\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நவராத்திரி

golu1-620-x-1096

பாட்டி கொடுத்த முப்பெரும் தேவி செட், போன முறை திருச்சி போனபோது  வாங்கின கிருஷ்ணர் உறியடி செட், மைசூர் சாலையில் அத்தை வாங்கித்  தந்த அஷ்டலக்ஷ்மி செட். இப்படி ஒவ்வொண்ணும் பரணிலிருந்து இறங்க ,இறங்க நவராத்திரி களை கட்டத்  தொடங்கிவிட்டது.  ஒவ்வொரு முறையும் காலிறுதித் தேர்வுக்கு இறுதியில் வரும் அந்தப் பத்து நாட்கள் நவராத்திரி விடுமுறை மறக்க முடியாத ஒன்று.

ஒரு ஓரமாக டப்பாக்கள் எல்லாம் அடுக்கி, இந்த முறை வித்தியாசமான முறையில் படி செய்ய முயற்சி செய்யும் அம்மா. ஸ்டூலில் ஏறி, மேலே இருந்து ஒவ்வொரு அட்டை பெட்டியையும் இறக்கியபடி அப்பா.

அந்தப் பழைய தசாவதாரம் செட்டில் கொஞ்சமாக மூக்கு பேந்து இருக்கு. கோந்து எடுத்துண்டு வா” ன்னு பாட்டி.

இந்த முறை நிறைய பீங்கான் பொம்மையெல்லாம் வெக்கணும்னு” சின்ன அண்ணா. .  

என்னோட கிரிக்கெட் செட் கட்டாயம் வைக்கணும்னு” பெரிய அண்ணா  

என்ன மாதிரி பார்க் செட் பண்ணலாம்னு” ஒரு பக்கம் ஆலோசனை நடந்து கொண்டே இருக்கும்.

எனக்கு இன்னிக்கு சனிக்கிழமை அரை நாள் பள்ளிக்குப் போகணும். நான் வந்த பிறகு தான் கொலுவை வைக்கணும்னு” அடம்பிடிக்கும் நான். இப்படி ஒவ்வொரு கொலுவும் மறக்க முடியாத ஒரு நினைவு.

சில முறை பள்ளியிலிருந்து நான் வரும் முன்பே அவர்கள் கொலு அடுக்கினாலும் எனக்காக ஓரிரு பொம்மைகளைத் தனியாக எடுத்து வைத்து, இதை “நீ எங்க வெக்கறியோ வைன்னு” சொல்றதுல வரும் சந்தோஷம் விவரிக்க முடியாதது.

ஒரு ஐந்து படியில்  ஏழு அதிசயங்களையும் பார்த்த திருப்தி கிடைக்கும் எனக்கு.

முதல் படியில் நடுவில் நோன்பு கலசம். பக்கத்தில் பிள்ளையார்பட்டியில் இருந்து வாங்கிய பிள்ளையார் ஜம்மென்று ஒரு பக்கம். மூன்று தலைமுறையாக கை மாற்றப்பட்டு, எள்ளு பாட்டியிடம் இருந்து வம்சா வழியாக இருக்கின்ற முப்பெரும் தேவியர் மறுபக்கம். இரண்டாம் படியில் , வள்ளி தெய்வயானையுடன் முருகரும் , ராமர் பட்டாபிஷேகமும், அஷ்டலக்ஷ்மி பொம்மைகளும்,

மூன்றாம் படியில் தசாவதார பொம்மைகள், கார்த்திகை பெண்கள், உறியடி பொம்மை,  மரப்பாச்சி பொம்மை  – நான்காவது படியில் செட்டியார் கடையும், காந்தி, புத்தர் , மீசை முறுக்கிய பாரதி, கடைசி படியில் பீங்கான் பொம்மைகள் என கொள்ளை அழகாக சீரியல் விளக்குகளோடு கொலு ..

செய்யும் சுண்டல்கள் அலுக்காமல் ஒவ்வொரு நாளும் ஒன்றாக, புட்டு, பொட்டுக்கடலை லட்டு, பாயசம் என சரிக்குச் சரியாக நாக்கில் சுவை கூட்ட, ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக பாவாடை, நெத்தி சுட்டி, ஒட்டியாணம், கொலுசு , என அலங்காரம் பண்ணிக் கொண்டு, தெரிந்தவர்கள் வீட்டில் கூப்பிட்டு குங்குமம் வாங்கி கொள்ள நான் ஏதோ பெரிய மனுஷி போல கிளம்புவது இன்னும் மனதில் நிற்கும் பசுமை.

பத்து நாட்களும் தினம் ஒரு மணி நேரமாவது அங்கேயே கால் மடித்து உட்கார்ந்து அழகு பார்த்த நேரங்கள் கூட மறக்காது. ஒரு வருடக்  கதைகளையும் அந்தப் பத்து நாட்களில் எல்லா பொம்மைகளிடமும் சொல்லி விடுவேன். ஏதோ அந்த பொம்மைகள் ஒன்றோடு ஒன்று கலந்து உறவாடி மகிழ்வது போலத் தோன்றும். அவர்கள் எல்லோருக்கும் உணவு கொடுத்து சிறு குழந்தை போலப் பார்த்துக் கொள்ளத் தோன்றும்.

ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமாக நேர்த்தியான அலங்காரத்தோடு பல தினுசான கொலு பார்க்க செல்வதுண்டு. தினம் ஒருத்தருக்காவது வெற்றிலை பாக்கு கொடுக்கணும்னு, நான் எங்கள் வீட்டுப் பிரதிநிதியாக பக்கத்து வீடுகளுக்கு செல்வதும், அவர்கள் வீட்டு சின்ன வாண்டு எங்கள் வீட்டிற்கு வருவதும் வேடிக்கையாக இருக்கும்.

ஒரே “தேவி நீ துணை ” பாட்டை ஒரு நாள் முழுவதும் வேறு வேறு வீடுகளில் பாடி சுண்டல் வாங்கி வருவேன். அவர்கள் “என்ன அழகா பாடறண்ணு “ சொன்னா  பெரிய க்ராமி வாங்கிய மகிழ்ச்சி பொங்கும்.

golu2-620-x-282

பத்து நாட்கள் பறந்து தான் போகும். கொலு முடியும் நாளன்று கலைத்து மூட்டை கட்டும் பொழுது அழுவது கூட உண்டு.

காலங்கள் மாறினாலும் மனதும், சில சிறு சந்தோஷங்களும் மாறாது. உலகத்தின் ஒரு கோடிக்கு மாறி வந்தாலும், இங்கும் கொலு!! . ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக மைக்கேல்ஸ் கடையில் பார்த்து வாங்கிய பொம்மைகளையும், miniature செட்டுகளையும், அவ்வப்போது ஊருக்குச் செல்லும் பொழுது  எல்லாம் வாங்கிய பேப்பர் மாசே செட்டையும் , கார்ப்பெட்டில் முடிந்த அளவு கட்டி அழகு பார்க்கும் பார்க்கையும், இங்கேயே கிடைக்கும் பீங்கான் பொம்மையும், ஸ்கல்பி களிமண்ணில் உருவாக்கிய சிறு சிறு பொம்மைகள் கொண்டு கொலு வைக்கிறேன். ஏதோ காலில் இறக்கை கட்டி கொண்டு பறந்தாலும், விட முடியாத, விட விரும்பாத ஒரு அழகிய சம்ப்ரதாயம் கொலு. இன்றும் என் குட்டிப் பெண் அந்தப்  பத்து நாட்கள் கொலுவின் முன் அமர்ந்து அந்த பொம்மைகளுடன் பேசும் பொழுது புரியும் ஒரு உணர்வு.

மீண்டும் இந்த வருடப் பத்து நாட்களை எதிர் நோக்கி ஒரு நவராத்திரி வைபவம்..

– லட்சுமி     

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. ராஜேஷ் பிள்ளை says:

    இதுவெல்லாம் போக எல்லா நண்பர்களையும் வீட்டுக்கு கூப்பிட்டு இந்த அலங்காரங்களை காட்டாவிட்டால் ‘கொலு’ நிறைவுபெறாதே தோழமையே . 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad