Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தேர்தல் கூத்து 2021

தமிழ்நாட்டில் கொரோனாவை மிஞ்சியபடி தேர்தல் ஜூரம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் 16வது சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி கூட நடத்தி இருக்கலாம். அவ்வளவு வெளிப்படையாக இருக்கக் கூடாது என்பதற்காக 6ஆம் தேதி வைத்து இருப்பார்களோ, என்னமோ!!.

அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலைப் பற்றிக் கருத்து சொல்ல பயமாக இருக்கிறது. இந்திய இறையாண்மை என்று கடித்து வைத்து விடுவார்களோ என்று டெரராக இருக்கிறது. ஆளுங்கட்சியை ஒண்ணும் சொல்லாத வரை ஆபத்து இல்லை என்று நம்பலாம்.

கடந்த ஒரு தலைமுறையாகத் தமிழக அரசியலைத் தங்களது கைகளில் வைத்து உருட்டிக்கொண்டு இருந்த இருபெரும் அரசியல் தலைவர்களான கருணாநிதி அவர்களும் ஜெயலலிதா அவர்களும் மறைந்த பின் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. போன சட்டமன்றத் தேர்தல் வரை கலைஞரின் பின்னால் இருந்த ஸ்டாலின் அவர்களும், யார் என்றே தெரியாமல் இருந்து பின்பு முதல்வராக உயர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இத்தேர்தலில் அடுத்த முதலமைச்சராவதற்குப் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் முதல்வர் போட்டியில் டிடிவி தினகரன், சீமான், கமலஹாசன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஐந்து முனை போட்டி என்று சொல்லிக்கொள்ளலாம் என்றாலும் நிஜ கள நிலவரத்தை வைத்துப் பார்த்தால் இருமுனை போட்டி என்றே கூற வேண்டியுள்ளது.

திரும்பவும் அதே இரண்டு கட்சிகளா என்ற சலிப்பு ஒரு சாராருக்கு ஏற்பட்டாலும், அந்த இரண்டு கட்சிகளைத் தாண்டி தமிழ்நாடு முழுமைக்கும் ஆளுமை செலுத்தக்கூடிய தலைமை இன்னும் உருவாகவில்லை என்பதே உண்மையாக உள்ளது.

ஆளும்கட்சியாக உள்ள அதிமுகத் தலைமை வகிக்கும் கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. டயர் நக்கிகள் என்று அதிமுகவின் தலைமையைக் கடுமையாக விமர்சித்து வந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ், சென்ற தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் என்று முழக்கத்துடன், ’அன்புமணியாகிய நான்’ என்று பாகுபலி பாணியில் சவுண்டு விட்டுக்கொண்டு இருந்தார். இம்முறை மாற்றம் பின்னேற்றமடைந்து, பல்லு வலி வந்த டாக்டராக, டயரைச் சுமந்து கொண்டு இருக்கிறார்.

மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அதிமுகவை மறைமுகமாக இயக்கி வருகிறது. பாஜக நினைத்தால் அதிமுகவை முழுமையாகக் கபளீகரம் செய்ய முடியும் என்றாலும், திமுகவை எதிர்க்க அதிமுக என்ற பிராண்ட் தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது என்பதால், இந்தப் படத்தில் துணை நடிகராக வேடமிட்டுள்ளது. தேர்தலுக்குப் பின் அதன் விளையாட்டைக் காணலாம். தமிழக அரசியலில் வெற்றிலை போடும் தலைவராக இருந்தவர் மூப்பனார். இப்பொழுது அவரது மகன் மிச்சர் சாப்பிடும் தலைவராக இருக்கிறார். அவரும் இந்தத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து, தவழ்ந்து, பின்பு நிமிர்ந்து முதலமைச்சராக ஆன போது, அவர் ஆட்சி அதிகாரத்தை ஐந்து ஆண்டும் முழுமையாக முடித்து, இது போல் அடுத்த முதல்வராகப் பலமாகப் போட்டியில் இருப்பார் என்று யாரும் எண்ணியிருக்கவில்லை. ஆனால், முடித்துக் காட்டியிருக்கிறார். மத்திய அரசு எது சொன்னாலும் அதை நிறைவேற்ற துடிக்கும் அடிமை அரசு என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வந்தாலும், ‘சாமி, பழனிச்சாமி’, ‘வெற்றி நடை போடும் தமிழகம்’, விவசாயி, எளிமையான முதல்வர் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டு, அதிமுக அடுத்த ஆளுமையாகக் காட்டிக்கொள்ள முனைந்து வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி. அதன் பலன் என்னவென்பது மே இரண்டாம் தேதியன்று தெரிந்துவிடும்.

கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இம்முறை எப்படியும் வென்று விட வேண்டும் என்று பலமாக முயன்று வருகிறது. திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்று போட்டியிட்ட கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள், வாங்கிய அடியின் வலி தாங்காமல், இம்முறை பழையபடி கதவை திறடி என்று திமுகக் கூட்டணியில் ஐக்கியம் ஆகிவிட்டனர். இதே கூட்டணி தான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதே போல், இப்போதும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுகவின் சொல்படி நடந்து வருகிறார்கள்.

அடுத்த முதல்வர் என்று ஸ்டாலினை பல காலமாகச் சொல்லி வருகிறார்கள். எவ்வளவு காலம் என்றால் இப்போது திமுகக் கூட்டணியில் சரண் அடைந்திருக்கும் மதிமுகத் தொடங்கிய காலத்தில் என்று சொல்லலாம். ஸ்டாலின் எதிர்ப்பு என்ற புள்ளியில் தொடங்கிய கட்சி அது. கருணாநிதி தனது முதிய காலத்தில் ஒவ்வொரு முறை முதல்வராகப் பதவியேற்கும் போதும், அடுத்ததாக ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்று ஆருடம் கூறுவார்கள். அவரது துரதிஷ்டம், ஆட்சியில் இல்லாத சமயத்தில் கருணாநிதியின் மரணம் நிகழ்ந்தது. மேயர், துணை முதல்வர் என்று பல முக்கியப் பதவிகள் வகித்தாலும், முதல்வர் பதவி என்பது இதுவரை ஸ்டாலினுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் என்று யார் யாரெல்லாமோ முதல்வராக, அதையெல்லாம் இதுவரை மேட்டுக்குடி கவுண்டமணி போல் பொருமியபடி பார்த்துக்கொண்டிருந்திருப்பார் ஸ்டாலின் என்பது நிச்சயம். இன்று அவர் வீட்டிலேயே அடுத்த முதல்வர் என்று உதயநிதியைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் இந்தத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு நேரடியாகப் போட்டியிடுகிறார். நிச்சயம் வெல்வார் என்று இதுவரை வந்த கருத்துக்கணிப்புகள் கூறினாலும், முந்தைய திமுக ஆட்சியின் அலங்கோலங்களை அதிமுக மட்டுமில்லாமல், போட்டியில் இருக்கும் அனைத்து பிற கூட்டணிகளும் மக்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறார்கள். கூடவே, மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எதிரே அதிகாரப் பலத்துடன் நிற்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போல, இந்தத் தேர்தலிலும் வெற்றிக்கொடி நடுவாரா, அல்லது, நீண்ட நாள் கனவு கனவாகவே போய்விடுமா என்பது இத்தேர்தலில் தெரிந்துவிடும்.

ஜெயலலிதாவின் எதிர்பாரா மரணத்திற்குப் பிறகு, அதிமுகவின் முகமாக வருவார் என்று எதிர்பார்த்த சசிகலா சிறைக்குச் செல்ல, அவருடைய முகத்தையே காண முடியாமல் போய்விட்டது. சமீபத்தில் சிறையில் இருந்து ஆரவாரத்துடன் வெளிவந்த சசிகலா, ஏன் அப்படி வந்தார் என்று கேட்கும்படியாக வந்த வேகத்தில் அரசியலுக்கு முழுக்கு போட்டார். அவர் சிறையில் இருந்த காலத்தில் அதிமுகவை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என்று முயற்சி செய்த டிடிவி தினகரன், இம்முறை விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். விஜயகாந்த் போலவே அவருடைய கட்சியான தேமுதிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படுகிறது. ஒரு சமயம் இரு கழகங்களும் போட்டி போட்டுக்கொண்டு விஜயகாந்தை தங்களது கூட்டணிக்குத் தாம்பூலத் தட்டோடு அழைத்தனர். இப்போதோ சீந்துவதற்கு ஆளின்றி இங்கு வந்து சேர்ந்துள்ளனர். இவ்விரு கட்சிகளும் தொடங்கிய காலத்தில் இருந்த போஷாக்கை இழந்து நிற்கிறார்கள் இப்போது. அடுத்த முறை நிற்பதற்கே பலம் இருக்குமா என்ற சந்தேகத்துடன் இருக்கும் நிலை தான் இவ்விரு கட்சிகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

எப்போதும் போல் தனியாக நிற்கிறார் நாதகவின் சீமான். இப்போது இருக்கும் தலைவர்களுக்குப் பேச்சு போட்டி வைத்தால், வெல்வது சீமானாக இருக்கும். ஆனால், நடப்பது பேச்சு போட்டி இல்லையே!! பல தேர்தல்களில் தனியாகப் போட்டியிட்டு தோல்வியடைந்து வந்தாலும், எப்படி இன்னமும் தனியாகப் போட்டியிட்டு வருகிறார் என்று தெரியவில்லை. அது நம்பிக்கையா, அதீத நம்பிக்கையா என்று வருங்காலம் தான் பதில் சொல்லும். எது எப்படியோ, மக்களுக்குத் தனது பேச்சின் மூலம் எண்டர்டெயின்மெண்ட் அளிப்பது சீமானின் பலம். தான் ஒரு நல்ல கதையாசிரியர் என்பதைச் சினிமாவில் திறன்பட நிரூபிக்கமுடியாவிட்டாலும், அரசியல் மேடைகளில் அதனைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் சீமான். ஓங்குக அவரது கலைச் சேவை!!

மாற்று அரசியல் என்று வந்தவர்களின் வரிசையில் கமலும் மய்யமாக வந்து நிற்கிறார். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு சதவிகித ஓட்டு பெற்று தோல்வியடைந்து இருந்தாலும், இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் நம்பிக்கையுடன் போட்டியிடுகிறார் உலக நாயகன். தனிப்பட்ட முறையில், கோவை தெற்கு தொகுதியிலும் முதன்முறையாகத் தேர்தல் களம் காண்கிறார் கமலஹாசன். திரையில் நவீனத்தைப் புகுத்தியவர், அரசியலிலும் நவீனத்தைக் கொண்டு வருவேன் என்கிறார். ஆனால், அவருடைய கூட்டணி கட்சிகளைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பாரிவேந்தரின் இஜக மற்றும் சரத்குமாரின் சமக ஆகிய கட்சிகளுக்குச் சீட்களை வாரி வழங்கியிருக்கிறார். அதிலும் சரத்குமார் எங்களால் இவ்வளவு முடியாது என்று தங்களது எண்ணிக்கையில் இருந்து மூன்றைத் திரும்பக் கொடுத்திருக்கிறார். இந்தக் காமெடி எல்லாம் வேறு எந்தக் கூட்டணியிலும் காண முடியாதது. கமலின் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ஓடாவிட்டாலும், பிறகு டிவியில் படத்தைப் பார்த்து அவரைச் சிலாகிப்போம். அவருடைய அரசியல் பயணமும் அதேப்போல் ஆகிவிடுமோ என்ற எண்ணம் வராமல் இல்லை. அரசியலில் ஜொலிப்பாரோ இல்லையோ, மீண்டும் திரைக்கு வந்து மிளிர்வார் என்பது நிச்சயம்.

கமல் மட்டுமில்லாமல் இந்தத் தேர்தலில் வேறு பல நடிகர்களும், திரை பிரபலங்களும் களம் காண்கிறார்கள். திமுகவில் உதயநிதி ஸ்டாலின், (ஸ்டாலின் கூட ஒரு காலத்தில் நடித்திருக்கிறார்), பாஜகவில் குஷ்பு, மய்யத்தில் ஸ்ரீப்ரியா மற்றும் சினேகன், காங்கிரஸில் விஜய் வசந்த் (நாடாளுமன்ற இடை தேர்தல்), சுயேட்சையாக மயில்சாமி, மன்சூர் அலிகான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். உடல்நிலை காரணமாக விஜயகாந்த் இம்முறை போட்டியிடவில்லை. கௌதமி பாஜகவில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், கிடைக்கவில்லை. ரஜினிகாந்த் கிரேட் எஸ்கேப் ஆகியிருக்கிறார். தேர்தலில் போட்டியிடாமல், கட்சி ஆரம்பிக்காமல் அரசியல் பயணத்தை முடித்துக்கொண்ட ஒரே அரசியல்வாதி ரஜினி தான்.

ஆக மொத்தத்தில், தேர்தல் களத்தில் நடப்பதைக் காணும்போது, எப்போதும் போல் இம்முறையும் அதிமுக – திமுக ஆகிய கட்சிகளின் போட்டியாகவே இத்தேர்தலும் இருக்கும் என்று தெரிகிறது. தற்சமயம் இப்போட்டியில் திமுக முன்னணியில் இருப்பது போல் தெரிந்தாலும், அதிமுக-பாஜக ஆகிய ஆளும்கட்சிகளின் அதிகாரப் பலமிக்கக் கூட்டணி அடுத்து எவ்விதமான அஸ்திரத்தை இத்தேர்தலில் பிரயோகிக்கும் என்பது பொறுத்திருந்து காண வேண்டியுள்ளது. இதுவரை பார்த்த கட்சிகளைத் தவிர, இன்னொரு முக்கியப் போட்டியாளர் களத்தில் இருக்கிறார். நோட்டா என்ற அந்தப் போட்டியாளர் களத்தில் எத்தனை பேரைப் போட்டு பொளக்கப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad