\n"; } ?>
Top Ad
banner ad

தெய்வமும் மனிதனாகலாம்

சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையைத் தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும், எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது.

மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து மறைந்துவிட வேண்டுமென்ற எண்ணம் மேலிட நடையின் வேகமும் கூடியது. ஒரு அரை மைல் தூரம் நடந்து திரும்பிப் பார்த்தேன்.மண் திட்டுக்களிலும்,ஆங்காங்கே இருந்த சிறு பற்றைக் காடுகளிலும் இராணுவ முன்னரங்கு மறைந்துபோயிருந்தது.                        அதிலிருந்து பார்க்கும்போது புலிகளின்     சோதனைச் சாவடி தெளிவாகத் தெரிந்தது.சோதனைச் சாவடியில் பிரயாணிகளின் விபரங்களை பதிவு செய்துவிட்டு பொருட்களைச்  சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சிவில் உடையில்நின்ற ஒரு இளைஞன்.என்னுடைய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்துவிட்டு ஒரு அறையைக்காட்டி அங்கு போகச் சொன்னான்.

நான் அறை வாசலுக்குப் போனதும் உள்ளே இருந்த புலிகளின் சீருடை அணிந்த ஓர் இளைஞன புன்சிரிப்புடன் “அக்கா இருங்கோ “ என்று முன்னாலிருந்த கதிரையைக் காட்டினான். வெயிலுக்குள்ளால் வந்து நிழலில் இருந்ததும் வியர்க்கத் தொடங்கியது. கைப்பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தைத் அடைத்துக்கொண்டேன்.

“அக்கா, உங்கட பெயர்” “கவிதா சிவானந்தன்”சொன்னேன்.

“ஏன் வன்னிக்குப் போறியள்” “ஒட்டுசுட்டான்தான் என்ர சொந்த இடம்  அம்மாவும்,தம்பியும் ஊரில இருக்கினம்…” என்று சொல்லி முடிப்பதற்குள் “எப்ப யாழ்ப்பாணம் போனீங்கள்”அடுத்த கேள்வி வந்தது.

“2000 ஆம் ஆண்டு கம்பஸ் கிடைச்சுப் போனனான் பதைப்பிரச்சனையால நாலு வருஷம் ஊருக்குப் போகேல்லை.இப்ப ஆனையிறவுப் பாதை திறந்ததால போயிட்டு வரலாமென்று வெளிக்கிட்டனான்.” மீண்டும் முகத்தை துடைத்துக்கொண்டேன்.

“அப்பா என்ன செய்யிறார்?” பேசமுடியவில்லை.கண்கள் கலங்கியருந்ததை அவன் பார்ததிருக்க வேண்டும்.சிறிது நேர மெளனம்; “ஏழு வருஷத்திற்கு முந்தி ஷெல் தாக்குதல் ஓன்றில இறந்திட்டார்.”குரல் தழுதழுத்தது. முட்டி நின்ற கண்ணீர்உடைப்பெடுத்தது. “அக்கா வருத்தப்படாதேங்கோ. என்னுடைய அனுதாபங்கள்.”என்றான். “நன்றி’ என்றேன்; குரல் வர மறுத்தது.

”என்ன படிக்கிறியள்”சில வினாடி மெளனம் கலைத்துக் கேட்டான். “மெடிசின் செய்யிறன்” “வாழ்த்துக்கள் அக்கா,கவனமாய் படியுங்கோ.. சரி நீங்க போட்டு வாங்கோ”என்று விசாரணையை முடித்துக் கொண்டான். மீண்டும் ஒரு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன்.சற்றுத் தள்ளி நான்கு பஸ்கள் வரிசையாய் நின்றன. “பாண்டியன் போக்குவரத்துக் கழகம்” பார்க்கும்போது இன்னொரு நாட்டுக்கு வந்த உணர்வே ஏற்பட்டது.

பஸ்ஸில் பெரிதாக கூட்டமில்லை. ஏறி காலியாயிருந்த ஒரு சீற்றில் கைப்பையை வைத்துவிட்டு அதற்குள் இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்துக்கொண்டு திரும்பவும் கீழே இறங்கினேன். இரண்டு மிடறு தண்ணீரைக் குடித்து, முகத்தையும் சற்றுக் கழுவியதும் களைப்பு மாறி உடல் தெம்பாக இருந்தது. சீற்றில் யன்னலோரமாய் இருந்து பாக்கில் இருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்தேன். ஏறக்குறைய ஐந்து, ஆறு தடவை வாசித்து அது மனப்பாடமே ஆகிவிட்டது. “அன்புள்ள மருமகள் கவிதாவுக்கு, சில முக்கியமான விஷயங்கள் பற்றிப் பேசவேண்டுமென்று வந்தேன். அனேகமாக வகுப்பு முடிய 5.00 மணியாகுமென்று உனது அறையில் இருந்த பிள்ளைகள் சொன்னார்கள்.நான் அவசரமாகப் போகவேண்டி இருந்ததால் உடனே திரும்புகிறேன். நீ நாளை லீவு நாள் தானே காலையில் புறப்பட்டு வா. ஒரு மூன்று நாளாவது நிற்கக் கூடிய ஒழுங்கில் வந்தால் நல்லது. எல்லாம் நேரிலே பேசலாம். மாமா, கணேசன்.

கணேசன் மாமா எனது அம்மாவின் சொந்த அண்ணன். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அடுத்தது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இறக்கும்போது அப்பாவுக்கு நாற்பது வயதுதான்.அம்மாவுக்கு முப்பத்தி ஏழு. நான்தான் மூத்த பிள்ளை; எனக்குப் பன்னிரெண்டு வயது; எட்டு வயதில் ஒரு தம்பி. இந்தப் பிள்ளைகளை எப்படி வளர்த்தெடுக்கப் போகிறேன் என்று அம்மாவுக்கு இருந்த  எதிர்காலம் பற்றிய பயங்கரத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவமோ,தெளிவோ அப்போது எனக்கு இருக்கவில்லை.

செத்த வீட்டுக்கு வந்த அப்பாவின் உறவினர்கள் “சிவாவே இல்லை எனி எங்களுக்கு இங்கே என்ன வேலை” என்கிற மாதிரி நடந்து கொண்டது மாமாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். சிவானந்தன் என்ற அப்பாவின் பெயர் “சிவா” என்றே பிரபலமாகிவிட்டது. எல்லாவற்றையும் .அவதானித்துக்கொணடிருந்த மாமா  எழும்பி வந்து அருகில் நின்ற என்னைக் கையோடு அணைத்துக்கொண்டு “தம்பி ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற தகப்பனுக்கு அல்லது கூடப்பிறந்த சகோதரனுக்கு அதுகளை கலியாணம் கட்டிக் குடுத்தாலும் அண்டையோட பிரச்சனை முடிஞ்சுது என்று இருக்கேலாது. அப்பு இல்லாதபடியால் எனி அவயின்ர பிரச்சனை என்னுடைய பிரச்சனைதான். உங்கட கடமைகளை முடிச்சுக்கொண்டு நீங்கள் போகலாம்.அது எல்லாம் நான் பாத்துக்கொள்ளிறன்” என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

மாமாவுக்கு கலா என்ற ஒரு பெண்ணும்,செந்தூரன் என்கிற ஒரு மகனும் மட்டும்தான். இருவரையம் நான்உறவு முறை சொல்லி அழைப்பதில்லை. கலாக்கா எண்டு சொல்லுவன்; செந்தூரன் என்னைவிட மூன்று வயது அதிகமாயருந்தாலும் சின்ன வயதிலிருந்து பெயர் சொல்லிக் கூப்பிட்டே பழகிவிட்டது. உயர்தரம் படித்துக்கோண்டிருக்கும்போதே கலாக்காவுக்கு கனடாவிலேயிருந்து ஒரு சம்மந்தம் வந்தது. மாமாவுக்குபெரிதாய் விருப்பமில்லை. அம்மாவின் படிப்பை நிறுத்தி கலியாணம் கட்டிவைத்தது மாமாவுக்கு இப்பவும் கவலை.

ஆனால் நாட்டிலே நடைபெறும் யுத்தம் தினமும் பயந்து, பயந்து வாழும் அவலம் இதை நினைத்து இந்த திருமணத்திற்கு அவரும் ஒத்துக்கொண்டார்.திருமணம் முடிந்து ஒரு வருஷத்தில் கலாக்காவும் கனடா போய் நிரந்தரமாய்விட்டா. பல்கலைக் கழக புகுமுக தேர்வுஎழுதிவிட்டு முடிவுக்கு காத்திருந்த செந்தூரன் மாமாவுக்கு உதவியாய் இருந்தான்,. ஊரிலே உள்ள மாணவர்களுக்கு விஞ்ஞானப் பாடங்கள் படிக்க வீட்டில் வைத்து இலவச வகுப்புக்களையும் நடத்தினான். கிராம அபிவிருத்தி, கோவில் திருப்பணி என்று ஊர் முன்னேற்த்தில் அக்கறையோடு பாடுபட்டான். எல்லா நாட்களைப் போலத்தான்  அன்றும் விடிந்தது. ஊரிலே எல்லாம் வளமைபோல நடந்துகொண்டிருந்தது. மாலை 5.00 மணிக்குச் செந்தூரனைத் தேடி படிக்கிற பிள்ளைகள் வந்துவிட்டார்கள். செந்தூரனைக் காணவில்லை.

மாமா அவன் போகக்கூடிய இடமெல்லாம் தேடியும் ஆள் இல்லை. கடந்த சில நாட்களாக அவனுடைய நடவடிக்கைகள் வித்யாசமாயிருந்தது. தனக்கிருந்த சந்தேகத்தைப் புலிகளின் அலுவலகத்தில் போய் விசாரித்தபோது “அவன் இயக்கத்துக்குப் போய்விட்டான்”என்பது  உறுதியாகிவிட்டது. புலிகள் இயக்கத்தோடு போராட்டத்தில் இணைபவர்களை இயக்கத்துக்குப் போவது என்றுதான் எமது ஊர்களி ல்சொல்லுவார்கள்.

செய்தி அம்மாவின் காதுவரை வந்துவிட்டது. அம்மா சத்தம் போட்டு அழத்தொடங்கிவிட்டா. நடந்து போகக்கூடிய தூரத்திலேதான் மாமாக்களின் வீடு இருந்தது. திடீரென்று அம்மா மாமா வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டா. நானும் கூடவே புறப்பட்டுவிட்டேன். காணவில்லை என்று அறிந்து ஊரே கூடி நின்றது.இயக்கத்துக்குப் போனது என்று அறிந்ததும் சமாதானம் சொல்லிவிட்டு ஒவ்வொருவராய் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அம்மாவைக் கண்டதும் அத்தை கட்டிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டா.

“ஏன் இப்ப அழுறியள்” மாமா அதட்டினார். “அழக்கூடாது பிள்ளை;அது அவனுக்குக் கூடாது” ஒரு பெரியவர் சொல்லி சமாதானப்படுத்தினார். செந்தூரனைப் பற்றி எனக்கு எந்த எண்ணமும் இருந்ததில்லை. ஆனால் அன்று இரவு கண்விழித்த நேரமெல்லாம் அழுதேன். ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்விலிருந்து மீண்டுவர வெகு நாள் எடுத்தது.

“ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடி” நடத்துனரின் குரல் என் நினைவுகளை அறுத்து நிஜத்திற்குக் கொண்டுவந்தது. கைப்பையை எடுத்துக்கொண்டு அவசரமாய்க் கீழே இறங்கினேன். சிவன் கோவிலை நோக்கி மார்பிலே கையை வைத்து மனசுக்குள் வேண்டிக்கொண்டேன். யாராவது வந்திருப்பார்கள் என்று தேடினேன். கோவில் வீதிவளியாய் மோட்டார்சைக்கிளில் வருவது தம்பி புவிபோல் இருந்தது.

கிட்டவந்து சைக்கிளை நிறுத்திவிட்டு “அக்கா”என்று வாய் நிறைய சிரித்தான். நாலு வருஷம்; வளர்ந்து வடிவாய் வந்திட்டான். சொல்லவில்லை மனதுக்குள் ரசித்துக் கொண்டேன்.

“அக்கா உந்த பள்ளிக்கூடத்தில பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடக்குது அதுக்கு செந்தூரன் அத்தான் வாறாராம்,. அதை முடிச்சுக்கொண்டு வீட்டை வந்து மூன்று நாள் நிப்பாரெண்டு அத்தை சொன்னவா.அதுதான் வந்திருக்கிறாரோ என்று பார்க்கப் போனனான். பஸ் வந்தாப்போல திரும்பி வந்திட்டன்”படபடவென்று சொல்லிக்கொண்டே போனான்.எனக்கும் ஒருதடவை பார்க்க மனசு பரபரத்தது.

அதை வெளிக்காட்டாமலே “ஏன் நீ பாக்கப்போறியோ” என்று கிட்ட நின்று முதுகிலே தடவியவாறே கேட்டேன். “ஓமக்கா,பாத்திட்டுப் போவம்” கெச்சுவதுபோலப் பார்த்தான். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக விளையாடிய நாட்களெல்லாம் கண்முன்னே வந்து போயின. பாடசாலையில் தோழிகள் அத்தான் வாறாரெண்டு கிண்டல் செய்யும்போதெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொண்டு கடந்துபோன நாட்கள் எவ்வளவு இனிமையானவை.

பாடசாலைக்கு முன்பாக சைக்கிளை நிறுத்திவிட்டு நான் முன்னே போக பின்னாலே வந்துகொண்டிருந்தான்புவி. உள்ளே போகாமல் மண்டப வாசலிலே நின்று உள்ளே பார்த்தேன்.மக்கள் நிறையக் கூடியிருந்தனர்.மேடையிலே உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வேறும் சில தளபதிகள் இருந்தார்கள்.

“அக்கா, இப்ப பேசுகிறவர் ‘நிலவன்’ என்ற தளபதியாம்” என்றபடி பக்கத்திலே வந்து நின்றான புவி. அந்தக் குரல் எங்கேயோ கேட்ட குரல்போலிருந்தது. அந்தப் பேச்சு காதுக்குள் இறங்கி மனசுக்குள் இனம்புரியாத உணர்வுகளை விதைத்தது. எந்தத் தடங்கலும் இல்லாமல் மலையிலிருந்து அருவி கொட்டுவதுபோல் அவன் வாயிலிருந்து தமிழ் தெறித்துச் சிதறியது. லெனின், மாவோ சேதுங், லீக்கவான்யூ, பிடல்காஸ்ட்றோ, சுபாஸ்சந்திரபோஸ், ஆபிரகாம்லிங்கன் போன்ற உலகத் தலைவர்கள்; உலக வல்லரசுகளால் அடக்கி ஆளப்பட்ட நாடுகளின் பெயர்களை யெல்லாம் தனது பேச்சுக்குள் கொண்டுவந்து பார்வையாளரைக் கட்டிப்போட்டிருந்தான். அந்தக் குரல் மட்டுமல்ல, முகமும் கலர் மங்கிய புகைப்படம்போல் நினைவுபடுத்த முடியாமலிருந்தது.எனக்குப் பின்னால் நின்றவர்களிடையே சிறிது சலசலப்பு.

“டேய் உது கணேசண்ணையின்ர செந்தூரன். இயக்கப் பெயர்தான் நிலவன்”அவர்கள்  பேசியதுதெளிவாய் கேட்டது. அதிர்ச்சிபாயாயிருந்தது. மாணவனாக ஐந்து வருஷத்துக்கு முதல் பார்த்த செந்தூரன்,நிலவனாய் ஒரு ஆண்மையுள்ள ஆடவனாய் கண் முன்னே பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளைச் சொல்ல எழும் வார்த்தைகளை தடுத்து கண்ணீர் முந்திக்கொண்டது.

பேச்சை முடித்து அவன் வணக்கம் சொன்னபோதும் கூட்டம் சலனமில்லாமல் அப்படிய உறைந்துபோயிருந்தது. மேடையிலிருந்தவர்களுக்குக் கைகொடுந்த்து விடைபெற்று கீழே இறங்கி வெளியேறுவதற்காக நான்நிற்கும் வாசலை நோக்கிநடந்து வந்தான். பாதுகாப்பிற்கு இரண்டு போராளிகள் கூடவே வந்தனர்.புலிகளின் சீருடையில் இன்னும் கம்பீரமாய் இருந்தான். இடுப்பிலே அணிந்திருந்த பிஷ்டல் அவனின் தரநிலையை வெளிப்படுத்தியது. வளிவிட்டு சற்று ஒதுங்கி நின்றேன். என்னைக் கவனிக்கவில்லை. கடந்து போய்க்கொண்டிருந்தான்.

“செந்தூரன” எனது கட்டுப்பாட்டை மீறி குரல் வெளியே வந்தது. அவனும் இதை எதிர் பார்த்திருக்க மாட்டான் என்று தோன்றியது. அதுவும் பெண்குரல்.நடையை நிறுத்தித் திரும்பிப் பார்த்தான்.அழுகையைக் கட்டுப்படுத்த இரண்டு கைகளாலும் வாயோடு மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டேன்.. என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையென்று தோன்றியது. முகம் மறைத்த கையைச் சற்று விலக்கியதும் “கவிதா,எதிர்பார்க்கவேயில்லை. எப்ப வந்தனீங்கள்” எப்பவும், நீ, நான் என்று உரிமை எடுத்துப் பேசும் செந்தூரன் பன்மையில் பேசியது எனக்கு ஏமாற்றமாயிருந்தது. கண்கலங்கி உடல் நடுங்கியது.பக்கத்தில் நின்ற  தம்பியின் தோளை இறுகப் பற்றிக்கொண்டேன். கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது.பேசுவதற்கு வார்த்தைகள் வர மறுத்தன.

“கவிதா! கவிதா தயவு செய்து அழுறதை நிப்பாட்டுங்கோ. சரி, நீங்கள் இப்ப கதைக்கற நிலையில இல்லை. நான் வீட்டபோட்டு இரவு ஒரு 7.00 மணிபோல வாறன்.உங்களோட நிறையக் கதைக்கவேணும்.” புவியைத் தோளிலே தடவிக்கொண்டு “அக்காவைக் கவனமாய் கூட்டிக்கொண்டுபோ”என்று பிக்கப்பிலே ஏறிக்கொண்டான்.

மோட்டார் சைக்கிளை கொண்டுவந்த அருகே நிறத்திய புவி “அக்கா ஏறுங்கோ” என்றதும் சுயநினைவுக்கு மீண்டேன் . போரினால் பராமரிப்பின்றி சிதிலமடைந்த பாதைவளியே புவி நிதானமாக சைக்கிளைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

“அம்மா எப்பிடி இருக்கிறா?” மௌனத்தைக் கலைத்துக் கேட்டேன். “கொஞ்சநாளாய் அவவின்ரபோக்கே வித்தியாசமாய் இருக்கு; ஒரே யோசினை, சாப்பாட்டைக் கவனிக்கிறேல்லை; ஒழுங்காய் நித்திரை கொள்ளுற மாதிரியம் இல்லை.கேட்டாலும் ஒண்டும் சொல்லுறாவில்லை. நீயே வந்து கேள்”

முறைப்பாடுபோல சொல்லி முடித்தான். வீடும் வந்துவிட்டது. என்னைக் ’கேற்’றில் இறக்கிவிட்டு உள்ளே போய் முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு “அம்மா ஆர் வந்திருக்கிறது பாரன்” தம்பியின் குரல் கேட்டு அம்மா வெளியில் வந்தா. அம்மாவின் கோலம், தம்பி சொன்னது அப்பிடியே உண்மைஎன்று புரிந்தது. ஓடிவந்து இறுகத் தழுவிக்கொண்டு அழுதா, சிரித்தா, சிரித்துக்கொண்டே அழுதா. நாலு வருஷம் அடக்கி வைத்த அன்பை பகிர முடியாமல் தடுமாறினா. அதே நிலைதான் எனக்கும். “என்னம்மா உங்கட கோலம்”கரிசனையாய்க் கேட்டேன். “எனக்கொண்டும் இல்லை.நான் நல்லாய்த்தான் இருக்கிறன்,நீ என்ன இப்பிடி மெலிஞ்சுபோனாய்.”

“இல்லையம்மா நான் வளர்ந்திருக்கிறது உங்ளுக்கு மெலிஞ்சமாதிரித் தெரியுது”என்றதும் அவவின் முகம் மலர்ந்துபோனது.  இரவு .சாப்பாட்டை முடித்தவுடன் அம்மாவைக் கூப்பிட்டு அருகில் இருத்தி தோளில் சாய்ந்துகொண்டேன். “என்னம்மா, மாமாவுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனையே? ஏன் இப்ப அவசரமாய் வரச்சொன்னவர்?” அம்மா மௌனமாயிருந்தா. மகிழ்ச்சியாய் இருந்த முகம் மாறிப்போயிருந்தது. புவி சொன்னதில் உண்மை இருப்பது போலவே தெரிந்தது.

“இதை என்னெண்டு உனக்கு சொல்லுறதெண்டு எனக்குத் தெரியேல்லை. இதை நீ என்ன மாதிரி எடுப்பாய் எண்டும் பயமாயிருக்கு”அம்மா மூக்கை இழுத்துக்கொண்டா. “அம்மா,நான் இன்னும் சின்னப் பிள்ளையில்லை . எங்கடை பிரச்சனைகளை கூடியவரை நாங்கள் தீர்க்கப் பார்க்கவேணும். ஏலாட்டி அடுத்தக் கட்டத்தைப் பிறகு யோசிக்கலாம்”தைரியப்படுத்தினேன்.

“இல்லை பிள்ளை,  அண்ணேன்ர சில நடவடிக்கையள் எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு.. போனமாதம் வவுனியா வந்து உன்னோட போன் கதைக்கேக்கையும் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. சரியாய்த் தெரியாமல்,உன்னைக் குளப்பக்கூடாது என்று நான் எதுவும் சொல்லயில்லை.”

“அம்மா,என்ன சோல்லுறியள்”சற்று கோபமாகவே கேட்டேன். “கோபப்படாமல் கொஞ்சம் பொறுமையாய்க் கேள் பிள்ளை, இரண்டு மாதத்துக்கு முதல் அண்ணை வந்து கவிதாவுக்கு வியாழ மாற்றம் எப்பிடிஇருக்கு பாப்பம் என்று உன்ர குறிப்பை வங்கிக்கொண்டு போனவர்.பார்த்தால் நல்லதுதனே என்று நானும் குடுத்திட்டன்.நடக்கிறதுகளைப் பார்த்தால் ஏதோ நோக்கத்தோடதான் அண்ணை எல்லாம் செய்யிறாரோ என்று சந்தேகமாயிருக்கு.இப்ப கலாவும் கனடாவில இருந்து வந்து நிக்குது..நேற்று வந்தவர் .

தங்களுக்கு கனடா போக விசா எல்லாம் அனேகமாய் சரி வந்திட்டுது. இப்ப உங்களைப்பற்றித்தான்ஒரே யோசினயாயிருக்கு.. கவிதாவுக்கு ஒரு கலியாணம் செய்து வைச்சாலென்ன எண்டு யோசிக்கிறன்.எங்களுக்கு வேற ஆர் கதைக்கிறது.நாங்கள் இரண்டு குடும்பமும் கதைச்சுத்தான் ஒரு நல்ல முடிவுக்கு வரவேணும்..கலா வந்து நிக்கிறாள், செந்தூரன் நாளைக்கு வருவான்,கவிதாவை வரச்சொல்லியிருக்கிறன் அவளும் வருவாள். இப்பிடி ஒரு சந்தர்ப்பம் இனி வராது. கதைச்சு ஒரு முடிவு எடுப்பம்.” எண்டு சொல்லிப்போட்டு போயிருக்கிறார். இப்ப எட்டு மணிக்கு எல்லாரும் வருவினம்”அம்மா பதட்டத்துடன் இருந்தா. திரும்புவும் மூக்கை உறிஞ்சிக்கொண்டு கலங்கியிருந்த கண்களை துடைத்துக்கொண்டா.

“அம்மா, படிச்சு முடிச்சு வேலை கிடைக்காமல் நான் கலியாணம் செய்யிறது இல்லை. இதில நான் தெளிவாயிருக்கிறன்.இப்ப நீங்கள்தான் என்னைக் குளப்பிறியள்..இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்.” கோபமாய்த்தான் கேட்டேன்.

“பிள்ளை,அண்ணை ஆறு மாதத்துக்குள்ள உனக்கு ஒரு கலியாணம் செய்து வைச்சுட்டுப் போகவேணுமெண்டு சொல்லிறார். இப்ப ஒரு கலியாணம் செய்துவைக்கற நிலையில நாங்களும் இல்லை.அவரும் பெரிதாய் உதவுற நிலமையிலயும்இல்லை. செந்தூரனையம்,உன்னையும் சேர்த்து வைகிறதுதான். அவற்ற  திட்டம்போல இருக்குது. எங்கட பாதுகாப்பை விட அவைக்கு செந்தூரனை தனிய விட்டுட்டுப் போறதுதான் பிரச்சனை.

இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டன்.”அம்மாவின் அணைப்பிலிருந்து விலகி அவவின் முகத்தைப் பார்த்தேன். ஒருகையால் நெற்றியை அழுத்தியபடி நிலத்தைப் பார்த்தபடி இருந்தா. “அம்மா,நீங்களாய் ஒன்றைக் கற்பனை பண்ணி யோசிச்சு வருத்தமெடுக்காமல் அமைதியாய் இருங்கோ. வரட்டும்பேசுவம்” அம்மாவைச் சமாதானப்படுத்த இதைச் சொன்னாலும், அவ நினைப்பதில் உண்மை இருக்குமோ என்கிற சந்தேகத்தைப் புறந்தள்ள முடியவில்லை.” முக்கியமான விஷயம் பேசவேண்டும்” என்று மாமா குறிப்பிட்டது, ”உங்களோட நிறையப் பேசவேண்டும்” என்று செந்தூரன்சொன்னது எல்லாம் குளப்பமாயே இருந்தது.

“பிள்ளை, கலியாணம் எண்டிறது ஒரு சொல்லில்லை.’ எடுத்தேன் கவிழ்த்தேன் ,எண்டு செய்துபோட்டுப் போகிறதுக்கு. இது உன்ர வாழ்க்கை. இதில எந்த விட்டுக் குடுப்புக்கும் இடமில்லை. அப்பா இல்லாமல் நான் எல்லாம் பட்டிட்டன். அவர் இல்லாமல் நான் பட்ட கஷ்டங்கள், வேதனைகள், அவமானங்கள் எனக்குத்தான் தெரியும். பிரச்சனைகளை நான் உன்னோடைதான் பகிரந்து கொள்ளலாம். உன்னோட பகிரேலாத எத்தினை பிரச்சனைகளை நான் மனதுக்க வைச்சுக் குமைஞ்சுகொண்டிருக்கிறன் எண்டு ஆருக்குத் தெரியம். நான் பட்ட கஷ்டம் என்ர பிள்ளைக்கு வரக்கூடாது.”அம்மாவின் கண்கள் கலங்கியிருந்தது. அனுபவத்தில் அவ பெற்ற தெளிவுகளுக்கு என்னிடம் பதிலில்லை.

“அம்மா, மாமாவின்ர ஆதரவு இல்லாட்டி நாங்கள் காணமலே போயிருப்பம். அத்தையும் ஒத்துப் போறதால அவரும் உதவுறார். என்ர படிப்பில எல்லாம் அவற்ற பங்களிப்பு நிறைய இருக்கு. இது கடன் இல்லை கடமை. கடனை உழைத்துக் கட்டலாம். நன்றிக் கடனை அடைக்க சந்தர்ப்பம் எல்லாருக்கும் வராது. அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளுறது தான் தெய்வநீதி.” அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.அந்த உணர்வுகள் கோபமா, இயலாமையா புரிந்துகொள்ள முடியவில்லை.

“என்னடி சொல்லுறாய்” ”மாமாவுக்கு அப்பிடி ஒரு எண்ணம் இருக்குமெண்டு நான் நம்பேல்லை; அப்பிடி அவருக்கு ஓரு எண்ணமிருந்தாலும் செந்தூரன் இதுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான். அவன்ர பாதை,இலக்கு எல்லாம் வேறை. இது எல்லாத்தையும் தாண்டி ஒரு கேள்வி  வந்தால் நான் அதை மறுக்கமாட்டன் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுவன்”  அம்மா ஒரு கையால் நாடியைத் தாங்கி என்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தா. வெளியே மோட்டார் சைக்கிள் சத்தம்  கேட்டது. வெளியே நின்ற புவி ஓடிவந்து “அம்மா,அத்தான் வாறார் “என்று மெதுவாகச் சொன்னான். அம்மா என்ன நிலை எடுப்பாவோ என்று பயமாயிருந்தது.பாதுகாப்புக்கு வந்த போராளி வெளியே நிற்க செந்தூரன் நடந்து வந்துகொண்டிருந்தான். அம்மா ஓடிப்போய் இறுககட்டிக்கொண்டு இரண்டு கன்னத்திலும் மாறிமாறி முத்தம் கொடுத்தா. முதுகை தடவிக்கொடுத்தாள். முடியைக் கோதிவிட்டா.

“நான் தூக்கி வளர்த்த பிள்ளை.திரும்ப ஒருக்கால் பாக்கோணும் எண்டு கடவுளைக் கும்பிட்ட பலன்”வாய் நிறைய சிரிப்பு;வடிந்த கண்ணீரைக் கைகளால் துடைத்தா..கையல் அணைத்தபடியே உள்ளே கூட்டி வந்து நிறைய பேசினா.

செந்தூரனும்” மாமி,மாமி” என்றுபாசத்தைக் கொட்டினான்.

“பிள்ளையோட கதை தம்பி;நான் ரீ போட்டுக்கொண்டுவாறன்” என்று சொல்லியபடி  அம்மா குசினிக்கள் நுளைந்தா. இவவைக் கணக்கெடுக்கவே முடியவில்லை.அம்மா விலகியதும் வெளியே நின்ற நான் உள்ளே வந்தேன்.

“டாக்ரர் அம்மா வாங்கோ”என்றான்.அது கிண்டலல்ல”

அவன் கண்களில் ஒரு பெருமிதம் தெரிந்தது. “இருங்கோ”முன்னால் இருந்த கதிரையைக் காட்டினான்.  இருவருக்குமிடையல் நாலு அடி தூரம்தான்.வயசுக்கு வந்தபின் இவ்வளவு கிட்ட இருந்து நான் பேசியது இல்லை.

“எப்பிடி இருக்கிறியள்”அவன்தான் பேசினான். அழக்கூடாது என்றுதான் நினைத்தேன் முடியவில்லை. கோபத்தை அடக்கிக்கொண்டேன். “நான் நிலவனை மதிக்கிறன்; ஆனால் ஐந்து வருஷத்திற்கு முதல் இருந்த என்ர செந்தூரனோட கதைக்கத்தான் விரும்பிறன்” நாக்கைக் கடித்துக் கொண்டேன் “என்ர” என்ற அழுத்தம் நான் நினைக்காமலே வந்துவிட்டது. என்னைச் சமாதானப் படுத்திவிட்டு தொடர்ந்து பேசினான். ஒருமையில் விழித்து இருவருமே

நீண்ட நேரம் பேசினோம்.’ நிறையப் பேசவேணும்’ என்று சொன்ன வட்டத்துக்குள் இன்னும் வரவில்லையோ என்ற ஏக்கம் மனசுக்குள் உறுத்தியது. ஏதோ புரியாத எதிர்பார்ப்பு மனசுக்குள் வலித்தது.என்னை  நானே ஏமாற்றிக்கொள்கிறேனா?

வெளியே உளவு யந்திரம் வந்து நிற்பது தெரிந்தது. மாமாக்கள்தான் வந்திருக்கவேண்டும்.வெளியே வந்து பார்த்தேன்.மாமாவும்,அத்தையும் உள்ளே வந்துகொண்டிருந்தனர். கலாக்கா குழந்தையோடு பின்னால் வந்துகொண்டிருந்தா.அம்மாவும் ,நானும் வரவேற்று உள்ளே கூட்டிவந்து உட்காரவைத்து பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்அத்தையும் கலாக்காவும் சிரித்து,சிரித்து என்னோடு பேசி அந்த இடத்தையே மகிழ்ச்சியால் நிறைத்தனர். அம்மாவும் இடையிடையே பேச்சுக்களில் கலந்துகண்டாலும் சற்று ஒதுங்கியே நின்றா. மாமாவும், செந்தூரனும் தங்களுக்குள்

ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அம்மா எப்ப குளம்புவா?என்ற பயம் என்னை மிரட்டிக்கொண்டிருந்தது.

கலாக்காவின் மடியிலிருந்த குழந்தையை தூக்குவதற்குக் கையைக் கொண்டுபோனேன். அது மிரண்டுபோய் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டது. “பிள்ளையின்ர அத்தையடா,”என்று கலாக்கா சொன்னது எதோ பொடிவைத்துப் பேசுவதுபோலத்தான் எனக்கும் பட்டது.

அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். முகத்திலே வலிந்து வைத்திருந்த கொஞ்ச நொஞ்ச சந்தோஷமும் காணாமல் போயிருந்தது. “பேசுங்கோ,நான் ரீ போட்டுக்கொண்டு வாறன்“என்றபடி அம்மா குசினிக்குள் போய்விட்டா. நானும் பின்னாலே போய் பக்கத்திலே நின்றுகோண்டு “அம்மா, என்னம்மா இது ஆக்கள் எல்லாம் இருக்க நீங்கள் இங்க வந்து நிண்டால் என்ன அர்த்தம்” உறுக்கினேன்.

“என்ர சொல்ல ஆர் கேக்கினம்.நீங்கள் உங்கட எண்ணப்படி செய்யுங்கோ.நான் வேலைக்காரிதான ஒரு பக்கத்தில நிண்டிட.டுப் போறன்.”விம்மி,விம்மிஅழுதா. “அம்மா,உந்த முகத்தை கழுவிப்போட்டு வாருங்கோம்மா. இது என்ர பிரச்சனை.நான் கதைக்கிறன். இப்ப நீங்கள் வரேல்லயெண்டால் நான் வெளிக்கிட்டு எங்கயாவது போயிடுவன்”எனக்கும்

அழுகையை அடக்க முடியவில்லை. கலாக்காவும் உள்ளே வந்துவிட்டா.

“மாமி,அழாதையங்கோ.நல்ல விஷயம் கதைக்கேக்க அழக்கூடாது.என்ன செய்யிறது. எங்கடபலன்அது.மாமா இல்லை என்கிறது எல்லாருக்கும் கவலைதான்”கலாக்கா அம்மாவைக் கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு போக நானும் பின்னாலே போய் அம்மாவுக்குப் பக்கத்திலே இருந்துகொண்டேன் எங்களின் வாக்குவாதம் அவர்களுக்குப் புரிந்திருக்க வில்லைஅப்பாவை நினைத்தே வருத்தப்படுவதாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்..அம்மாவின் விசும்பலைத் தவிர வீடு அமைதியாய் இருந்தது.

“தேவி,”ரதிதேவி என்கிற அம்மாவின் பெயரை சுருக்கி மாமா இப்படித்தான் கூப்பிடுவார்.அவர் தொடர்ந்து பேசினார்,

“கவிதாவின்ர கலியாண விஷயமாய் நான் சில வேலையளைச் செய்துகொண்டிருக்கிறன். நீங்களும் விரும்பினால்தான் அடுத்து என்ன செய்யிறது எண்டு முடிவு எடுக்கலாம். பையனைப் பற்றி நான் எல்லாம் விசாரிச்சுப்போட்டன் எனக்கு எல்லாம் திருப்தி.”அம்மாவுக்கு மாத்திரமல்ல எனக்கும் அதிர்ச்சியாய்இருந்தது.யார் மாப்பிள்ளை? மாமாவே தொடர்ந்து பேசினார்.

“மாப்பிள்ளை முள்ளியவளை; செல்வரத்தினம் மாஸ்டர் என்று, அவயின்ர குடும்பம் எல்லாம் எனக்குத் தெரியும். அவற்ற மகன் டாக்ரர் துஷாந்தன் என்று வவுனியா ஆஸ்பத்திரியில இப்ப வேலை செய்யிறான். கவிதாவைத் தெரியுமாம்; கன கலியாணங்கள் வந்தது. எல்லாம் வேண்டாம், வேண்டாம் என்று மறுத்துப்போட்டு இப்ப கவிதாவைப்பற்றி சொல்லியிருக்கிறான். யூனிவசிற்றியில படிக்ககேக்க கவிதாவுக்கு மூன்று வருஷம் சீனியராம்

என்னவோ அவனுக்கு கவிதாவை பிடிச்சிருக்கு.. இரண்டு மாதத்திற்கு முதல் செல்வரத்தினம் மாஸ்டர்தான் வந்து இதைப்பற்றி கதைச்சவர்.பொம்பிளைப் பிள்ளையின்ர விஷயம்; சரியான முடிவில்லாமல் வெளிய தெரியக்கூடாதெண்டு தான் நான் இரகசியமாய் வைச்சுக் கொண்டிருக்கிறன். அதுதான் வந்து கவிதாவின்ர குறிப்பு வங்கிக்கொண்டுபோய் சாஸ்திரியிட்ட குடுத்துப் பார்த்தனான்.பிரச்சனயில்லை; செய்யலாமென்று சொல்லுறார்.”

எனோ செந்தூரனின் முகத்தைப் பார்க்கத் தோன்றிது.அவன் எந்த சலனமும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்தான். அவனின் நல்ல குணத்தைப் புரிந்துகொள்ளாமல்போன குற்ற உணர்வில் உடம்பு கூசியது. துஷாந்தனா? நம்ப முடியவில்லை.

பக்கத்து ஊர் என்று என்னுடன் கௌரவமாகவே நடந்துகொள்வான்.கடைசியாக பட்டமளிப்பு விழாவுக்கு வந்தபோது என்னை தேடிவந்துபேசினான்.பிரியம்போது “சந்தோஷமான செய்தியோட உங்களைச் சந்திக்கிறன்” என்று சொன்னபோது அதன் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிவதுபோலுள்ளது.

“எனக்கு தலை சுத்துது அண்ணை; தயவு செய்து கொஞ்சம்  விளக்கமாய் சொல்லுங்கோ. அவளின்ர படிப்பு முடியேல்ல. இப்ப ஒரு கலியாணம் செய்யிற நிலமையிலயோ நாங்கள் இருக்கிறம்,”அம்மா தன் ஆதங்கத்தைப்  பக்குவமாய் வெளிப்படுத்தினா. செந்தூரன் மாப்பிள்ளை  இல்லை என்று தெரிந்ததும் அம்மாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.

“தேவி,நான் சொல்லுறதைக் கேள்; நான் எங்கட நிலைப்பாடெல்லாம் சொன்னனான். அவரும் எல்லாம் விசாரித்து அறிஞ்சிருக்கிறார்.. ஆனால் என்னவோ தெரியாது அவன்  வந்த சம்மந்தங்களை எல்லாம் தட்டிப்போட்டு இதைத்தான் பாருங்கோ எண்டு  கண்டிப்பாய் சொல்லிப்போட்டானாம். வவுனியாவுக்குப் போய் நான் பையனோடையும் கதைச்சனான்..

அவன் சொல்லுறான் இது தான் திடீரென்று எடுத்த முடிவில்லையாம். நாலு வருஷமாய் கவனிச்சு நிதானமாய் எடுத்த முடிவாம். அவையின்ர சம்மதத்தை மட்டும் கேளுங்கோ வேறெதவுமே கேட்க வேண்டாம் எண்டு கண்டிப்பாய் சொல்லிப் போட்டானாம். எனி சொல்லுங்கோ என்ன செய்யிறதெண்டு.”  மாமா அமைதியாய் இருந்தார். திடீரென்று அவர் சொன்ன இந்த எதிர் பாராத திருப்பம் எனக்கு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஏனென்றால் துஷாந்தனை ஒரு சிறந்த மாணவனாக மட்டும்தான் எனக்குத்  தெரியும். ஊரில சண்டை,விமான தாக்குதல் ஏதும் நடந்தால் அவனே வந்து விசாரிப்பான். விரிவுரையாளராய் இருந்த ஒரு வருஷத்திலும் என்னில் அக்கறையோடுதான் இருந்தான்.அதற்குப் பிறகு தொடர்பு நின்று போனது.ஆனால் இவ்வளவு நாளும் என்னை நினைத்துக்கொண்டிருந்திருக்கிறான் என்று எண்ணும்போது அவன் மேல் ஒரு மதிப்பே வந்துவிட்டது.

அம்மா இன்னும் அழுதுகொண்டே இருந்தா. “தேவி இனி ஏன் அழுறாய்.?கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறந்துதான் வைச்சிருப்பான்.அதுதான் இப்ப நடந்திருக்குது.” அத்தை அம்மாவின் தலையைத் தடவிக் கொண்டே பேசினா.

“அவை ஒண்டும் வேண்டாம் எண்டுசொன்னாலும் நாங்கள் ஏதோ மதிப்பாய்த்தான் பிள்ளையை அனுப்பவேணும். அதை எல்லாம் நான் பாத்துக்கொள்ளுறன். நீ யோசிக்காமல்  சோல்லு.” “நான் என்னண்ணை சொல்லுறது;கடவுளே வீட்டவந்து வரம் தரேக்க நான் எப்பிடி மறுக்கிறது.”அம்மாவின் விசும்பல் நிற்காமல் தொடர்ந்தது.

“கவிதா, நாங்கள் உங்களோட நிக்கிறம். துணிஞ்சு நல்ல முடிவாய் எடு . எந்த மாற்றம் வந்தாலும் உன்னால படிக்க முடியும்.ஆனால் இப்பிடி ஒரு சம்மந்தம் திரும்ப வருமெண்டு சொல்லேலாது.” சொல்லிவிட்டு செந்தூரன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.தாங்க முடியவில்லை; அழுகை அடக்க வாயை கையால் அடைத்துக்கொண்டு ஓடிப்போய் செந்தூரனின் மார்பில் மகம் புதைத்து ஓவென்று அழுதேன்.

மனசு மெல்ல,மெல்ல அமைதியாகிக்கொண்டிருந்தது.செந்தூரனின் உயர்ந்த இலட்சியங்களுக்கு முன்னால் நான் தோற்றுப்போய் நின்றேன். கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் சில மணித்தியலங்களாய் என்மனதில் தோன்றிய சலனங்களை கழுவிக்கொண்டிருந்தது.

  • முல்லை சதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad