Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும்

1962 டிசம்பர்2ம் தியதி. புது டில்லி ரயில்வே ஸ்டேஷன். ஃப்ளாட்ஃபாம் நம்பர்1. மதியம் பகல்11 மணி. புது டில்லியிலிருந்து  இடார்சி நாகபூர், காஜீபேட் விஜயவாடா வழியாக மதராஸ் செல்லும் “கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ்” இன்னும் சில நிமிடங்களில்  புறப்பட இருக்கிறது என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறைகுறை தமிழிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.

சுந்தர் ராமன் தன்னுடய மனைவி ராதையுடன் போர்ட்டரை விரட்டிக்கொண்டு அவசர அவசரமாக4 வது பெட்டியில் ஏறினார்கள். ஒரு சீட் கூட காலியில்லை. போர்ட்டர் உள்ளே சென்று ஒரு வட இந்தியக் குடும்பத்தாரிடம் என்னவோ சொல்லி என்னிடம் வந்து  “ஹம் பாத் கர்தியா ஹை தும் லோக் ஜாகே தொடா அட்ஜஸ்ட் கர்கே பைடோ” என்று சொல்லிவிட்டு2 ரூபாயை வாங்கிவிட்டுச் சென்றுவிட்டான். உடனே இன்னொரு போர்ட்டரும் ஒரு கணவன் மனைவியும்3 குழந்தைகளுடன் வந்து துண்டை விரித்திருந்த எதிர்த்த சீட்டில்2 தகரப் பெட்டி, 1 ஹொல்டாள் (படுக்கை) மற்றும்4/5 சில்லறைச் சாமானங்களுடன் வந்தனர். மேல லக்கேஜ் வைப்பதற்கு இருந்த இடத்தில்4 பேர் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தார்கள்.

 எதிர்த்த சீட்டில் உட்கார்ந்திருந்த என்னையும் என்னுடைய மனைவியையும்  “இடத்தை காலி பண்ணுங்கோ5 ருபாய் கொடுத்து இந்த சீட்டை பிடித்திருக்கிறேன்” என்று தமிழில் கத்த ஆரம்பித்தார் அந்த மனிதர். அவர் கத்திய கூச்சலைக் கேட்டு அந்த வட இந்தியக் குடும்பத் தலைவர் அவரிடம் ” கியோங் சாப் சில்லாத்தா ஹை, ஆப் கா ஹி காவ் வலா ஹை தொடா அட்ஜுஸ்ட் கரோன்னா” என்று சொன்னார். உடனே இவர் அவரிடம் ” ஆப் அப்னா காம் கரொன்னா, கைககு வகாலத் கர்த்தா ஹை” சொல்லவே, அந்த வட இந்தியக் குடும்பத்தலைவரின் மனைவி “ஆப் சுப் பைடோன்னா” என்று சொல்லவும் அவரும் நமெக்கென்ன எக்கேடும் கெட்டுத் தொலையுங்கோ என்று ஒரு புஸ்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கி விட்டார். வண்டியும் கிளம்பி வேகமெடுக்கத் துவங்கியது. மதுராவில்3 பேர், ஆக்ராவில்2 பேர், ஜான்சியில்4 பேர் என்று கூட்டம் கூடத் துவங்கியது.

சரி இருக்கிற இடத்தில் அட்ஜஸ்ட் செய்வோம் என்று ஒரு கம்பிளியை இரண்டு சீட்டிற்கு நடுவில் இருந்த இடத்தில் நானும் ராதையும் உட்கார்ந்து கொண்டோம். இன்னும் போகப் போக கூட்டம் ஜாஸ்தியாகுமே தவிர குறையப் போவதில்லை. உடனே அந்தத் தமிழ் மாமா என்னிடம் “நீங்க இரண்டு பேரும் இப்படி நடுவில் உட்கார்ந்தா, நாங்க எப்படிப் போறது வறது” என்று சொன்னவுடன் என்னுடைய கோபம் உச்சாணிக் கொம்பில் ஏறியது.

“என்னா சார் நீங்க இந்த க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸையே விலை கொடுத்து வாங்கின மாதிரி அலுத்துக்கிறீங்க,உங்களால ஆனதைப்  பாருங்கோ. நான் எழுந்திருக்கவும் மாட்டேன், எழுந்திருக்கவும் முடியாது. ஒங்க வறது போறது எல்லாம் ஒங்க வீட்டிலே போய் பார்த்துக்  கொள்ளுங்கோ” என்று நான் கத்த அவர் பதிலுக்கு கத்த முழு கம்பார்ட்மெண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அந்தத் தமிழ்க் குடும்பத்தின் குழந்தைகளில் மூத்த10 வயது பெண் தன்னுடைய அம்மாவிடம் ” என்னாம்மா இந்த அப்பாவுக்கு என்னாச்சு? நேற்றைக்கு சாயங்காலம் ஆஃபீஸிலிருந்து வந்தது முதல் எல்லாரிடமும் சள்ளு முள்ளுன்னு இப்படி கத்திண்டிருக்கார். சரி காலம்பற பார்த்தால் பால்காரனிடம் கத்தினார். ரெயில்வே ஸ்டேஷனில் போர்ட்டரிடம் கத்தினார். இப்போ இந்த மாமாவிடம் ஒரு சின்ன விஷயத்திற்கு போய் இந்தக் கத்து கத்தறார்” என்று அம்மாவின் காதில் சொல்லவே உடன் “லக்ஷ்மி நீ ஒண்ணும் சொல்லாதே,அவர் காதில் விழுந்தால் உன்னையும் கத்துவார், நீ பேசாமலிரு” என்று சொல்லவே  அந்த சின்னப் பெண்ணும் பயந்து வாயை மூடிக் கொண்டது.10 மணிக்கு போபால் வரவும் ஜன்னல் வழியாக இரண்டு பூரி சப்ஜீ வாங்கி,கொண்டு வந்த தயிர் சாதத்துடன் நானும் ராதையும் ராத்திரி சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். அந்தச் சண்டை போட்டா மாமாவோ எழுந்திருந்து மாமியிடம் “10/15 நிமிஷத்திலே வறேன் கை விரல்களை உதட்டில் வைத்துக் காட்டி ஒரு சங்கேத பாஷையில் மாமியிடம் சொல்லிவிட்டுப் போனார். 

உடனே அந்த மாமியும் ராதையின் கையைப் பிடித்துக் கொண்டு எங்களிடம் ” இவர் கொஞ்சம் மூர்க்க புத்திகாரர். கோபம் வந்தது என்றால் யாரு, என்ன, எந்த இடம் என்று தெரியாமல் காட்டுக் கூச்சல் போடுவார். நீங்கள் மனசிலே ஒண்ணும் வச்சுக்காதேங்கோ” என்று அழாத குறையாகச் சொன்னாள். உடனே நானும் ராதையும் “நீங்க எதுக்கு மாமி இவ்வளவு வருத்தப்படறீங்க. நாங்க அப்பவே மறந்தாச்சு” என்று சொன்னவுடன், அந்த மாமியின் முகத்தில் ஒரு புன் சிரிப்பு வந்தது. அந்த வட இந்தியக் குடும்பத்தினரிடமும், மாமி இதே வார்த்தைகளைச் சொல்லி அவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்..

 ராதையிடம் ” இன்னம்2 ராத்திரி எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு ஆனந்தவிகடனைப் புரட்ட ஆரம்பித்தேன். ராதையும் மாமியும் பேசிக்கொண்டிருந்தனர்.20 நிமிஷம் கழித்து மாமா வரவும், மாமி பேச்சை மாற்றி ” என்னா உங்களுக்கு சிகரெட்டு ஞாபகம் வந்துதுன்னா பசியே தெரியாது. வாங்கோ மணி10-30 ஆறது. சீக்கிரம் சோத்துக் கடையை முடிக்கலாம்” என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தனர். 10 நிமிஷம் கழித்து ராதை “என்னங்கோ நேற்றிக்கு நாக்பூர் அக்காவிடமிருந்து லெட்டர் வந்தது. நாக்பூர் ஸ்டேஷனுக்கு வந்து இட்லி தயிர் சாதம், புளியஞ்சாதம் கொண்டுவந்து தரேன். நீ ஒன்றும் வழியில் வாங்க வேண்டாம்” என்று எழுதியிருக்கா. நீங்க நாக்பூர் ஸ்டஷன் வந்தவுடன் வெளியில்

இறங்கி நில்லுங்கோ அவாளுக்கு கம்பார்ட்மெண்டு எது என்று கண்டுபிடிப்பதற்கு ஈஸியாக இருக்கும் நான் நேற்றே சொல்லணம் என்று நினைத்திருந்தேன். மறந்தே போய்விட்டது.” என்று சொல்லவே, நானும் சரி என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தபடியே கண்ணசந்தேன்.

நல்ல டிசம்பர் மாசக் குளிர். காலையில் எழுந்திருக்கும் போதே மணி9 ஆகிவிட்டது.10-00 மணிக்கு  நாக்பூர் வந்துவிடும். வண்டியில் கூட்டம் குறைந்த மாதிரி தெரிந்தது. இடார்சியில் கொஞ்சம்பேர் இறங்கியிருப்பார்கள். என்று நினைத்துக் கொண்டிருக்குபோதே7/8 பேர் “நாக்பூர் ஆகயா” என்று சொல்லி இறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் ஸ்டேஷன் வந்தவுடன் ப்ளாட்ஃபாரத்தில் இறங்கி நின்று கொண்டிருந்தேன். வண்டி30 நிமிஷம் நிக்கும். “வெங்கட் மாப்பிள்ளை” என்ற குரல் கேட்டுத் திரும்பினால் ராதையின் அக்கா தன்னுடய இரண்டு குழந்தைகளுடனும் டிஃபன் பாக்ஸுடனும் வந்துகொண்டிருந்தாள். ராதையும் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி ” அக்கா நான் இங்கே இருக்கேன், இங்க வா” என்று அழைத்து, குழந்தைகளுக்குத் தான் கொண்டுவந்த டில்லி கஜக் மிட்டாய் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டு, அக்காளும் தங்கையும் அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டனர். அன்றைக்கு என்னவோ ட்ரெயின்40 நிமிஷம் நாக்பூரில் நின்று கொண்டிருந்தது.” அத்திம்பேருக்கு2 நாளா குளிர் காய்ச்சல் அதனால் தான் அவர் வரவில்லை. உங்களையெல்லாம் கேட்டதாகச் சொல்லச் சொன்னார்.” என்று அக்காள் என்னிடம் சொன்னாள்.

ட்ரெயினும் நாக்பூரை விட்டுக் கிளம்பியது. வாங்கின ஆங்கில பேப்பரைப் புரட்ட ஆரம்பித்தேன். அக்கா கொண்டு வந்திருந்த இட்லியை ஒரு பிடி பிடித்தேன். நேற்று எள்ளும் கொள்ளும் வெடித்த அந்த மாமாவின் முகத்தில் ஒரு மாற்றம். சிரிக்கவா வேண்டாமா என்று நனைத்துக் கொண்டிருந்தார் போல் தோன்றியது. நான் கண்டு கொள்ளவில்லை.1 மணிக்கு ராதையின் அக்காள் குடுத்த புளியஞ் சாதத்தையும் தயிர் சாதத்தையும் சாப்பிட்டுவிட்டு அப்படியே உட்கார்ந்தபடி ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். ராதையும் மாமியும் பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் மாமாவும் உட்கார்ந்தபடி குறட்டை விடத் துவங்கினார்.6 மணிக்கு காஜிப்பேட் வந்தது. பக்கத்திலிருந்த2 சைடு சீட்டில் இருந்தவர்கள் காஜிப்பேட்டில் இறங்கியதும் நானும் ராதையும் அந்த2 சீட்டைப் பிடித்துக் கொண்டோம். இப்பவாவது உட்கார்ரதுக்கு இடம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். 

வண்டி கிளம்பியதும் மாமா என்னிடம் வந்து என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு ” ஸாரி நான் நேற்றைக்கு உங்களிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. என்னவோ தெரியலை. என்னுடைய ரொம்பக் கெட்ட குணம் முன் கோபம். நீங்க ஒன்றும் மனசிலே வைத்துக் கொள்ளாதேங்கோ” என்று சொன்னவுடன் நானும் ஒரு சிரிப்புடன் ” நான் நேற்றைக்கே அதை மறந்தாச்சு மாமா” என்று பதில் சொன்னவுடன் அவரும் புன் சிரிப்புடன் தன்னுடைய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். எதிர் சீட்டில் இருந்த வட இந்தியக் குடும்பத் தலைவரிடமும் நேற்று நடந்த நிகழ்ச்சிக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். நானும் குழந்தைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

ராதை மாமியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தாள். மாமா என்னுடைய எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டார் . இரண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தோம்.

” தான் சென்ட்ரல் மினிஸ்ட்ரியின் செக்ரெட்டேரியெட்டில் வேலை பார்ப்பதாகவும் கரோல்பாகில் கவர்ன்மெண்ட் குவார்ட்டெர்சில் இருப்பதாகவும் சொன்னார்.2 நாட்களாகவே மூடே சரியில்லை. ஆபீசில் என்னுடைய மேலதிகாரி ஒரு சர்தார்ஜீ நான் லீவில் போறேன் என்று சொன்னதுமே முதல்ல சாங்க்ஷன் பண்ணமாட்டேன் என்று சொன்னான். அப்புறம் அவனைத் தாஜா பண்ணி எப்படியோ15 நாள் லீவு சாங்க்ஷன் பண்ண வச்சிப்  புறப்பட்டேன். என்னுடைய மச்சினன் பிள்ளைக்கு பூணல் நாகர்கொவிலின் பக்கத்தில் பத்மனாபபுரத்தில் வைத்து நடக்கிறது. அப்படியே  ஊருக்குப்போய் எல்லாச் சொந்தக்காராளையும் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிளம்பினேன்” என்று மாமா ஆரம்பித்தார் .

 “நீ எது வரைக்கும் போகிறாய்” என்று அடுத்த கேள்விக்கு ” நான் நாகர்கோவிலுக்குப் போகிறேன். என்னுடைய மச்சினனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். மகாதானபுரத்தில் நடக்கவிருக்கிறது. என்னுடைய ராதையின் ஊரும் அது தான்.” பதில் கூறினேன்.

“எனக்கும் நாகர்கோவில்தான் பூர்வீகம். வடிவீஸ்வரத்தில் தான் பிறந்து வளர்ந்தேன்”. உனக்கு நாகர்கோவிலில் எந்தக் கிராமம்” என்று அடுத்த கேள்வி கேட்டார். அதற்கு நான் ” எனக்கும் வடிவீஸ்வரம் தான் சொந்த ஊர். தளவாய் தெரு” என்று சொன்னவுடன் மாமா என் பக்கத்தில் வந்து ” தளவாய் தெருவிலே யார்?,  உங்க அப்பா பேர் என்ன?, என்ன உத்தியோகம் பார்த்தார்?” என்று கேள்விக்கு மேல் கேள்வி ஒரு தாத்பரியத்துடன் கேட்க ஆரம்பித்தார்.

“அப்பா பேர் சுப்ரமணிய ஐயர் சான்ஸ்க்ரிட் பண்டிட், எஸ் எல் பி ஸ்கூலில் டீச்சராயிருந்தார். சாயங்கால வேளையில் ஊர்க் குழந்தைகளுக்கு சான்ஸ்க்ரிட் சொல்லிக் குடுப்பது வழக்கம் என்று பதில் சொன்ன உடனே ” அப்ப ஒங்க அம்மா பேர் பார்வதியா” என்று கேட்டார். இவருக்கு எப்படி நம்ப அம்மா பேர் தெரியும் என்று ஆலோசித்துக் கொண்டே “ஆமாம்” என்று கூறிய உடன், அவருக்கு என்ன தேன்றியதோ தெரியவில்லை ” தலையில் கை வைத்தபடி முகத்தை மடியில் வைத்து, மாமியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். கண் கலங்கி கண்ணீர் தாரையாக கொட்டியது. மாமி பதறிப்போய் ” என்னாச்சுன்னா, தலை சுற்றுகிறதா, அம்பி கொஞ்சம் வந்து பாரேன்” என்னைக் கூப்பிட்டுச் சொல்லவே நானும் அந்த வட இந்திய குடும்பத் தலைவரும் மாமாவின் அருகில் சென்று அமர்ந்தோம். மாமா சிறிது நேரம் கழிந்து ஒன்றும் இல்லை ஒரு சின்ன அதிர்ச்சி. “ஒகே ஐ அம் ஆல்ரைட் நௌ” என்று கூறி சுதாரித்துக் கொண்டார். 

ராத்திரி11 மணிக்கு விஜயவாடா வந்தது. ராத்திரி சாப்பாடு நாங்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். மாமா என்னிடமும் ராதையிடமும் “கொஞ்சம் இங்கே வந்து என் பக்கத்தில் உட்காருங்கோ மாமியயும் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு மாமியிடம் ” இதோ இங்க பக்கத்திலே வந்து உட்காரச் சொன்ன இவன் யாரு தெரியுமா ” என்னுடைய சொந்த மருமான். நான் அடிக்கடி சொல்லுவேனே “என்னை அம்மா ஸ்தானத்திலிருந்து வளர்த்த பாரு அக்காளின் பிள்ளை. சின்ன வயசில் பார்த்தது. அப்புறம் எப்போதாவது2 வருஷம், 3வருஷத்திற்கு ஊர் போய் அக்காவை பார்த்து விட்டு வருவது வழக்கமாயிருந்தது. இவனும் இவன் தம்பியும் வளர்ந்து படித்து வெளியூர் போய்விட்டார்கள். இவனுடய கல்யாணத்திற்குக் கூட நாம் போக முடியவில்லை. அப்பத்தான் உன்னுடைய கடைசி தம்பி டில்லியில் ஒரு ஆக்ஸிடெண்டில் அடிபட்டு  ஆஸ்பத்திரியில் இருந்தான். இவனைப் போய் நான் நேற்றைக்கு என்னவெல்லாம் கோபப்பட்டு சண்டை போட்டேன் என்னோடு மூர்க்க புத்தி என்னை எப்படி ஆக்கிவிட்டது” என்று கண்ணீருடன் சொல்ல ஆரம்பித்தார். 

எனக்கும் அப்போது தான் நினைவுக்கு வந்தது. நான் படித்து முடித்ததற்கப்புறம் கல்கட்டாவில் வேலை கிடைத்து  அங்கேயே15 வருடம் கழித்துவிட்டேன். ஒரு வருடம் முன்னால் தான் டில்லிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்தேன். நான் டில்லி வந்தவுடன் அம்மவிடம் இருந்து வந்த லெட்டரில் டில்லியில் சோண்டு மாமா இருப்பதாகவும் அவருடய மேல்விலாசத்தை லெட்டரில் எழுதியிருந்தாள் போய் கட்டாயம் பார்க்கணம் என்றும் எழுதியிருந்தாள். அந்த லெட்டர் எங்கோ தொலைந்து போய்விட்டது. அப்பறம் வேலையின் மும்முரத்தில், அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.  மாமாவிடம் இதைச் சொல்லி தப்பு என் பேரில் தான். அந்த லெட்டர்  வந்த அடுத்த வாரமே உங்களை வந்து பார்த்திருந்தால்,இந்தச் சண்டையே வந்திருக்காது” என்று சொன்னேன். அப்பறம் கேட்க வேண்டுமா? மாமாவும் மருமானும் ராத்திரி முழுக்கத் தூங்காமல் பழைய கதைகளைப் பேசித் தீர்த்து விட்டோம். மறு நாள் காலை 8மணிக்கு  ஜீ டீ எக்ஸ்பிரஸ் மதறாஸ் செண்ட்ரல்1ம் ப்ளாட்ஃபாரத்தில் வந்து சேர்ந்தது.

அன்று மாலையில் திருநெல்வேலி எஃஸ்ப்ரெஸில் நான் ராதை,மாமா, மாமி மாமாவின்3 குழந்தைகள் எல்லோரும் ஊர் போய்ச் சேர்ந்தோம். ஒரு ராத்திரி பிரயாணம் என்றாலும் ரொம்பக் குதூகலத்துடன் எல்லோரும் எஞ்சாய் பண்ணி அடுத்த நாள்11 மணிக்கு திருநெல்வேலி சென்று அங்கிருந்து பஸ் பிடித்து நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம்.  மாமா என்னிடம் ” நாங்கள் நேரே ஒரு டாக்ஸி பிடித்து பத்மனாபபுரம் போய்விட்டு, கல்யாணம் முடிந்த அடுத்த நாளே அக்காளை வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு மாமா போனார். மாமா2 நாள் கழித்து, என்னுடைய வீட்டிற்கு வந்து வாசலிலிருந்தே ” பாரு அக்கா உன் பிள்ளையிடம் என்னுடைய மருமான் என்று தெரியாமல் சண்டை போட்டேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார். அதற்கு அம்மா ” ஏண்டா சோண்டூ உன்னுடைய கோபத்தைக் காட்ட என் பிள்ளைதான் கிடைத்தானா” என்று பாசத்துடன் மாமாவைக் கட்டி அணைத்துக் கொண்டு ” இவன் தான் என்னுடைய மூத்த, நான் பெறாத பிள்ளை” சொன்னவுடன், மாமாவின் கண்ணீர் தாரையாக வெளிப்பட்டது.

அந்தக் காலத்தில் குடும்பங்களில் பணமில்லாமலிருந்தது. ஆனால் பாசத்திற்கும் அன்புக்கும் குறைவே இல்லை. இன்று அந்த அன்பும் பாசமும் எங்கே போயிற்று? இந்த கேள்விக்கு யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

நாகை நீலன் / செம்பூர் நீலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad