\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பக்குவக் காதல்

சூரியன் மெதுவாக மேற்கில் சாயும் மாலை நேரம். நாள் முழுவதும் சற்று மழை மேகமாகவே இருந்த தினமாதலால், அந்தச் சாயுங்கால நேரத்தில் சற்றே சில்லென்றிருந்தது. அந்தக் கிராமத்தில் ”சீமைக்காரர் வீடு” என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் மிகவும் அழகான வீடு. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது ஓய்வுக் காலத்தில் அந்தக் கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பெயர். அவ்வளவு பெரிய பங்களா என்று சொல்ல முடியாதெனினும், நான்கு அறைகளுடன் நகரத்திலிருக்கும் அத்தனை வசதிகளும் பொருந்திய, ஆடம்பரம் அதிகமில்லாத, நேர்த்தியான ஒரு இல்லம் அது. வீடு இருந்த காம்பவுண்ட் நிலமே விஸ்தீரணமான ஒன்று; நான்கைந்து தென்னை மரங்களும், இரண்டு பெரிய மாமரங்களும் வீட்டைச் சுற்றி நின்று, வீட்டிற்கு நிழலும் வெயில் காலத்தில் தண்மையும் கொடுத்துக் கொண்டிருந்தன. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஆறு ஏக்கருக்கு மேலான நிலம் விவசாய நிலமாகப் பச்சைப் பசேலென்று ரம்யமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

இந்தச் சொத்துக்கள் அனைத்துக்கும் சொந்தக்காரரான கணேஷ், வீட்டின் பின்புறக் கொல்லையில், மாமரத்தின் அடியில் ஒரு ஈஸிச் சேரில் அமர்ந்து அன்றைய ஆங்கில தினசரியை ஒரு எழுத்து விடாமல் படித்துக் கொண்டிருந்தார். அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய காஃபி டேபிளில் அவரின் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் வாட்டர் பாட்டில். மாமரத்தில் அமர்ந்திருந்த குருவிகளின் க்ரீச் சத்தமும், அங்கங்கு பறந்தலைந்து கொண்டிருந்த தும்பிகளின் ரீங்காரமும், வயல் காட்டில் வேலை முடிந்து அம்மா இன்னும் வரவில்லையென வரப்போரம் அமர்ந்து அழும் சிறுமியின் அழுகுரலும் அவரின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. இது போன்ற இயற்கைச் சூழலில் கடைசி காலம் கழிய வேண்டுமென்பதே அவரின் பல காலத்தைய ஆசை. கடந்த ஜனவரி நான்காம் தேதிதான் வயது எழுபத்தி ஒன்பது முடிந்து எண்பதைத் தொட்டிருந்தது…..

இயற்கைச் சூழலில் இயற்கைச் சத்தங்களின் மத்தியில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவருக்கு, காஃபி டேபிளிலிருந்த ஸ்மார்ட் ஃபோனின் செயற்கையான ஒலி புதிதாக மெஸேஜ் ஒன்று வந்திருப்பதை அறிவித்தது. அனிச்சையாக ஃபோனை எடுத்து மெஸேஜ் அனுப்பியவர் யாரென்று பார்க்க, குளிர்ந்த புன்னகையுடன் காணப்பட்டது பாரதியின் முகம். கணேஷின் மகள், நினைத்த மாத்திரத்தில் அவரின் நெஞ்சைப் பஞ்சாக்கும் தளிர். அமெரிக்காவில் கணவன் குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்ட நாற்பத்தி ஐந்து வயதுப் பெண்மணி.

மகளிடமிருந்து வந்திருக்கிறது என்பதால் உடனே ஒப்பன் செய்து பார்க்கிறார் கணேஷ்… ஒரு ஆடியோ ஃபைல் இணைக்கப்பட்டுள்ளது.. ஆடியோவைக் க்ளிக் செய்ய, அது

சோலை மலர் ஒளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கடல் அலையே – உனது
நெஞ்சின் அலைகளடி !
கோலக் குயிலோசை – உனது
குரல் இனிமையடீ !
வாலைக் குமரயடீ – கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

சுந்தரக் குரலில் பாரதியின் பாடல் முடிந்ததும், “அப்பா, டோண்ட் ஃபர்கெட் டு விஷ் அம்மா வேலண்டைன்ஸ் டே, லவ் யூ” என்ற செய்தியுடன் முடித்திருந்தாள் மகள் பாரதி.

மெலிதாகச் சிரித்துக் கொண்டே, மூக்குக் கண்ணாடியைக் கழட்டி டேபிளில் வைத்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டு ஈஸிச் சேரில் சாய்கிறார் கணேஷ். திரைப்படத்தில் வருவது போல் மனத் திரையில் ஃப்ளாஷ் பேக்.

ரு வேலண்டைன்ஸ் டே அன்று சென்னை மெரினா பீச்சிலிருந்து கிளம்பி ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தில் தன் காதலை வெளிப்படுத்தி, அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு கை பிடித்து அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தனர் கணேஷும், லக்‌ஷ்மியும். காதல் திருமணம் என்றாலும், திருமணத்திற்கு முன்னர் இருவரும் தனியாக இருந்த நேரங்கள் மிகக் குறைவு. இரு குடும்பத்தினரும் கூடி இருக்கும் நேரங்களில், அரசல் புரசலாகப் பார்த்துக் கொள்வதோடு சரி. ஜாடை மாடையாகப் பேசிக் கொள்வதோடு சரி. போட்டிருக்கும் உடைகளும், அணிந்திருக்கும் நகைகளும் நன்றாக இருக்கின்றனவா என்பதைப் பத்து மனிதர்களுக்கு மத்தியிலும் பார்வையிலேயே பரிமாறிக் கொண்டவர்கள். காரணமே இல்லாமல் போய்ப் போய்ச் சட்டையை மாற்றிக் கொண்டு வருகிறானே பைத்தியக்காரன் என்று வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் நினைக்க, இங்கு நடக்கும் காதல் பரிபாஷை புரியாத இவர்களல்லவா பைத்தியக்காரர்கள் என்று இவர்களிருவரும் நினைத்துச் சிரித்துக் கொள்வர்.

பத்துப் பேருக்குக் காஃபி போட்டு அனைத்து டம்ளர்களையும் ஒரு ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் கொடுத்தாலும், தனக்கான டம்ளர் எது என்று கணேஷுக்குத் தெரியும். கோட் வர்ட்ஸ் எல்லாம் தூரத்து பரிபாஷைகளாலேயே விளக்கப்பட்டிருந்தன. அவனுக்குப் போகும் டம்ளரை மட்டும் அவள் ஓரிரு ஸிப் குடித்து, ருசி பார்த்து, தன் இதழினாலேயே இனிப்பைச் சேர்த்திருப்பதாக அவனுக்கு அந்த நாட்களில் தெரிந்திருக்கவில்லை. குடித்து முடித்துத் திரும்ப வைக்கும் பொழுதும் அதை ஒரு குறிப்பிட்ட முறையில் வைக்க வேண்டுமென்று தெரிந்த அவனுக்கு, அதில் மிஞ்சிய கடைசி இரண்டு சொட்டுக்களுக்காகத்தான் அந்த இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்றும் தெரிந்திருக்கவில்லை.

ஒருவரோடு ஒருவர் கை கோர்த்துக் கொண்டு, சினிமா, பார்க் என்று ஊர் சுற்றி, பக்கம் பக்கமாகப் பேசித் தீர்த்தால்தான் காதல் வளரும் என்பது அப்பட்டமான பொய் என்று கணேஷ், லக்‌ஷ்மி தம்பதியினரைப் பார்த்தால் விளங்கும். பல மனிதர்கள் சுற்றியிருக்கையிலும், தாமிருவர் மட்டுமே இருப்பதாக எண்ணி, நம்பி, திருமணத்திற்கு முன்னரே உள்ளத்தால் ஒன்றாகிப் போன அவர்கள் உடலால் ஒன்றாக இருக்கும் முதலிரவு. கன்னியொருத்திக்குக் காளையொருவனுடன் முதலாவதாய்த் தனிமையில் பழக வாய்ப்புக் கிடைக்கும் இரவு என்பதால் முதலிரவு எனப் பெருமையாய் அழைக்கப்பட்ட இரவு. தூரத்திலிருந்து, பல மனிதர்களின் மத்தியில், பல விதமான லீலைகள் செய்யும்பொழுது இருந்த துணிவு, தனியறையில், இரவின் பிடியில், மலரலங்காரத்தின் மத்தியில், கல்யாணக் களேபரத்தில் சற்றுக்கூட இல்லாமல், காணாமல் போயிருந்தது. படுக்கையில் அமர்ந்திருந்த கணேஷிடமிருந்து ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்த லக்‌ஷ்மியைக் கையைப் பிடித்து இழுத்து, கணேஷ் பேசிய முதல் வார்த்தை இது;

சோலை மலர் ஒளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கடல் அலையே – உனது
நெஞ்சின் அலைகளடி !

பல காலங்களாக, பல விதமாக வர்ணிக்க வேண்டுமென்று எண்ணியிருந்த கணேஷிற்கு, பாரதியின் இந்த நான்கு வரியைவிட வேறெப்படியும் விளக்கயிலாது என்று தோன்றியது. அவ்வளவாகத் தமிழ் தெரியாத கன்னடப் பெண் லக்‌ஷ்மி, “என்ன, என்ன சொல்றீங்க?” எனக் கேட்க, முதலிரவைத் தமிழ் வகுப்பாக மாற்றியிருந்தான் கணேஷ்.

ல்யாணக் களேபரங்கள் முடிந்து, உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று வரும் சம்பிரதாயங்கள் முடிந்து, புது மனைவிக்கு அமெரிக்க வீசா அப்ளை செய்து விட்டு அதன் பிறகான காத்திருப்புகள் முடிந்து, ஒரு நல்ல நாளில் விமானம் அமர்ந்து இருவரும் அமெரிக்கா வந்தடைந்தனர். தனிக்குடித்தனம் சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. தொழில் துறை வாழ்க்கையின் பரபரப்பான கட்டம் கணேஷிற்கு, புது மணத்தை அனுபவித்து கணவனைப் பற்றியும் அவனுடன் செலவிடும் ஒவ்வொரு கணம் பற்றியும் மட்டுமே நினைப்புக் கொண்டு வாழும் ருசிகரமான வாழ்க்கை லக்‌ஷ்மிக்கு. தொழில் பரபரப்பில் பல விஷயங்களை மறந்து விடுவான் கணேஷ். காதலிக்கும் நாட்களில் பொறுப்பாய்ச் சிறிய விஷயங்களுக்குக் கூடச் செலுத்தப்படும் கவனம், கல்யாணமான பிறகு பெரிய விஷயங்களில் கூட இருப்பதில்லை என்பதே உண்மை. பிறந்த தினங்களையே கடின முயற்சியுடன் மட்டுமே நினைவில் நிறுத்திக் கொள்ளும் கணேஷிற்கு, வேலண்டைன்ஸ் டே எல்லாம் பெரிதாக நினைவிலிருந்ததில்லை.

அமெரிக்காவிற்கு வந்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்த லக்ஷ்மி இன்னும் காரோட்டக்கூட கற்றுக் கொண்டிருக்கவில்லை. சொந்தமாகச் சம்பாதிக்கவும் ஆரம்பித்திருக்கவில்லை. தனிக்குடித்தனம் வந்து முதன் முதலாக வரும் வேலண்டைன்ஸ் டே’க்கு, கணவனுக்கு ஒரு பரிசு வாங்க வேண்டுமென்ற ஆசை. அதுவும் அவனுக்குத் தெரியாமல் வாங்கி, அன்றைய தினம் சர்ப்ரைஸாகக் கொடுக்க வேண்டுமென்று…. பல தினங்களுக்கு முன்னரே திட்டமிடத் தொடங்கி விட்டாள். அவ்வளவாகப் பழக்கமில்லாத, கணேஷின் நண்பரின் மனைவி அவளை கடைக்கு அழைத்துச் செல்ல, கணேஷின் க்ரெடிட் கார்டின் சப்-அக்கவுண்ட் க்ரெடிட் கார்டில் பே செய்து, அவளுயரத்திற்கு ஒரு டெடி பேர் வாங்கி விட்டாள். தும்பைப் பூ போன்ற வெண்மையான அந்த டெடி பேரின் கழுத்தில், ஆட்டின் வடிவத்தில் சிவப்பு நிற வெல்வெட் துணி பொருத்தப்பட்டு, அதில் “ஐ லவ் யூ” என்று எழுதப்பட்ட டிசைன்.. நூறு டாலருக்கு மேலான அந்தப் பரிசை அவள் வாங்குவதைப் பார்த்து, உடன் வந்த பெண்மணி கிட்டத்தட்ட மூர்ச்சையானார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதல் வேலண்டைன்ஸ் டே’யும் வந்தது. வசதியாக வார இறுதியான சனிக்கிழமையன்று வந்ததால் வெள்ளிக் கிழமை இரவு தூங்காமல் விழித்திருந்து, சரியாகப் பனிரெண்டு மணி அடிக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷை எழுப்பித் தனது பரிசை சர்ப்ரைஸாகக் கொடுத்தாள் லக்‌ஷ்மி. உண்மையில், அப்பொழுதுதான் கணேஷிற்கு அன்று வேலண்டைன்ஸ் டே என்ற நினைவே வந்தது….. பல விதமான க்யூட்னஸ் அவளின் பரிசளிப்பில்; ஆனால் தினம் கூட நினைவில்லாத கணேஷ் பரிசெதுவும் வாங்கியிருக்கவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை. பரிசு வாங்கவில்லை என்பதைவிட அந்த நாள் கூட நினைவில்லை என்பதைச் சமாளிப்பதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. பரிசாக இருக்கட்டுமென, சரியாகப் பாட வரா விட்டாலும், நாராசமான குரலில் பாரதியின் காதல் கவிதையை கண்ணை மூடிக் கொண்டு பாட்டாகப் பாடினான் கணேஷ்.

சோலை மலர் ஒளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கடல் அலையே – உனது
நெஞ்சின் அலைகளடி !

தமிழ் சற்று அதிகமாகப் புரிய ஆரம்பித்திருந்த லக்‌ஷ்மிக்கு, அவனது நாராசக் குரலும் அபஸ்வர ராகங்களும் கூட காதல் இசையாய்க் காதில் ஒலித்தது. இதன் பிறகு பலமுறை பாடிக் கொண்டதில் இந்தப் பாடல் அவர்களின் குடும்பப் பாடலாகவே மாறிவிட்டிருந்தது. பல மறத்தல்களுக்குப் பரிகாரமாக இந்தப் பாடலைப் பாடுவது அவனது தொழிலாகவே மாறிவிட்டிருந்தது. குழந்தைகள் பிறந்து, வளர்ந்து பெரியவர்களாகும் வரையிலும் தொடர்ந்த இந்தப் பழக்கத்தைப் பற்றி அறிந்திருந்த மகள் பாரதி, தந்தைக்கு மெஸேஜாகப் பாடலை அனுப்பி, வேலண்டைன்ஸ் டே நினைவு படுத்தியது அதிசயமொன்றுமில்லை.

னது குடும்பப் பாடல் கணவனின் செல்ஃபோனிலிருந்து ஒலியாக வர, என்னவென்று பார்க்க கொல்லைப் புறக் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள் லக்ஷ்மி. கதவு திறந்த சத்தம் ஆழமான ஃப்ளாஷ் பேக்கிலிருந்த கணேஷை உலுக்கி எழுப்பியது. கதவு நோக்கித் திரும்பிப் பார்த்த கணேஷ், எழுபத்தி ஐந்து வயதைக் கடந்தும் இளமைப் பொலிவுடன் தன் கண்ணுக்குக் காட்சியளிக்கும் லக்‌ஷ்மியைப் பார்த்துக் கிறங்கலாய் “ஹேப்பி வேலண்டைன்ஸ் டே செல்லம்” எனச் சொல்ல, மெல்லமாய் அருகே வந்து, கண்ணோடு கண் பொருத்தி, தன் பின்னால் கைகளில் ஒளித்து வைத்திருந்த சர்ப்ரைஸ் கிஃப்டை எடுத்து நீட்டினாள் லக்‌ஷ்மி !!

வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Thilaga says:

    Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad