Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒரு குப்பை சமாச்சாரம் ..

உங்கள் வீட்டு முகவரிக்கு வரும் தபால்களில், வாரத்தின் சில நாட்களில் கட்டுக் கட்டாகத் தபால்கள் வருவதை உணர்ந்திருப்பீர்கள். ‘நேரடித் தபால்’, ‘ மொத்தத் தபால்’ போன்ற முத்திரைகளைத் தாங்கி வரும் இத்தபால்கள் நமக்கு அறிமுகமில்லாத, கேள்விப்பட்டிராத தனி நபர் அல்லது நிறுவனங்களிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும். சில சமயங்களில் உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தும், உங்களுடைய வாகனத்தின் தயாரிப்பு ஆண்டு மற்றும் மாடலைக் குறிப்பிட்டு வாகனக் காப்பீடு வாங்கச் சொல்லியும் கடிதங்கள் வரும்.  கிரெடிட் கார்டு சலுகைகள், காப்பீட்டுச் சலுகைகள், பட்டியல்கள், ஃப்ளையர்கள், கூப்பன்கள் என படையெடுக்கும் இவை எதுவுமே உங்களால் கோரப்பட்டவை அல்ல. நம்மில் பலர் இவற்றைப் பிரித்துக் கூடப் படிக்காமல் நேரடியாகக் குப்பையில் எரிந்திருக்கிறோம். குப்பைத் தபால் அல்லது குப்பை அஞ்சல் – இவற்றை அப்படித்தான் அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் Junk Mails. 

சில சமயங்களில் ‘தபால் வாடிக்கையாளருக்கு’ (Postal Customer) என்று பொதுவாக, பெயர் குறிப்பிடாமல் வந்தாலும், அநேகக் குப்பைத் தபால்களில் நம் பெயர் அல்லது நம் குடும்ப உறுப்பினர் பெயர் மற்றும் தெளிவான முகவரியோடு வருவது எப்படி என்று நாம் சிந்திப்பதில்லை. நமது கவனத்தைச் சிதறடித்து, நேரத்தை வீணடித்து எரிச்சலூட்டும் சிறிய அசெளகரியம் என்ற அளவில் நாம் இதைக் கடந்து போய்விடுகிறோம்.

குப்பை அஞ்சல் பற்றிய சில உண்மைகள்:

  • ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியனுக்கும் அதிகமான குப்பை அஞ்சல்கள் அமெரிக்காவில் வழங்கப்படுகின்றன.
  • அமெரிக்காவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான EcoCycle.org இன் கூற்றுப்படி, ஒருவர் தனது வாழ்க்கையின் எட்டு மாதங்கள் வரை குப்பை அஞ்சல்களைக் கையாள்வதில் செலவிட நேரும்.
  • சராசரி அமெரிக்கக் குடும்பம், ஆண்டுக்கு 848 துண்டுகள் குப்பை அஞ்சல்களைப் பெறுகிறது, இது ஆண்டுக்கு 1.5 மரங்களை அழிப்பதற்குச் சமம்.
  • 44 சதவிகித குப்பை அஞ்சல்கள் திறக்கப்படாமல் தூக்கி எறியப்படுகின்றன
  • குப்பை அஞ்சல்களில் சுமார் 60%, மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படாமல், நிலப்பரப்புகளை நிரப்புகின்றன என்று அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency – EPA)தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 பில்லியன் பவுண்டு கழிவுகளுக்குச் சமம். 
  • குப்பை அஞ்சல் ஒவ்வொரு ஆண்டும் 51 மில்லியன் மெட்ரிக் டன் பசுங்குடில் வாயுக்களை (Greenhouse gases) உற்பத்தி செய்கிறது. 9 மில்லியன் கார்கள் வெளியிடும் கரும்புகைக்குச் சமானம் இது. 

அமெரிக்கத் தபால் சேவையின் பங்கு

நாடு முழுதும் சுமார் 4000மறு சுழற்சி நிலையங்களை இயக்கி வந்தாலும், அமெரிக்கத் தபால் துறை மறைமுகமாக தனி நபரின் பெயர், முகவரியைத் தரவுத் தரகர்களுக்கும், சந்தைப்படுத்தி விளம்பரப்படுத்தும் நிறுவனங்களுக்கு உடந்தையாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு முறையும் வாடிக்கையாளர் ஒருவர் தனது முகவரியை மாற்ற வேண்டி விண்ணப்பம் நிரப்பும் பொழுதெல்லாம், அவரது புதிய முகவரியைத் தனது தரவுத் தளத்தில் சேர்க்கிறது. அவரது பழைய முகவரியை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் சிறிய தொகை செலுத்தி புதிய முகவரியைக் கோரினால், அவர்களுக்குத் தகவலை விற்கும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது அமெரிக்கத் தபால் துறை. முகவரி மாற்ற விண்ணப்பங்களில் ‘உங்கள் முகவரி யாருக்கும் விற்கப்படமாட்டாது’ என்று குறிப்பிட்டிருந்தாலும், மிகச் சிறிய எழுத்துகளில் “ஏற்கனவே உங்களது பெயர், பழைய முகவரி வைத்திருக்கும் அஞ்சல் முகவர்களுக்கு முகவரி திருத்தச் சேவைக்காக மட்டும்” என்ற விதிவிலக்கு அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் பத்தாண்டுகளுக்கும் முன்பு நீங்கள் வைத்திருந்த கிரெடிட் கார்டு நிறுவனம் தபால் துறையை அனுகினால் அவர்கள் எளிதில் உங்களது தற்போதைய முகவரியைப் பெறலாம்.

மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு வழக்கமான ‘முதல் தர அஞ்சல்’ (First Class Mail) சேவை வெகுவாகக் குறைந்து விட்ட பின்னர், அமெரிக்கத் தபால் சேவை நிறுவனம், வியாபார நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு ‘நிலையான அஞ்சல்’ (Standard Mail) என்ற பெயரில் குப்பை அஞ்சலுக்குத் துணை போகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு நபரின் பெயரைக் குறிப்பிடாமல் அனுப்பப்படும் தபால்களை நிராகரித்து வந்த தபால் நிறுவனம், 2020 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ‘தற்போதைய குடியிருப்பாளர்’ (Current Resident) என்று குறிப்பிட்டு அனுப்பப்படும் தபால்களுக்கென தனியான கட்டணத்தை நிர்ணயித்து வழங்கி வருகிறது. கூடவே உறையில்லாமல் அட்டைகளில் வரும் விளம்பரம், மொத்தமாக இவர்களிடம் வழங்கப்படும் ‘ஃப்ளையர்’ எனப்படும் துண்டறிக்கைகளையும் நம் வீட்டு தபால் பெட்டியில் நிரப்பிச் செல்கிறது அமெரிக்கத் தபால் சேவை நிறுவனம்.

நமது பங்கு 

துரதிர்ஷ்டவசமாக நம்மையறியாமல் நாமும் குப்பை அஞ்சல்கள் பெருகக் காரணமாக அமைகிறோம். எங்கோ ஒரிடத்தில் – உதாரணத்திற்கு ‘ஸ்வீப்ஸ்டேக்’ என்று நம் அதிர்ஷ்டத்தை சோதிக்கும் ஒரு வகையான  சூதாட்டத்தில் பரிசு பெற நாம் பெயர் / முகவரி / தொலைபேசி எண்ணைத் தந்து விடுகிறோம். பரிசு கிடைக்கிறதோ இல்லையோ நமது தனிப்பட்ட தகவல் பல விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இது போன்று சமூக ஊடகங்கள், வங்கிக் கணக்கு, பத்திரிக்கைச் சந்தா, தொலைக்காட்சி சேவைகளுக்காக நீங்கள் நிரப்பும் படிவங்களிலுள்ள தகவல் சந்தைப்படுத்துதல் பட்டியலில் (Marketing list) சேர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. பல நேரங்களில் இவை அடையாளத் திருட்டுக்கும் (Identity theft) வழிவகுத்து விடலாம்.

வர்த்தக நிறுவனங்கள் / வங்கிகள் / தொண்டு நிறுவனங்களின் பங்கு

மருத்துவமனை உட்பட நீங்கள் தொடர்பு கொள்ளும் பல நிறுவனங்கள் சில நேரங்களில் உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய பிற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது விற்கலாம். மேலும் இப்படிப்பட்ட தகவலைச் சேகரித்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, பாலினம், தேசியம், செலவுப் பழக்கம், பொருட்களை வாங்கும் பழக்கம் போன்ற தகவல்களைப் பரிசீலித்து விற்பதற்காகவே சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உதாரணத்திற்கு நீங்கள் ஏதேனும் புதிய பொருட்களை வாங்கியவுடன் உத்தரவாதத்துக்காக (Warranty) நிரப்பியனுப்பும் தகவல் உங்கள் வாங்கும் திறனையும், பாங்கையும் நிர்ணயிக்கும். அது போலவே சில வங்கிக் கடனட்டைகளும் ‘செலவுப் பரிசீலனை’ (spend analyzer) என்ற தோரணையில் உங்களின் தரவுகளை வகைப்படுத்தி விற்கின்றன. ரிவார்ட்ஸ் புரோகிராம் (Rewards Program) எனப்படும் விசுவாசத் திட்டங்கள் இதே காரியத்தை மிகத் துல்லியமாகச் செய்கின்றன. இவற்றை வாங்கி ஒருங்கிணைக்கும் தரவுத் தரகர்கள் தகவலைத் தகுந்த நிறுவனங்களைத் தேடிப் பிடித்து விற்கின்றன. இதனைத் தொடர்ந்து நீங்கள் விருப்பப்படும் பொருட்களின் விளம்பரத் துண்டறிக்கைகள் உங்கள் வீடு தேடி வந்து சேரும். 

ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை அளிக்கும்பொழுது நீங்கள் தரும் தகவல் மற்ற தொண்டு நிறுவனங்களுடன் பகிரப்படுகிறது. அந்நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு நாட்காட்டிகள், வாழ்த்தட்டைகள், முகவரி ஸ்டிக்கர்கள் போன்றவற்றை உங்கள் வீட்டுத் தபால் பெட்டிகளில் நிரப்பி விடுகின்றன. 

இது நடப்பதைத் தடுக்க

நீங்கள் ஒருபோதும் குப்பை அஞ்சலை நிறுத்த முடியாது என்றாலும், நீங்கள் பெறும் குப்பை அஞ்சலின் அளவைக் குறைக்க பின்வரும் முயற்சிகள் கை கொடுக்கும். 

1. டி.எம்.ஏ சாய்ஸ்

‘டைரக்ட் மார்கெட்டிங் எஜென்சி’ (DMA) எனப்படும் நிறுவனம் தற்போது ‘அசோசியேஷன் ஃபார் நேஷனல் அட்வர்டெய்ஸர்ஸ்’ (ANA)   நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் மொத்த சந்தைப்படுத்தல் அஞ்சலில் 80%கையாள்கிறது. இந்நிறுவனங்களின் ‘சாய்ஸ்’ என்ற இணையதளத்தில் குப்பை அஞ்சல்களைக் குறைக்க விரும்பும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரியை “அஞ்சல் அனுப்பாதீர்கள்” என்ற பட்டியலில் சேர்ந்து நிர்வகிக்கிறது. இப்பட்டியல் குப்பை அஞ்சல் அல்லது நேரடி அஞ்சல்களை கடன் சலுகைகள், பட்டியல்கள், பத்திரிகைச் சலுகைகள் மற்றும் பிற அஞ்சல் சலுகைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவு அஞ்சல்களையோ அல்லது அனைத்து நேரடிக் குப்பை அஞ்சல்களையோ தவிர்க்க வாடிக்கையாளர் பதிவு செய்து கொள்ளலாம். ஒரேயொரு விஷயம் இந்தப் பதிவை நீங்கள் மூன்று மாதத்துக்கொரு முறை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் குப்பை அஞ்சல் மீண்டும் படையெடுக்கத் துவங்கிவிடும்.

https://thedma.org/accountability/dma-choice/ 

2. கேட்டலாக் சாய்ஸ்

தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காக நிறுவனங்கள் படங்களுடன் கூடிய அடைவு அஞ்சல்களை அனுப்புவதுண்டு. உதாரணத்திற்கு ‘டார்கெட்’ எனும் தனியொரு நிறுவனமோ அல்லது பல சிறிய நிறுவனங்களின் விளம்பர ஏஜெண்டாகச் செயல்படும் ‘வேல்பாக்’ போன்ற நிறுவனமோ இவ்வகை கேட்டலாக் அஞ்சலை அனுப்பக்கூடும்.  இவற்றை நிறுத்த ‘கேட்டலாக் சாய்ஸ்’ நிறுவனம் உதவுகிறது. இதில் பதிவுசெய்து தேவையற்ற கேட்டலாக்குகளைத் தேர்ந்தெடுத்து வடிகட்டலாம்.

https://www.catalogchoice.org/

3. ஃபிளையர்கள்      

‘ஃபிளையர்’ எனப்படும் துண்டறிக்கைகள் பெரும்பாலும் உள்ளூர் சிறு / குறு தொழில் நிறுவனங்களை விளம்பரப்படுத்தி வரும். உதாரணத்திற்கு உள்ளூரில் இருக்கும் லாண்டரி, பீட்ஸா கடை, வாகன மெக்கானிக் அல்லது எலக்டிரிஷியன், ப்ளம்பர் சேவை போன்ற விளம்பரங்களை இவ்வகை ஃப்ளையர்களில் காணலாம். இவற்றை ஒருங்கிணைத்து, துண்டறிக்கை அச்சடித்து நம் வீட்டுத் தபால் பெட்டியில் சேர்க்கும் பொறுப்பை ‘ரெட் ப்ளம்’, ‘ரீடெய்ல் மீ நாட்’, ‘வேலாசிஸ்’, ‘வேல்பேக்’ போன்ற நிறுவனங்கள் ஏற்கிறார்கள். இவர்களது இணையதளத்துக்குச் சென்று ‘அஞ்சல் அனுப்ப வேண்டாம்’ என்று கோரலாம்.

https://www.retailmenot.com/everyday/unsubscribe

https://www.valpak.com/coupons/show/mailinglistsuppression

கூப்பன்கள் தேவைப்பட்டால், நமக்கு வேண்டிய கூப்பன்களை ‘டிஜிட்டல்’ வடிவில் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். உள்ளூர்ச் சேவைகளை ஒருங்கிணைத்து  விளம்பரப்படுத்தும் சில இணையதளங்களும் பிரபலமடைந்து வருகின்றன. 

www.rakuten.com

www.coupons.com 

www.angieslist.com

www.thumbtack.com

இவை சில நேரங்களில் உங்கள் மின்னஞ்சலை நிரப்பக் கூடும் என்பதால் பதிவு செய்யும் பொழுது கவனமாகயிருக்க வேண்டும். காகித அஞ்சல்கள் பூமிக்குச் சேர்க்கும் பாரத்தைக் காட்டிலும் மின்னஞ்சல்களின் தாக்கம் குறைவுதான் என்றாலும் மின்னஞ்சலில் இவ்வகைக் குப்பைகளை வடிகட்ட பல வழிமுறைகளும் உண்டு.  

4, தொண்டு நிறுவனங்களின் குப்பை அஞ்சல்

நீங்கள் நல்லெண்ணத்துடன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு நன்கொடை அளிக்கும் பொழுது உங்கள் தகவல் தொண்டு நிறுவனங்களுக்காகயிருக்கும் சந்தைப்படுத்துதல் பட்டியலில் சேர்க்கப்பட்டு அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் பகிரப்படுகிறது. பின்னர் இவர்கள் கையடக்க நாட்காட்டி, முகவரி லேபிள் போன்றவற்றை அனுப்பி, பணம் அனுப்பியாக வேண்டிய இக்கட்டான, குற்ற உணர்ச்சிக்குத் தள்ளிவிடுவார்கள். தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவது அவரவரின் தனிப்பட்ட விருப்பமென்றாலும் நீங்கள் அளிக்கும் தொகை எவ்வளவு பெரிதாக / சிறிதாக இருந்தாலும் தொடர்ந்து அழுத்தம் தரப்படுவதைப் பலர் விரும்ப மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக இவ்வகை மறைமுக அழுத்தத்தைத் தவிர்க்கவோ, தடுக்கவோ எளிதான வழியில்லை. டி.எம்.ஏ சாய்ஸ் போன்ற செயலிகளும் தொண்டு நிறுவனங்களின் குப்பை அஞ்சலை வடிகட்டுவதில்லை. 

நேரடியாக இத்தொண்டு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, இவ்வகை அஞ்சலைத் தவிர்க்குமாறு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் பெறும் அச்சடிக்கப்பட்ட நாட்காட்டி, முகவரி லேபிள்களை அவர்களுக்குத் திருப்பியனுப்புவதும் உதவக்கூடும். 

5. அங்கீகரிக்கப்பட்ட கடனட்டை (கிரெடிட் கார்ட்) அழைப்புகள்

உங்களின் கடன் ஆளுமை வரலாற்றை மூன்று பெரிய கடன் பணியகங்கள் நிர்வகித்து வருகின்றன. கடனட்டை மூலமாகவோ, வங்கிக் கடன் மூலமாகவோ நீங்கள் செய்யும் அன்றாட செலவுகள் மற்றும் கடன்களைக் கண்காணித்து வரும் இந்நிறுவனங்கள் மூன்று மாதத்துகொரு முறை உங்களது ‘கிரெடிட் ரேட்டிங்’ எனப்படும்  மதிப்பீட்டுப் புள்ளிகளை வெளியிடுகின்றன. இவற்றைக் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வரும் கடன் நிறுவனங்கள் உங்களுக்கு கடனட்டை அல்லது கடன் வாய்ப்புகளை அஞ்சல்கள் மூலமாக வாரி வழங்குகின்றன. இவற்றை நிறுத்த1-888-567-8688 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கீழ்க்காணும் இணையமுகவரியில் விண்ணப்பிக்கலாம். 

www.optoutprescreen.com

6.உத்தரவாதப் பதிவுகள் 

பொதுவாக நீங்கள் ஒரு வீட்டு உபயோகப் பொருளை வாங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தப் பொருள் பழுதுபட்டால் அதனை நிவர்த்திக்கவோ புதிய பொருளைத் தரவோ தயாரிப்பு நிறுவனங்கள் முன் வரும். இதற்கென, பொருட்களை வாங்கும் பொழுது உங்கள் தகவலை, ரசீதுடன் பதிவு செய்யுமாறு பதிவட்டையும் இணைக்கப்படும். இந்தத் தகவலை அந்தத் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக நிர்வாகம் செய்யாமல் இதற்கான ஏஜென்சிகளிடம் விட்டு விடுவர். இத்தகைய முகவர்கள் உங்களது தகவலை மற்ற நிறுவனங்களுக்கு விற்று விட, அவர்கள் உங்களுக்குக் குப்பை அஞ்சல்கள் அனுப்பத் தொடங்கிவிடுகிறார்கள். 

உண்மையில் உங்களது பொருளுக்கான உத்தரவாதத்தைப் பெற நீங்கள் தனியாகப் பதிவு செய்ய வேண்டியதில்லை என்கிறது சட்டம். நீங்கள் வாங்கும் பொருளைப் பொறுத்து அல்லது அதன் தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்புறுதியைப் பொறுத்து இது வேறுபடலாம் என்றாலும் பெரும்பாலான பொருட்களுக்கு, நீங்கள் அவற்றை வாங்கும் பொழுது தரப்படும் ரசீது மட்டுமே உத்தரவாதத்துகுப் போதுமானது.

பொருட்களின் உத்தரவாதப் பதிவுகள், ஒருவேளை நீங்கள் வாங்கிய பொருளை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற நேர்ந்தால் (Product recall) அந்தச் சமயத்தில் அவர்கள் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவக்கூடும். 

7. ஸ்வீப்ஸ்டேக்குகள் (SweepStakes)

 அதிர்ஷ்ட ஆசை காட்டி உங்களது தகவலுக்காகத் தூண்டிலிடும் ஸ்வீப்ஸ்டேக்குகள் லாட்டரி அல்லது சூதாட்டத்துக்குச் சமமானவை. நீங்கள் ஒரு ஸ்வீப்ஸ்டேக் போட்டியில் பங்கேற்க அளிக்கும் தகவல் ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதே நலம். 

8. நுகர்வோர் ஆய்வுகள் 

உத்தரவாதப் பதிவட்டைகளோடு சில சமயங்களில் நுகர்வோர் ஆய்வுப் படிவங்களும் இணைக்கப்பட்டிருக்கும். தனி நபர்களின் தயாரிப்பு விருப்பத் தேர்வுகள் பற்றிய ஆழமான தகவல்களைச் சேகரிக்க நுகர்வோர் ஆய்வுகள் மற்றொரு சந்தைப்படுத்தல் கருவியாகும். நேரடி அஞ்சல், மின்னஞ்சல் மூலமாகவோ உங்களை வந்தடையும் இத்தகைய ஆய்வுகள் பெரும்பாலும் பதிலளிப்பவருக்கு இலவசக் கூப்பன்கள் அல்லது படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு ஈடாக ஒரு ஸ்வீப்ஸ்டேக்குகளை வெல்லும் வாய்ப்பை உறுதியளிக்கின்றன. நுகர்வோர் கணக்கெடுப்புகள் குடும்ப அமைப்பு, வருமானம், கல்வி, சுகாதாரத் தகவல்கள் மற்றும் தயாரிப்புக் கொள்முதல் பற்றிய விரிவான தகவல்களைக் கேட்கின்றன. பின்னர் இவை தேவைப்படாத குப்பை அஞ்சல்களை விளைவிக்கின்றன.

9. விற்பனைக்குப் பின்னர் தள்ளுபடியளிக்கும் கூப்பன்கள் (Mail in Rebate)

சில பொருட்களுக்கு நீங்கள் வாங்கும் பொழுதே தள்ளுபடி தராமல், பின்னர் ரசீதுடன் விண்ணப்பித்தால் தள்ளுபடித் தொகையை உங்களுக்கு அனுப்பும் உத்திகளையும் சில நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் வாடிக்கையாளர்கள் இவ்வகைத் தள்ளுபடிக்கு, குறிப்பிட்ட கெடுவுக்குள் விண்ணப்பிக்க மறந்து விடுவர். இது அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம். அப்படியே தவறாமல் $1 – $10 வரைக்கான தள்ளுபடியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களின் தகவல்களைத் தரவுத் தரகர்களுக்கு விற்பதன் மூலம் இந்த தள்ளுபடியை ஈடுகட்டிவிடுகின்றன இந்நிறுவனங்கள். இயன்றளவுக்கு இந்தத் தூண்டில்களில் சிக்காமல் இருப்பது நம் சாமர்த்தியம்.

21ஆம் நூற்றாண்டில், உலகம் பல மாற்றங்களைக் கண்டு,  முற்றிலும் தரவுத் தகவல்களைக் கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டது என்றாலும் மூலை முடுக்கெல்லாம் ஆக்கிரமித்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை நம்பாமல் இன்னும் அச்சடித்த காகிதத்தில் உழலுவது வேடிக்கையானது. அதிலும் அமெரிக்கா போன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட ஒரு வாழைப்பழத்திற்கு 2 செண்ட் தள்ளுபடி பெற அச்சடிக்கப்பட்ட கூப்பன்களைக் கத்தரித்து எடுத்துச் செல்வது வாடிக்கையாகயிருக்கிறது. இந்தக் கூப்பன்கள் கொண்ட புத்தகத்தை அச்சடிக்கும் செலவில் நேரடியாக அனைவருக்கும் இந்த 2 செண்ட் தள்ளுபடியை வழங்க நிறுவனங்கள் முன் வருவதில்லை. பத்துப் பேர் வாழைப்பழம் வாங்கினால் அதில் இருவர் மட்டுமே கூப்பன்களைப் பயன்படுத்தி தள்ளுபடி பெறுகிறார்கள் என்ற வியாபார உத்தி புரிந்தாலும், பத்து பேருக்காக நூறு கூப்பன் புத்தகங்கள் அச்சடிக்கும் செலவைக் குறைக்கலாம் அல்லது தேவைப்படும் கூப்பன்களை ‘QR Code’ முறையில் கைபேசியில் பெற்றுக் கொள்ளச் செய்யலாம். கைபேசி  மூலம் பணம் செலுத்துவதையே சாத்தியப்படுத்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அதே முறையில் தள்ளுபடி தருவதும் சாத்தியம் தான். ஆனால் அதைக் கடந்த காகித வர்த்தகக் கட்டாயம் இயங்கி வருகிறது என்றே தோன்றுகிறது. 

பல ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பிளாஸ்டிக், பேப்பர், உலோகப் பொருட்களை இறக்குமதி செய்து வந்த சீனா, சமீபத்தில் இந்த இறக்குமதிக்குத் தடை விதித்து விட்டது. மறுசுழற்சிக்குப் பெறப்பட்ட பொருட்களிலிருந்து வெளியாகும் நச்சு வாயுவைக் கட்டுப்படுத்த அதிக செலவாகிறதென்றும் இது மறுசுழற்சியின் அடிப்படைக் கொள்கையை பொய்யாக்குகிறது என்றும் சீனா காரணம் சொல்கிறது. அமெரிக்கா மறுசுழற்சிக்காக இப்போது வேறு சில நாடுகளை அணுகி வந்தாலும் காலப்போக்கில் மறுசுழற்சி என்ற தத்துவம் மரித்து விடக்கூடிய அபாயமுள்ளது. அதன் பின்னர் இவை எரிக்கப்பட்டோ, மண்ணில் நிரப்பப்பட்டோ சுற்றுச் சூழலுக்கு மேலும் கேடு விளைவிக்கலாம்!  

  • ரவிக்குமார்,

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad