முத்துகள் மூன்று
முத்துகள் மூன்று
அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு.
குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள்.
மெய்யாலுமா?
இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER Bhopal) 12வது பட்டமளிப்பு விழாவில் பேசுகையில், “உலகம் அறியாமையின் இருளில் மூழ்கியிருந்தபோது, இந்தியா அறிவொளி தீபத்தை ஏற்றியது. நமது அறிவியலும், தொழில்நுட்பமும் மிக உயர்ந்த நிலையில் இருந்தன. ரைட் சகோதரர்கள் இல்லாத காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்தது. அக்னி அஸ்திரம், வருண அஸ்திரம், பிரம்மாஸ்திரம் போன்ற ஆயுதங்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். மகாபாரதத்தில் இவை பயன்படுத்தப்பட்டன. இந்த ஆயுதங்கள் இலக்கைத் தாக்கிய பிறகு, மீண்டும் அதன் உறையிடத்திற்கே திரும்பி வரும் தன்மை கொண்டவை. இன்று ஏவுகணைகளும், ட்ரோன்களும் ஏவப்படும் நிலையில், நமது நாடு இதை எல்லாம் நீண்ட காலத்திற்கு முன்பே சாதித்திருக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.
நீங்க அமெரிக்கால இருக்க வேண்டியவருண்ணே!
இந்திய தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாச்சலப் பிரதேசத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் கலந்துக் கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர் விண்வெளியில் பயணம் செய்த முதல் நபர் யார் என்று மாணவர்களிடையே கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று சத்தமாக பதில் அளித்தனர். அந்தப் பதிலைக் கேட்ட பாஜக எம்பி அனுராக் தாக்கூர் சிரித்தார். தொடர்ந்து பேசிய அனுராக் தாகூர், “விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன்ஜி தான் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
“பிரிட்டிஷ்காரர்கள் நமக்கு என்ன கற்பித்தார்களோ, அதே கண்ணோட்டத்தில் தான் நாம் இன்னும் நம்மை பார்த்துகொண்டிருக்கிறோம். நம்முடைய ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியம், அறிவு, கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் வரை, ஒன்றும் மாறப்போவதில்லை. அதனால், நான் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட அனைவரும் பாடப்புத்தகத்தைத் தாண்டி, நமது தேசியப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். அதைச் செய்தால், நம் தேசத்தைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்” என்றும் பேசியுள்ளார்.
கூடவே சுத்துறியே செவ்வாழ, நீயாவது புத்தி சொல்லக்கூடாதாடா?
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு அளித்திருக்கும் நேர்காணல் ஒன்றில், “அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க செலவிடும் அதே வேளையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம், ரஷ்யாவுக்கு நிதி ஆதரவு அளிக்கிறது. இந்தியாவுடன் அமெரிக்கா 50 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. அவர்கள் (இந்தியா) ரஷ்ய எண்ணெயை வாங்க நமது டாலர்களைப் பயன்படுத்துகிறார்கள் – அவர்கள் (ரஷ்யா) கொலைகளைச் செய்கிறார்கள்; உக்ரேனியர்கள் இறக்கிறார்கள். அதனால் தான் இதை ‘மோடியின் போர்’ என்கிறேன். ஏனென்றால் அமைதிக்கான பாதை ஓரளவுக்கு புது தில்லி வழியாகச் செல்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியர்கள் இவ்வளவு ஆணவமாக நடந்துகொள்வதுதான் எனக்கு கவலையளிக்கிறது. ‘நாங்கள் அதிக வரிகளை விதிப்பதில்லை’ என்கிறார்கள். ‘நாங்கள் விரும்புபவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம்’ என்கிறார்கள். இந்தியா, நீங்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், சரியா? அப்படியென்றால், ஒரு ஜனநாயக நாடு போல் நடந்துகொள்ளுங்கள்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
- வோல்டெய்ர்