அப்பா…
டெஸ்பாட்ச் சுந்தரம் தான் அப்பா ரிசப்ஷனில் வந்து காத்திருக்கிற விஷயம் சொன்னான்.
அப்பா எப்போதாவது இப்படி ரிசப்ஷனில் வந்து உட்காருபவர் தான். பெரும்பாலும் அம்மாவோடு சண்டை போட்ட நாட்களாக அவை இருக்கும்.
சண்டை என்றால், அம்மா பாட்டுக்கு பேசிக்கொண்டே போவாள். அப்பா மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். பொறுக்க முடியாது போகிற சில நாட்களில் மட்டும் சட்டையை மாட்டிக்கொண்டு இப்படி ரிசப்ஷனில் வந்து உட்கார்ந்து கொள்வார். அதைப் போன்ற சமயங்களில் அப்பாவைப் பார்ப்பதற்கு ரொம்பப் பாவமாக இருக்கும்.
அவன் இன்டர்காமைத் தட்டி ரிசப்ஷனைக் கூப்பிட்டான்.
” மாலினி..இஸ் மை டேட் தேர்.?”
” யா..தட் ஜென்ட்டில் மேன் ”
” ஒரு பத்து நிமிஷத்தில் டேபிளை ஒழிச்சுட்டு வந்துடறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்லு
ப்ளீஸ் ”
” ஷ்யூர் ”
அப்பா எப்போதும் இப்படித்தான். தான் வந்து ரிசப்ஷனில் காத்திருக்கிற விஷயம் கூட யாரிடமும் சொல்லியனுப்ப மாட்டார். யாராவது தாங்களாகவே அவரைத் தெரிந்து கொண்டு ” ரகுராம் ஃபாதர் தானே நீங்க ?” என்று கேட்டால் மட்டும் மெலிதாகப் புன்னகைத்து தலையசைப்பார். அப்பவும் கூட ” ரகுவைக் கொஞ்சம் வரச் சொல்றீங்களா ப்ளீஸ்..” என்று கேட்க மாட்டார்.. அப்பா ரொம்ப ஜென்டில்மேன். யாரையும் சிரமப்படுத்த விரும்பாதவர். சொந்த மகனையும் கூட.
அப்பா இத்தனை ஜென்டிலாக இருந்தது தான் அம்மாவுக்குப் பிடிக்காமல் போய் விட்டதோ என்று தோன்றியது.
அம்மாவின் குணாதிசயங்களே வேறு.
நிறைய உப்பும் உறைப்பும் கூடியவை.
தன்னைப்போல் சற்றுக் காரசாரமான ஒரு புருஷனை அம்மா எதிர்பார்த்திருக்கலாம். குழம்பில் ஒருகல் உப்புக்குறைவு என்பதற்காக சோற்றுத் தட்டை விசிறியடிக்கிற ஆண்கள் அம்மாவின்
பார்வையில் ஆண்மை மிக்கவர்களாகத் தோன்றியிருக்கலாம்…
அவன் தலையைக் குலுக்கிக் கொண்டான். காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஆகர்ஷிக்கும் எனபார்கள். அது கூட இங்கு சாத்தியப்படாமல் போனது வேதனை தான் என நினைத்துக்கொண்டான்.
ஒரு வேளை அப்பா நந்திதாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் கொஞ்சம்
சௌக்கியமாக இருந்திருப்பாரோ என்று தோன்றியது.
இருந்திருக்கலாம். அப்பாவுக்கு இணையான தகுதிகளோடு, குணங்களோடு, அப்பாவின் பால்
ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்ட நந்திதா நிச்சயம் அப்பாவுக்கு ஏற்ற துணையாகவே
இருந்திருக்கக் கூடும். ஆனால் அப்பாவை நேசிக்கத் தெரிந்த அவருக்கு, அதை அவரிடம்
சொல்லத் தெரியாமல் போனது சோகம். அப்பா அதைப் புரிந்து கொள்ளாமல் போனது அதை
விடப் பெரிய சோகம்.
அவன் பெருமூச்செறிந்தான். விதி வலியது என நினைத்துக் கொண்டான். எத்தனை தவறான
முடிச்சுக்களைப் போட்டு அது மனிதர்களை இறுக்குகிறது.
அப்பா போன்ற சாந்த சொரூபியான ஒருவருக்கு, அம்மா போன்ற ஒருத்தி மனைவியானதை
வேறென்ன சொல்ல ? அம்மா சுபாவத்திலேயே காளீஸ்வரி. போதாததற்கு ஒரு காரணமும்
கிடைத்தால் ?
“அந்தத் தே….யாவை மனசில் வெச்சுக்கிட்டுத்தான் இவர் என்கிட்ட இப்படி நடந்துக்கிறார்” என்று அலறுவாள்.
அவள் பிறந்த வீட்டில் போய்ச் செய்த அமர்க்களத்தில் ஒரு நாள் அப்பாவின் மாமனார் வீட்டுப்
படியேறி வந்தார்.
“செம்பகம் உங்களைப் பத்தி என்னென்னவோ சொல்லுறாளே மாப்பிள்ளை..?”
“என்ன சொல்லுறா ?”
“உங்களுக்கும் வேற யாரோ பெண்ணுக்கும் தொடுப்பாமே..? ”
அப்பா குன்றிப் போனார். தொடுப்பு என்பது அதிகபட்ச கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தை என்று தோன்றியது. யாரோடு இவருக்குத் தொடுப்பு?
நந்திதாவோடா ?
நந்திதா போன்ற ஒரு உயர் ரக பெண்ணைப் பற்றி இவர்களுக்கு எவ்விதம் புரிய வைக்க முடியும்?
“வாயைத் தொறந்து பதில் வருதா பாத்தியாப்பா ! அத்தினியும் திருட்டுத்தனம்.!” என்றாள் மனைவி.
மனைவியின் கூக்குரல் தெருவையும் எட்டியது.
“பாக்கிறதுக்கு இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னிருக்கார்..இவரா ! ” என்றது.
“அந்த பஜாரியைக் கட்டிக்கிட்டவருக்கு புத்தி எப்பிடியும் போவும் தான் ” என்றது.
“செம்பகம்..எதுக்கு இப்படி ஊரைக்கூட்டறே ? அசிங்கமாயில்லையா ? ” என்றார் ஒரு நாள் பொறுக்க மாட்டாமல்.
“ஆமா..செய்யறச்ச மட்டும் அசிங்கம் இல்ல..நான் சொல்லுறது தான் அசிங்கமாகப் போச்சாக்கும்.! ” என்றாள் அசிங்கமாய் அபிநயித்து.
“சத்தியமாச் சொல்றேன்..எனக்கு யார் கூடவும் எந்தப் பழக்கமும் கிடையாது. நீயாகவே ஏதேதோ தப்பிதமாய் கற்பனை பண்ணிக்கிட்டு..”
“தப்பிதமா..கற்பனையா..? இருங்க வரேன்..” என்று உள்ளே போனவள் நான்கைந்து கிரீட்டிங்
கார்டுகளை எடுத்துக்கொண்டு வந்து நடுக்கூடத்தில் விசிறியடித்தாள்.
“இதெல்லாம் என்ன.? ”
புத்தாண்டு வாழ்த்துக்கள் ! சந்தோஷத்துக்கும் சுபிட்சத்துககும் வாழ்த்துபவைகள். அதைத்தவிர வேறெந்த பாவமும் செய்யாதவைகள். ஆனால் அப்பா செய்த தவறு அதை பீரோவில் பத்திரப்படுத்தியது தான். அது நந்திதாவிடமிருந்து வந்தது என்று தெரிந்ததும்.
“வருஷம் பொறந்தா ஆயிரம் வாழ்த்துக வருது. இத்தெய மட்டும் பீரோவுல வெச்சுப் பூட்டினா
என்ன அர்த்தம் ? யாரு அவ ? யாருங்கறேன் ? ”
அப்பா விக்கித்துப் போனார்.
நந்திதாவை இவளுக்கு எப்படி விளக்குவது ?
ஆபீசில் கூட வேலை பார்த்தவள் என்று சொல்லலாம்.
ஆனால் தன்னை ஒரு தலையாய் காதலித்துத் தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டவள் என்று சொல்ல முடியுமா? தனக்குத் திடீரென திருமணமானது தெரிந்ததும் மௌனமாக வேலையை உதறி விட்டுப் போய் விட்டவள் என்று சொல்ல முடியுமா.?
இன்று வரை அவளோடு தனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது..அவள் இருக்குமிடம்
கூடத்தெரியாது என்றால் நம்புவாளா ? அதுவும் செண்பகம் போன்ற ஒருத்தி ?
இவர் கல்யாணத்துக்கு வந்த அலுவலக நண்பர்களில் நந்திதா இல்லை. சொல்லப்போனால் பெண் ஊழியர்களே இல்லை. ஆண்களும் வெகு சிலர் தான் வந்திருந்தனர்.
கல்யாணம் வெகு தூரத்தில், ஒரு குக்கிராமத்தில், செண்பகத்தின் வீட்டில் நடந்தது முக்கிய
காரணம். இவர் அம்மாவின் சீரியசான உடல்நிலை கருதி மிக அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட
திருமணம்.
கல்யாணம் முடிந்து, அம்மாவின் காரியங்களும் முடிந்து, ஆபீசுக்கு வந்த இரண்டு மூன்று நாட்கள் கழித்துத்தான் அக்கௌண்டன்ட் நந்திதாவின் சீட் காலியாக இருப்பதை உணர்ந்தார்.
“நந்திதா மேடம் லீவா ? என்றார் பக்கத்து சீட் சுகுணாவிடம். சுகுணா இவரை மௌனமாக ஏறிட்டாள். ” அவங்க வேலையை ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டாங்க சார்..”
“ஏன் ?! ” என்றார் திகைத்து.
சாயந்திரம் மொத்த ஆபீசும் காலியாகிக் கொண்டிருந்த போது சுகுணா இவர் அருகில் வந்து
நின்றாள்.
“உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் சார்..”
” சொல்லுங்க மேம்..”
அவள் சொல்லச் சொல்ல, இவர் திகைத்தே போனார்.
இப்படியொரு விஷயம், இவர் சம்பந்தப்பட்டதாய், இவரே அறியாமல்.. இங்கு நடந்திருக்கிறதா !
“வெரி சாரி மேடம்…எனக்கு ஒண்ணுமே தெரியாது..! ” என்றார்.
“உங்களுக்குத் தெரியாது என்று அவளுக்கும் தெரியும் சார். குனிந்த தலை நிமிராத உங்களுடைய இந்த சுபாவம் தான் அவளை மிகவும் ஈர்த்தது. எந்த வம்பு தும்புக்கும் போகாத, எவர் பிரச்சினையிலும் தலையிடாத உங்கள் குணத்தை அவள் மிகவும் சிலாகிப்பாள். கல்யாணம் பண்ணிக்கொண்டால் இவரைப்போன்ற ஜென்டில்மேனைப் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று சொல்வாள் சார் .. ”
” … ”
“அவங்க வீட்டிலும் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள். அவள் அப்பாவுக்கும்
சம்மதம் தான். உங்க அபிப்பிராயம் தெரிஞ்சுக்கிட்டு, ஒரு நாள் உங்க வீட்டுக்கு வருவதாக
இருந்தாங்க. ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது..!”
அவர் திகைத்துப் போய் அப்படியே உட்கார்ந்திருந்தார்.
***
அதற்குப் பிறகு நந்திதாவை அவர் எப்போதும் சந்திக்கவில்லை.
அவள் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்திருப்பதாக கொஞ்சநாள் கழித்துச்
சுகுணா சொன்னாள். அப்போதும் கூட எந்த போஸ்ட் ஆஃபீஸ் என்று தெரிந்து கொள்ளவில்லை.
அடுத்த ஜனவரியில் அவர் பெயருக்கு புத்தாண்டு வாழ்த்து ஒன்று வந்தது. விலாசம் இல்லை. கீழே நந்திதா என்று கையெழுத்து மட்டும் இருந்தது. அதற்கடுத்தும் சில ஆண்டுகள். ஏதோவோர் உணர்வில் அவர் அதை பீரோவில் படுத்திரப்படுத்தினார்.
அதுதான் இப்பொழுது செண்பகத்தின் பார்வையில் பட்டு புயலைக் கிளப்புகிறது.
“யாரு அவ..யாருங்கறேன்..?”
***
அவன் லிஃப்டிலிருந்து வெளிப்பட்டபோது அப்பா இவனைப் பார்த்து விட்டு சட்டென்று எழுந்து கொண்டார். இவன் அவர் அருகில் போய் அவர் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“எப்படியிருக்க டேடி..? ஹவ்ஸ் மம்மி ? ”
“ஃபைன். நீ எப்படியிருக்கே ரகு ? ரேணுகா சௌக்யமா?”
“சௌக்யம் தான் டேடி.. நீ வீட்டுக்கு வரதில்லையென்று தான் அவளுக்குக் கொஞ்சம் குறை ”
அப்பா சிரித்தார். ” வரக்கூடாது என்று ஒன்றுமில்லைப்பா.. நேரம் சரிப்படலை. ரேணுகா ரொம்ப நல்ல பொண்ணு.. யு'ர் லக்கி!” என்றார்.
“உங்களால் தான் அந்த லக் சாத்தியமாச்சு டேடி. இல்லாவிட்டால், அம்மா அவளைப் போலவே ஒரு பிரகிருதியைப் பார்த்து எனக்கும் பண்ணி வெச்சுருப்பா. வீட்டில் மாமியார் மருமகள் சண்டை அமோகமா களை கட்டியிருக்கும்.. ” என்று சிரித்தான்.
தான் ரேணுகாவைக் காதலிக்கிற விஷயத்தை இவன் முதலில் அப்பாவிடம் தான் சொன்னான்.
ஆரம்பத்திலிருந்தே அம்மாவிடம் ஒட்டவில்லை. இவன் அப்பா பிள்ளை. அவர் போலவே
உயரமாய், ஒல்லியாய், சிவப்பாய்.
ரேணுகாவை அம்மாவால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றிற்று. அவள்
ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் மேலதிகாரி. மிக மென்மையானவள்.
“நீ ஒரு முறை அவளைச் சந்திக்கணும் டேடி. யு’ல் பி கன்வின்ஸ்ட் ! ” என்றான்.
“நான் கன்வின்ஸ் ஆகத் தேவையில்லை ரகு. நீ சொன்னால் அதுவே போதும் எனக்கு…ஆனால் அம்மா..அவளை நினைச்சாத்தான் கவலையாயிருக்கு..”
“ப்ளீஸ் டேடி. நீ தான் எப்படியாவது சமாளிக்கணும். ரேணு இல்லாவிட்டால் எனக்கு வாழ்க்கை
இல்லை ” என்றான்.
ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் அப்பாவும் இவனும் ரேணுகாவும் சந்தித்தார்கள். முதல்
பார்வையிலேயே அப்பாவுக்கு அவளைப் பிடித்து விட்டது..
” யு ஆர் லக்கி ரகு ! ” என்றார்.
***
அம்மா தான் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தாள்.
அவனைத் தான் பத்து மாதம் சுமந்த கதையைச் சொன்னாள். அப்பா தான் அவனைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டார் என்றாள். ஏற்காடு கான்வென்ட்டில் அவன் படித்த லட்சணம் இதுதானா என்றாள். தாயை மதிக்காத பிள்ளை ஒருக்காலும் உருப்படாது என்று சபித்தாள். ஒரு சோறும் குழம்பும் கூட வைக்கத் தெரியாதவள் தனக்கு மருமகளாக முடியாது என்றாள்.
அவள் அண்ணன் மகள் திகுதிகுவென்று வளர்ந்து நிற்கிறாள். அவளைத்தான் இவன் கட்ட
வேண்டும். மீறினால், அவன் யாரோ..தான் யாரோ..
கடைசியில் இவன் கல்யாணம் ரிஜிஸ்ட்ரார் ஆபீசில் நடந்தது. அப்பா சாட்சிக் கையெழுத்துப்
போட்டார். நண்பர்கள் கை தட்டினார்கள்.
ரேணுகாவோடு இவன் வீட்டுக்குப் போனபோது அம்மா சினிமா பாணியில் விருட்டென்று உள்ளே போய் கதவை மூடிக்கொண்டாள். அப்பா மட்டும் குவார்ட்டர்ஸ் வரை கூட வந்து இவர்களைக் குடித்தனம் வைத்து விட்டுப் போனார்.
எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இனிமையான தோள் கிடைத்ததில் வாழ்க்கை மிக
சந்தோஷமாக இருந்தது.
ஆனால் அப்பாவை நினைத்து மட்டும் மனம் கஷ்டப்பட்டுப் கொண்டே இருந்தது. இவன்
கல்யாணத்தை நடத்தி வைத்ததில் அப்பா, அம்மாவுக்கு இன்னும் வேண்டாதவராகிப் போனார்.
***
அவர்கள் உட்லண்ட்சில் காஃபி சாப்பிட்டு விட்டு கடற்கரையில் வந்து உட்கார்ந்து
கொண்டார்கள். அப்பாவின் முகம் நிர்மலமாக இருந்தது. இன்றைக்கு
ஏதும் சண்டை இல்லையோ ?
“என்ன விஷயம் டேடி ? ” என்றான்.
அப்பா கொஞ்ச நேரம் கடலையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மெதுவான குரலில் ”
இன்னிக்கு நான் அவளைப் பார்த்தேன் ரகு ” என்றார்.
“யாரை ? ”
“நந்திதா..”
“ஓ..! ” என்று கிட்டத்தட்ட கூவி விட்டான்.
நந்நிதாவைப் பற்றி அப்பா இவனுக்கு முன்பே சொல்லியிருந்தார். அம்மாவின் கோபத்துக்குக் காரணமான நந்திதா !
“எங்கே பார்த்தே டேடி ? ”
“போஸ்டல் ஆர்டர் ஒண்ணு வாங்க போஸ்டாபீஸ் போயிருந்தேன் ரகு.. மேனேஜர் சீட்டில் புதிதாக இருந்த மேடம் பார்த்த முகம் போல் தெரிந்தது. கவனிச்சதில் நந்திதா !”
“ஓ..கிரேட்..! பேசினாயோ ?” என்றான்.
“இல்லை ரகு.. எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக இருந்தது. அவங்க என்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே நான் சட்டுனு வெளிய வந்துட்டேன்..! ”
“யு புவர் டேடி..! உனக்காக அவங்க கல்யாணமே பண்ணிக்காமல் வாழ்க்கையை வீணாக்கிக்கிட்டாங்க..! ஆனால் உனக்கு அவங்களைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசணும்னு கூட தோணலே இல்லையா !” என்றான் சற்றே கோபத்தோடு.
அப்பா அடிபட்டது போல் நிமிர்ந்தார்.
“அவங்க கல்யாணம் பண்ணிக்காதது அவங்க எடுத்த முடிவு. இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும் ரகு..? ”
“பொறுப்பு இல்லே சரி. ஆனால் காரணம் நீ தான் இல்லையா ? தார்மீகக் காரணம்.. அதுக்காகவாவது நீ அவங்களைச் சந்திச்சு ஒரு ஹலோ சொல்லியிருக்க வேண்டாமா டேடி ? அவங்க புண்பட்ட மனதுக்கு அது எத்தனை பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் ! ஆனால் அதைக் கூடச் செய்யணும் என்று கூட உனக்குத் தோணலே பார்… ஹாரிபிள்..” என்றான்.
“பாரு ரகு.. அவங்களோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத போதே, உன் அம்மாவுக்கு
என்மீது ஏகப்பட்ட சந்தேகம். இதில் நான் அவங்களைச் சந்தித்துப் பேசினேன் என்று வேறு
தெரிந்தால் ..அவ்வளவு தான்..”
“ஸோ நீ அம்மாவுக்குத்தான் தான் பயப்படறே இல்லையா? மற்றபடி அவர்களைச் சந்தித்துப்
பேசுவதில் உனக்கு ஆர்வம் இருக்கு ? ”
“ஆர்வம் என்று சொல்ல முடியாது ரகு. ஆனால் என் மீது அவர்கள் கொண்ட அபிலாஷையை உணர்ந்த பிறகு, என் மனதின் மூலையில் அவர்களுக்கு ஒரு சிறு இடம் இருக்கு. ஆனால் அதுவே தப்போ என்று அடிக்கடி தோன்றுகிறது..”
“ஒரு தப்பும் இல்லே ” என்றான் சட்டென்று.
“நான் கல்யாணமானவன் ரகு. வேறு பெண்ணை மனதால் நினைப்பது கூட கல்யாண பந்தத்துக்குச் செய்கிற துரோகமாகி விடும். சொல்லப்போனால் அந்த வாழ்த்து அட்டைகளை
நான் பத்திரப்படுத்தி இருக்கக் கூடாது. ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை ரகு..”
“சிம்பிள் டேடி. ஒரு பெண் தன் மீது உயிரை வைத்திருக்கிறாள் என்று தெரிந்தால் எப்பேர்ப்பட்ட ஆணுக்கும் அவள் பால் மனம் நெகிழும். தெரிந்தோ தெரியாமலோ..அவள் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை பொக்கிஷமாக பாதுகாக்க நினைப்பான். அதுதான் நீ செஞ்சது. சினிமாவிலேயெல்லாம் காண்பிப்பாளே… வளையல்.. அவள் தலையிலிருந்து உதிர்ந்த ரோஜா மலர்.. என்று. ஒரு சென்ட்டிமென்ட் தான் டேடி. இதைத்தவறு என்று சொல்ல முடியாது..”
“ஆனால் அதுவே அம்மாவின் மனசு புண்பட போதுமான காரணமாக அமைந்து விட்டது இல்லையா ?”
“அம்மாவின் மனசு புண்பட்டது இருக்கட்டும். இவங்க மனதை யோசிச்சுப்பாரு டேடி. உன்னை விரும்பி, கல்யாணம் செய்ய நினைத்து, வீட்டில் சொல்லி, அவர்களும் ஒத்துக்கொண்டு, உன்னிடம் கேட்க நினைத்திருந்த சமயத்தில், திடீரென்று உன் கல்யாணம் வேறு இடத்தில் நடந்திருக்கு. இதில் உன் தவறு இல்லை தான். ஆனால் அவர்கள் மனது ? . அதைப் பற்றித்தான் நாம் இப்போது பேசுகிறோம்..”
அப்பா தலையைக் குனிந்து கொண்டார்.
“அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி உன்னை நான் கேட்கப் போறதில்லை டேடி. இனி அது சாத்தியமில்லை. ஆனால், அவர்களை ஜஸ்ட் மீட் பண்ணு என்று சொல்கிறேன். ஒரு சினேகிதனாக.. ஒரு நண்பனாக மீட் பண்ணு. என்ன பேசத் தோணுதோ பேசு. அவங்க பேசறதையும் கேளு. ஒரு ஹெல்த்தி அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணிக்க. மனசு கஷ்டமாயிருக்கறப்போ, ஒரு ஆறுதல் தேடி , நீ என் ரிசப்ஷனுக்கு வரே இல்லையா…ஃபார் ஷேரிங் அண்ட் கேரிங்….அதே மாதிரி இனி நீ அவங்க ரிசப்ஷனுக்கும் போகலாம் டேடி…”
” … ”
” இருபத்தியாறு வருஷம்..உன்னை நினைச்சு..உனக்காகவே..! எனக்கு நினைக்கவே நடுங்குது. அவங்க மேல் உனக்குக் கொஞ்சமாவது அன்பு இருந்தா நீ இதைச் செய்யணும் டேடி..”
அப்பா அவனை நிமிர்ந்து பார்த்தார்.
“அன்பு இருக்கிறதால் தான் நான் இதைச் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன் ரகு..” என்றார்.
” ? ”
“யோசிச்சுப் பாரு ரகு. நீ சொல்வது போல் நான் அவரைச் சந்தித்துப் பேசுகிறேன் என்று வைத்துக்கொள். அது அவருக்கு ஆறுதலாக இருக்காது ரகு.. மாறாக ஒரு குற்ற உணர்வாகத்தான் இருக்கும். எனக்குமே ! ”
“…”
” உன் அம்மாவுக்குத் தெரியாமல் தான் நான் இதைச் செய்ய முடியும் இல்லையா..? உன் அம்மாவின் பாஷையில் சொன்னால் ' அத்தினியும் திருட்டுத்தனம் !' இது தேவையா ரகு..? இதனால் கிடைக்கப்போற நன்மை என்ன சொல்லு.. சொல்லப்போனால் இருக்கிற நிம்மதியும் போயிடும்..”
” … ”
“இதை இன்னுமொரு வகையிலும் பார்க்கலாம். இன்னிக்கு வரை நந்திதா… ஒரு சுயமதிப்போடு சுய கௌரவத்தோடு வாழறா. அவங்க கல்யாணம் பண்ணிக் கொள்ளாததைப் பற்றிய கேள்விகள் பலரின் மனதில் இருக்கக்கூடும். ஆனால் அவளின் டிசிப்ளினான வாழ்க்கை முறை அவர்கள் வாயை அடைச்சிருக்கும். இப்போ அதிலே போய் ஒரு கல் எறியணுமா ? யோசிச்சுப் பாரு ரகு.”
” .. ”
” அவள் மனதில் நான் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அது அப்படியே தொடர்வது தான் எனக்கும் நல்லது. அவளுக்கும் நல்லது. நானே என் பிம்பத்தை உடைத்துப் போட்டால் இவருக்கா இத்தனை பட்டோம் ?' என்று அவரும் நொந்து போய் விடலாம் இல்லையா ?”
” … ”
” நந்திதா போன்ற உயர்தரப் பெண் எவர் வாழ்வையும் இடையூறு செய்ய நினைக்க மாட்டாள் ரகு. எனக்குத் திருமணமானது தெரிந்ததுமே அவள் சட்டென்று விலகிப் போனதிலிருந்தே நீ இதைப் புரிந்து கொள்ளலாம்..”
” … ”
“உன் அம்மாவையும் யோசிச்சுப் பார். அவள் கிராமத்துப் பெண். படிப்பில்லாதவள். வெளியுலகம் தெரியாது. அவள் வாழ்க்கை கணவன் மட்டும் தான். எனவே பொசசிவ்னெவ் அதிகம். அதுவும் கூட ஒரு வகையான அன்பின் வெளிப்பாடு தானே..?
” … ”
” என்றைக்காவது எனக்கும் நந்திதாவுக்கும் எதுவுமில்லை என்று தெரிகிறபோது உன் அம்மா தன் தவறுக்காக வருந்தக்கூடும். அதுவரை நான் என்னை பத்திரமாகக் காப்பாற்றி, அவளுக்குத் தரவேண்டிய கடமை எனக்கு இருக்கு இல்லையா ரகு..?”
“அப்பா…”
” உன் மனம் எனக்குப் புரிகிறது ரகு.. எப்படியாவது நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய். இதுவும் ஒருவகை அன்பு தான். ஆனால் அந்த சந்தோஷம் சரியான வகையில் கிடைக்க வேண்டும் ரகு. எவரையும் வருத்தப்படுத்தி நாம் சந்தோஷமாக இருந்து விட முடியாது
“…”
“இன்றைக்கு உன் அம்மா என் மீது குறை காண்கிறாள் என்றால் அறியாமையால். அந்த
அறியாமையை நான் எனக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டு விடக்கூடாது
இல்லையா..? அப்புறம் அவளுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? ”
அவன் அப்பாவின் கைகளைப் பற்றிக் கொண்டான். அவன் கண்களில் நீர் துளிர்த்தது.
“நீ ஒன்றும் வருத்தப்படாதே ரகு. வாழ்க்கை எப்போதும் இப்படியே இருந்து விடாது. அந்த நம்பிக்கை மட்டும் நமக்கு இருந்தால் போதும்..”
“சாரிப்பா” என்றான்.
“எதுக்கு ? ” அப்பா அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
“சரி..வீட்டில் ரேணுகா தனியாக இருப்பாள் இல்லையா.. நீ கிளம்ப வேண்டாமா ?”
“கிளம்பணும்ப்பா ..” எழுந்து கொண்டான்.
வேட்டியில் ஒட்டியிருந்த மணலைத் தட்டி விட்டுக்கொண்டு அப்பாவும் எழுந்து கொண்டார்.
கொஞ்சமாக இருளத் தொடங்கியிருந்த கடற்கரை மணலில், அப்பாவின் உருவம் வானுக்கும்
பூமிக்குமாக வியாபித்து நிற்பதைப்போல் அவனுக்குத் தோன்றியது.
***
- Bhanumathy Kannan