\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2020-இல் அந்த ஏழு நாட்கள்

Filed in கதை, வார வெளியீடு by on August 17, 2020 0 Comments

ஞாயிறு  காலை: 

சென்னையில் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பெரிய புள்ளிகளில் ஒருவர். சக்ஸஸ்ஃபுல்லாக பல தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளி கண்ணன் மற்றும் அவர் மனைவி இருவரும் மருத்துவமனையில் மிகுந்த கவலையுடன் ICU கதவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். காரணம், அவர்களின் மகள் சந்தியா நேற்றுக் காலைதான் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் கொரோனா என்ற கொடிய நோயினால் பாதிக்கபட்டு, மூச்சுவிடக் கூடக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்குச் சிறு வயதிலிருந்து ஆஸ்த்மா இருந்தது. இருபத்தி ஏழு  வயது ஆகியும் குறையவில்லை. அதில் கொரோனா  வேறு.

அவர்கள் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், கண்ணனுடைய செல்ஃபோன் மணியடித்தது.

“ஹலோ, மாப்பிள்ள!” – காலர் ஐ.டி. பார்த்து, அழைப்பது சந்தியாவை மணக்க இருக்கும் அமெரிக்க மாப்பிள்ளை என்று தெரிந்து கொண்டு, ஃபோனை எடுத்து, பவ்வியமாகக் கண்ணன் பேசியது.

“அப்படிக் கூப்பிடாதீங்க. இந்தக் கொரோனா அமெரிக்காவில ரொம்ப இருக்கு. இந்த நேரத்துல நான் சந்தியாவைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்ன மன்னிச்சிடுங்க.” எதிர் முனையிலிருந்து வந்த அதிர்ச்சியான பதில்.

“ஐயோ மாப்பிள்ளை, என்ன இப்படிச் சொல்றீங்க?” – கண்ணன்.

“இந்த ஊர்ல கொரோனாவாலே உயிர் இழந்தவங்க ஜாஸ்த்தி. அந்தப் பட்டியல்ல சந்தியாவைச் சேர்க்க நான் விரும்பல. அவளுக்கு இந்தியாவிலே வேற ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க;”  தொடர்ந்தது மறுமுனை.

“என்ன சொல்றதுன்னே தெரியலையே மாப்பிள்ளை…” என்று சொல்லிவிட்டு, “ இவளுக்கு, அதுவும் இந்த நேரத்திலயா இந்த நோய் வரணும்? ஆண்டவா……” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டார் கண்ணன். அவரின் அடக்க முடியாத துயரம் பலவித எண்ணங்களாக வெளிப்பட்டது.

அந்த நேரத்தில், டாக்டர் ICU கதவைத் திறந்து  வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் கண்ணன் ஃபோனை கட் செய்து விட்டு, அவரருகே சென்றார். டாக்டர் நிதானமாக “அவள் நன்றாகக் குணமடைந்து வருகிறாள்.  பிளாஸ்மா சிகிச்சை அவளுக்கு நன்றாக உதவுகிறது. அடுத்த வாரம் வீடு திரும்பி விடுவாள். அவளுக்கு நீங்கள் கொடுத்த செல்ஃபோன் கொடுத்திருக்கிறோம். நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும், அந்த ஃபோனில் நீங்கள் கூப்பிட்டுப் பேசலாம். வீடியோ கால் கூடச் செய்யலாம்.” என்றார்.

கண்ணன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிற்று. டாக்டருக்கு நன்றி தெரிவித்து விட்டு, உடனடியாகச் சந்தியாவைக் கூப்பிட்டுப் பேசினார். 

பேச்சுக்கு நடுவே, தன்னைச் சமாளித்த வண்ணம் உண்மையை மகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், “சந்தியா, உனக்குப் பார்த்த மாப்பிள்ளை கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாம்மா” என்று மனதைத் தேற்றிக் கொண்டு சொல்லி முடித்தார்.

திடீரெனக் கேட்டவுடன், சற்று அதிர்ச்சியானாலும் உடனே சமாளித்துக் கொண்டு, “பரவாயில்ல அப்பா. எப்படி இருந்தாலும், உங்களுக்காகத்தான் நான் சரின்னு சொன்னேன். எனக்கும் இந்தக் கல்யாணத்துல இஷ்டமே இல்ல. வேற மாப்பிள்ளை பாருங்க…, உங்க ஃபேக்டரிய நல்லா நடத்த ஏத்த மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க. நாம இந்தியாவிலய இருந்துடலாம்” என்றாள்.

“இல்லம்மா இனிமேலும்  நான் மாப்பிள்ளை பார்க்கல. உனக்குப் பிடிச்ச மாதிரி, நீயே யாரைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்றியோ, அவரையே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார் கண்ணன்.

அதைக் கேட்டதும் சந்தியா மனக்கண் முன்னே, கோபால் வந்து நின்றான்.

————————————————–

 வெள்ளி இரவு  : 

“அப்பா……” என்று இருமிக் கொண்டே சந்தியா தன் வீட்டில், மாடியிலிருந்து படிகளில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள். 

“என்னம்மா சந்தியா? இன்ஹேலர் போட்டுக்க மறந்துட்டியா?”

“இல்லப்பா, அது போட்டுக்கூட இருமல் நிக்க மாட்டேங்குது. மூச்சு விடக் கஷ்டமா இருக்கு.”

இதைக் கேட்டவுடன் சமையலறையிருந்த வண்ணம் அம்மா “ஏங்க, எல்லாரும் பயமுறுத்தற மாதிரி அதுவா இருக்குமோ? டாக்டரைக் கூப்பிடுங்களேன். அவ கிட்ட அப்பவே சொன்னேன், வெளியே போகாதே போகாதேனு. தலையால அடிச்சிக்கிட்டேன்… என் பேச்சை யாரு கேக்கறா?” என்று தன் பதைபதைப்பைக் காட்டிக் கொண்டிருந்தார்.

“சந்தியா, இப்ப மாத்திரை போட்டுத் தூங்கு. காலையிலேயும் இருமல் குறையலன்னா டாக்டருக்குக் கால் செய்றேன்” என்று அப்பா சொன்னார்.

பயந்தபடியே, காலையிலும் இருமல் நிற்கவில்லை. கண்ணன் டாக்டரைக் கூப்பிட்டுக் கேட்டார். டாக்டர் “உடனே எமெர்ஜென்சிக்கு அழைச்சிட்டு வாங்க. ஆஸ்த்மா இருக்கறவங்க தாமதிக்கவே கூடாது.” என்று கூறினார். அவர் சொற்படி கண்ணனும் காரில் சந்தியாவை அழைத்துக் கொண்டு, கிளம்பினார். 

அப்பொழுது சந்தியாவுக்கு ஃபோன் வந்தது. “சொல்லுங்க, உங்களுக்கு நானே கால் பண்ணலாம்னு நெனச்சேன்” என்றாள். 

மறுமுனையில் பேசியது மாப்பிள்ளை. “எங்க போயிட்டே? நேத்து நைட் 3 மிஸ்ட் கால் குடுத்தேன். உடம்பு முடியலையா? இப்படி இருமுற ?” 

“தெரியல, இப்ப ஹாஸ்பிடல் போயிட்டே இருக்கோம். டாக்டரைப் பார்த்த பின்ன உங்களுக்குக் கால் பண்றேன்.”

“சரி” என்று கூறி உடனே ஃபோனை கட் செய்தான். முன்பெல்லாம் ஃபோனை வைக்காமல் மணிக் கணக்காகப் பேசியவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்று அவள் மனதில் சந்தேகம் எழுந்தது.

———————————————-

புதன் காலை: 

சந்தியா வியர்க்க விறுவிறுக்க ட்ரெட்மில் ஓடி, பின்னர் களைப்பு நீக்க, தண்ணீர் குடித்துக் கொண்டே உட்கார்ந்தாள். அவள் தன் கழுத்தில் இருந்த மாஸ்க்கைக் கழற்றிப் பக்கத்தில் வைத்துவிட்டு ஒரு டவலை எடுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். 

அவள் பக்கத்தில் ஒரு முப்பது வயது இளைஞன் வந்து அமர்ந்தான். அவனும் வியர்வை சொட்ட, மூச்சு வாங்கிக் கொண்டு அவளைப் பார்த்து “400 கலோரிஸ், நீங்க?”

அறிமுகமே இல்லாத ஒருவன் இப்படிக் கேட்பது சற்றுப் புதிதாகத் தான் இருந்தது. “250 கலோரிஸ் தான்”. சற்று அமைதியாகப் பதில் கூறியவளைப் பார்த்து,

“கவலைப் படாதீங்க. போட்டிக்காகக் கேக்கலை.” என்று நட்பான புன்னகை பூத்தான்.

“உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே?” என்றாள் சந்தியா. அவனைப் பார்த்தால் இளமையாக, அழகாக இருந்தாலும் ஜிம் போகிற மாதிரி அவளுக்குப் படவில்லை.

“இன்னைக்குத் தான் முதல் தடவை. ஒரு லட்சியத்துடன் சேர்ந்திருக்கிறேன்” என்று வானத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.  

“என்ன லட்சியம்?” என்றவளிடம்,

“ஒரு கம்பெனியைச் சொந்தமாக  நடத்தி, சாதிக்க வேண்டும்” என்று அநாயாசமாகச் சொன்னான்.

“அதுக்கும் ஜிம் வரதுக்கும் என்ன சம்மதம்?” என்று புரியாமல் கேட்டாள் சந்தியா.

“ஜிம் வந்தாதான் தொழிலதிபர்கள் காண்டாக்ட் கிடைக்கும். அப்பதான் அவங்க கிட்ட நான் என்னுடைய பொருட்களை விற்று லாபம் பார்க்க முடியும்” என்றான். “அது போகட்டும், உங்க பேரு சொல்லவே இல்லையே?”

“என் பேரு சந்தியா. உங்க பேரு ?”

“என் பேரு கோபால்” என்று கூறி அவளிடம் கை குலுக்கினான். அவன் எழுந்து போகும் பொழுது  சந்தியாவின் மாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அவளும் அதை உணராமல் அவனுடைய மாஸ்க்கை எடுத்துப் போட்டுக் கொண்டு வீடு செல்ல ஆயத்தமானாள்.

————————————————————————-

செவ்வாய் மதியம் :

கோபால் தொலைபேசி இளையராஜா பாட்டாக ஒலித்தது. அவன் எடுத்து “ஹலோ, சொல்லுங்க டாக்டர்.” என்றான்.

டாக்டர் “உனக்கு கரோனா வந்திருக்கறது உறுதி. ஆனா நீ அசிம்ப்டமெடிக். அதனால ஹாஸ்பிடல் போக வேண்டாம். ஆனா வீட்டுலே இருக்கணும். வெளிய போனா அது மத்தவங்களுக்கும் பரவிடும். வீட்டுலே 14 நாள் குவாரன்டைன் பண்ணி உக்காரு. உங்க ஆஃபிசுக்கு நான் கடுதாசி தரேன்.” என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.

“சரி டாக்டர். அப்படியே செய்றேன்” என்று சொல்லி ஃபோனை வைத்தான்.

தான் நினைத்தபடியே தனக்கு கொரோனா வந்ததை நினைத்து ஒரு சிறிய சந்தோஷம். இதற்குதான் அவன் மீன் மார்க்கெட் , காய்கறி மார்க்கெட் என நேற்று முழுக்க அலைந்து திரிந்து, அதற்குப்பின், பரிசோதனைக்குச் சென்றான்.

உடனடியாக செயலில் இறங்கிய அவன், ஃபோனை எடுத்து நம்பரை டயல் செய்தான்.

“ஹலோ கோல்ட் ஜிம்-மா? நான் மெம்பர் ஆகணும். அதுக்கு என்ன செய்யணும்?”

அந்தப் பக்கத்தில் இருந்து அவன் மெம்பர் ஆக என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புக்களைக் கூறினார்கள்.

“அப்படியே செஞ்சிடறேன். நாளைக்கே வந்து ட்ரையல் பார்க்கிறேன். பிடிச்சா மெம்பர் ஆகிடறேன்.” என்று சொல்லி ஃபோனை வைத்தான். அவன் வாங்கும் சம்பளத்திற்கு இந்த ஜிம் சரிப்பட்டு வராதுதான். வெறும் ட்ரையல் பார்த்து விட்டுவிடத் திட்டமிட்டிருந்தான்.

என்ன செய்வது, அவன் திட்டம் வெற்றிபெற இதனைச் செய்வது அவசியம் ஆயிற்றே.

————————————————————————————-

திங்கள் காலை :

 பத்து மணிக்கே கோபாலுடைய அப்பா வீடு திரும்பினார். அவர் முகத்தில் சோகம், மெல்லிய அழுகையும் கூடத் தெரிந்தது. அவரைப் பார்த்ததும் கோபாலுக்கு என்ன  நடந்ததென்று புரியவில்லை.

“என்ன அப்பா, வேலையிலிருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? உடம்புக்கு முடியலையா?” எனக் கேட்டான்.

“இல்லடா, முதலாளி இந்தக் கம்பெனிய விக்கப் போறாராம். சீனாலேருந்து யாரோ வாங்கி எல்லா வேலையையும் அந்த நாட்டுக்கே எடுத்துண்டு போகப் போறாங்களாம். அதுக்காக இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாரு.”

இதைக் கேட்டு கோபால் மனம் கலங்கினான். அவனுக்குத் தெரியும், இந்த வேலை அப்பாவுக்கு எவ்வளவு முக்கியம் என்று.

“ஏன் விக்கறாரு? நல்லா லாபத்துலதானே போகுது?” என்று கோபால் கேட்டான்.

“முதலாளி தன் மகளை அமெரிக்க மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்து அவளுடனே அங்கு செல்ல முடிவு செய்திருக்கிறாரு. அவர் மகளுக்கு ஆஸ்த்மாவாம். அதனாலே, அம்மா அப்பா கூடவே இருந்தா உதவியா இருக்கும் போல” எனப் பெருமூச்சுடன் சொன்னார்.

“யாரு, அந்த ஜிம் பார்ட்டிக்கா கல்யாணம்?”  என்று கோபால் கேட்டான்.

“என்னடா பார்ட்டி, கீர்ட்டுனு. அவ தாண்டா”. 

“அப்போ உங்க வேலை திரும்பிக் கிடைக்க அவள் கல்யாணம் நிக்கணும், அப்படித்தானே?”

அப்பா கோபத்துடன் “டேய், அப்படியெல்லாம் பேசாதடா. அவங்க நல்லா இருக்கட்டும்” 

-பிரபு

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad