Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020)

2020 ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியான படங்களிலிருந்து, ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

சைக்கோ – உன்னை நினைச்சு

இளையராஜாவின் இசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகிய படம் – மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ. 1976இல் இருந்து இசையமைத்து வரும் இளையராஜாவின் இசை, இத்தனை தசாப்தங்களுக்குப் பிறகு, இன்றைய தலைமுறையையும் ரசிக்க வைக்கிறது என்பது வியப்புக்குரிய விஷயமே. ஜனவரியில் வெளிவந்த இப்படம், கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், இளையராஜாவின் இசையும், பின்னணி இசையும் ரசிகர்களை முழுமையாகக் கவர்ந்த விஷயமாக இப்படத்தில் இருந்தது எனலாம். முதன்முறையாக, இப்படத்தில் இளையராஜாவின் இசையில் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் சிரித்தால் – ப்ரேக்அப் சாங்

தற்கால இசையமைப்பாளர்களில் உள்ளூர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் பல்ஸ் பிடித்து இசையமைத்து வருபவர், ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடிகராகக் களமிறங்கி நடித்து வரும் படங்களும் ஒரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில், இசையில் வெளிவந்த இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றியிருந்த ராணா இயக்கியிருந்தார். ஆதியின் முந்தைய படங்கள் அளவுக்கு இப்படம் ஓடாவிட்டாலும், பாடல்கள் அதே அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆதியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு உடற்பயிற்சிக்கு சென்றால், எக்ஸ்ட்ராவாகக் கொஞ்சம் கலோரிகள் குறைவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கூறுகிறார்கள்.


ஓ! மை கடவுளே – கதைப்போமா

காதலர் தினத்தன்று வெளிவந்த இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்திருந்தனர். ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் கடவுளாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். காதல் ஃபேண்டஸி என்ற வகைமையில் வந்திருந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. காதலர் தினத்திற்கேற்ற பொருத்தமான படம். ஏ.ஆர்.ரஹ்மானின் குழுவில் இருந்த நோயல் ஜேம்ஸின் மகனான லியோன் ஜேம்ஸ், சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியவர். இதற்கு முன் பல சிறு படங்களுக்கு இசையமைத்த இவருக்கு, இது முக்கியப் படமாக அமைந்துள்ளது.


தர்பார் – தரம் மாறா

ரஜினி படத்துக்கு அனிருத் இசையமைத்த இரண்டாவது படம். முதல் படம் அளவுக்கு இல்லை என்று ரசிகர்களது கருத்தாக அமைத்த படம். ‘தரம் மாறா’ என்ற இந்தப் பாடல், பொதுவாக ரஜினி படங்களில் வரும் பாடலாக இல்லாமல் அமைந்திருந்தது. யோகி பாபு காம்போ நன்றாகத் தான் இருந்தது. படம் வெளிவந்த பிறகு, சர்ப்ரைஸாக வெளியிட்ட ‘கண்ணுல திமிரு’ பாடல், ரசிகர்களைத் திரையரங்கில் கொண்டாட வைத்தது.

 

சீறு – செவ்வந்தியே

ஜீவா நடித்த இப்படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பலரையும் கவர்ந்தது. நொச்சிப்பட்டி திருமூர்த்தி, சென்ற ஆண்டு இமான் இசையில் வெளிவந்த ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடி, இணையத்தில் வெளிவந்த காணொளி பயங்கர வைரல் ஆனது. அதைக் கேட்ட இமான், இந்தப் படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க, திருமூர்த்தி மிகவும் சிறப்பாகப் பாடியிருந்தார். அவர் மேலும் பல வாய்ப்புகள் பெற நமது வாழ்த்துகள்.

இவை தவிர, பட்டாஸ், ஜிப்ஸி போன்ற படங்களில் இடம்பெற்றிருந்த சில பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தன. ஜிப்ஸி படத்தில் இடம்பெற்றிருந்த ‘வெரி வெரி பேட்’ பாடல், சென்சாரால் தடை செய்யப்பட்டு, அதே சமயம் யூட்யூபில் தங்குதடையின்றி வெளியானது.

சென்ற வாரம் தொடங்கி உலகம் முழுக்க கொரோனாவினால், திரையரங்குகள் மூடப்பட, அனைத்து திரைப்படங்களின் வெளியீடும் தற்சமயம் தடைப்பட்டு நிற்கின்றன. மாஸ்டர், சூரரைப் போற்று போன்ற படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், படங்கள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. உடனடியாக இப்பிரச்சினை தீரவில்லையெனில், நேரடியாக டிவியில் சில படங்கள் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது.

  • சரவணகுமரன்

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad