\n"; } ?>
Top Ad
banner ad

நாயக வழிபாடு

தனி மனிதர்களை, அவர்கள் மீதான அபிமானத்தால், அன்பால் அல்லது எதோவொரு ஈர்ப்பால் கவரப்படுவது பொதுவான மனிதப் பண்பாகும். அந்த மனிதரின் குணநலன், திறமை காரணமாக அவரை முன்னோடியாகக் கருதி, அவரது வழிகாட்டுதலை முன்மாதிரியாகப் பின்பற்றுபவர்களும் உண்டு. அந்த மனிதரைத் தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்திப் போற்றுவது, அவர் செய்வதெல்லாம் உலக நன்மைக்காகவே என்று நம்புவதும் நாயக வழிபாடாக மாறிவிடுகிறது. புராண காலங்களிலிருந்து, செயற்கை நுண்ணறிவின் பிடியில் சிக்கி உழலும் இன்றைய நாள் வரை, இத்தகைய பிரமுகர்களை உயர்த்திப் பிடித்து, அசாதாரண சக்திகளையோ குணங்களையோ புனைந்து வணங்கி வழிபடுவது மாறவே இல்லை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இதுபோன்ற நாயக வழிபாடுகள் புதிய தளங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுகின்றன.

மனிதர்கள் பிறப்பிலிருந்தே தம்மைவிட மேலானவர்களை, சிறந்தவர்களைப் போற்றும் பழக்கத்துடன் வாழ்கிறார்கள். தமக்கு எட்டாத ஞானம், வீரம், வசீகரம், திறம் போன்ற அடையாளங்கள் கொண்டவர்களை நாயகர்களாக வரித்துக் கொள்கிறார்கள். வழக்கமாக இப்படிப்பட்ட நாயகர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தம்மைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கை கொள்ளவும், பெரிய இலக்குகளை நோக்கிச் செல்லவும் ஊக்கப்படுத்துகிறார்கள். சமூகத்தின் பார்வையில், இவ்வகையான நாயகர்கள் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்கிறார்கள். சராசரி மனிதர்கள் தங்கள் நாயகர்களைச் சுற்றியே தங்கள் உணர்வுகளையும் கனவுகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இது கூட்டு அடையாளமாக வலுப்பெற்று, பாராட்டுக் குழுக்கள் உருவாகக் காரணமாகிறது.

ஆனால், சில நேரங்களில் இந்தப் பாராட்டு எல்லைகளை மீறிவிடுகிறது. நாயகர்களின் குறைபாடுகள், தவறுகள் மறைக்கப்பட்டு, அல்லது கண்டுகொள்ளப்படாமல், அவர்கள் மனிதர்கள் என்ற உண்மையே மறக்கப்படும் அளவுக்கு போற்றப்படுகிறார்கள். கண்மூடித்தனமான பக்தி மேலோங்க, தங்கள் நாயகரின் செயல்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தாமல், அவரை கடவுளாக, தேவதூதராக, மீட்பராகக் கருதி சரணடைவதும், வெறித்தனத்துடன் பின்பற்றுவதும் ஆரோக்கியமானதல்ல.

மத நம்பிக்கைகளின்படி, புராணங்களில் போர்வீரர்களாகவும், புனித நூல்களில் தர்ம நாயகர்களாகவும் விவரிக்கப்பட்டவர்கள் தெய்வீக அவதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களில், வரலாற்றுத் தலைவர்கள் நாயகர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புகழப்பட்டுள்ளனர்.

தனது போர்வியூகங்களாலும், படைபலத்தாலும் எகிப்து, ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பல ஆசியப் பகுதிகளைத் தனது ஆளுகைக்குக் கீழ் கொணர்ந்து கிரேக்கப் பேரரசை உருவாக்கிய பேரரசர் அலெக்சாண்டர் “தெய்வத்தின் மகன்” என்று மக்களால் வணங்கப்பட்டார். ரோமப் பேரரசை உருவாக்கிய ஜூலியஸ் சீசர் “தெய்வமாக” கருதப்பட்டார். பிரான்சின் நெப்போலியன் போனபார்ட் சில தோல்விகளைச் சந்தித்தபோதும், மக்களிடையே அவர் மீதான பக்தி குறையவில்லை. நவீன காலத்தில், அடால்ஃப் ஹிட்லரை மீட்பராகக் கருதிய ஜெர்மானியர்கள், அவரை ‘எனது தலைவர்’ (“Mein Führer”) என்று வணங்கினர். சோவியத் ஒன்றியத்தில் ஜோசஃப் ஸ்டாலினின் உருவம் தெய்வமாகக் கருதப்பட்டது.

இந்தியாவில், நாயக வழிபாடு ஒரு உளவியல் அல்லது சமூக நிகழ்வு மட்டுமல்லாமல், புராணங்கள், மதம், வரலாறு மற்றும் சமூக-அரசியல் சூழல்களால் ஆழமாகப் பின்னப்பட்ட ஒரு கலாச்சார நடைமுறையாகும். ஆன்மிகத் தலைவர்கள் பலர் தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகின்றனர். அவர்களின் பக்தர்கள், அவர்களுக்கு அற்புத சக்திகளைப் புனைந்து வணங்குகின்றனர். சமூக நன்மைக்காகப் போராடிய மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற தலைவர்கள், வரலாற்றைக் கடந்து புராண அந்தஸ்து பெற்றவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்க்கைமுறை, பணிகள், போதனைகள் சமூகத்தில் அமைதி, ஊக்கம், நம்பிக்கை ஊட்டின. அவர்களின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு, ஆதர்ச நாயகர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

ரசனை அடிப்படையில், தன்னைக் கவரும் ஒருவரை வெவ்வேறு காரணங்களால் ஆதர்சமிகு நாயகராக ஏற்றுக்கொள்வது இயல்பு. மெச்சுதல் (admiration) என்பது ஒரு நபரின் சாதனைகள், குணங்கள், அல்லது விழுமியங்களை மரியாதையுடன் அங்கீகரிப்பதாகும். ஆனால், இது உணர்ச்சி ரீதியாக மிகைப்படுத்தப்படாமல், பகுத்தறிவு பார்வையைப் பராமரிக்கிறது. புனிதப்படுத்துதலும் வணங்குதலும் இங்கு தென்படுவதில்லை. மற்றொரு கோணத்தில், ஒருவரை முன்மாதிரியாக அல்லது முன்னோடியாக (Role Model) கொள்வது என்பது அந்நபரின் குறிப்பிட்ட குணங்கள், நடத்தைகள், அல்லது வெற்றிகளை, தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஒரு வழிகாட்டியாகப் பின்பற்றுவதாகும். இது முற்றிலும் செயல்பாட்டு மற்றும் இலக்கு அடிப்படையிலானது. இந்த மனவுணர்வு, உணர்ச்சி ரீதியான தீவிரத்தைவிட, நடைமுறை உத்வேகத்தை வலியுறுத்துகிறது.

ஆனால், நாயக வழிபாட்டாளர்கள் பெரும்பாலும் எந்தவிதத் தெளிவுமின்றி, ஒருவரை கண்மூடித்தனமாக, ஆய்வுக்கு அப்பாற்பட்டு, வெறும் கவர்ச்சியின் அடிப்படையில் நாயகனாக ஏற்று சரணடைகின்றனர். இந்த அறியாமை காலப்போக்கில் தீவிரமடைந்து, அவர்களைத் தங்கள் நாயகனை குறைகளற்ற தெய்வமாக உயர்த்தி, உன்மத்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இவர்கள், தங்கள் நாயகனைத் தரிசிக்கவும், எதிர்த்தரப்பு விமர்சனங்களிலிருந்து பாதுகாக்கவும், சுயசிந்தனை மங்கிட, ஆவேசம் மிகுந்து வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வகையான போலிப் போராளிகள், ஊடகங்களில் விதைக்கும் விஷவிதைகள், விருட்சமாக வளர்ந்து சமூகப் பிளவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ரசனை என்ற எல்லைகள் உடைத்தெறியப்படும்போது, தீவிரவாதம் தலைதூக்குகிறது. படித்தவர், பாமரர் என்ற பாகுபாடு இல்லாமல், வெறித்தனமான நாயக வழிபாட்டுக் கலாச்சாரம் பரவுவது ஆபத்தானது. ரசிகர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் சில நாயகர்கள், அவர்களைக் கட்டுப்படுத்தி, நல்வழிப்படுத்துகின்றனர்; சிலர், அந்தத் தீயைத் தூண்டிவிட்டு குளிர் காய்வது அவலம்.

இயல்பாகவே, மனிதர்களின் உளவியல் அடிப்படையில், ஞானம், வீரம், வசீகரம் போன்ற விழுமியங்களைப் போற்றும் பாங்கு உள்ளது. இந்த இயல்பின் ஒரு பகுதி, உத்வேகத்தையும் ஒற்றுமையையும் தரும் அதே வேளையில், கண்மூடித்தனமான பக்தியும் விமர்சனமின்மையும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில், புராணங்கள் முதல் நவீன சினிமா வரை, இது ஒரு ஆழமான கலாச்சார நடைமுறையாக உள்ளது. ஆனால், தனிமனிதர்களைத் தெய்வமாக உயர்த்துவது, சமூகப் பிளவு, வன்முறை, மற்றும் ஜனநாயக அச்சுறுத்தலை உண்டாக்கலாம். நாயகர்களை மனிதர்களாகவே பார்த்து, அவர்களின் செயல்களைப் பகுத்தறிவுடன் மதிப்பிடுவது, சமநிலையான, ஆரோக்கியமான சமூகத்தை வடிவமைக்க அவசியம்.

-ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad