banner ad
Top Ad
banner ad

எதிர்பாராதது…!? (பாகம் 9)

Filed in கதை, வார வெளியீடு by on January 28, 2018 0 Comments

( * பாகம் 8 * )

‘கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்…’ -அந்த நள்ளிரவில் சவமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நந்தினி பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது. வாட்ச்மேனை அழைக்க நினைத்தாள். மனைவிக்கு உடம்பு சரியில்லையென்று அவன் போயிருந்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இப்போது கதவைத் திறப்பதா வேண்டாமா?  வாழ்க்கையே தனிமைதான். அதுவாகவே அப்படி அமைந்து போனதும் இப்போது பழகிப் போய்த்தான் கிடக்கிறது.   இனிமேல் எவனைத் துணை தேடுவது? எந்தத் துணையை நம்புவது?

‘கிர்ர்ர்ர்ர்….’ காது ஜவ்வு கிழிவது போல் அலறியது அது. வீடே ஆட்டம் காணுவதுபோல் பயம் எழுந்தது.

“யாரது?“ கேட்டவாறே ஓடிப்போய் மாடிப்படி லைட்டைப் போட்டவள் தயங்கியவாறே இறங்கினாள். தாள முடியாத அயர்ச்சியில் உடம்பு கனத்தது. அவளையறியாமல் தள்ளாடியது தேகம்.  

“யாருன்னு சொல்றீங்களா?” – மீண்டும் கேட்டுவிட்டுக் கதவை நெருங்கினாள். அப்போதும் திறக்கத்தான் வேண்டுமா என்று பயம் வந்தது. வாட்ச்மேனை அனுப்பியது மகா தவறு. யாரையேனும் பதிலுக்கு வைத்துவிட்டுப் போ என்று சொல்லியிருக்க வேண்டும். எப்பொழுதும் அவன் பெண்டாட்டி இருப்பாள்தான். உடம்பு முடியாமல் போனது தனது கெட்ட நேரமோ? உற்றம், சுற்றம் என்று தனக்கும் நாலு பேர் இருந்திருந்தால் இந்த நிலை வருமா? வெறும் அநாதைப் பிணம் நான். வந்த வாழ்வு தங்குமா என்பதுபோல் வாழ்க்கை பயமுறுத்திக் கொண்டேயிருக்கிறது. துணையின்றி இருப்பது எத்தனை பாதுகாப்பற்றது? யாரையேனும் இணைத்துக் கொள்ள முயன்றாலும் எல்லோரும் விலகிப் போகிறார்கள். ஏன்? எனது எந்தக் கதை அவர்களை அப்படிப் பயமுறுத்துகிறது? நினைத்த போது சர்வாங்கமும் நடுங்கி ஒடுங்கியது  அவளுக்கு.

“கதவைத் திற நந்தினி…நான்தான்….”  சத்தம் தீர்க்கமாய் வந்தது.

குரலைக் கேட்டவுடன் மேலும் பதற்றமடைந்தாள்.  பிரேம். இவன் எங்கே இந்நேரத்தில்? ஒரு நாளும் இப்படி வந்ததில்லையே? உடம்பெல்லாம் மேலும் வேகமாய் நடுங்க ஆரம்பித்தது அவளுக்கு. என்றோ ஒரு முறை என் வீட்டுப் பக்கம் வந்தவன். இதுதான் மறுமுறை. எப்படி இத்தனை ஞாபகத்தோடு இந்த வேளையில்?

“நீங்களா? நீங்க அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கிறதால்ல சொன்னாங்க…?” – வார்த்தைகள் உளறியது. என்ன செய்கிறோம் என்கிற நிதானமின்றித்  தன்னையறியாமல் கதவைத் திறந்து விட்டாள். சடாரென்று உள்ளே பாய்ந்தான் பிரேம்.

“போகலே…………..” அந்த மாதிரி ஒரு புரளியைக் கிளப்பினேன்… – சொல்லியவாறே தடுமாறினான் பிரேம்குமார்.

கால்கள் பூமியில் பாவ மறுத்தன. அவனைப்பற்றி அவள் அறிந்த செய்தியை அவன் இப்போது புரளி என்கிறான். எதற்காக? என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். இங்கே, இந்த நேரத்தில் வந்து இதை ஏன் என்னிடம் உளறுகிறான்?

“உன்னைத் தீர்த்துக்கட்டுறதுக்காகத்தான் இப்டி ஒரு நாடகம். என் மீது இப்போ எவனுக்கும் கவனமில்லை..அதுதான் எனக்கு இப்போ ப்ளஸ்.” – சொல்லிவிட்டுக் கெக்கலியிட்டுச் சிரித்தான் பிரேம். அப்படி ஒரு சிரிப்பை அவன் நடிப்பிற்காகக் கூடச் செய்ததில்லை. அதுவே அத்தனை பயப்படுத்தியது அவளை.

அவனின் வழக்கமான, மென்மையான, மயக்கும் சிரிப்பல்ல அது. மூளை அவன் வசம் இல்லைதான்.  நிதானமாய்ப் பேசுவதுபோல் நினைத்து உளறுகிறான். முட்டக் குடித்திருக்கிறான். ஆனாலும் அதோடு வந்திருக்கிறான். அதுதான் ஆச்சரியம்.  

இவனை என்னமாவது செய்து அப்படியே படுக்கையில் வீழ்த்தி விட வேண்டியதுதான். உள்ளேயே விட்டிருக்கக் கூடாது. விட்டாயிற்று. வேண்டாத வேளையில் வந்திருக்கிறான். அதுவும் கொஞ்சமும் நிதானமில்லாமல். இந்தக் குடிதான் இவனைச் சீரழித்திருக்கிறது. ஆளையே மாற்றியிருக்கிறது. திறமைகளை நசிந்து போகச் செய்திருக்கிறது. ஊக்கத்தைக் கரைத்திருக்கிறது. அத்தோடு முடங்கிக் கிடக்காமல் இங்கே பிரசன்னம் என்றால் காரணமில்லாமல் இருக்காது.

நந்தினியின் மனம் பயப்பிராந்தியில் சிக்கியது. அடக் கடவுளே…இந்நேரம் பார்த்து, ஒருவரும் இல்லாமல் போயினரே….! எப்படித் தப்பிப்பது இவனிடமிருந்து? மூளை மின்னலாய் வேலை செய்ய ஆரம்பித்தது அவளுக்கு.

“ஆமாண்டீ…ஆரம்பத்துல நாலு காசுக்கு ஓட்டல்ல உடம்பக் காண்பிச்சு டான்ஸ் ஆடிட்டிருந்த உன்னைக் கொண்டுபோய் பெரிய ஸ்டார் ஆக்கினேன் பாரு…நீ எனக்குக் காட்டின நன்றி இருக்கே…அதுக்கு ஏதாச்சும் பரிசு தர வேண்டாமா? அதுக்காகத்தான் வந்திருக்கேன்…..”

“நீங்க என்ன சொல்றீங்க பிரேம்? எதுக்காக எப்பவோ நடந்ததை இப்போ ஞாபகப்படுத்துறீங்க?…எதுவானாலும் சரி…காலைல பேசிக்கலாம்….இப்போ நீங்க நிதானத்துல இல்லை…அதோ அந்த ரூம்ல போய்ப் படுங்க….நல்லாத் தூங்குங்க…காலைல பேசுவோம்” – பதற்றத்தில் என்னத்தையோ சொன்னாள் நந்தினி.

அவள் மனம் ரிவால்வாரை எங்கே வைத்தோம் என்று தேட ஆரம்பித்திருந்தது. இதுவரை பயன்படுத்தியதில்லை. ஒரு பாதுகாப்பிற்குத்தான். இப்போதும் அப்படித்தான் யூஸ் பண்ண வேண்டும். அதற்காக அவனைச் சுடவா முடியும்? இதற்காகவா இத்தனை காலம் வீறு கொண்டு எழுந்தது? இவ்வளவு சம்பாதித்தது இப்படி வெறுமே அழிந்து போவதற்கா?

போதும் என்று எல்லா பரபரப்பையும்  உதறி, ஆற, அமர எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? இந்த நேரத்தில் வந்திருக்கிறானே சனியன்? கையிலெடுத்தால் அவன் அதைப் பிடுங்க எவ்வளவு நேரம் ஆகும்? சில கணங்கள் போதுமே…அவனை எதிர்த்து நிற்கும் துணிவு, திறன்  தனக்கு இருக்கிறதா? வெறியோடல்லவா வந்திருக்கிறான். அழகைக் காட்டி வீழ்த்தவும் முடியாதே?

“ஏய்…நிறுத்துடி….உன் வீட்டுல தூங்கிறதுக்கா நா வந்திருக்கேன்? என்ன பசப்புற? அதெல்லாம் நான் தெளிஞ்சு ரொம்ப நாளாச்சு….அதனாலதான் ஒரு முடிவோட வந்திருக்கேன்….”

“முடிவா? என்ன முடிவு பிரேம்? என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? நா ரெடி. அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன். நான் எப்பவும் உங்களோட நந்தினிதான். நீங்கதான் என்னைத் தப்பா நினைச்சு விலகிட்டீங்க….உங்க கூட இருந்தவங்க, உங்களுக்கு நல்லது சொல்லலை…அவுங்க பேச்சைக் கேட்டு வீணாப் போயிட்டீங்க….என் கழுத்துல உங்க கையால தாலி ஏற நான் எப்பவும் தயார்….அது என் பாக்கியம் “

ரொம்பவும் பேசுகிறோமோ என்ற உறுத்தலிலேயே அப்போதைக்கு அவனை எப்படியும் சமாளித்தாக வேண்டுமே என்று எதையோ உளறிக் கொட்டினாள் நந்தினி. போதையில் அவன் மண்டையில் எதுவும் ஏறாது என்கிற உறுதி. மேலும் மேலும் உளறத்தான் செய்தான் பிரேம்.  

“என்னடி, வசனமா பேசுற? உன்னோட மார்க்கட் டல்லாயிடக் கூடாதுன்னு என் படத்திலெல்லாம் உன்னை சிபாரிசு பண்ணினேனே… அது எதுக்கு? என் புகழை உயர்த்திக்கவா? நீ உச்சிக்குப் போகணும்னுதானே? அப்பல்லாம் உன்னைப் புரிஞ்சிக்கலடி…இப்போ நான் ஓய்ஞ்சு போன வேளைல எனக்குக் கிடைக்கிற ஒண்ணு ரெண்டு சான்சையும் கெடுக்கிறியே…ஏன்? என்கூட நடிச்சா குடி முழுகிடுமா உனக்கு? நடிக்க ஒத்துக்கிற சிலரையும் வேண்டாம்ங்கிறியாமே…அந்த வசீகரன ரெக்கமன்ட் பண்றியாமே? இவ்வளவும் பண்ணிட்டு, இப்போ பசப்பவா செய்றே? தப்பிக்கிறதுக்கு கண்டபடி உளர்றே? மனசுல பயம் வந்திடுச்சோ…இப்டி மாட்டிக்கிட்டமேன்னு….உறிஉற்உறிஉற்உறி…”.

“நா கெடுத்தனா? உங்க வாய்ப்பை நான் ஏன் கெடுக்கணும்?எதுக்காக அப்டிச் செய்யணும்? எப்படி உங்க சான்சை நான் கெடுக்க முடியும்? யார் கேட்பாங்க? நீங்க எவர் க்ரீன் ஹீரோ…உங்களுக்குன்னு ஒரு மவுசு இருக்கு…புகழ் இருக்கு…உங்களுக்குன்னு ஒரு கூட்டம் என்னைக்கும் உங்க பின்னாடி இருக்கு. .நீங்க அறிமுகப் படுத்தின ஆளு நா…மொத்த ஃபீல்டுக்குமே தெரியும்…யாராவது அப்டிச் சொன்னா கேட்பாங்களா? நம்புவாங்களா? நீங்களா எதையாச்சும் கற்பனை பண்ணிக்குவீங்க போலிருக்கு…எனக்குன்னு வர்றதைச் செய்திட்டிருக்கேன்…அதை எப்படி மாட்டேங்க முடியும்…வசீகரனை நான் பேர் சொல்லலை…அவங்களா செலக்ட் பண்றாங்க…நான் என்ன பண்ண முடியும்? அவனுக்கும் வியாபாரம் ஆகுதே…! ஆளை மாத்துன்னு நான் சொல்ல முடியுமா? கதாநாயக நடிகருக்குத்தானே எங்களை விட மவுசு….உங்களுக்குத் தெரியாததா? “

“உன் பேரத்தானடீ சொல்றாங்க எல்லாரும்….அன்னைக்கு என் கூட நடிக்கிறதுல ஒரு இன்பம் இருக்கு…த்ரில் இருக்கு…நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குது…அது இதுன்னல்லாம் பேட்டி கொடுத்த நீ…பிரேம்குமாரைப் போட்டா நடிக்க மாட்டேன்னு சொல்றியாமே? ரேட்டைக் கூட்டிக் கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்கிறியாமே? அவ்வளவு பெரிய ஸ்டாரா நீ?  பிடிவாதம் பிடிச்சு எனக்கு வர்ற சான்ஸையெல்லாம் கெடுக்க ஆரம்பிச்சிட்டியே…உன்னைச் சும்மா விடலாமா?”

“பிரேம்… வேண்டாம்…இப்போ நீ நிதானத்துல இல்லை…பிறகு நடந்ததுக்காக வருத்தப்படுவே…என்னை ஒண்ணும் செஞ்சிடாதே… போலீஸ்ல மாட்டிக்குவே…சொன்னாக் கேளு….” பயந்து போய் ஒதுங்க ஆரம்பித்தாள் நந்தினி. எப்படி அவனை ஒருமையில் பேசினோம் என்று அவளுக்கே ஆச்சரியம். பதட்டத்தில் வந்து விட்டதோ?

ஏதோ விபரீதம் நடந்து விடுமோ என்று அவள் உள்மனம் எச்சரிக்க ஆரம்பித்தது. கதவைத் திறந்து வெளியே ஓடி விடலாமாவென நினைத்தாள். நிச்சயம் முடியாது. கிராதகன் அவன். என்னை அப்படியே கோழிக் குஞ்சைப் போல் அமுக்கி விடுவான். காதல் காட்சியிலேயே காமத்தைக் காண்பித்தவன். படப்பிடிப்புத் தளத்திலேயே படமெடுத்து ஆடியவன். வரம்பு மீறியவன். இந்த அத்வானத் தனிமையிலே விடவா போகிறான்?

“பயமுறுத்துறியா? உனக்கு வழி காண்பிச்ச எனக்கே புத்தி சொல்றியா…? அவுட்டோர் ஷூட்டிங்குக்கு இன்னைக்குப் பெங்களுரு போயிருக்கிறதா யூனிட்டையே நம்ப வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்…சந்திராலயா யூனிட்டே எனக்காக சாட்சி சொல்லும்…பெங்களுர்ல ஓட்டல் டிரடிஷன் தெரியுமா உனக்கு…இன்னை தேதிக்கு நா அங்க இருக்கேன்…ஆனா இங்கே உன்னைக் கொலை பண்றேன்… “ – சொல்லிக் கொண்டே அவளை நோக்கிப் புலியெனப் பாய்ந்தான் பிரேம். பொறி கலங்கிப் போய் பேயாய்ப் பின் வாங்கினாள் நந்தினி

டைரக்டர் கோபிநாத் மேல் உத்தரத்தைப் பார்த்தவாறே மோவாயைச் சொறிந்தார். கூடவே “அப்படி ஒண்ணும் நந்தினிக்கு எதிரிகள் இருக்கிறதா தெரில இன்ஸ்பெக்டர்…” என்றார். படப்பிடிப்பு நேரத்தில் இதென்ன தொல்லை என்று தோன்ற ஆரம்பித்திருந்தது அவருக்கு.

“நேத்து முழுக்க உங்க படத்தோட ஷூட்டிங்லதான் நந்தினி இருந்திருக்காங்க…அப்போ யார் கூடவாவது ஏதாச்சும் தகராறு இருந்திச்சா?” தொடர்ந்து தோண்டினார் இன்ஸ்பெக்டர் ரஹீம்.

சந்தேகம் வந்தால் உயிரிணை, அஃறிணை என்று எந்த வித்தியாசமும் இருக்காதே போலீசுக்கு. அவர் எழுதிய வசனம் அவருக்கு ஞாபகத்துக்கு வந்தது.

“நோ, நோ இன்ஸ்பெக்டர்….அவுங்க ஆக்டிங் டைம் தவிர மற்ற நேரத்துல யார் கூடவும் எதுவும் பேச மாட்டாங்க….ஏதாச்சும் புத்தகமும் கையுமாத்தான் இருப்பாங்க…சொல்லப் போனா அவுங்க நடிப்புத் திறமைக்கு அவுங்க படிப்பும் ஒரு முக்கிய காரணம்….குறிப்பா பல மொழி நாவல்களை விடாமப் படிப்பாங்க ஆர்வமா…அதுனால யார் கூடவும் அவங்களுக்குத் தகராறுங்கிற கேள்விக்கே சான்ஸ் இல்லை…”

“ஐ…ஸீ…வேறே எப்போவாவது ஏதாவது யார்கூடவேனும் சண்டை, சச்சரவு இப்படி?”

“என்ன இன்ஸ்பெக்டர்…எதுக்கு இப்டித் திரும்பத் திரும்ப? எனக்குத் தெரிஞ்சு இல்ல …அவுங்களுக்குத் துணைன்னு யாரும் கிடையாது. வீட்டு வேலைக்காரம்மா ஒருத்தவுங்கதான் கூடவே வருவாங்க…அவுங்களையும் எதுவும் பேச விடமாட்டாங்க….அவ்வளவு ஸ்டிரிக்ட் ட்டியூட்டில…..! “

“இஸிட்…. சமீப காலமா அவுங்க யார் கூட அதிகமாச் சேர்ந்து நடிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா? எனக்கு அதுபத்தியெல்லாம் நாலெட்ஜ் கம்மி…”. – சொல்லிக் கொண்டே சகஜம்போல் சிரித்தார் ரஹீம். கோபிநாத்துக்கு மனதுக்குள் எரிச்சல் கிளம்ப ஆரம்பித்திருந்தது.

“வருஷத்துக்கு மூணோ நாலோதான் பண்ணுவாங்க…அதுவும் பெரிய பேனர், பெரிய பட்ஜெட் கம்பெனிங்கதான்…பிரபலமான ஹீரோக்களோடதான் இருக்கும்…இப்போ முதன்முறையா என் டைரக்ஷன்ல அவுங்க ஒத்துட்டிருக்கிறதே ஆச்சரியம்தான். என்னாலயே இன்னும் நம்ப முடில…காரெக்டர் ரொம்பப் பிடிச்சிப் போச்சுன்னு சொன்னாங்க… கதை சொன்னப்போ தன்னை மறந்து அப்டியே கண்ணீர் விட்டுட்டாங்க….அதுதான் என் அதிர்ஷ்டம்னு வச்சிக்குங்களேன்….அவுங்களை அப்டியே பாத்திரமாவே மாத்துறதுக்கு இப்போ அந்த இன்வால்வ்மென்ட் எனக்கு ரொம்ப உதவுது…ரொம்ப டெடிகேடட் ஆர்டிஸ்ட்….”

“ஸாரி மிஸ்டர் கோபிநாத்…நா சினிமாவுல அதிகமாக் கவனம் செலுத்துறதில்லை…அந்தப் பிரபலமான ஹீரோக்கள் யார் யாருன்னு சொல்லலாமா? “

“பார்த்தீங்களா, என்னையே மாட்டிவிடப் பார்க்கிறீங்களே? சிக்கலான கேள்வி… ஸாரி இன்ஸ்பெக்டர்….இதுக்கு பதில் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது… ஃபீல்டுல இப்பத்தான் காலூன்றியிருக்கேன் நா…. என்னை வம்புல சிக்க வச்சிடும் இதுக்கு பதில் சொன்னேன்னா… சினிமாக்காரங்களைப் பத்தி செய்தி போடாத பத்திரிகைகளே கிடையாது…நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்கலாமே.. “ – கூறியவாறே அங்கிருந்த பத்திரிகைகளை எடுத்து டேபிள் மேல் போட்டார் கோபிநாத். சற்று நேரம் அவற்றை அக்கரையின்றிப் புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரஹீமுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி கவனத்தை ஈர்த்தது.

  • உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad