\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திருமதி. ‘ஆகாச’ வேணி

Filed in கதை, வார வெளியீடு by on June 21, 2021 1 Comment

2021 சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை

“ஒரே தலையிடியா இருக்கே, புரூ காபி குடிச்சா தான் ஆகும்” என்றபடி துயில் கலைந்து எழுந்தாள் வேணி 

 சுற்றும் முற்றும் பார்த்து குழம்பியவள், “நா எங்கிருக்கேன்? இது எந்தூரு? எங்கிருக்கீங்க மாமா?” என பதறியபடி எழுந்தமர்ந்தாள் 

“பெண்ணே” என்றபடி ஒரு வெண்தாடி உருவம் அருகே வர ..

“யாருங்க நீங்க? வள்ளுவர் தாத்தா மாதிரி இருக்கீங்க”

“நான் வள்ளுவனல்ல பெண்ணே, வல்லவன்” 

“அது சிம்பு நடிச்ச படமாச்சே”

“யாரவன் சிம்பு?”

“டி.ஆர் புள்ள”

“டி.ஆரா?”

“என்னங் நீங்க? டி.ஆர் தெரியாதா? வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜினு அடுக்கு மொழில தலைய சிலுப்பிச் சிலுப்பி பாடுவாரே”

“நீ பேசுவது ஒன்றும் புரியவில்லை”

“நீங்க பேசறது தான் ஒரு மாதிரியா இருக்கு”

“அது ஒரு மாதிரி அல்ல, செந்தமிழ்”

“எனக்கு தெரிஞ்சதெல்லாம் கோயமுத்தூர் தமிழ் தானுங்க. அது சரி யார் நீங்க? நான் எப்படி இங்க வந்தேன்? என்ற மாமனெங்க? எனக்கு….”

“பொறு பெண்ணே, கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகாதே. ஒவ்வொன்றாய் பதிலுரைக்கிறேன்”

“சொல்லுங்…”

“என் பெயர் எமன், எமலோகத்தின் அதிபதி. உன் வாழ்நாள் முடிந்துவிட்டதால் இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்”

“என்னது? யாரப்பாத்து வாழ்நாள் முடிஞ்சு போச்சுனு சொல்றீங்…? ஊருப்பட்ட சோலி கெடக்குதெனக்கு. மாடு கண்ணு பாக்கோணும், மாமனுக்கு சோறாக்கோணும், மதினி புள்ளைக்கு சடங்கு செய்யோணும்…” என வேணி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போக

அவளை இடைமறித்த எமன், “இனி அதெல்லாம் இயலாது, உன் ஆயுள் முடிந்து விட்டது”

“எனக்கு புரிஞ்சு போச்சுங்க”

“என்ன புரிந்தது உனக்கு?”

“நீங்க என்னை கடத்திட்டு வந்திருக்கறீங்க, என்ற மாமனுக்கு ஃபோனப் போட்டு பெட்டி பெட்டியா காசு கேக்கப் போறீங்க, அதான…”

“அதெல்லாம் அற்பர்கள் செய்யும் செயல்”

“அற்பரோ, பார்பரோ, அதெல்லாம் எனக்கு தெரியாதுங்’ண்ணா”

“அண்ணனா?”

“எங்கூர்ல அப்படித் தான் பழக்கமுங்க… வயசுல மூத்தவர ஒண்ணு அண்ணா’னுவோம் இல்ல ஐயா’னுவோம்”

“ஒன்றும் விளங்கவில்லையே. இம்மானிட பதரிடம் என்னைச் சிக்க வைத்துவிட்டு எங்குப் போய்த் தொலைந்தான் இந்த சித்ரகுப்தன்?”

“நீங்க மைண்ட்வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசிட்டீங்’ண்ணா…” என்றாள் வேணி 

அதே நேரம், “மன்னர் மன்னா” என்றபடி உள்ளே நுழைந்தார் சித்ரகுப்தர் 

“எங்கு போய் தொலைந்தாய் குப்தா?” என்றார் எமன் கோபமாய்

சித்ரகுப்தன் பதிலுரைக்கும் முன், “என்னது குப்தாவா? வடநாடா இவருக்கு?” என வேணி கேட்க 

“எந்நாடும் எமதே, வடக்கு தெற்கென பேதமில்லை எமக்கு” என சிரித்தார் சித்ரகுப்தன் 

“இதுக்கு அந்த அண்ணன் பேசறதே பரவால்ல, கொஞ்சமாச்சும் புரிஞ்சது” என்றாள் வேணி 

“அண்ணனா? இப்படி ஒரு உடன்பிறந்தாள் இருப்பது பற்றி, என்னிடம் நீங்கள் பகிர்ந்ததே இல்லையே மன்னா?” என சித்ரகுப்தன் ஆச்சர்யமாய் கேட்க  

“எனக்கே இப்போது தானடா தெரியும்” என சலித்துக் கொண்டார் எமன் 

“அப்படியெனில் தங்கள் தந்தை…” என சித்ரகுப்தன் இழுக்க 

“குப்தா, என் தந்தை ஏகபத்தினி விரதனென்பது உனக்குத் தெரியாதா?” என சீறினார் எமன்   

“மன்னித்து விடுங்கள் மன்னா, உணர்ச்சிவசத்தில் உளறி விட்டேன்” என கை கூப்பினார்

“போகட்டும் விடு, முதலில் இந்தப் பெண்ணின் கணக்கைப் பார்த்துச் சொல்”

“என்ன கணக்கு? நானெல்லாம் யார்கிட்டயும் ஒத்த பைசா கடன் வாங்கினதில்ல தெரியுங்களா?” என சிலிர்த்தாள் வேணி 

“இது கடன் கணக்கல்ல பெண்ணே, பாவ புண்ணியக் கணக்கு” என்றார் எமன் 

“கூட்டிக் கழிச்சுப் பாருங்க, எல்லாம் சரியாத் தான் வரும்” என்றாள் வேணி 

“இதென்ன கணக்கு?” என விழித்தார் எமன் 

“இது ராதாரவி கணக்கு. அண்ணாமலை படத்துல வருமே, நீங்க பாத்ததில்ல?”

“அகிலம் போற்றும் அண்ணாமலையாரை தான் எங்களுக்குத் தெரியும். நீ சொல்லும் படமெல்லாம் நாங்கள் அறியோம்”

“நீங்க அறிங்க அறியாட்டி போங்க, அதப்பத்தி எனக்கு கவலையில்ல, நான் என்ற ஊட்டுக்கு போகோணும். கோயமுத்தூருக்கு அடுத்த பஸ் எப்போனு கூகிள்ல பாத்துச் சொல்லுங்க”

“என்ன மன்னா இந்த பெண் இப்படி பேசுகிறாள்?” என சித்ரகுப்தன் விழிக்க 

“அதையேன் கேட்கிறாய் குப்தா, தன் வாழ்நாள் முடிந்ததையே இன்னும் இவள் உணரவில்லை” என்றார் எமன் 

“அடடா… புத்தி குறைபாடோ?” என சித்திரகுப்தன் பரிதாபமாய் வேணியைப் பார்க்க 

“யாரப் பாத்து புத்தியில்லனு சொல்றீங்…? என்ற ஊருல வந்து கேட்டுப் பாருங்க, நேத்து பொறந்த கொழந்த கூட சொல்லும், ஊருக்கே பஞ்சாயத்து பண்றவ இந்த வேணினு” 

“பெண்ணே நான் சொல்வதைச் சற்று காது கொடுத்துக் கேள்”

“நான் சொல்றத நீங்க கொஞ்சம் கேளுங்’ண்ணா. உங்களுக்கு தேவ காசு தான, அதுக்கு தான என்னைக் கடத்துனீங்க? என்ற மாமனுக்கு ஃபோனப் போட்டு எம்புட்டு காசு வேணும்னு சொல்லுங்க, இந்த வேணிக்காக என்ற மாமன் உசுரையே குடுப்பாரு தெரியுமுங்களா?” என வேணி உணர்ச்சிவசப்பட்டு பேச, செய்வதறியாது எமனைப் பார்த்தான் சித்ரகுப்தன் 

“பெண்ணே, இனி நீ பூலோகம் செல்ல இயலாது, அங்கு உன் வாழ்வு முடிந்து விட்டது, நீ இப்போது இருப்பது விண்ணுலகம்” என அவளுக்கு புரிய வைக்க முயன்றார் எமன் 

“அஸ்கு புஸ்கு… யார ஏமாத்தப் பாக்கறீங்க? மேலோகம் இப்பிடி குடோனாட்டமா இருக்கும்? நான் நெறய சினிமாவுல பாத்துருக்கறனாக்கு. நல்ல பொக மூட்டமா சில்லுனு இருக்கும், ஜிகுஜிகுனு செட்டெல்லாம் போட்டிருப்பாங்க”

“அதெல்லாம் மானிடர்கள் செய்யும் கற்பனை ஜோடனைகள். இது தான் நிஜம்”

“நீங்க சொல்றது உண்மைனு நான் எப்படி நம்பறது?”

“என்னடா இது எமனுக்கு வந்த சோதனை?” என மனதிற்குள் நினைத்துக் கொண்டார் சித்ரகுப்தன் 

“நான் என்ன செய்தால் நீ நம்புவாய்?”

“ஏதாச்சும் வித்த காட்டுங்க நம்பறேன்”

“வித்தையா? என்ன சொல்கிறாய் நீ?”

“என்னங்’ண்ணா நீங்க இதுங்கோட தெரியாம? அதானுங்க இந்த மகாபாரத சீரியல்ல எல்லாம் வருமே, வாய்ல நெருப்பு வர வெக்கறது, கண்ணுல இருந்து அம்பு உட்றது, இப்படி ஏதாச்சும் செஞ்சு காட்டுங்க”

“அதெல்லாம் மானிடர்கள் செய்யும் கண்கட்டு வித்தைகள்”

“என்ற மாமனாட்ட சும்மா சப்பக்கட்டு கட்டாதீங்’ண்ணா. உங்களால இப்ப அதெல்லாம் செய்ய முடியுமா முடியாதா?”

“அந்த மனிதன் இத்தனைக் காலம் எப்படி சமாளித்தானோ இவளிடம்என மனதிற்குள் நினைத்தவர், “இனி இவளிடம் கனிவாய் பேசுவதில் பயனில்லை குப்தா, கணக்கெல்லாம் பார்க்க வேண்டாம், நேரே நரகத்திற்கு அனுப்பு” என கோபமாய் எமன் கூற 

“ஐயையோ… அப்ப நெஜமாலுமே நான் செத்துப் போய்ட்டனா? ஜவுளி வாங்க ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் போனது தான் நெனவுல இருக்கு…” என வேணி புலம்ப 

“அங்கிருந்து வெளியேறிய போது தான், ஒரு வாகனம் மோதி நீ மரணித்தாய்” 

“கெளம்பும் போதே என்ற மாமன் சொல்லுச்சு. பராக்குப் பாத்துட்டு நிக்காத வேணி, பாத்துப் பதலமா போயிட்டு வா’னு. இப்படி ஆகிப் போச்சே” என வேணி அழத் தயாராக

“அழாதே பெண்ணே. சற்று பொறுங்கள் மன்னா, நான் சொல்லி புரிய வைக்கிறேன்” என்றார் சித்ரகுப்தன் 

“ஐயையோ… நானில்லாம என்ற மாமன் புள்ளைகள வெச்சுட்டு என்ன செய்யுதோ தெரியலியே? அரிசிம்பருப்பு சோறு கூட ஆக்கத் தெரியாத ஆக்கங் கெட்ட மனுஷனாச்சே…” என வேணி அழ..

“கலங்காதே பெண்ணே, என்றேனும் ஒரு நாள் எல்லோரும் இங்கு வந்து தானே ஆக வேண்டும்” எனச் சமாதானம் செய்தார் சித்ரகுப்தன் 

“நீங்க பொறகாலயே இருக்கீங்க… நாலெட்டு வெச்சா நரகம், அதான் சுளுவா சொல்லிப் போட்டீங்க. எனக்கென்ன அப்பிடியா? நான் தட்டு வெக்காம ஒரு வாய் சோறுங்க மாட்டியே மாமா…” என வேணி அரற்ற  

“நீ நினைப்பது போலெல்லாம் இல்லை, தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறே”

“இதெல்லாம் நான் அஞ்சாங்கிளாஸ்ல காந்தாமணி டீச்சர்கிட்டயே படிச்சுப் போட்டனாக்கும், தமிழ்ல எப்பவும் நான் தான் கிளாஸ் பஸ்ட்டு, நீங்க புதுசா எனக்கு பாடமெடுக்க வேண்டாஞ் சொல்லிட்டேன்” என மூக்கை உறிஞ்சினாள் 

“இனி பேசி பயனில்லை, உன் பாவ புண்ணிய கணக்கை பார்த்து, நீ செல்ல வேண்டிய இடத்தை தீர்மானிக்க வேண்டியது தான் எங்கள் பணி” என நிதர்சனத்தை எடுத்துரைத்தார் எமன்

“பணியோ சனியோ…” என வேணி புலம்ப 

“சனி எம் மன்னனின் உடன் பிறந்தவர், அவரைத் தெரியுமா உனக்கு?” என ஆர்வமாய் கேட்டார் சித்திரகுப்தன்

“ஸ்ப்ப்பா… இவர் வேற என்ற சின்னவனாட்ட நொச்சு நொச்சுனு குறுக்கால பேசிகிட்டு” என பொறுமையிழந்தாள் வேணி 

“சற்று அமைதியாய் இரு குப்தா” என எமன் அதட்ட 

“அப்படியே ஆகட்டும் மன்னா” என மௌனமானார் சித்ரகுப்தன் 

“நீயும் சற்று அமைதியாய் இரு பெண்ணே, உன் கணக்கைப் பார்க்க வேண்டும்” என எமன் சற்றுக் கண்டிப்புடன் கூற 

“இனி என்ன கணக்குப் பாத்து என்ன ஆகோணும். பார்வதிய அகிலாண்டேஸ்வரி ஏத்துக்குவாளா இல்லையா? கண்ணம்மா பாரதியோட சேருவாளா இல்லையா? குக் வித் கோமாளில அஸ்வின் ஷிவாங்கி ஜெயிச்சாங்களா இல்லையா? இதெல்லாம் தெரியாம எப்படித் தான் இந்த கட்டை வெந்ததோ… ஹ்ம்ம்…” என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் வேணி 

“குப்தா, இந்த பெண்ணின் ஏடுகளை எடு” என பணித்தார் எமன் 

“ஏடா? கம்பியூட்டர் கூட இல்லயா உங்ககிட்ட? எங்கூர் ஞாயத்துக்கிழம சந்தைல கூறுகட்டி விக்கறாங்க தெரியுமா?” என கிடைத்த வாய்ப்பை விடாமல், பழிக்குப் பழி புளிக்குப் புளியாய் வேணி பேச  

“அதெல்லாம் தரித்திரம், இது தான் சரித்திரம்” என்றார் எமன் 

“அடேங்கப்பா, பழைய ஜோக் தங்கதுரை உங்களுக்கு ஒண்ணுவிட்ட தம்பியா?” என வாயாடினாள் வேணி

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், வேணிக்கு சுடுகாடு தாண்டியும் வாயாடும் பழக்கம் தொடர்கிறது போலும்  

“உன்னை அமைதியாய் இருக்கச் சொன்னேனா இல்லையா?” என மீண்டும் எமன் அதட்ட, வாய் மூடி மௌனியானாள் வேணி

சற்று நேரம் வேணியின் ஏடுகளை அலசி ஆராய்ந்த பின்னர், அவளை அழைத்தார் எமன் 

“பெண்ணே… உன் பாவக்கணக்கு சற்று கூடுதலாய் இருப்பதால்…” என்றவரை இடைமறித்த வேணி 

“ஒரு எறும்பு பென்சில் கூட வாங்காத என்னைப் பாத்து… பாவகணக்கு அதிகம்னு சொல்லிப் போட்டீங்களே” என அழ ஆரம்பித்தாள் 

“சற்று பொறு பெண்ணே… தெளிவாய் இவளுக்கு புரியும் வண்ணம் எடுத்துச் சொல் குப்தா” என, பிங்க் ஸ்லிப் எனும் பணி நீக்க உத்தரவைக் கொடுக்கும் தர்மசங்கடமான பணியைத் தனக்கு கீழே பணிபுரிபவருக்கு ‘டெலிகேட்’ செய்யும் மேலாளர் போல் கூறினார் எமன். ஈரேழு உலகிலும் இது மட்டும் மாறாது போலும்  

“பெண்ணே… உன் பாவங்களைப் பட்டியலிடுகிறேன் கேள்”

“என்ற கெரகம் இதெல்லாம் கேக்கோணும்னு இருக்குது…சரி சொல்லுங்…”

“நீ ஐந்து வயதாய் இருந்த போது, உன் வீட்டு கொல்லையில் இருந்த ஓணானை கல்லெறிந்து கொன்றிருக்கிறாய்”

“என்னங்கிது அக்கிரமமா இருக்குது, அஞ்சு வைசுல பாவ புண்ணியம் தெரியுமா பச்ச புள்ளைக்கு. இதெல்லாம் ஒரு பிராதுனு சொல்றது ஞாயமுங்களா? நீங்களே சொல்லுங்க எமன் அண்ணா” என எமனை துணைக்கழைத்தாள் வேணி 

“அவள் சொல்வதும் நியாயம் தான், அறியா வயதில் தெரியாமல் செய்த பிழை, அதை கழித்து விடு குப்தா” என்றார் எமன் 

“அப்படியே ஆகட்டும் மன்னா. அடுத்து, பத்து வயதில் வீட்டுக்குள் நுழைந்த பூனையின் மேல் சுடுநீர் வீசி இருக்கிறாய்”

“இங்க பாருங்க, பூனை ஊட்டுக்குள்ள வர்றது அபசகுனம்னு எங்க பாட்டி சொல்லியிருக்குது, பாட்டி சொல்லைத் தட்டாதேனு பழமொழியே இருக்குதல்ல”

“அப்படி ஒரு பழமொழி இருக்கிறதா என்ன?” என சிதரகுப்தனிடம் கேட்டார் எமன் 

“பழமொழியோ மனோரமா படமோ… ஏதோ ஒண்ணு உடுங்க. பெரியவங்க சொல்றதக் கேட்டது தப்பா சொல்லுங்க?” என தர்க்கம் செய்தாள் வேணி 

“தவறில்லை தான், அதையும் அழித்து விடு குப்தா”

“அப்படியே செய்கிறேன் மன்னா. பிறகு, உன் கடையில் வாடிக்கையாளர் வாங்கும் பொருளுக்கு, அதிக விலை வைத்து விற்று இருக்கிறாய்” என குற்றம் சாட்ட 

“உங்களுக்கென்னங்’ண்ணா, ஜம்முனு இங்க உக்காந்துட்டு இது தப்பு அது பாவம்னு சொல்றீங்க. மளிக பில்லு, கரண்டு பில்லு, தண்ணி பில்லு, கேபிள் பில்லு, வரி, வட்டி, டொனேசனு, ஸ்கூல் பீசு, பஸ் பீசு, புக்கு பீசு, துணிமணி பீசு, டூஷன் பீசு, ஆட்ட கிளாஸ் பீசு, பாட்டு கிளாஸ் பீசு, நீச்சல் கிளாஸ் பீசு, அங்காளி பங்காளிக்கு செய்முற, ஆடித்தள்ளுபடி, கோயில் கட்டளை, ஆஸ்பத்திரி செலவு, இத்தனையும் சமாளிக்கணும்னா கொஞ்சம் அப்படி இப்படி வெல வெச்சு தான ஆகோணும். இதெல்லாம் தப்புன்னா எப்படிங் பொழக்கறது?” என வேணி மூச்சு விடாமல் பேசியதில், எமனுக்கே மூச்சு முட்டியது 

இருந்தாலும் சமாளித்தவர், “இந்த சாக்குப் போக்கெல்லாம் எங்களிடம் பலிக்காது பெண்ணே” என்றார் 

“இதெல்லாம் அனுபவிச்சுப் பாத்தா தான் தெரியும், இங்க உக்காந்துட்டு கணக்கு போடறவங்களுக்கு எங்க கஷ்டம் எப்படிப் புரியும்” என்றாள் வேணி 

“போதும் நிறுத்து, விட்டால் இதை அனுபவித்து அறிய, எங்கள் மன்னனை மானிடனாய் பிறக்க சொல்வாய் போல் இருக்கிறதே?” என சித்ரகுப்தன் சீற 

“இது அவளின் எண்ணமா அல்லது உன் விருப்பமா குப்தா?” என முறைத்தார் எமன் 

“மன்னர் மன்னா, நான் அப்படி நினைப்பேனா சொல்லுங்கள்?” என பதறினார் சித்ரகுப்தன் 

“செய்தாலும் செய்வாய், நான் அகன்றால், என் இடத்திற்கு வர உனக்கு வாய்ப்பிருக்கிறதல்லவா? மானிடர்கள் போல் உனக்கும் பதவி மோகம் வந்து விட்டது போலும்”

“அப்படியெல்லாம் இல்லை மன்னா”

“இது கூட நல்ல யோசன தான். முதல்வன் சினிமால ஒரு நாள் முதல்வரா அர்ஜுன் வர்ற மாதிரி, நீங்க எங்கூர்ல போய் ஒருநாள், ஒரே ஒருநாள் சாதாரண மனுசனா வாழ்ந்து, சின்ன பாவம் கூட செய்யாம இருந்து காட்டுங்க, அப்புறம் நீங்க சொல்றத நான் ஒத்துக்கறேன்” என்றாள் வேணி, கிடைத்த வாய்ப்பை விடாமல் 

“அதற்கெல்லாம் வாய்ப்பில்லை” என்றார் எமன் 

“ஹ்ம்ம்… உங்களால முடியாதுங்’ண்ணா”

“என்னால் முடியாதது இந்த ஈரேழு உலகிலும் இல்லை”

“அப்படினா நான் சொல்றத செஞ்சு காட்டுங்க, இல்லேனா இந்த பச்ச மண்ண ஏமாத்தின பாவம் உங்கள சும்மா விடாதுங்’ண்ணா” என தார்மீக மிரட்டல் விடுத்தாள் வேணி 

“பார்த்தாயா நீ செய்திருக்கும் காரியத்தை” என சித்ரகுப்தனை முறைத்தார் எமன் 

“நான் இயல்பாய் கூறிய ஒரு விஷயத்தை, இவள் இப்படி தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்வாள் என நான் கண்டேனா மன்னா” என புலம்பினார் சித்திரகுப்தன் 

“எங்கூருக்குப் போய், ஒருநாள் பூரா சின்ன பாவங்கூட செய்யாம இருந்துட்டு வாங்’ண்ணா, மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்” என பிடித்த பிடியில் நின்றாள் வேணி

“நீ சொல்வது போல் நான் செய்துவிட்டால், உன் பாவக்கணக்குபடி நரகம் செல்லத் தயாரா?” என சவாலாய் ஏறிட்டார் எமன் 

“சொன்ன சொல்லு தவறமாட்டா இந்த வேணி. ஒருவேள நீங்க தோத்துட்டா?”

“அதற்கு வாய்ப்பே இல்லை”

“நடந்துட்டா… அதையும் தெளிவா பேசிக்கோணுமல்ல”

“உனக்கு சொர்க்கப் பதவி அளிக்கிறேன்”

“அதெல்லாம் வேண்டாங்’ண்ணா, என்னை உசுரோட என்ற மாமன்கிட்ட திருப்பி அனுப்பிருங்க”

“அதெப்படி சாத்தியம்?”

“அதெல்லாம் செய்யலாமுங்க, உங்க மேனேஜர்கிட்ட வேணா கேட்டுக்கோங்க”

“எனக்கு மேனேஜரா?”

“சும்மா வளவளனு பேசி நேரத்த வீணாக்க வேண்டாமுங்க. நீங்க தோத்துட்டா, கடிகாரத்துல முள்ள முன்னாடி தள்ளி வெச்சு, என்னை சாகறதுக்கு முன்னாடி நேரத்துக்கு அனுப்பிடுங்க, ஏதோ சினிமால கூட இப்படி வந்துச்சு. இல்லேனா, என்னை ஏமாத்தின பாவம் உங்களுக்குத் தான் சொல்லிட்டேன்” என்றாள் வேணி கறாராய் 

“பெண் பாவம் பொல்லாதது என்பார்கள் மன்னா, அதற்கு நாமும் விதிவிலக்கல்ல. எதற்கு வம்பு? ஒருநாள் தானே, சென்று வாருங்கள்” என்ற சித்ரகுப்தனை முறைத்த எமன், வேறுவழியின்றி பூலோகம் கிளம்பினார் 

அவர் சென்ற இடம், கோவை மாவட்டத்தின் முக்கியப் பகுதியான காந்திபுரம் நூறடி சாலை

அலைக்கடலாய் மக்களும் வாகனங்களும் ஆமை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்க, திக்குதிசை தெரியாமல் திணறினார் எமன்

மானிட பிறவியாய் வந்திருப்பதால், எந்த சலுகைளும் இன்றியே அந்த நாளைக் கழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார் 

“கண்ணு என்ன பொடனிலயா இருக்கு, வழிய விட்டு நிக்க மாட்ட” என எமனை வசைபாடியபடி சென்றார் ஒரு ஆட்டோ ஓட்டுநர் 

ஒருவழியாய் நகர பேருந்துநிலையம் வந்து சேர்ந்தவர், அங்கிருந்த 102A என்ற எண்ணிட்ட பேருந்தில் ஏற முற்பட்டார் 

திடீரென எங்கிருந்தோ வந்த மக்கள் கூட்டம், அவரை அலேக்காக தூக்கிச் சென்று பேருந்தின் நடுவில் நிறுத்தியது, வேர்த்து விறுவிறுத்துப் போனார் எமன் 

பேருந்து புறப்பட, “டிக்கெட் டிக்கெட்” என்றபடி, அந்த கூட்டத்தில் வாகாய் வளைந்து நெளிந்து வந்த நடத்துனரை ஆச்சர்யமாய் பார்த்தார் எமன் 

“எங்க போகோணுங்…?” என நடத்துனர் கேட்க, என்ன சொல்வதென தெரியாமல் விழித்தார் 

அதற்குள், “ஊமை போலிருக்குங்’ண்ணா” என ஒரு கல்லூரி மாணவி கூற 

“அடடே, அப்படியா?” என நடத்துனர் சைகையில் கேட்க, தலையசைத்து சமாளித்தார் எமன் 

“பாத்து விழுந்துறாம புடிச்சு நில்லுங்…” என்றபடி நகர்ந்தார் நடத்துனர் 

பேருந்து சிறிது தூரம் சென்றதும், ஏற்றியது போலவே, எமனை ஒரு நிறுத்தத்தில் அலேக்காக தள்ளி இறக்கி விட்டது மக்கள் வெள்ளம் 

“எப்படித் தான் இப்படி பயணிக்கிறார்களோ? கஷ்டம் தானோ மானிடப் பிறவி?” என மனதுக்குள் நினைத்தார் எமன் 

“இது என்ன ஊர்?” என அங்கிருந்த ஒருவரை கேட்க

“துடியலூர்” என்றார் அவர்  

சற்று நேரம் அங்கு நின்றிருந்தவருக்கு, வாகனங்களின் இரைச்சலும் புகையும் கண்ணைக் கட்டியது 

போதாதற்கு, பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. எமன் என்றாலும், மனிதனாய் வந்த பின், பசி தூக்கம் விக்கல் தும்மல் எல்லாமும் இயல்பு தானே

அருகிலிருந்த ஒரு அடுமனையின் (பேக்கரி) உள்ளே சென்றவர், அங்கிருந்த உணவு பண்டத்தை எடுக்கப் போக, “என்ன வேணுங்’ண்ணா?” என்றபடி வந்தார் பணியாள் 

“இது தான்” என்றார் எமன்

“முப்பது ரூவா, அங்க பில் கட்டிட்டு வந்து வாங்கிக்கோங்க” எனவும்

“பில்லா?” என விழித்தார் எமன் 

“ஆமாங்… காசு குடுத்தா தான பொருள் குடுக்க முடியும்” எனவும், பேசாமல் வெளியேறினார் 

சற்று தூரம் நடந்தவர், அங்கு சிலர் லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சந்தையில் இறக்கி வைத்து விட்டு, பணம் வாங்கிச் செல்வதை கண்டார்

தானும் செய்வதாய் கூறி, பணி முடித்து காசு வாங்கி, பின் உணவை வாங்கி உண்டார் 

உடலும் மனமும் சோர்வுற, அப்படியே சாலையோரமாய் இருந்த மரநிழலில் படுத்துறங்கினார் 

மறுநாள் கண் விழித்தவர், முன் தினம் போலவே மூட்டை தூக்கி கூலி பெற்று உணவுண்டார்

ஒருவழியாய் மாலை மயங்க, “போதுமடா இந்த மனிதப் பிறவி” என்றெண்ணியபடி விண்ணுலகம் சென்றார் 

அங்கு புன்னகை முகமாய் அவரை வரவேற்றாள் வேணி 

“என்ன பெண்ணே, நரகம் செல்லத் தயாரா?” எனவும் 

“அதெதுக்குங்க, நீங்க தான் சவால்ல தோத்துட்டீங்களே?” என்றாள் மகிழ்வுடன்  

“இல்லையே, நான் எந்த பாவமும் செய்யவில்லையே” என்றார் எமன் 

“பஸ்ல ஒரு பொண்ணு உங்கள ஊமைனு சொன்னதுக்கு நீங்க தலையாட்டுனீங்களே, அந்த பொய் பாவத்துல சேராதுங்களா?” என மடக்கினாள் வேணி 

“சபாஷ்” என தன்னையும் அறியாமல் கூறிவிட்டு, எமனின் அக்னிப்பார்வைக்கு ஆளானார் சித்ரகுப்தன் 

“இதைத் தானுங்’ண்ணா நான் அப்பவே சொன்னேன். மனுசனா பொறந்தா அறிஞ்சோ அறியாமலோ சின்னச் சின்னத் தப்புக செய்யறது சகஜம்தானுங்க, அது பாவக்கணக்குல சேக்கற அளவுக்கு பெரிய தப்பில்லங்க. ஆனா, அடுத்தவன் குடிய கெடுக்கறது, பெண்ணாசை மண்ணாசை பொன்னாசைல நெறி தவறி நடக்கறது, தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைக்கற மக்கள ஏமாத்தறது, இதெல்லாம் தான் பாவச்செயல்”

“ஆஹா… மன்னர் மன்னனுக்கே பாடம் புகட்டி விட்டாயே பெண்ணே” என சிலாகித்தார் சித்ரகுப்தன் 

“உண்மை தான், இனி ஆராய்ந்து அறிந்து செயல்படுவேன். நீ வெறும் வேணி அல்ல, ‘ஆகாச’ வேணி” என்றார் எமன் 

“சரிங்’ண்ணா, என்னை ஊட்டுக்கு அனுப்புங்… என்ற மாமன் பாவம் கடவீதிக்குப் போனவள இன்னும் காணோம்னு கண்ணு பூத்து போய் கெடப்பாரு”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை பெண்ணே, அங்கே பார் உன் மாமனின் லீலைகளை…” என எமன் காட்ட, அங்கு எதிர்வீட்டு சரோஜாவிடம் சுவாரஸ்யமாய் வாயாடிக் கொண்டிருந்தார் வேணியின் மாமன் 

“இன்னிக்கிருக்கு இந்த மனுசனுக்கு…” என வேணி பல்லைக் கடிக்க 

“சிறுதவறுக்கு தண்டனை கூடாதென்ற அறிவுரை எனக்கு மட்டும் தானா?” என எமன் கேலி செய்ய 

“ஹி…ஹி…ஹி” என சிரித்து சமாளித்தாள் வேணி 

“நீ விபத்துக்கு உள்ளான நேரத்திற்கு முன் உன்னை அனுப்புகிறேன். அங்கு சென்றதும், விண்ணுலக நினைவுகள் எதுவும் உனக்கு இருக்காது. வாழ்க வளமுடன் திருமதி.‘ஆகாச’வேணி” என வாழ்த்தி வழியனுப்பினார் எமன் 

 

சஹானா கோவிந்த்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. பிரபு says:

    கதை மிக நன்றாக உள்ளது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad