Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தல வருஷப் பொறப்புங்கோ!

அது என்ன தல வருஷப் பொறப்புன்னு கேக்கறவங்களுக்கு – கல்யாணத்திற்கு அப்புறம் வரும் முதல் வருஷப் பிறப்பைத் தல வருஷப் பொறப்புன்னு சொல்றது நம்ம பக்கத்திலே வழக்கம், தலை தீபாவளி மாதிரி தல வருஷப் பிறப்பு. எங்க திருமணம் நவம்பரில் நடந்திருந்தாலும் எனக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்து நாங்கள் சென்னையில குடித்தனம் வைக்க வந்தது கிட்டதட்ட ஃபிப்ரவரி போல் ஆகி விட்டது. (ஏனென்றால் என் காதல் கணவர் முதலிலேயே மாற்றல் வாங்கிண்டு சென்னை வந்துவிட்டார்ன்னு என் டைபிங்க் இரேசர் கதை – இல்லை உண்மை நிகழ்ச்சி – படித்தவங்களுக்கு தெரியும்) .

குடித்தனம் செட்டில் ஆறதுக்குள்ளே தமிழ் வருடப் பிறப்பு வந்து விட்டது. தமிழ் வருடப் பிறப்பு சும்மா வந்தா பரவாயில்லையே. திருவனந்தபுரத்திலிருந்து எங்க மாமியார் மாமனாரையும் கூட்டிக் கொண்டு இல்லையா வந்தது. ஏற்கெனவே எங்க பிறந்தாம் தஞ்சாவூர் என்பதில் என் மாமியாருக்கு கொஞ்சம் வருத்தம்,அவா திருநெல்வேலியிருந்து வந்து திருவனந்தபுரத்தில் ஸெட்டில் ஆனவா. பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும் அந்த ஊருக்குள்ளேயேதான். ஆனால் பிள்ளை ஆசைப் பட்டுவிட்டதால் அதிகம் வெளிக் காட்டவில்லை. அதுவும் தவிர கல்யாணத்திற்கு முக்கியமாக வைக்க வேண்டிய மாலாடுக்குப் பதிலாக அழகான குஞ்சாலாடு வைத்து விட்டோம் என்று என் மாமியாருக்கு ரொம்ப வருத்தம். (திருநெல்வேலி – திருவனந்தபுரம் காராளுக்கு எந்த ஒரு விசேஷத்துக்கும் மாலாடு வைக்கணும். மாலாடு என்பது சர்க்கரை,பொட்டுக் கடலை, நெய், முந்திரி,திராக்ஷை எல்லாம் சேர்த்து செய்யும் ஒரு லாடு ) – “ இந்தப் பாண்டிக் காராளுக்கு ( தஞ்சாவூர்காரளை கோபம் வந்தா அவா பாண்டிகாரான்னு சொல்லுவா ) ஒண்ணும் வக்கணையா பண்ணத் தெரியாதுன்னு தன் சொந்தக்காரர் கிட்டே எங்க புக்காத்து மாமியோ யாரோ சொல்லிண்டிருந்ததைக் கேட்ட எங்க பொறந்தாத்து மாமா  ‘தைய்யா தக்கா’னு குதிக்க ஆரம்பிக்க அந்த மாமி ஒரு அருமையான ‘ஷம்பந்தி ஷண்டை’ (மாமி ‘ச’வை ‘ஷ’ ன்னு தான் சொல்லுவா ) ஆரம்பிக்கப் போறதுன்னு ஆவலோட காத்துண்டிருக்க, எங்க அம்மா ‘ ஆமாண்டா ! அவாளுக்கு மாலாடு ரொம்ப முக்கியம். நாம வைக்கலை –பின்னே சொல்ல மாட்டாளா – என்ன? “ ன்னு வாயை அடைச்சுட்டா – அதுக்கப்புறம் எங்க அம்மா தனியா ஒரு திருநெல்வேலி மாமி கிட்டே போய் மாலாடு பண்ணக் கத்துண்டு சூப்பர் மாலாடு பண்ண ஆரம்பிச்சது வேறு விஷயம், அதுவும் தவிர மாமனார் ஒரு தும்மல் போட்டார்ன்னு அவரைப் பாக்க வந்தாக் கூட ஒரு தூக்கில் மாலாடு பண்ணிக் கொண்டு வந்து விடுவதும் வழக்கமாயிடுத்து. தஞ்சாவூர்காராளுக்குக் கற்பூர புத்தின்னு சும்மாவா சொன்னா. சரி சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன் பாத்தேளா ? இதுவும் தஞ்சாவூர்காரா பழக்கம்ன்னு எங்க மாமியார் சொல்லுவா. சரி! வருஷப் பிறப்பிற்கு வருவோம். 

மாமியார் மாமனார் வரப்போவதால் வீடெல்லாம் சுத்தம் செய்து, புதுசு புதுசா காளன், ஓலன், எளிசேரி என்று எல்லாம் ரெசிப்பி வாங்கி கத்துண்டு நன்னா தயாராயிட்டாலும் ஏதோ வேலை கிடைத்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணற பயத்தில்தான் நான் இருந்தேன். அதுவும் என்னுடைய மற்ற ஓர்ப்பிடிகள் எல்லாம் திருவனந்தபுரம் திருநெல்வேலி – நான் ஒருத்தி மட்டுந்தான் வேலைக்குப் போறவள். அதனால் எனக்கு வீட்டு வேலை ஒண்ணுமே சரியாகத் தெரியாது என்பது போல் அவாளுக்கு ஒரு நினைப்பும் உண்டு இதையெல்லாம் மாத்தணும்னு எனக்கு ரொம்பக் கவலை. 

சரி, வருஷப் பிறப்பும் வந்தது. முதல் நாளே மாக்கோலம் போட்டு, செம்மண் எல்லாம் இட்டு, வீட்டை ரெடி பண்ணிட்டேன். “கணவர் இருக்க கவலைப் படேல்“ என்கிற புது மொழிக்கேற்ப என்னவரும் ஓடா உழைச்சார் என்றால் மிகையில்லை. காலை எட்டு மணி வாக்கில் மாமியார், மாமனாரை ஸ்டேஷனிலிருந்து என் கணவர் கூட்டிண்டு வந்தார். வந்து,அவர்கள் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆனவுடன் தஞ்சாவூர், பிளீஸ் நோட் தஞ்சாவூர், டிகிரி காப்பி கொடுத்தவுடன் மாமியார் கொஞ்சம் மயங்கி விட்டார் என்று தோணியது. பிறகு அருமையாக மாங்காப் பச்சடி,வேப்பம்பூப் பச்சடி, அவியல், வடை, பால் பாயசம், பப்படம் என்று என் திறமையை எல்லாம் காட்டிச் சமையல் பண்ணி என்னுடைய அழகான பூஜை அலமாரியில் இருந்த சாமிக்கெல்லாம் ‘காப்பாத்து ! காப்பாத்து!ன்னு வேண்டிண்டு பூஜை பண்ணிட்டு மாமியார், மாமனார் மற்றும் என்னவரையும் உக்காத்தி வச்சு தலை வாழை இலை போட்டுப் பறிமாறினேன். முதல்லே கொஞ்சம் தயங்கி,சாப்பாட்டை வாயில் வச்ச மாமியார் சாப்பிட ஆரம்பித்த பிறகு ரசிச்சுச் சாப்பிட்டதைப் பார்த்துதான் நான் மூச்சே விட்டேன். அதுவும் பாயசம் ரொம்ப நன்னா இருக்குன்னு சொல்லி, கொஞ்சம் டயபடிக்காக இருந்தாலும் “பரவாயில்லை – ராத்திரி சாப்பாட்டைக் கொறச்சுக்கறேன்” என்று சொல்லி இன்னோரு கப் பாயசம் குடிச்சதைப் பார்த்ததும் “my day is made” ன்னு நினைச்சுண்டு என்னவரைப் பார்க்க, அவரும் ‘தம்ப்ஸ் அப்’ காட்ட, சாப்பாடு முடிந்தது. எனக்கு ருசி பார்க்க ஒரு கப் பாயசம் மட்டுமே மிச்சம், ஆனால் என் சமையல் அப்ரூவ் ஆனதில் எனக்கு இருந்த சந்தோஷத்தில் பாயசத்தை மற்றும் குடித்து விட்டு சமையல் செய்த இடத்தை எல்லாம் சுத்தம் பண்ணி விட்டு, லிவிங்க் ரூம் வந்து மாமியார் மாமனாரிடம் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் தூங்கப் போன பிறகு நானும் எங்க அறைக்கு வந்து கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தேன். 

மணி நாலு இருக்கும். மாமியார் மாமனாருக்குக் காபி போட்டுக் கொண்டிருந்த நான் வாசல் பெல் அடிச்ச சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தால் அங்கே என் மாமியாரின் தங்கை தன் பிள்ளை மாட்டுப் பெண்ணோடு அவா ரெண்டு குழந்தைகளையும் கூட்டிண்டு என் மாமியாரைப் பாக்க வந்திருக்கா. சென்னை வருவதற்கு முன் என் மாமியார் சென்னையில் உள்ள எல்லா உறவினர்களுக்கும் தான் சென்னை வரும் விஷயத்தை முன்கூட்டியே தெரிவிச்ச விஷயம் அப்பத்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அக்கா வந்த விஷயம் தெரிஞ்சவுடன் தங்கைக்கு இருப்புக் கொள்ளாமல் உடனே குடும்பத்தோடு பார்க்க வந்துவிட்டா. அவாளைப் பார்த்ததும் முதல்லே நான் அவாளுக்குக் கொடுக்க என்ன இருக்கு என்றுதான் யோஜிக்க ஆரம்பிச்சேன். பால் நிறைய இருந்தது. காப்பி,  டீக்குக் கவலை இல்லை. வடைக்கு அறைச்ச மாவு பாக்கி இருந்தது. சாயங்காலம் கொஞ்சம் வடை பண்ணி விட்டு, பிறகு அடை மாவில் கலந்து கொள்ளலாம் என்று யோஜனையில் இருந்தேன். இப்போ வந்தாவாளுக்கு வடை தட்டிக் கொடுத்து வீட்டில் மாமியார் கொண்டு வந்திருந்த மாலாடு வச்சுக் கொடுத்து காப்பியோ / டீயோ கொடுத்து விடலாம். வந்த ரெண்டு லேடீஸ்க்கும் கொடுக்க ரவிக்கைத் துண்டு, வெத்தலை பாக்கு எல்லாம் இருக்கு என்று அவாளை வரவேற்கும் பொழுதே நிச்சயம் பண்ணிவிட்டேன். 

வந்த சித்தி என் கையில் தான் வாங்கிண்டு வந்த பழத்தைக் கொடுத்தாள்,. நாங்க ரெண்டு பேரும் நமஸ்காரம் பண்ணினோம். எங்க மாமியார் குடும்ப விஷயம் எல்லாம் பேசிவிட்டு ஒரு பெரிய குண்டைத் தூக்கி போட்டாள். தன் தங்கையைப் பார்த்து “ ஜானு ! உனக்கு தெரியாதே – சுசிலா அருமையா, சமைப்பா தெரியுமா –இன்னிக்கு ஒரு பால் பாயசம் பண்ணினா தெரியுமா ? அந்த குருவாயூரப்பன் மட்டும் டேஸ்ட் பண்ணியிருந்தா குருவாயூரே திரும்பப் போக மாட்டான். இங்கேயே இருந்துடுவான் – சுசீலா இவாளுக்கெல்லாம் பாயசம் கொண்டு வந்து கொடு “ என்று சொன்னாளே பாக்கணும் – அப்படியே மேலே சுத்திண்டிருந்த ஃபேன் என் தலையில் விழுந்தா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்க். மாமியார் ஊரிலே எல்லாம் அவா எதுவும் கொஞ்சமா பண்ணமாட்டா – அதனாலே எங்க மாமியார் இருக்குமா இருக்காதான்னு கூட யோஜிக்கலைன்னு எனக்கு தெரிஞ்சது, ஆனால் பாயசம் கொஞ்சம் கூட இல்லயே –  

நான் ஒண்ணுமே சொல்லாமல் சமையல் ரூமுக்கு வந்தேன். பின்னாடியே கூட வந்த என்னவர் (அவருக்கு தெரியும் பாயசம் தீர்ந்தாச்சுன்னு) “ என்ன செய்ய போறே – பாயசம் தீர்ந்துடுத்துன்னு சொல்லிடேன்” என்றார். இவ்வளவு பில்டப் கொடுத்த மாமியார் கிட்டே பாயசம் தீர்ந்துடுத்துன்னு நான் எப்படிச் சொல்லுவேன். என்ன செய்யறதுன்னு மண்டையக் குழப்பினபோது என் கண்ணில் பட்டது மாமியார் கொண்டு வந்த மாலாடு. ‘யுரேகா’ என்று மனசிலேயே கத்திண்டு என்னவர் கிட்டே “ நீங்க போய்ப் பேசிண்டிருங்கோ, எல்லாம் ரெடி ஆயிடும்” என்று சொல்லிவிட்டு பாலை அடுப்பில் வச்சு கொதிக்கும்படிப் பண்ணி 

இறக்கி வைத்து அதில் தேவையான மாலாடுவைப் பொடித்துக் கலந்தேன். மாலாடுவிலேயே சர்க்கரை ஏலக்காய், பச்சைக் கற்பூரம், முந்திரி, திராக்ஷைனு பாயசத்துக்கு வேண்டிய எல்லாம் இருந்ததால் பாயசம் அருமையாக அமைந்து விட்டது. வடையையும் பால் கொதிக்கும்போதே தட்டி எடுத்து விட்டேன். அதனால் ஒரு 20 நிமிடத்தில் அவர்கள் எல்லோருக்கும் பாயசம் வடை ரெடி பண்ணிக் கொடுத்து விட்டேன். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, ரொம்ப நன்றாக இருந்தது என்று வாய்க்கு வாய் புகழ, வந்த சித்தியோ என் மாமியாரிடம் “ நீ சொன்னது போறாது. இந்தப் பாயசம் டேஸ்ட் தெரிந்தால் அந்த குருவாயூரப்பன் குருவாயூரிலிருந்து உடனே ஓடி வந்து விடுவான் “என்று புகழ என் மாமியாருக்கு வாயெல்லாம் பாதிப் பல். (பாதிப் பல் டாக்டரிடம் போய் எடுத்தாச்சு). பிறகு பேசி முடித்து விட்டு அவர்கள் எல்லாம் போன பிறகு என்னவர் என்னிடம் “ எப்படிப் பாயசம் மேனேஜ் பண்ணினே?” என்று “எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை ‘ என்கிறா மாதிரிக் கேட்டது மாமியார் காதில் விழுந்துவிட , அவர் அது என்ன என்று கேட்க நான் வேறு வழி இல்லாமல் எல்லா விஷயத்தையும் அவாகிட்டே சொன்னேன். அப்புறம் அவர்கள் எல்லோருக்கும் மீதம் இருந்த மாலாடு பாயசம் கொடுக்க அதைக் குடித்த எல்லோரும் காலம்பறப் பாயசத்தை விட இதுதான் நன்னா இருக்கு என்று சொல்லி, எனக்கு ரொம்ப ஐஸ் வச்சுட்டா. ஆனா இப்பல்லாம் எங்காத்தில் பால் பாயசம்னாலே முதல்லே மாலாடு தான் ரெடி பண்ண வேண்டி இருக்கு. இதிலே என்ன சௌகர்யம்னா மாலாடு பண்ணி வச்சுட்டா ஒரு மாசத்திற்கு எப்ப வேணா இன்ஸ்டன்ட் பாயசம் ரெடி. இதுதான் நான் தல வருஷப் பிறப்பன்னிக்கு ‘மாமியார் மெச்சிய மருமகள் ‘ ஆன மறக்க முடியாத கதை. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Think out of the box ‘ ன்னு சொல்லுவாங்களோ – வாழ்க மாலாடு 

 

    சுசீலா கிருஷ்ணமூர்த்தி

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad