Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

என்னால் சுவாசிக்க முடியவில்லை

“அம்மா .. என்னால் சுவாசிக்க முடியவில்லை .. ” அமெரிக்க நாட்டுப் போர் வீரர் நினைவு நாளான மே மாதம் 25 ஆம் நாள், மினியாபொலிஸ் நகரின், நிழற் சாலையில் ஒலித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் ஓலக் குரல் பலரது மனங்களில் ஆழப் பதிந்து அமெரிக்கா முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. செய்தித் தாள், சமூக ஊடகங்கள் முழுதும் இந்த மனிதரின் முகம் வியாபித்து உலக மக்கள் பலருக்கும் இந்த மனிதரின் முகம் பரிச்சயமாகிப் போனது.

இந்தளவுக்குப் பிரபலமடைய ஜார்ஜ் அமெரிக்க நாட்டுக்காகப் போராடிய இராணுவ வீரனல்ல; அதிசிறந்த கொள்கையுடையஅரசியல் தலைவனல்ல. மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்; இளம் பருவத்தில் அமெரிக்கக் கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் நாட்டம் கொண்டு பள்ளிக்காகவும் கல்லூரிக்காகவும் விளையாடியவர்; கல்லூரிப் படிப்பைத் தொடர வசதியும், நாட்டமுமின்றி வெளியேறி, இசைக்குழு தொடங்கி சம்பாதிக்க முயன்று தோற்றுப் போனவர்; பல்வேறு வேலைகள் செய்து குடும்பத்தினருக்கு உதவிய போதிலும் அவரைப் போன்றவர்களைத்  தொற்றிக் கொள்ளும் போதைப் பழக்கத்தில் வீழ்ந்தவர்; வழிப்பறி, திருட்டு என்று குற்றங்களில் ஈடுபட்டு தடுமாறி, நான்காண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு புது வாழ்வைத் தேடி மினியாபொலிஸ் நகருக்கு வந்தவர்; தான் இளம் பருவத்தில் தடம் மாறியது போல இன்றைய தலைமுறை மாறிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்களுக்கு வழிகாட்டி, உதவியவர்; வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நேரியல் கருத்தைச் சொல்லி வந்தவர்; பொருள் வாங்க கடையில் கொடுத்த இருபது டாலர் நோட்டு கள்ள நோட்டாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்; மீண்டும் வழக்குப் பதியப்பட்டால் நிரந்தரமாக  வேலையிழக்க நேரிடுமென அஞ்சி போலீசாரிடம் மல்லுக் கட்டியவர்; தரையில் தள்ளப்பட்டு, அடுத்த ஒன்பது நிமிடங்கள்  சாலையோர சிமெண்டு வரம்பில் முகம் புதைந்து உரச காவலர் ஒருவர் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்த, மூக்கிலிருந்து ரத்தம் வடிய ,  ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை .. ஆ.. ஆ .. அம்மா .. என்னால் சுவாசிக்க முடியவில்லை’ என்று கதறிக் கதறி உயிரை விட்டவர்; ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஒரு கறுப்பர்.

அமெரிக்காவில் ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’ என்ற ஓலம் கேட்பது இது முதல் முறையல்ல. 2014 ஆம் ஆண்டு நியுயார்க் மாநிலத் தெருவொன்றில் சிகரெட்டுப் பெட்டிகளை வாங்கித் தனித் தனியாக விற்று வரி எய்ப்பு செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டவர் எரிக் கார்னர். கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முயன்ற எரிக்கின் கழுத்தை போலீசார் ஒருவர் தனது முழங்கையால் வளைத்துப் பிடித்து அழுத்திய போது, மூச்சுத் திணறலால் தவித்த எரிக் ஓலமிட்டதும் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்பது தான். அவரது அபயக் குரலும் போலீசார் காதுகளுக்குக் கேட்காமல் போய்விட அங்கேயே உயிரை விட்ட எரிக் கார்னரும் ஒரு கறுப்பர்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தில், அருகிலிருந்த பொதுமக்கள் ஜார்ஜின் உயிர்ப் போராட்டத்தைப் பார்த்து காவலர்களிடம் கெஞ்சிய போதும் அதற்குச் செவி சாய்க்காமல், சுமார் ஒன்பது நிமிடங்கள், நான்கு காவலதிகாரிகள் அரங்கேற்றிய கொடூரம், காணொளியாகப் பதிவாகி நாடு முழுதும் பரவி அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது. போலிசாரின் மிருகத்தனமான செயல், குறிப்பாக கறுப்பினத்தவர் மீது போலீசார் கொண்டிருக்கும் துவேஷம், பெருஞ்சீற்றத்தை உருவாக்கிவிட பொதுமக்கள் வெகுண்டெழுந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். போலீசாரின் இவ்வகைச் செயல்கள் தற்செயலாக நேர்ந்த விபத்துகள் என்று ஒதுக்கிவிட பொதுமக்கள் தயாராகயில்லை; ஒதுக்கிவிடவும் கூடாது.

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளாக அமெரிக்காவுக்குத் தருவிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை இன்னமும் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற நிலையில் தான் உள்ளது என்கின்றன ஆய்வுகள். 1944 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஸ்டின்னி என்ற பதினான்கு வயது கறுப்பினச் சிறுவன் தன் வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த இரு வெள்ளையினச் சிறுமிகளைக் கொன்றுவிட்டான் எனக் கருதி. அவசர அவசரமாக வழக்கை நடத்தி அன்றைக்குப் பிரபலமாகயிருந்த மின் ஆற்றல் பாய்ச்சும் மரணதண்டனை (electrocution) வழங்கப்பட்டது. இவ்வகையான தண்டனை நிறைவேற்றப்படும் பொழுது  அணிவிக்கப்படும் தலைக்கவசம் பதினான்கு வயதுச் சிறுவனின் தலைக்குப் பொருந்தாமல் மின்சாரம் பாய்ந்து அவன் உடல் துடித்தத் தருணத்தில் கழண்டு எகிறி விழுந்ததாகத் தண்டனையை மேற்பார்வையிட்டோர் பதிந்துள்ளனர். அச்சிறுவனைக் கைது செய்த வெள்ளைக் காவலர்கள் அவனுக்கு உணவு கொடுக்காமல் இரண்டு வாரங்களுக்கு மேல் பட்டினிப் போட்டு அவன் முன்னே உணவைக் காட்டிக் காட்டி அவன் செய்யாத தவறை ஒப்புக் கொள்ளச் செய்தனர் என்ற குமுறல், அந்தக் காவல் நிலையத்தைத் தாண்டி ஒருவருக்கும் கேட்கவில்லை. 2௦௦௦ஆம் வருட நெருக்கத்தில் இவ்வழக்கைத் தோண்டியெடுத்த சில வழக்கறிஞர்கள் நடத்திய ஆய்வில் அந்த இரண்டு பெண்களும் விளையாடும் பொழுது ஒருவர் மண்டையில் ஒருவர் மோதி இந்த இறப்பு நேர்ந்திருக்கக் கூடும்; அல்லது இப்பெண்களை யாரோ வேறொரு இடத்தில் வைத்துக் கொலை செய்து அங்கு கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்ற வாதிட, 2014 ஆம் ஆண்டு, அதாவது ஜார்ஜ் ஸ்டின்னிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு எழுபது ஆண்டுகள் முடிந்த பின்பு, அவன்  கொலை செய்ததற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் அவனுக்கு மரண தண்டனையளித்த நீதிமன்றத்துக்கு அபராதம் விதித்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இப்படிப் பல தசாப்தங்களாக ஊறிப் போன, கறுப்பினத்தவர் மீதான பிரித்துணர்வும், இனப் பாகுபாடும் மார்ட்டின் லூதர் கிங் எடுத்த பெருமுயற்சியால் ஒழிந்துவிட்டது என்று பொதுவெளியில் பேசினாலும், பலரது அடிமனதில் இந்தப் பிரிவினை உள்ளோடியிருப்பதைக் காண முடிகிறது. அலுவலகம், பொது இடங்கள், வீட்டுச் சுற்றுவட்டாரம் எனப் பல இடங்களிலும் இனப்பாகுபாடு திளைப்பது மிகக் கசப்பான உண்மை.   

2012ஆம் ஆண்டு ஃப்ளாரிடா மாநிலத்தில், தெருவில் நடந்துவந்த 17 வயது ட்ரேவான் மார்டினை எந்தக் காரணமுமின்றி சுட்டுக் கொன்ற காவலதிகாரி விடுவிக்கப்பட்டபோது உருவானதுதான் ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ (Black Lives Matter) என்ற மனித உரிமைக்கான அமைப்பு.  இந்த அமைப்பின் கணிப்புபடி, 2013 தொடங்கி பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் போலீசாரின் முறையற்ற கையாளுமையால் இறந்துள்ளனர். (இவ்வகையான கைது தொடர்புடைய இறப்புகளில் போலீசாரின் நடவடிக்கைகள் சரிவர வெளியிடப்படாததால் இவர்களிடம் துல்லியமான எண்ணிக்கை இல்லை)  இவர்கள் அனைவரும் உத்தமர்கள் இல்லையென்றாலும் தங்களது நிலையை விளக்க வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள். இவர்களில் பலர் எந்தத் தவறும் செய்யாமல், சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு உயிர் இழந்தவர்கள்.

ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணமும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களும் தனி மனித இறப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிகழ்வுகள் அல்ல. பல ஜனநாயக நாடுகளில் நிலவும் நிற, இன வேறுபாடுகளுக்கெதிரான சீற்றம்;  அடக்குமுறைகளின் குமுறல்.   பல ஆண்டுகளாக குமுறிக் கொண்டிருந்த அழுத்தம் இப்போது பூதாகாரமாக வெடித்துள்ளது எனலாம். இப்போராட்டங்களில் நிற, இன வேற்றுமைகளைக் கடந்து பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பதிய வைப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே சுழன்று கொண்டிருக்கும் கொரோனா தொற்று குறித்த அச்சம் இவர்களுக்குத் தடை போடவில்லை என்றே தோன்றுகிறது. வழக்கமான சமயங்களில் இவ்வித சம்பவங்கள் ஓரிரு நாட்கள் பேசப்பட்டு மெதுவே அடங்கிவிடும். ஆனால் இம்முறை வேலையிழப்பு, உடல்நலக் காப்பீடு, பாதுகாப்பின்மை  என பலவித உளக் குமுறல்களுடன் உழன்று வந்த மக்களை இச்சம்பவம் பெரிதும் பாதித்து மேலும் எரிச்சலடையச் செய்து போராட்டங்களில் வன்முறையைத் தூண்டுகிறது. இவ்வித வன்முறைகள் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வகை வன்முறைகள் இனவேறுபாட்டுக்கு மாற்றம் காணும் வழிகளை அடைத்து விடுகின்றன. மாறாக, அமைதியான ஆனால் வலுவான எதிர்ப்புகள் மூலமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். இந்த மாற்றங்கள் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்திற்காக இருக்க வேண்டும். கல்வி, வேலை, உடல் நலம் என அனைத்துத் தரப்பிலும் பாகுபாடற்ற சமநிலை உருவாக வேண்டும்; நிறத்தை வைத்தும், இனத்தை வைத்தும் ‘இவர் இப்படிப்பட்டவர்’ என்ற முத்திரை பதிக்காத மனநிலை ஒவ்வொரு மனிதருக்கும் வரவேண்டும்.

ஃபிளாய்ட் சம்பவம் நடந்த மறு நாள், நியுயார்க் செண்ட்ரல் பூங்காவில், அங்கிருந்த எச்சரிக்கையை மீறி தனது நாயை, பட்டை கட்டி நடத்திச் செல்லாமல், சுதந்திரமாக நடமாட விட்டிருந்தார் ஒரு பெண். அங்கிருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டி, நாயைப் பட்டை போட்டு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தினார் கிறிஸ்டியன் கூப்பர் என்ற மனிதர். உடனே கைப்பேசியில் போலீசாரை உதவிக்கு அழைத்த அந்தப் பெண் சொல்லிய காரணம் – “ஒரு கறுப்பின மனிதர் என்னை அச்சுறுத்துகிறான்.. எங்களைப் படம் பிடிக்கிறான்.. அவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்”. பொதுவிதியைக் கடைபிடிக்கக் கோரிய மனிதன் கறுப்பர் என்பதால் காட்சியை மாற்றிச் சித்தரிக்கும் இந்த நிலை மாறவேண்டும். கறுப்பர் என்றாலே முரடர்கள். துவேஷிகள் என்ற எண்ணம் மாறவேண்டும்.  துரதிருஷ்டவசமாக நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலை இந்த மாற்றத்திற்குத் துணை நிற்பதாகத் தெரியவில்லை. எனவே தான் மக்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். இவ்வகை அமைதியான போராட்டங்களுக்கு, பொது மக்களோடு காவலர்களும் துணை நிற்பது வரவேற்புக்குரியது. இது போலீசாருக்கும், சமூகத்தினருக்கும் இணக்கத்தை அதிகரிக்க உதவும். அரசியல் சார்பின்றி பிரபலங்கள் பலரும் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  

இன்னொரு பக்கம் போராட்டத்தின் மையக் காரணமான சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த புரிதல் இல்லாமல் போராட்டங்களை எதிர்ப்பவர்களும் உள்ளனர். கலவரங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பது மறுக்கமுடியாத கருத்து. ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்க முனைவது வன்முறையல்ல.

இப்போராட்டங்களுக்கு என்ன தான் தீர்வு என்றால், தீர்வு கிடையாது என்பது தான் உண்மை. ஒரே நாளில், ஒரே மாதத்தில் தீர்வு கிடைக்காது. அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருக்குமானால் மார்ட்டின் லூதர் கிங்கின் காலத்துக்குப் பிறகு தீர்வு கிடைத்திருக்க வேண்டும். இப்போராட்டங்கள் மாற்றத்தைக் கொணர வேண்டும். தீர்வை அல்ல.

நமக்குத் தேவையான, முறையான மாற்றம் வேண்டுமாயின், கூட்டு வெகுஜன அமைப்பின் தனி நபர்களாகிய நாமும் நம்  பங்கை அளிக்க வேண்டும்; நம் கருத்தை அழுந்தப் பதிய வைக்க வேண்டும்; நம் பிள்ளைகளுக்கு நிற, இன வேறுபாட்டின் தீமையை விளக்க வேண்டும். ‘நீக்ரோ’ என்ற சொல்லோ, கறுப்பர் என்ற சொல்லோ மட்டும் இனவெறியைக் குறிப்பவை அல்ல. நம் கண்ணுக்கு முன் அவர்களுக்கு நடைபெறும் அநீதிகளைக் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதும் தவறு தான். இந்தப் போராட்டங்களில் பலர் பலவித பதாகைகளைத் தாங்கி வந்தனர். என்னைப் பொறுத்தவரை ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி கொண்டு வந்த பதாகையிலிருந்த “SILENCE IS VIOLENCE” –”(இத்தகைய அநீதிகளுக்கு) அமைதி காத்தலும் வன்முறையே” – என்ற சொற்றொடர் மிக அழுத்தமான கருத்தைச் சொல்லியதாகப்பட்டது.    

பாஸ்டன் தேனீர் விருந்து, ரோஸா பார்க்கர் போராட்டம், உரிமைப் போராட்டம் எனப் பல போராட்டங்களைக் குறித்து வரலாற்றுப் புத்தகங்களில் படித்துப் புளகாங்கிதம் அடையும் நாம் கண் முன்னே நடக்கும் போராட்டத்தில் அமைதி காத்து விடுகிறோம். என்றோ உருவான வரலாற்றுச் சம்பவங்களுக்கு அளிக்கும் மதிப்பை இன்று புதிதாக ஒரு வரலாறு உருவாவதற்கும் அளிப்போம்.

–    ரவிக்குமார்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. ஜெ.பாபு says:

    அருமையான, அற்புதமான, அழகான பதிவு.

    சிறப்பு

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad