\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா….

2021ஆம் ஆண்டு பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

‘அய்யயோ என்னால முடியல. Zumba வும் வேண்டாம்  ஒண்ணும் வேண்டாம்’ என்று அடுத்த வகுப்புக்கெல்லாம் போகாம இருக்கவில்லை. தொடர்ந்து போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஒரு மணி நேரம் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி மாதிரி அதை செய்திட்டு வந்தது மனசுக்கு உற்சாகமாகவும்  புத்துணர்ச்சியாகவும் இருந்தது. 

எனவே நாம ஏதாவது ஒன்னு புதுசா செய்யனும்னு ஆசைபட்டாலோ அல்லது ஏதாவது வகுப்புல சேரணும்னு  ஆசைபட்டாலோ “அய்யயோ நமக்கு வயசாயிட்டு நம்மால முடியாது” எதிர்மறையா யோசிக்காம முயற்சி செஞ்சுதான் பாப்போமே. பிறகு முடிவு செய்வோம்னு நினைக்கணும். அப்படி முயற்சி செய்து வரும்போது அது நம்மை ஊக்கப்படுத்துகிறது. ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அந்த தன்னம்பிக்கைதான் இன்று என்னை உங்கள் முன் பேச வைத்துள்ளது. நன்றி வணக்கம்’. 

நான் பேசி முடித்ததும் அந்த சமூக மன்றத்தின் மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடத்திற்கு மேல் கரவோசை எழுப்பி  என்னை உற்சாகப்படுத்தினார்கள். கடைசி வரிசையில் என் கணவரும் பிள்ளைகளும் முகத்தில் பெருமிதம் பொங்க என்னைப் பார்த்தபடியே கைதட்டினார்கள். 

இவர்கள்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 

“நீ நடக்குறதே வாத்து மாதிரி இருக்கு. இதுல நாட்டியப் பேரொளி பத்மினியாம்…வைஜெயந்தி மாலா பாலியாம்…நல்லவேளை அவங்க இங்க இல்ல அவங்க மட்டும் இருந்து நீ சொல்றத கேட்டிருந்தா கயித்த கையில எடுத்துகிட்டு வாழைமரம் முருங்கைமரத்த பாத்து தொங்க போயிருப்பாங்கன்னு” என்று  என்னைக் கேலி செய்தார்கள்.

எனக்கு வயசு ஏற ஏறத்தான் வினோதமான ஆசைகளெல்லாம் வருது. 

நான் சின்னபிள்ளையா இருக்கும்போது “நீ நடக்கறதே பரதநாட்டியம் ஆடுற  மாதிரி இருக்குடா..” என்று எங்க அப்பாவும் அம்மாவும் சொல்லிகிட்டே இருப்பாங்க. நாட்டியப் பேரொளி பத்மினி, வைஜெயந்தி மாலா பாலி போன்றவர்கள் நாட்டியப் பிரபலங்களாக இருந்த கால கட்டம் அது. “ஒரு காலத்துல நீயும் அந்த மாதிரி வருவடா” என்று சொல்லிச் சொல்லி வாயாலே வடை சுட்டார்களே தவிர என்னை ஒரு நாட்டிய வகுப்பில் கூட சேர்க்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு எப்பவுமே இருக்கும்.  

விவரம் தெரிஞ்சு அவங்ககிட்ட கேட்டப்ப “அட அது ஒண்ணும் இல்லடா. சின்னபுள்ளையா இருக்கும் போது உன்னோட கால் சூம்பி போன மாதிரி இருக்கும். அதுனால நீ கொஞ்சம் விந்தி விந்தி நடப்ப. எங்க மனச தேத்திகிறதுக்காக நாங்க அப்படி சொன்னோம்டா. அத நீ நெசம்னு நம்பிட்டியா”னு சிரிச்சிக்கிட்டே வைகைப்புயல் வடிவேல் மாதிரி சொன்னவங்கள என்ன செய்யமுடியும். 

வாழ்க்கையில எல்லாமே நாம ஆசைப்பட்ட மாதிரியா நடக்குது. கல்யாணம் ஆச்சு. பிள்ளைகள் வந்தார்கள். அவர்கள் கல்லூரிக்கு போகவும் ஆரம்பிச்சாச்சு. அவர்களையும் வீட்டையும் பார்க்கறதுலேயே வருடங்கள் ஓடிவிட்டன. ‘கொடி’ இடையா இருந்த எனக்கு இப்ப இடையை காணவேயில்லை. கொடி வேற எங்கேயோ படர போயிட்டு. அந்தக் கொடியை எப்படியும் தேடி புடிச்சு என்னோட இடுப்புல ஒட்ட வைக்கிறதுதான் வாழ்க்கை லட்சியம் ஆயிட்டு. “ஆஹா! இதுவல்லவோ லட்சியம்” என்று என்னவரும் பிள்ளைகளும் பாராட்டியது தனிக்கதை.       

அதன் பிறகு எங்கெல்லாம் உடல் எடை குறைக்க வகுப்புகள் நடக்கின்றன என்கிற தேடல் வேட்டைதான். அதனால் வீட்டில் உள்ளவர்கள் யார் கைத்தொலைபேசி லேப்டாப்பை ஆன் செய்தாலும் உடற்பயிற்சி சம்பந்தமான விளம்பரங்களே வந்துள்ளன. கடுப்பாகி விட்டார்கள். 

“அம்மா இதை நோண்டிகிட்டு இருந்தாலே உடம்பு குறைஞ்சுடும்னு நினைச்சிகிட்டு இருக்கீங்களா? ஃபோனை எடுத்தாலே அதான் வருது என்று மகன் சொன்னான்.

என் மகனுக்கு உடற்பயிற்சி என்கிற வார்த்தையில “உ” வக்கூட சொல்லக்கூடாது. அவனுக்கு எந்நேரமும் இந்த விளம்பரங்கள் வந்தது என்றால் எந்த அளவு களிப்பாக இருந்திருக்கும்.  ஆஹா… அந்த நினைப்பே என் வலது கையை மடக்கி “எஸ் எஸ் எஸ்” என்று வெற்றிக்குறி ஆட்ட வைத்தது.   

ஒரு நாள் சந்தைக்கு போற வழியில “Zumba’ நடன உடற்பயிற்சி வகுப்புகள் உங்கள் பாசிர் ரிஸ் தெற்கு சமூக மன்றத்தில் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்” என்ற விளம்பர பேனரைப்  பார்த்ததும் “இதுல சேரலாமா” என்று யோசிக்கும் போதே என் அம்மாவும் அப்பாவும் வலது கையைத் தூக்கி ஆசிர்வாதம் அளிப்பது போல காட்சி  அங்கே தெரிந்தது. என் வாழ்க்கை லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான களம் இதுதான். சேருவது என்று முடிவே செய்துவிட்டேன். “ஐயோ வயசாயிடுச்சே! நம்மால முடியுமா?” எனக்குள்ள இருந்துகிட்டு என்னைய முன்னேறவிடாம கெடுத்துகிட்டு இருக்கிற பயம் எட்டிப் பார்த்தது.    

அவ்வளவுதான் “எங்களை வெளியில கொண்டு வா எங்களை வெளியில கொண்டு வா” எனக்குள்ள இருந்த நடன பெண்மணிகள் எல்லாம் போராட்டம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அப்படியே உடம்பெல்லாம் எனக்கு புல்லரிச்சு போச்சு. அதுல பார்த்தா மூணு பேர் இருக்கிற மாதிரி இருந்தது. பத்மினி, வைஜெயந்தி மாலா இரண்டு பேர் தானே யாரு மூணாவதுன்னு பார்த்தா நம்ம “கேட்டி பெர்ரி”-யும் இருக்காங்க. “ஜும்பா” வகுப்புல சேர்றதுன்னு முடிவு செஞ்சிட்டேன். 

எனக்கு எப்பவுமே குடும்பமா ஏதாவது ஒரு காரியம் பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். 

என் கணவர் ரொம்ப நல்லவர். நான் போய் இதை சொன்னதும் ‘ஓ!! நம்ம சமூக மன்றத்துல வந்துருக்கா…சேரலாமே…’ அப்படின்னு சொல்ற கதாபாத்திரம் கிடையாது. அவருக்கு “சொர்க்கமே என்றாலும் நம்ம “வீடு” போலாகுமா” தான். மனுஷன தொந்தரவு பண்ண முடியாது. நடக்கவும் நடக்காது. புள்ளைங்க… ரொம்ப சமத்து. அப்படியே…அப்பா மாதிரி. வாய்ச்சது வந்தது எல்லாமே அப்படி. இது புதுசு கிடையாது. நான் ஒவ்வொரு முறை ஏதாவது ஒன்று செய்யலாம் என்று சொல்லும்போதெல்லாம் நடக்கிற விடயம்தான். அதற்காக நான் கேட்காமல் இருக்க மாட்டேன்.

ஆனா இந்தத் தடவை நான் போய் சொன்னதும் என்னவர் புள்ளைங்கள கூப்பிட்டார். ‘அம்மா கூட கிளாஸ்ல சேர்ந்துக்கங்கடான்னு சொல்லுவாரு’ன்னு பாத்தா…”பசங்களா.. ஜூம்பா ன்னு சத்தம் வர்ற மாதிரி சாப்பாடு ஏதாவது இருக்கான்னு கேக்குறாரு”…. நான் சாப்பாடுன்னா, நாலு பேர் வழுக்கி விழுற மாதிரி ஜொள்ளு விடுவந்தான்…அதுக்காக, எந்நேரமும் நான் சாப்பாடையேவா நினைச்சிகிட்டு இருக்கேன். எனக்கு கெட்ட கோபம் வந்துட்டு. என்னைக்குமே எனக்கு கெட்ட கோபம்தான் வரும். நல்ல கோபம் வந்ததா நினைப்பேயில்லை. 

எந்த அளவுக்கு கோபம் வந்துதுன்னா “96- படத்துல ராமா, ராம் யாருன்னு கேட்டா எப்படி இருக்கும்? அதுகூட பரவாயில்ல .. ‘யாரு அந்த டாய்லெட் ஃப்ளஷ் மேல உட்கார்ந்துகிட்டு ஃபோன் பேசுவானே அதுவா ராம்?’ அப்படின்னா கோபம் வரும் தானே. நான் எவ்ளோ ஆர்வமா வந்து உங்ககிட்ட சொன்னா நக்கல் பண்றீங்களான்னு” கேட்டு ருத்ரதாண்டவம் பத்ரகாளி ஆட்டம் பார்த்திருக்க மாட்டீங்க.  நீங்க மட்டும் அன்னைக்கு என் வீட்டுக்கு வந்துருக்கணும். பத்ரகாளி ஆட்டம் இல்ல மத்த எல்லா காளி ஆட்டத்தையும்…அங்கயும் பாத்துருக்க மாட்டீங்க. ஏன்னா நான் ஆடவே இல்லையே. 

வீட்டுல System சரியில்ல. இந்த சிஸ்டத்த சரி பண்ணனும் என்று யோசிக்கும்போதே “அடங்கு…அடங்கு..சிஸ்டத்த சரி பண்றதெல்லாம் உன் வேலையில்ல. உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாருனு” எனக்குள்ள இருந்த பேரொளி, வைஜெயந்தி மாலா பாலி, பெரி எல்லாரும் சொல்லிட்டாங்க. அம்மா இருந்தாலாவது 

“ஏம்மா நல்லா வளர்த்தீங்க

இப்படி கொடுத்தீங்க” னு சினேகன் பாணியில கவிதை எழுதியிருப்பேன். நான் என்னுடைய அம்மாவைச் சொன்னேன். சின்னம்மாவையும் பார்க்க முடியாது.

“நடக்குறதே வாத்து மாதிரி இருக்கு. இதுல நாட்டிய பேரொளி பத்மினியாம்…வைஜெயந்தி மாலா பாலியாம்…நல்லவேளை அவங்க இங்க இல்ல” அவர்கள் என் முதுகுக்குப் பின்னால் பேசியதும் நன்றாகவே காதில் விழுந்தது.

அதுனால நமக்கு நாமேன்னு நாடு சுபிக்க்ஷமா .. சாரி வீடு சுபிக்க்ஷமா  இருக்கணும். இவங்ககிட்ட செயல்ல காட்டணும்.”Action speaks better than words” இல்லையா! அமைதியா ரூமுக்குள்ள போய் தியானம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். 

முதல் கிளாஸ். அந்த “ஜூம்பா” கற்றுக் கொடுக்கும் பெண்மணி பாக்க ஒல்லியா உயரமா சிக்குன்னு இருந்தாங்க. அவங்கள பாத்ததும் “ஆ..ஹா  இன்னும் கொஞ்ச நாளுல நாமளும் இந்த மாதிரி ஆயிடுவோம்” நினைக்கும் போதே..நயன்தாரா, சிம்ரன் எல்லாரும் சேலையோட முந்தானையை விரிச்சிவிட்டுகிட்டு ஸ்டைலா இடுப்பை ஆட்டிகிட்டு என்ன பாத்து சிரிச்சிகிட்டே கடந்து போனாங்க. 

கிளாஸ் ஆரம்பிச்சது. அந்த கொடியிடையாள் ஆசிரியர் பொறுமையா நிதானமா ஒவ்வொரு அடியா எப்படி ஆடுறதுன்னு கத்து கொடுப்பாங்கன்னு பாத்தா எடுத்ததுமே வே….கமான ஆங்கில பாட்ட போட்டுட்டு அவங்க பாட்டுக்கும் ஆட ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவுதான்…நயன்தாரா..சிம்ரன்ல்லாம் அலறி அடிச்சிகிட்டு  ரெண்டு கையாலயும் புடவையை வரிஞ்சி புடிச்சிகிட்டு அறையை விட்டு ஓடிட்டாங்க. ஒரு மரியாதைக்கு என்கிட்ட “போயிட்டு வரேன்னு” கூட சொல்லல. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. பார்த்தா மற்ற எல்லாரும் கையையும் இடுப்பையும் ஆட்டிகிட்டு வலப்பக்கம் போய்கிட்டு இருக்காங்க. நான் மட்டும் அவங்ககிட்ட கோவிச்சிகிட்டு போறவ மாதிரி இடப்பக்கம் போறேன். நோ கை ஆட்டல். நோ இடுப்பு ஆட்டல்.  ஐயையோ நாம தப்பா ஆடுறோமேன்னு  அவங்கள பாத்துகிட்டு குடுகுடுன்னு அந்தப் பக்கம் போறதுக்குள்ள அவங்க இந்தப் பக்கம் வந்துட்டாங்க. நான் அந்தப் பக்கமும் இல்லாம இந்தப் பக்கமும் இல்லாம  அல்லாடிகிட்டுருக்கும்போது “இதற்குத்தான்  ஆசைபட்டாயா” னு ஒரு குரல். பாத்தா என் வீட்டுக்காரர் புள்ளைங்க. குடும்பமா நின்னு கும்மி அடிக்கிறாங்க. நான் என்னோட மூளைக்கு அவ்வளவாக வேலை கொடுக்க மாட்டேன். பாவம் அதுவே இத்துனூன்டு இருக்கு. அதப் புடுச்சி வேல வாங்கறது பிடிக்காது. எனக்கு ரொம்ப இரக்க குணம் வேற. திடீரென்று கைய ஆட்டணும் கால ஆட்டணும். இல்லாத இடுப்பை வேற ஆட்டணும். இவ்வளோ வேலை கொடுத்ததும் எனக்கு என்ன பண்றதுனு தெரியல. “காதல்” பட பரத் மாதிரி “ங்ய ங்ய ங்ய-னு நிக்க போறேன்னு தெரிஞ்சிட்டு. ஆனா ஒண்ணு சொல்லணும். கடைசிவரைக்கும் அவங்க “ரைட்”ன்னா லெப்டுக்கும்…லெப்டுன்னா ரைட்க்கும் சரியா தப்பு தப்பா ஆடினேன்.

ஒரு வழியா பாட்டு முடிஞ்சிட்டு. மேல்மூச்சு கீழ் மூச்சு நடு மூச்சு எல்லா மூச்சும் வாங்கிட்டு. அப்பாடா முடிஞ்சிட்டேன்னு நிம்மதி பெருமூச்சு விட்டேன். உடற்பயிற்சி வகுப்புகளிலேயே எனக்கு புடிச்சது கடைசியில எல்லாரையும் படுக்கச் சொல்லிட்டு விளக்க மங்கலாக்கிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்றதுதான். “ஓ பாப்பா லாலி.. கண்மணி லாலி பொன்மணி லாலி” அப்படினு தாலாட்டு பாடாத குறையா நம்மளத் தூங்க வைப்பாங்க. எப்படா படுக்க சொல்லுவான்னு தயாரா இருந்துகிட்டு இருக்கேன். அந்த கொடி இடையாள் ஒன்னு சொன்னாங்க பாருங்க…அதுதான் உச்சம். இவ்வளோ நேரம் ஆடுனதெல்லாம் warm up-னுட்டாங்க. Warm upaaa? இல்ல எனக்கு நானே வச்சிகிட்ட ஆப்பு. ஒரு மணி நேர வகுப்பு. அப்பறம் எப்படி இருந்துருக்கும்….சிறுகுடலோட பெருங்குடலும் சேர்ந்து சும்மா குலுங்கி குலுங்கி கும்மி அடிச்சிது. சுத்தி சுத்தி சுத்தியல் நேசமணி தலையில விழுந்ததுக்கு #save Nesamani ன்னு போட்ட மாதிரி #saveSindhusingaporeன்னு  போட்டு வேர்ல்ட் ட்ரென்ட்டாக்கி யாராவது என்னைய காப்பாத்த மாட்டாங்களா என்று இருந்தது. அவ நம்ம ஜோதிகாவுக்கு தூரத்து சொந்தமா இருப்பான்னு நினைக்கிறேன். கொடுத்த காசுக்குமேல ஒரு மணி நேரத்துல ஒரு நிமிஷத்த கூட வீணாக்காம குதிக்க குதிக்க வச்சு உயிர வாங்கிட்டா. 

கிளாஸ் முடிஞ்சு போறப்ப பத்மினி, வைஜெயந்தி, கேட்டி பெர்ரி செர்ரி  யாரையும் காணும்…ஒளவையார்தான் இருந்தாங்க. ட்ராக் பேண்ட் டிஷர்ட் போட்டுருந்தாங்க. கம்பு மட்டும் மிஸ்ஸிங். எப்படியோ குச்சி இல்லாமலேயே  வீட்டுக்குப் போய்ட்டேன். பத்தடி தூரத்துல இருந்த வீடு எனக்கு அன்னைக்கு பத்து மைல் மாதிரி இருந்தது. வீட்டுக்குப் போனதும் “க்ளாஸ் எப்படி போச்சு”ன்னு என் கணவர் கேட்டார். ‘பச்ச தண்ணிய குடிச்சாலும் பால் பாயாசம் குடிச்ச கணக்கா’, “ம்ம்ம்… சூப்பரா போச்சுங்க ..” ன்னேன். ” நல்லாத் தெரியுது” என்று சொல்லிக்கொண்டே என்னைய கைத்தாங்கலா புடிச்சு சோபாவுல உக்கார வச்சாரு. வீட்டுக்காரர் ரொம்ப நல்லவரு.

என்ன நடந்ததுன்னு கேட்டாங்க. சொன்னேன். என்ன பாட்டு போட்டாங்க என்று பொண்ணு கேட்டா. அது என்னவோ  “மூக்குபொடி மூக்குபொடி”-னு வந்த மாதிரி இருந்துது என்று சொன்னேன். அவர்கள் சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மகிழ்ச்சி எனக்கு. அப்படியும் மகள் ” Alexa Play Mookupoodi song” என்று  மூக்குபொடியையே கொஞ்சம் ஸ்டைலாக அலெக்ஸாவிடம் சொல்லிப் பார்த்தாள். Jennifer Lopez-ன்  “move your body” ங்கிற பாட்டு பாட ஆரம்பிச்சிட்டு. கேட்ட அடுத்த நொடி எப்படியோ எந்திரிச்சு கையையும் இடுப்பையும் ஆட்ட ஆரம்பிச்சிட்டேன். “அம்மா உணர்ச்சிவசப்படாதீங்க”-ன்னு புள்ளைங்க என்னைய அடக்க வேண்டியதாப்போச்சு.  

அன்னைக்கு ராத்திரி கண்ண மூடுறன்.. ரா…ரா….ன்னு ஜோதிகாவா நிக்கிறேன். அடிச்சி புடிச்சி எந்திரிச்சா வியர்வைக்கடல்ல நான்… சிம்ரன் நயன்தாராவெல்லாம் அவ்வளவுதானா…பக்கத்துல என்னவர பார்த்தா வீடே அதிரும்படி குறட்டை விட்டு தூங்கிகிட்டிருக்கார். 

“move your body”க்கு மூவ் ஆன பாடிய அடுத்த நாள் மூவே பண்ண முடியல. அடுத்த நாள் சிங்கப்பூருல இருக்கிற எல்லா வீட்டு வலியும் என் உடம்புல. வீட்டிலையும் சொல்ல முடியாது. “நாங்கதான் அப்போவே சொன்னோமே ..உனக்கு இதெல்லாம் ஒத்து வராது..பேசாம வீட்டுல இருன்னு ” சொல்லிட்டா…சமாளிச்சு மெதுவா நடக்க ஆரம்பிகிறதுக்குள்ள பொசுக்குன்னு அடுத்த வகுப்பு வந்துட்டு. நாலு வகுப்பு காச கட்டிடனே. வீணாக்கவும் மனசு வரல. 

நான் காசு கட்டும் போதே அந்த தகவல் பிரிவில் இருந்த பெண்மணி “மேடம் ட்ரையல் கிளாஸ் ஒன்னு போறீங்களா” என்று கேட்டாள். நான் ‘பேஸ்மெண்ட் பாடி எல்லாமே எனக்கு ஸ்ட்ராங். அதுனால எனக்கு ட்ரையல் கிளாஸ் வேணாம். நான் நாலு கிளாசுக்கே காசு கட்டுறே’ ன்னு சொல்லிட்டேன். அப்படியும் அவ விடல. “மேடம் Zumba Gold-னு ஒன்னு இருக்கு அதுல சேருகிறீர்களா”-னு கேட்டா. அதுல என்னா கோல்ட் கொடுப்பாங்களா என்று நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். ‘இதெல்லாம் ஒரு ஜோக். கேட்கணும் என்கிறது என் தலையெழுத்து’ என்று நினைத்துக்கொண்டே “இல்ல மேடம் அது கொஞ்சம் வயசானவர்களுக்கு. கொஞ்சம் மிதமான வேகத்துல இருக்கும்” என்று அவள் விளக்கம் சொன்னதும் எனக்கு கோபம் வந்துட்டு. கெட்ட கோபம்தான். “Do I look that much old? You are asking me to join Zumba Gold” -னு இங்கிலிபீசுல சிரிச்சிகிட்டே கடுப்பா கேட்டுட்டு நாலு வகுப்புக்கு காசு கட்டினேன். “அவஸ்தை படணும் என்று இருந்தால் படு” என்று நினச்சிக்கிட்டே அவ காசு வாங்கிருப்பா.    

அடுத்த வகுப்புக்கும் போனேன். முதல் முறையை விட கொஞ்சம் சுலபமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் போய்க்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து போக போக மனசுக்கு புத்துணர்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருக்கு. முழுசா என்னோட இடையை கண்டு பிடிக்கவில்லை என்றாலும் எங்க இடை இருக்கு என்று தெரிந்திருக்கிறது. வயதானவளாக இருந்து அதை ஆர்வத்துடன் செய்வதைப் பார்த்த சமூக மன்ற பொறுப்பாளர் “உங்களைப் பார்த்தால் மற்றவர்களுக்கு ஒரு தன்முனைப்பாக இருக்கும் என்று சொல்லி என்னை ஒரு சிற்றுரை ஆற்ற சொன்னார். அதுதான் இப்பொழுது முடிந்தது. 

அனைவரிடமும் விடை பெற்றுகொண்டு என் குடும்பத்தினரிடம் வந்தேன். என்னவர் என் கைகளை அழுத்தி பிடித்து கை கொடுத்தார். அதில் ஆயிரம் செய்திகள் இருந்தன. வீட்டிற்குக் கிளம்பினோம். 

இதெல்லாம் முடிந்து கொஞ்ச நாள் கழித்து அந்தச் சமூக மன்றத்தை தாண்டி சந்தைக்கு போகும் போது என்னவர் அவசரமா என்னைத் தள்ளிக்கொண்டு  இன்னொரு பக்கம் போனார். ‘நாம அவரு பொண்டாட்டிதான’ ன்னு எனக்கே சந்தேகம் வந்துட்டு. அப்படி அங்க என்னதான் இருக்கு? அவர தள்ளிட்டு நான் அங்கப் போய் பார்த்தா “BOLLYWOOD DANCE உங்கள் பாசிர் ரிஸ் சமூக மன்றத்தில் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்” பதாகை  பெரிதாகத் தொங்கியது. 

  

  • செல்வி ராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad