\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

புலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள்

Filed in கதை, வார வெளியீடு by on July 27, 2020 0 Comments

(“புது உலகம் எமை நோக்கி என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு)

அறிமுகம்

ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.  இதற்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன.

அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு புலம்பெயர் பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு சிறுகதைத் தொகுப்பாக ‘புது உலகம் எமை நோக்கி'(1999) என்னும் சிறுகதைத் தொகுப்பு அமைந்துள்ளது.

இத்தொகுப்பானது பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துள்ள சக்தி என்னும் பெண்கள் சஞ்சிகையினால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி, நார்வே, இலண்டன், சுவிஸ், கனடா, என்னும் நாடுகளிலிருந்து உமா, தேவா, சுகந்தி, காவேரி, நளாயினி இந்திரன், நிருபா, சந்திரா இரவீந்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சந்திரவதனா, சுகந்தி அமிர்தலிங்கம், விக்கினா பாக்கியநாதன், மல்லிகா, நந்தினி ஆகியோரின் இருபத்து மூன்று சிறுகதைகள் அடங்கியுள்ளன.

ஈழத்து இலக்கிய வரலாற்றில் இத்தொகுப்பானது முக்கியமானதாகக் காணப்படுகின்றது. புலம் பெயர்ந்து வாழும் பெண்கள் பிரயாணங்களின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், அகதி வாழ்க்கை, பணிச்சுமை, கலாச்சார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்தல், தனிமை, பாலியல் தொந்தரவைக் கணவனாலும் ஏனையவர்களாலும் எதிர்கொள்ளுதல், புரிதலற்ற கணவனுடனான வாழ்க்கை, கானல் நீராய்ப்போன தங்களின் எதிர்பார்ப்புக்கள், கண்ணுக்கு முன்னாலே பொய்த்துப் போகும் அவலங்கள், தனது கணவன் எதிர்பார்த்ததிற்கு மாறாக இருத்தல், போலி முகங்களுடன் பெண்களை அணுகும் ஆண்களின் குரூரங்கள், வேலைக்குப் போக முடியாமல் கணவனால் இயந்திரமாக்கப்பட்ட பெண்களின் துன்பங்கள், கணவனின் கொடுமைக்கு உட்பட்டு பெண்கள் தற்கொலை செய்தல், தாயகத்தில் மாத்திரமன்றி புலம்பெயர் நாட்டிலும் சீதனப் பிரச்சினைக்கு முகம் கொடுத்தல் போன்ற பிரச்சினைகளைப் பெண்கள் எதிர் நோக்கியுள்ளார்கள் என்பதை இத்தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு  வெளிப்படுத்த முடிகின்றது.

ஈழத்தில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினால் பெண்கள் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வதற்காகக் கொழும்பில் இருந்த ஏஜன்சியிடம் பணத்தைச் செலுத்தி அவரின் மூலமாகப் புலம் பெயர் நாடுகளுக்குச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஏஜென்ட் பெண்களைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று அவர்களைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதோடு, தங்களுடைய வீட்டிற்கும் அழைத்துச் சென்று இவ்வாறான செயல்களில் ஈடுபடுத்துகின்றார்கள்.

அத்தோடு அவர்களுக்கு கடவுச்சீட்டையும் வழங்குவதில்லை. இதனால்  பெண்கள் புலம்பெயர் நாட்டிற்குச் செல்ல முடியாது வேதனையடைகின்றார்கள். இவ்வாறான துன்பங்களையும் அனுபவித்துப் புலம் பெயர் நாட்டிற்குச் சென்றாலும் அங்கு அவர்கள் அகதிகளாக வாழ்கின்றனர் என்பதை நிருபாவின் ‘தங்கம் தாருங்கோ’, சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள்’ என்னும் சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன.

அத்தோடு ஒரு பெண்ணைச் சபலமுற வைப்பது அவளை அடைய நினைக்கும் வக்கிரம் என்பவற்றைக் காவேரியின் ‘நீயும் ஒரு சிமோன் தி போவுவா போல’ என்னும் சிறுகதையில் காணலாம்.

அகதிகளாகக் கணவன் ஒரு நாட்டில், மனைவி ஒரு நாட்டில் வாழும் நிலையையையும் சில சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன. கணவன் சுவிஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்கின்றான். மனைவி சுவிஸ் நாட்டிற்குச் செல்ல முடியாமல் கனடாவில் தனது குழந்தையுடன் அகதியாக வாழ்கின்றதை ரஞ்சியின் ‘அக்கரைப் பச்சை’ என்னும் சிறுகதையும், பெண்கள் தங்களுடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டு இடமில்லாது, அகதிகளாக அலைந்து வாழ்ந்ததை தயாநிதியின் ‘சதுரங்கம்’ என்னும் சிறுகதையும் வெளிப்படுத்தியுள்ளன.

புலம்பெயர்ந்து செல்கின்ற பெண்கள் அங்கு பணிப்பெண்களாகவே பணியாற்றுகின்றார்கள். இவ்வாறு பணியாற்றும்போது அக்குடும்பத்திலுள்ள அனைத்து வேலைகளையும் ஓய்வில்லாமல் செய்வதற்குப் பணிக்கப்பட்டுள்ளதோடு, இரவிலும் நித்திரைக்குச் சென்றாலும் வீட்டிலுள்ள ஆண்களால் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதைத் தேவாவின் ‘சுரண்டலின் கொடுக்குகள்’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

பணிக்கமர்த்தப்பட்டுள்ள பெண்களின் தொலைபேசி, அவர்களது ஊதியம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு வெளியில் சென்று தனது நண்பிகளைக்கூட சந்திக்க முடியாத நிலையும், அவ்வாறு வெளியில் சென்று பாடசாலை சென்ற பிள்ளைகளை அழைத்து வரும்போது நண்பிகளோடு உரையாடுவதைக் கண்ணுற்ற பிள்ளைகள் தங்களது வீட்டில் அறிவித்ததனால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதையும் உதயபானு ‘வேலைக்காரிகள்’ என்னும் சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.

ஒரு பெண் பகலில் சமையல் தொடங்கி அனைத்து வேலைகளையும் நிறைவேற்றிவிட்டு, நித்திரைக்குச் செல்லும்போதும் கூட மறுநாளைக்குச் செய்யப்போகும் வேலைகளை அட்டவணைப்படுத்துவதை நந்தினியன் ‘மூளைக்குள் சமையலறை’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் மூளையில் தன்னைப் பற்றியோ, தன்னுடைய உறவுகளைப் பற்றியோ, தனது அபிலாசைகளைப் பற்றியோ சிந்திப்பதற்கு இடமில்லை. சமையல் மற்றும் ஏனைய வேலைகளே மூளையில் எண்ணங்களாக சேமிக்கப்பட்டுள்ளன.

அதாவது பெண்கள் புலம்பெயர் சமூகத்திலும், சமையல் தொடங்கி வீட்டு வேலைகளைச் செய்பவளாகவே காணப்படுவதை அறிய முடிகின்றது. மேலும் ஒரு பெண் ஆணுக்கான தயார்ப் படுத்தலாகவே இருக்கிறாள் என்பதையும் இச்சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து செல்வதற்கு அனைவரும் விரும்புகின்ற நிலை காணப்படுகிறது. குறிப்பாக பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளைப் புலம் பெயர் நாட்டில் வாழ்கின்ற ஆணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதைத் தங்களுக்கு கௌரவமாக நினைக்கின்றார்கள். இதனால் முகம் தெரியாத ஆணுக்குச் சீதனம் கொடுத்துத்  தங்களுடைய பணத்தில் குறித்த புலம் பெயர் நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இவ்வாறு சென்றுள்ள பெண்கள் கணவனால் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டுள்ளதையும், கணவன் ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் இருப்பதை அறிந்து மனவேதனையுடன் வாழ்ந்துள்ளதையும், தாயகத்தில் இருந்து திருமணத்திற்கு வந்த பெண்ணை அழகற்றவள் எனக்கருதி அவளைத் திருமணம் செய்யாது இருப்பதையும், சீதனப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதையும் சில சிறுகதைகள் முன் வைத்துள்ளன.

சந்திரவதனாவின் ‘விலங்குடைப்போம்’ என்னும் சிறுகதை, ஜெர்மனியில் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்யப்பட்ட பெண், தனது கணவனோடு வெளியில் செல்லும்போது தனது கணவனுக்கு ஏற்கனவே ஜெர்மனியப் பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதனை அறிந்த அவள் கணவனோடு வாழ விரும்பாது தனியாக வாழ முற்பட்டுள்ளதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

சுகந்தி அமிர்தலிங்கத்தின் ‘கல்யாணச் சீரழிவுகள்’ என்னும் சிறுகதை கடன்களுக்கு மத்தியில் திருமணம் செய்வதற்காக ஜெர்மனிக்குச் சென்ற பெண்ணின் கனவுகள் சிதைக்கப்பட்டு, தனக்கானதொரு வாழ்க்கையைத் தேடிச் செல்வதை முன் வைத்துள்ளது. அதாவது திருமணத்திற்காகச் சென்ற மாலதியை, ஜீவா அழகற்றவள் எனக் கூறி திருமணம் செய்ய மறுத்ததால் அவள், அவனிடம் இருந்து விலகி, தனியாக வாழ்கின்றாள்.

புலம் பெயர் நாட்டில் திருமணம் என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெண்கள் கணவனோடு வாழ முடியாது தனிமையில் வாழ்ந்துள்ளதை இச்சிறுகதைகள் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம். தாயகத்தில் இருந்து சீதனம் கொடுத்து புலம் பெயர்ந்து சென்றாலும் அங்கும் சீதனப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதை சுகந்தியின் ‘கானல் நீர்’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

ஆண்கள் வேலைக்குச் சென்றதும் பெண்கள் தனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உரையாடுவதற்கும் யாரும் இல்லாமலும், அவ்வாறு இருந்தாலும் அந்த நாட்டு மொழி தெரியாததால் யாருடனும் உரையாட முடியாது கணவன் வீடு திரும்பும்வரை தனிமையில் வாழ்ந்துள்ளதை விக்னா பாக்கியநாதனின் ‘மாறியது நெஞ்சம்’ என்னும் சிறுகதை முன் வைத்துள்ளது.

அத்தோடு இச்சிறுகதையில் தனிமையில் வாழும் பெண்கள் வேலைக்குச் சென்றாலும் வேலை செய்யும் இடத்தில் உள்ள ஆண்களோடு பழகுவதைப் பார்த்து கணவன், மனைவியை சந்தேகக் கண்ணோட்டத்துடன் நோக்கியுள்ளதையும் முன் வைத்துள்ளது.

புலம் பெயர்ந்து சென்ற ஆண்கள் அந்த நாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி குடிபோதைக்கு அடிமையாகி உள்ளதனால் பெண்கள் குடும்பத்தில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, தாங்கள் வெளியில் சென்று வேலைக்குச் செல்வதும், குடிபோதைக்கு அடிமையாகியுள்ளதையும் அப்பெண்கள் மேலைநாட்டு இளைஞர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளதையும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘எய்தவர் யார்?’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் நாட்டில் வாழ்ந்த பெண்களில் சிலர் தனது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பம் காரணமாகத் தற்கொலை செய்துள்ள நிலையை சுருதியின் ‘ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும்;’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

மேடைகளில் பெண்ணுரிமைக்காகப் பேசும் ஆண்கள் வீட்டில் தன்னுடைய மனைவியை அடக்கியாள்வதோடு அவர்களின் கருத்திற்கு மதிப்பளிக்காது நிராகரிப்பதையும், ஆண்களின் ஆணாதிக்கத்தையும் உமாவின் ‘முகம்’ என்னும் சிறுகதை முன் வைத்துள்ளது. ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வையும் சில சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். தன்னுடைய உரிமைகள் மறுக்கப்படும்போது அதற்கெதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதை நளாயினி இந்திரனின் ‘அடுத்த காலடிகள்’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

‘புது உலகம் எமை நோக்கி’ என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது புலம்பெயர் பெண்களின் மனவுணர்வுகளையும் கலாசாரக் காவிகளாகச் சிக்கித் தவிப்பதிலுள்ள அனுபவங்களையும், இவற்றிலிருந்து விடுபட நினைக்கும் பெண் விடுதலை பற்றிய உணர்வுகளையும் அவதானிக்க முடிகின்றது. அத்தோடு இத்தொகுப்பில்  கருணாவின் ‘கமலா காத்திருக்கிறாள்’, ‘சுகந்தியின் பொய் முகங்கள்’ போன்ற சிறுகதைகள் தாயகத்தைக் களமாகக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

– சிவராசா ஓசாநிதி

 

உச்சாந்துணை நூல்கள்

  1. குணேஸ்வரன், சு., 2000, அலைவும் உலைவும் – புலம்பெயர் இலக்கியம் குறித்த பார்வைகள், ஒவ்செற் பிறின்ரேர்ஸ், யாழ்ப்பாணம்.
  2. சித்திரலேகா, மௌ., 1995, இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம், டெக்னோ பிரின்ட், தெகிவளை.
  3. புது உலகம் எமை நோக்கி, 1999, சக்தி வெளியீடு, நோர்வே.

 

சஞ்சிகைகள்

  1. சக்தி, 1999, நோர்வே.
  2. ஞானசேகரன், தி, 2014, ஞானம், ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad