அந்திப் பூக்கள்
தாராபாய் முதியோர் இல்லத்திற்கு அந்த சிட்டியில் நல்ல பெயரும் புகழும் உள்ளது. இரண்டு முறை தன் சமுதாயத் தொண்டுகளுக்காக தேசிய விருது பெற்ற நிறுவனமும் கூட. பெரிய மாளிகை, நாலு பக்கமும் விசாலாயமாய் வளர்ந்த தென்னை , மா வேப்ப மரங்கள். பக்கத்தில் தாமரைகளுடன் ஓர் அழகிய குளம், அதைச் சுற்றி பூங்கா. அதில் நாற்காலிகள், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மரத்தோடு இணைந்த பூக்கொடிகள், அதில் அழகாய்ச் சத்தம் செய்து கொண்டுள்ள வண்ண வண்ணப் பறவைகள். சுமார் காலை பதினோரு மணிக்கு ஒரு வெள்ளை நிற வசதியான கடல் போன்ற சொகுசுக் கார் பார்க்கிங் ஏரியாவில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு தம்பதி, ஒரு எழுபதுக்கு மேற்பட்ட ஒரு முதியவர் இறங்கி உள்ளே வந்தனர். அலுவலகத்தில் உள்ள மேனேஜர் ராம கிருஷ்ணா அவர்களை அன்போடு உள்ளே கூப்பிட்டு அமரச் செய்தார். அந்தப் பெரியவர் கண்களில் ஓர் இனம் புரியாத அச்சமும் வருத்தமும் காணப்பட்டது. எதையோ பறி கொடுத்தார்போல் அவர் மௌனமாய் அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தார். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து ஓர் பென்ஸ் காரில் இருந்து, இறங்கி உள்ளே நுழைந்தாள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ரமா நடராஜன். வணக்கம் சொல்லிக் கொண்டே உள்ளே வந்து, தன் குஷன் நாற்காலி மேலே மல்லிகைப் பூக்கள், ரோஜா மாலைகளுடன் ஜொலிக்கும் பெருமாளுக்குக் கை கூப்பினாள். அடுத்தபடியாக அந்தப் படத்தின் கீழே மாலை சூடி உள்ள தன் தாய் தந்தையின் படத்த்தையும் கண்களை மூடி வணங்கி விட்டு அமர்ந்து கொண்டே “சொல்லுங்கள் “என்றாள்.
முன்னாடி அமர்ந்தவர்களின் உள்ள ஒரு நடு வயதினர் “என் பெயர் மாதவன். சைண்டிஸ்ட்டாக இருக்கேன். இவங்க என மனைவி லதா. நாங்க ஃபாமிலியோட வெளிநாடு போகப் போறோம். அதுனால அப்பாவை உங்களிடம் விட்டுச் செல்லலாம்னு…” இழுத்தபடி, “ரெகுலராய் மாதமாதம் ஃபீஸ் கட்டிவிடுவேன். ஒரு அட்மிஷன் வேணும். நீங்க பெண்களைப் பெற்ற பெற்றோருக்குதான் முதலிடம் தருவீர்கள் .. என்று கேள்விப் பட்டேன். ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு சீட் கொடுங்கள்” என்றார் பணிவுடன். அந்தப் பெரியவர் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.
“உங்கள் குழந்தைகளோடு போறீங்களா?” கேட்டாள் ரமா. “ஆமாம், மேடம் என் குழந்தைகளோடு மொத்த ஃபாமிலியும் போறோம்” என்றான்.” அப்படீன்னா, உங்க அப்பா உங்க ஃபாமிலி லிஸ்டில் இல்லை, அவ்வளவுதானே ” என்று சற்றுக் குத்தலாக, ஆனால் சிரித்துக் கொண்டே கேட்டாள் ரமா ஒரு விதமான கிண்டலுடன். மேலும், “பரவாயில்லை, உங்களை விட அப்பாவை நாங்கள் அன்பாகப் பார்த்துக் கொள்வோம், ஆனால் இங்கு சில விதி முறைகள் உள்ளன, அதெல்லாம் எங்க மேனேஜர் அப்ளிகேஷன் தரும்போது சொல்வார், நாங்கள் பெண்ணைப் பெற்றோருக்கு முதலிடம் குடுப்பதற்குக் காரணங்கள் நம்ப பாரத சமுதாயத்தில் சட்டங்களில் அவர்களின் முதுமைக்குத் துணை இல்லை என்பதுதான். பையன் இல்லாதவர்களின் மாப்பிள்ளைகள் அரக்கர்களாய் இருந்தால் அந்த முதுமையில் அவர்கள் படும் வேதனையைப் பார்க்க முடியாமல்தான் அவர்களுக்காகவே உருவானது இது. சொல்லும்போது அவள் கண்ணில் இரண்டு சொட்டுக் கண்ணீரும் வெளி வந்தது. அதைத் தெரியாமல் துடைத்து, “ஒரு லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் கட்டி, அஃபிடவிட்டில் கை எழுத்துப் போட்டு “ஐ ஆம் சாரி,அவருடைய இறுதிச் சடங்குகளுக்கும் அனுமதி தரணும் ,ஏனென்றால் இன்றிலிருந்து, நான் அவர் மகள்” என்றாள் சிரித்துக் கொண்டே. “இது ஒரு ஃபார்மாலிட்டி தான், அப்பா நூறு வயது வாழ்வார் ஆண்டவனின் அருளில்” என்றாள் ரமா.”சரிங்க மேடம்”, என்று சொல்லி பத்து நிமிடங்களில் பெட்டி படுக்கை எல்லாம் அட்டெண்டருக்குக் கொடுத்து, பணத்தைக் கட்டி, எல்லாக் கை எழுத்துகளையும் போட்டு காரில் ஏறும் போது “அப்பா, கிளம்பறேன்” என்று சொல்லிக் காரில் பறந்து விட்டனர். அந்தப் பெரியவர் கார் போன திசையை நோக்கி, செயலிழந்து மௌனமாக நின்று கொண்டு இருந்தார். அவர் கண்களில் கண்ணீரைப் பார்த்து மௌனமாய் வருத்தப்பட்ட ரமா, “அப்பா, நான் உங்கள் மகள், இங்கு நிறைய மகள்கள், நண்பர்கள் உள்ளனர், வாருங்கள் என்று அன்போடு கை பிடித்துக் கூட்டிச் சென்று “நம்ப குடும்ப மக்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், வாருங்கள்” என்று லான் பக்கத்தில் உள்ள பூங்காவிற்குக் கூட்டி வந்தாள். அந்த இடத்தில் சுமார் முப்பது, நாற்பது ஆண், பெண் முதியவர்கள் காணப்பட்டனர். ரமா சத்தமாய் “அம்மா அப்பாக்கள் எல்லாம் இங்கு வாருங்கள், இவர் நம்ப குடும்பத்திற்குக் கிடைத்த புது அப்பா, பெயர் ராமநாதன் என்று அறிமுகப்படுத்தினாள்.. சற்று முன் நடந்து நின்றாள் ரமா. அங்கே “வைத்யநாதன், தன் அருகில் உள்ள கிருஷ்ண காந்துடன் “உனக்குத் தான் தெரியுமே, கிருஷ்ணா உயிரை விட்டுப் படிக்க வைத்தேன், பையன்தான் எல்லாம் என்று எல்லாச் சொத்தையும் எழுதி வைத்தேன். என் மனைவி போனவுடன் என்னை இங்கே வீசி எறிந்து விட்டுப் போய் விட்டான், ஒரு ஃபோன் கூடச் செய்யவில்லை. அவன் முதல் நாள் பள்ளிக்கு அழுது கொண்டு போகும்போது நானும் என மனைவியும் ஸ்கூல் வாசலில் காவலாளிகளாய் மூன்று மணி நேரம் வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தோம் ..” என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டு இருந்தார் ரமா. அதைக் கேட்டுக் கொண்டே “உங்களை யாரால் தூக்கி எரிய முடியும் ?. முத்துக்களைத் தூக்கி எறிந்தால் யாருக்கு நஷ்டம் ..? நீங்கள் வருத்தப்படாதீர்கள் , மறந்து விடுங்கள் , அவர்களை மன்னித்து விடுங்கள் , அப்பா என்று சொல்லிக் கொண்டே ராமநாதனிடம் “இவர் உங்களைப் போல் பையனின் தந்தை , சிறப்பு அட்மிஷன்” என்று அவரை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி , பின்பு அவர் அறைக்குக் கூட்டிச் சென்றாள்.
அவர் அறையைச் சுற்றி முற்றிப் பார்த்தார் . அந்த அறை நல்ல வெளிச்சத்துடன் , காற்றோட்டத்துடன் இருந்தது . ஏ.சி, ஒரு கலர் டி.வி , ஒரு மேசை , இரண்டு நாற்காலிகள் , மேசை மேல் பிளாஸ்க் , இரண்டு டம்ப்ளர்கள் வைத்துக் காட்சி அளித்தது . பக்கத்தில் பெரிய டபுள் பெட், அதின் மேல் இரண்டு தலையணைகள் பூக்களின் டிஸைனுடன், சுத்தமாய்க் காட்சி அளித்தன . அறை பெரிதாகதான் உள்ளது . ஏழு மலையான் படமும் அதில் போட்ட சென்ட் ஜாதியின் நறுமணமும் இதயத்திற்கு நிம்மதியை அளித்தது. பக்கத்தில் ஒரு பெரிய பாத்ரூம் , அதற்கு அடுத்தபடியாக ஒரு வெஸ்டேர்ன் கழிவறை , உள் பக்கத்திலிருந்து ஒரு சிறிய பால்கனி அழகாகவே இருந்தது. தொலைபேசி . ஒரு பஸ்ஸர் தலையணைக்குப் பக்கத்தில் உள்ள மேஜையில் காட்சி அளித்தன . ரமா அன்பாக “அப்பா ! இதுதான் உங்கள் அறை , நீங்கள் வேணும்னா வேறொருவருடன் இங்கு தங்கலாம், என்று சொல்லிக் கொண்டே டைனிங் ஹால் , டி .வி .ஹால், பஜனை ஹால் ஆகியவற்றைக் காண்பித்து , பணிப்பெண் தேவியால் ஓர் டம்ளர் பெருங்காயம், இஞ்சி, கொத்தமல்லி உப்பு கலந்த மோரைத் தந்து குடிக்கச் செய்தாள்.
ராமநாதத்திற்கு அந்தச் சூழ்நிலை ஒரு வாரத்திலேயே பிடித்து விட்டது . எல்லோரிடமும் சகஜமாய்ப் பழகி விட்டார். பேச்சில் கிருஷ்ணகாந்த் அந்த சிட்டியில் உள்ள செல்வந்தர் என்றும் , மனைவி இறந்தபின் தானாக இங்கு வந்தார் என்றும் உள்ளுரில் உள்ள மகள்களை ஆறு மாததிற்கு ஒரு முறை காணச் செல்வாரென்றும் தெரிந்து கொண்டார் .. ஒரு நாள் உள்ளுரில் இருந்து கொண்டு , ஏன் இங்கு வந்தாய் ? எனக் கேட்டதற்கு அவர் சிரித்துக் கொண்டே “இத பார் , ராமநாதா , இது மாடர்ன் வெப் உலகம் , நம் எல்லோரும் அந்நிய நாட்டுக்காரங்க. பசங்களுக்கு டாம் அண்ட் ஜெர்ரி வேண்டும் தாத்தா, பாட்டி வேண்டாம். இந்தக் காலத்து இளைஞர்கள் தமக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு மயக்கத்தில் இருப்பார்கள், ஆனால் உண்ணும் தெரியாது . பணம் , இளமை இருந்தால் மட்டும் போதாது, முதியவர்களை, பெரியவர்களை , படித்தவர்களை , பெண்களை எல்லாத்தையும் மீறி மனிதர்களை மதித்து புண்படாமல் அன்போடு பேசும் பண்பாடு தேவை. இதெல்லாம் இப்ப இல்லேவே இல்லை. அன்பில்லை, கொடை இல்லை, இரக்கம் இல்லை, நேரம் இல்லை. எல்லாம் ஓட்டம் தான். எல்லோரும் ஓட்டப் பந்தய வீரர்கள் .. என பையனுக்கும், என மருமகளுக்கும் என மேல் அன்பில்லாதபோது நான் ஏன் அங்கு இருக்கணும் ? பெண்ணைப் படிக்க வைத்து அரசு அதிகாரியாய் ஆக்கினேன் . அங்கே அவளையே சரியாகக் கவனிக்காத பணப் பேய்க்குப் பிறந்த மருமகன். மனைவியுடன் சேர்ந்து இங்கே வந்து விட்டேன் . பாதிட் சொத்து பிள்ளைகளுக்கு , மீதிப் பாதி எனக்குப் பிறகு இந்த ஆசிரமத்திற்கு என்று தன் கதையைச் சுருக்கமாக முடித்தார் கிருஷ்ண காந்த்.
தன் மனைவி ராஜம் அம்மாவையும் அறிமுகம் செய்து வைத்தார் . மேலும் “இந்த நிர்வாகி ரமா நம் எல்லோரின் புத்தியையும், திறமையையும் அழகாய்ச் சமுதாயத்திற்குத் தொண்டாய் அளிப்பாள். படித்த மூத்தவர்களை விட்டு ஏழைப் பிள்ளைகளுக்குக் கல்வி தரச் செய்வாள். கலை ஆர்வமுள்ளவர்களை இங்கு வரவைத்து நம் வைதேகி அம்மாவின் பாட்டுகளை உலகத்திற்கே எடுத்துக் காட்டினாள். யார் எதில் திறமைசாலியோ அதை உலக மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களால் புதிய சமுதாயம் உண்டுபடுத்திகிறாள் . யோகா , பஜனை எல்லாம் முறைப்படி இங்கு நடக்கும்” என்றார் . சாப்பாட்டிற்கு நேரமானதால் தேவி வந்து அனைவரையும் கூட்டிச் சென்றாள். அதே போல் மறுநாள் கணேசன் பேசுகையில் ராமநாதனுடன் வைத்யநாதனை அறிமுகம் செய்து, தன்னைப் பற்றிக் கூறுகையில் “எனக்கு பையன்கள் கிடையாது . இரண்டு மகள்கள் தான் . சென்னையில் ஒரு வீடு உள்ளது . அதை விற்றுக் காசு தா என்று கழுகுகளைப் போல் மருமகன்கள் சுத்துறாங்க . பெண்கள் ரெண்டு பேரும் லட்சக் கணக்கில் சம்பத்திக்கிறாங்க , நல்லாப் படிக்க வைத்தேன் . இத்தனை இருந்தும் பெற்றோரைக் கூட வைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறோமே என்று அழுவார்கள் , என் ஆசை மகள்கள். அவளுக்காக ஓர் மாதம் தங்கினால் நாங்கள் ஏதோ விதியில்லாமல் வந்தோம் என்று நினைக்கும் அரக்க மருமகன்கள் …போதும் இங்க நான் என் மனைவியோட நிம்மதியாய் இருக்கேன். வாரம் ஒரு முறை பேரம் பேத்தியைக் கொஞ்சி விட்டு வருவோம் ” என்றார் பெருமூச்சுடன். அங்கு பூக் கட்டிக் கொண்டிருந்த மூதாட்டி சுசீலா அம்மா “நீங்களாவது , பரவாயில்லே அண்ணே, என் கணவர் மறைந்த பின் பையனை நம்பி எல்லாச் சொத்தையும் எழுதிக் கொடுத்து விட்டேன் . ஒரு நாள் பாண்டிச்சேரி செல்லலாம் எனக் கூட்டிப் போய் எங்கேயோ ஹை வே யில் விட்டு விட்டுப் போய் விட்டான் மகன் . கடவுள் கிருபையால் ரமாவிற்குக் கிடைத்தேன் என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி . அவர்களுக்கு ஆறுதல் கூறியவாறு நீரூ வந்து “கவலைப் படாதே சுசீலா! உனக்கு இங்கே என்ன குறைச்சல் ? நீ போடற தையல் , எம்ப்ரோயடரி வேலையெல்லாம் ஆன்லைனில் வித்து ரமா காசாய் உனக்குத்தானே தருகிறாள். . நல்லாப் பாடுவாய். பிரார்த்தினைப் பாடல்கள் எல்லாம் உன்னுடைய குரலில் ஒலிக்கிறது. எல்லோர் திறமைகளும் இங்கே வெளிப்படுத்துவதற்கு ரமா வாய்ப்புத் தருகிறாள் . என் கதை தான் சோகக் கதை என்றாள். ஆனாலும் அல்லா பெயரைச் சொல்லிக் கொண்டு நான் வாழவில்லையா ? என முன்னாலேயே சுனாமியால் என மொத்த குடும்பம் அழிந்ததைப் பார்த்தேனே …” என்றாள் வருத்ததுடன். ஆனால் ராமநாதன் மட்டும் எதுவும் பேசாமல் புத்தகம் கையுமாய்ச் சுற்றிக் கொண்டு இருக்கிறார். “ராமனாதா! நாம் எல்லாம் மனம் விட்டுப் பேசணும் . காலையில் பிரார்த்தனைகள் யோகாப் பயிற்சிகள் எல்லாம் ஏன் தருகிறார்கள்? மனதை நிர்மலமாய், சந்தோஷமாய் வைத்து நோய் நொடியில்லாமல் வாழத்தானே ? நீங்களும் உங்களுக்குத் தெரிந்த, பிடித்த பணியைச் சமுதாயத்திற்குச் செய்யுங்கள் . நாம் எல்லோரும் தன்னலமற்ற தொண்டு செய்வோம் …” என்றார் கணேசன் அதற்கு ராமநாதன் “ஓர் இருபது வருஷங்கள் முன்னாலே ஒரு முத்தைத் தூக்கிப் போட்டு விட்டேன் , ஆதலால் தான் கடவுள் என் பையனை என்னிடம் இருந்து பிரித்து விட்டார் , இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் ” என்று சென்று விட்டார் .
அப்போது அங்கே வந்த சுனிதா வைதேகியைப் பார்த்து “மாமி ! உங்களுக்குக் காலில் ஏதோ சுளுக்குப் பிடித்திருக்காம்.. எண்ணெய் கொண்டு வந்துள்ளேன் , காட்டுங்கள்” என்றாள் அன்புடன் . “நல்லாயிடுத்து கண்ணு” என்றாள் வைதேகி .”அதில்லை அம்மா நீங்க சுகர் பேஷன்ட் , உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளணும் என்று உங்க மகள் ரமாவின் ஆர்டர் என்றாள் , சிரித்தபடி . அவள் சென்ற பின் சுனிதா எம் .பி .ஏ. படித்த திருநங்கை என்றும் தாய் தந்தையினால் கை விடப்பட்டு ஏதோ அநாதை இல்லத்தில் வளர்ந்தவள் என்றும் ரமா வேலை தந்து இங்கே தங்க வைத்துக் கொண்டாள் என்றும் எல்லோருக்கும் தெரிய வந்தது . “அப்ப ரமா இந்தக் காலத்தில் இவ்வளவு அன்பாய் , வெகுளியாய் இருக்கிறாள் , அவள் வாழ்க்கை எப்படி ?” சந்தேகத்துடன் கேட்டார் கணேசன் . அதற்கு கிருஷ்ணகாந்த் “நானும் ரமாவின் அப்பா நடராஜனும் திருப்பதியில் ஒன்றாகப் படித்த நல்ல நண்பர்கள் . அவள் திருமணம் ஆகி நார்த்தில் ஆஃபீசர் ஆக வேலை பார்த்தாள். அதற்கிடையில் அவ புருஷன் திருச்சி ஐயர் ஒரு சாடிஸ்ட் . முதுமையில் என நண்பர் இறந்தபிறகு அவளையும் , அவள் தாயையும் வார்த்தைகளால் கொடுமைப் படுத்தி அவளை மனதளவில் நோகடித்தவன் . தாய் இறந்த பிறகு ஒரே பிள்ளையைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து டாக்டராக்கி அமெரிக்காவிற்கு போன மாதம்தான் எம் .எஸ் . படிக்க அனுப்பி உள்ளாள் . அம்மா அப்பாவின் மரணம் ரமாவை மனசளவுல பாதித்தது. புருஷன் அவளைச் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை . பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின் தான் இங்கு வந்தாள். புருஷன் ஒரு விபத்தில் போய் விட்டான் . காலையிலிருந்து ராத்திரி வரை நம்ப சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தையும் சேர்த்து, மறைந்த தாய் தந்தையை நம்மில் பார்த்து மகிழ்ந்து வாழ்கிறாள் என்றாள் திருமதி கிருஷ்ணகாந்த். மேலும் அவங்க தாத்தா ஜகதீஸ் ஐயர் ஒரு பெயர் பெற்ற கிரிமினல் லாயர். அந்த நாளிலே புரட்சியை விரும்பி, தன் மகளுக்கு ‘தாரா பாய் “என்று பெயர் வைத்துப் படிக்க வைத்தவர் .. இந்த ஆஸ்ரமத்தை அவர் பெயரில் தான் வைத்தார்கள் என்றார் ..
ஒரு நாள் தனக்கு வேலை இருக்கிறது என்று ரமாவிடம் கூறிக் காலையில் புறப்பட்டுச் சென்று விட்டார் வைத்திய நாதன் . ரமா பிடிவாதமாய்த் தன் காரில் டிரைவரிடம் சொல்லி அவரைக் கொண்டு போய் விடச் செய்தாள். மாலை லேட்டாய்த் திரும்பி வந்தவர் உணவு வேண்டாம் எனச் சொல்லி அறைக்குச் சென்றார் . ரமா தன் அசிஸ்டன்ட் சுரேஷ் மற்றும் பணிப் பெண் தேவியுடன் உள்ளே சென்றாள். “என்ன அப்பா , உடம்பு சரியில்லையா ? சாப்பிடவில்லையாம் , என்ன ! வாங்க லான்ல போய்க் காத்தோட்டமாய் உட்காரலாம்” என்று அவரை அன்போடு கூட்டிச் சென்றாள் . அவரை அங்கு உட்கார வைத்து “தேவி அவருக்குப் பிடித்த அதரக் காய், அதான் இஞ்சி, போட்ட டீ கொண்டு வா ..” என்றாள் . “சரி மேடம்” என்று அவள் சமையல் அறைப் பக்கம் சென்றாள். அப்போது அங்கே வந்த சுனிதா உள்ளே சென்று தேவி கையில் இருந்த டீ யை வாங்கி அவருக்குக் கொடுத்தாள்.. “சுரேஷ் ! நீ ஆஃபீஸ் ரூம்ல இரு நான் வரேன்” என்றாள் . அவன் போய் விட்டான் . அதற்குள் கிருஷ்ண காந்துடன், கணேஷன் ராம், ராமநாதன் மற்றும் இருவர் வந்தனர் . கிருஷ்ண காந்த் அவர் தோளில் கை போட்டு உரிமையாய் அன்பாகக் கேட்டார் ” மகளைப் பார்த்தாயா ?” என்று. “ஆமாம் டா கிருஷ்ணா !” என்று கூறியபடி அவர் கிருஷ்ணகாந்த்தைத் தழுவிக்கொண்டு அழுதார் .அதற்கு கிருஷ்ணகாந்த் “கவலைப்படாதே , மனம் வருந்தினால் பாவம் கழிக்கப்படும் . சின்னவளானாலும் அவள் உன்னை மன்னிப்பாள். இப்போது அவள் நடக்கும் மனித தெய்வம் . நம்மைப் போல் இல்லை ..” என்றார் . யாருக்கும் எதுவும் புரியவில்லை ரமாவைத் தவிர.
எப்பவும் யாரிடமும் மனம் விட்டுப் பேசாத ராமநாதன் , அவர் மேல் கை போட்டு “என்னாச்சு வைத்யா ?” என்றார் கவலையுடன். அவ்வளவு தான் …வைத்யா உடனே “நான் ஒரு பாவி ராமனாதா ! மகாபாவி, செல்வந்தனான சமணன் எனக்கு ராஜஸ்தானில் பத்து கல்லூரிகள், பல சொத்துக்கள் உள்ளன . எங்கள் காலேஜில் என மகள் பீ .காம் படிக்கும் போது ஒரு எம் .காம் படிக்கும் ராஜபூத பையனை விரும்பினாள். நான்தான் மகா பாவி , என்று மேலே சொல்ல முடியாமல் விசும்பினார் . அப்போது ரமா “அவனைக் காலேஜில் இருந்து அடித்துத் துரத்தி தன் மகளை ச்ரமணி (ஜைன துறவி )ஆக்கி விட்டார் . அந்தப் பெண் நிர்மலா அந்த விழாவில் துறவம் பூண்டாள் . என் முன்னாலே அவளின் தலையிலிருந்து ஒவ்வொரு முடியையும் பிச்சு , மொட்டை அடித்துத் துறவியாக்கினார்கள். நான் அழுதபடி தனியாய்க் கேட்டேன் “எப்படி ஒத்துக் கொண்டே நிர்மலா?” என்று . அதற்கு அவள் “இப்ப எனக்கும் சிலைக்கும் எந்த வித்யாசம் கிடையாது . நான் ஒரு நடமாடும் சிலை” என்றாள் .. .சலனமில்லாமல் புன்முறுவலுடன் . அந்த நாள் என் முன் அப்படியே நினைவில் உள்ளது .. என்றாள் ரமா கண்களைத் துடைத்தபடி . கிருஷ்ணகாந்த் “பிறகு கெஜெட்டில் ரிஷப் நாத் என்ற பெயரை வைத்யநாதன் என்று மாற்றிக் கொண்டு தென்னிந்தியாவில் பெரிய தொழில் அதிபராய் செட்டில் ஆகி மனைவி மறைவுக்குப் பின் இங்கே வந்து விட்டார்” என்றார் . “இன்று ஜைனர் கோவிலுக்கு சாத்வி நிர்மலா தேவி வந்துள்ளார் . அவளைப் பார்த்து வணங்கி மன்னிப்புக் கேட்டாராம்” என்றார் வருத்ததுடன் . ரமா வைத்யனாதரைப் பார்த்து “இதப் பாருங்க அப்பா , இப்ப நீங்கள் அவள் தந்தை இல்லை , அவள் மகளும் இல்லை. ஒரு ச்ரமணி. உலகத்திற்கு ஞானம் தரும் சுடர், தெய்வீகப் பிறவி, பழசைத் தயவு செய்து மறந்து விடுங்கள்” என்றாள் .. அவர் “எப்படி மறக்க முடியும், ரமா?” என்றார் வருத்ததுடன்.
எப்போதும் அமைதியாய் இருக்கும் ராமநாதன் “வைத்தி ,உன்னை விட பாவி நான் தான் . எனக்கு இரண்டு குழந்தைகள். முதலாவது மகன் இரண்டாவது ஆணும் இல்லை பெண்ணும் இல்லாதது பிறந்தது . அந்தச் சிறு குழந்தையை இரக்கமில்லாமல் சென்னையில் ஓர் அனாதை விடுதியில் வைத்து விட்டு வந்து விட்டேன் . சாகும் வரை அதைப் பற்றிப் பேசிப் பேசிக் கண் கலங்கினாள் என மனைவி. ஆதலால் தான் என் ஒரு பிள்ளையும் என்னை அனாதையைப்போல் வீசி எறிந்துவிட்டுப் போய் விட்டான்” என்றார் வருத்ததுடன் “உங்க குழந்தை உங்கள் முன்னாலே அப்பா அப்பாவென்று கூப்பிட்டுக் கொண்டே அத்தனை பணிகளையும் செய்து, படுக்கும் வரை குட்நைட் சொல்லித் தூங்கச் செய்யும்போது , நீங்கள் எப்படி அநாதை ஆவீங்க அப்பா ?” என்று கேட்டாள் ரமா .
“என்னம்மா சொல்றே ?” விப்புடன் கேட்டார் ராமநாதன் . “நீங்கள் இங்கு சேர்ந்தபோதே நான் உங்களைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டேன்.
எம் .பி .ஏ படித்து சுயநலமில்லாமல் அன்போடு எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் தொண்டு செய்யும் சுனீதாதான் இங்குள்ள எல்லோரின் செல்ல மகள், நீங்க தூக்கி எறிந்த மழலைச் செல்வம் ” என்றாள் . சுனீதாவை அருகில் அழைத்து, “அவர் உன் அப்பா” என்றாள் . அவள் ராமநாதன் அருகில் சென்று அப்பாவென்று விசும்பினாள்.”தாயே ! என்னை மன்னித்து விடு. உனக்கு த்ரோஹம் செய்து விட்டேன் . என்னை மன்னித்து விடு. ஆண் என்ன, பெண் என்ன , எல்லோரும் மனிதர்களே . அன்பு செலுத்தினால் அன்பு எல்லோருக்கும் கிடைக்கும். இந்த உண்மையை வாழ்க்கையின் கடைசி காலத்திலாவது உணர்ந்தேனே , இனிமே நான் நிம்மதியாய்க் கண்ணை மூடுவேன். ” என்றார். அதற்கு ரமா “நீங்கள் எல்லோரும் அந்திப் பூக்கள். வாழ்க்கையின் அனுபவத்தில் பூத்த மல்லிகள். எங்கள் எல்லோருக்கும் வருங்காலத்தினருக்கும் வழி காட்டிகள். நீங்களே வருத்தபட்டால் எப்படி? வாருங்கள் , உணவருந்திப் பிரார்த்தினை செய்து உறங்கலாம் , சொல்லுங்கள் மாமி” என்றாள் சுசீலா மாமியைப் பார்த்து.
உணவு அருந்திய பிறகு ராமநாதனுக்கு ஒரு ஃபோன் வந்தது . பேசி விட்டு வந்து சொன்னார் “என் பையன் அமெரிக்கா போகவில்லையாம். கரோனா வைரஸ் பிரச்சினையால் விசா கிடைக்கவில்லையாம். என்னைக் கூட்டிப் போவதாகச் சொன்னான்” என்றார். கணேசன் “அப்ப, நீ என்ன சொன்னே ?” என்று கேட்டார். அதற்கு அவர் “வைரஸ் பல நூறு வருஷங்கள் முன்னே இயற்கையில் எப்போதும் இருப்பவை . சுனாமி என்றோம் , நிஷா என்றோம் , ராவணன் ,ஹிரண்யகஷிபு என்றோம். வைரஸ் நல்ல திடமான உடம்பில் ஒட்டாது. நான் இந்தச் சுவர்க்கத்தை விட்டு வரமாட்டேன் . வைரஸ் பிரச்சினை தீர்ந்தவுடன் நீ அமெரிக்கா போ கண்ணா என்று வாழ்த்தி அனுப்பினேன்” என்றார் . எல்லோரும் சிரித்தபடி பிரார்த்தினை ஹாலுக்குச் சென்று அங்கு ஜகஜோதியாய் ஒளி வீசும் ஸ்ரீ வேங்கடாசலபதிக்குக் கைகூப்பி வணங்கினார்கள் . “குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா” என்ற எம் .எஸ் பாடலும் , அதற்குப் பிறகு “இறைவனிடம் கை ஏந்துங்கள்” என்ற ஹனீஃபா பாடலும் இனிதாகக் காதில் ஒலித்தன.
- முனைவர் என். லக்ஷ்மி ஐயர்