Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நீர்த் திவலைகள் – சிறுகதைத் தொகுப்பு

தமிழ் இலக்கியங்களில், சிறுகதைகளுக்குச் சிறப்பான, பிரத்யேகமான இடமுண்டு. கவிதை நடையிலிருந்து வேறுபட்டு உரை வடிவில், புனைவுகள் சுருக்கமாக இருப்பதால், வாசகர்களால் சிறுகதைகள் பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகமாக உருவாக்கப்படாத காலத்தில், வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை வாசிப்பதற்காகக் காத்திருந்த பெண்கள், இளைஞர் கூட்டங்கள் ஏராளம்.  தொழில்நுட்பக் கலாச்சார மாற்றங்களினால் புத்தக வாசிப்பு ஓரளவு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும், அண்மைக்காலப் புத்தகக் கண்காட்சி விற்பனைப் புள்ளி விவரங்கள், சிறுகதைத் தொகுப்புகளுக்கான வரவேற்பு அதிகரிப்பதாகச் சொல்வது மகிழ்ச்சி தருகிறது.

சிறுகதை எழுதுவது மிக அரிய கலை. ஒரு புனைவுக்கான வித்து அல்லது நிகழ்வு முழுமையாக, அதே சமயத்தில் சுருக்கமாக அமைவது மிக அவசியம். எழுத்தாளர் தன் மனதுக்குள் தோன்றும் கற்பனையை வெளிப்படுத்த அவருக்கிருக்கும் எல்லைகள் மிகக் குறுகியவை. முதல் பத்து வரிகளுக்குள் வாசகரின் கவனத்தை ஈர்த்து, முடிவு வரை தக்க வைத்துக் கொள்ளும் சாதுர்யம் வேண்டும். நாவல்களை மராத்தான் ஓட்டமாக கற்பனை செய்தால் சிறுகதைகள் நூறு மீட்டர் ஓட்டம் தான். மிகப் பரபரப்பான ஓட்டம் அவசியம்; ஆனால் சீராக இருக்க வேண்டும். சூழ்நிலை வர்ணனைகளுக்கு, சொற்பமான சொற்களுக்கே இடமுண்டு; ஆனால் அவை  ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாகயிருக்க வேண்டும். இப்படி, சிறுகதை எழுத்தாளர்கள் முன்னிருக்கும் சவால்கள் அதிகம்.

ஆயிரக்கணக்கான சிறுகதை எழுத்தாளர்களில், பெயரைக் கேட்டதும் அவரது படைப்புகளை மனதில் ஓட விடும் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே அமைகிறது. அந்த வகையில் , ‘நீர்த் திவலைகள்’, சிறுகதைகள் தொகுப்பினை வாசித்த பிறகு திருமதி பிரேமா மகாலிங்கம் அவர்களின் பெயரும் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது.

இந்தத் தொகுப்பினை அன்பளிப்பாகத் தந்த நண்பர் யோகி, திருமதி பிரேமா மகாலிங்கத்தைப் பற்றி சிங்கைத் தமிழ் இலக்கியவாதி, குறுநாவல், சிறுகதைகள் எனப் பல படைப்புகளைத் தந்தவர் என்ற சிறு அறிமுகத்துடனே புத்தகத்தைத் தந்தார். வேலைப்பளுவால் சில நாட்கள் புத்தகம் மேஜை மீது உட்கார்ந்திருந்தாலும், கண்ணில் படும்போதெல்லாம்  ‘நீர்த் திவலைகள்’ எனும் அழகிய தலைப்பு என்னை ஈர்த்தவாறே இருந்தது. ஒரு நாள் சமயம் கிடைத்த போது, ‘நீர்த் திவலைகள்’ பக்கங்களைப் புரட்டி முதல் கதையான ‘நிலாச் சோறு’ படித்து முடித்த பின்பு என் கண்களில் ‘நீர்த் திவலைகள்’ துளிர்த்தன என்றால் அது மிகையில்லை. தற்கால, அலுவலகப் பெண்களைப் போன்று, குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் உணவுத்தேவைகளைத் திருப்திபடுத்தத் தத்தளிக்கும் ஒரு மத்தியத்தரப் பெண்ணின் கதை. முதலில் சொன்னதைப் போல கதையின் முதல் சில வரிகள் மனதை வசீகரித்து, ஒரே மூச்சில் படித்தாக வேண்டுமென உணர்வை ஏற்படுத்திவிட்டது.

சிங்கையின் வாழ்வுச் சூழலுடன், தமிழ்க் குடும்பங்களின் பாரம்பரியங்களை, மிக எளிமையான கூர்மையான சொற்களால் விவரித்து விடுகிறார் பிரேமா. கதாபாத்திரத்தின் சிறு வயது நினைவுகளை – குறிப்பாக அப்பாவுடன் சைக்கிளில் பயணித்த குதூகலத்தையும், மாவு மில் இயந்திரத்தின் ஆச்சரியங்களையும் அவர் வடித்துள்ள விதம் முப்பதைக் கடந்த நடுத்தர வர்க்கத்தினரின் மனதில் நினைவுச்

சூழலை உண்டாக்கிவிடும். ‘மஞ்சள் தோய்ந்த வெள்ளை பனியனில் தீமிதிக்கச் செல்லும் பக்தனைப் போல் காட்சியளிப்பார்’ எனும் வர்ணனை பிரேமாவின் கூர்மைக்கும், இயல்பான நகைச்சுவைக்கும் உச்சம். இக்கதையின் முடிவு திருப்பங்கள் ஏதுமில்லாத மிக எளிமையான, இயல்பான முடிவு என்றாலும் மனதை இதமாக வருடி, தாய்மையின் மகத்துவத்தைச் சொல்கிறது.

முதல் கதை தந்த உந்துதல், அவரது அனைத்துக் கதைகளையும் படிக்கத் தூண்டியது அவரின் எழுத்து வலிமை. ‘மஞ்சள் வெயில்’ சிறுகதையில் தொக்கி நிற்கும் ஏக்கங்களும் அதை மீறும் மனித நேயமும் இன்றைய சமூகத்துக்கு மறைமுகமாக பாடம் கற்பிக்கிறது.

பதினேழு கதைகள்; குடும்பம், மர்மம், ஹாஸ்யம், காதல்  எனப் பல்வேறு பகுப்புகள்; அனைத்திலும் எளிமையான, இதமான நடையெனப் பரிமளித்துள்ளார் பிரேமா. சிங்கையின் வாழ்வியல் சூழலையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் விதமாக அவரது கதைகள் அமைந்துள்ளது நூலின் இன்னுமொரு சிறப்பம்சம்.       

சந்ததி இடைவெளிகளை அநாயசமாகக் கடந்து முத்திரை பதித்துள்ளார் பிரேமா என்பதில் துளியும் ஐயமில்லை. இவரைப் போன்ற எழுத்தாளர்கள் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்குப் புதிய பரிமாணத்தை அளிப்பதன் மூலம் பரந்துபட்ட வாசக அனுபவத்தை அளிக்கிறார்கள். அந்த வகையில் பிரேமா மகாலிங்கத்துக்குப் பனிப்பூக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

–     ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad