும்.. அதுக்கான எல்லா ஸ்டெப்ஸையும் எடுக்கணும் நேதன்..” என்றாள். 

‘கண்டிப்பா மாயா.. இந்தப் பாடல்களை ஆல்பமாக்கி வெளியிடலாம்.. முதல் ஆல்பத்துக்கு டைட்டில் ‘காத்திருப்பு’ – நல்லாயிருக்கா?”

“அதைவிட ‘காத்து இருப்பு’ அப்படின்னு பிரிச்சு எழுதினா ரொம்பப் பொருத்தமாயிருக்கும் நேதன்” என்றாள் மாயா.

‘கையைப் பற்றி அழைத்துச் செல் ; கனவின் புதிய பயணத்துக்கு இட்டுச் செல்’ ஹெட்செட் எதுவுமில்லாமல் கேசட் ப்ளேயரிலிருந்து ஒலித்தது நிகிடாவின் குரல். சில நொடிகள் விட்டத்தைப் பார்த்து உறுமிய பெல்லா, வாலை உயர்த்திக் கொண்டு அப்பால் நடந்து சென்றது. அதிகாலை நான்கு மணியாகிவிட்ட படியால் அங்கிருந்த குட்டி ஜன்னல் வழியே வெளிச்சம் தெரிய, அறையில் இதமான வெப்பம் பரவியது. 

  • மர்மயோகி

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad