\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிக் காதல்

ன்னா… என்ன பண்ணிண்ட்ருக்கேள்?” .. கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்‌ஷ்மி. இரவு உணவு முடித்து, டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு, ஆர்ட் புக்கில் எதையோ வரைந்து கொண்டிருந்த கணேஷ், “ஒண்ணுமில்லடி, ஏதோ படம் போட்டிண்டிருக்கேன்…” என்றான்.

அருகே வந்து என்னவென்று பார்க்க எத்தனித்தாள் லக்‌ஷ்மி. உடனடியாகப் புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்து, அவளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டான். 

“என்ன.. என்ன அப்டி….. நேக்குக் காட்டக் கூடாதோ?” 

“இல்லடி… சர்ப்ரைஸ்…” கணேஷ்.

“சர்ப்ரைஸ் … ஓ… அப்டியா… நாங்கூட ஏதோ ஒரு மாதிரியான படமோன்னு நெனச்சுட்டேன்” என்று அவனை வெறுப்பேற்றினாள். “ஆமா, இப்ப என்னத்துக்கு சர்ப்ரைஸ்?” என்றவளை எரித்து விடுவது போலப் பார்த்தான் கணேஷ்.

“நெஜம்மான்னா … என்னத்துக்கு இப்போ சர்ப்ரைஸ்?..” என்றாள்.

“ஏண்டி… நோக்கு நிஜமாவே மறந்து போச்சா?” என்றவனைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கி, இல்லையெனக் குறிப்பிட்டாள்.

“நேக்கு என்னமோ நீ பொய் சொல்றேனு தோண்றது…. இருக்கட்டும் இருக்கட்டும் .. நானே சொல்லிடறேன்… நாளைக்கு ஃபிப்ரவரி பதினாலு ..” என்றவனை இடை மறித்து, “ஃபிப்ரவரில என்ன ஸ்பெஷல்? நம்மாத்து பர்த்டேஸ் எல்லாம் ஜனவரிலயே முடிஞ்சுடுத்தே…. ” என்றாள்.

இவளுக்கு நிஜமாகவே நினைவில்லையா, நம்மிடம் நடிக்கிறாளா என்று இன்னும் உறுதியாகத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான் கணேஷ். யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு மனத்திரையில் சென்ற 20 வருட ஃபிப்ரவரி 14 நினைவில் வந்தது.

மொத்தச் சென்னையும் கூடியிருந்த மெரினா கடற்கரையில், மொத்தமாய்ச் சூரியன் கடலடியில் சென்று பதுங்குகிற வேளையில், சித்தம் முழுதும் அவனிடம் கொண்டதால் வந்த பித்தத்தை ஃபிப்ரவரி 14ல் வெளியிட்ட அவளா இவள்?

அமெரிக்கா வந்த புதிதில், காரோட்டத் தெரியாத நிலையில், நண்பனின் மனைவியைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு சென்று, நூறு டாலர் செலவு செய்து, டெட்டி பேர் வாங்கி வந்தவளா இவள்?

படுக்கையறையின் கதவுக்குப் பின்னால், பல அலங்காரங்களையும் செய்து, ஊதிய பலூனுக்குள் வாழ்த்தும் வண்ண நிறத் துகள்களையும் நிரப்பி, கதவு திறக்கையில் ஊசி ஒன்று பலூனைக் குத்திக் கிழிக்க, அவை அவன் தலைமீது விழுமாறு ஏற்பாடு செய்து ஃபிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடியவளா இவள்?

பலப் பல பரிசுகளையும், அவனுக்குத் தெரியாமல் வாங்கி வந்து, அவனிடம் சர்ப்ரைஸாக ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி 14இல் கொடுத்து மகிழ்ந்தவளா இவள்?

கணேஷுக்குப் புரியவில்லை. ஏதேனும் சர்ப்ரைஸ் இந்த முறையும் வைத்திருப்பாள். பொதுவாக, இருபது வருட மண வாழ்க்கையில் வந்த பிறந்த தினங்கள், திருமண நாட்கள், புது வருடப் பிறப்பு, காதலர் தினம் என்று எந்த தினங்களிலும் இவனுக்குத் தேவையான, இவனுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்து வாங்குவதில் அவளுக்குச் சிரமமே இருந்ததில்லை. அவனுக்குத்தான் ஒவ்வொரு முறையும் பெரும் பிரச்சனை. அந்தத் தினங்களுக்கு சில நாட்களுக்கு முன்னாலேயே தொடங்கி விடுவான். ஜாடை மாடையாகப் பேசி, அவளிடமிருந்தே கறக்க முயல்வான். குழந்தைகளின் உதவியை நாடுவான். பொதுவாக என்ன வேண்டுமென்று கண்டுபிடிக்க இயலாது, ஏதேனும் ஒன்றை வாங்கி வருவான்; அவனது மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே அவளும் அதனை சர்ப்ரைஸாகவும், தனக்கு மிகவும் வேண்டியதாகவும், பிடித்ததாகவும் இருப்பதாகக் கூறிக் கொள்வாள். இப்படியே இருபது வருடம் ஓடி விட்டது. இந்த வருடம், ஃபிப்ரவரி 14 நினைவிலில்லை என்கிறாளே? 

“ஏண்டி, வேலண்டைன்ஸ் டே நிஜமாவே நெனவுல இல்லயா?” இனிமேலும் ஜாடைமாடையாகக் கேட்பதால் பலனில்லை என்று, நேரடியாகவே கேட்டுவிட்டான்.

“ஓ மை காட்…. ஓ மை காட்…. நாளைக்கா? இன்னைக்கு தர்ட்டீன்த்தா? ஐயையோ… மார்னிங்க் வேலண்டைன்ஸ் டே? ஐ ஹேவிண்ட் காட் எனிதிங்க் ஃபார் யூ… இப்ப கடையெல்லாம் க்ளோஸ் பண்ணியிருப்பாளே…. ஓ … நெவர் ஹேப்பண்ட் பிஃபோர்…” புலம்பிக் கொண்டே போனாள். 

அவள் சொல்வது உண்மையைப் போலத் தோன்றினாலும், அவனால் நம்ப முடியவில்லை. ஏதேனும் கிஃப்ட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லை, ஆனாலும் காதலை வெளிப்படுத்த என்றே மாறிப் போன இந்த நாளில் காதலனான தனக்கு ஏதேனும் வைத்திருக்காமல் போவாளோ?

அவளும் பித்துப் பிடித்தவளாய்ப் புலம்பிக் கொண்டே, படுக்கையறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டாள். பார்ப்பதற்குச் சற்று வேடிக்கையாக இருந்தது கணேஷுக்கு. மூடப்பட்ட பெட் ரூமின் வெளிப்புறக் கதவையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தனது ஆர்ட் புக்கை நோக்கிக் கவனத்தைத் திருப்பினான்.

லக்‌ஷ்மி, சிறு குழந்தையிலிருந்து சித்திரம் வரைந்து பழக்கப்பட்டவள். ஆர்ட் பேப்பரில் தொடங்கி, கேன்வாஸ், க்ளோத்ஸ் எனத் தொடங்கி, கொப்பரைத் தேங்காயில் தோலை உரித்துப் படங்களை வடிப்பதில் தொடர்ந்து, வீட்டின் சுவர்களில் லைஃப் சைஸ் ராதா கிருஷ்ணாவை பெயிண்டிலேயே வரையும் அளவுக்குத் தேர்ந்தவள். கணேஷுக்குக் கையில் ஒரு ஸ்கேலும் பென்சிலும் கொடுத்து, ஒரு பேப்பரில் நேர் கோடு போடு என்றால் போட இயலாது. ரசமட்டத்தைத் துணைக்குத் தர வேண்டும், அவ்வளவு ‘திறமை’சாலி. ஏதோ இந்த லாக்டௌன் தினங்களில், வீட்டில் இருந்து கொண்டு காலத்தைக் கடத்துகையில், லக்‌ஷ்மியின் ஊக்குவிப்பால், அவளின் படத்தைப் பார்த்துக் கொண்டே  ஒரு படம் வரையத் தொடங்க, அந்தப் படமும் பார்ப்பதற்கு சுமாராக அமைய, அதையும் ஒரு ஐம்பது நண்பர்கள் ஃபேஸ்புக்கில் ‘லைக்’ போட்டு வைக்க, தன்னையும் ஒரு ரவி வர்மாவாக எண்ணிக் கொண்டு, மனைவிக்கு, வேலண்டைன்ஸ் டே கிஃப்ட்டாக அவளுக்குப் பிடித்த ரெட் ரோஸ் பொக்கே படத்தை வரைய அமர்ந்திருந்தான்.

ஒவ்வொரு முறையும் எரேஸர் வைத்து அழிக்கும் நிலை வருகையில், “தேவையாடா இது?” என்று மனசாட்சி கேட்க, சற்றுப் பிரயத்தனத்துடன் அதனை பேக் செய்து அனுப்பிவிட்டு, விக்ரமாதித்தன் தோள் வேதாளமாக முருங்கை மரம் ஏறிக் கொண்டிருக்கிறான் இன்று மாலையிலிருந்து. இப்பொழுது, மனைவி தனக்காக எதுவுமே வாங்கவில்லையெனத் தெரிந்த பிறகு, முழுமையாக நம்பா விட்டாலும், ஒரு மகிழ்ச்சி. எவ்வளவு கேவலமாகப் படம் வரைந்தாலும், அவள் வெறுங்கையாய் நிற்கையில் கொடுக்கும்போது ஒரு பெருமிதமாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து கொண்டான்.

இன்னும் பலமுறை கஜினி முகம்மதுவாய்ப் படையெடுத்து, ஒரு வழியாக வரைந்து முடித்து, மூடி வைத்து, அவளுக்குத் தெரியாமல் அதனை ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு, படுக்கையறையில் நுழைந்து, அவளருகே செட்டில் ஆனான். 

அவள் பின்புறத்தைக் காட்டிக் கொண்டு படுத்திருந்தாலும், முன்புறம் சோகமாக இருப்பது அவனுக்குத் தெரிந்தது. “சரி சரி, விடு… வேலண்டைன்ஸ் டேக்கெல்லாம் என்ன செண்டிமெண்ட்… ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்… ” எனத் தனது வியாக்யானத்தைத் தொடங்குவதற்கு முன்னர், அவள் பட்டெனத் திரும்பி, “போறும், போறும்… ரொம்பப் பெரிய மனசுதான்… சும்மா வெறுப்பேத்தாம படுத்துத் தூங்குங்கோ… மொதல்ல கடை திறந்தவுடன ஏதாவது வாங்கிண்டு வந்துட்டுத்தான் உங்க கிஃப்ட்டை நான் பாப்பேன்… ” சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

திரும்பிய வேகத்தில், அதிர்ந்தெழுந்த படுக்கையில் பாலன்ஸ் செய்து, அந்தப் பின்னழகை ரசித்துக் கொண்டே, “அதெல்லாம் எதுக்குடி… நாமென்ன டீனேஜ் லவர்ஸா.. வேணா விடு, நான் போட்ட ஆர்ட்ட அப்புறமாத் தரேன்… ” எவ்வளவு முயன்றும் குரலிலிருந்த எகத்தாளத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை கணேஷால். அது விளங்காத அளவுக்கு அப்பாவியுமில்லாத அவள் பொறுமிக் கொண்டே உறங்கிப்போனாள். 

றுநாள் காலை… ஃபிப்ரவரி 14 … வேலண்டைன்ஸ் டே .. உலகம் முழுக்க அன்புக்கு உரித்தான நாளாகக் கொண்டாடப்படும் அந்த நாள் இந்தியாவில் மட்டும் “காதலுக்கான” நாளாகக் கொண்டாடப்படுகிறது. காதல் என்பதும் அன்புதான் என்று பொருள் பட்டாலும், பொதுவாக அதன் புரிதல் மாறுபட்ட பாலருக்கு இடையே, பாலுணர்வுடன் கூடிய ஒரு அன்பு என்பதே.

தூக்கத்திலிருந்து எழுந்த கணேஷ், எதேச்சையாகப் புரண்டு படுக்க, கைகள் தானாக மனையாளை அணைக்கச் செல்ல, பக்கத்தில் யாரும் இல்லாததை உணர்ந்து உடனடியாக எழுந்தான். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் கடைக்குப் போய்விட்டாளா? பொருள் கொடுத்தால்தான் காதலென்று நினைத்து விட்டாளா, என்று மனதில் நினைத்துக் கொண்டே எழுந்து, அவிழ்ந்து விட்டிருந்த வேஷ்டியைச் சரி செய்து, இழுத்துக் கட்டிக் கொண்டான். காதலுக்குப் பொருள் தேவையா என்ற கேள்வியைவிட, கிஃப்ட் வாங்காதவளிடம் தனது ட்ராயிங்க்கைக் கொடுத்து அசத்தலாம் என்று நினைத்திருந்த ப்ளான் பலிக்காமல் போனதோ என்ற வருத்தமே அவனுக்கு.

நினைத்துக் கொண்டே கழிவறை சென்று விட்டு, ஒரு ரவுண்ட் காலர் டி.ஷர்ட்டை மாட்டிக் கொண்டு, காஃபி தயாரிக்கலாமென்று கிட்ச்சன் சென்றவனுக்கு சர்ப்ரைஸ் காத்திருந்தது. கிட்ச்சன் கௌண்டர் டாப்பில், மடித்து வைக்கப்பட்ட வெள்ளைக் காகிதம் காற்றில் மெதுவாகப் பறந்து கொண்டிருந்தது …

சினிமாவில் வருவதுபோல விபரீதமான சிந்தனைகளெல்லாம் ஏதும் வரவில்லை. என்ன பேப்பர் இது என்று ஒரு சாதாரண க்யூரியாஸிட்டி மட்டுமே. உடனடியாக எடுத்துப் படிக்க … 

 

விழி மூடும்போதும் உன் உருவமே!

கனாக் காணும்போதும் உன் ஆட்சியே!

இருந்தாலும் நீ என் இதயச் சிறைவாசியே!

உன் பெயர் முதல் எழுத்துப் போதுமே!

என் இதழ்ப் புன்னகை பாடுமே!

உன் குரல் வீசிய ஒருசொல் போதுமே!

என் உள்ளம் அடையும் பேரின்பமே!

உன் பார்வை ஸ்பரிஸம் போதுமே!

என் மனம் தாங்கும் கோடித் துன்பமே!

நகம் பட்டால் வீணையின் தந்தியோ

விரல் தொட்டால் மெழுகின் பொம்மையோ

இதழ் சீண்டினால் கற்பூரத் தீயோ

மார்பில் அணைத்தால் கலந்திடுவேனோ

நீயின்றி ஒரு நொடியேனும் நானிருப்பேனோ!!!

    • லக்‌ஷ்மி

 

அழகான தமிழ்க் கவிதை ஆனால் ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. கவிதையின் முடிவில் தனது பெயரை எழுதி முடித்திருந்தாள் லக்‌ஷ்மி. கணேஷின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவர்களின் திருமணம் வரையில் தமிழறியாத லக்‌ஷ்மி, அவனிடம் தமிழ் கற்றுக் கொண்டவள். தமிழில் நன்றாகப் பேச முடிந்தாலும், சரளமாக எழுதப் படிக்க முடியாது. தமிழிலேயே அவளின் காதலைக் கவிதையாய்ப் படைத்து, தமிழ் சரளமாக எழுத வராத காரணத்தால் ஆங்கில எழுத்துக்களில் எழுதி, காதலர் தினப் பரிசாக வைத்திருக்கிறாள். அவளின் ஓவியக் கலையைக் கற்று, அவளுக்கே பரிசளிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அவனுக்கே தெரியாமல் அவன் உயிர்த் தமிழில் கவிதையைப் பரிசாய்த் தந்திருக்கிறாள். எண்ணிய மாத்திரத்தில் கண்களிலிருந்து நீர் கசியத் தொடங்கியது.

கிச்சனின் மறுபுறக் கதவைத் திறந்து கொண்டு வெளிவந்தாள் லக்‌ஷ்மி. “நீங்க படிக்கறச்ச ஒளிஞ்சிருந்து பாத்துண்டு இருந்தேன்… ஏன் என் தமிழ்க் கவிதை அவ்வளவு மோசமா, அழற அளவுக்கு?….. ” கிண்டலாகச் சொல்லிக் கொண்டே அணைத்துக் கொண்டாள் லக்‌ஷ்மி.

  • வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad