Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒரு விசித்திரமான கனவு

Filed in கதை, வார வெளியீடு by on April 2, 2021 0 Comments

அவள் கண்களால் அதை  நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்து , மூச்சு  வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் ஓடியது , இரவு 10:00 மணியளவில் அந்த  தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை  படுத்திருந்தது. தூத்துக்குடி – பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்தத் தெரு பகுதி . அவள் சில நிமிடங்கள்  காரிலிருந்து பார்த்தாள்.., அந்த காரை நிறுத்திவிட்டு , குழந்தை இருந்த இடத்தை நோக்கி நடைபாதையில் அவசரமாக நடக்க ஆரம்பித்தாள்.

அவள் மனதில் எல்லா வகையான எண்ண ஓட்டங்களும் தாமிரபரணி ஆறு போல ஓடியது.

ஒருவேளை இது ஒரு பொறியாக இருக்குமோ? அப்படியிருந்தால் அதன் பின் விளைவுகளை நினைத்து ஆறு கடலில் சேருவது போல மூளையிலிருந்து  இதயத்திற்கு எண்ண அலைகள் சேர்ந்தது. பூக்கள் வண்டுகளைச் சுற்றி வலம் வருவது மாதிரி அவளது கண்கள் எல்லா திசைகளிலும் பார்த்துக்கொண்டே அருகில் போனதும்  இடி தாக்கும் உணர்ச்சியை ஆத்திரம் ,பயம் மற்றும் கவலை உணர்ந்தாள் ,.

ஐயோ கடவுளே..

 என்ன விசித்திரம் ? இது யார்? மனிதநேயம் இறந்துவிட்டதா…!

இது போன்ற  செயல்கள் யார் செய்தது? இப்படி ஒரு குழந்தையை யார் விட்டுவிடுகிறார்கள்?

அந்தக்  குழந்தை உயிரோடு தான் இருக்கிறது; எந்த ஒரு காயமில்லை என்று அவள் நம்பினாள் . அருகில் செல்லச் செல்ல ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில்  நடக்கும் தீமைகளை எண்ணி மனம் குமுறியது . மோசமான சம்பவங்கள் எதுவும் நடக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே அந்த இடத்தை அடைந்தாள். குழந்தை நன்றாக இருந்தது.

இனி எந்த அசம்பாவிதமும் நடக்காது எண்ணிக் கொண்டாள். அவள் பார்க்க விரும்பாத கோணத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். மனிதகுலத்தின் சார்பாக அவள் வெட்கப்பட்டாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தாள்.

ஆகாஷ் ..!

தன் காதலன் ஆகாஷுக்கு ஃபோன் செய்ய நினைத்து அவசர அவசரமாக அவன் எண்ணை டயல் செய்ய ஆரம்பித்தாள். 

“ஆகாஷ், ஆகாஷ் ஆகாஷ் சாலையில் ஒரு குழந்தை கிடக்குதுடா ! நீ கொஞ்சம் சீக்கிரம் இங்கு வர முடியுமா? ” 

“சரி சரி. அமைதியா இரு. கொஞ்சம் அமைதியா இரு. நீ சரியா எங்க இருக்க? “

“இங்கேயே ஆகாஷ், எழில் நகர் தெருவுக்கு எதிரே”

“நான் ஒரு பத்து நிமிஷத்தில வந்துடுவேன் அன்பே, நீ எதுவும் செய்ய வேண்டாம். தயவு செய்து கவனமாக இரு. நான் இப்போ அங்கு வரேன். கவலைப்பட வேண்டாம். நான் அங்கேயே இரு. உடனே போலீசுக்கு கால் பண்ணு நடந்ததை சொல்லு , சரியா?”

“நான் போலீஸை கூப்பிடுறேன். சரி. ஆகாஷ் தயவுசெய்து வந்துரு.. எனக்கு பயமா இருக்கு ..!

“வந்துடறேன்!”

அவள் கொஞ்சம் நிம்மதியை உணர்ந்தாள். குழந்தையின் அருகில் அமர்ந்து குழந்தையின் நெற்றியில் நடுக்கத்துடன் கை வைத்து பார்த்தாள். இறுதியாகக் குழந்தையைத் தூக்கினாள்.

குழந்தை  அழவில்லை. ஆனால் குழந்தையின் கண்கள் அவளைப் பார்த்து கொண்டிருந்தது.

தாயைப் போல அவள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு 100 என்ற எண்ணுக்கு டயல் செய்தாள். பதில் இல்லை. 

அவள் மீண்டும் டயல் செய்தாள்.

இப்போது ஃபோனை எடுத்தார்கள் .. 

“வணக்கம். நான் எழில் நகர் தெருவில் இருந்து பேசுறேன். என்னுடைய வீட்டுக்கு போற வழியில ஒரு குழந்தையைப் பார்த்தேன். இந்தத் தெருவைச் சுற்றி யாரும் இல்லை. “

“வணக்கம். மேடம், உங்கள் பெயரைச் சொல்ல முடியுமா? “

“ராதா”

” நீங்க இருக்கிற சரியான ஒரு லாண்ட்மார்க் என்ன?”

“எழில் நகர். வலது அருள்மிகு ஶ்ரீ சக்தி முனிஸ்வரர்.. ஶ்ரீ பேச்சியம்பாள் கோயில் பக்கத்தில. தயவுசெய்து யாரையாவது அனுப்ப முடியுமா? ப்ளீஸ்!”

“மேடம், வேறு யாராவது பக்கத்தில இருக்காங்களா? குழந்தைக்கு எதுவும் அடிபட்டு இருக்கா? “

“இல்லை. இல்லை. குழந்தைக்கு அடிபடல. என்னை  சுற்றி யாரும் இல்லை. யாரையும் காணோம்”

“மேடம், தயவுசெய்து கவனமாக இருங்கள். நாங்கள் எங்கள் ஆட்களை உடனே  அனுப்புகிறோம். தயவுசெய்து யாராவது வராங்களான்னு பாருங்க, சரியா? அழைப்பிலேயே இருங்கள். “

“சரி .. இங்க இன்னும் யாரையும் பார்க்க முடியலை “

குழந்தை இப்போது தொடர்ந்து கத்திக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தது. அவள் குழந்தையின் மார்பில் தட்டி அமைதிப்படுத்த முயன்றாள். அது ஒரு துணியால் மூடப்பட்டிருந்ததால் அது ஒரு பெண்ணா அல்லது பையனா என்று அவளால் சொல்ல முடியவில்லை. 

துணியை அவிழ்க்க தைரியம் அவளுக்கு இல்லை. அவள் குழந்தையின் தலையையும் மார்பையும் தன்னால் முடிந்தவரை மெதுவாகத் தட்டிக் கொண்டே இருந்தாள்.

“மேடம், நீங்கள் இருக்கீங்களா?”

“ஆமா மேடம்.. நான் இங்கே தான் இருக்கிறேன். குழந்தை அழுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? “

“மேடம், தயவுசெய்து குழந்தையை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க  ஏதாவது வழி இருக்கிறதா? “

“இருக்கு மேடம் என்னுடைய காரில் வைத்திருக்கிறேன். அந்தத் தெரு முனையில நிப்பாட்டி வச்சிருக்கேன். நான் குழந்தையை அங்கே கொண்டு போகட்டுமா?”

“கொஞ்சம் காத்திருங்கள், மேடம்.” 

“இல்ல வேண்டாம் .. அதற்கு அவசியமில்லை மேடம் இதோ என்னுடைய காதலன் இங்கே வந்துவிட்டான் , என்னால் அவனுடைய காரை பார்க்க முடிகிறது, உங்கள் அதிகாரிகள் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? “

“சில நிமிடங்கள், மேடம். தயவுசெய்து இணைப்பில் இருங்கள். “

“ஆகாஷ்! ஆகாஷ்! உன்னுடைய காரில் தண்ணீர் இருக்கிறதா?” என்று கத்தினாள் .

அவனோ தூரத்தில் இருந்து ..!

” இருக்கு! இருக்கு!” என்று சொல்லிக்கொண்டே காரை நிறுத்தினான்.

அவன் காரிலிருந்து இறங்கி அவளை நோக்கி ஓடினான். 

திடீரென்று ஒரு பையன் கையில் கத்தியுடன் அவனை நோக்கி ஓடினான்.

“ஆகாஷ்! ஆகாஷ்! அய்யோ!” அந்த பையன் அவனைத் தாக்க போகிறான் என்று அவளால் நம்ப முடியவில்லை.

அவள் குழந்தையை விட்டுவிட்டு அவனை நோக்கி ஓடி அவனை நெருங்கினாள். அடுத்த கணம் கத்தி அவள் முகத்தில் இறங்கியது ..,, இரத்தமும் கண்ணீரும் சேர்ந்து வழிந்தது.

இது எப்படி சாத்தியமானது என்று எண்ணுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது போலத் தோன்றியது , மறுபடியும் கத்தி நெற்றியை நோக்கி வந்தது. அவள் ஒரு அதிர்ச்சியுடன் எழுந்தாள். 

இது மிகவும் உண்மை போலவே தோன்றியது. அது ஒரு விசித்திரமான கனவு என்று அவள் உடனே உணர்ந்தாள்.

அட கடவுளே! என்ன இது இப்படி ஒரு கனவு!  ஓ அந்தக் குழந்தை! ஐயோ ! கடவுளுக்கு நன்றி அது ஒரு கனவு. 

ஆனால் குழந்தையின் முகம், எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.  அந்த முகத்துடன் ஒரு குழந்தை இருக்கிறதா? இறைவனே! அந்த முகத்தை என்னால் மறக்க முடியாது. 

ஆகாஷ் என்பது யார்? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அந்தப் பெயரைக் கொண்ட யாரையும் எனக்குத் தெரியாதே.

வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் இருந்தது அவளுக்கு.. அந்த அதிகாலையில், அவள் உடம்பு மீண்டும் சோர்வு போர்வையாக ஆட்கொண்டது.

எப்படி இப்படி ஒரு கனவு ? அந்த நபர் யார்? எப்படி போலீசை கூப்பிட்டேன் ?

அந்த தெருவை  என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. அது என்னது?

அதை நினைத்துக் கொண்டே அவள் இப்போது விழித்திருந்தாள்.

அவள் மனதில் ஏதோ தவறாகப் பட்டது.

கனவைப் பற்றி ஏதோ விசித்திரமாகத் தெரிந்தது. அதுவே அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

“இந்த நாட்டில் சோத்துக்கும் தண்ணிக்கும் தான் பஞ்சமே தவிர கவலைக்கு இல்லை” 

 என்று  அவள் சோகமாக நினைத்தாள். கனவு முடிந்துவிட்டதை உணர்ந்து அவள் இதயம் இப்போது சிந்தனையில் மூழ்கத் தொடங்கியது, ஆனால் உண்மையில் அவளுக்கு ஏதோ ஒன்று நடக்க போவதாகத் தோன்றியது. ஆழ்மனதில் சூரியன் உதித்தான்.

அவள் படுக்கையில் இருந்து எழுந்து செய்தித்தாளை எடுக்க வாசலுக்கு நடந்தாள். ஏற்கனவே மந்தமான கண்களில், அவள் தலைப்பைப் பார்த்தபோது கண்ணீர் இப்போது மழையாகக் கொட்டத் தொடங்கியது.

“கண்ணீர் அஞ்சலி.. திரு.ஆகாஷ் .. மறைவு: ஜூன் 13, 1996″.

கனவு பலித்தது.

  • தாமோதரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad