\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2016 – டாப் டென் பாடல்கள்

பாடல்கள் பல தரப்புச் சமூகங்களிடம் எப்படி ஒருமித்த ரசனையை ஏற்படுத்துகிறதோ, அதுபோல் அவை ஒவ்வொருவருக்குமான தனி ரகசிய மொழியும் அழகும் கொண்டிருப்பவை. ஒருவர் கேட்டு ரசித்திராத ஒரு பாடல், இன்னொருவருக்கு மிகவும் நெருக்கமான உணர்வைக் கொடுக்கும்.

இங்கு உள்ளவை, எனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு, ரசனையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பத்துப் பாடல்கள். பிடித்த பாடல், நல்ல பாடல் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். அதனால், ஒரு சில விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறேன். எண்ணிக்கை, பத்து மட்டுமே. ஒரு படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே. மற்றபடி, வேறு எந்தக் கோட்டாவும் இல்லை. எந்த வரிசைக்கிரமமும் இல்லை.

உங்களுக்குப் பிடித்த ஏதேனுமொரு பாடல், இதில் இல்லையென்றால் மன்னிக்கவும். கீழே, கமெண்ட் பகுதியில் நீங்களும் பட்டியலிடுங்கள். நல்ல பாடல்களை, மற்றவரும் தெரிந்துக் கொள்ளலாம், அல்லவா?

ரஜினி முருகன் – உன் மேல ஒரு கண்ணு

இந்தாண்டு மட்டும் பத்துப் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் இமான். அவர் வேலையைச் சரியாகச் செய்தும், காலை வாரிய படங்கள் ஏராளம். ரஜினி முருகன், ஆல்பமாக, படமாக வெற்றியைக் கொடுத்த படம். உறவினரிடையே நடக்கும் சிறு நகரத்து வீட்டு விசேஷத்தின் பின்னணியில் அமைந்த காதல் பாடல். இமானின் ஆஸ்தான கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல். சிவகார்த்திக்கேயனும், கீர்த்திச் சுரேஷும் இப்பாடலில் ஆங்காங்கே கொடுத்திருக்கும் எக்ஸ்ப்ரேஷனால், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைக் கொடுக்காத பாடல்.

“சொல்லாம கொள்ளாம மூடி வச்சு

என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட

அள்ளாம கிள்ளாம நோக வச்சு என்ன

முன்னாலும் பின்னாலும் முணங்க விட்ட”

சேதுபதி – கொஞ்சி பேசிட வேணாம்

சேதுபதி படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், மணமான, குழந்தைகள் உடைய தம்பதிகளிடையே இருக்கும் மெல்லிய ஊடல் கலந்த காதலை, பிரிவைச் சொல்லிய பாடல். பாடலுக்கு இசையமைத்தவர், நிவாஸ் கே. பிரசன்னா. பாடியவர்கள், சித்ராவும், ஸ்ரீராம் பார்த்தசாரதியும். மறைந்த கவிஞர் .முத்துக்குமார் எழுதிய பாடல் இது. கேட்க மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் காணவும் நன்றாக இருக்கும் பாடல்.

“தனிமை உன்னைச் சுடுதா

நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களில் எல்லாம்

கூந்தல் மணம் வருதா ?”

கபாலி – மாய நதி

ரஜினி படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசை என்றதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. முதலில் வெளிவந்த ‘நெருப்புடா’, அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் அதிகம் கூட்ட உதவியது. ஆனால், படத்தில் இருந்த மற்ற பாடல்களால் ரஜினி ரசிகர்களை, அந்த அளவுக்குக் கவர்ந்திழுக்க முடியவில்லை என்றே சொல்லலாம். பொதுவான இசை ரசிகர்களுக்கு ‘மாயநதி’ பிடித்த மெலடியானது. ரஜினி என்பதற்காகத் தனது பாணியை மாற்றாமல், அவரது ஸ்டைலிலேயே இசையமைத்தது, சந்தோஷிற்குப் பாராட்டையும், கூடவே கொஞ்சம் திட்டையும் கொடுத்தது.

“ஆயிரம் கோடி முறை நான் தினம் இருந்தேன்

நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்”

ஒருநாள் கூத்து – அடியே அழகே

‘ஒருநாள் கூத்து’ப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், படத்தைப் போலவே ஆரவாரமில்லாமல் மனதைக் கவர்ந்தது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில், விவேக் எழுதிய பாடல் வரிகளைப் பாடியவர்கள், ஷான் ரோல்டனும், பத்மலதாவும். காதலர்களிடையே இருக்கும் தயக்கம், குழப்பம், கோபம், வலி போன்றவற்றை அழகாகப் பதிவு செய்தப் பாடல்.

“போனாப் போறா தானா வருவா மெதப்புல திரிஞ்சேன்

வீராப்பெல்லாம் வீணாப்போச்சு பொசுக்குனு ஒடஞ்சேன்”

இறுதி சுற்று – ஏய், சண்டக்காரா

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த சுதா அவர்கள் இயக்கி தமிழிலும், இந்தியிலும் வெளியாகிய ‘இறுதி சுற்று’ப் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலின் வரிகள், ரொம்பவும் எளிமையானது. அது போலவே, இசையும் பாடிய குரலும். ஆனாலும், ஒரு எளிய பெண்ணின் காதலுக்குப் பொருத்தமாக அமைந்தது. சந்தோஷ் நாராயணனால் ஒரு படத்தின் வண்ணத்தை மாற்ற முடிகிறது. ஆயிரம் முறை பார்த்த சிச்சுவேஷனுக்கும், தனது தனித்துவ இசையால் புதுமையைப் புகுத்த முடிகிறது. இன்னொரு எளிய ட்யூனான ‘வா மச்சான்’ பாடலும், இப்படத்தில் வெகுஜன ஹிட் ஆனது.

“சிறு ஓடையில் ஒரு ஓரமா

மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா

உனைப் பாத்ததும் வழியோரமா

உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா”

தெறி – ராங்கு

நடிக்கச் சென்ற பிறகு, ஜி.வி. பிரகாஷ் முத்திரை பதித்த பாடல்கள் என்று சொல்லுவதற்கு அதிகம் இல்லாமல் போனது. இந்த வருடத்தில் அவருடைய பெரிய ஹிட் என்றால் தெறி தான். அதற்கு அவரை மட்டும் காரணம் சொல்ல முடியாது. பாடலாசிரியர், பாடகர் தவிர்த்து, இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், நடிகர்கள், நடன ஆசிரியர் என்று பலரது கைவண்ணத்தில் இப்படப் பாடல்கள் வெற்றியடைந்தன. இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் என்றாலும், என்னைக் கவர்ந்தவை ஈனா மீனா டீகாவும், ராங்கு பாடலும் தான். லிஸ்டில் ஒரு குத்துப்பாட்டிற்கு இடம் கொடுக்கலாம் என்று நம்ம தல டி.ராஜேந்தர் பாடிய ‘ராங்கு’ பாடலைச் சேர்த்திருக்கிறேன். மனிதர் பேசினாலும், பாடினாலும் கலகலப்பிற்குப் பஞ்சமிருக்காது.

“கண்ண குழி

பொண்ணு நான்தானே.

பல்லாங்குழி

ஆடு நீதானே”

பிச்சைக்காரன் – நெஞ்சோரத்தில்

ஒரு துறையில் நன்றாகப் பேரெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவர், ஏதோ ஒரு காரணத்தால் இன்னொரு துறைக்கு மாறிச் சென்றால், பெரும்பாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சும். விஜய் ஆண்டனி விதிவிலக்கு. தனக்கேற்ற நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இசையிலும் குறை வைப்பதில்லை. ஒரே குறை, இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டது தான். இந்த வருடம் அவர் கொடுத்த ஹிட் படமான பிச்சைக்காரனில் சுப்பிரியா பாடிய “நெஞ்சோரத்தில்”, இசையமைப்பாளராக அவர் வெற்றிக் கொண்ட பாடல். ஆனால், இதை விடத் தயாரிப்பாளராக அவர் பெற்ற வெற்றியே பெரிது. இப்பாடலை எழுதிய கவிஞர் அண்ணாமலை இந்தாண்டு மறைந்தது, விஜய் ஆண்டனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் இழப்பு.

“உன் கைகள் தொட்ட இடம் பார்த்து

நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்

சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்

உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் “

தர்மதுரை – மக்கா கலங்குதப்பா

யுவன், “ரீ என்டரி’ன்னு சொல்லாதீங்க, நான் இங்க தான் இருக்கேன்” என்று சொன்னாலும், உண்மையில் இந்தாண்டு வெளிவந்த தர்மதுரையை அவரது ரீ-என்ட்ரியாகக் கருதலாம். இந்தத் தலைமுறை இசையமைப்பாளர்களிலே கிராமத்து இசையை, அதன் அசல் தன்மையின் நெருக்கத்துடன் ரசிக்கும் படி தருவது யுவன் தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும். “மக்கா கலங்குதப்பா” அதற்கு நல்ல ஒரு உதாரணம். வைரமுத்து எழுதி, மதுரையைச் சேர்ந்த கும்மிப்பாட்டுக் கலைஞர் மதிச்சியம் பாலா பாடிய இப்பாடல், இந்த வருடம் பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்தின் மற்ற பாடல்களும் சிறப்பாகவே வந்திருந்தன.

ரெமோ – தமிழ்செல்வி

இந்த வருடம் அனிருத்திற்குச் சுமாரான வருடம் தான். பெரிய ஹிட் ஆல்பம் என்று எதையும் சொல்ல முடியாது. ரெமோ தான் அவருக்கு ஆறுதலாக அமைந்த படம். இந்தப் பாடலின் படமாக்கம், பாடலிற்குப் பலமாக அமைந்தது என்று சொல்லலாம். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ராஜு சுந்தரம் நடனம் என்று சீனியர்ஸ் பங்களிப்பு, பாடலின் தரத்தை மேலும் உயர்த்தியது. சிவகார்த்திக்கேயன் – கீர்த்திச் சுரேஷ் ஜோடிக்கு இது வருடத்தின் இரண்டாவது ஹிட்.

“ஒரு வாட்டி நீ சொல்லிப் பாரு

உசுர உனக்கே எழுதி தரேன்

மடங்காத நீயும் அடங்காத நானும்

மனசோடு மனசு சிங் ஆனா போதும்”

அச்சம் என்பது மடமையடா – அவளும் நானும்

பாரதிதாசன் பாடல்கள் இசை நயம் கூடியது என்று சொல்லுவார்கள். இந்தப் பாடலைக் கேட்டால், அது புரியும். எத்தனை வருடங்கள் ஆனாலும், அதில் இருக்கும் நவீனம் தெரியும். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, விஜய் ஜேசுதாஸ் பாடிய இப்பாடல், மெல்லிய மெலடி என்றால், சித் ஸ்ரீராமின் ‘தள்ளிப் போகாதே’ ஒரு அதிரடி மெலடி . அது என்ன டைப் என்கிறீர்களா? அது தான் ரஹ்மான்.

“நானும் அவளும்.. உயிரும் உடம்பும்

நரம்பும் யாழும்.. பூவும் மணமும்”

இவை தவிர, உன்னைப் பார்த்தா போதும் (அழகு குட்டி செல்லம்), அழகே நீ அசைந்தால் (கதகளி), குச்சி மிட்டாய் (அரண்மனை 2), அவள் குழல் (மனிதன்), அடடா (தொடரி), சல்மார் (தேவி), கண்ண காட்டு போதும், கண்ணம்மா (றெக்க), இளந்தாரி (மாவீரன் கிட்டு), மெய் நிகர, நான் உன் (24), நீ கிடைத்தாய், சொப்பனச் சுந்தரி (சென்னை 600028 – 2) போன்ற பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த வரு,டம் வந்த பாடல்களைக் கவனித்துப் பாருங்கள். நிறைய இளம் இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை அளித்திருக்கிறார்கள். பரவலாகத் திறமை, திறமைக்கேற்ற வாய்ப்பு, கிடைத்த வாய்ப்பில் முத்திரை என ஆரோக்கியமான சூழல் 2016ல் இருந்திருக்கிறது. இது போல், இளம் கலைஞர்களும், மூத்த கலைஞர்களும், தொடர்ந்து நம் தமிழ் திரையிசை ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் சூழலே, நமது அடுத்தடுத்த ஆண்டுக்களுக்கான எதிர்பார்ப்பு.

சரவணகுமரன்

 

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. யோகேந்திரன் says:

    நல்ல தெரிவுகள், தொடர்ந்து மாதா மாதம் போடுங்கள் சரவணகுமரன்

  2. Arul says:

    Avalum nanum no:1 by the way where is Rasaali ?

  3. Archana says:

    Sethupathi,dharmadhurai,pichaikaran,theri,Oru naal koothu doesn\\’t seem to be top numbers of this year. Could have been rated by popular songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad