Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எது தான் சரி?

Filed in கதை, வார வெளியீடு by on August 10, 2020 0 Comments

மதிய வெய்யில் சுட்டெரித்தது. வீட்டின் வாசலில், அந்த மர நாற்காலி இன்னும் சுட்டெரித்தது. ராமசாமி தாத்தாவிற்கு தொண்டை வறண்டது. சின்ன கமறல்  எழுப்பினார். கையில் இருந்த செய்தித்தாளை மடித்து வைத்து யோசித்தார். உள்ளே இருந்து பாக்யம் லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்தார்.

“நான் கேட்கவே இல்லை ஆனால் எனக்கு தண்ணீர் வேணும்னு உனக்கு எப்படி தான் தெரியுதோ ?”.

அ கேட்டு தான் கொடுக்க வேண்டுமா ? சின்ன புன்னகை மட்டும் பூத்து விட்டு உள்ளே செல்ல திரும்பினார்.

“பாகி . ஒரு நிமிஷம் இரேன்”.

ராமசாமி தாத்தா விற்கு எண்பத்தி ஆறு வயது. இத்தனை வருடத்தில் சில முறை மட்டும் தான் பாட்டியை பாகி என்று அழைத்து பழக்கம்.

பொதுவாக  பாக்யம் என்று அழைப்பார். குழந்தைகள் பிறந்த பிறகு “அம்மா” என்றே அழைத்தார். பேரக் குழந்தைகள் பிறந்த பிறகு “பாட்டி” என்று அழைத்தார். பாகி என்று அழைத்தால் ஏதோ முக்கிய விஷயம் பேசப் போகிறார் என்று புரிந்து கொள்ளலாம்.

“கொஞ்சம் நேரம் பக்கத்துல உட்காரேன்.”.

” ஏன் என்னாச்சு ? நாற்காலிக்கு அருகில் பக்கத்தில் உட்கார்ந்த படி கேட்டார். “ஏதாவது உடம்பு சரியில்லையா? ”

“இல்லை. ஒரு விஷயம் பேசணும் . நம்ம பையன் கடைசியா பணம் அனுப்பி எத்தனை நாள் ஆகி இருக்கும் ”

” ஹ்ம்ம். அது ஒரு ஆறு மாசம் இருக்கும். அதுக்கு முன்னாடி கொடுத்த பணம் அப்போ அப்போ சேர்த்து வைச்சிருந்தேன். அதெல்லாம் வெச்சு இந்த ஆறு மாசம் ஏதோ ரெண்டு பெரும் இருந்திட்டோம் “.

“இனிமே தள்ள முடியாது இல்ல ? அவன் கிட்ட கொஞ்சம் போன் போட்டு பணம் கேட்கலாமா ?”

“இல்லைங்க . அவனுக்கு என்ன பண முடையோ . எப்பவுமே அனுப்பற புள்ளை தானே. அவனா தருவான். நம்ம பொறுமையா இருப்போங்க.”

“நம்ம பொறுத்து பொறுத்து தான் காலம் தள்ளறோம். ஆனா நமக்கு ஒன்னும் நடக்க மாட்டேங்குது” .

“உங்களுக்கு மட்டும் வேலைல ஓய்வூதியம் கிடைச்சிருந்தா நல்லா  இருந்திருக்கும்”.

“ஹ்ம்ம் ஆமாம். அத்தனை வருஷம் சர்வீஸ் ஆச்சு. நேத்து நம்ம விஸ்வம் வீடு வழியா நடந்து போயிட்டு இருந்தேன். அப்போ விஸ்வம் வாசல்ல உட்கார்ந்து இருந்தான்”.

“உங்க கூட வேலை பார்த்த விஸ்வம் அண்ணனா ?”

“ஆமாம். அவனுக்கு இப்போ ஓய்வூதியம் வருதுன்னு சொன்னான்”.

“எப்படி ? அவரும் உங்களோட தானே வேலை பார்த்தாரு” .

“ஆமாம். என்னோட தான். ஆனால் நான் வேலை விடறதுக்கு ஒரு வாரம் அப்புறம் தான் அவன் வேலை விட்டான்”.

“இது என்ன கதையா இருக்கு. ஒரு வாரம் அப்புறம் வேலை விட்ட அவருக்கு ஊதியம் உண்டு உங்களுக்கு இல்லையா?”

” அத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். எங்க ஆபீஸ் ல விதி முறை போட்டு எங்க எல்லாரையும் வேலை ஓய்வுக்கு வலுக் கட்டாயமா போகச் சொன்ன பொழுது, போட்ட  விதி முறையை  மதிச்சு நான் உடனே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன் . ஆனா விஸ்வம் மாதிரி சில பேர் அதை எதிர்த்து சண்டை போட்டு, அப்புறம் ஒரு வாரம் கழிச்சு வேலையை ராஜினாமா செஞ்சாங்க”.

“சரி அதுனால என்ன ?”

“இப்போ பழைய ஆளுங்க எல்லாருக்கும் ஆபீஸ் ல ஓய்வூதியம் கொடுக்கறாங்க போல. அதுல குறிப்பிட்ட தேதிக்கு அப்புறம் வேலைய விட்டவர்களுக்கு மட்டும் கொடுத்திருக்காங்க. நமக்கு ரெண்டு நாள் அப்புறம் வேலை விட்டவங்களுக்கு எல்லாம் கிடைச்சிருக்கு”.

“இதென்ன அநியாயம் ? ஒழுங்கா அவங்க சொன்ன விதிமுறைப் படி செஞ்சவங்களுக்கு இல்ல. சண்டை போட்டவர்களுக்கு தானா ?”

“அதான் அத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். நம்ம கைல கொஞ்சம் பணம் இருந்தா இப்போ நமக்கு உதவியா இருக்கும் இல்ல. பிள்ளை கைய நம்பி இருக்க வேண்டாம்.”

“ஆமாம் தான். என்ன பண்ண. நம்ம மொதல்லையே சண்டை போடல.  இப்பவும் சண்டை போட தைர்யம் வராது. அழுத புள்ளை தான் பால் குடிக்கும். என்னமோ போங்க”.

சொல்லிய படி பாக்யம் எழுந்து நடந்து போக.

அவள் சொன்னதை ரொம்ப நேரம் மனதில் ஒட்டிக்கொண்டு இருந்தார். எது தான் சரி?. அலுவலகம் சொன்னதை உடனே ஏற்றது சரியா. இல்லை சண்டை போட்டது சரியா? சண்டை போட்டவர்களுக்கு தான் இப்பொழுது ஓய்வூதியம் கிடைத்திருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்? கடைசியாக பாக்யம் சொன்ன வாக்கியம் மனதில் சுற்றி சுற்றி வந்தது.

****

ராமசாமி உனக்கு தெரியுமா நம்ம ஆபீஸ்ல வேலை செஞ்சவங்க எல்லாருக்கும் ஓய்வூதியம் தரணும்னு யாரோ ஒருத்தர் வழக்கு தொடுத்திருக்காராம். இத்தனை வருஷம் குடுக்காம போன தொகை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய தொகை கைல கிடைக்கும் .  உனக்கு கூட கிடைக்கலாம்.

விஸ்வம் சொன்னவுடன் , வெறுமே தலையை ஆட்டினார் ராமசாமி.. “யார் வழக்கு போட்டாங்கன்னு தெரியல ” என கூற, தான் தான் அதை செய்தது என்று சொல்லாமல் அமைதியாக வந்தார்.

வழக்கு சில மாதங்கள் நீடித்தது. ஆனாலும் ராமசாமி தொடர்ந்து முயற்சித்தார்.

இறுதியில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர. மிக உற்சாகமாக,

“பாகி நம்ம ரெண்டு பெரும் வேலை செய்த ஆபீஸ்க்கு போயிட்டு கிடைக்கற பணத்தை வாங்கிட்டு வரலாம் வா ” என தள்ளாத வயதில் இருவரும் பேருந்தில் கிளம்பி பணத்தை பெற்று திரும்பினார்கள்.

வண்டியில் இறங்கும் பொழுது வேகமாக ஒரு இளம் வாலிபன் தாத்தாவை தள்ளி விட்டு அவர் இடுப்பில் கட்டி இருந்த பணத்தை தூக்கி சென்று விட்டான். கீழே விழுந்த தாத்தாவை பிடிக்க பாக்யம் பாட்டியும் ஓட, பின்  “அட கட்டைல போறவனே . நீ நல்லா இருப்பியா எங்க பணத்தை தூக்கி போய்ட்டியே ” என ஓலமிட்டு அழுதார் .

வாழ்க்கை நிதர்சனத்தில் “எது தான் சரி?

-லட்சுமி சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad