Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பசைமனிதன்

“நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்” அப்படி’ன்னு சொன்னா அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. இப்படித் தான் 1968 ஆம் ஆண்டு மினசோட்டாவின் 3M நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்பென்சர் சில்வர் (Spencer Silver) என்ற ஆராய்ச்சியாளர், விமானப் பாகங்களில் பயன்படுத்துவதற்கான, நன்றாக வலிமையாக ஒட்டும் தன்மையில் ஒரு பசையைக் கண்டுபிடிக்க முயற்சிக்க, அந்த நோக்கத்தை அடைய முடியாமல், மிகவும் இலேசாக ஒட்டும் பசையைத் தான் அவரால் உருவாக்க முடிந்தது. இந்த மிதமான பசையை ‘தேவையில்லாத ஆணி’ என்று அவர் தூக்கி எறிந்துவிடவில்லை. இதற்கும் ஒரு தேவை இருக்கும் என்று நம்பினார். அடுத்தச் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தனது நிறுவனத்தில் இதைப் பற்றிப் பேசினார். ஆனால், யாரும் அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்தப் பசை கொண்டு ஒட்டும் காகிதம், ஒட்டும் இடத்தில் மிதமாக ஒட்டியது. ஒட்டிய இடத்தில் இருந்து எடுக்கும் போது, ஒட்டிய இடத்தில் பசையின் சுவடே இல்லை. எடுத்த காகிதத்தை இன்னொரு இடத்தில் ஒட்டினால், கச்சிதமாக மீண்டும் ஒட்டியது. திரும்பவும் அதை எடுத்தால், அங்கும் பசையின் சுவடு இல்லை. அவர் பார்வையில் இது தோல்வியடைந்த பொருளாகத் தெரியவில்லை. வித்தியாசமான, விசேஷமான பசையாகத் தெரிந்தது. இதற்கான தேவை ஏதாவது இடத்தில் நிச்சயம் உண்டு என்று ஸ்பென்சர் சில்வர் நம்பினார்.

1972 இல் அக்ரெலைட் கோபாலிமர் மைக்ரோஸ்பியர் (Acrylate copolymer microsphere) என்ற பெயரில் இந்தப் பசைக்கான காப்புரிமையை ஸ்பென்சர் பதிந்து கொண்டார். அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பென்சருடன் 3M நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்ட் ஃப்ரை (Art Fry) என்பவர் இந்தப் பசைக்கான தேவையைத் தனது அனுபவத்தில் இருந்து கூறினார். ஆர்ட் அவர்கள் தேவாலயத்தில் பாடும் போது, பாடல் வரிகள் கொண்ட தாளை முன்னால் இருக்கும் பலகையில் ஒட்டி வைத்துக் கொண்டு, அதைப் பார்த்து பாடுவார். அந்தக் காகிதம் சரியாக ஒட்டாமல் விழுந்து கொண்டே இருக்கும். அந்தப் பிரச்சினையை இந்தப் பசை தீர்த்து வைக்கும் என்றார்.

பின்னர் நிறுவனத்தில் பேசி இதை ஒரு விற்பனை பொருளாகக் கொண்டு வர அனுமதி பெற்றனர். முதலில் “ஃபோஸ்ட் அண்ட் பீல்” (Post n Peel) என்ற பெயரில் 1977இல் வெளிவந்த இது, பின்னர் 1980இல் “போஸ்ட்-இட் நோட்ஸ்” (Post-it Notes) என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் விற்பனைக்கு வந்தது.

பெரும்பாலும், போஸ்ட் இட் நோட்ஸ் காகிதத்தைப் பயன்படுத்தாதவர்கள் இன்று யாரும் இருக்க மாட்டார்கள். குறைந்தபட்சம், இதை எங்கேயாவது பார்த்தாவது கடந்து வந்திருப்பார்கள். அனைத்து விதமான அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் என இதன் பயன்பாடு இன்று பெருமளவு இருக்கிறது. கோவிட் காலத்தில் அலுவலகங்கள் எந்தளவு திறந்துள்ளன அல்லது மூடியுள்ளன என்பதைப் போஸ்ட்-இட் விற்பனையைக் கொண்டே வியாபார நிபுணர்கள் கணித்து விடுகிறார்கள். வேலைகளை நினைவுபடுத்தல், ஆவணங்கள் அல்லது பொருட்கள் மேல் குறிப்பு எழுதுதல் என்பதைத் தாண்டி, இன்றும் இதன் பயன்பாடு விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

போஸ்ட்-இட் கொண்டு கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. போஸ்ட்-இட் போலவே காட்சியளிக்கும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதப்பட்டுள்ளன. இதைச் சுற்றி சச்சரவுகளும் இல்லாமல் இல்லை. இதன் மீதான காப்புரிமையை எதிர்த்து ஆலன் (Alan) என்ற கண்டுபிடிப்பாளர் வழக்கு தொடுத்து, 3M நிறுவனம் இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொண்டது. அது போல, மைக்ரோசாப்ட் நிறுவனம் “போஸ்ட்-இட்” என்ற பெயரை தனது மென்பொருளில் பயன்படுத்த, அதன் மேல் 3M நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

இப்படி அமெரிக்க நுகர்வோர் சந்தையில் அதற்கெனத் தனி இடத்தைப் பிடித்த “போஸ்ட்-இட்” பசையை உருவாக்கிய ஸ்பென்சர் சில்வர் அவர்கள் மே 8 ஆம் தேதியன்று மினசோட்டா செயின்ட் பாலில் உள்ள தனது இல்லத்தில் தன்னுடைய 80வது வயதில் உயிர் நீத்தார். 1941இல் டெக்ஸாஸில் பிறந்த ஸ்பென்சர், தனது படிப்பை அரிசோனாவிலும், கொலராடோவிலும் படித்து முடித்தார். பின்னர், 1966 இல் இருந்து மினசோட்டாவில் இருக்கும் 3M நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 30 ஆண்டுகளாக 3M நிறுவனத்தில் பணியாற்றிய அவர், கடந்த 1996ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தனது பணிக்காக அமெரிக்கக் கெமிக்கல் சொசைட்டி (American Chemical Society) விருது, நேஷனல் இன்வெண்ட்டர்ஸ் ஹால் ஆப் பேம் (National Inventors Hall of Fame) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

எந்தவொரு முயற்சியையும் வீண் என்று விடாமல், சரியாக முன்னெடுத்துச் சென்றால், வெற்றி நிச்சயம் என்பதற்கு ஸ்பென்சரின் இந்தக் கண்டுபிடிப்பை உதாரணமாகச் சொல்லலாம். இன்றைக்கு 3M நிறுவனத்தில் 60,000 க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். இருப்பினும், போஸ்ட்-இட் அவர்களுடைய அடையாளமாக இருக்கிறது. இதனால் என்ன பயன் என்ற கேள்வியில் தொடங்கிய ஸ்பென்சரின் கண்டுபிடிப்பு, இன்று அவர் பணியாற்றிய நிறுவனத்தின் அடையாளம் ஆகியிருப்பதில் நமக்கான பாடம் நிச்சயம் உள்ளது.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad