\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம்

தேசப்பிதா, அண்ணல் காந்தி அடிகளிடம் பற்றுக் கொண்டவர்கள்  கொல்லாமையை நேசிப்பவர்கள்,எளிமையை விரும்புவோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா (wardha)வின் அருகில் சேவாக்ராமம் எனும் கிராமத்தில் உள்ள காந்தி அடிகளின் ஆசிரமம் தான்.வாருங்கள், இதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.12 மார்ச் 1930ல் உப்புச் சத்தியாக்ருஹத்திற்காகத் தன் 78 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட காந்தி அடிகள் தண்டி யாத்திரைக்குக் கிளம்பும் போது,முழு வெற்றி கிடைத்தால்தான் இங்கு திரும்பி வருவேன் என்று முடிவெடுத்தார். 6 ஏப்ரல் 193௦ குஜராத்தில் உள்ள தண்டி சமுத்திரக் கரையில் உப்பு மேல் விதித்த சட்டத்தைப் புறக்கணித்ததற்கு, 5 மே 193௦ சிறையில் அடைக்கப்பட்டார். 1933 ல் சிறையில் இருந்து வெளிவந்த காந்திஜி நாடு முழுக்க “ஹரிஜன யாத்திரை “செய்யப் புறப்பட்டார்.

ஜமுநாலால்ஜியின் விருப்பத்திகேற்ப மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வர்தாவின் அருகில் “சே கான்வ்” என்ற கிராமத்தில் பத்து வருஷங்கள் (1936) இருந்து எளிய வாழ்க்கையைக் கழித்தார். அது காலப் போக்கில் சேவாகிராம் (தொண்டு கிராமம் ) எனக் கூறப்பட்டது. கையில் துடைப்பம்,வாளியில் தண்ணீர் எடுத்து தூய பாரதக் கொள்கை உருவாகிய நாள். காந்தியுடன் தொண்டு செய்ய வந்த வெளிநாட்டுப் பெண்மணி மிஸ் செல்ட் (மீரா பஹன் – சகோதரி மீரா) அவருடன் அங்கு தங்கி அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்களுக்குத் துணிகளை நெய்து தந்து, நெய்யக்,கற்றுக் கொடுத்தாள்.கிராம முன்னேற்றத்திற்குப் பாடுபட்டாள். அந்த இடத்தில் உள்ள கொய்யா மரங்களின் கீழே உட்கார்ந்து தனது வேலைகளைத் தொடர்ந்தார் காந்தி.

சேவா கிராமம் ஓர் இந்திய கிராமத்திற்கேற்ப இருந்தது. பண்பாடு நிறைந்த, வசதி இல்லாத கிராமம் அது .ஒரு தபால் ஆபீசோ,வைத்திய உதவியோ, சாலைகளோ,கடைகளோ கிடையாது. எந்த வசதியும் இல்லாத இந்த குக்கிராமத்தில் தான் ஏன் தங்க நினைத்தேன் என்று தன்  நண்பரும் ,போலாந்தைச் சேர்ந்தஇஞ்சினியருமான மாரிஸ் ப்ரைடமெனிடம் கூறுகையில் “இந்த கிராமத்து மக்களுக்குத் தொண்டு செய்ய வந்தேன். அதை  ஒரு தெய்வீக வழிபாடு என எண்ணுகிறேன் என்றாராம்.

காந்திஜி 1936 லிருந்து 1946 வரை இங்கிருந்து தங்கி, தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டு, மக்களுக்குத் தொண்டு செய்தார். அந்த நாட்களில் அந்த கிராமத்தில் அறுநூறு மக்கள் கொண்ட அநேக ஹரிஜன குடும்பங்களுக்கு அண்ணல் தொண்டு செய்தாராம். மலேரியா, டைஃபாயிட் போன்ற நோய்களினால் அவதிப்படும் மக்களுக்கு அன்போடு காந்தி தொண்டு செய்த இடங்கள் இவையாகும்.

எவ்வளவு அமைதி…..!சுற்றும் மரங்கள், பூந்தோட்டம். காலையில் எழுந்து அந்த ஆசிரமத்தை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்து பாருங்களேன் . வெள்ளை நிறப் பசுக்களுடன் கோசாலை, வனங்கள், மிக அருமை .” எங்கு சென்றாலும் நீ என்னிடத்தில்தான் அமைதியைத் தேட வருவாய் எனக் கூறும் இயற்கை அன்னையின் பாசம். அங்கு டீக் கடைகள், பீடி, சிகரெட், ஜர்தாக் கடைகள் கிடையாது . ஹோட்டல்களும் இல்லை. ஆனால் பிரக்ருதிக் ஆகார் பண்டார் எனப்படும் இயற்கை உணவகம் உள்ளது. அங்கு அம்பாடி சர்பத் எனப்படும் மூலிகை சர்பத் குடித்து மகிழலாம்.  

வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் இங்கு வந்தால் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ்உள்ளது . பார்க்க வெளிப்புறத்தில் குடிசை வடிவில் இருக்கும். எல்லா வசதிகளும் கொண்ட மாடர்ன் காட்டேஜ் ஒரு  சுத்தமான, இயற்கையைத் தழுவிக் கட்டப்பட்டது யாத்ரி நிவாஸ். ஒரு நாள் வாடகை முன்னூறு ருபாய் தான் . சுற்று முற்றும் மரங்கள் பல வண்ணப் பூச் செடிகள் . ஓடி ஓடி, பறந்து பறந்து வாழும் சிட்டி வாழ்க்கையின் சாயல் கூடப் படாமல் ஒரு தனிமையான நிம்மதி தரும் சூழ்நிலையில் உருவான கிராமிய நறுமண வாழ்க்கையைப் பார்க்கலாம். ரூமுக்கு வெளியே குளிப்பதற்கு வெந்நீர் ஒரு பெரிய தகர டின்னில் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரைக்கும் காய்ச்சி வைத்து விட்டுப் போவார்கள் . நாம் ஒரு பக்கெட்டில் பிடித்துக் கொண்டு வர வேண்டும் . ரூமில் குழாய், கழிவறைகள் சுத்தமாக இருக்கும். 24மணி நேரமும் குழாயில் தண்ணீர் வரும் .காலையில் எழுந்தவுடன் டீ ,காபி கிடைக்காது .ஒன்பது மணி அளவில் . இயற்கை உணவகம் திறக்கப் படும் .சிகரட் ,பீடா,குட்கா,மது போன்றவை சேவாக்ராமில் விற்க அனுமதி இல்லை. ஒய்வு பெற விரும்பும் தம்பதிகள், மனச் சோர்வைப் போக்க விருப்பமுள்ளவர்கள் ,இயற்கை அன்னையின் மடியில் சற்று ஓய்வு எடுக்க விரும்புவோர், எளிமையானவற்றை நேசிப்பவர்கள் கட்டாயம் சேவாக்ராம் செல்ல வேண்டும்.

அங்கிருந்து கொண்டு மகாத்மா காந்தி ஹிந்தி மத்தியப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவிக்க முயற்சித்தார். ஆசிரமத்தில் உள்ள ஒவ்வொரு குடிசையும் இந்தியப் பழமைக் கலாச்சாரத்துடன் கூடிய மனித நேயமுள்ள நல்ல இதயம் படைத்த மக்களுடன் செயல்படுகிறது. ஆசிரமத்தில் பசுமை நிறைந்த மரங்கள், பசுக்கள் ஆகியன அண்ணல் காந்தியின் அளவற்ற தொண்டுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஆதிநிவாஸ் (மூல நிவாசம்), பாபு குடி, காந்திஜியின் கைத்தறிச் சர்க்கா, செருப்புகள், தடி ஆகியவை ஓரிடத்தில் காட்சி அளிக்கின்றன. மூங்கில்களால் செய்யப்பட்ட பாய்கள், மூங்கில்களால் செய்யப்பட்ட நாற்காலிகள் காஅகியவையும் இருக்கும். ஆ.

பாபு கா தப்தர் (காந்தியின் அலுவலகம்)

இந்த இடத்தில் காந்தியின் மந்திரி மஹாதேவி பாயி ப்யாநேலால் மற்றும் அம்ரிதா கெளர், மற்ற செயலாளர்கள் வேலை செய்தார்கள் எனச் சொல்லப்படுகிறது. அவர் உபயோகப்படுத்திய, தொலைபேசி, பாம்பைப் பிடிக்கும் கூண்டு, அதற்கான பெரிய கழி ஆகியவை காணப்படும். ஒரு காடு மயமாக இருக்கும் அவ்விடத்தில் அடிக்கடி பாம்பு வருமாம். அதைப் பிடித்துக் கூண்டிலிட்டுக் காட்டில் கொண்டு போய் விடுவார்கள். இன்னும் ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் ஒருமுறை காந்தி மைதானத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் போது ஒரு பெரிய பாம்பு அவர் மடியிலிருந்து ஏறி வெளியேறிதாம். தன் தொண்டர்களைச் சாந்தமாக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். 

ஆசிரமத்தின் குடிசைகள்  

19-3-1936 அன்று அண்ணல் காந்தி தன் தோழர் ஜமுனாலால் பஜாஜிற்கு எழுதிய கடிதத்தில் “கஸ்துரிபாய்க்கு விருப்பம் இருந்தால் கூட்டி வாருங்கள், இல்லையென்றால் நான் தனியாக இந்தச் சேவாகிராமத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்து விடுகிறேன். தங்கை மீராவிற்கு ஒரு குடிசை நூறு ரூபாயை விட அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். தேவைப்படும் போது அருகிலுள்ள மகன்வாடி போய் கொண்டிருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தாராம். காந்தியின் விருப்பப்படி அவர் வாழ்ந்த முதல் குடிசைதான் இன்று ‘ஆதி நிவாஸ்’(முதல் குடியிருப்பு) என அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் காந்தியுடன் கஸ்துரிபா ப்யாரே லால், சந்த துகடோஜி, கான் அப்துல் கஃபார் கான் ஆகியோரும் சேர்ந்து இருந்தார்கள். உள்ளே ஒரு அறையின் மூலையில் காந்தி தன் பொருட்களை வைத்திருப்பார். காந்தி தானே அருகிலிருந்து எல்லோருக்கும் உணவு பரிமாறுவாராம். 

‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கத்திற்கான முதல் கூட்டம் இங்கு தான் நடைபெற்றது. 1940 அண்ணல் காந்தியின் சத்தியாகிரகத்தின் வேலைகள் இங்கிருந்து தொடங்கின. 

பாபுகுடி மற்றும் பாபு தப்தர்(காந்தி குடிசை மற்றும் அலுவலகம்): இங்கு தான் தங்கை மீரா கிராமத்து மக்களுக்கு தையல், நேயல் சரக்கா ஒட்டுதல் ஆகியவற்றைச் சொல்லி தந்திருக்கிறார். கடுமையான வெயிலை சமாளிக்க இலைகளால் செய்த ஒரு கதவைப் பயன்படுத்தி உள்ளனர். அதில் தண்ணீர் தெளித்து மூங்கில்களின் உதவியுடன் மிக அருமையான குடிசை கட்டப்பட்டிருந்தது. இப்போது அங்குள்ள பொருட்களில் காந்திஜியின் கைத்தடி, மூக்குக் கண்ணாடி ,தொலை பேசி ஆகியவற்றையும்,அவர் உட்கார்ந்து எழுதிய இடம், மைதானத்தில் மரங்களின் நடுவில் கூட்டுப் பிரார்த்தினை நடத்திய இடம் என்று பல இடங்களையும் காணலாம் . பின்புறம் பசுக்களின் மைதானம் உள்ளது . காலையில் வெள்ளை நிறத்தில் உள்ள பல பசுக்களையும் கன்றுகளையும் காணலாம் .. உலகப் பிரசித்தி பெற்ற புரட்சி விமர்சகர் இவான் இலிச் இங்குள்ள பாபு குடியில் தங்கி இவ்வாறு எழுதி உள்ளார் “ எனக்கு இங்கு பிடித்தவை இரண்டு விஷயங்கள் . ஒன்று இங்குள்ள இறைச் சிந்தனைகள் . மற்றொன்று எளிமையும் அன்பும் ,பண்பும் கலந்துள்ள வாழ்க்கை. இங்கே இருந்த பின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் . இயற்கை அன்னையின் மடியில் இருக்கும் அழகை ரசிக்கத் தெரியாதவர்கள் அவர்கள் . எல்லா எளிமையுடன் மனிதர்களை நேசிக்கும் பண்புள்ளவர்களுடன் சேர்ந்து உலகத்தில் எளிமை, தொண்டு, வாய்மையுடன் சேர்ந்த ஆனந்த வாழ்க்கைக்கு இந்த பாபு குடி ஒரு எடுத்துக்காட்டு “.பாபு குடிலிலிருந்து முப்பது நாற்பது அடி தூரத்தில் உள்ள அவரின் அலுவலுகக் குடிசையில்தான் மகாதேவ் பாயி ,ப்யாரேலால் ,குமாரி அம்ருத் கௌர் மற்றும் பலர் உட்கார்ந்து வேலை செய்வார்களாம் . பாம்புகளைப் பிடிக்க ஒரு தடியும் அதை உள்ளே வைக்க ஒரு பாம்புக் கூடும் உள்ளது . அங்கு பாம்புகளை அடிக்க மாட்டார்கள் . பிடித்து வெளியே தூரமாக இருக்கும் காட்டுப் பகுதியில் விட்டு விடுவார்கள்.

பா –குடி (அன்னை கஸ்தூரி பாய் –குடி): ஜமுனாலால்ஜி அன்னை கஸ்தூரிபாய் அவர்களுக்காக காந்தியின் அனுமதி பெற்று, போட்டுத் தந்த பெரிய குடிசை இது . கஸ்தூரி பாயுடன் அங்குள்ள பெண்கள் அனைவரும் இந்த இடத்தில் தங்கி அங்குள்ள பெண்மணிகளுக்கு, நெசவு, தையல், யோகா முதலியவற்றை  கற்றுத் தந்திருக்கிறார்கள் .

ஆக்ரி நிவாஸ் : (கடைசி இல்லம் ) : ஜமுனாலால்ஜி தானும் இங்கு வசிக்கலாம் என்ற கனவுடன் இதைக் கட்டினார் . ஆனால் சாந்திதாஸ் ,லார்ட் லோதியன் தங்கினார்கள் ,பின்பு சுஷீலா நாயர் இங்கு தங்கி, மக்களுக்கு மருத்துவச் சேவைகள் செய்துள்ளார் . தற்போது அந்த இடம் மகாத்மா காந்தி ஆயுர்வேத மையமாகி விட்டது . பல முறை இந்த விடுதியில் காந்தி தங்கி உள்ள போதிலும், 1946ல் அவருக்குக் கடுமையான இருமலும் ,குளிரினால் அவதிப்படும் நிலையும் இருக்கையில்,இங்கு தங்க வைத்து வைத்தியம் செய்திருக்கிறார்கள் . அவர் நலமடைந்து இந்த இடத்திலிருந்து 25, பிப்ரவரி  1948ல் தில்லி திரும்பத் திட்டமிட்டிருந்தார் ,ஆனால் 3௦ ஜனவரி 1948ல் சுட்டுக் கொல்லப்பட்டார் . கடைசியாக வாழ்ந்த இடத்திற்குக் கடைசி நிவாசம் (ஆக்கிரி – நிவாஸ் ) எனப் பெயரிட்டார்கள். ஸ்ரீ தர்மானந்த கோசம்பி இங்கு தங்கி இறக்கும் வரை உபவாசம் இருந்து உயிர் துறந்திருக்கிறார் .

பிரார்த்தனை பூமி : இது திறந்த வெளியில் சுற்றும் மணல் நிறைந்த மைதானமாகும் .இந்த மைதானத்தில் பாபுவுடன் எல்லோரும் இரவு நேரங்களில் வெட்ட வெளியில் தூங்குவார்களாம். பாபு பொட்டாசியம் பர்மாங்கனேட்,பல குத்தல் குச்சி கூட வைத்து தூங்குவாராம் . அங்கு பாம்புக் கடி ,தேள் கடி போன்றவைக்காகச் சிகித்சை செய்ய எப்போதும் தயாராக இருப்பாராம் . அன்று இவர்கள் வைத்த பலவிதக் கன்றுகள் இன்று பெரிய மரங்களாகிக் காணப்படுகின்றன .

தூய்மயான துளசி மடம் : அன்னை கஸ்தூரிபாய் 1942ல் வெள்ளயனேவெளியேறு போராட்டத்தில் புனேயில் காந்தியுடன் போலீஸ் கஸ்ட்டடியில் இருந்தபோது சேவா கிராமிலிருந்து துளசியைக் கொண்டு போய்க் கொடுத்தார்கள் ,அன்னையும் பக்தியுடன் பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது . அன்னையின் மறைவுக்குப் பிறகு, காந்தி சேவாகிராம் வந்தபோது தொண்டர்கள் துளசியையும் கூடக் கொண்டு வந்து, அன்னை நினைவாக காந்திஜி கையில் கொடுத்து நட்டார்களாம். இன்று அங்கு ‘துளசி பௌதா” என்ற பெயரில் பெரிய துளசிவனத்தைக் காணலாம் .

இன்னும் காந்திஜி வாழ்ந்த குடிசையில் மண்ணால் செய்த கிராமத்துப் பாத்திரங்கள், பானைகள், தட்டுக்கள், அடுப்பு ஆகியவற்றைக் காணலாம்.

மகாதேவ்-குடி: காந்திஜியின் பிரதானக் காரியதரிசி மகாதேவ் அவர்கள் வர்த்தாவினிலிருந்து சேவாக்ராமுக்குத் தினமும் நடந்து வந்து தபால்களை எல்லோருக்கும் தந்து விட்டுச் செல்வாராம் . அவரின் குடும்பத்திற்காகப் போடப்பட்ட அழகான, பெரிய, காற்றோட்டமாய் இருக்கும் குடிசையைக் காணலாம் . 14  ஆகஸ்ட்  1942அன்று பூனேயில் வெள்ளையர்கள் அடைத்திருக்கும்போது அவர் முன் மகாதேவ் இறந்தார் . மகாதேவ் ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழியில் புலமை பெற்றவர். அவரின் மறைவு காந்திஜியைப் பெரும் துயரமாகவே வாட்டியது .

கிஷோர் நிவாஸ் : இவரும் அண்ணல் காந்திக்கு உதவியவர். அவர் தங்கிய இடம் தான் இன்று கிஷோர் நிவாசன் என அழைக்கப்படுகிறது .

பர்சுரே குடீ (parchure kuti):பர்ச்சுரே சாஸ்திரி சமஸ்க்ருதப் புலவர் . சபர்மதியில் கிராம மக்களுக்குத் தொண்டு செய்து கொண்டு இருந்தவர். அவருக்குத் தொழு நோய் வந்து விட்டது. 1939ல் அவர் சேவாக்ராம் வந்து விட்டார் . கருணை மனம் கொண்ட அண்ணல் காந்தி, அவருக்குப் பலவகையில் மருத்துவமும்,உதவிகளும் செய்து வந்தார். தொழுநோய் பாதிக்கப்பட்ட அவரின் உடலுக்கு எண்ணெய் தடவி,நீவிவிடுவாராம் அண்ணல். அவரின் சேவைகளை பார்த்து, அங்குள்ளவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காக ஒரு மையத்தை உருவாக்கினார்கள் .

இவைகளைத் தவிர, தென்னாப்பிரிக்காவில் காந்தியின் நண்பரான ருஸ்தும் பெயரில் அவர் மகன் ஸ்ரீ ஜாலாபாயி அவர் பெயரில் ருஸ்தும் பவன்என்ற வீட்டைக் கட்டிக் கொடுத்தார் .நயி தாலீம் குடி என்று அழைக்கப்படும் இன்னொரு குடிசை திரு ஆரிய நாயகம் மற்றும் அவரின் மனைவி திருமதி ஆஷா தேவிஜியுடன் காந்தி சேர்ந்து, தொடக்கப் பள்ளிக்குத் தேவையான பல நல்ல திட்டங்களை உருவாக்கினார்கள் . பிறகு, சாந்தி பவன் என்ற கட்டிடத்தைக் கல்வி மயமாக்கி, தொண்டு புரிந்தனர். கைத்தறி கொண்டு துணிகளை நெய்வது கபீர் பவன் என்கிற இடத்தில் இன்றும் நடைபெற்று கொண்டிருக்கிறது .

இவைகளைத் தவிர ஹிந்தி இன்டர்நேஷனல் பல்கலைக் கழகம் ,விதர்பா கோவில் (கண்ணன் ருக்மணியை மணம் செய்து கொண்ட இடம் ) காந்தியின் நூலகம் ஆகியவற்றைப் பார்க்கலாம் .

யாத்ரி நிவாசைப் பராமரிக்கும் பெரியவரின் பெயர் மற்றும் தொலை பேசி எண்:ஸ்ரீ அசோக் கிரிஜி —09822797527.

                                              

  டாக்டர் என்.லக்ஷ்மிஅய்யர்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad