banner ad
Top Ad
banner ad

உலகைப் புரட்டிப் போட்ட கொரோனா

கொரோனா வைரஸ் குறித்த நமது முந்தைய கட்டுரை (கொடூர கொரோனா) வெளிவந்து இரு மாதங்கள் ஆகின்றன. அதற்குள் எவ்வளவு மாற்றங்கள்? அச்சமயம் அமெரிக்காவில் 8 பேருக்குத் தான் இந்தப் பாதிப்பு இருந்தது. இன்றைய நிலையில் இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையை நோக்கி மீட்டர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் ஈரான், இத்தாலி எனப் பல நாடுகள் ஆயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றன. இந்தியா இழப்புக் கணக்கைத் தொடங்கி, மொத்த நாடும் வீட்டிற்குள் முடங்க முயன்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நேற்றைய செய்தி இன்றைக்கு மிகப் பழையதாக மாறிக்கொண்டிருக்கிறது.

சரி, இப்பிரச்சினை தொடங்கிய சீனாவில் தற்போது நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். எண்பதாயிரம் கணக்கில் கடந்த ஒரு மாதமாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்தக் கணக்கைப் பார்த்து நோயைக் கட்டுபடுத்திவிட்டார்கள் என்று மகிழலாம் என்றால், அவர்கள் கணக்கை முழுமையாக நம்பவும் முடியாது என்கிறார்கள். உண்மையில் இறந்தவர் எண்ணிக்கை அவர்கள் குறிப்பிடும் மூவாயிரத்தைத் தாண்டி, பல மடங்கு இருக்கலாம் என்கிறார்கள். இந்த நோய் தொடங்கிய யூஹானில் மார்ச் 18இலிருந்து 22 வரை புதியதாக யாருக்கும் இந்தத் தொற்றுப் பரவவில்லை என்றார்கள். பிறகு, ஏற்கனவே பாசிட்டிவ் என்று சோதிக்கப்பட்டு, குணமானவர்களுக்குச் சில தினங்கள் கழித்து மீண்டும் பாசிட்டிவ் என்று வருகிறது என்றார்கள்.. அதனால், சீனாவில் அடுத்ததாகக் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக மீண்டும் தொடங்கிவுள்ளது என்கிறார்கள். சீனாவில் இருந்து வரும் கணக்கில் இந்த மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், நோய் அறிகுறி இல்லாமல் ஆனால் நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையும் சேர்க்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதுபோல ஹண்டா வைரஸ் என்று புதியதாக இன்னொரு வைரஸும் சீனாவில் கிளம்பிவிட்டது என்று சமூக ஊடகங்களில் வதந்தி கிளம்பி அடங்கியது.

யாருமே யூகிக்காதபடி இந்தப் பிரச்சினையில் பலத்த சேதாரத்திற்கு உள்ளானது இத்தாலி தான். இன்றைய நிலவரப்படி பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இத்தாலியில் இறந்திருக்கிறார்கள்.உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மாண்டவர்கள் இங்குத் தான். இதற்குக் காரணமாக அங்குப் பெருமளவு வாழும் வயதாவர்களின் எண்ணிக்கையையும், ஊரடங்கை மிகவும் கட்டாயப்படுத்த முடியாததையும் கூறுகிறார்கள். மருத்துவத் துறையில் நல்ல நிலையில் இருக்கும் இத்தாலியிலேயே பெரும் எண்ணிக்கையில் மக்களைச் சோதிக்க முடியவில்லை. அதனால், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும், இறப்போர் எண்ணிக்கையும் இன்னமும் அதிகரிக்கலாம் என்று கலக்கமாகக் கணிக்கிறார்கள்.

சீனாவில் இந்த நோய்தொற்றுத் தொடங்கிய சமயத்தில், அமெரிக்காவில் அது எங்கோ நடக்கும் நிகழ்வு என்றும், அதற்கும் நமக்கும் எந்தச் சம்பந்தம் இருக்கப்போவதில்லை என்பது போல் இருந்தார்கள். மார்ச் மாத தொடக்கத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மாதயிறுதியில் ஆறு இலக்கத்திற்குச் சென்றுவிட்டது. இப்போது ஒண்ணே கால் லட்சத்தில் யாரும் நினைத்துப்பார்க்காதபடி, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் உலகில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. அமெரிக்காவில் நோயின் மைய இடமாக நியூயார்க் பகுதி இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தளவில் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தோர் எண்ணிக்கையில் பாதி நியூயார்க்கில் இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு கூடும் என்ற கணிப்பு தான் அமெரிக்க மக்களைப் பயமுறுத்துவதாக இருக்கிறது.

வரும் இரு வாரங்களில் மருத்துவமனைகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்றும் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கணிக்கிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் இப்பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்கும், மீளுவதற்கும் கடும் ஊரடங்கு என்று போய்கொண்டிருக்கும் போது, அமெரிக்கத் தலைமை மட்டும் சட்டுபுட்டென்னு நாட்டைச் சகஜ நிலைக்குத் திறக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. மக்களின் உயிரை விட, பொருளாதாரத்தை நினைத்து ஆளும் தரப்பு அதிகம் வருத்தப்படுகிறதே என்று எதிர் தரப்புக் கருதுகிறது. அடங்கி ஆடுவதை விட அடித்து ஆடலாம் என்று அமெரிக்கா முடிவெடுத்து விட்டதோ!! உலகத்தின் சூப்பர் பவர் என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா இப்பிரச்சினையில் இருந்து எப்படி மீண்டு வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஊரடங்கு விஷயத்தில் அமெரிக்காவைவிட இந்தியா தீவிரமாக இருக்கிறது. தற்சமயம் ஆயிரம் பேர்கள் என்ற அளவில் இந்தியாவில் பாதிப்பு தெரிய வந்திருக்கிறது. ஆனால், பரிசோதனை பெரிய அளவில் நடந்திருக்கவில்லையென்பதால் இந்த எண்ணிக்கை சரியானதாக இருக்குமா என்ற பயமும் மக்களிடம் இருக்கிறது. சரியான முன்னேற்பாடு இல்லாமல் இந்த 21 நாட்கள் ஊரடங்கைக் கொண்டு வந்துவிட்டார்கள் என்று பலரும் அரசைக் குற்றஞ்சாட்டுகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாமல் பல வட இந்திய கூலித் தொழிலாளர்கள் டெல்லி போன்ற இடங்களில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மக்களின் உயிர் காக்க அரசு எடுத்து வரும் நிலைபாடுகள் வேறு விதத்தில் மக்களைப் பாதித்துவருகின்றன. தமிழக முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து மக்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். ட்விட்டரில் விசிலடிக்கிறார்கள். எதிர்கட்சி பிரமுகர்கள் இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்கிறார்கள். இந்தியாவிலும் எண்ணிக்கை ஒருவேளை கூடினால், மருத்துவமனை படுக்கைகளுக்கும், வெண்டிலேட்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்கிறார்கள். இப்பொழுது சில அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் வெண்டிலேட்டர் தயாரிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.மகிந்திரா நிறுவனம் லட்சக்கணக்கில் மதிப்பிருக்கும் வெண்டிலேட்டர்களை, தற்காலிக உயிர் காக்கும் சாதனமாக 7500 ரூபாயில் தயாரிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கான ஒப்புதலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு ரயில் கோச்களைத் தற்காலிக மருத்துவப் படுக்கைகள் கொண்ட அறையாக மாற்ற முடியுமா என்று முயன்று கொண்டிருக்கிறது. சோதனை காலத்தில் இவர்கள் மேற்கொண்டு வரும் இது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியதே.

மனித உயிர்கள் மட்டுமின்றி நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவு கொரோனாவினால் ஆட்டம் கண்டுள்ளன.பங்கு சந்தைகள் பாதாளத்தை நோக்கி பாய, தொழில் நிறுவனங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க, இன்னொரு பக்கம் தினசரி சம்பளத் தொழிளாளர்கள் அவர்களது எதிர்காலம் புரியாமல் நிற்கிறார்கள். பல நிறுவனங்களில் தற்காலிக பணி நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். விமான நிறுவனங்கள் பல்வேறு வழித்தடங்களில் தங்கள் சேவையை நிறுத்திவிட்டன. வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்தவர்கள் திரும்ப முடியாமல் ஆங்காங்கே குழப்பத்துடன் நிற்கிறார்கள். உலகமே புரட்டிப்போட்டது போன்று இருக்கிறது. இப்படி ஒரு நிலை வரும் யாரும் கணிக்கவில்லை. 2020 ராசிப்பலன் கூறிய எந்தச் சோதிடரும் இப்படி ஒரு பேரிடரைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அவர்கள் ஜனவரியில் கூறிய கணிப்பை இப்போது கேட்டால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இன்றைய நிலைக்கேற்ப பல புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மொத்த ஐடி நிறுவன பணியாளர்களும் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறார்கள். மளிகை கடைகளும் பிற வணிக நிறுவனங்களும் வீட்டிற்கு டெலிவரி செய்யும் வசதிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். பள்ளிகள் மாணவர்கள் வீட்டில் இருந்து பாடம் படிப்பதற்கான இணைய வசதிகளைச் செய்து வருகிறார்கள். உடற்பயிற்சிக்கூடத்திற்கோ, வெளியேயோ போக முடியாமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே நடந்துக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கிறார்கள். சில மருந்துகள் இதுவரை பரிந்துரைக்கப்பட்டாலும், நன்கு பரிசோதிக்கப்பட்டு நிலையான ஒரு மருந்து பெருவாரியாகப் பரிந்துரைக்கப்படும் வரை, நம் சகஜ வாழ்க்கை இது போன்ற போர்ச்சூழலில் தான் இருக்கப் போகிறது. இன்று உலகம் மருத்துவத்துறையினரைக் கொண்டு நோவல் கொரோனாவை எதிர்த்து போரிடும் இந்தப் போர்க் காலத்தில், மக்களின் கடமை வெளியே அலைந்து திரிந்து அரசின் பளுவைக் கூட்டாமல், வீட்டிலிருந்து உதவிப் புரிவதே. விரைவில் இத்துயரைக் கடப்போம் என்ற நம்பிக்கையுடன்.

  • சரவணகுமரன்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad