Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஊர்க்குருவி

Filed in கதை, வார வெளியீடு by on August 10, 2020 0 Comments

ஊரின் பெரும் புள்ளிகள் ஆண்களும் பெண்களுமாய் சுமார் இருபது நபர்கள் ஆவேசமாய்த் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டார்கள்.  தலைமை ஆசிரியர் பெருமாள் பயந்து போய் வெளியே வந்து, “அய்யா என்ன விஷயம்யா….?” என்று விசாரித்தார் நடுங்கியபடி.

“ப்ளஸ் ஒன் ப்ளஸ்டூ வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நடத்துற வாத்திச்சிய வரச் சொல்லுய்யா…..?” என்றார் ஊர்த் தலைவர் கருப்பையா  பெருங் கோபத்துடன். இப்படி அவரின் பெயரை மட்டும் மொட்டையாகச் சொல்வதற்காக  அவர் கோபித்துக் கொள்ளக்கூடும்.

அவர் மட்டுமல்லாமல் அவரின் ஊரே திரண்டு சண்டைக்கும் வந்தாலும் வந்து விடும்.  ஏனென்றால் அந்த கிராமத்தில் யாரும் அவரின் பெயரை மட்டும்  சொல்லி விளிப்பதில்லை. அது கௌரவக் குறைச்சல்.  அவருக்கு சமதையான ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவரின் ஜாதியையும் சேர்த்துத் தான் விளிப்பார்கள்.

அவரைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாதவர்கள் அவரின் ஜாதி பெயரை மட்டும் சொல்லி மரியாதையாக விளிப்பார்கள். அது அவருக்கு மட்டுமானதல்ல; அந்த கிராமத்தில் அவரை ஒத்த தலைக்கட்டுகள் எல்லோருக்குமே அந்த விளிப்புப் பொருந்தும்.

’அந்தக் கழுதை முண்டை இப்ப என்னத்தைப் பண்ணித் தொலைச்சாளோ? வேலையில சேர்ந்த நாளிலிருந்தே அவளோட ஒரே ரோதணை தான்.….’ என்று மனசுக்குள் கறுவியபடி அங்கு வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம் “வெரசாப் போயி சுகுணாராணி டீச்சர நான் சொன்னேன்னு கூட்டிக்கிட்டு வாடா…..” என்று அனுப்பி வைத்தார்.

சிறுவனை அனுப்பிய பின்பு “சொல்லுங்கய்யா; அந்த கிறுசுகெட்ட பொம்பளை என்னய்யா பண்ணித் தொலைச்சுச்சு….?” என்றார் தலைமை ஆசிரியர் கூட்டத்தினரிடம் மிகவும் பவ்யமாக.

“அந்த தே….. முண்டை தமிழ் வாத்திச்சி சின்னப் புள்ளைங்களையெல்லாம் கீழ்ச்சாதி பயல்களை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணச் சொல்றாளாம். இது பிஞ்சு மனசுகள்ல நஞ்சு வைக்கிற காரியமில்ல. புள்ளைங்களப் படிக்க அனுப்புனா ஒரு வாத்திச்சி பள்ளியோடத்துல இதையா சொல்லித் தருவாள்….” என்றார்  ஊர்த் தலைவரின் தம்பி கொதிப்புடன்.

“அது மட்டுமில்லாம சொந்தத்துல மாமன் மச்சானக் கல்யாணம் பண்ணுனா ஊனமான குழந்தைகளும் மூளை வளர்ச்சி யில்லாத குழந்தைகளும் தான் பொறக்குமுன்னு பயமுறுத்தி இருக்கிறா.  என் பொண்ணு இப்பவே அவளுக்குன்னு வாக்குக் கொடுத்து வச்சிருக்குற மாமனுக்கு வா(ழ்)க்கப்பட மாட்டேன்னு முரண்டு பிடிக்கத் தொடங்கிட்டாள்.  இதெல்லாம் நல்லதுக்கா. எங்க போயி முடியப் போகுதுன்னே தெரியல….”  என்றாள்  ஒரு நடுவயதுப் பெண் ஆற்றாமையுடன்.

சுகுணாராணி இன்னும் சில ஆசிரியர்கள் புடைசூழ அங்கு வந்தாள். அவளைப் பார்த்ததும் ஊர்க்காரர்கள் அவளை வசைபாடியபடி அடிக்கப் பாய்ந்தார்கள். அவளுடன் வந்த ஆசிரியர்கள் அவளைச் சுற்றி நின்று கொண்டு அவளைக் காப்பாற்றியதோடு ஊர்க்காரர்களுடனும் சண்டைக்குப் போனார்கள். கொஞ்ச நேரம் அந்த இடமே காச்மூச்சென்று கலவரம் வரும் சூழல் உருவானது.

தலைமை ஆசிரியர் சத்தம் போட்டு எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, “நான் விசாரிக்கிறேன்; கொஞ்சம் பொறுமையா இருங்க…..” என்றார்.

“என்னம்மா இவங்க சொல்றதெல்லாம் நெஜமா? உன்கிட்ட படிக்கிற புள்ளைங்கள எல்லாம் காதல் கல்யாணம் அதுவும் சாதிமாறி கால்யாணம் பண்ணச் சொல்றியாம்! வகுப்புல பாடம் நடத்துறதத் தவிர மத்த எல்லாம்  பண்ணுவ போலருக்கு …..?” என்றார் தலைமை ஆசிரியர் சுகுணாராணியிடம் கோபமாய்.

“நான் வகுப்புல பாடம் மட்டும் தான் நடத்துனேன்….” என்றாள் சுகுணாராணியும் அழுத்தம் திருத்தமாகவும் லேசான கோபத்துடனும்.

ஊர்த் தலைவர் அங்கு வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியை அழைத்து, “நீ சொல்லு தாயி, இவள் பாடம் நடத்துன லட்சணத்தை……” என்று சொல்லவும் அவள் ஓரக்கண்ணால் சுகுணாரானியைப் பார்த்தபடி நடுங்கும் குரலில் மெல்லச் சொல்லத் தொடங்கினாள்.

“ரெண்டு நாளைக்கு முன்னால சுகுணா டீச்சர் அம்பேத்கார் பற்றியும் பெரியார் பற்றியும் பாடம் நடத்துனாங்க. அப்புறம் ’இவங்க எல்லாம் சமூகத்துலருந்து சாதிய ஒழிக்கனும்னு பாடுபட்டாங்க. ஆனாலும் ஜாதி ஒழிஞ்ச பாடுல்ல. ஜாதிய ஒழிக்கிறதுக்கு என்னல்லாம் பண்ணலாம்னு சொல்லுங்க…’ன்னு கேட்டாங்க.

தனசேகர் எழுந்து, ‘முதல்ல பள்ளிக் கூடத்துல சேர்க்குறப்ப ஜாதி என்னன்னு கேட்குறத நிறுத்தனும். அப்புறம் ஜாதிச் சான்றிதழ்களை எல்லாம் ஊர்ப் பொது இடத்துல போட்டுக் கொளுத்தீடனும்…’னு சொன்னான்.

அதுக்கு டீச்சர், சிரிச்சுக்கிட்டே ’உங்க அம்மாவும்  அப்பாவும் படிச்சிருக்காங்களா?’ன்னு  கேட்டாங்க. அவன் இல்லைன்னு சொல்லவும், ’இந்தக் கிராமத்துல  நிறையப்பேர் ஸ்கூல் பக்கமே போகல. அதனால அவங்கள யாரும் என்ன ஜாதின்னு கேட்டுருக்க மாட்டாங்க. அவங்களுக்கு ஜாதி சான்றிதழும் இருக்காது. அப்படி இருந்தும் அவங்க ஜாதி பார்க்காம, ஜாதி பாராட்டாம இருக்காங்களா…?’ன்னு கேட்டாங்க.

நாங்க  எல்லாம் இல்லைன்னு கோரஸா சொன்னோம்.

’ஸ்கூலுல ஜாதி என்னன்னு கேட்குறது, கீழ்மட்டத்துல பள்ளத்துல கெடக்குறவங்களக் கொஞ்சம் கைகுடுத்துத் தூக்கி விடுறதுக்காக. அதுகூட இல்லைன்னா அவங்க நெலமை இன்னும் மோசமாப் போயிடும்; ஆனா ஜாதி ஒழியாது. இன்னும் உக்கிரமா ஆகும்….’ன்னு சொன்னாங்க.

ராமசாமி எழுந்து ‘ஜாதி விட்டு ஜாதி கலப்புத் திருமணம்  பண்ணிக்கனும். அரசாங்கம் அவங்களுக்குப் பொறக்குற குழந்தைங்களுக்கு நிறைய சலுகைகள் குடுத்து ஊக்குவிக்கனும்…’ என்றான்.

உடனே  டீச்சர். ‘ரொம்ப நல்ல யோசணை தான். ஒரேஒரு சின்னத் திருத்தம்.  மேல்மட்ட ஜாதியும் கீழ்மட்ட ஜாதியும் கலந்து பொறக்குற குழந்தைங்களுக்கு ஸ்பெஷல் சலுகைகள் தரலாம்…’ன்னு சொன்னாங்க.  அப்புறம் மாணவர்களப் பார்த்து, ’உங்கள்ல யாரெல்லாம் ஜாதி பார்க்காம கல்யாணம் பண்ணுவீங்க…?’ன்னு கேட்டாங்க. சுகந்தி, ‘லவ் மேரேஜா டீச்சர்…!’ன்னு வெட்கப்பட்டபடியே கேட்டாள்.

’ஆமா, அப்புறம் பெத்தவங்களா வேற ஜாதியில புள்ளைங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க…!’ன்னு சொல்லி டீச்சர் சிரிச்சாங்க.

குருசாமி எழுந்து ’ஆனால் அம்பேத்காரும் பெரியாரும் அவங்கவங்க சாதியில தான கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க டீச்சர்….’ ன்னு கேட்டான். ’அருமையான கேள்வி. இப்படித்தான் கேள்வி கேட்கனும். இதக்கேட்டா பெரியாரே சந்தோஷப்பட்டு பரிசு குடுத்துருப்பார். நானும் என்னோட பேனாவக் குருசாமிக்குப் பரிசாத் தர்றேன்…’னு  சொல்லி அவங்க கைப்பையிலருந்து புத்தம் புதிய பேனாவ எடுத்து அவனுக்குக் குடுத்தாங்க.

அப்புறம் ‘கல்யானம் பண்ணுன காலகட்டத்துல பெரியார் ஜாதிய இத்தனை பெரிய கொடுமையா உணரல. அதனால சுயஜாதியிலயே கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனால் அம்பேத்கார் கடுமையாகவே ஜாதிக் கொடுமைகள அனுபவிச்சார். அவருடைய முதல் திருமணம் பதினேழு வயதிலேயே பெற்றோர்களால் ஏற்பாடு பண்ணப்பட்டு நடந்துச்சு.  முதல் மனைவி இறந்த பின்னால ரொம்பநாள் கழிச்சு ரெண்டாவதா அம்பேத்கார் பண்ணுனது காதல் + கலப்பு திருமணம் தான்…’ன்னு சொன்னாங்க.

’ஆனால் ஜாதிமாறிக் கல்யாணம் பண்றதாலேயே ஜாதி முழுசா ஒழிசுஞ்சுடும்னும் அவ்வளவு உறுதியாச் சொல்ல முடியாது. ஏன்னாக் கலப்புத் திருமணம் பண்ணிக்கிட்ட சில தம்பதிகள் அவங்களோட பிள்ளைங்களுக்கு அவங்க  ஜாதிக்குள்ளவே வரன் தேடுறதையும் பார்த்துருக்கேன்…’னாங்க டீச்ச்சர்.

சுகந்தி, ‘நீங்க லவ் பண்ணித்தான் கால்யாணம் பண்ணிக்குவீங்களா டீச்சர்…’ன்னு கேட்கவும், ‘நிச்சயமா…’ன்னு சொல்லீட்டு ‘எங்க பிற்காலத்துல ஜாதி பார்க்காம கல்யாணம் பண்ணப் போறவங்க எல்லாம் கைதூக்குங்க பார்க்கலாம்…’ன்னாங்க.

ஏழெட்டுப் பசங்களும் ஒரேஒரு சேரிப்பொண்ணும் மட்டும் கைதூக்குனாங்க. “ரொம்ப நெருங்குன ரத்த உறவுல கல்யாணம் பண்ணா குறைபாடுள்ள குழந்தைகள் பொறக்குறதுக்கு வாய்ப்பு அதிகம். தெரியுமா…?’ன்னு டீச்சர் கேட்டாங்க….” பாப்பம்மாள் வகுப்பில் நடந்ததை விலாவாரியாக விவரித்து முடித்தாள்.

தலைமை ஆசிரியர் சுகுணாராணியிடம், “இப்ப என்னம்மா சொல்ற…?” என்றார்.

“இதுல நான் என்ன சொல்லனும்? சமூகத்துல ஜாதிய ஒழிக்கிறது பற்றி என் மாணவர்கள் கிட்ட விவாதிச்சேன். அது எப்படித் தப்பாகும்? ” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ஏம்மா, அம்பேத்கார் பெரியார் பத்திப் பாடம் நடத்துனா புத்தகத்துல என்ன இருக்கோ அதமட்டும் சொல்லீட்டுப் போக வேண்டியது தானம்மா. எதுக்கு குழந்தைகள ஜாதி மாறிக் கல்யாணம் பண்ணுங்கன்னு கேன்வாஸ் பண்ணிக்கிட்டு இருக்க…?” என்றார் மிகவும் கோபமாய்.

“நான் கேன்வாஸ் எல்லாம் பண்ணல ஸார். கேஸுவலா மாணவர்கள் கிட்டப் பேசிக்கிட்டு இருந்தேன். மாணவர்கள் தான் கலப்புக் கல்யானம் ஜாதிய ஒழிக்க ஒரு வழின்னாங்க. அவ்வளவு தான்…..”

“சொந்த  மாமன் மச்சானக் கல்யாணம் பண்ணுனா குழந்தை ஊனமாப் பொறக்குமின்னு ஸ்கூல் படிக்கிற குழந்தைகளப் போயிப் பயமுறுத்தி இருக்கீயே, இது எப்படிம்மா சரியாகும்?”

“நான் பேசுனது அறிவியல் உண்மை ஸார்…..”

“ஆனால் நீ அறிவியல் டீச்சர் இல்லையே….! தமிழ் டீச்சர் தான….”

“எந்தப் பாடத்துக்கு டீச்சரா இருந்தா என்ன ஸார்? புள்ளைங்களுக்கு விழிப்புணர்வ ஊட்டுறது நல்லது தான! அது எப்படித்  தப்பாகும்…?”

“பதினாறு பதினேழு வயசுப் பசங்ககிட்ட அவங்களோட கல்யாணம் பத்திப் பேசுறீயே, அதுகூடத் தப்பாத் தெரியலையா உனக்கு?” என்றார் ஊர்த்தலைவர்.

“நான் நாளைக்கே அவங்களப் போய்க் காதலிச்சுக் கால்யாணம் பண்ணிக்கச் சொல்லல. கல்யாண வயசு வரும்போது எப்படிக் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு தான் டிஸ்கஸ் பண்ணினேன். ஆனால் இதே கிராமத்துல எட்டாப்பு, ஒன்பதாப்புப் படிச்சுக்கிட்டு இருந்த புள்ளைங்களோட படிப்ப நிறுத்திக் கல்யாணம் பண்ணி வச்சாங்களே, அதையெல்லாம் பார்த்துக்கிட்டு, கல்யாணத்துல போய் சந்தோஷமாக் கலந்துக்கிட்டுத் தான இருந்தீங்க. ஊர்த் தலைவரா அதத் தப்புன்னு தடுக்க சின்ன முயற்சியாச்சும் பண்ணுனீங்களா?”

“பாருங்க; எவ்வளவு தெனாவெட்டாப் பேசிக்கிட்டு இருக்கிறாள்ன்னு….” என்று ஊர்த் தலைவரும் கூட்டத்தினர்களும் கத்தியபடி ஆசிரியையை அடிக்கப் பாய,  சக ஆசிரியர்கள் சிலரும் அவர்களுக்கு எதிர்வினை புரிய  அங்கு மறுபடியும் தள்ளுமுள்ளுவானது.

“இனிமே இந்த —-சிறுக்கி இந்த ஊர்ல வேலை பார்க்கக் கூடாது. அதுக்கு என்ன பண்ணனுமோ அதப் பண்ணுய்யா….” என்றார் ஊர்த் தலைவர் தலைமை ஆசிரியரிடம். சுகுணாவும் சக ஆசிரியர்களும் அதை எதிர்க்க, தலைமை ஆசிரியரும், “அப்படியெல்லாம் எதுவும் செய்ய முடியாதுங்க. இது அரசாங்க வேலை. உங்க பண்ணை  வேலை ஒன்னும் இல்ல….” என்றார் முதல்முறை கோபமாய்.

தலைமை  ஆசிரியர் கோபப்படுவதை ஆச்சர்யமாய்ப் பார்த்தபடி “உனக்கும் துளுத்துப் போச்சுய்யா. வர்ற வெள்ளிக்கிழமை ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டுறோம். அங்க வந்து  இவள் ‘நான்  புள்ளைங்களக் காதலிக்கச் சொன்னது தப்பு; இனிமே அந்தத் தப்பப் பண்ண மாட்டேன்….’னு சொல்லிக்கிட்டே ஒவ்வொரு பெரியவங்க கால்கள்லயும் விழுந்து மன்னிப்புக் கேட்கனும். அபராதம் போடுவோம். அதையும் கட்டனும். இதுதான் இறுதி முடிவு…..” என்றார் ஊர்த்தலைவர் தீர்மானாமாக.

“மன்னிப்புக் கேட்குறது; தண்டம் கட்டுறதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க….” என்று சுகுணாராணியும் ஊர்த் தலைவரிடம் சிலிர்த்துக் கொண்டு சண்டைக்குப் போனாள்.

“டீச்சர் வேலைக்கு வந்துட்டா நீ என்ன பெரிய இவளா? எல்லாருட்டயும் மட்டு மரியாதை இல்லாமப் பேசிக்கிட்டு இருக்கவ. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி ஒருநாளும் பருந்தாக முடியாதுன்னு தெரிஞ்சுக்கோ….” என்றார் ஊர்த் தலைவர்.

“நான் ஏய்யா பருந்தாகனும்? ஊர்க்குருவியா நான் பொறந்த ஊர்லயே சந்தோஷமாப் பறந்துட்டுப் போகத்தான் ஆசைப்படுறேன். நீங்கதான் குஞ்சுகளக் காவிக்கிட்டுப் போற கொடூரமான பருந்துகளா இருக்கிறதோட என்னையும் பருந்தாக்கிடனும்னு துடிக்கிறீங்க….” என்றாள் சுகுணாராணி அவரிடம் சிரித்தபடி.

“இங்க பாருடி. வர்ற  வெள்ளிக்கிழமை ஊர்ப் பஞ்சாயத்துல வந்து ஒழுங்கு மரியாதையா மன்னிப்புக் கேட்டுடு. இல்லைன்னா என்ன நடக்குமுன்னு எங்களுக்கே தெரியாது….” என்று சுகுணாராணியை எச்சரித்துவிட்டு ஊர்க்காரர்கள் எல்லோரும் கலைந்து போனார்கள்.

“உள்ளூர்க்காரியா இருந்தும் இங்க ஜாதி எவ்வளவு சென்சிட்டிவான விஷயம்னு தெரிஞ்சும் பசங்களுக்கு இப்படிப் பாடம் நடத்தி இருக்கியேம்மா….” என்று வருத்தத்துடன் சொன்னார் தலைமை ஆசிரியர்.

“காட்டுமிராண்டிக் கூட்டம் டீச்சர் இது.  மூனு வருஷத்துக்கு முந்தித்தான் காதல் கல்யாணம் பண்ணுனாங்கன்னு பொண்ணு பையன் ரெண்டு பேரையும் உயிரோட எரிச்சுக் கொன்னாங்களே, மறந்துட்டீங்களா.  கொஞ்சம் பார்த்துக் கவனமா இருந்துக்குங்க டீச்சர்….” என்றார்கள் ஊர்க்காரர்களிடமிருந்து சுகுணாராணியைக் காப்பாற்றிய சக ஆசிரியர்களும்.

சுகுணாராணிக்கும்  மனதுக்குள்  பயம்  இலேசாய்த் துளிர்விடத்  தொடங்கியது.

சுகுணாராணி இதே ஊரில் அவள் இப்போது வேலை பார்க்கும் பள்ளியில் தான் படித்தாள். பள்ளியில் அவளும் அவளைப் போல் சேரியிலிருந்து வந்திருந்த மூன்று சிறுவர்களும் கடைசி  வரிசையில் தனியாக உட்கார வைக்கப் பட்டபோதும் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்களுக்கு மட்டும் தான் சாய்ந்து கொள்ளச் சுவர் இருப்பதாக நினைத்து சந்தோஷப்பட்டாள்.

இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது சகமாணவி ஒருத்தி அவள் தின்று கொண்டிருந்ந்த ஆரஞ்சு மிட்டாயைப் பாதிகடித்துத் தந்தபோது ஆசையாய் வாங்கிச் சாப்பிட்டாள்.

நாமும் அவளுக்கு ஏதாவது தர வேண்டுமே என்று இரண்டு நாள் கழித்து அம்மாவிடம் அழுது புரண்டு அடம்பிடித்துக் காசுவாங்கி மூன்று தேன் மிட்டாய்களை வாங்கிக் கொண்டு போய் அதில் ஒரு முழு மிட்டாயை ஆரஞ்சு மிட்டாய் தந்தவளுக்குப் பிரியமாய்க் கொடுத்தாள்.

மிட்டாயைக் கையில் வாங்கியவள் அதைத் தின்னாமல் புழுதியில் வீசி எறிந்துவிட்டு “சேரிப் புள்ளைங்க கொடுக்கிற எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாதுன்னு எங்க ஆத்தா சொல்லி இருக்கு…’’ என்றவள் பதில் சொன்ன போது தான் சுகுணாராணிக்கு ஜாதியின் குரூரம் இலேசாய்ப்  புரியத் தொடங்கியது.

ஜாதிகள் இல்லையென்று சொல்லித்  தருகிற ஆசிரியர்களே ஜாதிய அபிமானிகளாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் போனபின்பு,     இலவசப் புத்தகங்களும் ஸ்காலர்ஷிப்பும் வந்திருப்பதாய் அறிவித்து, ’எஸ்ஸிப் புள்ளைங்கள்ளாம் எழும்புங்க….’ என்று வகுப்பில் எழும்பி நிற்க  வைத்தபோது அவமானத்தால் சுருண்டு போனாள் சுகுணாராணி.

அதைவிடவும் சுகுணா வகுப்பிலேயே முதல் மாணவியாய் மதிப்பெண்கள் வாங்கிய போதும்  ஆசிரியர்கள் அவளைப் பாராட்டாமல், “சேரிப்புள்ள மொத மார்க் வாங்குறா, அவள் மூத்திரத்தை வாங்கிக் குடிங்க; அப்பயாவது உங்களுக்கெல்லாம் உணர்ச்சி வருதான்னு பார்க்கலாம்…”  என்று ஏளனப் படுத்திய போது படிப்பை  விட்டுவிட்டுப் போயிடலாமா என்று தீவிரமாய் யோசித்திருக்கிறாள்.

எட்டாம் வகுப்புப் படித்தபோது சின்ன  வகுப்பில் ஒரு பையன் வாந்தி எடுத்து விடவும், அவளை அழைத்து சுத்தப்படுத்தச் சொன்னார்கள். அவள் முடியாது என்று சொல்லவும் அவளின் சாதியைக் குறிப்பிட்டு அதில் பிறந்தவள் இதைச் செய்வதற்க்கெல்லாம் முகஞ் சுளிக்கலாமா என்று திட்டினார்கள்.  அவளை வலுக்கட்டாயமாக சிறுவனின் வாந்தியைச் சுத்தப்படுத்த வைத்தார்கள்.

அவள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது ஒருநாள் மதிய உணவு நேரத்தில் வழக்கமாய் அண்டாவிலிருந்து மாணவர்களின் தட்டுக்களில் உணவை எடுத்துப் பரிமாறும் மாணவி வராததால் சுகுணா  பரிமாறுவதற்காக அதற்கான மர அகப்பையை கையில் எடுத்தாள்.

அதைப் பார்த்ததும் அறிவியல் ஆசிரியை வேகமாய் ஓடிவந்து சுகுணாவிடமிருந்து அகப்பையைப் பிடுங்கி ’அறிவிருக்காடி உனக்கு; நீ போயி எல்லாத்துக்கும் சாப்பாடு பரிமாறுவியா..,?’ என்று சொல்லி அவளை அகப்பையாலேயே ஓங்கி அறைந்தாள். சுகுணா தொட்டுவிட்டதால் அந்த அகப்பையை பாவிக்கக் கூடாது என்று முறித்தும் எறிந்து விட்டார்கள்.

பத்தாம் வகுப்பில் சுகுணா தான் அவளின் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி  பெற்றிருந்தாள். அதற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி சுகுணாவிற்கு பரிசுப் பணம் கொடுக்கும் போது அவளின் கைபட்டு விடப்போகிறதே என்று பதறி சற்று உயரத்தில் இருந்து தூக்கிப் போட்டபோது அவமானத்தால் குன்றிப் போனாள்.

படிக்கும் போது ஏற்பட்ட வலிகளும் அவமானன்ங்களும்   சுகுணாவின் நெஞ்சில் இப்போதும் முட்களாய் உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆசிரியை வேலை கிடைத்து உள்ளூர் பள்ளியில் வேலையில் சேர்ந்ததும், “இந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு ஏந்தாயி வேலைக்கு வந்த? இது ஜாதி வெறிபுடிச்ச ஊரும்மா. நீ  எவ்வளவு தான் படிச்சு முன்னேறினாலும், அவங்க கண்ணுக்கு முன்னால நீ பிறந்த ஜாதி தான் நிக்கும். உன்னை எளக்காரமாத் தான் பார்ப்பாங்க…..” என்று கடிந்து கொண்டார் அப்பா.

அப்பா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்பது அவள் வேலையில் சேர்ந்த முதல்நாளே ஊர்ஜிதமானது. அன்றைக்கு மாலையில் தலைமை ஆசிரியர் மீட்டிங் போட்டார். மீட்டிங் முடிந்ததும் எல்லோருக்கும் டீ வந்தது. மற்றவர்களுக்கு கண்ணாடி கிளாஸிலும் அவளுக்கும் இன்னும் சிலருக்கும் மட்டும் பிளாஸ்டிக் கப்பிலும்.

சிரட்டையிலும் தனி கிளாஸிலும் டீக்கொடுத்தவர்கள் நாகரிக காலத்தில் பிளாஸ்டிக் கப்பில்  தரத் தொடங்கி இருக்கிறார்கள். முன்னேற்றம் தான். சுகுணா டீயை வேண்டாமென்று சொல்லி விட்டாள்.

அவர்களின் கிராமத்திற்கும் புதிதாய் பஸ் விட்டிருந்தார்கள். ஆனால் சேரியிலிருந்து பேருந்தில் ஏறுபவர்கள் குடியானவர்களுக்குச் சமதையாக சீட்டில் உட்காரக்  கூடாது என்பது எழுதப்படாத விதி. அதையும் மீறி சில இளவட்டங்கள் சீட்டில் உட்கார்ந்து அவ்வப்போது பஸ்ஸில் அடிதடியெல்லாம் நடக்கும்.

ஒருமுறை சுகுணா மதுரைக்குப் போய் விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். விருதுநகரில் அவளுடைய ஊருக்கான பேருந்தே நிற்கவும், பெண்கள் சீட்டில் உட்கார்ந்து பயண அலுப்பில் தூங்கிப் போனாள்.

கொஞ்ச நேரத்தில் அவளை ஒரு நடுத்தர வயதுப் பெண் தட்டி எழுப்பி, “நீ பறை அடிக்கிற சண்முகத்தோட  மகள் தான…?” என்றாள். சுகுணா ஆமோதிக்கவும், ’‘ஒய்யாரமா சீட்டுல உட்கார்ந்துருக்கவ, எழுந்திருடி….” என்றாள் அதிகாரமாய்.

“மரியாதை இல்லாமப் பேசுன, செவுளப் பேத்துருவேன். இது உன் அப்பன் வீட்டுப் பஸ் இல்ல; அரசாங்க பஸ். எழும்ப முடியாது. உன்னால ஆனதப் பார்த்துக்கோ….” என்று சுகுணாவும் எகிறவும் தூரமாய்ப் போய் நின்று கொண்டு சுகுணாவையே முறைத்துப் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தாள்.

மாலையில் பள்ளி முடிந்து சுகுணாராணி வீட்டிற்குப் போனபோது அங்கு சேரிஜனம் மொத்தமும் குழுமி இருந்தார்கள். பள்ளியில் நடந்ததை யெல்லாம் அப்பாவும் அங்கிருந்தவர்களும் அறிந்திருந்தார்கள். போலீசில்  புகார் பண்ணலாம் என்றும் ஊர்க் காரர்கள் அடித்தால் நாமும் திருப்பி அடிப்போம் என்றும் அங்கிருந்த இளவட்டங்கள் சிலர் சொன்னதை அப்பா ஏற்கவில்லை.

“வெள்ளிக்கிழமை பஞ்சாயத்துல ஒன்னும் பேசாம நீ மன்னிப்புக் கேட்டுரு தாயி. அதான் நாம எல்லோருக்குமே நல்லது….” என்று அவர் சொன்னதைக் கேட்டதும் சுகுணா உடைந்து அழுது விட்டாள்.

“நீ  ஒரு தப்பும்  பண்ணலைன்றது எனக்குத் தெரியும் தாயி. இப்ப சேரி ஊர்க்காரங்க கண்ட்ரோல்ல இல்லைன்றது தான் பிரச்னை. முந்தி யெல்லாம் அவங்க போட்ட மிச்சத்தையும் எச்சியையும் தின்னுக்கிட்டு அவங்க இட்ட வேலைகளை யெல்லாம் செஞ்சுக்கிட்டு  காலடியிலேயே கிடந்தோம்.  ஆனா காலம் மாறிப்போச்சு.

இப்ப நம்ம புள்ளைங்களும் நிறையப்பேர் உன்னை மாதிரி வெளியூர்ல போயிப் படிச்சு பசபசன்னு இருக்குறாங்க. குடிசைகளும் பன்னித் தொழுவமுமா அழுக்கும் அசிங்கங்களுமா இருந்த சேரியில இப்ப ஓட்டு வீடுகளும் ஒன்னு ரெண்டு கல்லு வீடுகளும் வந்து அழகாயிருச்சு.

நீ அவங்க கண்ணுக்கு முன்னாலயே வாத்திச்சியா கம்பீரமா நடமாடுறது அவங்களை உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது. அதுவும் நீ அம்பேத்கார் மன்றம்னு தொடங்கி சேரிக்குள்ளாறயே படிப்பகம் விளையாட்டுப் போட்டிகள்னு நம்ம புள்ளைங்கள உருவாக்குறத அவங்களால தாங்கிக்கவே முடியல.  குடி தண்ணீருக்குக் கூட அவங்கள சார்ந்து இருக்காம சேரிக்குள்ளயே கிணறு வெட்டி தெருத் தெருவுக்குப் பைப் போட வச்சிட்டீங்க. அதனால தருணத்தை  எதிர்பார்த்துக்  காத்துக்கிட்டு இருந்தாங்க. அது இப்ப உன் மூலமாவே வந்துருச்சு.

ஊர்க்காரங்களும் பெரும்பாலூம் வசதி இல்லாம அன்னாடம் கஷ்டப்பட்டாத்தான் கஞ்சிங்குற நெலைமையில தான் இருக்குறாங்க. சேரி அவங்க கண்ணு முன்னால வளர்றதப் பார்த்து இலேசாப் பொறாமைப் படுறாங்க. இந்தப் பொறாமைத் தீய ஊதிஊதி அவங்கள ஜாதியா ஒன்னு திரட்டி ‘நாம எல்லாம் ஆண்ட பரம்பரை; நமக்கு அடிமையா இருந்த அவனுங்க இப்பத் துள்றானுங்க. அதை விடக்கூடாது…’ன்னு சிலர் கிளப்பி உடுறாங்க.

அதனால நாமளும் உணர்ச்சி வசப்பட்டு அவங்க கூட மல்லுக்குப் போனமின்னா ரெண்டு மூனு தலைமுறையா நாம கஷ்டப்பட்டு உருவாக்குன சொத்துக்களை எல்லாம் அரை மணி நேரத்துல அடிச்சுத் துவம்சம் பண்ணீட்டுப் போயிடுவாங்க. அப்புறம் நம்முடைய இளைஞர்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் ஆயுள்  முழுவதும் அலைஞ்சிக்கிட்டு இருக்கனும். அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது தாயி.

அப்பா சொல்றேன். நீ அவங்க  கால்கள்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுரு தாயி. அதனால நாம ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டோம். நாம வாழ்க்கையில எத்தணையோ அவமானங்களத் தாண்டித்தான் வந்துருக்குறோம். அதுல இதுவும் ஒன்னுன்னு நெனைச்சுக் கடந்து  போயிடுவோம். அடுத்த வருஷம் வேலைய கண்  காணாத ஊருக்கும் மாத்தீட்டுப்  போயிடுவோம் தாயி…” நீட்டி முழக்கி அப்பா சொன்னதை சுகுணாவும் ஏற்றுக் கொண்டு ஊர்க்காரர்களிடம் மன்னிப்புக் கேட்க மனதளவில் தயாரானாள்.

வெள்ளிக்கிழமை வழக்கம் போல் காளி கோயிலில் பஞ்சாயத்துக் கூடி இருந்தது. பிரச்னை பற்றிக் கொஞ்ச நேரம் ஆளாளுக்குப் பேசினார்கள். கடைசியில் ஊர்த் தலைவர் சுகுணா சபையினரின் கால்களில்  விழுந்து மன்னிப்புக்  கேட்க வேண்டுமென்று தீர்ப்பைச் சொன்னார்.

சுகுணா கனத்த மனதுடன் எழுந்து போய் சபையினரின் முன்னால் நின்றாள். மன்னிப்புக் கேட்பதற்காக  ஊர்த்தலைவரின் கால்களில் விழப் போனபோது, “டீச்சர் நிறுத்துங்க. நீங்க ஒரு தப்பும் பண்ணல. அதனால மன்னிப்பும் கேட்கத் தேவையில்ல…” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

“யாருடா அது…” என்று  ஊர்த்தலைவர் கோபமாய் சத்தம் போட எழும்பி நின்றான் ராமநாதன். ஊர்த்தலைவரின் பேரன்.  சுகுணாவின் வகுப்பில் படிப்பவன். அவனைத் தொடர்ந்து ஆண்களும்  பெண்களுமாய் பலர் எழும்பி நின்று பஞ்சாயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். எல்லோருமே சுகுணாவின் மாணவர்கள்!

அவர்களைத் தொடர்ந்து பள்ளியில் மற்ற வகுப்புகளில் படிப்பவர்களும் நியாய அநியாயங்கள் தெரிந்த ஊரின் பொதுவான இளைஞர்களும் எழுந்து பஞ்சாயத்தின் தீர்ப்பை எதிர்த்தார்கள்.

ஊர்த் தலைவரும் பஞ்சாயத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர்களும் புதிய தலைமுறை இளைஞர்களின் முன் தங்களின் வாக்கு முதல்முறையாக மதிப்பிழப்பதை நம்பமுடியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிறைவுற்றது

சில்வியாமேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad