\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஓடிடியின் ஓட்டம்

பெருந்தொற்றுக் காலத்தில் லாக்டவுன் என்பது பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. முக்கியப் பொழுதுபோக்கு துறையான திரையரங்கு வணிகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதே சமயம், ஓடிடி என்ற பொழுதுபோக்கு துறைக்கு இது வசந்த காலமாகிவிட்டது. பல ஆண்டுகளாக இத்துறை இயங்கி வந்தாலும், கோவிட்-19 இத்துறையின் முன்னேற்றத்தைத் தூண்டி விட்டுக் கேம் சேஞ்சராக உதவியது.

தெருக்கூத்து, நாடகம், திரைப்படம், தொலைகாட்சி, சிடி, டிவிடி என்று கலை படைப்புகள் நம்மை வந்து சேரும் முறைகள் காலத்துடன் மாறிக் கொண்டே தான் வந்துள்ளது. இது இணைய யுகம். இணையம் மூலம் திரைப்படங்களும், தொடர்களும், ஆவணப்படங்களும் விநியோகிக்கப்படும் முறையே ஓடிடி (OTT) என்னும் நவீன ஒளிபரப்புத்துறை. ஓவர் தி டாப் என்பதின் சுருக்கமே ஓடிடி. அதாவது, கேபிள் நிறுவனம் உதவி இல்லாமல், டிஷ் நிறுவனம் தயவு இல்லாமல், சேட்டிலைட் சானல்கள் வழி இல்லாமல், இணையம் மூலம் பயனர்களை நேரடியாகச் சென்று சேரும் முறை இது.

ஓடிடி என்னும் இந்த நடைமுறை உருவானதிற்குக் காரணமாகச் சில தொழிட்நுட்ப வளர்ச்சிகளைக் கூறலாம். முதலாவதாக, இணையத் தொழிட்நுட்பமும் இணையத்தின் வேகத்தில் அடைந்த முன்னேற்றத்தையும் சொல்லலாம். எப்போது இணையத்தில் அசையும் படத்தை எவ்வித தடங்கலும் இல்லாமல் பார்க்க முடிந்த வேகத்தை அடைந்தமோ, அப்போதே ஓடிடி’க்கான விதை விழுந்துவிட்டது. அடுத்ததாக, படம் பார்க்க உதவும் கருவிகளான தொலைகாட்சி பெட்டியிலும், செல்பேசியிலும் ஹெச்டி, 4K, ஸ்ட்ரிமீங் என வந்த தொழிட்நுட்ப முன்னேற்றங்கள், ஓடிடி என்ற துறை செடியாகத் துளிர்த்து வளர உதவியது எனலாம். அதன் பிறகு, கடந்த வருடத்தில் கோவிட், திரையரங்குகளை மூடச் செய்திட, ஓடிடி என்பது திரைப்படங்களை நேரடியாக வெளியாகும் மேடையாக மாறி, பெரும் மரமாக உலகெங்கிலும் கிளைகள் பரப்பி விரிவடைந்தது.

2000ஆம் ஆண்டிற்குப் பிறகு, இணையத்தின் வேகம் நொடிக்கு 1 மெகாபைட் என்பதில் இருந்து மேலெழும்பி உயர்ந்தது. 2005க்கு பிறகு யூட்யூப், நெட்ப்ளிக்ஸ் போன்ற இணைய வழி அசைபடச் சேவைகள் உருவாகி பிரபலமடையத் தொடங்கின. இன்று நூற்றுக்கணக்கில் ஓடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே திரையரங்கில் வெளியாகிய திரைப்படங்கள் மட்டுமின்றி இந்த நிறுவனங்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட வெப்சீரிஸ் போன்றவை இந்தத் தளங்களுக்குத் தீனி போட்டு வந்தன. எப்போது கொரோனா காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதோ, அப்போது திரையரங்கைத் தாண்டி நேரடியாக ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவர தொடங்கின. திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்க, முக்கியத் திரைப்படங்கள் பலவற்றை ஓடிடி தளங்கள் கபளீகரம் செய்து வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஜியோ நிறுவனம் இணையச் சேவையில் கொண்டு வந்த மாற்றங்கள், பல தளங்களில் பலவித வளர்ச்சியைக் கொண்டு வந்தன. நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி போன்ற அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி, ஈரோஸ், ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஆஹா, நீஸ்ட்ரீம் என உள்ளூர் ஓடிடி தளங்கள் மொழிக்கு ஒன்றாக உருவாகி இன்று பல செயல்பட்டு வருகின்றன.

ஓடிடி தளங்களுக்கான வருமானம் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக வருகிறது. பொதுவாக, மாதச் சந்தா, வருடச் சந்தா என்ற முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பெறப்படுகிறது. சில தளங்களில் படங்களுக்கெனக் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையும் உள்ளது. இப்போது வரை, வாடிக்கையாளர்களை எப்படிப் பெருக்குவது என்ற கணக்கில் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களுக்குப் பெரும்பணத்தைச் செலவிட்டு ஓடிடி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அதை ஒப்பிடும் போது வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் குறைவாகவே உள்ளது. இத்துறை சீரடையும் போது, கட்டண முறையில் மாற்றங்கள் வரக்கூடும்.

கடந்த ஆண்டில் இருந்து ஓடிடியில் பல தமிழ் திரைப்படங்கள் நேரடியாக ஒளிப்பரப்பத் தொடங்கின. ஆரம்பத்தில் வெளிவந்த பொன்மகள் வந்தாள், பென்க்யூன் ஆகிய படங்கள் பெரிதாகச் சோபிக்க விட்டாலும், அதன் பிறகு அமேசான் ப்ரைமில் வெளிவந்த சூரரைப் போற்று, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் உடனடியாக இரண்டு வாரத்தில் அமெசான் ப்ரைமில் வெளியாகி அந்த வரவேற்பைத் தக்க வைத்துக்கொண்டது. இந்தக் காலக்கட்டத்தில் திரையரங்கில் வெளிவந்த பல திரைப்படங்கள், குறுகிய காலத்தில் ஓடிடி தளங்களில் காணக்கிடைத்தன. திரும்பக் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட, மீண்டும் பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளன. அடுத்த மாதம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் 17 மொழிகளில் வெளிவர இருக்கிறது.

திரையரங்கு அனுபவம் என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அதே சமயம், திரையரங்கு அனுபவம் சாத்தியமில்லாத இக்காலக்கட்டத்தில் ஓடிடி என்ற இந்த நேரடி ஒளிபரப்பு சேவை நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று எண்ணுவதில் தவறில்லை. ஓடிடி மூலம் உலகம் முழுக்க, அதே சமயம் பிற மொழி ரசிகர்களையும் ஒரு நாட்டின் திரைப்படங்கள் உடனடியாகச் சென்று சேரும். ஆனால், இன்னமும் ஓடிடி மீதான தயக்கம் பல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு, பிற கலைஞர்களுக்கு இருந்து வருகிறது. இதை டிவியின் நீட்சியாக அவர்கள் கருதிக்கொள்வதே அதற்கான காரணம். ஆனால், இது ஒவ்வொரு வீட்டிலும், அவ்வீட்டில் இருக்கும் திரை ரசிகர்களுக்கான பிரத்யேக வெள்ளித்திரை என்று புரிந்துக்கொண்டால் அந்தத் தயக்கம் தேவையிருக்காது. அத்தகைய ஆதரவை கண்டெண்ட் உரிமையாளர்களான திரைப்படத் தயாரிப்பாளர்கள் அளித்தால், ஓடிடியும் அதன் ஓட்டத்தில் வேகம் கொண்டு மேலும் பல வசதிகளை ரசிகர்களுக்கு கொண்டு வர வாய்ப்பளிக்கும்.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad