\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது

சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம்.

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். மற்றைய மாநாடுகள் போல, இந்த 10‑ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், சிறப்பாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ் மக்களின் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இம்மாநாடு சிறப்புற நடக்க, வட அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள பிற தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்;  பிற அரசாங்க அமைப்புகளின் உதவிகளையும் நாடி ஏற்றுக்கொள்ளவும் விழைகின்றோம்.

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR)

உங்களில் பலருக்கு இந்த ஆய்வு மன்றத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். இது 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகக் கீழக்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது டெல்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சை சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா,  செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் சுவெல்லபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தே.போ.மீனாட்சி சுந்தரனார், முனைவர் வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர். இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலைசிறந்த நோக்கம்: “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.”

இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்:

ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன.

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

இம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வி.சி.குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்காவாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும் அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோமா இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019‑ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பெரும் தமிழ் ஆர்வலரும், முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், மருத்துவர் சோமா இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராகப்  பணி புரிந்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் உயர்திரு சுந்தர் குப்புசாமி அவர்களும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு மணி குணசேகரன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள் ஆய்வுக் குழுவின் (Academic Committee) தலைவராகவும், தற்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளராக விளங்கி வரும் பன்மொழிப்புலவர், முனைவர் பி மருதநாயகம் அவர்கள் ஆய்வுக் குழுவின் இணைத்தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளனர். உலகத் தமிழ்ப் பேரறிஞர் பலர் அறிவுரை குழுவிலும் (Advisory Panel), மாநாட்டின் ஆய்வுக் குழுவிலும் (Academic Committee) பங்கேற்றுள்ளனர். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களிலுள்ள பன்னாட்டுத் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக்கு குழுவின் துணைத்தலைவர்களாகப் பணிபுரிகின்றனர்.

மைய ஆய்வுப் பொருளும் (Theme) ஆராய்ச்சி தலைப்புகளும் (Topics)

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது.

“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”

இந்த மாநாடு சிறப்புற அறிஞர் பெருமக்கள் சிறந்த ஆராய்ச்சித் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுகள் செய்யவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கவும் அழைக்கிறோம்.

ஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், “ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்” (ABSTRACT), “ஆராய்ச்சி விரிவுக்  கட்டுரையையும்” (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும் அனுப்பவேண்டிய தேதி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்: www.iatrnew.org or https://icsts10.org or email iatr2019@fetna.org.

இந்த மாநாட்டிற்கு வருகை தந்து பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

அன்புடன்

புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து

பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்

தலைவர், ஆய்வுக் குழு

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

மருத்துவர் சோமசுந்தரம் இளங்கோவன்

தலைவர், ஒருங்கிணைப்புக் குழு

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

பிற செய்திகளுக்கு:
திரு சுந்தர் குப்புசாமி

தலைவர், தமிழ்ச் சங்கப் பேரவை

மின்னஞ்சல்:president@fetna.org

www.fetna.org

திரு மணி குணசேகரன்

தலைவர், சிகாகோ தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல்:president@chicagotamilsangam.org www.chicagotamilsangam.org

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad