Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கமலா ஹாரிஸ்

பொதுவாகவே அமெரிக்க அரசியலையும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் பல உலக நாடுகள் கவனித்து வருவதுண்டு.  அமெரிக்க அதிபர் தேர்தல் சமயங்களில் இது மேலும் பரபரப்படையும். இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல், உலக அரங்கில், குறிப்பாக ஆசிய, இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் இந்தியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இத்தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் அக்கட்சி முன்னிறுத்தியிருக்கும் வேட்பாளரான கமலா ஹாரிஸ். இக்கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோசப் பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸின் பெயர் அதிகப் புகழ்பெறத் துவங்கியுள்ளது. அரசியல் விமர்சகர்கள் திருமதி ஹாரிஸின் துணை அதிபர் பதவிக்கான பரிந்துரையை அமெரிக்க அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்கிறார்கள்.

அமெரிக்கத் தேர்தலில் இதற்கு முன்னர் ஜெரால்டின் ஃபெரேரோ (ஜனநாயகக் கட்சி – 1984), சாரா பேலின் (குடியரசுக் கட்சி-2008) எனும்  இரண்டு பெண்மணிகள் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர். அப்போதெல்லாம் எழாத பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் திருமதி ஹாரிஸுக்கு கிடைக்க காரணம் அவரது பெற்றோர்கள் மற்றும் அவர்களது கலாச்சாரப் பின்னணி.

கமலா ஹாரிஸின் குடும்பப் பின்புலம்

ஜமைக்காவில் பிறந்த டானல்ட் ஹாரிஸ், 1963 ஆம் ஆண்டு, பொருளாதாரத்தில் முனைவர் பட்டப்படிப்புக்காக அமெரிக்காவுக்கு வந்தவர். பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

1958 ஆம் ஆண்டு தனது 19வது வயதில், மனையியல் பட்ட மேற்படிப்புக்காக  கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர் சியாமளா கோபாலன். மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் புற்றுநோய் குறித்த ஆய்வகத்தில் பணியேற்று மார்பகப் புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை வெளியிட்டார். சென்னையைச் சார்ந்த இவரது குடும்பம் தந்தையின் பணி காரணமாகச் சில ஆண்டுகள் ஜாம்பியாவில் வாழ நேர்ந்தது. இதனால் அவருக்கு ஆப்ரிக்க இன மக்களின் அவலங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தது.

1960 களில் அமெரிக்காவில் புரையோடிக்கிடந்த நிற பாகுபாட்டையும், ஆப்பிரிக்கர்கள் மீதான அதிகார ஆளுமையையும் எதிர்த்து மார்டின் லூதர் கிங்கின் சமூக உரிமைகள் இயக்கம் வலுப்பெற துவங்கி ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியிருந்தன. அப்படிப் பட்ட போராட்டக் களமொன்றில் அறிமுகமாகி, காதலுற்று திருமணம் செய்து கொண்டார்கள் ஜமைக்கா வம்சாவளியினரான டானல்டும், இந்திய வம்சாவளியினரான சியாமளாவும். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் கமலா ஹாரிஸும், அவரது தங்கை மாயா ஹாரிஸும். குழந்தைகளாக இருந்த இவர்களைப் போராட்டக் களங்களுக்குத் தூக்கிச்சென்ற பெற்றோர்கள் தான் மனித உரிமை குறித்த விழிப்புணர்வை கமலாவுக்கும், மாயாவுக்கும் ஏற்படுத்தினர் என்றால் அது மிகையில்லை.

ஆரம்பக் கல்வியை பெர்க்லியில் துவங்கினார் கமலா. அவரது ஏழாவது வயதில்  பெற்றோர்கள் மணமுறிவை மேற்கொண்டதால், சியாமளா கனடாவுக்குப் பயணமானார். தனது உயர்க்கல்வியை மாண்ட்ரியல் மற்றும் குபெக்கில் முடித்த கமலா தனது இளநிலைப் பட்டப்படிப்பை வாஷிங்டன் டி.சி யிலிலுள்ள ஹோவர்ட் பல்கலையில் தொடர்ந்தார். இது அக்காலக்கட்டத்தில் நடுத்தர மற்றும் எளிய கறுப்பர் இனத்தவர்க்கான கல்லூரியாக அடையாளப்பட்டிருந்தது. இங்கு ஆல்பா கப்பா ஆல்பா சொரோரிட்டி (Alpha Kappa Alpha Sorority) எனும் பெண்கள் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கமலாவுக்கு கறுப்பின மக்கள் மீது நடைபெற்ற அடக்குமுறைகள் குறித்தான பின்புலம் விளங்கத் துவங்கியது. அது முதல் கறுப்பினத்தவரின் மனித உரிமையை நிலை நிறுத்தும் முயற்சியில் கமலாவின் குரல் ஒலிக்கத் துவங்கியது. பின்னர் சட்டப் படிப்புக்காக கலிபோர்னியா பல்கலையில் சேர்ந்தவர் கல்லூரி முடிந்ததும் சான் பிரான்சிஸ்கோவில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார்.

இந்தச் சமயத்தில் மனித உரிமை குறித்த பல வழக்குகளில் வாதிட்டார் கமலா. காவலதிகாரியை சுட்டுக் கொன்ற கறுப்பின இளைஞருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து வாதிட்ட வழக்கில் பெருமளவில் பிரபலமானார். ஸ்ட்ரைக் 3, ஜுவைனல் க்ரைம்ஸ் (சிறுவர் குற்றங்கள்) சீர்திருத்தங்கள் போன்ற வழக்குகள் இவரது சட்டத் திறனையும், நியாயங்களுக்காக அதிகாரத்துக்கு எதிராக போராடும் குணத்தையும் வெளிச்சமிட்டு காட்டியது. இவை 2007 ஆம் ஆண்டு மாவட்ட வழக்குரைஞராகவும், 2010 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தின் அரசு வழக்குரைஞராகவும் வளர உதவின. 2016 ஆண்டு தேர்தலில் மேலவை உறுப்பினர் (Senator) உறுப்பினராக களம் கண்டவர் குடியரசுக் கட்சியினர் எவரும் போட்டியிடாததால் தனது கட்சி வேட்பாளரான லோரேட்டா சாஞ்சஸ் என்பவரை எதிர்த்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக் கண்டார். இது கமலா ஹாரிஸின் நேரடி அரசியலுக்கு வாயிற்படியாக அமைந்தது.

திருமதி. ஹாரிஸின் பரந்துபட்ட அனுபவம், வாதிடும் திறன் போன்றவை அவரது துணை அதிபர் போட்டிக்கு ஓரளவுக்கு உதவக்கூடும். ஆனால் துணை அதிபராக உலக அரசியல் குறித்த முடிவுகளை எடுக்குமளவுக்கு முதிர்ச்சியுள்ளவரா கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸின் பலங்கள்

 1. இருவேறு கலாச்சாரப் பின்புலங்கள் கொண்ட கலப்பினப் பெண் என்பது இவரது பலம். கறுப்பினப் பெண் என்று இவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஆசிய, இந்திய வம்சாவளிப் பெண் என்பது பன்முகக் கலாச்சாரம் கொண்ட அமெரிக்க வாக்காளர்களிடம் இவரால் நெருக்கமேற்படுத்திக் கொள்ள உதவும். துணை அதிபர் பதவிக்காக ஏற்கனவே இருவர் போட்டியிட்டிருந்தாலும் மேலே சொன்ன காரணங்கள் கண்ணாடிக் கூரை (Glass Ceiling) எனும் பாலினத் தடைகளை உடைத்தெறியும் வாய்ப்பாக அமைய வாய்ப்புண்டு.

 

 1. நேரடியாக பிரச்சனைகளை அணுகும் இவரது துணிவும், கூர்மையான வாதிடும் திறனும் இவரது மற்றொரு பலம். அதிபர் ட்ரம்பின் இம்பீச்மென்ட் வாதங்களில் இவர் அதிகாரிகளை மிரளச் செய்தது பலரை ஆச்சரியப்படுத்தியது.

 

 1. உற்சாகம் ததும்பும் இவரது பேச்சாற்றல், வசீகரத்தன்மை, வயது ஆகியவை இளந்தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கிறது.

 

 1. தீவிர இடது சாரியாகவுமில்லாமல், அதிவேக முற்போக்கு வாதியாகவும் இல்லாமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பது ஒரு வகையான பலமே. முற்போக்குவாதியாக தன்னை அடைபாளப்படுத்திக் கொள்ள முடியாத நிலையிலிருக்கும் ஜோ பைடனுக்கு கமலாவின் கொள்கை நிலைப்பாடு துணை நிற்கும்.

 

 1. கறுப்பினத்தவர்கள் இவர் மீது கொண்டிருக்கும் அபிமானம் இன்னுமொரு முக்கிய காரணியாக அமைகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் ராப் இசைப் பாடகர் கான்யே வெஸ்ட் (கிம் கர்டாஷியனின் கணவர்) இருமுனை போட்டியை எதிர்த்து தானும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக சிறுபான்மையினரின் ஆதரவு ஜனநாயகக் கட்சியினருக்கு இருந்து வந்த நிலையில் அண்மைக் காலப் புள்ளி விவரங்கள் கறுப்பின மக்களின் நிலைப்பாடு மாறிவருவதை உணர்த்தியது. இதனை தடுத்து நிறுத்தும் பலம் கொண்டவராக கமலா எழக் கூடும்.

 

 1. அதே போல் அண்மைக் கால ‘ஹவ்டி மோடி’, ‘நமஸ்தே ட்ரம்ப்’ போன்ற நிகழ்வுகள் இந்திய வம்சாவளி வாக்காளர்களின் மனநிலையை அசைத்தன. கமலாவின் தாய்வழி பின்புலம் புதிய கோணத்தைக் கொணர்ந்துள்ளது.

 

 1. 2011 வங்கிகள் மோசடியை எதிர்த்துப் போராடி உடன்படிக்கை ஏற்படுத்தியதில் இவரது பங்கு எளிய மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது.

 

 1. அண்மையில் ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்தை குறிப்பாகப் போலிசாரின் நிறவெறி தாக்குதல்களை எதிர்த்து அழுத்தமாகப் கருத்துப் பதிந்ததில் சமூகப் பிரச்சனைகள் குறித்த இவரது நிலைப்பாட்டை தெளிவாக்கியது.

 

கமலா ஹாரிஸின் பலவீனங்கள்

 1. பல்வேறு நிலைகளில் பணியாற்றிய கமலா சில சமயங்களில் முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார். பிள்ளைகளின் தவறுகளுக்குப் பெற்றோரை தண்டிப்பது என்ற இவரது கொள்கை பல்வேறு எதிர்ப்புகளைக் கிளப்பியது. மரண தண்டனைக்கு எதிரான கொள்கைப் பிடிப்பைச் சில நேரங்களில் தளர்த்தி இவரும் அரசியல் லாபங்கள் எதிர்பார்க்கும் சுயநலவாதியோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது.

 

 1. இவரது அதிதீவிர கறுப்பின கொள்கைகள் பெரும்பான்மை வாக்காளர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யக் கூடும்.

 

 1. காவல்துறையினர் மீது இவர் கொண்டிருந்த கொள்கைகள் அவ்வப்போது மாறி வந்தன.

 

 1. கத்தோலிக்க பாதிரிகளின் பாலின வழக்குகளை கண்டும் காணாமல் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது.

 

 1. கலிபோர்னியா மாநில போதைமருந்து கடத்தல் விவகாரத்தில் பல ஆவணங்களை மறைத்ததாக இவர் மீது புகாரும் உள்ளது.

 

 1. நாட்டின் இதர மாநில அரசியல் குறித்த இவரது பார்வை போதுமானதாக இல்லாததே இவரது அதிபர் போட்டியிலிருந்து வெளியேற காரணமாகயிருந்தது. அது துணை அதிபர் எனும் நிலையையும் பாதிக்கக்கூடும்.

 

அவரது கடந்த கால அனுபவங்கள் இப்படிப் பல சாதகப் பாதகங்களைக் கொண்டு வந்தாலும் அடுத்த இரண்டு மாதங்களில் அவர் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது வெற்றி அமையும்.

வழக்கமாக, தனிமனித தாக்குதல் நடத்தி எதிராளியை உசுப்பேற்றி விடுபவர் அதிபர் ட்ரம்ப். அவரைக் கையாள்வதற்கு பொறுமையும், தனி லாவகமும் வேண்டும். சரியான பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் ஒரு வேளை இந்த முறை நழுவினாலும் வருங்காலங்களில் தன்னை வலுவுள்ளவராக நிறுத்திக்கொள்ள கமலா ஹாரிஸுக்கு உதவும்.

    ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad