Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2019 டாப் சாங்க்ஸ்

ஒரு ஆண்டின் சிறந்த பத்துப் பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் எடுக்க வேண்டுமென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபடும் என்பதால், ஒரு பட்டியல் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமே. இருப்பினும், இந்த ஆண்டை நினைவுப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல்களின் பட்டியல் அவசியம் என்பதால், அதற்கென முயன்று தேர்ந்தெடுத்த பட்டியல் இது. இதில் ஆட்டம் போட வைக்கும் பாடல்களும் உண்டு, ஆழ்ந்து உறங்க வைக்கும் பாடல்களும் உண்டு. குழந்தைகள் ரசித்த பாடல்களும் உண்டு, பெரியோர்கள் ரசித்த பாடல்கள் உண்டு. இந்தாண்டு நீங்கள் ரசித்த பாடல்களில் சில இதில் இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் ரசித்த பாடல்களில் பல இதில் இருக்கும் என்பது நிச்சயம்.

நம்ம வீட்டு பிள்ளை – காந்தக் கண்ணழகி

இன்ஸ்டண்ட் ஹிட் கொடுப்பதில் வல்லவரான இமான், இவ்வருடமும் ஏறுமுகத்தில் இருந்தார். விஸ்வாசம் என்ற ஹிட் ஆல்பத்துடன் இவ்வருடத்தைத் தொடங்கியவர், நம்ம வீட்டு பிள்ளை என்ற இன்னொரு ஹிட் படத்துடன் இவ்வருடத்திற்கான கணக்கை முடித்துக்கொண்டார். அடுத்த வருடம் வெளிவரவிருக்கும் ரஜினி படத்தில் வாய்ப்பு என்ற நிறைவான செய்தி அமைந்தது இமானுக்கு இவ்வருடத்தில். சிவகார்த்திகேயன் பாடல் வரிகளுடன் அனிருத் பாடிய இப்பாடல், ‘கும்முற டப்புற’ எனக் குழந்தைகளின் ஃபேவரைட் ஆனது.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – கண்ணம்மா

”யாருப்பா அது பின்னணி இசை?” என்று கேட்கும் விதத்தில் இசையமைத்துக் கவனம் ஈர்த்து வருபவர் சி.எஸ். சாம். பாடலே இல்லாமல் இவ்வருடம் வெளிவந்து ஹிட்டடித்த ‘கைதி’ படத்திலும் இவரின் பின்னணி இசை பலரது பாராட்டைப் பெற்றது. சில பாடகர்கள் என்ன பாட்டு பாடினாலும் ஹிட் ஆகும். சித் ஸ்ரீராமிற்கு அப்படி ஒரு காலக்கட்டம் இது. அவருக்கு அடுத்தப்படியாக அனிருத்தைச் சொல்லலாம். பாரபட்சம் பார்க்காமல் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் பாடிக்கொடுக்கும் அனிருத் பாடிய இப்பாடல் இவ்வருடம் இளைஞர்களது கவனத்தை ஈர்த்த பாடல் எனலாம்.

கடாரம் கொண்டான் – தாரமே தாரமே

ஜிப்ரான் இசையமைத்து நிறையப் படங்கள் இவ்வருடத்தில் வந்தாலும், பாடல்களில் பலரையும் கவர்ந்தது, ’கடாரம் கொண்டான்’ படத்தில் வந்த ‘தாரமே தாரமே’ பாடல். வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் போன பல சிறு படங்களுக்கு இவ்வருடம் இவர் தான் இசை என்றாலும், சாஹோ என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு இவர் தான் பின்னணி இசையமைத்தார். கமல் தயாரிப்பில் விக்ரம், அபி, அக்‌ஷரா ஹாசன் நடித்த இப்படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றன. அதில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் இளம் தம்பதியினரின் கீதமாக ஹிட்டடித்தது.

நட்பே துணை – சிங்கிள் பசங்க

ஜாலியாக ஒரு பாட்டைப் போட்டு ஆட வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஆதி கதாநாயகனாக நடித்து வெளிவந்த இப்படத்திற்கு இசையும் அவரே. படமாகத் திரையரங்கில் வெற்றிப்பெற்ற இப்படத்தின் பாடல்கள் யூ-ட்யூப்பில் செம ஹிட். சிங்கிள் பசங்க, மொரட்டுப் பசங்க, கேரளா சாங் என இப்படத்தின் பாடல்கள் பசங்களின் ப்ளே லிஸ்ட்டை ஆக்ரமித்துக்கொண்டன. அது என்னமோ தெரியவில்லை, இப்பாடல்கள் கேரள நாட்டினரையும் கவர்ந்துவிட்டன. யூ-ட்யூப் கமெண்ட்ஸ் பகுதி முழுக்க மலையாளம் தான்.

கோமாளி – பைசா நோட்டு

கோமாவில் விழுந்து இருபது வருடம் கழித்து ஒருவன் எழுந்தால் அவனுடைய நிலைமை என்னவாகும் என்ற சுவாரஸ்யக் கருவுடன் எடுக்கப்பட்ட இப்படத்தின் வெற்றிக்கு ஹிப்ஹாப் ஆதியின் பாடல்கள் துணையாக இருந்தன. பாடல்களின் படமாக்கம் சிறப்பாக அமைந்ததும் பாடல்கள் ஹிட்டாக உதவியாக இருந்தது. ஜெயம் ரவிக்கு அவருடைய கேரியரில் மிகப் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மெகந்தி சர்க்கஸ் – கோடி அருவி

இளையராஜா ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் இசையமைப்பாளர்களில் ஒருவராகத் தற்சமயம் இருப்பவர், ஷான் ரோல்டன். பாடல்களில் இளையராஜாவை நினைவுப்படுத்துபவர் ஷான் என்றால், இப்படத்தின் இயக்குனர் சரவண ராஜேந்திரன் படம் முழுக்க இளையராஜா சார்ந்தே கதை எழுதியிருந்தார். பிரபலமில்லாத நடிகர்கள் நடித்த இப்படத்திற்குப் பாடல்களும், இசையுமே பலமாக அமைந்தன. முதலில் வெளியிடப்பட்ட ‘வெள்ளாட்டுக் கண்ணழகி’ வைரலாக ஆனாலும், பின்பு வெளிவந்த இந்த ‘கோடி அருவி’ நின்று ஹிட்டடித்தது.

பிகில் – சிங்கப்பெண்ணே

ரஹ்மான் இசையமைக்க வந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு விஜயுடனான காம்பினேஷன் வேலை செய்யத் தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளிவந்த மெர்சல், சர்க்கார் படங்களைத் தொடர்ந்து இந்தாண்டு வெளிவந்த பிகிலும் வெற்றி பெற்றது. பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமையப்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலும், மாதரே பாடலும் படத்தில் இடம் பெற்ற இடங்கள் உணர்வு பூர்வமானவை. ஒரு பக்கம், இப்பாடல்கள் பொது ரசிகர்களைக் கவர்ந்தது என்றால், இன்னொரு பக்கம் ‘வெறித்தனம்’ விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது.

பேட்ட – மரண மாஸ்

இந்த வருடம் வெளிவந்த தமிழ்ப் பாடல்களில் யூ-ட்யூப்பில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல், இந்த ‘மரண மாஸ்’ பாடல். பொங்கலுக்கு வெளிவந்த ரஜினிகாந்தின் ’பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியனுடன் இணைந்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் பாடினார். ஒரிசாவின் ’மா தகினகள்ளி சிங்ஹா பஜா’ என்னும் மேளக் குழுவின் மரணக் குத்து இசை, இப்பாடலின் செம மாஸாக அமைந்தது.

எனை நோக்கி பாயும் தோட்டா – மறுவார்த்தை

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அப்பொழுதே பெரும் வரவேற்பைப் பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு, படம் இந்த வருடத்தின் இறுதியில் தான் திரையரங்கிற்கு வந்து சேர்ந்தது. பாடல்கள் சேர்த்த புண்ணியம் படத்தைக் காப்பாற்ற முடியாமல் போனாலும், ‘மறுவார்த்தை’ என்ற இந்தப் பாடலை இங்குக் குறிப்பிடாமல் போனால் அது பெரும் பாவமாக வந்து சேரும். சித் ஸ்ரீராம் பாடிய பல ஹிட் பாடல்களில் இது முக்கியமானது. சிறப்பானது. இப்படத்தின் மூலம் தர்புகா சிவா, தமிழ் திரையிசை அமைப்பாளர்களில் முக்கியமானவரானார்..

 

விஸ்வாசம் – கண்ணான கண்ணே

அஜித், நயன்தாரா நடித்து, சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இமான் இசையில் வெளிவந்த இப்பாடல் சித் ஸ்ரீராமின் உருக்கும் குரலில் அமைந்தது. தனியாக இவருடைய குரலில் வெளிவந்த பாடல்கள் என்றே ஒரு டாப் டென் வெளியிடலாம். அந்தளவு ஹிட் பாடல்களாகக் குவித்துத் தள்ளியிருக்கிறார் ஸ்ரீராம். அதில் இப்பாடலுக்குத் தனியிடம் உண்டு. தந்தை, மகள் பாசத்தைப் போற்றும் பாடலாக இது உருவாக்கப்பட்டது. இன்னும் பல வருடங்களுக்கு மக்கள் மனதில் நிற்கும் பாடலாக இது அமைந்தது எனலாம்.

இவை தவிர, பக்ரீத், சர்வம் தாள மயம், தேவ், தடம், உறியடி 2, அயோக்யா, மான்ஸ்டர், என்ஜிகே, கொலைகாரன், நேர் கொண்ட பார்வை, சிகப்பு மஞ்சள் பச்சை, காப்பான் ஆகிய படங்களிலும் குறிப்பிடத்தக்க சில நல்ல பாடல்கள் அமைந்திருந்தன. சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘ரவுடி பேபி’ பாடல் இந்தாண்டு யூ-ட்யூபில் இந்திய அளவில் அதிகம் காணப்பட்ட பாடலாக முன்னிலை பெற்றது. இதுபோல் அடுத்த ஆண்டும் பெரும் கவனத்தைப் பெறும் தமிழ் பாடல்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் 2020க்கு அடியெடுத்து வைப்போம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சரவணகுமரன்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad