Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம்

“இந்தக் கோவிலுக்குத் திட்டமிட்டெல்லாம் வர முடியாது. தற்செயலா வந்தா தான் உண்டு” என்று அந்தக் கோவிலின் அர்ச்சகர் சொன்னது போல் தான் எங்களது அந்தப் பயணமும் அமைந்திருந்தது.

கோவில் -இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் திருக்கோவில்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இராமநாதபுரம் பக்கம் உள்ளே பத்து கிலோமீட்டர் இறங்கிச் சென்றால், உயர்ந்த கோபுரங்கள் கொண்ட இந்தக் கோவிலைக் காணலாம்.

சிறிய ஊர் தான். அதற்குப் பெரிய கம்பீரத்தைக் கொடுக்கும் விதமாக இந்தக் கோவில் வீற்றிருக்கிறது. நாங்கள் காலை எட்டு மணிவாக்கில் சென்றிருந்த சமயம், சுற்றிலும் இருந்த கடைகளில் பல திறந்திருக்கவில்லை. ஆனால், கோவிலின் பிரமாண்ட கதவுகள் திறக்கப்பட்டுப் பக்தர்கள் உள்ளே சென்றுக்கொண்டிருந்தனர். அவ்வளவு பெரிய கோவிலுக்கு வேண்டிய கூட்டமாக அது இருக்கவில்லை.

இந்தக் கோவிலில் முதன்மையாக இருப்பவர்கள், மங்கள நாதர் என்றழைக்கப்படும் சிவபெருமானும், மங்கள ஈஸ்வரி என்றழைக்கப்படும் பார்வதியும், மரகதத்தில் அமைந்திருக்கும் ஆதி நடராஜரும். கூட்டம் அதிகம் இல்லாததால், வரும் சொற்ப பக்தர்களிடம் நிறைய நேரம் செலவிட்டு, கோவிலின் தல புராணத்தை விளக்கி கூறுகிறார்கள், இங்கிருக்கும் அர்ச்சகர்கள். இந்தத் தலத்தில் தான் சிவன் பார்வதியிடம் வேத ரகசியத்தைக் கூறியதால், இவ்வூர் உத்திரகோசமங்கை என்றழைக்கப்படுகிறதாம். இதுவே, உலகின் முதல் சிவன் கோவில் என்றும் இதன் வரலாற்றுச் சிறப்புகளையும் ஒரு பதாகையில் எழுதி, கோவிலின் நுழைவாயில் பக்கம் வைத்திருக்கிறார்கள், இங்கிருக்கும் பக்தர்கள் குழு.

3000 ஆண்டுப் பழமையான கோவில் என்கிறார்கள். பாண்டிய மன்னர்களால் விஸ்தரித்துக் கட்டப்பட்ட இக்கோவிலை, பிறகு ஆதி சைவர்கள் பராமரித்தனர். அதன் பிறகு, ராமநாதபுர சமஸ்தானத்தின் வசம் இக்கோவில் சென்றது. தற்சமயம் வரை, இக்கோவிலைப் பராமரித்து வருவது ராமநாதபுர சமஸ்தானம் ஆகும். இங்கு ஒரு இடத்தில் சேதுபதி ராஜாவின் சிலையைக் காண முடிந்தது. இந்தச் சமஸ்தானத்தின் தற்போதைய ராணியின் படமும் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. நாங்கள் சென்றிருந்த சமயம், சில சீரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

மேலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, இங்கிருக்கும் மரகத நடராஜரைப் பற்றியும், 3000 ஆண்டுப் பழமையான இலந்தை மரம் பற்றியுமாகும். இங்கிருக்கும் மரகத நடராஜர் வருடம் முழுக்க, சந்தனம் சார்த்தப்பட்டு இருப்பார். வருடத்தில் ஒருமுறை மட்டும் மரகதக்கோலத்தில் இந்த நடராஜரைக் காணமுடியும். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன், மீண்டும் நடராஜர் மீது சந்தனம் சார்த்தப்படும். விலக்கி எடுக்கப்பட்ட சந்தனத்தைத் தண்ணீர் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள். இந்த நடராஜர் சன்னிதானத்தின் மேற்புறம் இயற்கையான வண்ணக்கலவையால் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் அழகாக இருக்கின்றன.

பச்சைப்பசேலென்று இங்கிருக்கும் இலந்தை மரத்திற்கு வயது 3000 ஆண்டுக்களுக்கு மேல் என்று சொல்வதை நம்ப முடியவில்லை. இராமநாதபுரம் பக்கம் வறட்சி எப்படி இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய வறட்சிக் காலங்களைத் தாண்டி இம்மரம் இன்னமும் ஜம்மென்று நிற்கிறது.

மொத்தத்தில், இராமநாதபுரம் பக்கம் சென்றால், நிச்சயம் காண வேண்டிய இடமாக உத்திரகோசமங்கை உள்ளது என்று உறுதியாகக் கூறலாம். கோவிலின் உள்ளே நேர் வரிசையில் அமைந்திருக்கும் அந்த எண்ணற்ற தூண்களை, அந்த இயற்கையான ஒளியுடன் காணும் போது, மனதினுள் ஒரு மென்மையான நிம்மதி படர்கிறது.  பக்தி பரவசங்களைத் தாண்டி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாக இது இருப்பதால், இங்குச் செல்லும் அனைவருக்கும் ஒரு நல்ல திருப்தியை மங்கள நாதரும், நாயகியும் வழங்குகிறார்கள்.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad