Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சிங்கப்பூரின் சிறு இந்தியா

வர்த்தகக் வேலை காரணமாக பல்லாண்டுகள் கழித்து  சிங்கப்பூர் போயிருந்தேன். எனது வேலைகள் முடிந்த பிறகு சிங்கப்பூர் வாழ் நண்பன் கோபிக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். அவனும் மகிழ்வுடன் ஒரு மணித்தியாலத்தில் நான் இருந்த ஹோட்டலுக்கு வந்தான்.

என் நண்பன் கோபிக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். வேலைப் பயணங்களின் போது வேளா வேளைக்கு ஹோட்டலில் எதையாவது சாப்பிட்டுக் கொள்ளும் எனக்குத் தமிழ்ச் சமையல் தரமாகப் பிடிக்குமென்று அறிவான். எனவே நண்பன் கோபி, நாம் சிறு இந்தியாவைப் பார்க்க பாரம்பரிய பணானா லீஃப் அப்போலோ (Banana leaf Apolo) உணவகத்தில் ஆரம்பிக்கலாமென. ஹோட்டலிலிருந்து டாக்ஸி பிடித்து, இந்தியப் பகுதி எல்லைத் தெருவாகிய றோயல் கோட் தெருவிற்குச் சென்றோம்.

தமிழ் மதிய போசனம்

பலகட்டங்கள் கடந்த பின்னர் டாக்ஸி எமது குறிப்பிட்ட றோயல் கோட் தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது. காலை உணவு ஆறு மணிக்கெல்லாம் முடித்த படியால், மதியம் தாண்டி மாலைப் பொழுது அருகிட, பசியோ வயிற்றைத் துளைத்தது.பனானா லீஃப் உணவகம் சிங்கப்பூரில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து வெற்றிகரமாகத் தமிழ், இந்திய உணவுகள் தரும் தாபனம்.

வெளியிலிருந்து படி இறங்கி உணவகத்துள் நுழைந்ததும் இதமான இந்திய எழில் பச்சைச் சுவர்கள், அழகிய மர வேலைகள், அருமையான உணவக உபசரிப்பாளர்கள், ‘அப்பாடா நம்ம பகுதிக்கு வந்தாச்சு’ எனத் தோன்றியது எனக்கு. நண்பன் கோபி என்னை அதிசயப்படுத்த இலங்கை நண்டுக் கறி உண்டா என்று கேட்டான். ஆம், உண்டு என்றார்கள் உணவகத்தினர்.

நான் ‘இது எமது பெரும் நீல நண்டு தானே?’ என்று கேட்டதற்கு  கோபி ‘இல்லை இது ஊர் கறுப்பு சுவையான சேற்றுநண்டு’ என்று சொன்னான். அந்தப் பதில் எனக்கு ஆச்சரியத்தையும் மிகுந்த அவாவையும் தந்தது. இந்த வகை நண்டு உட்கொண்டு இரண்டு மூன்று தசாப்தங்கள் ஆகி விட்டிருந்தன  எனக்கு. இலங்கை நண்டு சிங்கப்பூரில் தினமும் பக்குவமாகத் தருவிக்கப்படும் கடலுணவுகளில் ஒன்று. சிங்கப்பூர் மக்கள் உணவுத் தராதரத்தில் மிகவும் அக்கறை காட்டுபவர்கள், இதனால் கடலுணவுகள் உயிருடன் இறக்குமதி பண்ணாவிட்டால் மதிப்பில்லை.

நண்டுக்கறி என்று கேட்டிருந்தாலும் அதனுடன்  விதவிதமாக பல உணவுகளைக்கொண்டு வந்து வாழையிலையில் பரிமாறியாதும் எனது கைகளும், நாவும்  ஆனந்த நடனமாடின. சிங்கப்பூர் தமிழ்ச் சமையல் கமகம வாசத்துடன் சுவையாகவும், காரசாரமாகவும் இருந்தது. இவ்விடம் இளைப்பாறி உண்டு களைப்பாறி அதன் பின்னர் சிறு இந்தியா (LITTLE INDIA) சுற்றுலாவை ஆரம்பித்தோம்.

கொத்துக் கொத்தாக மல்லிகைப்பூ , செவ்வந்தி; வரிசை வரிசையாகப் பூ மாலைகள் – பழங் கடைகள் என்றாலும் பாங்காக இருந்தது. குறு வீதிகளில். பெரியதும், சிறியதுமாக பளபளவென ஜொலிக்கும் இந்திய நகைக் கடைகள் பல; அப்படியே அடுத்து தளபாடம், ஜவுளி, மற்றும் மளிகைக் கடைகள் பரந்து காணப்பட்டன. சிறு இந்தியா நிச்சயமாக அதன் வர்ண ஜால நிறமான கட்டிடங்களில் தனித்துவமாக இருந்தன.

சிறு இந்தியா வரலாறு

இது பிரித்தானிய ஏகாதிபத்திய காலனிகள்  காலத்தில் உருவாக்கப்பட்ட இடம். பிரித்தானியர் கலாச்சாரங்களைப் பிரித்து ஆள்வதில் கவனம் செலுத்தினர். அக்காலகட்டத்தில் செரங்கூன் ஆற்றங்கரை, சேற்று எருமைகள் மற்றும் கால் நடைகளைப் பேணும் இடமாக இருந்தது. இதனை இந்தியர் பிரிவு என ஆங்கிலேயர் ஏற்படுத்தினர் இதனைத் தொடர்ந்து இந்தியர்களின்  குடியேறல் பெருகி சிறு இந்தியாவாக உருவெடுத்தது.

சிங்கப்பூர் அரசு, இவ்வித வரலாற்று புகழ்மிக்க கட்டிடங்களையும், இடங்களையும் பாதுகாக்கும் வகையில் அவற்றை இடித்து நகரை விரிவாப்பதைத் தவிர்த்தனர். இதன் காரணமாகவே சிங்கப்பூரில் அதிக அளவில் உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் காண முடிகிறது.  இதனால் இன்றும் சிங்கப்பூர் இந்திய வம்சாவழியினரின் தனித்துவமான வர்த்தக, கலாச்சாரப் பகுதியாக சிறு இந்தியா விளங்குகிறது.

சிங்கப்பூர் வாழ் தமிழர்

நாட்டின் நான்கு அதிகார  மொழிகளில் தமிழும் ஒன்றாகும் சீனம், மலே, மற்றும் ஆங்கிலமும் மற்றைய மூன்று மொழிகளாகும். ஆயினும் வர்த்தகம்  மற்று , கல்வி கற்பித்தலுக்கு ஆங்கிலமே புழக்கத்தில் உள்ளது. சிங்கப்பூரின் சிறு இந்தியா பிரத்தியேகமாகத் தமிழரைக் கொண்டு இயங்கினாலும், தெலுங்கர், மலையாளிகள் மற்றும் இந்தி பேசும் மக்கள் வர்த்தகங்களும் இடையிடையே காணப்பெற்றன.

குடியரசு தாபிக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்மக்கள் சிங்கப்பூரின் அத்திவாரத்திற்குக் காரணமாக இருந்தனர். இன்னாட்டின் பெயரே சிங்க + ஊர் என தமிழ் பொருள் தருகிறது. இது ஒரு வகையில் வரலாற்று ஆதாரமே. சிங்கப்பூர் வாழ்த் தமிழரை ஏறத்தாழ ஐந்து வகைப்படுத்தலாம்.

சிங்கப்பூர் தாபித்ததிலிருந்து அவ்விடம் பிறந்து வளர்ந்த தமிழர்;  சிங்கப்பூர் மலாயாவில் (மலேசியாவில்) இருந்து பிரிந்த பிறகு அவ்விடம் இருந்து வந்து குடியேறிய தமிழர்;  சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை மற்றும் தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்; தற்காலிக விசாவில்  மலேசியா, தமிழக மாவட்டங்களிலிருந்து வேலைக்கு வந்திருக்கும் தமிழர்களென எடுத்துக் கொள்ளலாம்.

சிறு இந்தியாவிலுள்ள  கடைகளில் வேலை செய்யும் பெரும்பாலானோர் தமிழகத்தவர் என்று குறிப்பிடுவது சரியானது.

சிங்கப்பூர் நாட்டு சனத்தொகை பொருளாதாரம்

சிங்கப்பூர் 2018 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கின்படி  ஏறத்தாழ 6 மில்லியன் மக்களைத் தனது சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.  இதில் 3.5 – 4 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் குடி பிரசைகள், மீதி 2 மில்லியன் வெளிநாட்டுத் தற்காலிக வாசிகள். சிங்கப்பூரில் மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய முடியாவிடினும், சாதகமான நிலஅமைப்பு, கல்வி, வர்த்தகத் திறமை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டு  மேற்கு, கிழக்கு நாடுகளுக்கு ஒரு சிறப்பு நிலை மையமாகத் தன்னை உருவாக்கிக்கொண்டுள்ளது இந்நாடு .

சிங்கப்பூரில் உணவு, குடிநீர் தொடங்கி  கட்டடப் பொருட்கள், ஆள் பலம் என சகலத்தையும் இறக்குமதி செய்கிறது. இதனை நன்குணர்ந்து தொழில்நுட்ப உதவியுடன்  கடல் பாதையை சீரமைத்து, பாறை.மணல் இட்டு செயற்கைத் தீவுகளை உருவாக்கி இணைத்து வருகிறது.

செம்மையான சிறு இந்தியா

ஆசிய நாட்டில் பல்லின மக்கள் மத்தியில் தமிழர் கலை, கலாச்சாரப் புகழ் பெருமை தொடர்ந்து வளருமிடம் சிங்கப்பூர். இதில் தமிழர் கலாச்சாரம் போற்றும் சிறு இந்தியா, அந்நாட்டின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட இரத்தினக் கல் போன்ற பெருமைக்குரியது.

  • யோகி

 

Tags: , , ,

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. சொ. ஞானசம்பந்தன் says:

    சிறந்தகட்டுரை, பாராட்டுகிறேன்.

  2. Sundaramoorthy Adhiyagavel says:

    அருமை! சிறந்த நடை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad