துறவு
“என்ன டீச்சர், சாப்பாட்டுப்பைய மறந்துட்டுப் போறீங்க, வேணாமா?” நடத்துனர் பேருந்துக்குள்ளிருந்து நீட்டிய பையை வாங்கிக் கொண்ட தங்கம், அவனுக்கு நன்றி கூறுவது போலத் தலையசைக்க, பேருந்து நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பஸ் சென்று வளைவில் திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், வலது கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பையைப் பார்த்துக் கொண்டாள், ‘இனி இது தேவையில்லைதான்.. இந்தப் பேருந்துக்கும் எனக்கும் இருந்த தினசரி தொடர்பு கூட இனி இருக்கப் போவதில்லை’ மனதுக்குள் ஏதோ பாரமாய் இறங்க – திரும்பித் தன்னுடைய கிராமத்திற்குச் செல்லும் பாதையைப் பார்த்தாள். நாற்பது வருடங்களாய் இப்படியேதான் இருக்கிறது என்றாலும் இன்றைக்கு ஏனோ புதிதாய் அல்லது அந்நியமாய்த் தெரிந்தது. சாலைச் சந்திப்பில் இருந்த டீக்கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் யாருமே தனக்குத் தெரிந்தவர்களாய் இருக்கவில்லை, ஒருவேளை வெளியூர் ஆட்களாய் இருக்குமோ என்னவோ என எண்ணியவாறு, இரு மருங்கிலும் பரந்து கிடந்த வயல் வெளியினூடே, சற்றே ஏற்றமாய் இருந்த அந்தக் குறுகிய சாலையில் நடக்க ஆரம்பித்தாள். சுழன்று அடித்த காற்றுக்குச் சாலையில் கிடந்த மணல் பறந்து வாரியிறைந்து முகத்திலும் கைகளிலும் சுள்ளென்றது, கண்ணில் படாமல் இருக்கத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
பக்கத்து டவுனுக்கு போய்விட்டுத் திரும்பி வந்தவனாய் மோட்டார் பைக்கில் கடந்த இவளது மகனின் நண்பன் அருகில் வந்ததும் வேகம் குறைத்து கேட்டான்,”வர்றீங்களாம்மா, வீட்ல விட்றேன்?”
“வேணாய்யா.. நீ போ..” என நடந்தாள்.
மூன்று மைல் என்பது அவளுக்கு எப்போதுமே தூரமாக இருந்ததில்லை. ஊருக்குள் செல்லும் பேருந்தில் வந்தாலும் கூட, இங்கே இறங்கி நடப்பதுதான் தங்கத்தின் விருப்பம். வழியிலிருக்கும் துரை மண்டபத்தில் வெளியூர் வியாபாரிகள் காய்கறி விற்றால் ஏதேனும் வாங்கிக் கொண்டு – அதனருகே ஓடும் ஆற்றின் கரையோடு செல்லும் மண்பாதையில் நடந்து – வயலில் இறங்கி – வரப்புகளினூடே சென்று – அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் பேச்சுக் கொடுத்தவாறு சிறிது தூரம் நடந்தால் போதும், இவளது வீட்டின் பின்பக்கம் வந்துவிடும். கட்டியிருக்கும் வேலிப்படலைத் திறந்து கொல்லைப்புறமாகச் சென்று கிணற்றடியில் கால் கழுவிவிட்டுச் சமையலறை வழியே உள்ளே போய்விடுவாள். மாமியார் இருந்த காலத்திலிருந்தே அவளுக்கு இது பழகிவிட்டது. வீட்டின் முன்புறமாக ஆண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதால் இந்த வழியைப் பழக்கப்படுத்தியவள் மாமியார்தான். அவள் இறந்து பல வருடங்களாகி, தானே ஒரு மாமியாராகியும் பழக்கம் மாறவில்லை. என்ன, முன்பெல்லாம் நடப்பது எளிதாக இருந்தது, இப்போது முதுமை காரணமாக, கால்முட்டி வலி வந்துவிடுகிறது.
மாலை வெயில் மிகவும் சரிந்து கிடக்க – தனக்கு முன்னால் தனது நிழல் மிக நீண்டு தன்னை விட வேகமாய்ச் செல்வது போல் தெரிய –அது மட்டும்தானே தனக்கு எப்போதும் துணையாக இருக்கிறது எனும் உணர்வு எழுந்தது, கூடவே தான் மட்டும் தனித்து விடப்பட்ட தன்னிரக்கமும் சேர்ந்து கொள்ள, அவளையும் மீறி கண்கள் கலங்கின. இடது பக்கத் தோளில் மாட்டியிருந்த தனது கைப்பையைப் பார்த்துக் கொண்டாள். அதில் ஜிப் போட்டு மூட முடியாமல், அலுவலகத்தில் அவளுக்காகக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள் வெளியே நன்றாகவே நீட்டிக் கொண்டிருந்தது. நிச்சயமாய் அது அரையடி நீளமுள்ள ஒரு வெள்ளிக் குத்து விளக்காய் இருக்க வேண்டும். ‘இத நீ தெனமும் யூஸ் பண்ணுவே தங்கம்.. தெனமும் எங்கள நெனச்சுக்க.. ரிட்டயராயிட்டமேன்னு மனசு தளர்ந்து போயிடாத, இன்னிக்கு நீ, அடுத்த வருசம் நானும் வேணு சாரும்.. இனிமே இப்படி ஒவ்வொருத்தராப் போக வேண்டியதுதான்..புதுப் பசங்க வந்துட்டாங்க, அவங்க ஸ்கூலைப் பாத்துப்பாங்க, சரி.. நான் அப்பறமா ஒரு நாள் வீட்ல வந்து பாக்குறேன்’ தங்கத்தை வழியனுப்பும்போது தலைமை ஆசிரியை பல்வேறு உணர்ச்சிகளுடன் கூறியது இப்போது நினைவுக்கு வந்து, மேலும் ஒருவிதத் தளர்ச்சியை உருவாக்கியது.
“சம்பளத்துக்காக இல்ல, மனசுக்கு இந்த வேலைதான் ரொம்ப ஆறுதலா, தெம்பா இருந்துச்சு..வருசக் கணக்கா பழகிப்போச்சு, இனிமே வீட்ல என்ன பண்ண போறேன்னு தெரியல” பேருந்தில் வந்தபோது பக்கத்து சீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு வந்த, உடன் பணியாற்றிய காமாட்சி டீச்சரிடம் இவள் குரல் கம்ம ஆதங்கப்பட்டபோது, அவள் போலியாய்ப் பொறாமை காட்டினாள், “நாங்க ரிட்டயர்டு ஆனாதான் வருத்தப்படணும் டீச்சர், பென்சனும் வராது, எங்களுக்குன்னு எந்தச் சொத்து பத்தும் கிடையாது.. உங்களுக்கு என்ன, ஒரே பையன் தாலுகா ஆபீஸ்ல வேலை பாக்குறான்.. வசதியான குடும்பத்துலேர்ந்து மருமவ வந்துருக்கா.. உங்க வீட்டுக்காரரு சேர்த்து வச்சுட்டுப் போன காடு கழனில்லாம் இருக்கு.. தங்கறதுக்கு நாலு கட்டு வீடு ஒண்ணு சொந்தமாக் கிடக்கு, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர்றதுக்கு ஜனங்க இருக்காங்க…அப்பறம் என்ன, இனிமே கோயிலு குளம், சொந்தக்காரங்க வூடு விசேசம்னு நிம்மதியா இருங்க..”
நினைவுக்குள் இன்று பேசிய அத்தனை பேரின் முகங்களும் பேச்சுக்களும் மாறி மாறி வந்து போக – நடையின் வேகம் குறைந்து உள்ளுக்குள் ஒருவித அயர்ச்சி பரவியது. எங்காவது சிறிது அமர்ந்துவிட்டுச் செல்லலாம் போலிருந்தது. இத்தனை காலமாக அவளைச் சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் அவளைப் பற்றிய போலியான ஒரு பிம்பம்தான் தெரியுமே தவிர, அவள் உண்மையில் சந்திக்கும் பிரச்சனைகளும் அவள் இருக்கும் நிலையும் அவளுக்கு மட்டுமே தெரியும்.
சாலையில், அவளுக்கு எதிரே வந்த மற்றும் அவளை அவ்வப்போது கடந்து போன ஒருசிலர் இவளுக்குப் பரிச்சயமில்லாத பாவனைகளுடனே சென்றனர். ஊர் மிகவும் மாறிவிட்டது, முன்பிருந்த மனிதர்கள் பலரும் இன்று இங்கு இல்லை. இருந்த சிலரும் முன்பு போல் இல்லை. இவளுக்கு நெருக்கமாய் இருந்த நிறைய பேர் தங்களது மகன் அல்லது மகளுடன் வெளியூர்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று விட்டனர். இவளிடம் கடைசியாய்ச் சொல்லிக் கொண்டு போகும்போது அவர்கள் முகத்தில் பெருமிதம் காட்டினாலும், அவரவர் அடையாளம் அழிந்து இன்னொருவர் தோளில் தொற்றிக் கொள்ளும் வேதாளம் போன்ற நிலைக்கு ஆளாகி விட்டோமே எனும் வேதனையை மறைத்துக் கொள்வது இவளுக்குப் புரியும். தனக்கும் அப்படி ஒரு நாள் வந்தே தீரும் என்றாலும், அந்த நாளில் தான் மன நிறைவுடன் மகனோடு வாழ்வேன் என நம்பிக்கையுடன் எண்ணிக் கொள்வாள். அன்றைக்கு அவள் அப்படி நம்பிக்கையாய் இருந்தபோது மகன் கேசவனுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை, இவளது கணவர் உயிருடன் இருந்தார். அருகருகே இருந்த வீடுகளில் உறவுகள் இருந்தன. இன்று அந்த நிலை இல்லை.
நடையின் வேகம் வெகுவாய்க் குறைந்து, தனது செருப்புத் தேயும் ஒலி உண்டாவது காதில் விழ – மனதுக்குள் தோன்றிய கலவையான எண்ணங்களிலிருந்து வெளியே வந்த தங்கம், சற்றுத் தொலைவில் தெரிந்த துரை மண்டபத்தைப் பார்த்தாள். அங்கு அமர்ந்து விட்டுச் சென்றால் தேவலாம் என மனதுக்குப் பட்டது. வீட்டிற்கு இத்தனை அவசரமாகச் சென்று யாரைப் பார்க்கப் போகிறோம்? தனக்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை எனும் உணர்வு அவளை மண்டபம் நோக்கி நடக்க வைத்தது.
அகண்ட ஆற்றை இணைக்கும் பாலத்தை ஒட்டி அமைந்திருந்த சிறிய சிவன் கோயிலை அடுத்து ஆற்றங்கரையோரமாக இருந்தது அந்த மண்டபம். அதன் மறு பக்கத்தை வடக்கு மேடை என்பர். அதில் அமர்ந்து கால்களைத் தொங்கப் போட்டால் ஆற்று நீர் முழங்கால் வரை நனைத்துச் செல்லும். இவளுக்கு பிடித்த இடமும் கூட. கணவன் இருந்தபோது இந்தச் சிவன் கோயிலுக்கு வரும்போது இங்கும் வந்து அமர்ந்து போயிருக்கிறாள். பன்னிரெண்டு தூண்களுடன் எந்த சோழ ராஜாவோ கட்டி வைத்து விட்டுப் போனது, அந்தக் காலத்தில் வழிப்போக்கர்கள் தங்கிச்செல்லும் சத்திரமாக இருந்தது பிறகு ஆங்கிலேயேர் காலத்தில் எப்படி துரை மண்டபமாக மாறியது எனத் தெரியவில்லை என இவளது மாமியார் சொல்லுவாள்.
மண்டபத்தை நெருங்கியவாறே சற்றுத் தள்ளி இருந்த சிவன் கோயிலைப் பார்த்துத் தன்னிச்சையாக கோபுரத்தை வணங்கிக் கொண்டாள். சாயரட்சை பூஜைக்கான மணி சப்தம் உள்ளேயிருந்து சன்னமாய்க் கேட்டது. கோபுரத்துக்குப் பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். பக்தர்கள் அதிகம் வராத கோயில், பூஜை நேரத்துக்கு அர்ச்சகர் வந்து போவார். வாசலில் இருக்கும் பலகைக் கடை கூட விசேஷ நாட்களில்தான் திறந்திருக்கும். இப்போது அதுவும் மூடிக் கிடந்தது. அக்கடை வாசலில் படுத்திருந்த பழுப்பு நிற நாய் இவளைக் கண்டதும் வாலை ஆட்டிக் கொண்டு ஓடி வந்தது. தினமும் அவள் கோயிலைக் கடக்கும்போது பார்க்கும் நாய், மதியம் மீதம் வைத்த உணவுகள் ஏதேனும் பையில் இருந்தால் எப்போதாவது அதற்குப் போட்டுவிட்டுச் செல்வதுண்டு. அந்த நன்றியில் அது அவளை எப்போதும் அடையாளம் கொண்டு அவளையே சுற்றி வந்து முகர்ந்து நிற்கும். டிபன் பாக்ஸில் இருந்த கேக் துண்டுகளை அதற்குப் போட்டாள். வழியனுப்பும் விருந்தை முன்னிட்டு, ‘வீட்டுக்கும் எடுத்துட்டுப் போங்க’ எனப் பள்ளியில் அவளுக்குத் தந்தது. நாய் சாப்பிடும்வரை நின்று பார்த்தாள். பிறகு மண்டபத்திற்குள் சென்று, செருப்புகளை ஓரமாய்க் கழட்டிவிட்டு, வடக்கு மேடையில் அமர்ந்து கால்களைத் தொங்க விட்டுக் கொண்டாள். தங்கத்துக்கு, ஆற்று நீர் சுழித்துக் கொண்டோடும் இந்த மண்டபக்கரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. கணுக்கால் வரையிலான அவளது கால்களை ஆற்று நீர் வருடிச் சென்றது. இவள் முகத்தையே நின்று பார்த்துக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருந்த நாய், ஒருமுறை மண்டபத்துக்குளேயே சுற்றி வந்துவிட்டு, இவளுக்குச் சற்றுத் தள்ளி சுருண்டு அமர்ந்து கொண்டது. கோயில் வளாகத்தினுள்ளேயே கிடப்பதினாலோ என்னவோ அந்த நாயின் மீது எண்ணெயும் விபூதியும் கலந்த ஒரு வித வாசம் மேலிட்டது.
ஆற்று நீரில் கரையோரமாய் வளர்ந்திருந்த நாணல்களுக்கிடையே அலை பாய்ந்து கொண்டிருந்த சிறிய மீன்கள், இவளது பாதங்களைச் சுற்றி வந்து வலிக்காமல் மொய்க்கத் துவங்கின. அவற்றையே பார்த்துக் கொண்டிருந்ததில் சிறிது நேரம் எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் இருந்த தங்கம், மீன்களோடு அவற்றின் குஞ்சுகள் இணைந்து கொள்வதைப் பார்த்ததும் – உள்ளுக்குள் கேசவனை நினைத்துக் கொண்டாள். அவளையும் மீறி கண்களில் நீர் துளிர்த்தது. ‘இன்றைக்கு எனது பதில் எதிர்பார்த்து வருவான்.. என்ன சொல்வது?’ மீன்களிடம் மானசீகமாகக் கேட்டாள். குனிந்து பார்த்துக் கொண்டிருந்த அவளது முகத்திலிருந்து கண்ணீர் உருண்டு ஆற்று நீரில் விழுந்து காணாமல் போனது. புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தவாறே, தன்னை யாரேனும் பார்க்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள். சிவன் கோயில் வாசலில், பூஜையை முடித்தவராய் வெளியே வந்து நின்று அர்ச்சகர் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. இவளுக்கு அப்போதுதான் நினைவு வர – கைப்பையைத் திறந்து தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். அது எப்பவோ பேட்டரி சார்ஜ் தீர்ந்து அணைந்து போயிருந்தது.
அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏழெட்டு வருடங்கள் இருக்கும், கேசவன் முதன் முதலாக வேலைக்குப் போய் அவனது முதல் சம்பளத்தைப் பெற்ற மகிழ்ச்சியில், ‘டெய்லி பஸ்ல தனியாப் போற, பஸ்ஸ விட்டு எறங்கி ரோட்டைல்லாம் க்ராஸ் பண்றே.. டவுன்ல ட்ராஃபிக் முன்ன மாதிரியில்லம்மா.. இத வச்சுக்க, அடிக்கடி தலையச் சுத்துது, மயக்கம் வர்ற மாதிரி இருக்குன்னு வேற சொல்றே.. எதாவதுன்னா எனக்கு ஃபோன் பண்ணலாம்ல’ எனக் கவலை காட்டி இவளுக்குப் புதிய மாடல் ஃபோனை வாங்கித் தந்த போது, ‘இதென்னடா, எதைத் தொட்டாலும் யாருக்காவது ஃபோன் போயிடுது.. நமக்கெல்லாம் இது சரிப்படாதுப்பா.. உன்னோட பட்டன் வச்ச பழைய ஃபோன் இருக்குமே, அத வேணாத் தா, போதும்’ என அவனிடம் இருந்த பழைய மாடல் ஃபோனை வாங்கிக் கொண்டாள்.
நம்பர்கள் பெரும்பாலும் அழிந்து நிறம் மாறிப் போயிருந்தது அந்த ஃபோன். இவள் யாருக்கும் ஃபோன் செய்வதில்லை, இவளுக்கும் யாரும் ஃபோன் செய்வதில்லை. எப்போதாவது அழைப்புகள் வரும். அதுவும் கூட ஏதேனும் விளம்பரம் தொடர்பானதாய் இருக்கும். ஆனால் இன்றைக்குக் கேசவன் அழைத்திருக்க வாய்ப்புள்ளது, காரணம் அவள் இன்றைக்கு அவனுக்கு ஒரு முடிவு சொல்லியாக வேண்டும். அதற்காகத் தனது அலுவலக வேலை முடிந்து மனைவியை அழைத்துக் கொண்டு ஏழு மணிக்கு மேல் வீட்டுக்கு வருவதாகவும் சொல்லியிருந்தான். அவன் வேலை பார்க்குமிடம் இந்தக் கிராமத்திலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்தது. அவனது வீடும் கூட அவனது அலுவலகத்துக்கு அருகேதான். இன்றைக்குத் இங்கு தங்கியிருந்து ஒரு முடிவைக் கேட்டுவிட்டு காலையில் செல்வதாகத் திட்டம். நிச்சயமாக வருவான். ஆனால் என்ன சொல்வது என்பதுதான் தங்கத்துக்குப் புரியவில்லை. ஆயாசமாய் தலையைத் தூணில் சாய்த்துக் கொண்டாள். பகல் முழுதும் வெயிலில் கிடந்திருந்த அந்தத் தூண் இன்னும் வெப்பம் மாறாமல், அதன் சூட்டை இவளது முதுகில் படர விட்டது.
ஏதோ சப்தம் அல்லது அழைப்பைக் கேட்டது போல், சட்டென எழுந்த நாய், கோயிலை நோக்கிப் புழுதி பறக்க வேகமாய் ஓடியது. அது செல்வதைப் பார்த்து விட்டு மீண்டும் குனிந்து நீருக்குள் மிதந்த தனது பாதங்களைப் பார்த்தாள். வெகு நேரமாகத் தொங்கவிட்டதன் காரணமாகக் கால்கள் மரத்துப் போனது போல் இருக்கவே, கால்களைத் தூக்கி மடக்கி அமர்ந்தாள். இதுவரை பாதங்களைச் சுற்றி வந்த மீன்கள், அவற்றைக் காணாமல் இங்கும் அங்கும் தேடுவது போல் சுற்றி விட்டு வேறு பக்கம் கலைந்து போகத் துவங்கின. இதே ஆற்றங்கரைக்கு கேசவன் சிறு வயதாக இருக்கும்போது அடிக்கடி அழைத்து வந்தது நினைவுக்கு வந்தது. மாமியார் துணையுடன் கேசவனை அழைத்து வருவாள். அவளது கணவர் நன்றாக நீச்சல் அடிக்கக் கூடியவர் என்பதால் தினமும் இங்குதான், இதே கரைக்குத்தான் குளிக்க வருவார். அவர் பலமுறை முயற்சி செய்தும் கேசவனுக்கு நீச்சல் வரவேயில்லை. இதே இடத்தில் கரை புரண்டு ஆற்று நீர் ஓடிய ஒரு மழைக் காலத்தில், மூழ்கிக் குளித்த கணவர் மீண்டும் கரையேறவேயில்லை. ஊரே இறங்கித் தேடியும் அவர் கிடைக்கவேயில்லை. வெள்ளம் வடிந்த பிறகான இரண்டு நாட்கள் கழித்துப் பக்கத்து ஊரின் பாலத்துக்கு அடியில் உடல் ஊறிச் சிதைந்து கிடப்பதாகத் தகவல் வந்தது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வீட்டுக்கு அவரது உடல் ஒரு பெரிய பொட்டலமாக வந்து சேர்ந்தது. அவரது இறந்த முகத்தைப் பார்க்கவில்லை என்பதால் இவளுக்கு நம்பவே முடியவில்லை, இன்னமும் அப்படித்தான். அந்தச் சம்பவம் ஒரு கனவு போல்தான் இருக்கிறது. அதன்பிறகு இந்த மண்டபக் கரைக்கு இவள் வந்து போன நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
வாகனம் ஒன்றின் சத்தம் கேட்டு, பெருமூச்சுடன் நிமிர்ந்தவளுக்கு, கோயில் வாசல் தென்பட்டது. அவ்வழியாகச் சென்றிருந்த ஒரு தம்பதியினர் ஸ்கூட்டரை நிறுத்தி உள்ளே செல்வது தெரிந்தது. பார்ப்பதற்குப் புதிதாய்த் திருமணமானவர்கள் போல் தெரிந்தது. பூஜை முடித்து வீட்டுக்குக் கிளம்பத் தயாராகி வெளியே வர முற்பட்ட கோயில் அர்ச்சகர், இவர்கள் வருவதைக் கண்டு ஏதோ விசாரித்தபடி மீண்டும் உள்ளே செல்வது தெரிந்தது. இவள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். கேசவனும் அவனது மனைவியும் நினைவுக்குள் வந்தனர்.
கேசவனுக்கு திருமணம் மட்டுமல்ல, காலம் தவறாமல் முறை தவறாமல் எல்லாமே நல்லபடியாகத்தான் நடந்தது. படிப்பு முடிந்த கையுடன் வேலை உடனே கிடைத்துவிட்டது.
‘ஏன் கேசவா, தெனமும் அவ்ளோ தூரம் போயிட்டு வர்றது கஷ்டமாச்சேடா..’ இவள் வருத்தம் காட்டியபோது, ‘ அட, இதெல்லாம் ஒரு கஷ்டமாம்மா.. இந்தக் காலத்துல வேலை கெடைக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா.. எங்கூட படிச்சவன்லாம் ஊர் ஊரா இன்னும் தேடிட்டிருக்கான்.. எனக்கு நம்ம ஊருக்குப் பக்கத்துலயே கெடைச்சிருக்கு, அதுவும் பத்து மைல் தூரந்தான்.. சைக்கிளை ஒரு மிதி மிதிச்சா வந்து சேரப் போறேன்.. வேணா இனிமே பஸ்ல போறேன்..’ என்றான்.
‘அதுக்கில்லடா, எங்களுக்காக சிரமப்பட்டுக்கிட்டு தெனமும் உனக்கேன் அலைச்சல்னு கேக்கறா உங்கம்மா.. வாரம் ஒருக்கா வந்துட்டு போலாம்ல.. ஆபீஸ் பக்கத்துலயே ஒரு ரூம் எடுத்துக்கறது?’ எனத் தகப்பன் அறிவுறுத்தியபோது, ‘இப்ப என்ன நான் இங்க இருக்கறது ஒங்களுக்கு புடிக்கலியா.. அதெல்லாம் நான் பாத்துக்கறேம்ப்பா, சம்பாதிக்க ஆரம்பிச்சதும் பெத்தவஙகள விட்டுட்டான் பாருன்னு எல்லாரும் சொல்றதுக்கா? விடுங்கப்பா.. வருஷக்கணக்கா நீங்க ரெண்டு பேரும் வேலைக்காக பஸ்ல போயிட்டு வர்றப்ப, எனக்கென்ன நோவு வந்துதுன்றேன்?’ என அதட்டினான்.
கேசவன் வேலையில் கெட்டிக்காரனாய் இருந்தான். சட்சட்டென வேலையில் உயர்வு வந்தது. சம்பளம் ஏறியது. வங்கிகளில் பணம் சேமித்தான். அலுவலகத்துக்கு அருகிலேயே மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து ஒரு மனையை வாங்கிப் போட்டான். டாகுமெண்டை இவள் கைகளில் தந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான், ‘என்னதான் அப்பா சொத்து இருந்தாலும், என் சம்பாத்தியத்துல வாங்கறப்ப ரொம்ப திருப்தியா இருக்கும்மா’
மாமியார் சிரித்துக் கொண்டாள், அடுத்தநாள் ஒரு தரகரைக் கொண்டு வந்து அவனுக்கு முன்பாக நிறுத்தினாள், ‘உன்னைப் பெத்தவன் இல்லைன்னாலும், அவனைப் பெத்த எனக்கு ஒரு கடமை மிச்சமிருக்குல்ல’ என அர்த்தமாய் என்னைப் பார்த்துவிட்டு அவனிடம் கேட்டாள், ‘திருவையாத்துல ஒரு பொண்ணு இருக்காம்.. நல்ல வரன், தரகர் கொண்டாந்துருக்கார், படிச்சவ.. உங்கம்மா மாதிரியே குணம்.. உன் ஆபீஸ் இருக்குற ஊர்தான் அவங்களுக்கும்.. அவங்கப்பா அங்க கோர்ட்லதான் வேலை பாத்தாராம்..’
‘அங்கயேவா.. நல்ல ஊர்தான்..’ என அவன் தலையசைக்க, தரகரிடம் சொன்னாள், ‘பையனுக்கு சரின்னு சொல்லுங்கோ’
அடுத்து வந்த முகூர்த்த தினத்தில் கல்யாணம் ஆகி தேவகி அவனது மனைவியானாள். நிறைய சொந்த பந்தங்களுடன் கூடிய குடும்பம். கணவர் இருந்திருந்தால் அத்தனை பெரிய கூட்டத்திடம் பேசிப் பேசியே களைத்து மகிழ்ந்திருப்பார் என எண்ணினாள் தங்கம். அவருக்கு உறவுகள் மிகவும் பிடிக்கும், அவரைப் போலத்தான் கேசவனும் என்றே எண்ணியிருந்தாள் தங்கம். அவள் எண்ணியது தவறில்லை. அவனுக்கும் உறவுகள் பிடிக்கும்தான், ஆனால் மனைவி வழி உறவுகளை மட்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிச் சென்று மாலை ஏழு மணிக்கு வருபவன், ஐந்து மணிக்கே ஆஜரானான். வாரத்துக்கு ஒருநாள் தனது மனைவியோடு அவளது வீட்டுக்குச் சென்று வந்தான். சில நாட்களில் மதியச் சாப்பாடு மாமனார் வீட்டிலிருந்தே வந்து விட்டதாகப் பெருமை பேசினான். அவனுடைய மாமனார் அவருடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு அழைக்க வந்திருந்தார். அடுத்த நாள் தங்கத்துக்கு முன்பாக கேசவன் வந்து பீடிகை போடாமல் நேரடியாகவே கேட்டான்,
‘நேத்து தேவகியப்பா வந்துட்டு போனாரே.. இன்னிக்கு ஆபீஸ்க்கு வந்து எங்கிட்ட விவரமாப் பேசினார்.. அவரோட அந்த விசேசத்துக்கும்.. தேவகி தம்பிய மெடிகல் கலேஜ்ல சேக்கறதுக்கும்.. யார் யார்கிட்டயோ கடன் கேட்றுக்கார், ஒண்ணும் தேறல போலிருக்கு, அதான் நம்மகிட்ட..’
மாமியார் முந்திக்கொண்டாள், ‘நம்மகிட்ட ஏதுப்பா அவ்ளொ ரொக்கம்.. ரொம்ப அவசியம்னா நீயும் உங்கம்மாவும் லோன் போட்டுத்தான் உம்மாமனாருக்கு பணம் தரணும்’
சரியென்று உள்ளே சென்றவன், சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
‘தேவகி என்ன நெனக்குறான்னா.. ஏற்கனவே கல்யாணத்துக்காக லோன் போட்டாச்சு.. சம்பளத்துல இப்பவே ஏகப்பட்ட பிடித்தம்.. பத்தமாட்டேங்குது, அதான்.. அம்மன் கோயில் பக்கத்துல இருக்குற நம்ம நெலத்தை.. அது சும்மாத்தானேம்மா கெடக்கு?’
இவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்த நிலத்தை வாங்குவதற்கு அவளது கணவர் என்ன பாடு பட்டார் என்பது அவளுக்குத் தெரியும், ‘எனக்குத் தெரியலப்பா.. என்ன சொல்றதுன்னு’ தடுமாறினாள்.
‘எப்படியும் எனக்குத் தானம்மா வரப் போகுது, கஷ்டப்படறப்ப விக்கறதுக்குத்தான அதைல்லாம் வாங்கிப் போடறோம்?’ எனச் சமாளிப்புப் பேச்சுக்களைப் பேசினான்.
மாமியார் அழுதவாறே இவளைத் தனியே எச்சரித்தாள், ‘உனக்குன்னு ஒரு புடிமானம் இல்லாம எல்லாத்தையும் விட்றாதடி, பாத்துக்க’
தங்கத்துக்கு அவளது பள்ளியில் தேர்வு நேரம் என்பதால் அவனது மாமனார் வீட்டு விசேசத்துக்குப் போக முடியாமல் போனது.
‘உங்க கோவத்தை இப்படியெல்லாம் காட்டிக் கேவலப்பட்டுக்காதீங்க.. ஊருக்குத்தான் உபதேசம்’ என்று தேவகி முதன்முறையாக சண்டை போட்டாள். கேசவன் தனது மௌனத்தின் மூலமாக அவளுக்குத் தனது ஆதரவைக் காட்டினான்.
மாமியாருக்கு ஆஸ்த்துமா முற்றி மருத்துவமனையில் சேர்த்தபோது, தனது மனைவி வீட்டாருடன் ஆக்ரா டூர் சென்று வந்தான் கேசவன். ஒருவாரம் கழித்து வந்தவன், டூரில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களைக் காட்டிக் கதையளந்து, வீட்டை அழுகுபடுத்தும் அலங்காரப் பொருட்களைக் கடை பரப்பினான், ‘இந்த வீட்டுக்கு இதெல்லாம் செட்டாகாதும்மா, இதைல்லாம் மாட்றதுக்குன்னே ஒரு புதுவீடு கட்டணும் போல’ என்று அளந்தான். வாங்கி வந்த காஷ்மீர் சால்வைகளை அம்மாவுக்கும் பாட்டிக்கும் போர்த்திவிட்டு, ‘இப்ப உடம்பு எப்படியிருக்காம், டாக்டர் என்ன சொன்னாரு?’ என்றான் கடைசியாய்.
ஒருசில வாரங்கள் கழித்து தங்கத்தின் முன்னால் இனிப்பை நீட்டினான், ‘ஆபீஸ்ல ப்ரோமோஷன் வந்துருக்கு.. ஆபீசர் ரேங்க்.. சம்பளத்துல பெரிய சேஞ்சஸ் இல்ல, ஆனா வேலை அதிகம்.. நேரம் பத்தாது போல.. அதான், டெய்லி இனிமே இங்கேர்ந்து அவ்ளோ தூரம் போயிட்டு வர முடியுமான்னு டவுட்டா இருக்கு.. அவளுக்கும் அடிக்கடி டாக்டரைப் பாக்க அங்கதான் போகவேண்டியிருக்கு.. அதான் ஆபீஸ் பக்கதுலேயே ஜாகைய மாத்திக்கலாம்னு.. ஒரு யோசனை வந்துருக்கு..’
‘வாடகை வீட்டுக்கா?’
‘எதுக்கு வாடகை கொடுக்கணும், அதான் அப்பவே ஒரு மனைய வாங்கிப் போட்டேன்ல.. அது இதுக்குத்தான் போலிருக்கு.. அதுல சின்னதா இப்போதைக்கு ஒரு வீடு கட்டிக்கிட்டு, அப்பறம் தேவைன்னா விரிவு படுத்திக்கலாம்.. இது என்னோட ப்ளான்தான், இனிமேத்தான் எல்லார்கிட்டயும் சொல்லணும்’
தங்கம் அமைதியாகி விட்டிருக்க – மாமியார்தான் குரலில் தெம்பே இல்லாமல் கேட்டாள், ‘வீடு கட்டணும்னா கைல கொஞ்சாமவது தெம்பு வேணும்ல?’
‘பணத்துக்கு தேவகியப்பாவும் அவ தங்கச்சி புருஷனும் ஹெல்ப் பண்றதாச் சொன்னாங்க.. ஆனா அது எனக்கு சரியாப்படல.. நாளைக்கு யாராவது சொல்லிக் காட்டற மாதிரி ஆயிடும்.. அதான்..நானே என் கையக் கொண்டு பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நீயும் ரிட்டயர்டாகப் போறே.. பேசாம பாட்டிய அழைச்சுக்கிட்டு எங்கூடவே வந்துருங்க.. சேர்ந்து இருந்த மாதிரியும் இருக்கும், உங்களுக்கும் ஒத்தாசையா இருக்கும்..’
இப்போது மாமியார் குழம்பிப் போய் அமைதியாயிருக்க – தங்கம்தான் கேட்டாள், ‘வீடு கட்ட பணம் வேணுமேடா..’
‘நீங்களும் எங்கூட வர்றீங்கன்னா, அப்பரம் இந்த வீட்ல யாரு இருக்கப்போறா, இந்த வீடு என்னாத்துக்கு? இத வித்துதாம்மா அதக் கட்டணும்.. இப்படி கிராமத்துல இருக்கறத விட டவுன்ல இருக்கறதும் நல்லதுதான?
அன்றிரவு மாமியாருக்கு உடல்நலம் மேலும் குன்றியது, மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டாள், ‘என்னோட வயசான காலத்துல நீ இருக்குற மாதிரி, உன்னோட வயசான காலத்துல உனக்குன்னு ஒரு துணை இல்லாமப் போயிருச்சேடி..’
திணறலாய் மூச்சிறைப்புகளுக்கிடையே கூறியவள், விடியற்காலையில் இறந்து போனாள். அவளைச் சுடுகாட்டில் நெருப்புக்குத் தந்துவிட்டு, வீட்டுக்குள் வந்த கையோடு கேசவன் சொன்னான், ‘தேவகிக்கு நாள் தள்ளிப் போயிருக்காம்.. அவ வீட்ல போயி ரெஸ்ட் எடுக்கட்டும்..’
‘செத்துப்போன பாட்டித்தாண்டா வந்துருக்கா..’ உறவுகள் கொண்டாடின.
மனைவியுடன் ஊருக்குக் கிளம்பும் முன்பாக, இவளிடம் தனியே வந்து சொன்னான், ‘புதன்கிழமை அன்னிக்கு பேங்குக்குப் போகணும்மா.. வீடு விஷயமா ஒரு முடிவ சொல்லு.. செவ்வாய் அன்னிக்குச் சாயந்தரமா வர்றேன்..’
நாய் குரைத்தபடி மண்டபத்தை நோக்கி வர – இவள் கலைந்து ஏறிட்டாள். கோயில் கோபுரத்தில் மின்சார விளக்கெரிந்தது. சூழலில் பெருமளவு இருள் சேர்ந்திருக்க – ஆற்றின் கரையோரங்களிலிருந்து பூச்சிகளின் ரீங்காரம் துவங்கியிருந்தது.
கோயில் வாசல் யாருமற்று இருக்க – கதவைப் பூட்டிக் கொண்டு, சாவியை இடுப்பு வேட்டியில் சொருகிக் கொண்ட அர்ச்சகர், தனது சைக்கிளில் கையிலிருந்த தூக்கு வாளியை மாட்டிக் கொண்டு – கிளம்ப யத்தனித்து, நாயின் குரைப்புச் சப்தம் கேட்டு மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தார். இவளைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ, சைக்கிளைத் தள்ளிக் கொண்டு இவளை நோக்கி வந்து மண்டபத்தின் வெளியே நின்று சப்தமாய்க் கேட்டார்,
“என்ன டீச்சரம்மா, காத்து வாங்கறதுக்கு இங்க வந்து காலை நீட்டிட்டேள்.. வீட்டுக்குக் கெளம்பல?” என்றபடி பையிலிருந்த தொன்னையை எடுத்து அதில் வாளியிலிருந்த சர்க்கரைப் பொங்கலை வைத்தார். மண்டபத்தினுள் ஏறி இவளிடம் வந்து நீட்டி, “இன்னிக்கு உங்க புள்ளையாண்டான் உபயம்தான்.. ஏதோ வீடு கட்டப்போறானாமே..வேண்டிக்கிட்டி செஞ்சுருக்கான்.. இன்னிக்கு செவ்வாய்கிழமை சாயரட்சை பூஜைக்கு முடிஞ்சா வர்றதாவும் சொல்லிருந்தான், வரல”
“ஆபீஸ்ல லேட்டாயிருக்கும்” என வாங்கிக் கொண்டாள்.
“வீட்டுக்குக் கெளம்புங்கோ, இருட்டிடுத்தே..?”
“போகணும்..”
“வயசானவங்க, நல்லா வாழ்றவங்க ரொம்ப நேரம் இந்த மண்டபத்துல ஒக்காரக் கூடாது டீச்சர்.. கிளம்பிருங்கோ” என நகர முற்பட்டவரிடம், பேசுவதற்குக் களைப்பாய் இருந்தாலும் கேட்டாள்.
“ஏன்.. ஒக்காந்தா என்ன?”
செல்ல முற்பட்டவர் திரும்பினார், “டீச்சருக்கே தெரியலியாக்கும்.. பொறந்த ஊரா இருந்திருந்தா எப்படியாவது தெரிஞ்சிருக்கும், வாழ வந்த ஊர்தானேன்னு ஐதீகத்தக் கண்டுக்கல போல.. இந்த மண்டபத்தோட பேரே சொல்லுமே என்ன வெவரம்னு..”
“இதென்ன, ஏதோ தொரமண்டபம்னுதானே சொல்லுவாங்க? அதுல என்ன?”
“அது இந்தக் காலத்துல மாறிவந்த பேரு.. நெஜமான வார்த்தை துறவு மண்டபம்.. வீட்ல வச்சு பாத்துக்க முடியாத, வாழ முடியாத பெரியவாளையும், சீக்காளிகளையும் இங்க கொண்டு வந்து விட்ருவாங்க.. கொஞ்ச நாள் கோயில் சோறு, அப்பறம் பகவான் அவர்கிட்ட அழைச்சுப்பார்.. பக்கத்துலதான மயானம்.. ஈஸியா வேலை முடிஞ்சுரும் பாருங்கோ.. அதுக்காகக் கட்டிவச்ச மண்டபம், மருவிப் போயி தொரமண்டபமா ஆயிருச்சு…” சிரித்துக் கொண்டவர், “செரி, கெளம்பலாம்.. நா வேணா அந்த முனை வரைக்கும் தொணைக்கு வர்றேன், வாங்கோ”
“இல்ல, நீங்க போங்க.. இதோ கெளம்பிடுவேன்”
அவர் சைக்கிளில் ஏறிச் செல்ல – அவர் மறையும்வரை யோசனையாய்ப் பார்த்தாள். அவள் உருவமே தெரியாத அளவுக்கு மண்டபத்தினுள் இருள் படரத் துவங்கியிருந்தது.
அவர் தந்துவிட்டப் போன பொங்கலைச் சாப்பிட மனமின்றி ஓரமாய் வைக்க –சற்றுத் தள்ளி நின்றிருந்த நாய் அருகே வந்தது. அவள் விரட்ட மாட்டாள் என்பதையறிந்தது போல் பொங்கலை கவ்விக் கொண்டு மண்டபத்துக்கு வெளியே சென்றது.
இவளுக்குள் களைப்பு மிகுதியாய் மேலிட – தூணில் இன்னும் சரிந்து அமர்ந்து கொண்டாள். தனது இரு பக்கமும் பார்த்தாள். இடது பக்கம் ஆறு, வலது பக்கம் ஊர். சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள். பொங்கலைச் சாப்பிட்டிருந்த நாய், மீண்டும் மண்டபத்தினுள் ஏறி வந்து ஓரமாய்ப் படுத்துக் கொண்டது. இரவின் சலனங்கள் மண்டபத்தைச் சுற்றிலும் நிகழத் துவங்கியிருந்தன.
கண்களைத் திறக்க முடியாதபடி பாரம் இறங்கிய உணர்வுடன் சாய்ந்திருந்த தங்கத்தின்மனதுக்குள் தொடர்பற்ற பல சிந்தனைகள் மாறி மாறி வரத் துவங்கின. காற்று குளிர்ச்சியாய் வீசினாலும், இவளுக்கு அதிகமாய் வியர்ப்பது போலிருந்தது. ஆற்று நீரில் யாரோ நீச்சலடிப்பது போல் உணர்ந்தாள்.
குளித்துவிட்டுக் கரையேறும் ஈரமான காலடிகளின் ஓசை தன்னை நெருங்கி அருகே வந்து நிற்பது போலிருந்தது. வருடக் கணக்கில் பழக்கமான வாசனை.. காதருகே ஒலித்த பழக்கமான ஆனால் தெளிவற்ற ஆண் குரல் ஏதோ பேசுவது போலிருக்க – இவளுக்குள் பதட்டம்.. விழிக்க முற்பட்டாலும் உடல் இயக்கங்கள் ஒத்துழைக்க மறுத்து இறுகிப் போயிருக்க – யாரோ நெஞ்சின் மீது ஏறியமர்ந்து அழுத்திக் கொண்டிருப்பது போலிருந்தது. வியர்வை அதிகமாய்ப் பெருக்கெடுக்க – வாயைத் திறந்து மூச்சை இழுத்து வெளியிட்டாள். கேசவன் குழந்தையாக இருந்தபோது அவனுக்கு சாமிபத்தர் காத்தவராயன் கதையைச் சொல்லிக் கொண்டே காது குத்தியது நினைவுக்கு வந்தது. கேசவன் வீட்டுக்கு வந்ததும் இவளிடம் கேட்டான், ‘நல்லவங்கள எதுக்கும்மா கழுமரத்துல ஏத்துனாங்க?’ அவனது புத்திசாலித்தனத்துக்கு வீடே சிரித்தது உள்ளுக்குள் தோன்றி மறைந்தது. தேவகி கையில் குழந்தையுடன் வந்து போனாள். காதோரம் ஒலித்த குரல் இப்போது தெளிவாய்க் கேட்க – அது கணவரின் அழுகையாக இருப்பது. ‘என்னங்க இது சின்னப் புள்ள மாதிரி’ என இவள் அவரது கண்ணீரைத் துடைக்க இடது பக்கம் திரும்பினாள்.
உறங்கிக் கொண்டிருந்த நாய், ஆற்று நீரில் தொபீரென ஏதோ விழும் சப்தம் கேட்டு விழித்துப் பார்த்து, எழுந்து நின்றது.
காத்திருந்து காத்திருந்து வீட்டின் திண்ணையிலேயே உறங்கிப் போயிருந்த கேசவனுக்கு நள்ளிரவில் விழிப்பு வந்தபோது – தூரத்தில் ஏதோ நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது. புரண்டு படுத்து மீண்டும் உறங்கத் துவங்கினான்.
– பிரியா கிருஷ்ணன்