\n"; } ?>
Top Ad
banner ad

ஒரு உன்னதமான குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு மறைந்து வருகிறது

ஒரு காலத்தில் தெருக்களில் சைக்கிள்களில் குழந்தைகள் நிறைந்திருந்தார்கள். இப்போது இல்லை.

சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அமைதியான இந்திய இலங்கை கனேடிய அமெரிக்கத் தெருக்களில் நடந்து சென்றால், அருமையான ஒரு காட்சியை நீங்கள் காண்பீர்கள்: எஃகு போன்ற உறுதியுடன், எந்தப் பாதுகாப்புத் தலைக்கவசமும் இல்லாமல், சைக்கிளில் வாகனம் ஓட்டிச் செல்லும் பள்ளி வயதுக் குழந்தைகள் கூட்டம்.

இன்று நீங்கள் அந்த மாதிரியான காட்சியைப் பார்ப்பது குறைவு. 1990களில்,அமெரிக்காவில்  7 முதல் 17 வயது வரையிலான சராசரியாக 20.5 மில்லியன் குழந்தைகள் வருடத்திற்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சைக்கிளில் பயணம் செய்ததாக, விளையாட்டு உபகரண வர்த்தகக் குழுவான தேசிய விளையாட்டுப் பொருட்கள் சங்கத்தின் (The National Sporting Goods Association) தரவுகள் தெரிவிக்கின்றன. சில தசாப்தங்களுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை, கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து , 2023 ஆம் ஆண்டில் சுமார் 10.9 மில்லியனாகத் தேய்ந்துவிட்டது. அந்தக் குழந்தைகளில், சங்கத்தின் கூற்றுப்படி, 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தங்கள் சைக்கிளை “அடிக்கடி” ஓட்டினர்.

இந்த சரிவால், குழந்தைகள், எளிய, சாத்தியமான போக்குவரத்து முறையை அதிகமாக இழக்கின்றனர். பலவகை உடற்பயிற்சிகளோடு ஒப்பிட முடியாத வகையில் சைக்கிள் ஓட்டுதல் குழந்தைகளின் சுதந்திரத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. இது அவர்களை விரும்பிய இடங்களுக்குச் செல்லவும், உடல் வலிமையை வளர்க்கவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும். மேலும் ஒருங்கிணைப்பு, மற்றும் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. பல வகையான உடற்தகுதிகளைப் போலவே, இது குழந்தைகளின் எதிர்கால இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும். குழு விளையாட்டு போன்ற குழந்தைகள் உடற்பயிற்சி செய்யும் பிற வழிகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் மலிவு விலையில் உள்ளது (குறிப்பாக நீங்கள் பயன்படுத்திய பைக்கை வாங்கினால் மேலும் சிக்கனமானது). மிக முக்கியமாக குழந்தைகள் நன்கு பயிற்சி பெற்றவுடன் வெளியே செல்ல பெரியவர்களின் உதவி தேவையில்லை.

தங்கள் குழந்தைகள் தனியாகப் பயணம் செய்கிறார்கள் என்ற எண்ணம் சில பெற்றோர்களைக் கைகளை பிசைய வைக்கக்கூடும், அது ஒரு நியாயமான பயம். சைக்கிள் ஓட்டுதல் ஆபத்தானதாக இருக்கலாம், மேலும் நகரத்திலோ அல்லது புறநகர்ப் பகுதிகளிலோ பயிற்சி செய்ய பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால், தங்கள் குழந்தைகள் தாங்களாகவே நம்பிக்கையுடன் தெருக்களில் செல்லக் கற்றுக்கொடுக்க பெற்றோர்களால் பாதுகாப்பான சூழல்களைக் கண்டுபிடிக்க முடிந்தால், அந்தக் குழந்தைகள் பெறும் சுதந்திரம் விலைமதிப்பற்றது. ஒரு பைக்கில், ஒரு குழந்தை பெற்றோரிடம் கேட்காமல் எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்வது என்பதைத் தேர்வுசெய்ய முடிகிறது, இது முடிவு எடுப்பதைப் பயிற்சி செய்ய அவர்களுக்கு உதவுகிறது . அவர்கள் அதிகமாக சவாரி செய்யும்போது, இந்தச் செயல்பாடு அவர்களின் மூளையை மீண்டும் இணைக்கத் தொடங்கும், இது அவர்களின் சுற்றுப்புறத்தின் இடஞ்சார்ந்த வரைபடங்களை புரிந்துகொள்ளவும், சமூகத்தை அறிந்து கொள்ளவும் உதவும்.

குழந்தைகள் இரு சக்கரங்களில் சுற்றித் திரியத் தொடங்கும்போது அவர்கள் மட்டும் பயனடைவதில்லை. குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போது – அல்லது வெளியே செல்லும்போது – முழு சுற்றுப்புறத்தையும் மாற்ற முடியும். குழந்தைகள் திறந்த வெளியில் விளையாடும்போது, அவர்கள் சைக்கிள் ஓட்டுவது, பந்தாடுவது, ஓடிப் பிடித்து விளையாடுவது என எதுவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் அண்டை வீட்டாருடன் அதிக தொடர்பை உணர்கிறார்கள் , மேலும் பலர் பாதுகாப்பாக உணரத் தொடங்குகிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

மாறாக, குழந்தைகள் அதிகம் வெளியே செல்லாதபோது, சுற்றுப்புறங்கள் மற்றும் சமூக உறவுகளை இழக்க நேரிடும். இந்தப் போக்குக்கு பலர் ஸ்மார்ட்போன்களைக் குறை கூறுகிறார்கள். ஆனால், இலாப நோக்கற்ற இளைஞர்-சைக்கிள் ஓட்டும் அமைப்பான (Youth-cycling organization) ஆராய்ச்சித் தலைவரான எஸ்தர் வாக்கர் “ஒரு மாணவர் தங்கள் தொலைபேசியில் இருக்க விரும்புவதாகச் சொல்வதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. குழந்தைகள் சைக்கிள் ஓட்ட விரும்புகிறார்கள் என்று தேசிய பள்ளிக்கான பாதுகாப்பான வழிகளுக்கான அரசாங்க நிதியுதவி திட்டத்தின் (National Safe Routes to School Government-funded program) இயக்குனர் நான்சி புல்லன்-சூஃபர்ட் என்னிடம் கூறினார் – ஆனால் பல தெருக்களில் உள்ள நிலைமைகள் அந்த நம்பிக்கையைத் தூண்டுவதில்லை. சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பினாலும், பலர் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள போக்குவரத்து சவாரி மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது அல்லது அவர்களின் பெற்றோர்கள் தங்களை வெளியே செல்ல விடமாட்டார்கள் என்றும் கருதுகிறார்கள்” என்று சொல்கிறார்.

குழந்தைகள் சைக்கிள் ஓட்டுதல்

பல இடங்களில், போக்குவரத்து சவால்கள் குழந்தைகள் சைக்கிளில் செல்வதற்கு சிக்கலாக அமைந்துவிடுகிறது. அமெரிக்க சாலைகள் வேகமாகவும் பரபரப்பாகவும் மாறிவிட்டன. 1990 களில் இருந்து, வேக வரம்புகள் அதிகரித்து வருகின்றன . ஒவ்வொரு ஆண்டும் சாலைகளில் கார்களும், ஓட்டுனர்களும் அதிகரித்து வருகிறார்கள். லாப நோக்கற்ற நெடுஞ்சாலை பாதுகாப்பு நிறுவனத்தின் 2023 அறிக்கையின்படி , “கடந்த 30 ஆண்டுகளில், சராசரி அமெரிக்க பயணிகள் வாகனம் சுமார் 4 அங்குல அகலம், 10 அங்குல நீளம், 8 அங்குல உயரம் மற்றும் 1,000 பவுண்டுகள் எடை அதிகரித்துள்ளது.” இந்த இயந்திரங்கள் ஓட்டுநர்களையும் பயணிகளையும் பாதுகாக்கலாம் , ஆனால் அவை சைக்கிளில் செல்வோருக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கலாம். இருசக்கர வாகன விபத்துகளில் கொல்லப்படும் குழந்தைகளின் வருடாந்திர எண்ணிக்கை உண்மையில் குறைந்துள்ளது என்று 2021 CDC அறிக்கை கண்டறிந்துள்ளது. ஆனால் இஎஉசக்கர வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை, குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருவதையும் புறந்தள்ளிவிட முடியாது. சைக்கிளில் செல்வோருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. சராசரியான செடான் காரை விட, SUV கார் விபத்தில் சிக்கும் ஒரு குழந்தை எட்டு மடங்கு அதிகமான பாதிப்புகளை எதிர்கொள்கிறது. இந்த காரணத்தினாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சைக்கிளில் பிரதான சாலைகளில் செல்வதை அனுமதிப்பதில்லை. 

அந்தக் காலங்களில், இவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியமிருந்ததில்லை. இப்போது இருப்பதைப் போல பாதுகாப்பு வசதிகள், நடைபாதைகள், சாலை போக்குவரத்து சிக்னல்கள் இல்லாதபோதும், அப்போதெல்லாம் இவ்வளவு வாகனங்களும், பரபரப்பும் இருந்ததில்லை. நகரப் பொதுத் திட்டமிடல் கார்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியபோதுதான், குழந்தைகள் விளையாடுவதற்கான பகுதிகள், தங்கள் போக்குவரத்துக்கான வசதிகளை இழந்தார்கள். பள்ளிக்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்லும் K–8 மாணவர்களின் பங்கு 1969 இல் 48 சதவீதத்திலிருந்து 2009 இல் வெறும் 13 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வேகக் கட்டுப்பாடுகள், அனைத்து பிரதான சாலைகளிலும் சைக்கிளுக்கென ஒதுக்கப்பட்ட தனிப் பாதைகள், அமைதியான சந்திப்புகள் என மிதிவண்டிக்கு ஏற்ற உள்கட்டமைப்பைச் சேர்ப்பதன் மூலம், உள்ளூர் அரசாங்கங்கள் குழந்தைகளையும் பிற குடிவாசிகளையும் மீண்டும் சவாரி செய்ய ஊக்குவிக்கலாம் . இதற்கிடையில், மற்ற ஓட்டுநர்களுடன் சாலையைப் பகிர்ந்து கொள்வது எப்படி என்பதை குழந்தைகளுக்குக் கற்பிப்பது அவசியம். பயிற்சிக்கு போதுமான பாதுகாப்பான இடங்களைக் கண்டுபிடிப்பது சில நகரங்களில் கடினமாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் படைப்பாற்றல் இருந்தால், பெற்றோர்கள் முட்டுச்சந்துகள், கார்களுக்கு மூடப்பட்ட தெருக்கள், பயன்படுத்தப்படாத வாகன நிறுத்துமிடங்கள் அல்லது நடைபாதை பாதைகள் கொண்ட பூங்காக்களைக் கண்டுபிடித்து, தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக சைக்கிள் ஓட்ட பழகலாம்.

சிறுவர்களும், இளைஞர்களும் எல்லாவற்றுக்கும் பெற்றோரைச் சார்ந்திராமல், அதிகச் செலவில்லாமல்  சுதந்திரத்தோடு அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல, சைக்கிள் சவாரி அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். சமூகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியிடங்களுக்குச் சென்று வரவும், சுதந்திரமாகச் செயல்படவும் உதவ முடியும்.

  • யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad