\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

வாழ்க்கை  விடையில்லாத வினாக்கள் பல நிரம்பியது. உலகில் மிகச் சிலரே, மனதில் தோன்றும் வினாக்களுக்கு விடை தேட முனைவதில்லை. அவர்கள் மிக உன்னதமான மன நிலையிலிருப்போர் எனலாம். மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் இவர்கள். ஆனால் நம்மில் பலர் அவற்றிற்கு விடை காண முயல்கிறோம். அந்தத் தேடலின் முடிவில் கிடைப்பதைச் சரியான பதிலென்று மகிழ்வோர் சிலர். சில சமயங்களில்  தேடலின் முடிவுகள் புதிய, மேலும் சிக்கலான கேள்விகளை உண்டாக்கிவிடும். முன்னால் தொங்கும் கேரட்டைத் துரத்தியோடும் கழுதையைப் போல விடை கண்டுபிடிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறோம். எனினும் உலகை இயக்குவதும், வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்ப்பதும் இவ்வினாக்கள்.

பாமர மனிதர்,  அனுபவத்தில் உண்டாகும் வினாக்களுக்கு விடை தேடி அலைகையில், கவிஞர்கள் கற்பனையில் வினாக்களை உருவாக்கி, சில நேரங்களில் அவ்வினாக்களுக்கு விடை சொல்லாமல் தப்பித்து விடுவார்கள். கடந்த சில வாரங்களாக, அவ்வகையான திரைப்பாடல்களைப் பார்த்து வருகிறோம். அப்படி கவிஞர் கண்ணதாசன் எழுப்பிய கேள்வி ஒன்று

கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?

கையழகு பார்த்தால் பூ எதற்கு?

காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு

கருணை என்றொரு பேர் எதற்கு?

‘என் தம்பி’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. முதல் மனைவியின் பிள்ளையாக சிவாஜி கணேசனும், இரண்டாவது மனைவியின் இரண்டாவது பிள்ளையான, சிறுமி ரோஜா ரமணியும் இந்தப் பாடலில் இடம்பெறுவார்கள். தான் பிறந்தவுடன், தாய் நோய்வாய்ப்பட்டதால் தன்னை வளர்த்த அண்ணன் சிவாஜியின் மீது அதீத அன்பு அந்தக் குழந்தைக்கு. சிவாஜியும், அந்தக் குழந்தை மீது உயிரையே வைத்திருப்பார்.  தனக்கு கூட கிடைக்காத அன்பை மகள் அண்ணனுக்குக் கொடுப்பதை எண்ணி வருந்துவார் அந்த அன்னை. அந்தச் சமயத்தில் தோன்றும் பாடலில் வரும் வரிகள் இவை. உற்று கவனியுங்கள் பொன்னைப் போன்று பளபளக்கும் கண்களும், பூப்போன்ற மிருதுவான கைகளும் கொண்ட குழந்தையின் காலழகைப் பார்த்து பாடும் நாயகன், கடவுளே, அவளை கால் ஊனத்துடன் படைத்த உனக்கு கருணை என்ற பேர் எதற்கு எனக் கேட்கிறான்.

முத்து நகையே உன்னை நானறிவேன்

தத்துங்கிளியே என்னை நீயறிவாய்

நம்மை நாமறிவோம்

நிலவும் வானும் நிலமும் நீரும்

ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ?

நீயும் நானும் காணும் உறவு

நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ?

தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்

சித்திரத்தைப் போலே சீர் கொடுத்தாள்

என் மனதில் ஆட இடம் கொடுத்தாள்

இது தான் சுகமென வரம் கொடுத்தாள்

கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?

கையழகு பார்த்தால் பூ எதற்கு?

காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு

கருணை என்றொரு பேர் எதற்கு?

பல்லவியின் இரண்டாம் வரியில் தத்தும் கிளி என்பதில் தான் எவ்வளவு சூசகத்தைப் புதைத்துள்ளார் கண்ணதாசன். அம்மாவை விட அண்ணன் மீது குழந்தை கொண்ட பாசத்தை நிலவும் வானும், நிலமும் நீரும் பிரபஞ்சத்தில் எப்படி   ஒன்றோடொன்று பிணைந்துள்ளதை உவமைப்படுத்திச் சொல்கிறார். குழந்தையுடன் விளையாடும் பாடல் என்பதால் மகிழ்வுடன் தொடங்கினாலும் ‘காலழகு பார்த்தால்’ என்று நிறுத்தி தொடர்வதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனும், எழிலிசை வேந்தர் டி. எம். சௌந்தரராஜனும்  கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்பவர் கவனத்தை ஈர்த்துச் சிறப்பாக்கியிருப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமெனக் கொண்டாடப்படுகிறது.  உலகெங்குமுள்ள மாற்றுத் திறனாளிகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் விதமாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் இந்நாள் போற்றப்படுகிறது. தங்களது குறைபாடுகளைக் கடந்து தன்னம்பிக்கையோடு வாழும் இவர்களது வாழ்க்கை பிரமிப்பூட்டினாலும்,  ஏன் இப்படி என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.

இவர்களை வேறுபாடுகளுடன் படைத்த இறைவனுக்கு கருணாமூர்த்தி எனும் பேர் எதற்கு என்று கவிஞர் கேட்டது நியாயம்தானே?

மாற்றுத் திறனாளி கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் தமிழில் பல வெளிவந்துள்ளன. அவற்றில் இடம்பெற்ற பாடல்கள் சில அவர்களுக்குப் புத்துணர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்தவை.  சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ என்ற பாடலை அதற்கு முத்தாய்ப்பாய்ச் சொல்லலாம்.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்

உடைந்து போகக் கூடாது

என்ன இந்த வாழ்கையென்றே

எண்ணம் தோன்றக் கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயம் இல்லை சொல்லுங்கள்

காலப்போக்கில் காயமெல்லாம்

மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே

மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம்

கண்ணில் என்ன நீரோட்டம்

ஓரு கனவு கண்டால்

அதை தினமும் என்றால்

ஓரு நாளில் நிஜமாகும்

வாழ்க்கை கவிதை வாசிப்போம்

வானமளவு யோசிப்போம்

மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்

மூச்சு போலே சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு

லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை

உறுதியோடு போராடு

மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்

அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா?

துக்கம் என்ன என் தோழா?

ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்

அந்த வானம் வசமாகும்

சின்னக்குயில் சித்ராவின் குரலில், பரத்வாஜின் இசையில்  வெளிவந்த இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் பா. விஜய். சித்ராவுக்கும், விஜய்க்கும் 2004ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை வாங்கித் தந்த பாடலிது.

இவ்வாறு வெளிப்படையாகச் சொல்லாமல் வினாக்கள் மூலம் நுணுக்கத்துடன், மயிலறகால் வருடி இதந்தந்த பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்?

முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் – பல

மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

பேச முடியாத நாயகியை நோக்கி, குறையாத காதலுடன் நாயகன் பாடும் பாடல். உன் மனவுணர்வை என்னால் புரிந்து கொள்ளமுடியும். உனக்கு  மொழி அவசியமில்லை. உன் அழகை வருணிக்க எந்த மொழியிலும் வார்த்தையில்லை. அம்மொழிகள் உன் அழகைக் கண்டு பாடம் பெறவேண்டும். அந்த வகையான மொழி  உனக்கு தேவையில்லை. நான்கே நான்கு வரிகளில் இத்தனை பரிமாணங்களை ஒளித்து வைக்க கண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியப்படும். குறைகளைப் பின்தள்ளி சன்னமாக காதல் இழையோடும் பாடல் இது.  

இது ஒரு புறமிருக்க,,   ‘ம்ம்ம்ம்….. மௌனமே பார்வையாய் ‘ என்று வார்த்தையில்லாத மௌனராகத்துடன் பல்லவியைத் தொடங்கிய மெல்லிசை மன்னரின் கற்பனைத் திறனைக் குறைத்து மதிப்பிடமுடியுமா? தனது மென்மையான குரலால் அச்சொற்களுக்கும், ராகத்துக்கும் தேன் தடவிய பி.பி. ஸ்ரீனிவாஸ்; காதல் ததும்பும் கனிவுடன் நாயகனாக முத்துராமன், உண்மையான நாணத்துடன் ஜாடை பேசி கிறங்கடிக்கும் நாயகியாக விஜயகுமாரி என அனைவரும் பிரமாதப்படுத்திய ‘கொடிமலர்’ படப் பாடல் இது. இயக்கம் யாரென நினைக்கிறீர்கள். சென்ற கட்டுரையில் நாம் பார்த்த புதுமை இயக்குநர் C.V.  ஸ்ரீதர். ‘Mesmerize’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘அறிதுயில் நிலை’ என்கிற பொருள் தருகிறார்கள். அப்படி ஒரு நிலையை அளிக்கும் பாடல் இது.

மௌனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும்

நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும்

அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்

தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்

அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் –

என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்?

முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் –

பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

அடுத்தப் பாடலின் வரிகளை தட்டச்சு செய்யும் பொழுதே கண்கள் குளமாகி விட்டன. ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதும் இதே மனநிலை தான். இவ்வளவு வெள்ளந்தியான மனிதரும், எளிமையான வாழ்வும் ஏன் இப்பொழுது இல்லை?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?

கால்களில்லாமல் வெண்மதி வானில்

தவழ்ந்து வரவில்லையா? – இரு

கைகளில்லாமல் மலர்களை அணைத்து

காதல் தரவில்லையா?

காதல் தரவில்லையா?

காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து

காதல் உறவாடுவேன் உயர்

மானம் பெரிதென்று வாழும் குலமாதர்

வாழ்வின் சுவை கூறுவேன்

வாழ்வின் சுவை கூறுவேன்

உடல் குறைபாடுள்ள கணவனின் மனதுக்கு ஆறுதலளித்து, நம்பிக்கையூட்டும் வகையில் மனைவி பாடுவதான பாடல். ‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உனக்கு நானிருக்கிறேன் என்பதை உணர்த்தும்  ‘காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன்’ எனும் வரியில் தான் எவ்வளவு அனுசரணை; எவ்வளவு அழகு.

மெல்லிசை மன்னரின் மிகச் சிறப்பான உத்தியை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். சரணங்களை முடித்து, பல்லவியோடு இணைக்குமிடங்களில் ராகத்தை அனாசயமாக வளைத்து, ஆங்கிலத்தில் ‘seamless’ என்று சொல்வார்களே அது போல் எந்த நெருடலுமின்றி நேர்த்தியாகச் சேர்ப்பதில் வல்லமை பெற்றவர் அவர். இந்தப் பாடலில் ‘மாற்றம் காண்பதுண்டோ?’, ‘காதல் தரவில்லையா?’, ‘வாழ்வின் சுவை கூறுவேன்’ என்ற சரணங்களின் கடைசி வரிகள் இரண்டிரண்டு முறை வரும். முதல் முறை சரணத்தின் மெட்டுக்கு இசைவாகவும். இரண்டாம் முறை மெட்டு மாறி பல்லவிக்குப் பாலமிடும். அவரது இந்த அபாரத்திறன் வரிகளுக்கு அடிக்கோடிடுவதுடன், பாடல்களில் அதிர்வுத்தன்மையை நீக்கி மெல்லிசையாக மாற்றிவிடுகிறது.

மேற்கண்ட பாடல் பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்றது. இப்படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து’ என்ற  அழகான தெம்மாங்கு பாடல் ஒன்றுண்டு. அடுத்த சந்திப்பில் இந்தப் பாட்டைப் பற்றி பேசுவோம்.

  • ரவிக்குமார் –

 

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad