\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு

நூற்றாண்டைக் கடந்து உலகளாவிய நிலையில் சரித்திரம் படைத்த நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்றாகும். இந்நூலகமானது பல்துறை சார்ந்த ஓலைச்சுவடிகளின் கருவூலமாகத் திகழ்கிறது. எண்ணற்ற மருத்துவச் சுவடிகளைக் கொண்டுள்ளது. அவை நம் பழந்தமிழரின் இயற்கை மருத்துவ அறிவையும் நோய் தீர்க்கும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற தமிழ் மருத்துவ முறைகள் எனும் நூலினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

நூல் உருவாக்கம் 

ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, மொழிகளில் சுவடியல் பயிலரங்குகள் நடைபெற்று வருகின்றன. 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் நாள் முதல் இருபத்தி எட்டாம்  வரை நடைபெற்ற தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கில் பயிற்சிப் பெற்ற 38  மாணவர்களைக் கொண்டு நூல் பதிப்பிக்கும் முயற்சியாக ஒரு மாணவருக்கு ஒரு ஏடு என்று வழங்கப்பட்டு அதிலுள்ள மருத்துவக் குறிப்புகளை எழுத வைத்து சரிபார்த்து, தொகுக்கப்பட்டது. மேலும் இத்தொகுப்பு ஓய்வு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அவர்களுடைய நுண் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முழுமை செய்த பிறகே அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.  இம்மருத்துவம் குறித்த தரவுகள் அடங்கிய தொகுப்பிற்குத் தமிழ் மருத்துவ முறைகள் எனும் பெயரிட்டு இந்நூலைப் பதிப்பித்து நூலாக்கியவர் தமிழ்ச் சுவடியியல் பயிற்றுநர் பண்டிதர், முனைவர் மணிமாறன் அய்யா அவர்கள். இப்புதிய முயற்சி பயிற்சி மாணாக்கர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதுடன் சுவடியியல் பயிற்சியில் தொடர்ந்து தங்களது அறிவு சார்ந்த பங்களிப்பின் மூலம் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கும் வழிவகை செய்யும் என்பது உறுதியே. 

நூல் அமைப்பு

இந்நூலில் 37  வகையான மருந்தின் பெயர்கள், அவற்றை தயாரிக்கும் முறைகள், அவற்றின் பயன்கள் விளக்கமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சித்த மருத்துவம், சித்தர்கள் தொடர்பான செய்திகள், அரும்பத அகராதி, மூலிகை விளக்கம் போன்ற தரவுகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

மருந்தின் பெயர்கள்

இந்நூலின் பொருளடக்கப்பகுதியில் மருந்தின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ளன. அவை,

  1. சௌபாக்ய லேகியம்
  2. சீனக்கிருத லேகியம்       
  3. மதன காமேசுர லேகியம்
  4. சர்வோஷ்ண நிவாரண தைலம்
  5. ஜன்னி மாத்திரை
  6. வயிரவ மாத்திரை
  7. மேக கேசரி எண்ணெய்
  8. விந்தாதி மதன சூரணம்
  9. மேகத்தெண்ணெய்
  10. சுக சீவணி பாணிதம்
  11. மெய்ஞான கற்பம்
  12. சஞ்சீவி சூரணம்
  13. அஷ்டாதிச் சூரணம்
  14. பரங்கிப்பட்டைச் சூரணம்
  15. சஞ்சீவிக்கிருதம்
  16. மேகராசாங்க எண்ணெய்
  17. மதன கற்ப மாத்திரை
  18. கப ராசாங்கம்
  19. கிரந்தி எண்ணெய்
  20. அகஸ்தியர் குழம்பு
  21. மதன சிந்தாமணி லேகியம்
  22. சீனச்சூரணம்
  23. மலபந்த நிவாரணி
  24. சிவனார் வேம்பு தைலம்
  25. பலகடி மேக சஞ்சீவி
  26. பல மூலிகை கற்பம்
  27. வைரவ மாத்திரை
  28. மேக சஞ்சீவி எண்ணெய்
  29. நவமூல சஞ்சீவி
  30. கூழ் பாண்ட மதன சிந்தாமணி
  31. மன்மத சிந்தாமணி
  32. மனமோகன சிந்தாமணி
  33. அகஸ்தியர் கூழ்பாண்டக்கிருதம்
  34. கூழ் பாண்டு இங்கிதக் கிருதம்
  35. சூட்சுமக் கூழ் பாண்டுக் கிருதம்
  36. தாதுவிருத்தி மாக்கூழ் சூரணம்
  37. சிவனார் வேம்புத் தைலம்

இவ்வாறு பல்வேறு வகையான நோய் தீர்க்கும் மருந்துகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

சான்றாக, சிவனார் வேம்பு தைலம்

இம்மருந்து தயாரிப்பதற்குத் தேவையானப் பொருள்களும் அவை தயாரிக்கும் முறைகளும் அவற்றின் பயன்களையும் கீழ்வருமாறு அறியலாம். 

முட்காவேளை வேர்

சிறியாநங்கை சமூலம்

நிலவாகை வேர்

பேராமுட்டி

மாவிலிங்கப்பட்டை

பெருமரப்பட்டைவேர்

வெள்ளைச்சாரணை வேர்

உலர்த்தின வெள்ளருகு

அளிஞ்சில் வேர்ப்பட்டை

குன்றிமணிவேர்

கோரைக்கிழங்கு

மிளகு

ஓமம்

சதக்குப்பை

சீரகம்

மாவேர்

உத்தாமணிவேர்

சுத்தி செய்த எட்டிவிதை

புங்கம் விதை

பேய்சுரை விதை

பேய்க்குமட்டி விதை

பேய் பீர்க்க விதை

மஞ்சள்

சுத்தி செய்த சேராங்கொட்டை

கருஞ்சீரகம்

எட்டிவேர்

வால்மிளகு

சர்க்கரை

குமட்டிவிதை

தகரை விதை

சுத்தி செய்த நேர்வாளப்பருப்பு

செங்கதாரிப்பட்டை

கொடிவேலி வேர்ப்பட்டை

உலர்த்தின கையான்தகரை

எருக்கன்வேர்

மிரியார் கூந்தல் வேர்

இவை வகை ஒவ்வொன்றும் சம எடை

மேற்கண்டவற்றிற்கு சமன் – சிவனார் வேம்பு சமூலம்

செய்முறை: மேற்கண்ட சரக்குகளுள் வேர் வகைகளைச் சிறு துண்டுகளாகத் துண்டித்தும், மற்றவைகளைச் சேர்த்தும், இடித்தும் பாகப்படி குழித்தைலம் இறக்கிக் கொள்ளவேண்டும்.

பிரமாணம்: மூன்று துளிவரையில், ஐந்து துளிவரையில் உபயோகிக்கலாம். பலத்த தேகிகளானால் ஏழு அல்லது ஒன்பது துளிவரை உபயோகிக்கலாம்.

அனுபானம்: பொரி அரிசி மாவு, சீனிச்சர்க்கரை, நெய், தேன், சர்பத்துக்கள் முதலியவைகளாம்.

உபயோகம்: மேக ரோகங்கள், சூலை ரோகங்கள், இசிவு ரோகங்கள், கிருமி ரோகங்கள், குட்ட ரோகம், குறை நோய், குன்ம ரோகம், பைத்திய ரோகம், வெறி ரோகம் முதலியவைகள் சூரியனைக் கண்ட பனி போலாகும். பாம்பு விஷம், எலி விஷம், நாய் விஷம், பூரான்கடி விஷம், அட்டைக்கடி விஷம், சர்ப்பங்களின் விஷம், தேள் விஷம், ஜலமண்டல விஷம் முதலிய எல்லா விஷங்களும் தீரும்.

பத்தியம்: புளி, புகை, பெண் ஆகியன அறவே நீக்க வேண்டியது. வியாதி பலம், தேக பலம் ஆகியவைகளை நிதானித்து உப்பில்லாத பத்தியமாகாது அல்லது வறுத்த உப்பைச் சேர்த்தாவது பத்தியம் வைக்க வேண்டியது.

இவ்வாறு சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் பல்வேறு இயற்கை மருத்துவ முறைகளைக் கூறுகிறது. மேலும், இயற்கை மருத்துவ தயாரிப்பாளர்களுக்கு இது  வரப்பிரசாதமாகும். அக்கால இயற்கை வழி மருத்துவ முறைகளை அறிய இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.

பார்வை நூல்

தமிழ் மருத்துவ முறைகள், தலைமைப் பதிப்பாசிரியர் மணி.மாறன் தமிழ்ப்பண்டிதர் மற்றும் சுவடியியல் பயிற்சி மாணவர்கள், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர். 2017 

 

முனைவர் சு. சத்தியா

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தஞ்சாவூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad