\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!

Filed in கதை, வார வெளியீடு by on September 8, 2020 6 Comments

சேலத்திலிருந்து  வந்த தனியார்  பேருந்து பழனி பேருந்து நிலையத்தை  வந்தடைந்தது. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கிய பிறகு, இராஜமாணிக்கமும்  கதிர்வேலனும் இறங்கினர். இருவர் தோள்களிலும் முதுகு பை   மற்றும் கைகளில் ஒரு பயணப்பை.  இருவருக்கும் ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். 

“என்னடா கதிர், நம்ப சேலம் பஸ் ஸ்டாண்ட் பரவாயில்ல போல!  ஓரே குப்பையா  இருக்கு பழனி பஸ் ஸ்டாண்டு!”

“இறங்கி இன்னும் இரண்டு அடிக்கூட எடுத்து வைக்கல! அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சுட்டாயா? ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேருக்கு மேல வர இடம்டா இது! நம்ப ஊருலே என்னிக்கு இட சுத்தமும் பக்தியும் ஒண்ணா கலந்திருக்கு?” எனக் கேட்டார்  கதிர்வேலன்.

“மன சுத்தமும், இட சுத்தமும் ரொம்ப முக்கியம்டா. சரி ஹோட்டலுக்கு ஒரு ஆட்டோவைப்  பிடி” என்றார் இராஜமாணிக்கம்.

“ஓலா  ஆட்டோ புக் பண்ணியிருக்கேன். வெளியே வெயிட் பண்றான். ஹோட்டல் பொய்கைக்குப்  போக எப்படியும் இருபது நிமிஷமாவது ஆகும். வா, போகலாம். ” 

ஆட்டோவைக் கண்டுபிடிக்க கொஞ்ச நேரம் ஆனது . இருவரும் ஆட்டோவில் ஏறி ஹோட்டல் பொய்கைக்குச்  செல்ல ஆரம்பித்தனர். இராஜமாணிக்கமும்  கதிர்வேலனும் சேலம் அரசு கல்லூரியில் வேலை பார்க்கிறார்கள். இராஜமாணிக்கம் இயற்பியல் துறைத் தலைவராகவும், கதிர்வேலன் வேதியியல் துறையில் மூத்தப்  பேராசிரியராகவும் இருக்கிறார்கள். நல்ல நண்பர்கள். இராஜமாணிக்கத்திற்கு கடந்த சில வருடங்களாகத்  தீராத வயிற்று வலி. அவர் பார்க்காத மருத்துவர் இல்லை, செல்லாத மருத்துவமனை இல்லை . வலி எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. வலி வரும் நேரங்களில் அவர் படும் அவஸ்தையை வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாது.

கதிர்வேலன் அவர் பெயருக்கேற்றப்படி மிகப் பெரிய முருக பக்தர். இராஜமாணிக்கம் நாத்திகரல்ல,  ஆனால் அவர் எல்லாவற்றிற்கும்  தர்க்கரீதியான காரணத்தை அறிய முயல்பவர். அது ஒன்றும் மிகப் பெரிய தவறல்ல. ஆனால் மனிதனுக்கும் மீறிய ஒரு தெய்வீகச் சக்தி ஒன்று உள்ளது, எல்லா விஷயங்களுக்கும் காரணத்தைப் பார்க்கக்கூடாது என்பது கதிர்வேலனின் கருத்து. 

கதிர்வேலனின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நடத்தியவன் முருகன்! அது  இராஜமாணிக்கத்திற்குத்  தெரியும். ஒரு மனிதன் நிறையச்  சிக்கல்களை வாழ்க்கையில் சந்திக்கும்போது, அவற்றைத்  தீர்க்க கடவுளிடம் செல்வது இயல்பே! அலோபதி மருத்துவம் இராஜமாணிக்கத்திற்குப்  பெரிய பயனைத் தராததால் கதிர்வேலனின் வேண்டுகோளின்படி முருகனைத் தரிசிக்க பழனிக்கு வரச் சம்மதித்தார்.

ஆட்டோ மெதுவாகப்  பொய்கை ஹோட்டலின் முன்னால் வந்து நின்றது. ஆட்டோவுக்கு செட்டில் பண்ணி விட்டு இருவரும் இறங்கினர். பழனி மலை மிக கம்பிரமாக அங்கிருந்து தெரிந்தது. “முருகா! என் அப்பனே!” எனக் கதிர்வேலன் கைகளைத்   தலைக்குமேல் தூக்கி வணங்கினார். பழனி மலையைப் பார்த்ததும் இராஜமாணிக்கத்தின் மனதில் ஒரு தெளிவு, ஆனால் அதை அவர் காட்டிக்கொள்ளாமல்   கதிர்வேலனைப்  பின் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அறையின் சாவியை வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றனர். சாப்பிட்ட பிறகு பயணக் களைப்பில் இருவரும் படுத்துத்  தூங்கிவிட்டனர்.

காலை 6 மணிக்கே  பழனி மலையடிவாரத்திற்கு இராஜமாணிக்கமும்,  கதிர்வேலனும் வந்து விட்டனர். இராஜமாணிக்கம் வெள்ளைக்  கதர் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். 

“கதிர், காவி வேட்டி , காவி சட்டை , நெத்தியில பட்டை. ருத்ராட்ஷ கொட்டைதான் மிஸ்ஸிங்! ஞானப் பழம்டா நீ!” என்றார் இராஜமாணிக்கம்

“என்னடா, கிண்டலா!  நம்ம பிளான் இதான்”

“என்னடா கொள்ளையடிக்கவா போறோம்? பெரிய பிளான் போடறே! ” எனக் கிண்டலாகக் கேட்டார்   இராஜமாணிக்கம். 

“கொஞ்சம் நான் சொல்வதைக் கேளு. மெயின் படிக்கட்டுப் பாதை  உனக்கு ஒத்து வராது. நம்ம யானைப்பாதை வழியாப்  போகலாம்.  நல்ல அகலமாய்ப் படிக்கட்டு இருக்கும். நிழலானப்  பாதை வேற!  போற வழியில மண்டபம், டாய்லெட் எல்லாம் இருக்கும். உனக்கு முடியலேன்னா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுக்  கூடப் போகலாம்.”

“நான் முதற்தடவையா இங்க வரேன். உனக்கு எது  சரியாப் படுதோ, அதைச் செய்” என்றார் இராஜமாணிக்கம். யானைப்பாதையில் நடக்கத் தொடங்கினர். 

“மாணிக்கம், பழைய நினைவுகள் என் மனதைக் கடக்கிறதுடா! எங்க அப்பா என் கையும், தங்கச்சி கையும் புடிச்சுக்கிட்டு வேகமா இந்தப் பாதையில ஏறுவாரு.  அறுபடைவீடுகளைப் பற்றி ஏதாவது கதை சொல்லுவாரு. வீட்டிலிருந்து அம்மா முறுக்கு, அதிரசம் சுட்டுக்  கொண்டு வருவாங்க! இது யானை வழிப்பாதையால் பெரியப் படிகளும், மண்டபங்களும் இருக்கிறது. பெரிய படியில் உட்கார்ந்துக்கொண்டே முறுக்கும்  அதிரசமும் சாப்பிட்ட நாட்களை மறக்கவே  முடியாது. நம் கலாச்சாரத்தில் குடும்ப உறவுகளைப் பல சமயங்களில் இணைக்கும் பாலம்தான் கோவில்கள்.  குடும்பத்துல ஒரு குழந்தைக்கு  மொட்டை அடிக்கணும்னா  மாமன், மச்சான், பெரியப்பா , சித்தப்பானு எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வருவாங்களே!” எனச் சொல்லிக்கொண்டே இராஜமாணிக்கத்தைப் பார்த்தார். அவர் சற்றுக் களைப்பாக இருப்பது நன்றாகத் தெரிந்தது. 

“மாணிக்கம், வா இந்த மண்டபத்துல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்”

“கிட்டத்தட்ட முன்னூறு படியாவது ஏறி இருப்போம்னு நினைக்கிறேன்.” என்று சொல்லிக்கொண்டே கொஞ்சம் தாகத்திற்கு தண்ணீர் குடித்தார் இராஜமாணிக்கம். இருபது நிமிடங்கள் கழித்து “கதிர், போகலாம் வாடா” என்று சற்றுத் தெம்புடன் சொன்னார்  இராஜமாணிக்கம். மெதுவாக மலையேறத் தொடங்கினர்.

“கதிர், உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. நம்ம முதல்  சந்திப்பு  சண்டைலதான் முடிஞ்சுது. கிளாஸ் ஸ்கெடியுல்  பிரிக்கறதுல சின்ன மனஸ்தாபம். ஆனா நீ  விட்டுக் கொடுத்துட்ட! அப்புறம் எங்கிட்ட நீ  இரண்டு மாசம் பேசலை. ஒரு நாள் என் பைக்ல ஏதோ பிரச்சனை . நீதான் வீட்டுக்கு லிஃப்ட்  கொடுத்த. அப்ப என் பையனுக்கு உடம்பு சரியில்லை. நீதான் டாக்டர் வீட்டுக்கு கூட கூட்டிட்டுப்போன.  உன் வீட்டுக்கு  11 மணிக்கு மேலதான் போனேன்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் நம்ப நட்பு கொஞ்ச கொஞ்சமாய் வளர ஆரம்பித்தது.” எனச் சொல்லி முடித்தார்.

அவர்கள் பழைய நினைவுகளில் மூழ்கினர். அந்த நினைவுகள் அவர்களுக்கு மலையேற ஊக்க மருந்தாய் இருந்தது.

“கதிர். ரொம்ப தேங்க்ஸ்டா!!! மாத்திரை, மருந்து  எதுக்குமே இந்த வலி கட்டுப்படலை. நம்பிக்கையை  இழந்து விட்டேன். நீதான் என் அப்பன் முருகன் இருக்கறப்போ, நீ ஏன் கவலைப்படறேன்னு  இங்க கூட்டிட்டு வந்துட்ட! இது எனது கடைசி நம்பிக்கை” என்று கண்களில் கண்ணீரோடு சொன்னார். அவர் தனது நண்பர் அழுவதை ஒருபோதும் பார்த்ததில்லை.

“மாணிக்கம், என்னடா என்னவோ பேசற!  கவலைப்படாதே. எல்லாவற்றியும் முருகனிடத்தில் விட்டுடு. இப்ப சந்நியாசி அலங்காரம். இந்த அலங்காரத்தில் முருகனை வணங்குபவருக்கு கவலை வியாதி எல்லாம் மறைஞ்சு போயிடும் என்பது ஒரு நம்பிக்கை. உன் வயிற்று வலி ஓடிப்போயிடும் பாரு ” என்று சொல்லிக்கொண்டே இராஜமாணிக்கம் கைகளை இறுக்கப் பற்றினார் கதிர்வேலன்.

அப்பொழுது மலையில் கனமான மணியின் ஓசைக் கேட்டது . பழனிக் கோவிலில் ஏழு வகையான பூஜைகள் செய்யப்படுகின்றன. இது விழாப் பூஜை நேரம். இந்தப் பூஜை நேரங்களில் அனைத்து பக்தர்களின் கவனத்தைத் தூண்டுவதற்காக, மலையில் கனமான மணியை வேகமாக ஒலிப்பார்கள். அமைதியான நாளில், பழனியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் மணியின் ஒலியைக் கேட்க முடியும்.

இராஜமாணிக்கத்தின் மாமா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டராக உள்ளார். அவர் மூலம் இரண்டு சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்கள் கிடைத்தது. அவர்களுக்கு நேராக கருவறையருகிலே செல்லும் பாக்கியம் கிடைத்தது.  முருகனை சந்நியாசி அலங்காரத்தில்  பார்க்க கண் கொள்ளாக்  காட்சியாய் இருந்தது. கதிர்வேலனின் கண்களில் பக்திப் பரவசத்தில் கண்ணீர்!!! இராஜமாணிக்கத்தின் மனதில் ஒரு தெளிவு! ஏதோ ஒரு நிம்மதி!

அவர் கண்களை மூடிக்கொண்டு  “முருகா! நான் கதிரைப் போல மிகப் பெரிய பக்தன் கிடையாது. ஆனால் நான் நாத்திகவாதியும் இல்லை.  காரணங்களை அறிய நினைப்பவன். வயிற்று வலியால ஐந்து வருடமா ரொம்பக் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு வழி காட்டப்பா” என  மனமுருகி வேண்டிக்கொண்டார்.  முருகர் பிரசாதமாக திருநீறை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். 

“கதிர், மனசுல ஒரு நம்பிக்கை வந்திருக்குடா!  வா, இந்த மண்டபத்தில கொஞ்ச நேரம் உட்காரலாம்” 

“கேட்கவே சந்தோசமா இருக்கு!” என்றார் கதிர்வேலன். இருவரும் மண்டபத்தில் சற்று இளைப்பாறினர்.

“மாணிக்கம்,  பக்கத்து வீட்டுப் பாட்டி நூறு ரூபாய் உண்டியல்ல போடச் சொன்னாங்க. மறந்து விட்டேன் பாரு.” என்று சொல்லிவிட்டு சற்று தொலைவில் உள்ள உண்டியலை நோக்கி நடக்கத் தொடங்கினார். இராஜமாணிக்கம் கண்களை சற்று மூடிக்கொண்டு ஏதோ நினைப்பில் முழ்கினார்.

சிறிது நேரத்தில் பிஞ்சு விரல்கள் அவர் கையைத் தடவியது. “டக்” என்று முழித்துப் பார்த்தார். ஒரு சிறுவன் அவர் பக்கத்தில் நின்றிருந்தான். அச்சிறுவன் அவரிடம் “ஐயா, ரொம்ப நேரமாய் கவலையோட திருநீறை கையில  வைச்சுருக்கீங்க! இந்தக் காகிதத்தில் போட்டு வச்சுக்குங்க. இது கவலைகளைத்  துரத்தும் இடம். ”  என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் ஓடிவிட்டான்.

இராஜமாணிக்கம் மடக்கியிருந்த காகிதத்தைப்  பிரித்து திருநீறைப் போடும்போது, அவர் கண்களில் ஒரு சிறு விளம்பரம் தென்பட்டது.  “தீராத வயிற்று வலி மற்றும் பல உடல் கோளாறுகளுக்கு ‘குட்டிப்புலி’ப்பாணி  சித்தரை அணுகவும்” என விளம்பரமும் , அவரது முகவரியும் கொடுக்கப்பட்டு இருந்தது.

சிறிது நேரத்தில் கதிர்வேலன் அங்கு வந்தார். இராஜமாணிக்கத்தின் வெளிப்பாடற்ற முகத்தை கண்டதும் சற்று பயந்து “டேய் மாணிக்கம், என்னடா நடந்தது. எல்லாம் சரியாக இருக்கிறதா?” எனக் கேட்டார். நடந்ததை ஒன்று விடாமல் சொன்னார் இராஜமாணிக்கம்.

“அந்தச் சிறுவன் பார்க்க எப்படியிருந்தான்?”

“7 இல்ல  8 வயது இருக்கும்!  மிக நீண்ட முடி, வட்ட முகம், நெற்றியில் திருநீறு, வெள்ளைச் சட்டை , மயில் கலர் அரைப் பேண்ட் போட்டிருந்தான். ” எனச்  சொல்லி முடித்தார். 

“முருகா!!!” என்று சொல்லியபடி உணர்ச்சிவசப்பட்டு கதறினார் கதிர்வேலன். சிறிது தண்ணீர் குடித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

“முருகன் நமக்கு வழி காட்டியுள்ளார். வா மாணிக்கம், ரோப் கார் எடுத்துட்டு கீழேப்  போகலாம்”  எனச் சொன்னார் கதிர்வேலன். இருவரும் கிளம்பினர்.

ரோப் கார் மெதுவாகக்  கீழே சென்றது.  இராஜமாணிக்கமும்  கதிர்வேலனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒரே நிசப்தம்.  இராஜமாணிக்கம் மனதில் பல கேள்விகள். “வந்தது முருகனா? இது தற்செயலானதா? இது தற்செயலானது என்றால், அந்த காகிதத்தில் அந்த விளம்பரம் எப்படி வந்தது? நமக்கும் மேலே ஒரு சக்தி கட்டயாம் உள்ளது. நான் எல்லாவற்றிற்கும் பகுத்தறிவைப் பயன்படுத்தக்கூடாது” என்று முடிவெடுத்தார்.

கதிர்வேலன் மனதில் சிறு சலனம். “நான் இருக்கும்போது என் அப்பன் முருகன் வரவில்லையே! அவனைப் பார்க்க எனக்குக்   கொடுத்துவைக்கவில்லை!! நான் அங்கு இருந்தபோது அவன்  வந்திருந்தால், மாணிக்கம் இந்த அளவு நம்பியிருக்கமாட்டான். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது” என்று மனதைத்  தேற்றிக்கொண்டார்.

அவர்கள் மலையிலிருந்து இறங்கி ஆட்டோவில் ஏறினார்கள். கதிர்வேலன் ஆட்டோ டிரைவரிடம் “தம்பி, குட்டிப்புலிப்பாணி சித்தர் வீட்டுக்குப்  போகணும். அட்ரஸ் இது தான்” என்று காகிதத்தைக்  கொடுத்தார். 

“சார், இருபது வருஷமா பழனில ஆட்டோ ஓட்டுறேன். நீங்க வாங்க சார் நான் கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

“சந்தோசம். குட்டிப்புலிப்பாணி சித்தர் பத்தி நான் கேள்விப்பட்டதில்லையே. கொஞ்சம் அவரைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க” எனக் கதிர்வேல் கேட்டார்.

“நான் இளங்கலை தமிழ் படிச்சுட்டு ஆட்டோ ஓட்டுறேன் சார். நான் சித்தர்களைப் பற்றி நிறைய படித்து வருகிறேன். பதினெட்டு பெரிய சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர்தான்  பழனி முருகர்  சிலையை உருவாக்கினார். அவரது சீடர் புலிப்பாணி சித்தர். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. குட்டிப்புலிப்பாணி சித்தரோட உண்மையானப் பெயர் எனக்குத் தெரியாது. என் தாத்தாவிடமிருந்து அவர் சில சித்தர்களால் பயிற்சியளிக்கப்பட்டதாகக்  கேள்விப்பட்டேன்.  அவர் கொஞ்சம் குட்டையா இருப்பார். ரொம்ப கோபம் வரும். அதனால்தான் அவருக்கு அந்த பெயர் வந்தது என்று தாத்தா சொல்லுவார். பொதுவாக சித்தர்கள் புனிதர்கள், மருத்துவர்கள், இரசவாதிகள் மற்றும் ஆன்மீகவாதிகள். குட்டிப்புலிப்பாணி சித்தர் சித்த மருத்துவத்திற்கு நன்கு அறியப்பட்டவர்.” என்றான் ஆட்டோ டிரைவர்.

“தம்பி, அவர் ஏன் பிரபலமாகலை?” எனக் கதிர்வேல் கேட்டார்.

“இவரிடம் ஒரு சிக்கல் உள்ளது. அவர் அரிதாகவே ஊரில் தங்குவார்.   அவர் இங்குள்ள வடகிழக்கு சாய்வு மலைகளில் தியானம் செய்யப் போனா  அவர் திரும்பி வர நான்கு அல்லது ஐந்து மாதம் ஆகும்.  அவர் எப்போது இங்கே இருக்கிறார், எப்போது அவர் இங்கே இல்லை என்பது யாருக்குமே தெரியாது!  அவர் கோவக்காரர். சில சமயம் திட்டி அனுப்பிடுவாரு.எனவே மக்கள் அவரைச் சந்திக்க வருவதில்லை. உங்கள் நேரத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் இங்கு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அவர் இங்கே இருந்தாலும், அவர் உங்களை திருப்பிக் கூட அனுப்பலாம்” என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

“மாணிக்கம்,  இது முருகன் சொன்ன வழி!  அவர் இங்கு இருப்பார். அவர் நம்மைப் பார்ப்பார். நம்பு” என்றார் கதிர்வேலன். ஆட்டோ மெதுவாக ஒரு ஓட்டு வீட்டை அடைந்தது.  

“சார், இது உங்கள் அதிர்ஷ்டமான நாள். சித்தர் ஐயா வீட்டிலதான்  இருக்காரு!” என்றான் ஆட்டோ டிரைவர்.  அவனிடம் ஆட்டோத் தொகையைக்  கொடுத்துவிட்டு அந்த வீட்டை நோக்கி நடந்தனர். சற்றுப்  பழைய வீடு.  வீட்டின் முன்புறம் கூரைப் பந்தல்.  சில நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அங்கே சுமார் பதினைந்து பேர் அமர்ந்திருந்தனர். ஒரு முஸ்லீம் பாயும் அங்கே அமர்ந்திருந்தார்.  அவர் பக்கத்தில் இருவரும் அமர்ந்தனர்.

“சார், நான் டோக்கன் அல்லது ஏதாவது வாங்க வேண்டுமா?” எனக் கேட்டார் கதிர்வேலன். 

“எனக்குப் பின் நீங்கதான். வணக்கம்! என் பெயர் ஜமால் பாய். நீங்க வந்ததுக்கு  காரணம்  என்ன என்று நான் தெரிந்துக்  கொள்ளலாமா?” எனக் கேட்டார் . கதிர்வேலன் வந்தக்  காரணத்தை விவரமாகச் சொன்னார்.

அதற்கு ஜமால் பாய் “நீங்கள் சரியான இடத்திற்குதான்  வந்துருக்கீங்க!   நீங்க கூட  ஏன் இங்கே ஒரு முஸ்லீம் பாய் இருக்கிறான்னு நினைக்கலாம். எனக்கும் உங்களைப்போல சிலப்  பிரச்சனைகள். நீங்க நாகூர்  தர்காவுக்கு போற மாதிரிதான். நான் இங்கே வந்தேன். சித்தர் அய்யாதான் எனக்கு மறுவாழ்வு கொடுத்தாரு.”

“யார் இந்த விளம்பரத்தை கொடுத்தாங்கன்னு தெரியுமா?” எனக் கேட்டார் கதிர்வேலன்.

“ஒரு லோக்கல் கவுன்சலரை சித்தர் அய்யா குணப்படுத்தினார்.  அவர்தான்  இந்த விளம்பரங்களை  அப்பப்ப கொடுக்கிறார். அதை சித்தர் அய்யா விரும்பறது இல்லை” என்றார் ஜமால் பாய்.

இராஜமாணிக்கம் அவரிடம் “அவர் அதிகம் பேசுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படியா ?” 

“சார், எல்லாம் சைகைதான். அவர் என்னிடம் ஒரு முறை பேசினார்.  அவர் இஸ்லாம் மதத்தில் ஒரு விஷயத்தைப் பிடிக்கும் என்று என்னிடம் கூறினார். ஆன்மீக வழிபாடு எங்கள் நம்பிக்கையில் வலுவான தூணில் ஒன்றாகும்.  இஸ்லாமியர்கள் இது பஸ் ஸ்டாண்ட் அல்லது ரயில்வே ஸ்டேஷன்  என்று கவலைப்படுவதில்லை, எல்லா இடங்களிலும் வழிபாடு செய்வது இஸ்லாமிய மதத்தின் சிறப்பு என்று என்னிடம் சொன்னார்.  ” என்று சொல்லிமுடித்தார்.

ஜமாலின் முறை வந்தது. அவர் எழுந்தார்.  ” சார்! நான் உங்களுக்கு ஒரு விஷயம்  சொல்ல மறந்து விட்டேன் . சித்தர் அய்யா  டபுள் பி.எச்.டி பெற்றவர். அவர் ஆன்மீகப் பாதைக்காக தனது வேலையை விட்டுவிட்டார்” என்று சொல்லிவிட்டு உள்ளேச்  சென்றார்.

இராஜமாணிக்கம்  இயற்பியல் துறைத் தலைவருக்கு  என்ன சொல்வது என்று ஒன்றும் தெரியவில்லை.  சிறிது நேரத்தில், ஜமால் பாய் வெளியே வந்தார்.  இப்போழுது இவர்களின் முறை உள்ளே  சென்றார்கள்.

சித்தர் தரையில் கால்களை குறுக்கே மடக்கி  உட்கார்ந்திருந்தார்.  60 வயது  இருக்கும். சட்டை இல்லை, வெள்ளை வேட்டி  மட்டுமே. மெல்லிய உடல் அமைப்பு.  அகஸ்தியரைப் போல குட்டையான உருவம்.  சினிமாவில் சித்தர்களைக் காண்பிப்பது போல அவருக்கு  நீண்ட தாடியோ  அல்லது  ஜடாமுடியோ இல்லை!  சில நாட்களுக்கு முன்பு மொட்டையடித்தது போல் தோற்றம். இராஜமாணிக்கம் தான் வந்தக் காரணத்தைச் சொன்னார். அவரது சீடர் அவரைத்  தரையில் சித்தருக்குமுன் படுத்து தனது சட்டையைத்  தூக்கும்படி கேட்டார். சித்தர் இராஜமாணிக்கம் வயிற்றில் திருநீறைத் தடவினார். வயிற்றின் வெவ்வேறு பக்கங்களில் மிகவும் கடினமாக அழுத்தினார். அவரது சீடர் இராஜமாணிக்கத்தை மூச்சை இழுத்துப்   பிடிக்கச் சொன்னார். கீழ் வயிற்றில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் சித்தர் தனது நடுவிரலை அழுத்தினார். அவர் தனது சீடருக்கு கைவிரல்களால் எண் மூன்றைக் காட்டி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

நண்பர்கள் இருவருக்கும் எதுவும் புரியவில்லை. ஆந்தைபோல் முழித்தனர்!  அவருடைய சீடர் இராஜமாணிக்கத்தைப் பார்த்து “அய்யா, சித்தர் மிகவும் அரிதாகத்தான்  எண் மூன்றை  பரிந்துரைப்பார். உங்களுக்கு கடுமையான சேதம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நீங்கள் சரியான நேரத்தில் இங்கு வந்துள்ளீர்கள்.”  என்று சொல்லிவிட்டு மருந்து எடுத்துக் கொள்ளும் முறைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

“குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு இந்த மருந்தை நீங்கள் எடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு என்னை கூப்பிடுங்கள். அவர் இங்கே இருந்தால், நீங்கள் திரும்பி வந்து பார்க்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு அவர் தனது எண்ணைக் கொடுத்தார். 

“நான் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டார் இராஜமாணிக்கம்.

“அது உங்கள் விருப்பம்.  நீங்கள் கொடுப்பதில் பெரும்பங்கு  உள்ளூர் சித்த மருத்துவப் பள்ளிக்குச் செல்கிறது” 

இராஜமாணிக்கம் தன்னால் முடிந்தத்  தொகையைத்  தட்டில் வைத்தார்.

“அய்யா, கந்த சஷ்டி கவசத்தில் சில வரிகள் வரும். ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள சொல்லும் வரிகள். வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க! என்பது ஒரு வரி. உங்கள் நண்பர் கதிர்வேல்தான் வெற்றிவேலாய் வந்து உங்களை காப்பாத்தியிருக்காருன்னு நினைக்கிறேன்” என்றுச் சொல்லி முடித்தார் சீடர்.

இராஜமாணிக்கம் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மிகுந்த நம்பிக்கையுடன் தன்  நண்பருடன் வெளியே சென்றார்.

மருங்கர்

 

Comments (6)

Trackback URL | Comments RSS Feed

  1. Umamaheswari ravichandran says:

    Your hard work and effort have paid off! A success well deserved, an occasion worth celebrating! Congratulations!
    Best story. Best of luck.

  2. Umamaheswari ravichandran says:

    Congratulations. Very nice story .

  3. Maheswari ramasubramaniyan says:

    Your hard work and effort have paid off! A success well deserved, an occasion worth celebrating! Congratulations!

  4. RAVICHANDRAN says:

    Very nice story. Well written

  5. Prashanth says:

    Super Saran!
    Well done. 🙂

  6. Nandhini says:

    Very good story. அருமை

Leave a Reply to Prashanth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad