Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை

மேல் நாடுகளில் வாழும் எம்மில் பலர் மின்னக பெரும் வர்த்தகம் என்றால் அமேசான் (Amazon), இ-பே (e-Bay) என்று சிந்திக்கும் போது, ஆசியா எவ்வளவு மாறியுள்ளது என்பதை அறியாதுள்ளோம். மேற்கில் பெரும் வெற்றி பெறும் அமேசான், கிழக்காசியாவில் சீன மின் வர்த்தகத் தாபனங்களை விட  பின்தங்கியுள்ளது. அமேசான் சென்ற ஆக்டோபர் 2019 கோலாகலமாக தனது வர்த்தகத்தை சிங்கப்பூரில் ஆரம்பித்தது. ஆயினும் அந்நாட்டின் வழமையான மின் வர்த்தக நுகர்வோர் அமேசானை வரவேற்கவில்லை.

ஏறத்தாழ சென்ற இரண்டு வருடங்களாக ஆசியாவிலும் தனது பிரைம் (Prime) சேவையைத் தந்தாலும், அமேசான்  சிங்கப்பூரில் 12வது இடத்தில் தான் உள்ளது. இதற்குக் காரணம் அவ்விடம் முன்னணியில் இருக்கும் சீன அலிபாபாவின் லசாடா (Lazada), Q0010, மற்றும் Shopee தாபனங்கள் வாடிக்கையாளருக்கு அளித்துவரும்  தனித்துவமான வர்த்தக அனுபவங்களே.

அமேசான் பல வருடங்களுக்கு முன்னர்  மின்னக வர்த்தகத்தை ஆரம்பித்து, மேல்நாட்டு வாடிக்கையாளரிடையே வர்த்தக நெறிகளை அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆயினும் ஆசிய மின்னக வர்த்தகங்கள் வாடிக்கையாளர் அனுபவங்களை பல தலைமுறைகள் தாண்டி எடுத்துச் சென்றுவிட்டன.

லசாடா சிங்கப்பூர் வர்த்தக தாபனம் தம் வாடிக்கையாளருக்கு ” வாங்குபவர் கேளிக்கை” (shoppertainment) எனும் சிறப்பு அனுபவத்தை தருகிறது. .லசாடா சராசரியாக சிங்கப்பூரில் 7.8 மில்லியன் மக்களை வரவேற்கையில், அமேசான் வெறும் 300,000 மக்களையே கண்டது.

பழைய சிந்தனையுடைய அமேசானின் கொள்கை துரிதமாக வாடிக்கையாளரை வாங்க வைத்து வழியனுப்பி விடுவது. லசாடாவின் வர்த்தக தந்திரம் இதற்கு நேர்மாறானது. தமது வாடிக்வையாளர் வர்த்தக அனுபவம் சந்தோசமானதாக இருக்கப் பொருள் பண்டம் விற்பதில் மாத்திரம் நேரம் செலவழிப்பதில்லை. எவ்வளவுக்கு ஆசிய வாடிக்கையாளர் வந்து நின்று கேளிக்கைகளை மின் தளத்தில் அனுபவிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் வாங்குதலும் அதிகரிக்கும் என்பதே இவ்விட வர்த்தகர்கள் அறிந்தது.

அமேசான் 2017 இல் இருந்து தனது முதலாவது ஆசிய வர்த்த இலாப வீழ்ச்சியை சென்ற ஆக்டோபர் 2019 எதிர் கொண்டது. அதன் இலாபம் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் குறைந்தது .  சென்ற வருடம் மூன்றாவது காலாண்டடில் அதன் பொருள் பண்ட போக்குவரத்துச் செலவுகள் வேறு 2.1 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அமேசான் தனது பிரைம் சேவையை ஆசியாவில் வெற்றி பெறச்செய்ய பன்மடங்கு செலவழிப்பதாக அறியப்படுகிறது.

மேலும் அமேசான் வியட்நாமிலும் போட்டி போட விரும்புகிறதாம். இதற்கு அமேசான் இந்தோனேசிய கோ – ஜேக் (Gojek) – என்னும் – மென்பொருள் மூலமான வாடகை வாகன சேவை தாபனத்தில் பங்கு வாங்க முனைகிறது என்றும் கூறப்படுகிறது.

அமேசான் போக்குவரத்துச் சேவை, துரித வினியோகம் என்றெல்லாம் தனது மேற்கத்திய நாடுகளில் தெரிந்த யுக்திகளைப் பாவித்தாலும், 360 மில்லியன் ஆசிய மின் வலய பயனாளர்களின்  பழக்க வழக்கங்களை அறிவதில் பின்தங்கியுள்ளது. ஆசியாவில் 90 சதவீதமானோர் தலையாய வர்த்தக, கேளிக்கை மற்றும் தொடர்பு உபகரணம் கைத்தொலைபேசியே. கிழக்கு ஆசிய நுகர்வோர் பொருளாதாரம் இவ்வருடம் 100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. மேலும் 2025 இல் மின் வர்த்தகம், மென்பொருள் வாடகைப் போக்குவரத்து 300 பில்லியனைத் தாண்டும் என சிங்கப்பூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதில் அடிப்படை வித்தியாசம் வாடிக்கையாளர்கள் அனுபவங்கள் எனலாம். மேல்நாட்டு வாடிக்கையாளர் வர்த்தக மின் தளங்களில் அதிக நேரம் செலவிட விரும்புவதில்லை. ஆசியாவில் மின் வரத்தகம் நடைபெறுவதே  கைத்தொலைபேசி செயலிகள் (MobileApps) மூலமே. இதுவே பன்மடங்கு வருமானத்தை ஆசிய மின்னக வர்த்தகர்களுக்குத் தருகின்றது.

இதற்கு ஒரு உதாரணம் சிங்கப்பூரின் மூன்றாவது பெரும் வர்த்தகதாபனமான ஷாப்பி . ஷாப்பி சீன டென்சென்ட் (Tencent) தாபனத்தினால் உருவாக்கப்பட்டது. ஷாப்பி  கூட வாடிக்கையாளர் வந்து தமது தொலைபேசி மென்பொருளில் நேரம் செலவழிப்பது முக்கியம் எனக் கருதுகிறது. இதனால் தொடர்ந்து பயன் பெறுகிறது. மேலும் தனது மேடையில் வர்த்தகம் செய்யும் பல வர்த்தகர்களுக்கும் கமிஷன் (Commission) நிவர்த்தி செய்து ஊக்குவிக்கிறுது மேலும் ஷாப்பி வினாவிடை, சொற்புதிர்கள், நேரலை (Live Stream) என பல கேளிக்கைகளைத் தருகிறது.

இணைய  உரையாடல் வசதிகள், சமூக வலைத் தொடர்புகள், பிராந்திய முக்கிய விடயங்கள் என பல தளங்களை வாடிக்கையாளருக்கு தந்து அவர்களது கவனத்தை வெற்றிகரமாக ஈர்க்கிறது. 2015இல் ஆரம்பித்த ஷாப்பியின்  95 சதவிகித வர்த்தக ஆர்டர்களும் கைத்தொலைபேசி மூலமே வருகின்றன.

இப்பேர்ப்பட்ட  வர்த்தகச் சூழலில் அமேசான் அமெரிக்கா மற்றும் மேலை  நாடுகளில் தற்போதைக்கு வெற்றி பெறினும் ஆசியாவின் வர்த்தக கலாச்சாரத்தை   அறிய வேண்டியது அவசியம். மேலை நாட்டு வாடிக்கையாளரின் குணாதிசயங்கள் கிழக்காசியாவில் எடுபடாது என்றறிந்த  அமேசான் உள்நாட்டு, பிராந்திய ரீதியான வர்த்தக எதிர்பார்ப்புக்களை அறிந்து செயற்பட்டால் தான் வாடிக்கையாளரை ஈர்க்க முடியும்.

– யோகி

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad