Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும்

கடந்த ஒரு தசாப்தத்திற்கு பொருளாதார வளர்வில் உச்சத்தில் அமெரிக்கா இருந்தது, 2018 கடைசி காலம் வரை. அமெரிக்காவின் பாரிய வருமானவரிக் குறைப்பினாலும், அரசின் செலவழிப்பினாலும் உள்ளூர் மற்றும் உலகச் சந்தைகளும் பயனடைந்தன.

அன்று அமெரிக்கப் பொருளாதாரமே உலகின் பொருளாதாரத்தை உயர்த்த வரையறை செய்தது, இன்று அதே பொருளாதாரம் கொரோனாக் கொடுவினைகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பிழைகளைச் செய்து இன்று உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் அபாயத்திற்கும் வந்துள்ளது.

இன்று பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து படிப்படியாக வெளி வந்த நாடுகள் பலவும் தள்ளாடியவாறுள்ளன. மீண்டும் குறிப்பாக அமெரிக்க அயல் கனடா,மெக்ஸிக்கோ தொட்டு பசிஃபிக் சமுத்திர யப்பான் வரை பொருளாதாரத் தாக்க எதிரொலிகள் கேட்டவாறுள்ளன. ஜேர்மனியும் தனது ஏற்றுமதியில் இழப்பை எதிர் நோக்கியவாறுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தனது அமெரிக்கா பற்றிய பொருளாதார ஆய்வில் அதன் பொருளாதாரச் சமமின்மையால், ஏழ்மை அதிகரிப்பினால் சமூக அமைதியின்மையை எதிர் நோக்குகிறது என்கிறது. வரவிருக்கும் அபாய நேர்வு என்னவென்றால் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் தமது வாழ்க்கை நிலையில் இருந்து தராதரம் குன்றிய நிலமையை, குறிப்பாக வருமானம் குன்றிய தன்மையை எதிர் கொள்ளவுள்ளனர். இது சாதாரணக் கசப்பு வாழ்க்கைக்கும் அப்பாற்பட்ட சூழலேயாகும். இது நுகர்வோரின் பின்னணியில் அமைவுற்ற அமெரிக்கப் பொருளாதாரம், அவர்கள் செலவு செய்ய முடியாமையால், பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாரிய தடங்கலாகவும் அமையும்.

அமெரிக்காவின் அண்மைச் செலவழிப்புக்களை எடுத்துப் பார்த்தால் பல கண்டிப்பான விடயங்கள் தெரியவரும்.

அமெரிக்காவின் அருகதை அவலம்:

இதுவரை ஏப்ரல், மே மாதங்கள் 2020,கொரோனா நிலமையில் தொற்றுநோய் சார்ந்த ஊரடங்குகளால் வர்த்தகம்,வேலையின்மையைச் சமாளிக்க அமெரிக்க அரசு $3 ரில்லியன்களைச் செலவழித்தது. ஆயினும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்குதல் உக்கிரம் அதிகரித்தவாறு உள்ளதே ஒழிய, குறைவதாக இல்லை. ஆயினும் முதல் பண நிவாரணம் யூலைக் கடைசியில் நிற்கவுள்ளது. அமெரிக்காவில் 3.6 மில்லியன் மக்கள் COVID-19 தொற்று நோய்க்குள்ளாகி அதில் 140,000 மக்கள் இதுவரை இந்தக் கொடிய நோயினால் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நாளாந்த தொற்றுந் தொகை கடந்த மே மாதத்தில் இருந்து இன்று மூன்று மடங்காகி சராசரியாக 70,000 மக்கள் தினமும் தொற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். மரணங்கள் ஏப்ரலில் இருந்து யூலை வரை குறைந்து வரினும் இது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இதே சமயம் உலக நாடுகள் அனைத்தும் முகத்தை மறைத்துத் தொற்று நோயைத் தவிர்த்தவாறுள்ள போதும், அமெரிக்காவில் இது சுயநல விடயமாகவே இருந்து வருகிறது. அதாவது முகமூடி போடுவதைத் தவிர்ப்பவர்களால் வரும் பாதகம். மூகமூடி அணிவது சுகாதார விடயம் ஆயினும் அறிவு குன்றி அமெரிக்காவில் தொடர்ந்தும் தேர்தல், அரசியல் கட்சி ஐதீகமாகத் தேவையற்றுக் கால்பந்தாட்டம் ஆகியுள்ளது. இது அமெரிக்கப் பொருளாதார மையங்கள் ஆகிய கலிஃபோர்னியா, ரெக்ஸாஸ் மாநிலங்கள் மீண்டும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுக்களைத் தொற்று நோய் அதிகரிப்பினால் மீண்டும் அமுலுக்குக் கொண்டு வரவேண்டியதாயிற்று. இது கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் இருந்து மேலும் 14 மில்லியன் தொழில் வாய்ப்பு உதிரப்பட்டமை தொடர வழிவகை செய்யலாம். இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து மங்கிய தன்மையை எதிர் நோக்கலாம்.

பொருளாதார ரீதியில் உலக ஏமாற்றம்

அமெரிக்காவின் தடுமாறல் பிரதான உலகப் பொருளாதார நாடுகளுக்கும் அவரவர் நாட்டு கொரோனாத் தொற்று நோய்த் தாக்காட்டலுக்கும் மேலாக, அவர்கள் நாட்டுப் பொருளாதார மறுமலர்ச்சி உத்வேகத்தைத் தளர்த்துவதாகவும் அமைந்தவாறுள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரமானது உலக உற்பத்தியில் (GDP) கால் பங்காகும். இதில் பெரும்பாலானது சேவை சார்ந்த வருமானம் ஆயினும், கொரோனா வைரஸ் சார்ந்த பல உணவக உற்பத்தி தாபனங்கள் உலகப் பொருளாதாரத்தில் நேரடிப் பங்கை வகிக்கின்றன. வேலை வாய்ப்பின்மை நுகர்வோர் செலவைக் குறைக்கும், இது நாட்டு இறக்குமதியைக் குறைக்கும். குறைந்த இறக்குமதி தளர்வடைந்த வர்த்தக, வியாபாரச் சூழல் தொடர்ந்து புதிய கருவிகள், இயந்திர முதலீடுகளைக் குறைக்கும். மேலும் செலவு தாக்காட்டுவதற்காக வளமையான கொள்வனவு இடங்களை விட்டு வேறு இடங்களிற்கு நகர வழிவகை செய்யும்.

அமெரிக்க இறக்குமதி வருட ஆரம்பத்தில் இருந்து மே மாதம் வரை 13 சதவீதம் குன்றியுள்ளது. இது ஏறத்தாழ $176 பில்லியன் தொகையுடையதாகும்.

ஜேர்மனி தனது பொருளாதாரத்தை ஐரோப்பாவில் இந்தத் தொற்று நோய் காலத்தில் நன்றாக நடாத்தியது என்று கருதப்பட்டாலும் அதன் வருடாந்திர ஏற்றமதி அமெரிக்காவிற்கு 36% சதவீதம் குன்றியுள்ளது. இது பிரதானமாக அமெரிக்க வாகன விற்பனை சார்ந்த விடயமே. இதை அனுமானிப்போர் அமெரிக்க வருடாந்திர வாகன விற்பனை ஜூன் மாதம் வரை கடந்த வருடத்தில் இருந்து ஏறத்தாழ 24% சதவீதம் குன்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் இது இவ்வருடம் வளர வாய்ப்புக் குன்றியே காணப்படுகிறது. அமெரிக்க கொரோனா தொற்றுநோய் அதிகரிப்பு உலக வாகன ஏற்றுமதித் தாபனங்கள் எதிர்பார்க்காத ஒன்று. இதனால் வாகன ஏற்றுமதி வருமானங்கள் பாரியளவில் பாதிப்புற்றுள்ளன.

இவ்வகையில் பார்த்தால் யப்பானிய நாடும் அமெரிக்கப் பொருளாதர மீளலில் அமெரிக்கா வைரஸில் இருந்து மீழலை எதிர்பார்த்தவாறேயுள்ளது. யப்பான் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அமெரிக்க ஏற்றுமதி பிரதான பங்கினை வகிக்கிறது. உதாரணமாக யூலை மாதம் யப்பானிய பொருளாதார அமைச்சு தனது அமெரிக்க ஏற்றுமதி, COVID-19 காரணமாக இரட்டை இலக்க வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது என்று அறிவித்தது. இது யப்பான் நாட்டைச் சென்ற நூற்றாண்டு யுத்தத்தில் வந்த பொருளாதார வீழ்ச்சியளவுக்கு, மேலும் நீண்ட கடினமான பொருளாதார மீள்வுப் பாதைக்குத் தள்ளியுள்ளது. வாகனத் தேவை அமெரிக்காவில் வெகுவாகக் குன்றியுள்ளதால் வாகனம், இதர வாகன பாகங்கள் ஏறத்தாழ பாதி நிலைக்கு மாறியுள்ளது. யப்பானின் சீன ஏற்றுமதியும் பாரியளவில் குன்றியே காணப்படுகிறது. யப்பானின் பொதுவான ஏற்றுமதிகள் ஜூன் மாதத்தில் 26.2  சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது. இது உலகப் பொருளாதார வளர்வு சக்தியாகிய சீனவும் பின்னடைவில் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்க அயலவர் அங்கலாய்ப்பு

தன் பொருளாதாரக் கணிப்புக்களில் சர்வதேச நாணய நிதியம் அமெரிக்க உற்பத்தி 2020இல் 6.6% சதவீதம் தாண்டுவது ஐயமே என்று தெரிவித்துள்ளது. அது பல மற்றைய பொருளாதார அனுமானிப்பாளர்கள் கணிப்புகளுக்கு இடையேதான் உள்ளது.

கனேடிய மத்திய வங்கி தனது கணிப்பில் நம்பிக்கை குறைந்து சோர்வுடன் அமெரிக்கப் பொருளாதார உற்பத்தி (GDP) 8.1% வரை குன்றலாம் என்று எடுத்துக் கொண்டுள்ளது. இந்தக் கணிப்பானது தற்போதய அமெரிக்கச் சுகாதாரச் சூழலை வைத்து மேலும் குறைத்துள்ளது. இதன் காரணம் கனடாவின் நான்கில் மூன்று பகுதி ஏற்றுமதி அமெரிக்காவிற்குத்தான். எனவே இதனால் வரும் இழப்பு கனடாவிற்குப் பாரியதாகும்.

இதே போன்று மெக்ஸிக்கோ நாடும் தனது பொருளாதார நோக்கில் நம்பிக்கை குறைந்து தான் காணப்படுகிறது எனலாம். மெக்ஸிக்கோ சனாதிபதி கொரோனா மத்தியிலும் பொருளாதாரப் பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா வந்து திரும்பினாலும், அந்நாட்டு உற்பத்தி 10%சதவீதத்திற்கு மேல் இவ்வருடம் பாதிப்புறும். இதே பொருளாதாரப் பேச்சு வார்த்தைக்குக் கனேடியப் பிரதமர், அமெரிக்கத் தொற்றுநோய் பாதகங்கள் காரணமாகப் பங்கு கொள்ளவில்லை என்பதும் இவ்விடம் குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கத் தொழிலாளர் வருமானம் தொடர்ந்து குன்றியவாறுதான் உள்ளது. வேலை மீண்டு வந்தாலும் சம்பளம் முன்னிருந்தது போல இருக்க வாய்ப்புகள் சொற்பமே. மேலும் உள்ள சம்பளம் வளரவும் வழிவகை மிகவும் குறைவு, எனவே நாட்டின் நுகர்வோர் வர்க்கம் செலவழிப்பதும் பல வருடங்கள் குன்றியே காணப்படலாம்.

எனவே அமெரிக்காவின் ஒட்டு மொத்தமான கொரோனா ஒற்றிய சுகாதாரப் பாதுகாப்பின்மை, விஞ்ஞான அறிவுரைகள்படி செயற்படாமல், தேவையற்ற அரசியல் பிரகடனங்கள், வேலை வாய்ப்பின்மை, ஊதிய வளர்வின்மை, பொருளாதாரத் தளர்வுகள், இவையாவும் ஒரு கால் முன்னெடுத்து வைத்து, இரு கால்கள் பின்னெடுத்து வைக்கும் சூழலிற்குத் தள்ளியுள்ளது எனலாம். இது அமெரிக்காவை நேரடியாகப் பாதிக்கும், அதே சமயம் மத்திம காலத்தில் உலக நாடுகள் அமெரிக்கா தவிர்த்து பொருளாதார மீள் எழுச்சியைத் தேடவும் வழிவகைகளை உண்டு பண்ணலாம்.

    யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad