\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நான் நாத்திகன்

“சொர்க்கத்திற்கு முகவரி என்ன?”…

nathikan_naan_620x860எனது ஏழு வயது மகள் தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தட்டை மும்மரமாகத் தேடிக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று வெறுமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென மனதில் எழுந்தது இந்தக் கேள்வி.

வாழ்த்தட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிப் பல ஆண்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் – என்னைப் போல – மனைவிமார்களுக்குக் குழந்தைகள் சார்பாக ஒரு வாழ்த்தட்டை வாங்க வந்ததாக ஊகித்துக் கொண்டேன். தனியாக வந்திருக்கும் ஆண்களை அவரவர்களின் அன்னையருக்காக வந்திருப்பதாக எண்ணுகையில் சற்றுப் பொறாமை உண்டானது. நானும் என் சார்பாக என் அம்மாவுக்கு ஒரு வாழ்த்தட்டை வாங்கலாமென்று தோன்ற, அப்பொழுது எழுந்த கேள்வி – “எங்கு அனுப்புவது?”…

இன்றும் நினைத்துப் பார்த்து அதிசயிக்கும் என் அம்மா. ஆறு வயதில் பள்ளி செல்ல மறுத்த என்னை ஒரு முறை முதுகில் (வலிக்காமல்) அடித்த என் அம்மா, ஆறாவது படிப்பதற்காகத் தினமும் ஒரு மைலுக்கு மேல் நடந்து சென்று திரும்பும் என்னைக் கரிசனத்துடன் சாயுங்கால நேரம் வாசலில் காத்திருந்து வரவேற்ற என் அம்மா.. பத்து மைல்களுக்கு மேல் சைக்கிளில் பக்கத்து ஊர் சென்று பதினொன்றாம் வகுப்பு படித்துத் திரும்பும் எந்தன் கால்களை ஒவ்வொரு இரவும் ஒத்தடம் கொடுத்த என் அம்மா. பொறியியற் படிப்புக்குப் பட்டிணம் போவதற்குத் தயாராகையில் கதறியழுத என்னைப் புத்திரச் சோகம் மறைத்துப் புத்திமதி சொல்லியனுப்பிய என் அம்மா.. கடவுள் கண் திறந்து அயல் நாட்டில் வேலை கிடைத்து மறுநாள் விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டிய எனக்கு வந்த நூற்றி மூன்று டிகிரி காய்ச்சலைப் பிரிவுத் துன்பமெனப் பக்குவமாய் உணர்ந்து பரிவுபேசி வழியனுப்பிய என் அம்மா..

அகக் கண்முன் தோன்றியது அந்தக் களையான முகம். எத்தனை கருணை, எத்தனை கனிவு, எத்தனை முதிர்ச்சி, பொறுமை, பெருமை. வாழ்க்கை கற்றுக் கொடுத்த பல பாடங்களைத் தன்னுள்ளே தேக்கி வைத்து, தன் பிள்ளைகளின் மேல் எந்தச் சோகத்தின் சாயலும் சற்றேனும் விழாமல் தன் சிறகுக்குள் மூடி வைத்துக் காத்த அற்புதப் பறவை… எனக்குச் சொந்தச் சிறகுகள் முளைத்து, கூடு விட்டுப் பறந்து பல இடங்களுக்குச் சென்று, பல்வேறு அனுபவங்களைச் சந்தித்து, பழகி, கற்றுத் தேர்ந்து காலம் பல ஆகினும், அந்த அன்னையின் ஆளுமைக்கு நிகராக இன்னொருவரை இன்று வரை சந்திக்கவில்லை.. இது வெறும் உணர்வு பூர்வமான முடிவா? தெரியவில்லை.

அவ்வளவாகப் படிப்பு இல்லை. ஆனால் அசாத்தியமான புத்திக் கூர்மை. என்ன படித்திருந்தாலும் அதில் சாதித்திருப்பாரென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே அறுபது வருடங்களுக்குமேல் வாழ்ந்த பின்னர், முதல் முறை நகரப் பிரவேசம் அப்போது சென்னையில் படித்துக் கொண்டிருந்த நான், எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்று காத்திருந்தேன். நடை மேடையில் வந்து நின்ற இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் ஒவ்வொரு பெட்டியாக ஓடி ஓடி, S2 வை கண்டுபிடித்து, இறங்கும் மனிதக் கூட்டத்தின் எதிர் திசையில் மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு மத்தியில் ஒருவனாக முண்டியடித்து ஏறிச் சென்றேன். அங்கு அமைதியாக, மகன் வருவான் என்பதில் எள்ளளவும் சந்தேகமின்றி அமர்ந்திருந்த அம்மாவை பார்க்கும் வரை என் உயிர் என் கையில் இல்லை, அது ஒரு காலம்.

வெளியில் வந்து ஆட்டோ பிடித்து மயிலாப்பூரில் வாழும் மாமா (அம்மாவின் உடன்பிறந்த தம்பி) வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம். அம்மாவை நான் வாழும் ரூமுக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று ஆசை. “பிரம்மசாரிங்க ரூமில சாப்பாட்டுக்கு என்னடா பண்ணுவ” – பிராக்டிகலான மற்றும் எங்கள் குடும்பத்தில் மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருந்த மாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவரின் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நகரத்தின் பிரம்மாண்டம், மொத்தமாக ஆயிரம் பேர் மட்டுமே வாழும் கிராமத்திலிருந்து வந்த என் அம்மாவுக்கு எந்தப் பரபரப்பையோ, பிரமிப்பையோ ஏற்படுத்தவில்லை. வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரே தராசில் பார்க்கும் அவரின் பக்குவம் என்னை எப்பொழுதும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

அனைவருடனும் மணிக்கணக்கில் உரையாடி, உறவாடி, உண்டு முடித்தபின் சற்று அயர்ச்சியாக ரூமில் சென்று படுத்திருந்த அம்மாவின் பக்கம் சென்று அவரைக் கட்டி அணைத்தபடி படுத்திருந்த கல்லூரி செல்லும் இளைஞன் என்னைப் பார்த்து… “தப்பு பண்ணிட்டேன், அவங்கம்மாவை அவனோட அனுப்பி வச்சுருக்கணும்” என்று மனைவியிடம் சொன்ன மாமாவின் கரிசனமும், பக்குவமும் என் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.

அம்மாவின் முதல் விமானப் பிரயாணம்… நானிருந்த அயல் நாடு நோக்கி.. மொழி தெரியாமல், பழக்க வழக்கங்கள் புரியாமல், உணவு வகைகளைப் பற்றி ஒரு புரிதலுமின்றி, பல மணிநேரங்கள் பயணிக்க வேண்டும், இரண்டு விமானத் தளங்களைக் கடந்து எப்படி வந்து சேர்வாரோவென்ற பதைபதைப்பு எனக்கு இரண்டு நாட்களாகச் சாப்பாடு தண்ணீர் சேரவில்லை.. சென்னையிலிருந்து விமானம் புறப்பட்டதென்ற தொலைபேசிச் செய்திக்குப் பிறகு இயற்கை உபாதைகளுக்குப் பதில் சொன்ன நினைவுகூட இல்லை. ஒரு விமானத் தள மாற்றத்தையாவது குறைக்கலாமென்ற எண்ணத்துடன் சிகாகோ வரை காரோட்டி செல்ல முடிவெடுத்தேன்.

பல மணி நேரம் பயணம் செய்து களைப்புடன் வரும் அம்மாவிற்கு மேலும் சில மணி நேரம் என் சிறிய காரில் பயணிப்பது சுகமாக இருக்காதேயென்ற நினைப்பு ஒரு வசதியான வேன் ஒன்றை வாடகைக்கு எடுக்கச் செய்தது. அன்று இரவு சிகாகோவிலேயே தங்கினால் சிறிது ஓய்வு கிடைக்கலாமென்று முடிவு செய்து விமான நிலையமருகிலேயே ஒரு தங்குமிடமும் ஏற்பாடு செய்தாகி விட்டது. ஆறு மணி நேரம் ஒருவனாக வேனில் சிகாகோ நோக்கிப் பயணம். மனம் மட்டும் வாயு வேகத்தில் பலமுறை விமானத் தளம் மற்றும் வானில் பறக்கும் விமானம் வரையிலும் சென்று வந்தது. அம்மா சாப்பிட்டிருப்பாரா? ஒரு வேளை அசைவ உணவாக இருக்குமோவென்ற பயத்தில் எதையும் தொடாதிருப்பாரோ? விமானத்திலுள்ள சிறிய கழிவறையும் அதிலுள்ள பல உபகரணங்களையும் உபயோகப் படுத்துவது அறியாமல் வேதனை பட்டு கொண்டே வருவாரோ? ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் அவரின் ஆர்த்ரைட்டிஸ் அதிகமாகியிருக்குமோ? அடுத்த முறை பிஸினஸ் க்ளாஸில் அழைத்து வர வேண்டும்.. இடையில் வரும் விமான நிலையங்களில் சரியாக வழி கேட்டு வந்து சேர்வாரோ? எங்காவது வழி தவறிப் போனால் எப்படி விளக்கிச் சொல்லிச் சரியான விமானம் பிடித்து வருவார்? ஆங்கிலம் பேச இயலாதே.. மனம் முழுதும் கேள்வி.. இந்த மாதிரி நேரங்களில் எனக்கே உரித்தான அத்தனை கெட்ட கனவுகளும் வந்து என்னைத் துரத்தின..


பல மணி நேரங்களுக்கு முன்னரே விமானத் தளம் சென்றாகி விட்டது. சர்வத் தேசப் பயணிகள் வரும் வாசலில் பதைபதைத்த விழிகள் கரியக் கூந்தலுடன் வரும் அத்தனை வயதான பெண்மணிகளையும் நோக்கிப் பயணித்தது. பத்து வருடங்களுக்கு முன் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் காத்திருந்த எனக்கும், இன்று இந்தச் சிகாகோ விமான நிலையத்தில் காத்திருக்கும் எனக்கும் பெரிய வேறுபாடோ பரிணாம வளர்ச்சியோ காணப்படவில்லை. என் அம்மாவிடமும் பெரிய மாற்றமில்லை. புகை வண்டியினுள் அமைதியாக அமர்ந்திருந்த அதே தீர்க்கமான முகம் கண்ணாடிக் கதவுகளுக்குப் பின்னே அதே அமைதியுடனும், பயணக் களைப்பைத் தாண்டிய தெளிவுடனும் தென்படத் துவங்கியது. தூரத்திலேயே என்னைப் பார்த்து விட்டார். பார்த்ததற்கான ஒரு அங்கீகாரம் மட்டும் அவரின் வெளிப்பாடுகளில், அது தவிர வேறு பெரிய பரபரப்போ, பதைபதைப்போ சற்றும் காணப்படவில்லை.

“என்னப்பா, எப்படி இருக்க? உடம்பு சொகமா.. இந்தாப்பா, இந்த பாஸ்போட்டை பத்திரமா வை. ஊருக்குத் திரும்பும்போது எங்கிட்ட குடுத்தாப் போதும்”.. என்ன நிதானம், தெளிவு… இந்த வயிற்றில்தான் நான் பிறந்தேனா. என்னை நானே கேட்டுக் கொண்டேன். படித்திருந்தால் என் அம்மா இந்த உலகை ஆண்டிருப்பார்.. மீண்டுமதே நினைப்பு, ஆச்சர்யம் மற்றும் பெருமை.

ஆறு மாதக் காலங்கள் எவ்வளவு சுகமான நாட்கள். எங்கெங்கெல்லாம் சென்றோம். சக்திக்குட்பட்டதையெல்லாம் செய்து முடித்தேன். பல கார்ப் பயணங்கள், சில விமானப் பயணங்கள், அளவுக்கடங்காத புகைப்படங்கள், அன்பு காட்டும் நண்பர் பலரின் இல்லக் கூட்டங்கள். அம்மா கிட்டத்தட்டச் சொந்த ஊரையே மறந்து விட்டார். நானும் எனது பிள்ளைப் பருவத்தை மீண்டும் எய்தியிருந்தேன். ஒவ்வொரு இரவும் அருகே படுத்து உறக்கம். உறங்குவதற்கு முன் சுவையான பல சம்பாஷணைகள், வம்பு பேசினாலும் அதிலும் ஒரு நகைச்சுவை, இன்பம்.. வாய் கடந்து, மொழி கடந்து, வயது கடந்து உள்ளங்கள் சம்பாஷிக்கும் நேரம்.

அதன்பிறகு அம்மா பலமுறை வந்து சென்றார். நானும் பல முறை ஊர் சென்று திரும்பினேன். ஒவ்வொரு முறையும் சுகமான அனுபவங்கள். வெளியில் காட்டிக் கொள்ளாவிடினும் ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையாகி மனதில் உணர்வேன். எனக்குக் குழந்தை பிறந்த நேரத்தில் அம்மாவுக்குப் பளு தூக்கும் சக்தி முழுவதுமாகப் போயிருந்தது. சோஃபாவில் அமர்ந்து கொண்டு என் குழந்தையை மடியில் தர சொல்வார். என் குழந்தை அவரின் மடியில் அமர்கையில் நானே அமர்ந்தது போன்ற உணர்வு ஏற்படும். வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளே அனுபவித்து மகிழ்வேன். உறவுகள் மனிதக் குலத்திற்கு எவ்வளவு பலம். சில உணர்வுகளை விவரிக்க இயலாது, அனுபவித்தால் மட்டுமே விளங்கும் சில சுகங்கள்.

மற்றொரு முறை அம்மா என்னை நோக்கி வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாகி விட்டது. விமானப் பயணத்திற்கான அனைத்துத் தயாரிப்புகளும் முடிந்தாகிவிட்டது. அம்மா வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் அலுவலகப் பணியாய் தற்செயலாய் இந்தியா சென்று திரும்பிய நான், அம்மாவுக்குச் சுலபமாக இருக்கட்டுமென்று அவரின் துணிமணிகள் பேக் செய்த பெட்டியைக் கூட எடுத்து வந்து விட்டேன். பொதுவாக அயல்நாடு பயணிப்பதற்கு முன் ஒரு முறை வழக்கமான மருத்துவரிடம் செக்கப் செய்து கொள்ளச் சென்ற அம்மாவிற்கு வழியிலேயே மாரடைப்பு. ICU, பல ஃபோன் கால்கள், கணக்கில்லாத மருந்துகள், மருத்துவச் சாதனங்கள், மருத்துவர்கள்.. எல்லாம் பயனற்றுப் போனது. உலகின் மிகப் பெரிய சக்தி ஒன்றை முடிவு செய்தபின் எந்த மருத்துவரால் என்ன செய்ய இயலும்?

என் அம்மாவை எனது ஊர் விமான நிலையத்தில் வரவேற்க வேண்டிய அதே நாளில், நான் அழுது அழுது சிவந்த கண்களுடன், மனையாளின் அரவணைப்பில் சென்னை விமான நிலையத்தில் சென்று இறங்கினேன். சென்னையில் இறங்கி ஊர் செல்வதற்கு முதல் முறையாக வேதனை பட்டு கொண்டே வெளியே நடக்கலானேன்.

முன்னையிட்ட தீ முப்புறத்திலே

பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே

அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே

யானுமிட்ட தீ மூள்கமூள்கவே ……

பட்டிணத்தாரின் தத்துவார்த்தமிகுந்த கவிதை அந்தச் சோகச் சூழலிலும் மனதுள் ஓட, என்னை கருப்புள்ளியிலிருந்து கருத்தான காளையாய் உருவாக்கிய என் அம்மாவைத் தீயின் பிடியில் அள்ளிக் கொடுத்த அதிர்ச்சி மீளாமல் அந்தக் கோபர் கேஸ் க்ரிமெட்டோரியத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன்…..

“அப்பா… அப்பா…” பல தடவை அழைத்துப் பதில் வராத கோபத்தில் கையைப் பிடித்து என் ஏழு வயது மகள் உலுக்கி எடுக்க, உலக நினைப்பு மறுபடியும் வந்தவனாய்க் கையில் ஒரு வாழ்த்தட்டையுடன் நின்ற மகளைக் கூர்ந்து பார்க்கிறேன். பனித்த என் கண்களைப் பார்த்த என் மகள், “அப்பா, டிட் யு க்ரை?” எனக் கரிசனத்துடன் வினவ “நோ கண்ணம்மா, சம்திங்க் காட் ஆன் டு மை ஐஸ்” எனச் சரளமாய்ப் பொய் சொல்லி அந்த இடத்தைவிட்டு அகன்றேன்.

காரில் வீடு திரும்பும் வழியெல்லாம் கோபர் கேஸ் நினைப்புத்தான். பக்கம் பக்கமாக அன்னையின் சாவிற்குப் பிறகு தத்துவமெழுதிய ஆதி சங்கரரையும், ரமண மகரிஷியையும், பட்டிணத்தாரையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களைப் படித்ததற்கான பயனெதுவும் புலப்படவில்லை. என் அம்மாவின் பக்குவம் எனக்கு என்று வரும்? பதிலில்லை.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவசரமாய் ஓடிச் சென்று, அம்மா வந்தால் எப்பொழுதும் தங்கும் அறைக்குள் நுழைந்து, அவர் வருவதற்கு முன்னரே நான் எடுத்துக் கொண்டு வந்த அவரின் புடவையில் முகம் புதைத்து அழ வேண்டுமென்ற உந்துதல். ஏழு வயது மகளின் இடைவிடாத கேள்விகள் மற்றும் அவளின் முன் நான் காட்டிக் கொள்ள வேண்டிய நம்பிக்கை மிகு உருவம், என்னைப் பார்த்து அவள் அழுதுவிடக் கூடாது என்ற நினைப்பு இவையனைத்தும் என்னைத் தடுத்தன, அம்மாவின் அறைக்குச் செல்லவில்லை. இதுதான் அம்மாவின் பக்குவமோ? நான் அழக்கூடாது என்பதால்தான் என்முன்னர் அவர் அழுததில்லையோ? பக்குவமா அல்லது வெறும் தியாகமா? அல்லது தியாகத்தால் வந்த பக்குவமா? தெரியவில்லை..

அயல் நாட்டு வாழ்வில் பலமுறை நினைத்ததுண்டு – “அன்னையர் தினம்” என்று ஒன்று வேண்டுமோ? எல்லாத் தினமும் அன்னை குறித்து எண்ணம் வேண்டாமா, இதற்காக ஒரு நாள் ஒதுக்கி அன்று மட்டும் அம்மாவை நினைத்தால் போதுமா? கூட்டுக் குடும்பத்திற்குப் பழக்கமில்லாத இந்தச் சமுதாயத்திற்குத்தான் அன்னையர் தினமெல்லாம், நமக்கு ஏன் என்றெல்லாம் நினைத்ததுண்டு.. இன்று அந்த எண்ணம் முழுவதுமாகத் தவறோ என்ற ஞானோதயம் தோன்ற ஆரம்பித்தது….

கடவுள் ஒவ்வொருவரின் இல்லத்திற்கும் பிரத்யேகமாகச் சென்று எல்லோரையும் கவனித்துக் கொள்வது இயலாதென்பதால் “அம்மா” என்று ஒருவரைப் படைத்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் வாழ்விலிருந்து அந்தக் கடவுள் மறைந்ததால் நானும் ஒரு நாத்திகனானேன்!!!

 

வெ. மதுசூதனன்.

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. Anonymous says:

    Lot of memories come back. Nice!!!!

  2. லெட்சுமணன் says:

    அம்மாவிற்கு கடிதம் எழுதும் போதெல்லாம்
    ஏதோ ஏதோ நினைவுகள் வந்து போகும்
    அம்மாவுடன் ராட்டினம் சுத்தியது
    அம்மா வாங்கி தந்த பஞ்சு மிட்டாய்
    அம்மாவுடன் போன கண்காட்சி
    அம்மாவுடன் நனைந்த மழை நாட்கள்
    எதை நினைத்து எழுதுவது எதை விடுவது
    இம்முறை கடிதம் எழுதும் போதும் அதே நினைவுகள்
    முகவரிக்கும் போது தான் நினைவுக்கு வருகிறது
    என்றோ தவிக்கவிட்டு சொர்க்கம் போன
    அம்மாவின் முகவரி எது என்று?
    முப்பொத்தொன்றாவது கடிதமும் அனுப்பப்படாமலேயே
    மூலையில் முடங்கி போனது.

  3. Sathyapriya S says:

    Excellent story Madhu. I had no clue when I first read the title of the story. Could relate a lot of incidents in this story to our personal life. Mom is universal and can never be replaced with anyone. This story did bring tears in my eyes and also made me feel her importance more than ever.

    Please do continue writing stories and help your readers feel their joy and sorrow through your writing. Didn’t know that you had such an hidden talent.

  4. Rini sahayaraj says:

    Pirinthu ponna ninaivugal ovvaru naalum kankalukul vanthu kondu thaan irrukum,
    Kanavagae alla kaneerae…
    So dont miss d opportunities to express your love …when they are near.

Leave a Reply to லெட்சுமணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad